அத்தியாயம் -17
சனி, ஞாயிறு கிழமைகளில் எப்பொழுதும் கார்த்தியுடன் தான் இருப்பான் வருண். சாய்ந்திரம் கார்த்தியின் ப்ராக்டிஸ் முடிந்தவுடன் எங்கேயாவுது வெளியே சுற்றுவர், அல்ல பைக்கில் லாங் டிரைவ் போய் அவர்களுக்கு பிடித்த ஒரு ஸ்பாட்டில் மிட் நைட் டீ குடிப்பது அவர்களின் வழக்கம்.
அப்படி தான் அன்றும் அரட்டை அடித்து டீ குடித்து கொண்டிருந்தனர்.
“ஏன் டா டேய் இவ்வளவு நாளா சிங்கிளா இருந்த, என்கூட சுத்துன சரி.. இப்போவும் ஏன்டா என்னயவே தொங்கிட்டு இருக்க உன் ஆள கூட்டிட்டு இங்க வர வேண்டியது தானே? ” என்று கேட்ட கார்த்தியிடம்,
” எது நடு ராத்திரில அவள தனியா இங்க கூட்டிட்டு வரதா? அது மட்டும் இல்லாம அவளுக்கு இந்த மாறி இடம் எல்லாம் புடிக்காது டா . அவளோட டேஸ்ட்டே வேற ” என பதிலளித்தான் வருண்.
“ஓ.. என்னமோ போ அனுபவசாலி நீ சொல்லுற எனக்கு என்ன தெரியப் போகுது இருந்தாலும் இருந்தாலும் லவ் பண்ணுறவங்க எல்லாம் ஒரு தினுசா தான்யா சுத்திட்டு இருக்கீங்க “
“நீயும் லவ் பண்ணு அப்போ புரியும் ” என்றான் சிரிப்போடு.
“வேணாம்ப்பா சாமி, என்னோட பாஸ்கெட் பால் தான் என் ஆளு, நா விளையாடுற பாஸ்கெட் பால் கோர்ட் தான் எங்க லவ் ஸ்பாட்டு. அதுக்கு மேல எனக்கு ஒன்னும் வேணாம்ப்பா “
” பாக்கறேன் டா எவளோ நாள் இதயவே சொல்லறேன்னு “
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே, அந்த பக்கம் ஏதோ கலவரம் சத்தம் கேட்க, கவனத்தை அங்கு பதித்தனர்.
யாரோ ஒருவனை மிரட்டி எச்சரிக்கை செய்து விட்டு ஒரு கும்பல் கிளம்பிவிட்டது.
“மச்சா கார்த்தி அங்க பாத்தியா அவன பாத்தா முரளி மாறியே இருந்துச்சுல்ல?”
“யாரு டா அங்க நிக்கறவன்னா?”
” அவன் இல்ல டா கும்பலா இப்போ கிளம்பி போனாங்கள அவங்கள்ள ஒருத்தன் “
“நா.. சரியா கவனிக்கலையே..! அவன் தானா நல்லா தெரியுமா “
“ஆமாடா, ஆனா ஆளே மொத்தமா மாறி இருந்தான், என்ன டா அவன் இப்படி அடிதடி சண்ட எல்லாம் போட்டு ஏதோ அடியாளு மாறி இருக்கான் “
“அவன் என்னமோ பண்ணிட்டு போறான் நமக்கு என்ன விடு “
வருண் இப்பொழுது தான் முரளியை கவனித்திருக்கிறான். ஆனால் முரளி சில நாட்களாகவே அவர்களை பின் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறான்.
அன்று கார்த்தியின் பைக் பிரேக் வையரை கட் செய்து கொண்டிருந்த முரளியை கையும் களவுமாக பிடித்தான் வருண்.
முகத்தில் துளி கூட பயம் இல்லாமல் அவனை ஒரு எகத்தாள பார்வை பார்த்தான் முரளி.
“இப்போ வேணா நீ உன் ப்ரண்ட காப்பாத்தலாம், ஆனா ஒவ்வொரு முறையும் அவன காப்பாத்த முடியுமா?”
“ஏன் முரளி இப்படி பேசற? எனக்கு புரில தப்பு பண்ணவன் நீ. அத விட்டுட்டு இத்தனை வருஷம் கழிச்சு வந்து இப்படி நடந்துக்கற? ஒழுங்கா இரு, இல்ல போலீஸ் கிட்ட உன்ன பத்தி கம்பளைண்ட் பண்ண வேண்டி வரும் உன் வாழ்கை நல்லா இருக்கனும்னு தானே அவன் அப்படி பண்ணுனான் “
“போலீஸ் பெரிய புடுங்கி, அவனுங்களே எங்க கிட்ட மாமுல் வாங்கி தான் காலத்த ஓட்டுறாங்க. என்ன என்ன சொன்ன? என் வாழ்கை நல்லா இருக்கனும்னா? எவ்வளவு கெஞ்சி இருப்பேன் நா சொன்னத அப்போ கேட்டானா அவன். என் கூட சுத்துன அத்தன பேரும் தான் தப்பு பண்ணாங்க ஏன் அப்போ அவங்க வாழ்கைக்கு எல்லாம் நல்லது பண்ணல..? மாட்டுன நா கெட்டவன் மாட்டாத அவங்க நல்லவங்களா ? இல்ல நா தெரியாம தா கேக்கறேன், என்ன வாழ்கைய பத்தி முடிவு பண்ண நீங்க யாருடா? நா நாசமா போறேன் இல்ல செத்து கூட போறேன். அது நான் எடுத்த முடிவா தான் இருக்கணும் அந்த ஒரு நாள் நா சொன்னத மட்டும் அவன் கேட்டு இருந்தானா இந்நேரம் நானு உங்க எல்லார் மாறியும் நல்ல வாழ்கை வாழ்ந்து இருப்பேன்ல”
முரளி பேசியது ஒன்றும் விளங்கவில்லை வருணிற்கு. மண்டைக்குள் குழப்ப முடுச்சிட கால சக்கரம் பின் நோக்கி சென்றது.
“சீனியர் உங்க ப்ரண்ட் தானே நம்ம காலேஜ் பாஸ்கெட் பால் டீம் கேப்டன். என்னயும் டீம்ல சேத்திக்க சொல்லி கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணுங்களேன். இந்த மாறி ஸ்போர்ட்ஸ்ல இருந்தா இத சாக்கா காட்டி கிளாஸ்ஸ எல்லாம் கட் அடிக்கலாம்னு எல்லாரும் சொல்லறாங்க நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன் ப்ளீஸ்”
ஆர்வம் மின்னும் கண்களோடு வெகுளியாக அவன் கேட்ட பாவனை
வருணிற்கு பிடித்து இருந்தது.
அவரகள் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கும் பொழுது முதலாம் ஆண்டு அவர்களின் கல்லூரியில் வந்து சேர்ந்தான் முரளி.
‘வறுமையில் இருந்து படிப்பு ஒன்று மட்டுமே நம்மை காக்கும் ‘ என்ற மந்திர வாக்கியத்தை கடைபிடித்து நல் மதிப்பெண் எடுத்து இந்த கல்லூரியில் வந்து சேர்ந்திருக்கிறான். படிப்பில் வல்லவன்,சுட்டியாக இங்கும் அங்கும் சுற்றி கொண்டிருப்பான், ஆனால் வகுப்பில் முதலிடம் பெற்று விடுவான். அவனிற்கு பிடிக்காத ஒன்று, மணி கணக்காக கிளாஸில் அமர்ந்து வகுப்பை கவனிப்பது. அவனிற்கு அவனே ஆசான். ஆதலால் வகுப்பை தவிற்கும் விதமாக தான் வருணிடம் இந்த வேண்டுகோளை வைத்தான்.
அவன் விளையாட்டில் படு மோசம் என்றும் சொல்ல முடியாது, வெகு சிறப்பு என்றும் சொல்ல முடியாது. ஒரு அளவிற்கு அவனின் திறன் கார்த்திக்கு திருப்தி கொடுத்ததால் முரளியை சப்ஸ்ட்யூட்டாக சேர்த்து கொண்டான். இருவருக்குள்ளும் நல்ல ஒரு ஸ்நேகம் இருந்தது அந்த நாள் வரும் வரை.
“அடுத்த வாரம் இன்டெர் காலேஜ் மீட் இருக்கு, இப்படி ப்ராக்டீஸ்க்கு கூட வராம இருந்தா என்ன அர்த்தம். டீம்ல வந்து சேரும் போது மட்டும் கெஞ்ச வேண்டியது அப்றம் கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல, இன்னிக்கு இருக்கு அவனுக்கு ” என அவனின் டீம் மேட்ஸிடம் கத்தி விட்டு முரளியை தேடி அவனின் ஹாஸ்ட்டல் ரூம்மிற்கு சென்றான் கார்த்தி.
அங்கு அவன் செய்து கொண்டு இருந்த காரியத்தை பார்த்த கார்த்தி அதிர்ச்சியின் உச்சியில் அவனை ஓங்கி அறைந்திருந்தான்.
பள்ளி சேர்ந்தது முதல் படிப்பு படிப்பு என மட்டுமே சுற்றி கொண்டிருந்த முரளிக்கு கல்லூரி வாழ்கை புது உலகத்தை காட்டியது.
படிப்பையும் தான்டி நிறைய விஷயங்கள் இருக்கிறது என்பதை அறிந்தான். புது புது நண்பர்கள் புது புது பழக்கம், எல்லாம் புதிதாக இருந்தாலும் அவனிற்கு மிகவும் பிடிக்க தான் செய்தது.
என்ன இருந்தாலும் படிப்பை மட்டும் அவன் விட்டு விடவில்லை. நண்பர்களுடன் பொழுதை கழித்தாலும் இரவெல்லாம் கண் விழித்து படித்து விடுவான்.
வெளிய சுற்றவும் வேண்டும், அதே சமயம் படிப்பிலும் முதலிடத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும்.
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
என திண்டாடி தான் போனான் முரளி.
ஒரு நல்லா நட்பு எவ்வளவுக்கு எவ்வளவு நம்மை உயர்த்துமோ அதே அளவு நம்மை அடி பாதாளத்தில் தள்ளி விடும் கூடா நட்பு.
“தல எல்லாம் வலிக்குதுடா ஒரே ஸ்ட்ரெஸா இருக்கு சுத்தமா முடில “
செமஸ்டர் எக்ஸாம் நெருக்கடியில் தன் நண்பனிடம் புலம்பினான் முரளி.
” நாளைக்கு என்கூட வா.. உன் பிரச்னைக்கு ஏத்த மருந்து என் கிட்ட இருக்கு “
“எங்க டா வந்து இருக்கோம்?”
“சொல்றேன் வா, அண்ணே இவன் தான் நான் சொன்ன பையன் பேரு முரளி “
” முரளி, இவரு ரவி அண்ணே இவருக்கு கிட்ட ஒரு பொட்டலம் மட்டும் வாங்கி சாப்பிடு அப்றம் இந்த உலகத்துல்லயே நீ இருக்க மாட்ட “
” என்ன டா சொல்லுற இது எல்லாம் ரொம்ப தப்பு டா ” அதிர்ச்சியில் பின் வாங்கினான் முரளி.
” என்னடா தப்பு சிகெரட் புடிக்கறது, தண்ணி அடிக்கறது எல்லாம் ஒரு தடவ ட்ரை பண்ணி பாத்தோம்ல.. அதே மாறி தான் இதுவும் சும்மா ஒரு ட்ரை பண்ணி பாரு. வாழ்க்கை வாழ்வதற்கே மச்சி. தண்ணி அடிக்கறவன் எல்லாம் கெட்டவனும் இல்ல, சுத்த பத்தமா இருக்கறவன் எல்லாம் நல்லவனும் இல்லை. சும்மா நீதி நேர்மை நியாயம் தர்மம்னு சொல்லி கடைசி காலத்துல்ல என்ன எடுத்துட்டு போக போறோம்? இருக்கற வரைக்கும் நல்லா என்ஜாய் பண்ணனும் டா “
தயக்கத்துடன் அந்த போதை வஸ்த்துவை பார்த்தான் முரளி.
“என்ன டா இது இப்படி இருக்கு.. அப்படியே பறக்கற மாறி இருக்கு டா ஹையோ..!” போதையில் சிவந்த விழிகளுடன் சிலாகித்தான் முரளி.
“நான் சொன்னேன் ல.. உனக்கு எப்போ வேணும்மோ அப்போ எல்லாம் போய் ரவி அண்ணே கிட்ட வாங்கிக்கோ அவரு தருவாரு..! “
“காலேஜ்க்குள்ள உக்காந்து என்ன டா அசிங்கம் பண்ணிட்டு இருக்க?” கார்த்தியின் அதட்டலில் விபரீதம் உணர்ந்தவன் விதிர்விதிர்த்து போனான்…!
“அண்ணா… அது…” அவன் மென்னு முழுங்க,
“சொல்லு டா யார் உனக்கு இத கொடுத்தா? எப்படி இது உன் கைக்கு கிடைச்சிது? வாய்ய தொறந்து சொல்லுங்கறேன்ல, இல்ல நீ எதுவும் சொல்ல வேண்டா எதுவா இருந்தாலும் எச்ஓடி கிட்டயே சொல்லிக்கோ ” என்றவன் அவனின் சட்டை காலரை இழுத்து நடக்க ஆரம்பிக்க ஈர கொலை நடுங்கி விட்டது முரளிக்கு.
“அண்ணா அண்ணா அண்ணா, ப்ளீஸ் ண்ணா ப்ளீஸ் ண்ணா எச்ஓடி கிட்ட போனா பெரிய பிரச்னை ஆகிரும், அங்க எல்லாம் போக வேணா ண்ணா.
உங்க கால்ல வேணா விழுகறேன் இனிமே இந்த கருமத்த கையில் தொடவே மாட்டேன். வீட்டில தெரிஞ்சா அவங்க தாங்க மாட்டாங்க ண்ணா ரொம்ப கஷ்டப்பட்டு தான் என்ன படிக்க வைக்கறாங்கண்ணா தயவ செஞ்சி யார் கிட்டயும் சொல்லிறாதீங்க தெரியாம பண்ணிட்டேன் என்ன நம்புங்க ” என்றவன் அவன் காலை கட்டி கொண்டு கதறி அழ, “ச்சீ கால விடுடா நாயே..! பண்ணுறதயும் பண்ணிட்டு நல்லவன் வேஷம் போடுறியா? ஒரு தடவ தண்டனை அனுபவிச்சா தான் மறுபடியும் இந்த தப்ப நீ பண்ண மாட்ட “
உண்மையில் இந்த விஷயத்தை கேட்டு ஆடி தான் போனது கல்லூரி நிர்வாகம். வெளியே தெரிந்தால் அவர்களின் கல்லூரி பேர் கெட்டு விடும் என சட்டப்படி அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முரளியின் நண்பர்களும் அவர்கள் தப்பித்து கொள்ள அவனையே கைக்காட்டி விட்டு ஒதுங்கி கொண்டனர். அவனிற்கு தண்டனையாக முரளியை கல்லூரியை விட்டு டிஸ்மிஸ் செய்து விட்டனர்.
கல்லூரியில் இருந்து வீடு வந்த முரளிக்கு வீடே நரகம் ஆகி போனது.
சாட்டை எடுத்து அவனை வெளுத்து விட்டார் அவனின் தந்தை.
கூலி வேலை செய்து சிறுக சிறுக சேர்த்தி வைத்து தான் அவனை படிக்க வைத்தனர். மகன் படித்து அவர்கள் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவான் என பெரும் கனவை சுமந்து கொண்டிருந்த அவன் பெற்றோரின் நெஞ்சில் ஈட்டியை விட்டெறிந்தது போல் இருந்தது அவனின் செயல்.
“ஏன் டா ஏன் இப்படி பண்ண ” தலையில் அடித்து கொண்டு அழுது கரைந்தனர்.
“ம்மா நா நல்லா படிச்சி உங்கள நல்லா பாத்துப்பேன் ” சிறுவயது முரளி அவன் மனகண்ணில் வந்து போக தன் தாயின் கண்ணீருக்கு தானே காரணம் என்பதை நினைத்து மிகவும் துடித்து போனான் முரளி.
என்ன கூறி அவனின் செய்கைக்கு அவன் நியாயம் விளக்குவான்!?
எப்பொழுதும் அவனை பெருமை பொங்கும் விழிகளோடு பார்க்கும் அவனின் தந்தையின் பார்வையில் ஏமாற்றமும் வெறுப்பும் மட்டுமே மண்டி கிடந்தது. எப்படி இந்த சூழலை மாற்றுவது என தெரியாமல் தீயிலிட்ட புளுவாய் துடித்தது அவன் மனம்.
நிலையை இன்னும் மோசமாக்கும் விதமாக முரளியின் தந்தை பூச்சி மருந்தை குடித்து ஆஸ்ப்பித்திரியில் சேர அதற்கும் அவனையே குற்றம் கூறினர்.
“பாவி பாவி நல்லா இருந்து மனுஷன இப்படி நடபிணமா நடக்க விட்டுடியேடா? என்ன டா கொற வெச்சோம் உனக்கு சொல்லு உனக்கு என்ன குற வெச்சோம். நீ நல்லா வருவேனு உன் மேல நம்பிக்கை வெச்சத்த விட வேற என்ன பாவம் பண்ணுனோம் ” என்றவர் அடித்து அழ,
“அம்மா இப்படி பேசாதீங்கம்மா தயவ செஞ்சு என்ன நம்புங்கம்மா இனிமே நீங்க தல குனியற மாறி நா நடந்துக்க மாட்டேன்ம்மா அம்மா “
அவனின் கண்ணீர் அவரை அசைக்கவில்லை.
“பேசாத அவருக்கு எதாவுது நல்லது பண்ணனும்னு உனக்கு தோணுச்சுனா தயவ செஞ்சு எங்க மூஞ்சில இனிமே முழிச்சறாத எங்கயாவுது போய்ரு. இப்படி ஒரு புள்ள இருக்கறதுக்கு நாங்க புள்ள இல்லனு நெனச்சிட்டு வாழ்ந்துருவோம் உன் அக்கா ஒருத்தியே எங்களுக்கு போதும் “
என்ன செய்வது ஏது செய்து என்ன ஒன்றும் தெரியாமல் கால் போன போக்கில் நடந்து போய் கொண்டிருந்தான் முரளி.
கண்கள் குளம் கட்டி இருக்க அதை துடைக்க கூட தோன்றாமல் அப்படியே பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருந்தான்.
“முரளி முரளி ” யாரோ அவன் தோளை பிடித்து உலுக்க சோர்வாக நிமிர்ந்து பார்த்தான்.
அவனிற்கு போதை வஸ்த்துவை கொடுத்த ரவி அண்ணன் தான் நின்று கொண்டிருந்தார்.
அவரை பார்த்தவனுள் கோபம் கொப்பளிக்க, அவரை பார்த்து முறைத்தான்.
“என்னப்பா முறைக்கற? என்னமோ நா தப்பு பண்ணுன மாறி? உன் நிலமைய கேள்வி பட்டு உன்ன பாக்கலாம்னு வந்தா இப்படி விரோதிய பாக்கற மாறி பாக்கறியே, சரி சரி உனக்கு ஒரு வேல தரேன் செய்யறியா? சும்மா எல்லாம் ஒன்னு வேணா சொளையா பத்தாயிரம் தரேன். உன் விஷயம் மாட்டுனதுல்ல பசங்க கொஞ்சம் பயந்து போய்ட்டானுங்க அதான் உன்னயவே கேக்கலாம் வந்தேன் எப்படி உன் வீட்டிலயும் கோவமா தான இருக்காங்க? எல்லாம் எனக்கு தெரியும். கொஞ்சா நாள் என்கூட இருந்து நா சொல்லுற வேலை செய். பணத்துக்கு பணமும் ஆச்சு அதுக்கு அப்றம் நீ பணத்தோடு போய் உன் வீட்டில நில்லு ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்ன யோசனையா பாக்கற, இல்லீகல் வேலை எல்லாம் ஒன்னும் இல்லை. கந்து வட்டிக்கு பணம் விட்டிருக்கேன் வட்டி வசூலுக்கு போகணும். நீ ஒன்னும் பண்ண வேணா கூட போய் நின்னா மட்டும் போதும் உங்கள மாறி நல்ல வாட்ட சாட்டம்மான பசங்க போனாதான் எல்லா ஒழுங்கா பணத்த தருவாங்க”
ரவி சொன்னது போல் கொஞ்ச நாள் அவருடன் இருந்து வேலை செய்தவன் பணத்தோடு வீட்டிற்கு போக, அவனை இன்னும் சாடிவிட்டு வெளியே அனுப்பி விட்டனர். கடைசி வரைக்கும் அவனை வீட்டில் ஏற்று கொள்ளவே இல்லை.
சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தவன், கால போக்கில் ரவிக்கு வலது கை போல் ஆனான், கட்ட பஞ்சாயத்து, ஆள் மிரட்டல், கடத்தல் என அவனின் வாழ்கையே திசை மாறி விட்டது.
” என் கை கறையாயிருச்சு. இனி எவளோ சுத்தம் பண்ணாலும் அது என்ன விட்டு போகாது. புலி வால் புடிச்ச கதை தான் இது. இனி நானா நெனச்சா கூட என்னால இதுல இருந்து வெளி வர முடியாது. அப்படியே வெளிய வந்தாலும் எனக்குனு யார் இருக்கா நா என்ன பண்ணுவேன்? போன மாசம் தான் எங்கக்கா கல்யாணம். ஒளிஞ்சு இருந்து தான் பாத்துட்டு வந்தேன் தெரியுமா? ” வலி நிறைந்த குரலில் அவன் சொல்ல ஸ்தம்பித்து போய் அவனை பார்த்தான் வருண்.
தப்பு செய்யாதவனிற்கு தண்டனை வழங்குவது எவ்வளவு குற்றமோ, அதே அளவு குற்றம், தப்பு செய்தவனிற்கு தன் தப்பை உணர்ந்து திருந்த கால அவகாசம் கொடுக்காமல் போவது.
அன்பும் அரவணைப்பும்
தான் எல்லாம் செய்யும்…
அதட்டலும் அதிகாரமும்
துன்பத்தை மட்டுமே தரும்..!
“என் படிப்பு, குடும்பம், எல்லாமே நாசமா போய்யிருச்சி இதுக்கு எல்லாம் காரணம் அந்த கார்த்தி மட்டும் தான். ஒரு வார்த்த நா சொல்லுறத கேட்டு கம்ப்ளைண்ட் பண்ணாம இருந்திருந்தா என் வாழ்கைய நானே கரெக்ட்டா அமச்சு கொண்டு போயிருப்பேன். என்ன இப்படி ஆக்கிட்டு அவன் மட்டும் சந்தோசமா இருக்கலாமா விட மாட்டேன், வர போற நேஷனஸ்ல கலந்துக்கறது தானே அவன் வாழ் நாள் கனவு, எத வெச்சி என் வாழ்கை முடிஞ்சிதோ அத வெச்சே அவன் கனவ காலி பண்ணி இனி அவன் மேட்ச்சே விளையாடாத மாறி பண்ணுறேனா இல்லயானு பாரு. அரசியல் பெரும் புள்ளில இருந்து அடிமட்ட தொண்டன் வரைக்கும் எனக்கு ஆள் இருக்கு சும்மா மிரட்டறதுக்கு சொல்லுறேன்னு மட்டும் நெனச்சிக்காதா “
கார்த்தியின் மேல் அவன் கொண்ட வெறுப்பின் விதை பெரிய விருட்சமாக கிழை விட்டு வளர்ந்திருப்பதை அவன் பேச்சில் நன்கு உணர முடிந்தது.
அவன் சொன்னதை ஒவ்வொன்றாக
நினைவடுக்கில் நிறுத்தி பார்த்தான் வருண்.
“எத வெச்சி என் வாழ்கை முடிச்சிதோ அத வெச்சே அவன் கனவ காலி பண்ணி இனி அவன் மேட்ச்சே விளையாடாத மாறி பண்ணுறேனா இல்லயானு பாரு.”
இதற்கு விடை மூளையில் தோன்ற, மனம் கலவரம் அடைந்தது.
“அப்போ கார்த்தி டிரக்ஸ் யூஸ் பண்ணுறானு சொல்லி அவன மேட்ச் விளையாடாத மாறி டீபார் பண்ணிருவாங்களோ ” அதை நினைத்து பார்க்கவே நெஞ்சம் வலித்தது. ஆனால் முரளி கொண்ட வஞ்சமானது நிச்சயம் அதை செய்து விடும் என்றும் தெரியும்.
கார்த்திக்கு ஒரு குணம் உண்டு எப்பொழுதும் யாரிடமும் தோற்று விட கூடாது என்பதில் முனைப்பாக இருப்பான்.
நிச்சயம் முரளியை பற்றி சொன்னால் முன்கோபி அவன் முந்தியடித்து சண்டைக்கு தான் நிற்பானே தவிர நிதானமாய் யோசித்து சாதுரியமாய் முடிவெடுக்க மாட்டான்.
அவன் நேரடியாக முரளியிடம் சண்டைக்கு போய் விட்டால் இன்னும் பிரச்னை பெருசாகி விடும்.
இது ஒன்றும் படமோ கதையோ அல்லவே எந்த பின்புலனும் இல்லாத ஹீரோ ரவுடியுடன் மோதி ஜெய்ப்பது போல் காட்ட..!
தீவிர யோசனைக்கு பிறகு அந்த முடிவை எடுத்தான் வருண்.
இந்த மேட்ச்சை விட கார்த்தியின் எதிர்காலமே அவனிற்கு பெரிதாய் தோன்றியது. முதலில் முரளியிடம் இருந்து அவனை காக்க வேண்டும் அதற்கு அவன் இங்கு இருக்க கூடாது.
அதனால் தான் அவன் மேட்ச்சில் கலந்து கொள்ள முடியாத படி அவனின் செர்டிபிகேட்ஸை எரித்தான்.
அவனின் தந்தைக்கு ட்ரான்ஸஃபர் ஏற்ப்பாடு பண்ணியதும் அவனே..! ரிட்டயர் இந்தியன் கோச் சீதாராமனிடம் கார்த்தி பற்றி கூறியதும் அவனே..!
கொஞ்ச நாள் கழித்து அவனிடம் உண்மையை சொல்லி அவனை சமாதானம் செய்து கொள்ளலாம் என அவன் இருக்க, விதி அவனிற்கு வேறு கணக்கு போட்டு விட்டது.
சரியாக வருண் தாரிகா திருமணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்னாடி அவர்கள் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் எடுத்து கொண்டிருந்த பொழுது, தீரென வலிப்பு வந்து கீழே சரிந்தான் வருண்.
ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டவனை மறந்தும் கூட வந்து எட்டி பார்க்கவில்லை தாரிகா.
அவனிற்கு இப்படி ஒரு நோய் இருப்பதை மறைத்து தன்னை ஏமாற்றி
திருமண செய்து கொள்ள திட்டமிட்ட துரோகி என குற்றம் சாட்டி திருமணத்தை நிறுத்தி விட்டாள்.
வருணின் குடும்பத்தினர் மிகவும் பரிதவித்து போனர் . அவனை பரிசோதித்த மருத்துவர் அவனிற்கு ஒரு பிரச்சனையும் இல்லை என கூறி, சில மாத்திரைகள் மட்டும் எழுதி கொடுத்து அனுப்பி விட்டார்.
ஆனால் அதற்கு பிறகு தான் அவனிற்கு பிரச்னையே ஆரம்பித்தது எப்பொழுதும் வரும் ஒற்றை தலைவலியை பெரிதாக அலட்டி கொள்ளாதவனிற்கு அவ்வப்பொழுது கை, கால்களில் நடுக்கம் ஏற்ப்பட்டது. கொஞ்சம் வேகமாக நடந்தாலே மூச்சு வாங்குதல், என இருக்க ஏதோ தவறாக இருப்பாதாய் உணர்ந்தான். அவனின் சந்தேகத்தை பெரிது படுதும் விதமாக அன்று காபி கப்பை எடுக்க நினைத்த அவனால் அதை தூக்க கூட முடியவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் சரியாகி விட்டது.
சென்னையில் இருக்கும் சிறந்த நியூரோ டாக்டரை போய் சந்தித்தான் வருண். ஏகப்பட்ட ஸ்கேன் டெஸ்ட் எடுத்த பிறகு அவனிற்கு பார்க்கின்சன்ஸ் (parkinsons) நோய் இருப்பதை உறுதிப்படுத்தினார் மருத்துவர்.
” கேன்சர் எப்படி செல்ஸ்ஸ பாத்திக்குமோ இது நெரம்பு மண்டலத்தை பாதிக்கற நோய் வருண்.
இது தான் காரணமுனு குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாது. 60% லங் கேன்சர் இருக்கவங்க
நான்- ஸ்மோக்கர்ஸ் தான். அது மாறி தான் நீங்களும். இந்த நோய் இருக்கறத கண்டு புடிக்கறதே ரொம்ப கஷ்டம். கடைசி ஸ்டேஜ்ஸ்ல தான் சிம்ப்டம்ஸ் காட்டும். ஒவ்வொருதங்களுக்கும் ஒவ்வொரு மாறி பாதிக்கும் உங்களுக்கு பிரைன் நெர்வ்ஸ்ல தான் பாதிப்பு, அதான் உங்களுக்கு தல வலி, வலிப்பு, கைகால் நடுக்கம் எல்லாம் வந்துருக்கு, இதுக்கு டிரீட்மென்ட் எடுத்துக்கலாம் பட் 100% குணமடைவீங்கனு சொல்ல முடியாது. வேணுமா உங்கள ஆப்ரேட் பண்ணி பாக்கலாம் பட் அதோட சக்சஸ் ரேட் கூட 50-50 தான்..! உங்களுக்கு ஃபிட்ஸ் வந்த போது ஜெனரல் செக் அப் தான் பண்ணி இருப்பாங்க அதுனால தான் அவங்கனால கண்டு புடிக்க முடில,”
“அப்போ இன்னும் எவளோ நாள் டாக்டர் எனக்கு டைம் இருக்கு ” நடுங்கும் குரலில் கேட்டான் வருண்.
” ஆவரேஜா மூணு டூ நாலு மாசம் இருக்கு, பட் இப்போவே டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிக்கறது தான் நல்லது “
“இல்ல டாக்டர் அதுக்கு முன்னாடி எனக்கு முடிக்க வேண்டிய வேல ஒன்னு இருக்கு “
அவன் முன்னயே திட்டமிட்ட ஒன்று தான் இப்பொழுது செயல்ப்படுத்தினான்.
அவனின் ப்ராஜெக்ட்..! தந்தை, அண்ணன் தயவில்லாமல் தனியாக செய்ய வேண்டும் என்பதே அவனின் நீண்ட நாள் ஆசை,அதே அவனின் இறுதி ஆசையாகி போகும் என அவன் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டான்.
அதனால் தான் ஒவ்வொரு முறையும் ஏதேனும் தடங்கல் வரும் பொழுதெல்லாம் நிச்சயம் இதை செய்து முடித்து விட முடியுமா என அவனுள் கேள்வி எழும்.
தாரிகா மீது கூட அவனிற்கு எந்த வித கோவமோ வருத்தமோ இல்லை. அவள் சொன்னது உண்மை தானே யாருக்கு தான் நோயாளிக்கு வாழ்க்கை கொடுக்க புடிக்கும்.
சாதாரண வலிப்பு வந்ததையே தாங்கி கொள்ள முடியாமல் அவனை வேர் எங்கும் வெளியே செல்ல விடாமல் பார்த்து கொண்டது அவனின் குடும்பம். நிச்சயம் இது தெரிந்தால் தாங்க மாட்டார்கள் என மறைத்து விட்டான்.
திருமணம் நின்ற சோகத்தில் மகன் இருக்கிறான் என அவர்கள் நினைத்து கொண்டிருந்தனர்.