Loading

“லாவண்யா… நான் வந்துட்டேன். உன் அப்பார்ட்மெண்ட்டுக்கு கீழே தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரம் வா.” என்றான் ரிஷப் கைப்பேசியில்.

“டென் மினிட்ஸ் ரிஷப். சீக்கிரம் வந்துடுறேன். வெய்ட் பண்ணுங்க. சாரி செல்லம்.” என்ற லாவண்யா ரிஷப்பின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அவசரமாக அழைப்பைத் துண்டித்தாள்.

லாவண்யா அழைப்பைத் துண்டித்த மறு நொடியே ரிஷப்பின் கைப்பேசி மீண்டும் ஒலி எழுப்பியது.

ரிஷப்பின் தாய் மேகலா தான் அழைத்திருந்தார்.

ரிஷப் அழைப்பை ஏற்று காதில் வைக்க, “ரிஷப்… அப்பா தரகர் கிட்ட சொல்லி உனக்கு அவசரமா பொண்ணு தேடிட்டு இருக்கார் பா. என்னால அவர் கிட்ட எதுவும் சொல்லவும் முடியல. பயமா இருக்கு. உனக்கு தான் அப்பாவோட கோவத்த பத்தி ரொம்ப நல்லா தெரியுமே. நீ எப்போ டா அப்பா கிட்ட விஷயத்த சொல்லி என் மருமகள வீட்டுக்கு கூட்டிட்டு வரப் போற? எதுவா இருந்தாலும் சீக்கிரம் பண்ணு ரிஷப். போற போக்க பார்த்தா அப்பா அடுத்த முகூர்த்தத்துலயே உனக்கு கல்யாணத்த பண்ணி வெச்சிடுவார் போல.” என்றார் மேகலா.

“அம்மா… நான் லாவண்யாவ மீட் பண்ண தான் வந்திருக்கேன். இன்னைக்கு அவ பிறந்த நாள். கண்டிப்பா மறுக்க மாட்டா. நான் அவ கிட்ட பேசிட்டு சொல்றேன்.” என்றான் ரிஷப்.

மேகலா, “சரி கண்ணா… என் மருமகளுக்கு நானும் வாழ்த்தினேன்னு சொல்லு. அப்படியே என் சார்பா ஏதாவது கிஃப்ட் வாங்கி கொடு. சரி ரிஷப்… அப்பா இந்த பக்கம் தான் வரார். நான் வெச்சிடுறேன்.” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தார்.

“என்ன? உன் புள்ள கிட்ட எல்லாத்தையும் பத்த வெச்சிட்டியா? அம்மாவும் பையனும் சேர்ந்து போடுற ப்ளேன் எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா? என் இருபது வயசுல இருந்து இராப்பகல் பார்க்காம வியர்வை சிந்தி உழைச்ச சொத்து இது. உன் பையன் எவளோ ஒரு அநாதைய கட்டிக்கிட்டு வந்து எல்லாத்தையும் தூக்கி கொடுக்க விட்டுருவேனா? நான் பார்க்குற பொண்ணு மட்டும் தான் என்னைக்கா இருந்தாலும் இந்த வீட்டுக்கு மருமகளா வருவா. சொல்லி வை உன் புள்ள கிட்ட. வெளிய தலை காட்ட முடியல. எல்லாரும் இவன் கண்டவளோட ஊர் சுத்துறத பத்தி தான் பேசுறாங்க. எந்த கழிசடைக்கு பிறந்தாலோ அவ. சின்ன வயசுலயே அவள பெத்தவங்க அநாதை ஆசிரமத்துல தூக்கி போட்டுட்டு போய் இருக்குதுங்க. அதைப் போய் உன் புள்ள காதலிக்கிது. காதலாம் காதலாம். கன்ட்றாவி.” என்றார் மோகன் எரிச்சலாக.

தன் மகனின் காதல் விவகாரம் தனக்கு மட்டும் தான் தெரியும் என நினைத்திருந்த மேகலா கணவனுக்கும் அது பற்றி தெரிந்து விட்டது என்பதில் அதிர்ச்சியில் இருந்தார்.

கணவரின் கோபத்தைப் பற்றி அறிந்திருந்த மேகலாவுக்கு பதில் பேசவே அச்சமாக இருந்தது.

“அ…அது… அது வந்துங்க… பையன் ஆசைப்படுறான். அந்தப் பொண்ணும்…” என மேகலா தயங்கித் தயங்கி கூறி முடிக்கும் முன்னே, “வாய மூடு…” எனக் கத்தி இடையிட்டார் மோகன்.

மேகலா அதிர்ந்து ஒரு அடி பின்னே நகர, “இன்னொரு வார்த்தை பேசினா தொலைச்சிடுவேன். இந்த நினைப்ப இன்னையோட அழிச்சிடு. இல்ல அம்மாவையும் புள்ளயையும் என் கையாலயே கொன்னு புதைச்சிடுவேன்.” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு அங்கிருந்து அகன்றார் மோகன்.

அதே நேரம், “சாரி ரிஷப்… ரொம்ப லேட் ஆகிடுச்சுல்ல. சாரி…” எனக் கண்ணைச் சுருக்கி மன்னிப்புக் கேட்டவளைத் திட்ட மனமின்றி தன்னவளைப் பார்த்து புன்னகைத்தான் ரிஷப்.

இரு சக்கர வாகனத்தில் ரிஷப்பின் பின்னால் ஏறி அமர்ந்த லாவண்யா ரிஷப்பின் வயிற்றை இரு கரங்களாலும் சுற்றி வளைத்து, அவன் முதுகில் முகம் புதைத்தவள், “எங்க போறோம் ரிஷப்? ஏதோ சர்ப்ரைஸுன்னு சொன்ன.” எனக் கேட்டாள்.

“அதான் சர்ப்ரைஸுன்னு சொல்லிட்டேனே. அந்த இடத்துக்கு போனதும் உனக்கே தெரிஞ்சிடும்.” என்றான் ரிஷப் புன்னகையுடன்.

சற்று நேரத்தில் ஒரு இடத்தில் ரிஷப் வண்டியை நிறுத்த, லாவண்யாவின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கின.

பிறந்த பச்சிளம் குழந்தை முதல் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்கு சேரும் வரை லாவண்யா வளர்ந்த ஆசிரமம் முழு அலங்காரத்துடன் காணப்பட, லாவண்யாவிற்கு பேச நா எழவில்லை.

பைக்கை பார்க் செய்து விட்டு வந்த ரிஷப் தன்னவளை தோளோடு அணைத்துக் கொண்ட மறு நொடியே, “ஹேப்பி பர்த் டே லாவண்யா அக்கா…” எனக் கூச்சலிட்டனர் ஆசிரமத்தில் இருந்த சிறுவர்கள்.

லாவண்யா கலங்கிய கண்களுடன் புன்னகைக்க, “ஹேப்பி பர்த் டே மை ஃபோரெவர் குயின்.” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான் ரிஷப்.

அவன் நெஞ்சில் முகம் புதைத்த லாவண்யா, “தேங்க் யூ ரிஷப். தேங்க் யூ சோ மச். என் லைஃப்ல கிடைச்ச பெரிய வரம் நீங்க.” என்றாள்.

பின் ஆசிரமத்தின் பொறுப்பாளர் லாவண்யாவை அணைத்து வாழ்த்து சொல்ல, “தேங்க் யூ அம்மா.” என்றாள் லாவண்யா க்ணணீருடன்.

ஆசிரமத்தில் இருந்த அனைவருமே வந்து லாவண்யாவிற்கு வாழ்த்து சொல்லி விட்டுச் செல்ல, சந்தோஷத்தின் உச்சியில் இருந்தாள் அவள்.

இவற்றுக்கு எல்லாம் காரணமான தன்னவனை கண்களில் காதல் பொங்க நோக்க, யாருக்கும் தெரியாமல் இதழ் குவித்து காற்றில் முத்தமிட்டான் ரிஷப்.

லாவண்யாவின் முகம் செவ்வாணமாய்ச் சிவக்க, திடீரென ஆசிரமத்தில் இருந்த சிறுவர்கள் வந்து அவளின் கைப் பிடித்து எங்கோ அழைத்துச் செல்லவும் குழப்பத்துடன் அவர்களைப் பின் தொடர்ந்தாள் லாவண்யா.

ஆசிரமப் பொறுப்பாளர் லாவண்யாவின் கண்ணையும் கட்டி விட, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை அவளுக்கு.

சில நொடிகள் கழித்து ஏதோ ஒரு இடத்தில் அவளை தனியாக நிறுத்தி விட்டு அனைவரும் அங்கிருந்து அகன்றுவிட, “ரிஷப்… என்ன பண்ணுற? எதுக்காக என் கண்ணை கட்டி இருக்க?” எனக் கேட்டாள் லாவண்யா குழப்பமாக.

“ஷ்ஷ்ஷ்… மௌத் க்ளோஸ்… ஐஸ் ஓப்பன்.” என ரிஷப் சற்றுத் தள்ளி நின்று கூறிய மறு நொடியே தன் கண் கட்டை அவிழ்த்த லாவன்யாவின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன.

ஏனென்றால் சுற்றியும் அவளுக்கு பிடித்த சிவப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டு நடுவில் இதய வடிவில் ரோஜாக்கள் பரப்பப்பட்டு அதில் மையமாக லாவண்யா நின்றிருக்க, அவளுக்கு முன்னே கையில் பூங்கொத்துடன் ஒரு காலில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான் ரிஷப்.

சுற்றியும் பாடல் ஒலிக்க, அக் கணம் தன்னை ஓர் இளவரசியாக உணர்ந்தாள் லாவண்யா.

வெய்டிங் ஃபாா் தி புன்னகை… சிாிடி…

காணவில்லை ஹாா்ட் பீட்… திருடி…

அடடா… நான் கவிஞன்…

உனை பாா்த்து கெட்டுப்போன கவிஞன்… 

ஹானஸ்ட்டா… நான் பேசவா… 

இல்ல இது போதுமா….

ஓ… மை டாா்லிங் நாங்க கம்மிங்…

புது புது கணக்கெல்லாம் பென்டிங்…

ஓ கோரஸ்ஸா நான் கேட்கவா…

எஸ்-சா எஸ்-சா நோ-வா எஸ்-சா…

அழகியே…

மோி மீ… மோி மீ…

அழகியே…

லாவண்யா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதிருக்க, “வில் யூ பீ மை பெட்டர் ஹாஃப்?” எனக் கையில் இருந்த பூங்கொத்தை நீட்டிக் கேட்டான் ரிஷப்.

ரிஷப்பின் குரலில் தன்னிலை அடைந்த லாவண்யா அவன் தந்த பூங்கொத்தை கையில் வாங்கிக் கொண்டு கண்களில் கண்ணீருடன் சம்மதமாகத் தலையசைக்க, மறு நொடியே தன் பாக்கெட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து தன்னவளின் விரலில் போட்டு விட்ட ரிஷப் எழுந்து நின்று லாவண்யாவைத் தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.

லாவண்யாவும் பதிலுக்கு தன்னவனை அணைத்துக் கொள்ள, சில நொடிகள் சுற்றம் மறந்து தம் துணையின் அணைப்பில் லயித்திருந்தனர் இருவரும்.

“ஹே… அக்கா ஓக்கே சொல்லிட்டாங்க…” என சிறுவர்கள் கத்தவும் தான் சுற்றம் உணர்ந்து இருவரும் அவசரமாக விலகினர்.

ரிஷப் வெட்கத்தில் ஒரு கண்ணை மூடி நாக்கைக் கடிக்க, லாவண்யா வெட்கத்தில் செவ்வாணமாகச் சிவந்த முகத்தை மறைக்க பெரும்பாடு பட்டாள்.

பின் ரிஷப்பின் ஏற்பாட்டில் அங்கிருந்த அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட, மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தாள் லாவண்யா.

தன் சம்பாத்தியத்தில் லாவண்யா அங்கிருந்த சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி விட்டு ரிஷப்புடன் மனத் திருப்தியுடன் வெளியேறினாள்.

செல்லும் வழியில் தன்னவனின் முதுகில் முகம் புதைத்திருந்த லாவண்யா, “ரிஷப்… ஐ லவ் யூ…” என்றதற்கு அவன் வெறும் புன்னகையை உதிர்த்தான்.

ஆனால் தன் வயிற்றை அணைத்திருந்த அவளின் கரங்களை அழுத்தி தன் மனதையும் வெளிப்படுத்தத் தவறவில்லை.

மீண்டும் சில நொடிகள் அமைதியில் கழிய, “லாவண்யா… அப்பா பொண்ணு பார்க்குறார் கல்யாணத்துக்கு. உனக்கு ஓக்கேன்னா நான் வீட்டுல சொல்லவா நம்மள பத்தி? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்.” எனக் கேட்டான் ரிஷப் ஆவலாக.

லாவண்யாவிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவும் ரிஷப் குழப்பத்துடன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான்.

அதன் பின்னும் லாவண்யா ஏதோ யோசனையுடன் இருக்க, “லாவண்யா… என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? உனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?” எனக் கேட்கும் போதே ரிஷப்பின் முகம் வாடியது.

தன்னவனின் முகம் வாடுவதைப் பொறுக்காத லாவண்யா சட்டென அவனை அணைத்துக் கொண்டு, “ஐயோ அப்படி இல்ல ரிஷப். எனக்கு சீக்கிரமா உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க கூடவே இருக்கணும்னு நான் ஆசையா இருக்கு. ஆனா…” என இழுத்து நிறுத்த, லாவண்யாவை விலக்கிய ரிஷப், “என்ன ஆனா?” எனக் கேட்டான் குழப்பமாக.

“எனக்கு கம்பனில ஒரு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு. சம்பளம் கூட அதிகமா தருவாங்க. இந்த ப்ரமோஷனுக்காக தான் நான் இத்தனை நாள் கஷ்டப்பட்டேன். பல காம்பட்டிட்டர்ஸுக்கு மத்தியில எனக்கு மட்டும் தான் இந்த ப்ரமோஷன் கிடைச்சிருக்கு. பட் பெங்களூர் ப்ராஞ்ச்சுக்கு ஷிஃப்ட் ஆகணும்.” என லாவண்யா கூறும் போதே ரிஷப்பின் முகம் மாற, 

“எனக்கு கூட உங்கள பிரிஞ்சு பெங்களூர் வரை போறதுக்கு இஷ்டம் இல்ல ரிஷப். ஆனா இது தான் என்னோட ஆசை, கனவு எல்லாமே. அது உங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும். ஜஸ்ட் ஒரு சிக்ஸ் மந்த்ஸ் தான் ரிஷப். அது வரைக்கும் நம்ம கல்யாணத்த தள்ளி வைக்கலாமே. எனக்கு நான் வளர்ந்த ஆசிரமத்துக்கு என் சம்பாதிப்புல ஏதாவது பெரிசா பண்ணணும்னு ஆசையா இருக்கு ரிஷப். நான் சொல்லலன்னாலும் நீங்க இன்னைக்கு போல எங்க ஆசிரமத்துக்கு ஏதாவது பண்ணுவீங்க தான். எனக்கு அது ரொம்ப நல்லாவே தெரியும். ஆனா இது என்னோட நன்றியுணர்வ காட்ட ஒரு வழி ரிஷப். அவங்க உதவியால தான் நான் படிச்சு இன்னைக்கு இந்த நிலமைல இருக்கேன். உங்கள போல ஒருத்தர் எனக்கு புருஷனாவும் அமைய போறீங்க. அதுக்காகவாவது… ப்ளீஸ்…” என்ற லாவண்யாவின் கண்கள் கலங்கி இருந்தன.

அவளுக்கும் ரிஷப்பை விரைவில் திருமணம் செய்து தமக்கென குடும்பம், குழந்தைகளுடன் சந்தோஷமாக நாட்களைக் கழிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

இருந்தும் திருமணம் முடித்தால் எங்கு தன் கடமையை செய்யத் தவறி விடுவோமோ என்ற அச்சம் தான் லாவண்யாவை ரிஷப்பிடம் அந்த வேண்டுகோளை முன் வைக்க வைத்தது.

லாவண்யா அவ்வாறு கூறவும் ரிஷப்பின் மனம் வாடினாலும் தன்னவளின் விருப்பமே பெரிதென கருதிய ரிஷப் தன் வருத்தத்தை முகத்தில் காட்டாது, “ஹே லூசு… இதுக்கு எதுக்கு கண்ணெல்லாம் கலங்கிக்கிட்டு?” என உரிமையாக அதட்டியவாறு தன்னவளின் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

தன் கன்னத்தில் இருந்த ரிஷப்பின் கரங்களின் மீது தன் கரங்களைப் பதித்த லாவண்யா, “ரிஷப்… நிஜமாகவே உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லயா? என் மேல கோவம் இல்லயா?” எனக் கேட்டாள் வருத்தமாக.

மென் புன்னகையுடன் தன்னவளை அணைத்துக் கொண்ட ரிஷப், “ம்ம்ம்… உன் மேல கோவம்லாம் இல்ல. ஆனா கொஞ்சம் வருத்தம் இருக்கு உன்ன இன்னும் கொஞ்சம் நாள் பிரிஞ்சு இருக்கணுமேன்னு. இட்ஸ் ஓக்கே லாவண்யா. ஜஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ் தானே. கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ள காணாம போயிடும். அது வரை என் பேச்சிலர் லைஃப என்ஜாய் பண்றேன். பட் உனக்கு சிக்ஸ் மந்த்ஸ் தான் டைம். அதுக்கு மேல என்னால உன்ன பிரிஞ்சு இருக்க முடியாது. சரியா ஆறு மாசம் முடிஞ்சதும் நீ எங்க இருந்தாலும் தூக்கிட்டு வந்து உன் கழுத்துல தாலி கட்டி உன்ன மிசஸ் ரிஷப் ஆக்குவேன். ஓக்கே?” எனக் கேட்டான்.

“டபுள் ஓக்கே…” என்ற லாவண்யாவின் முகத்தில் தன்னவனை நினைத்து அவ்வளவு பெருமை.

💜💜💜💜💜

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

“கெட்டிமேளம் கெட்டிமேளம்…” எனப் பண்டிதர் கூறிய மறு நொடியே தவில், நாதஸ்வரங்கள் முழங்க தன் அருகில் கண்களில் கண்ணீருடன் முகம் இறுகிப் போய் அமர்ந்திருந்த ஷனாயாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன் சரி பாதி ஆக்கிக்கொண்ட ரிஷப்பின் முகமும் இறுகிப் போய் இருந்தது.

சுற்றியிருந்த உற்றார் உறவினர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.

பின்னர் பண்டிதர் வழங்கிய குங்குமத்தை ஷனாயாவின் கழுத்தை சுற்றி கரத்தைக் கொண்டு சென்று அவளின் நெற்றி வகிட்டில் வைத்து விட்ட ரிஷப் அவளின் காதருகே குணிந்து, “ஐ ஹேட் யூ.” என்றான் அழுத்தமாக.

ஓரக் கண்ணால் அவனைப் பார்த்து ஒரு கசந்த புன்னகையை உதிர்த்த ஷனாயா, “ஐ டூ ஹேட் யூ டு தி கோர்.” என்றாள் இகழ்ச்சியாக உதடு சுழித்து.

திருமணம் நல்லபடியாக முடிந்ததும், “சார் ஃபோட்டோ…” என வந்த புகைப்படக் கலைஞரை மணமக்கள் இருவரும் சுட்டெரிக்கும் பார்வை பார்க்க, அப் புகைப்படக் கலைஞருக்கு திக் என்றானது.

அவன் அங்கிருந்து நழுவ முயல, “தம்பி… எங்க போற? வந்து ரெண்டு பேரையும் ஃபோட்டோ எடுப்பா.” என்றவாறு அங்கு வந்தார் ரிஷப்பின் தந்தை மோகன்.

ரிஷப் பற்களைக் கடித்து தன் கோபத்தை அடக்க முயல, ஷனாயாவோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

“ஷனாயா…” என அழுத்தமாக அழைத்த அவளின் தந்தை தனராஜை வெற்றுப் பார்வை பார்த்த ஷனாயா கடமையே என ரிஷப்புடன் சேர்ந்து ஜோடியாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தாள்.

இருவர் முகத்திலும் மருந்துக்கும் புன்னகை இருக்கவில்லை.

அதனைக் கூறி வாங்கிக் கட்டிக்கொள்ள விரும்பாத புகைப்படக் கலைஞர் உள்ளவாறே இருவரையும் புகைப்படம் எடுத்தான்.

திருமணத்துக்கு வந்தவர்கள் ஒருவாறு கிளம்ப, மண்டபத்தில் ரிஷப்பின் குடும்பத்தினரும் ஷனாயாவின் குடும்பத்தினரும் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

அனைவரும் கிளம்பியதும் கழுத்தில் இருந்த மாலையைக் கழட்டி வீசிய ரிஷப் மண்டபத்தை விட்டு வெளியேறி தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

ரிஷப்பின் குடும்பம் அவனின் செயலில் எரிச்சலுடன் காணப்பட, ஷனாயாவின் குடும்பமோ அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

ஆனால் வாழ்நாள் முழுவதும் அவனுடன் பயணிக்கப் போகும் அவனது மனையாளோ இதை நான் எதிர்ப்பார்த்தேன் என்ற பாவனையில் நின்றிருந்தாள்.

“மருமகளே… அது…” என மோகன் தயக்கமாக ஏதோ கூற வர, அவர் முன் கை காட்டித் தடுத்த ஷனாயா அங்கிருந்த யாரையும் கண்டு கொள்ளாமல் ரிஷப்பைப் போலவே கழுத்தில் இருந்த மாலையை ஒரு ஓரமாகப் போட்டு விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறியவள் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பறந்தாள்.

மண்டபத்தில் இருந்தோரிடம் பலத்த அமைதி.

மோகனும் தனராஜும் தம் பிள்ளைகளின் செயலில் அதிர்ச்சியுடன் நிற்க, “என்னங்க… சம்மந்தி… அவங்க ரெண்டு பேரையும் கொஞ்சம் நாள் அவங்க போக்குல விடுங்க. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதே இப்போதைக்கு போதும் நமக்கு.” என்றார் ஷனாயா

வின் தாய் மகேஷ்வரி .

“ஆமாங்க. அடிச்சிக்கிட்டோ பிடிச்சிக்கிட்டோ ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா போதும். வாங்க நாம கிளம்பலாம்.” என்றார் ரிஷப்பின் தாய் மேகலா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Indhu Mathy

      இது என்ன ட்விஸ்ட்… ஜோடியை பிரிச்சு பிடிக்காத ஜோடியை சேர்த்துட்டீங்க சிஸ்…. 😱 இப்படி எட்டிக்கு போட்டியா இருக்காங்க…. 🙄 ரொம்ப கஷ்டம்…. 😔