Loading

காதல் மனசிலாயோ! 01

கல்லூரி காலம் என்பது மனதில் என்றுமே தாலாட்டு பாடும் தாயின் ராகமே.

மீண்டும் கேட்க தூண்டும் ராகம் போல் என்றும் மறவாத பொற்காலம் அது.

ஈரோடு பொறியியல் கல்லூரி…..

தனியார் கல்லூரி என்பதால் அதன் உரிமையாளரின் செல்வ செழிப்பில் கம்பீரமாக திகழ்ந்தது அக்கல்லூரி.

“அக்கா! நல்ல வேளை நீ அப்பா பேச்சினை கேட்டு மறுப்பேச்சு பேசாமல் இருந்ததால இப்ப நம்ம எக்சாம் எல்லாம் அட்டென்ட் பண்ணி, கடைசி எக்சாமுக்கு வந்துட்டோம், தேங்க் காட்! நான் ரொம்ப பயந்துட்டே இருந்தேன் தெரியுமா..?” என வாய் ஓயாமல் அருகில் பேசிக் கொண்டே நடந்தாள் சின்னவள்.

“ம்ம்ம்! அப்பாவோட கோபத்தை பத்தி தெரிஞ்சு அவர் கிட்ட நான் ஆர்கியூ பண்ணுவேனாடி, சரி விடு எக்சாமுக்கு ரெடி தானே, ஆல் தி பெஸ்ட்” என்றாள் பெரியவள்.

“ஓ எஸ்! பக்கா ரெடி, உனக்கும் ஆல் தி பெஸ்ட்” என கட்டை விரலை உயர்த்தி வெகுளியாக சிரித்தாள் சின்னவளான இரண்டாம் ஆண்டு கணினியிய பொறியியல் படிக்கும் மீரா.

“தேங்க்ஸ்டி! உன் ஹால் வந்துட்டு நீ போ, நானும் கிளம்புறேன், டைம் ஆச்சு எக்சாமுக்கு” என தங்கையின் கைகளை அழுந்தப் பிடித்து பிறகு சிரித்தப்படி விலக்கிவிட்டு அவளின் அறையை நோக்கி நடந்தாள் பெரியவளான இறுதி ஆண்டு மென்பொருள் பொறியியல் படிக்கும் ரேகா.

மீரா தேர்வு நடைப்பெறும் அறைக்குள் நுழைந்து, அவளின் இரண்டாம் வருடத்தின் இறுதித் தேர்வினை திறம்பட எழுதி முடித்தாள்.

அனைவரும் வெளியில் வந்ததும் பரீட்சையை மறந்து விடுமுறையை பற்றி பேசத் தொடங்கினர்.

“ஹப்பா! இனிமே நம்ம சூப்பர் சீனியர்ஸ்ல செமயா இருக்கும் நெக்ஸ்ட் இயர்”

“ஆமா! ஆமா! என்ன தான் சீனியரா இருந்தாலும் இந்த ஃபர்ஸ்ட் இயர்ஸ் நம்மளை மதிக்க மாட்டுதுங்க, இனிமே இருக்கு அவங்களுக்கு”

“ஏய்! அவங்களும் சீனியர்ஸ் தான்டி இனிமேல்”

“என்ன சீனியர்ஸ் பெரிய அப்பாடக்கர்ஸ் டீம் ஹவுஸ்க்கு நம்ம கிட்ட தான் வந்து நிக்கனும் இந்த வருசம், ஃபைனல் இயர் ப்ராஜெட் வொர்க்கு போயிடுவாங்க, நம்ம ராஜ்ஜியம் தான் இனிமேல்” என ஆளாளுக்கு அடுத்த வருடத்தைப் பற்றிய கனவுகள், சவால்களோடு அரட்டையில் இறங்கினர்.

மீரா அமைதியாக சிரித்தப்படி நின்றாள்.

“ஏய் மீரா! என்ன முகம் லைட்டா டல் அடிக்குது, எனி ப்ராப்ளம்..?” எனக் கேட்டாள் ஒரு தோழி.

“இல்லடி! டெய்லி காலேஜ் வரது எனக்கு ஹேப்பியா இருக்கும், ஒரு மாதிரி எனர்ஜினு வச்சுக்கோ, இந்த மரம், செடி, கொடிகள், கேண்டின், கிளாஸ் ரூம், ஸ்டாப்ஸ் கிண்டல், நம்ம அரட்டைனு டைம் போறதே தெரியாது, இப்ப லீவ்  வருதேனு ஃபீல் ஆகுது”

“அடியேய்! நீ யாரு..? அரசியல்வாதியும் பல பிஸ்னெஸ் செய்யும் தி கிரேட் வீரனார் பொண்ணு, நினைத்தால் வோல்ட் டூரே போகலாம், உனக்கு டைம் பாஸ் ஆகுறது கஷ்டமாடி!”

“அப்படியில்லைடி! என்ன இருந்தாலும் காலேஜ் மாதிரி வராதுல” எனச் சிரித்தாள் மீரா.

“செம பொண்ணுடி நீ, காலேஜ் டேஸை எந்தளவு நல்லா என்ஜாய் பண்றீயோ, அதே அளவு படிப்பிலும் பிண்ணி எடுக்குற பெர்சென்ட்டேஜ், இந்த எக்சாமில் எவ்வளவு வரும்..?” எனக் கேட்டாள் ஒருத்தி, மீராவோடு இணையான போட்டியில் படிப்பவள் ஆனால் நல்ல தோழி.

“ம்ம்ம்! நல்லா எழுதி இருக்கேன்டி, பார்க்கலாம்” என தன் கடிகாரத்தைப் பார்த்தவள்,

“அச்சசோ! அக்கா வெயிட் பண்ணுவாடி நான் கிளம்புறேன், கார் வந்து இருக்கும் அழைப்பதற்கு,  ஓகேடி! பை ஸி யூ ஸூன்” என கூறிவிட்டு வேகமாக நடந்தாள் கல்லூரியின் நுழைவாயிலிற்கு.

கல்லூரி வாயிலில் நின்ற காரினை கண்டவள், வேகமாக சென்றாள்.

“மாமா! நீங்க வந்து இருக்கீங்க…? எங்க ட்ரைவர் அங்கிள்” எனக் கேட்டாள் அவன் அருகே சென்று.

மீரா அம்மாவின் தம்பியும், அவளின் தாய்மாமனுமான அசோக் தான் நின்றுக் கொண்டு இருந்தான்.

“வாம்மா! எக்சாம் நல்லா பண்ணி இருக்கீயா…?”

“நல்லா எழுதி இருக்கேன் மாமா, நீங்க என்ன இந்த பக்கம்..?”

“இங்க ஒரு வேலையாக வந்தேன், மாமா ஃபோன் பண்ணி உன்னைய கூட்டிட்டு வரச் சொன்னார்.”

“சரி மாமா! அக்கா  வரட்டும் போகலாம்”

“ரேகா முன்னாடியே ட்ரைவரோடு போயிட்டாள், உடம்பு முடியலைனு நீ வா போகலாம்” என காரில் ஏறினான் அசோக்.

“என்ன ஆச்சு அக்காக்கு மாமா..? இப்ப எப்படி இருக்கா..?” என கேட்டுக் கொண்டே அவளும் ஏறி அமர்ந்தாள்.

“ம்ம்ம்! ஒன்னும் பிரச்சனையில்லைடா” என பதில் கூறியவன் ஃபோன் அடித்தது.

“ஆ! இதோ கிளம்பிட்டேன் மாமா, வந்துடுவேன்” என பேசியவர் தொடர்ந்து ஃபோனிலே பிஸியா இருந்தான்.

“மாமா! கார் ஓட்டும் போது ஃபோன் பேசாதீங்க, மாமி மட்டும் இப்ப இருந்திருந்தால் நீங்க தொலைஞ்சீங்க” என சிரித்தாள்.

“ஆமா! அவளுக்கு என்ன..?” என்றவன் ஃபோன் நின்ற பாடியில்லை.

மீராவும் வெளியில் வேடிக்கைப் பார்த்தப்படி வந்தாள்.

கல்லூரியில் இருந்து அரைமணிநேரம் மேல் ஆகும் அவளின் ஊர் இழுப்பம்கோட்டை.

செல்லும் வழி சாலைகளில் இருப்பக்கமும் வயல்வெளி தான்.

வீடு வந்தது….

அரசியல்வாதி ஆவதற்கு முன்பே கட்டிய வீடு அது, அவரின் வெளிநாட்டு சம்பாரிப்பு.

வீரனார் பைரவிதேவி தம்பதியின் மூத்த மகள் ரேகா, அடுத்தவள் மீரா, கடைக்குட்டி பையன் சேரமுகிலன்.

கார் சென்று வாசலில் நின்றது, மீரா இறங்கியதும்”வாங்க மாமா!” என முன்னே நடந்தாள்.

அசோக் இறங்கி அவளின் பின்னால் நடந்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் மொத்த குடும்பமும் ஹாலில் அமர்ந்திருந்தது.

அசோக் கண் ஜாடை செய்ய அவனின் மனைவி ஜனனி வேகமாக வந்து மீராவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

மீரா புரியாமல் பார்க்க, “கழுதைங்களா! போனா போதுனு படிக்க அனுப்பினால் காதல் கேக்குதா…?” என எழுந்த வந்த வேகத்தில் மீரா கன்னத்தில் ஒன்றை வைத்தார் வீரனார்.

“அப்பா!” என அதிர்ச்சியாய் கண்களில் நீர் வழிய அழைத்தாள் அவள்.

“மாமா! என்ன பண்றீங்க நீங்க…? அவ ஓடிப்போனதுக்கு இவளை  அடிச்சா என்ன அர்த்தம்” என சற்று வேகமாக கேட்டான் அசோக்.

பைரவி அழுதுக் கொண்டு இருந்தார்.

“இவளும் காலையில் அவ கூட தானே போனாள், சொல்லு உன் அக்கா அந்த பொறுக்கிப்பயலோட எங்க போறதா சொன்னா, சொல்லு மீரா..? என் ஒட்டு மொத்த மரியாதை, அரசியல் வாழ்க்கை, சொந்தம், பந்தம் எல்லாத்தையும் புதைச்சுப் போட்டுட்டு போயிட்டாளே” என அகங்காரமாக கத்தினார் வீரனார்.

“அப்பா! எனக்கு எதுவுமே தெரியாதுப்பா, என் கூட தான் வந்தாள், நான் பரீட்சை ஹாலுக்குள் போனதும் அவ அவளோட ஹாலுக்கு போயிட்டாள், அதுக்கு பிறகு வெளியில் வந்தேன் மாமா நின்றார்” என கண்ணீரோடு கூறினாள்.

“அடியேய்! பாத்து பாத்து வளர்த்தேனே இதுக்காகவா…? சொல்லுடி அக்கா எங்க போறேனு சொன்னாளா..?” என பைரவியும் மீராவை உலுக்கினார்.

“உண்மையில் இப்ப இங்க வந்ததும் தான் எனக்கே விசயம்  தெரியும்மா”

“அக்கா! அதான் அவளுக்கு தெரியாதுனு சொல்றாள, அமைதியா இரு, மீராக்கு எதுவுமே தெரியாது, நானும் சொல்லலை அக்காக்கு முடியலை முன்னாடி போயிட்டானு சொல்லி கூட்டிட்டு வந்தேன்” என்ற அசோக்கை முறைத்தார் வீரனார்.

“நான் நம்ப மாட்டேன், எல்லாம் கூட்டு களவாணிக, ஏய்! சொல்லு எங்க போறேனு சொன்னா, உண்மையை சொல்லு, இல்லைனா பொண்ணுனு பாக்க மாட்டேன், உன்னையும், அவளையும் வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்” என மகளிடம் எகிறி குதித்தார்.

வாடாம்மா! என்னடா தங்கம்! என் குலவிளக்குகள் ரெண்டும்! என பலவிதமான செல்ல அழைப்புகளை தான் தந்தையிடம் இருந்து  கேட்டு இருக்கிறாள் மீரா. ஆனால் இன்று களவாணினு சொல்வதோடு வெட்டிப் போட்டு ஜெயிலிற்கு போவேன் என சொல்ற அளவிற்கு கோபம் ஏன்..? அக்கா! ரேகா! என்னையும் சேர்த்து ஏமாற்றிவிட்டு போயிட்டீயே அக்கா! என மனதில் அழுது ஓலமிட்டாள், கண்களில் நீர் வழிந்தது.

“அப்பா! சத்தியமா எனக்கு தெரியாதுப்பா, அக்கா என்  கிட்ட எதையுமே சொல்லலை, நான் பரீட்சையை பத்தி தான் பேசினேன்” என கூறி கெஞ்சினாள்.

“ஜனனி! அவளை உள்ளே கூட்டிட்டு போ” என அசோக் கூறவும், ஜனனி அழைத்துச் சென்றாள்.

ரேகா  கிட்டதட்ட இருபது நாட்களாக பிளான் போட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறாள், அவ்வளவு எளிதில் மாட்டுவாளா…? வீரனார் பிஸ்னெஸில் ஒன்றான மெடிக்கல் கடையில் வேலைப் பார்த்த பையன் தான் அவன்.

அந்த பையனோட மகள் பேசுகின்றாள் என லேசாக தெரிந்தப் போதே கூப்பிட்டு கண்டித்தார், இனிமேல் பேசமாட்டேன் என உத்திரவாதம் கொடுத்தாள் ரேகா.

வீரனார் ரேகாவிற்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார், வெளியில் எங்கும் போக கூடாது என கட்டளையிட்டார் மகள்களுக்கு. கல்லூரி  தேர்வு வந்தமையால் அதை எழுதி வரட்டும் என அசோக் அனுமதி வாங்கிக் கொடுத்தான்.

அதனால் தான் அவர்கள் தேர்விற்கு சென்று வந்தது ட்ரைவர் பாதுகாப்போடு.

தேர்விற்கு சரியாக போய் திரும்பியதால் வீரனார் அசட்டையாக இருந்து விட்டார், ஆனால் ரேகா அந்த பையன் மோகன் உடன் பிளான் போட்டு இன்று எவரும் கண்டறியாத வண்ணம்  சென்று விட்டாள்.
……

ஒரு மாத காலம் ஓடியிருந்தது.

வீடே இறந்த வீடாக காட்சியளித்தது. துக்கம் விசாரிப்பது போல் ஆறுதல் கூற வருவதாக எண்ணி வந்த உறவினர்கள், நண்பர்கள் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி சென்றார்கள்.

“கண்டுப்பிடிச்சுட்டீங்களா…?”

“எனக்கு அந்த ஊரில் ஆளு இருக்கு”

“எனக்கு தெரிஞ்சவங்க பாத்ததா சொன்னாங்க”

“கவலைப்படாதீங்க! ஊரு உலகத்தில் நடக்காததா..? அடுத்த பொண்ணையாவது பாத்து வச்சுக்கோங்க, எல்லாம் வயசு”

“என்ன தான் வசதி இருந்தாலும் பொட்டப்புள்ளைங்களை அடக்கி தான் வச்சு வளர்க்கனும், வகை வகையா ட்ரஸ், ஃபோன், வண்டினு சுத்த விட்டால் இப்படி தான் ஓட தோணும்”

என பல அறிவுரைகள், கேலிகள், சீண்டல்கள் என ஒரு மாதம் ஓடியது.

வீரனார், பைரவி வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை. மீராவும், சேராவும் பெற்றவர்கள் முகம் கண்டு கலங்கி கொண்டே இருந்தனர்.

பெற்றோர் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது, அசோக், ஜனனி தான் அனைவரையும் தேற்றியது.

அசோக்கின் ஆறு வயது மகன் ஆதித்யா மட்டுமே எதுவும் புரியாமல் விளையாடினான் அங்கு.

அசோக், ஜனனி தனியாக தான் இருக்கிறார்கள் அதே ஏரியாவில்.

ஆனால் இந்த ஒரு மாதமும் காலையில் வந்தால் இரவு தான் போவது அவர்கள் வீட்டிற்கு. அசோக் வீரனாரின் பிஸ்னெஸ்ஸில் தான் துணையாக இருக்கின்றான்.

அடுத்த ஒரு மாதமும் செல்ல, வீரனார் வெளியில் போய் வந்தார் கொஞ்சம் கொஞ்சமாக.

கல்லூரியும் தொடங்கியது, ஆனால் மீரா வாய் திறந்து கேட்க முடியவில்லை எதையுமே.

அப்பா, அம்மா தேவைகேற்ப மட்டுமே பேசினர், தம்பியோ பள்ளிப்படிப்பு என்பதால் வழக்கம் போல் கிளம்பிக் கொண்டு இருந்தான்.

மெல்ல தைரியம்”அம்மா! காலேஜ் ஆரம்பிச்சுட்டு” என்றாள் தாயிடம், ஜனனி அருகில் தான் இருந்தாள்.

“ஏன் ஒருத்தி போனது பத்தாத…?” என்றார் பட்டென்று.

“அத்தாச்சி! என்ன பேசுறீங்க..?”

“ஜனனி! நீயே சொல்லு, நான் எப்படி எல்லாம் வளர்த்தேன், பீரியட்ஸ் கரை ஆன துணி முதல் துவைக்க விடாம ரெண்டையும் தங்கமா தாங்கினேன், உன் சித்தப்பா காசு, பொருளுனு பாக்காம அள்ளிக் குவித்தார் இதுகளுக்கு ஆனா கடைசியில் முகத்தில் சாணியை அப்பிட்டு ஒருத்தி ஓடிப்போயிட்டாளே” என கண்களை துடைத்தார் வழிந்த கண்ணீரை.

“அதுக்காக இவ என்ன செய்வா அத்தாச்சி..?”

“எனக்கு தெரியாது நீ போய் உன் அப்பா கிட்ட பேசிக்கோ, அந்த மனுசன் முன்னாடி போகவே முடியல, எப்படி கம்பீரமா இருந்தாரு, இப்ப பாரு முகத்தை தாடியும், சிரிப்பே இல்லாத நோயாளி மாதிரி ஆகிட்டார்” என அறைக்குள் சென்று விட்டார்.

அசோக் வர, அவனிடம் ஜனனி நடந்ததை கூறினாள்.

“சரி மீரா, நான் பேசிப் பாக்குறேன் மாமா கிட்ட நீ கவலைப்படாத” என அக்கா மகளிற்கு ஆறுதல் கூறினான்.

வீரனார் உணவு முடித்து சோபாவில் அமர்ந்திருந்தார்.

“மாமா! மீராக்கு காலேஜ் ஆரம்பமாகிட்டு, போயிட்டு வரட்டுமே” என்றான் மெல்ல தயங்கியவாறு.

“ம்ம்ம்! அசோக் சாயங்காலம் முக்கியமான ஆட்கள் வராங்க, நீ கொஞ்சம் சிற்றுண்டி தயாரிக்க தேவையானதை ஜனனியோடு போய் வாங்கிட்டு வா” என்றார்.

“யாரு மாமா வராங்க..?”

“பைரவி!” என மனைவியை அழைத்தார்.

பைரவியோடு ஜனனியும் வந்தாள்.

மீரா, அசோக் வீரனாரிடம் பேச தொடங்கும் போதே வந்து ஓரமாக நின்றாள்.

“பைரவி! சாயங்காலம் போல ஓடாமல் இருக்க நம்ம  ரெண்டாவது மகளை பொண்ணு பார்க்க வராங்க, தயார்படுத்து” என்றவர்,

அசோக்கிடம்”நான் சொன்னது புரிஞ்சுதா, ஜனனியோடு போய் தேவையானதை வாங்கி வா, இனி இவ வீட்டை விட்டுப் போகனுமுனா இன்னொரு வீட்டிற்கு மருமகளா தான் போகனும்” என எழுந்து வெளியில் நடந்தார்.

“தம்பி கிட்ட சொல்லியாச்சா பொண்ணு பாக்க போறோமுனு” என பற்களைக் காட்டினார் அந்த மனிதர்.

“அது எல்லாம் கிளம்பிட்டு கூப்புட்டால் கூட வந்துடுவான், உன் பிரச்சனை என்ன….?” என்றார் விருமாண்டி .

“இல்ல! மூத்தப் பொண்ணு ஓடிப்போயிட்டே அதை பத்தி சொல்லிட்டீங்களா ஐயா.?”

“அது எல்லாம் தெரியும், ஓடிப்போற கழுதைகளால் தானே இந்த மாதிரி போய் விழ வேண்டியதாக இருக்கு, என் அளவுக்கு எல்லாம் அந்த வீரனார் வர முடியுமா..? என்ன செய்ய நான் பெத்தது கல்யாணத்து அன்னைக்கு காலையில் ஓடிப்போய் என் மானத்தை ரயிலில் ஏத்திட்டு போனாள், அதுக்கு அப்புறம் வெளியில் தலை காட்ட முடியலை,  நேத்து மழையில் முளைத்த காளானான அந்த வீரனார் ஒரு சம்பந்தியா…? நான் பரம்பரை பணக்காரன், அவன் வெளிநாட்டு பணம், அரசியலில் புகுந்து அவசரத்தில் பலவிதமாக போய் பணத்தை பார்த்தவன், என் தகுதி என்ன…? அவன் தகுதி என்ன…? எல்லாம் நேரம்…” என துண்டினை எடுத்து உதறினார்.

“எல்லாம் தெரியாமயா நான் சம்பந்தம் பேசினேன், என்ன செய்ய ரெண்டு வீட்டுலையும் பொண்ணு ஓடிப்போன பொருத்தம் அமைஞ்சுட்டே, அதான்….” என தலையை சொறிந்தார் அந்த  மனிதர்.

“சரி! சரி! போ சாயங்காலம் வாரோமுனு சொல்லு பொண்ணு பாக்க”

“அது எல்லாம் சொல்லிட்டேன், தம்பியை கூட்டியாந்துடுங்க”

“ம்ம்ம்!”

வீட்டிற்குள் நுழைந்தவன் கண்கள் சிவந்திருக்க வந்து அமர்ந்தான் அவன்.

அந்த மனிதர் விருமாவை பார்க்க,
“சௌந்தர்! உள்ள போ” என்றார் தந்தை கம்பீரமான குரலில்.

சௌந்தர்! என்ற சௌந்தராஜன்.

அவன் மறுப்பேதும் சொல்லாமல் எழுந்து சென்றான் உள்ளுக்குள்.

“தம்பி குடிச்சிருக்காரா..? இந்த நேரத்தில்…” என்ற அந்த மனிதரை திரும்பி விருமா பார்த்த பார்வையில் அப்படியே வாயினை மூடினார் அவர்.

“கிளம்பு! சாயங்காலம் பார்க்கலாம்” என்றார் விருமா சில வார்த்தைகளில்.

காதல் மனசிலாயோ!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்