Loading

கிழிந்தும்கிழியா பட்டமாய்
சாய்ந்தும்சாயா மரமாய்
ஊசலாடி தவிக்க செய்கிறது
காதல் முறிவு!

தூது 2 :

கதிரவன் தன் கதிர்களால் சுள்ளென சுட்டெரிக்காமல் புன்னகையுடன் இதமாய் மேனியை தீண்ட செய்த, பின்மதிய நேரத்தில் “சுந்தரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி” சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது.

பெரும்பாலான வகுப்பறைகளில் பாடம் சொல்லி தரும் ஆசிரியர்களின் கணிர் குரல்களும், சில வகுப்புகளில் மாணவர்களின் கசகச குரல்களும் ஒலித்து அந்த மதியநேர அமைதியை கலைத்துக் கொண்டிருந்தது.

ஆகமொத்ததில் அனைவரும் பாடம் கற்பிப்பதிலும், கற்பதிலும் கவனம் கொண்டிருக்க அந்த மிகப்பெரிய பள்ளியின் பரந்து விரிந்திருந்த விளையாட்டு மைதானத்தின் மத்தியில் தன் கிளைகளை பரப்பியபடி ஒய்யராமாய் நின்றிருந்தது ஓர் மரம்.

மரத்தின் நிழலில் மாணவர் குழு ஒன்று அமர்ந்தபடி அங்கு மென்மையாய் வீசிக் கொண்டிருந்த தென்றலின் சுகத்துக்கு இன்னும் இனிமை கூட்ட தங்களின் குரல்களில் தேன் சொட்ட பாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் இன்னும் இரண்டு நாட்களில் வரவிருக்கும் அவர்கள் பள்ளியின் தாளாளரின் வரவேற்பில் பாடுவதற்காய் தான் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்…
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலவை கூட்டி வந்ததார்

ஆறில் இருந்து எட்டாம் வகுப்பு வரை சேர்ந்த பத்து பிள்ளைகள் அடங்கிய குழு அது. அவர்களின் சின்ன குரலில் அந்த பாடல் மெல்லிய ராகமாய் மனதை கவரும்படி இசைந்தது.

அவர்கள் அனைவரின் குரலும் இணைந்து ஒலித்ததில் அந்த பாடல் வரிகள் இன்னும் அழகாய் மாறுவதை ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த பள்ளியின் இசை ஆசிரியர் பாகிரதி.

கடற்மணல் வண்ண தேகம் சூரியனின் மென்மையான தீண்டலில் பளபளக்க, செவ்வண்ண இதழ்களுடன் கண்களும் புன்னகைக்க அவள் பாடலை ரசித்து நின்ற தோற்றத்தை ரகசியமாய் தூரத்தில் நின்று ரசித்தது ஒரு ஜோடி கண்கள்.

அவளை இன்னும் அருகே பார்க்க நெஞ்சம் விளைய எதை பற்றியும் யோசிக்காமல் அவள் அருகே சற்று தள்ளி வந்து நின்றது அந்த கண்களுக்கு சொந்தமான உருவம்.

சில நிமிடங்கள் கடந்த பிறகும் பெண்ணவளின் பார்வை தன்புறம் திரும்பாததில் அந்த கண்களில் சிறு சலிப்பு வந்தது.

அதனால், “அடடா! என்ன பசங்களா நீங்க? இந்த பாட்டை எல்லாம் யாராவது ஸ்கூல்ல பாடுவாங்களா? யார் இந்த மாதிரி பாட்டை எல்லாம் தேர்ந்தெடுக்குறது?”

என்று சத்தமாய் கேட்டு அவளின் கவனத்தை தன்புறம் திருப்பினான் கரண், பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கு கணக்கு பாடம் எடுப்பவன்.

அவனின் கேள்வியில் மாணவர்கள் பாகிரதியை பார்த்தனர். இத்தனை நேரம் அவனின் வரவை அறிந்தும் தெரியாதது போல் நின்றிருந்தவள் இப்பொழுது வேறு வழியின்றி கரணிண் புறம் திரும்பினாள்.

“ஏன் சார் இந்த பாட்டுக்கு என்ன ?”

“இல்ல ரதி! இந்த மாதிரி பாட்டெல்லாம் உங்களை மாதிரி அழகான யங் கேர்ள்-க்கு தான் சரியா இருக்கும்” கரணின் கண்களில் ரசனை வழிந்தது.

முகம் இறுக, “அது இருக்கட்டும் சார்! எனக்கு ஒரு சந்தேகம் பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குற வாத்தியாருக்கு மரியாதையை வேற யாராவது சொல்லிகொடுக்கனுமா என்ன?”

அழுத்தமாய் கேட்டவளின் கேள்வியில் ‘எனக்கு நீ மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும்’ என்ற செய்தி தொணித்தது.

“ஓ ரதி!” என அவன் சமாதானமாய் பேச வர,

“கரண் சார்! கால் மீ பாகிரதி மேடம்” என கட்டளையாய் சொன்னவளிடம் மாணவர்கள் முன் வேறு எதுவும் பேசமுடியாததால் அமைதியாய் தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தான்.

பாகிரதி மாணவர்களிடம், “ஓகே ஸ்டூடன்ட்ஸ்! இன்னும் ஒருமுறை முதல்ல இருந்து பாடுங்க” என தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

மாணவர்களிடம் கடுமை கூடாது என தனக்குதானே சொல்லி கரணிண் செயலில் தனக்குள் உண்டான கோபத்தை குறைக்க முற்பட்டாலும் மாணவர்கள் முன்னான அவனின் பேச்சும், பார்வையும் பாகிரதிக்கு எரிச்சலை தான் தந்திருந்தது.

‘இடியட்! ஸ்டூடன்ட்ஸ் முன்னாடி எப்படி நடந்துக்கனும்னு கூட தெரியாத இவனுக்குலாம் யார் வாத்தியார் வேலை கொடுத்தது தெரியலை’ என மனதினுள் பொறுமினாள்.

அவளின் அந்த கோபம் மாலை வீட்டிற்கு கிளம்பும் வரை தொடர, ஆசிரியர்கள் அறையில் எரிச்சலுடன் தனது பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தவேளை மற்றவர்களும் கிளம்பியபடி இருந்தனர்.

தங்கள் அறையில் இருந்து வெளியில் வந்தவள் முன் ஆண்கள் ஆசிரியர் அறையில் இருந்து வெளியில் வந்த இருவர் சென்று கொண்டிருக்க, ‘சரி அவர்கள் செல்லட்டும் நேரம் கடந்தால் தானும் சற்று நிதானம் கொள்வோம்’ என எண்ணி மெதுவாய் எட்டுவைத்தாள்.

அவளின் போதாத காலம் உன் எரிச்சல் நீங்குவது அத்தனை சுலபம் அல்ல என சொன்னது போலும். அவளின் முன் சென்ற இருவரில் பாலா என்னும் ஆசிரியர்,

“ரவி சார்! இங்க ரெக்கமென்டேஷனுக்குலாம் இடமில்லனு தான் பேரு ஆனா பாருங்க! கரண் சாருக்கு மட்டும் தனி கவனிப்பு தான் போலயே. பாருங்க அவரை மட்டும் ஆளே காணோம். எந்த வேலையா இருந்தாலும் பெரிய ஆளுங்களை தெரிஞ்சி வச்சிருந்தோம்னா நம்ப தனிதான் போலயே”

“ஏய்! ஏன்பா? எதுக்கு இப்போ இப்படி கத்தி பேசிட்டு இருக்க. அந்த கரண் பெரியவருக்கு வேண்டபட்டவன்னு பேச்சு அடிபடுது. மத்தவங்களை வம்பு பேசுறது போல அவன்கிட்ட பண்ணாம அவன் பக்கமே போகாம பார்த்து ஒழுங்கா இருந்துக்கோ” என எச்சரித்தார் அவனின் உடன்வந்த ரவி என்னும் ஆசிரியர்.

அவர்கள் பேச்சில் எரிச்சல் பண்மடங்காய் பெருக அதை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கிளம்பினாள் பாகிரதி.

எப்படி எந்த வேகத்தில் சென்றாளோ அடுத்த பத்து நிமிடத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் குறிபிட்ட ஓர் வீட்டின் முன் வண்டியை நிறுத்தி இறங்கினாள்..

வண்டியை அதன் இடத்தில் நிறுத்தியவள் விறுவிறுவென வீட்டுக்குள் சென்று அங்கிருந்த சோபாவின் ஒருபுறம் தனது கைப்பையை விசிறி அடித்து மறுபுறம் தொப்பென்று அமர்ந்தாள்.

அவள் தொப்பென்று அமர்வதற்கும் அவள் தோளில் தொப்பென்று அடி விழுவதற்கும் சரியாய் இருந்தது. வண்டியின் சத்தத்தில் தன் அறையில் இருந்து வெளிவந்திருந்த அவளின் அன்னை தான் அவளை அடித்தது.

“ஆ..அவுச்! மா! எதுக்கு இப்போ என்னை அடிச்ச” வலியில் சிணுங்கியவளிடம்,

“ஏன்டி எத்தனை தடவை சொல்லிருக்கேன் எந்த பொருளையும் தூக்கி போடாம ஒழுங்கா வைக்கனும்னு. சொல்வது ஒன்னையும் கேக்குறது இல்ல இந்த லட்சணத்துல இவங்க ஸ்கூல்ல டீச்சர் வேற”

முகத்தை கோணலாக்கியபடி நொடித்தார் அன்னலட்சுமி, பாகிரதியின் தாய்.

“மா! சும்மா சும்மா இதே சொல்லாத நான் வெறும் பாட்டு டீச்சர் தான் பீடி டீச்சர் இல்ல”

“எந்த டீச்சரா இருந்தா என்னடி ஒழுக்கத்தை யார் வேணா சொல்லி கொடுக்கலாம்”

“க்கும்! கொடுக்குறாங்க நல்லா… இந்த டையலாக்கை எல்லாம் முதல்ல உன்னோட தொம்பிக்கு சொல்லு. எப்போ பாரு என்னை எரிச்சல் பண்ணுறதையே வேலையா வச்சிருக்கான்”

மதியம் முதல் இருந்த எரிச்சல் நீங்க படபடவென பேசிக் கொண்டிருந்தவளின் வாயிலே பட்டென்று ஒன்று வைத்தார் அன்னலட்சுமி.

“ச்சு.. மா!”

“என்ன டி அம்மா! அவனை மரியாதையா ‘மாமா’னு கூப்பிடுனு எத்தனை தடவை சொல்லிருக்கேன். என்னிக்கா இருந்தாலும் உன்னை கட்டிக்க போறவன் அவன் தான் சொல்லிட்டேன்”

கோவமாய் முறைத்த அன்னையிடம் ‘முடியாது’ என்று சொல்ல பாகிரதிக்கு வாய் வரை வார்த்தை வந்தது தான். அன்னையிடம் அதை சொல்லும் தைரியமும் அவளுக்கு நிரம்பவே உள்ளது.

ஆனால் அவளின் தந்தையை நினைக்கும் பொழுது மனதில் எழுந்த வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குள்ளே அடைந்து கொண்டது. அப்படி வார்த்தைகளை அடக்கியதில் அவளுக்கு கண்கள் கலங்கியது.

அவளின் கலங்கிய கண்கள் அன்னலட்சுமியை வருத்த ஒன்றும் சொல்லாமல் அருகே இருந்த சோபாவில் அமைதியாய் அமர்ந்துவிட்டார்.

கிழக்கு கடற்கறை சாலை என்றாலே வீடுகள் அத்தனை நெருக்கமாய் இருக்காது. இதில் இவர்கள் வசிக்கும் பகுதியி மேல்தட்டி மக்கள் வசிக்கும் பகுதி ஏன் இவர்களின் வீடு கூட வெறும் வீடு அல்ல குட்டி பங்களா என்று தான் சொல்ல வேண்டும்.

அத்தனை பெரிய வீட்டில் தற்பொழுது இவர்கள் இருவர் மட்டுமே இருக்க அவர்களின் இடையே நெளிந்த அமைதி பூதகரமாய் தோன்றியது.

சில நிமிடங்கள் சென்று வெளியில் கேட்ட வண்டியின் சத்தத்தில் கூட இருவரும் கலையாமல் இருக்க அங்கு நிலவிய அமைதியில் புருவங்களை சுருக்கியபடி யோசனையுடன் வீட்டினுள் நுழைந்தான் கரண், கருணாகரண். பாகிரதியின் அன்னை அன்னலட்சுமியின் தம்பி, பாகிரதிக்கு தாய்மாமன்.

வீட்டினுள் வந்தவுடன் அன்னையும், மகளும் ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்திருந்த கோலத்திலே இருவருக்கும் ஏதோ சண்டை என அவனுக்கு புரிந்துவிட்டது..

“என்ன கா! ரதியை என்ன சொன்ன? ஏன் கா தினம் அவளை எதாவது சொல்லலைனா உனக்கு தூக்கம் வராதா?”

எதையும் விசாரிக்காமல் எடுத்தவுடன் பாகிரதிக்கு ஆதரவாய் பேசியவனின் பேச்சில் அன்னலட்சுமிக்கு தம்பியின் மனம் அறிந்து முகம் எல்லாம் சிரிப்பு தான்.

“பார்த்தியாடி அவனுக்கு உன் மேல எவ்வளவு பாசம்னு. என்ன நடந்துச்சுனு கூட கேக்கல ஆனாலும் உன் மேல தப்பிருக்காதுனு பேசுறான் பாரு”

இத்தனை நேரம் மகளிடம் கொண்ட கோவம் எல்லாம் எங்கோ ஓடியிருக்க சிலாகித்து சொன்னவரை முறைத்து பார்த்தாள் பாகிரதி .

“ச்சு அக்கா! போதும். எனக்கு தலை வலிக்கிது ஒரு கப் டீ போட்டு தாங்க” தமக்கையின் கேலியில் கரண் தன் தலைமுடியை கோதியபடி பேச்சை மாற்றினான்.

தாயின் பேச்சும், கரணிண் செய்கையும் பிடிக்காத பாகிரதி இடவலமாய் தலையசைத்தபடி தன் அறை நோக்கி சென்றாள். அசைவில் அத்திசை பார்த்த கரண் அவளின் வேகநடையை வெட்கம் என எண்ணிக்கொண்டான்.

“ம்க்கும் க்கும்! நான் இன்னும் இங்க தான் டா இருக்கேன் தம்பி”

தமக்கையின் செறுமலில் நெளிந்தவாறு, “அக்காகா! நீ இருக்க பாரு.. போ கா” என அழகாய் வெட்கப்பட்டான்.

அன்னலட்சுமி அருகே வந்து அவனின் முகத்தை வழித்து திருஷ்டி உடைப்பது போல் செய்தவர், “என் அழகு தம்பி! என் கண்ணே பட்டுடும் போல . அவ்வளவு பாசமா டா அவ மேல? உங்க மாமா வரட்டும் சீக்கிரமே அவர்கிட்ட சொல்லி உங்க கல்யாணத்தை முடிக்கிறேன்” என்றார்.

“அக்கா! இப்போ என்ன அவசரம்? இத்தனை வருஷம் கழிச்சு ரதி இப்போதான் இங்க வந்திருக்கா இன்னும் அவ எனக்கூட பழகவே இல்லை”

-என்ற கரணிண் நினைவெல்லாம் இன்று மதியம் பாகிரதி தன்னிடம் நடந்து கொண்ட முறையில் தான் சிந்தனையானது.

“அதெல்லாம் உங்க கல்யாணம் முடிஞ்சதும் அவ பழகிப்பா. உங்க கல்யாணம் என்னோட ஆசை மட்டும் இல்லடா உங்க மாமாவும் இதை தான் விரும்புறாருனு நினைக்கிறேன். அதனால தான் இத்தனை வருஷம் இல்லாம திடிருனு இப்போ அவளை இங்க வரவச்சிருக்காருனு போல”

சந்தோஷமாய் தன் கணவனும் அப்படிதான் நினைப்பார் என எண்ணிக்கொண்டு அவர் பேசினார்.

அறைக்குள் சென்று அமர்ந்திருந்த பாகிரதிக்கு வெளியே இவர்கள் இருவர் பேசுவதும் தெளிவாய் கேட்க அடுத்து இதில் தான் என்ன செய்வது என குழப்பமாய் உணர்ந்தாள்.

அவளின் குழப்பம் நடந்துமுடிந்த சில விஷயங்களை யோசிக்க யோசிக்க பயமாய் மாறியது. அவ்வேளையில் தன் பயம் போக்கும் ஆபத்பாந்தவனை தேடி அவளின் மனம் அலைபுற்றது.

கைகள் அன்னிச்சையாய் தனது கைப்பையில் இருக்கும் கைப்பேசியை எடுத்து அதில் குறிப்பிட்ட செயலியை தேடி ஒரு பெயரை தட்டியது.

இரு நொடிகளில் “ரதி தேவன்” என்னும் பெயருடன் சிலபல கவிதைகள் அடங்கிய புகைபடங்களுடன் விரிந்தது அப்பக்கம்.

நடுக்கம் கொண்ட கையின் இருவிரல் கொண்டு அப்பெயரை வருடியவளின் பயம் சிறிது சிறிதாய் விலக, நெஞ்சில் சற்று தைரியமும் துளிர்த்தது.

இரு நிமிடங்களில் அவளின் பழைய தைரியம் மீண்டுவிட தெளிவாய் உணர்தவளின் பார்வை அந்த பக்கத்தில் உலா வர அவ்வேளையில் அதில் புதிதாய் ஓர் கவிதை பதிவேற்றபட்டதாய் செய்தி வந்தது.

அவளின் கரம் அதை தொட, அவளின் முன் விரிந்தது அக் கவிதை,

என் உணர்வை கொன்று
உயிரை கொண்டு
சென்றவளை தேடி
ஓடி வருகிறேன்
ஆயிரம்கால்களுடன்

– ரதி தேவன்

அதை வாசித்தவுடன் வியப்பில் விழிவிரித்தாள்.

‘நீ வருவேன்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் உன் கோவம் தீர்ந்து வருவேன்னு நான் எதிர்பார்க்கலை. ஆனா நீ என்ன நினைச்சி வரியோ அது கண்டிப்பா நடக்கபோறதில்லடா. நம்பளோட முறிஞ்ச உறவு முறிஞ்சதுதான்’

வலித்தாலும் இதுதான் நிதர்சனம் என தன் மனதோரம் மெல்ல சொல்லியவளின் நெஞ்சுரத்தை சோதிக்கவென்றே வரபோகிறான்
ஒருவன்.

அத்தனை திடத்துடன் தான் பதிவிட்ட கவிதையை தானே மீண்டுமாய் வாசித்தபடி ஆயிரம் கால்கள் கொண்டு ஓடி வந்த தொடர்வண்டியின் ஒரு பெட்டியில் தன் இருக்கையில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தான் மதனன், ரதியின் மதனன்.

– தூது தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0
  • Select

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்