Loading

சமி காலேஜ் போகாமல் திரும்பி வந்ததைப் பார்த்த லக்ஷ்மி அவளிடம் வந்து,”சமி என்னாச்சு காலேஜ் போகாமல் வந்துட்ட??”

“ப்ச் அத்தை இப்ப பேச மூட் இல்லை எனக்கு. நான் ரூம்கு போறேன்.” என்று கூறிச் சென்று விட்டாள். பேச்சுக் குரல் கேட்டு வெளியே வந்த ராம் லக்ஷ்மியிடம்,”யார்கிட்ட பேசிட்டு இருந்த??”

“சமிகிட்ட தான்ங்க.”

“சமியா?? அவள நான் இப்ப தான காலேஜ்ல விட்டுட்டு வரேன்.”

“ஆமாங்க. போன வேகத்துல வந்துட்டா. கேட்டா எதுவும் சொல்ல மாட்டிங்குறா.”

“சொல்ல மாட்டிங்குறாளா?? சரி வா போய் திரும்பக் கேட்போம்.” என்று இருவரும் சமியின் அறைக்குச் சென்றனர்.

சமி பெட்டில் படுத்துக் கொண்டு கண்ணை மூடி யோசித்துக் கொண்டிருந்தாள். உள்ளே வந்த ராம் மற்றும் லக்ஷ்மி அவளிடம் வந்தனர். ராம் அவளின் தலையைத் தடவிக் கொடுத்தார். அதில் கண்ணைத் திறந்து பார்த்த சமி லக்ஷ்மியை முறைத்து விட்டு,”ஏன் லக்ஸ் இப்படி பண்ற?? எனக்கு ஒன்னுமில்லை மாம்ஸ். சும்மா ஒரு யோசனை. அதுக்குள்ள இந்த லக்ஸ் உங்களை கூட்டிட்டு வந்துட்டாங்க.” அப்பொழுது வெளியே ஏதோ சத்தம் கேட்க எல்லோரும் வெளியே சென்றனர். அங்குக் கங்கா தேவி பாட்டி ஸோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். இவர்களைப் பார்த்தும் அவர் அப்படியே அமர்ந்திருந்தார். அவரை அங்குப் பார்த்த மூவரும் முகத்தைச் சுழித்தனர். ராமும் லக்ஷ்மியும் கங்கா பாட்டி அமர்ந்திருந்த ஸோஃபாவிற்கு எதிர் ஸோஃபாவில் அமர்ந்தனர். அதைப் பார்த்து முறைத்த கங்கா பாட்டி,”நான் உட்கார்ந்து இருக்கேன். கொஞ்சம் கூட மரியாதை இல்லாம என் முன்னாடி புருஷனும் பொண்டாட்டியும் உட்கார்ந்து இருக்கீங்க?? அதான உங்களுக்கே மரியாதை தெரியலைனா உங்க பொண்ணுக்கு எங்க தெரிய போகுது??” இதைக் கேட்ட மூவரும் அவரை முறைத்துப் பார்த்தனர்.

“அடுத்தவங்க வீட்டுக்கு அடாவடியாக உள்ள வரதுதான் மரியாதை அப்படினா எங்களுக்கு அந்த மரியாதை தெரியாது.” என்று சிரித்த முகமாக ராம் கூற, கங்கா பாட்டிக்கு அவமானமாக இருந்தது.

“என்ன புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா?? இதலாம் என்கிட்ட வேண்டாம். ப்ச் உங்ககிட்ட பேச எனக்கு ஒன்னுமில்லை. நான் பேச வந்தது இதோ இங்க நிக்கிறால அவகிட்ட.” என்று கூறி சமியின் பக்கம் திரும்பி,”உனக்குலாம் எவ்ளோ சொன்னாலும் புரியாதா?? ஏன்டி அடுத்தவ புருஷனுக்கு இப்படி அலையுற?? உலகத்துல வேற ஆம்பளையே இல்லையே!!! ரிஷி தான் கிடச்சானா உனக்கு??” என்று சகட்டு மேனியாக அவர் வார்த்தைகளை விட மூவருக்கும் செம கோவம் வந்தது.

“ஒரு பெரிய மனுஷி பேசுற மாதிரியாமா நீ பேசுற?? சீ இப்படி சின்ன பொண்ணுகிட்ட இப்படி பேசுற??” என்று லக்ஷ்மி எகிற.

“யார் சின்ன பொண்ணு இவளா?? அப்படி சின்ன பொண்ணுனா எதுக்குடி என் ஆர்த்திக்குப் பார்த்த மாப்பிளையோட சுத்துர??”

“போதும் நிறுத்துங்க!!! யார் சுத்துனது?? ப்ச் அப்படியே சுத்துனாலும் உங்ககிட்ட சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை. முதல்ல எங்க வீட்ட விட்டு வெளில போங்க.” என்று சமி கோவமாகக் கத்த,

“என்னது என்கிட்ட சொல்ல முடியாதா?? கேட்டீங்கள உங்க பொண்ணு லட்சணத்தை!!! இங்க பார் நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ. எனக்கு அது அவசியம் இல்ல தான். ஆனால் இன்னொரு வாட்டி ரிஷி கூட சுத்துனதைப் பார்த்தேன் உன்னை உறு தெரியாம அழிச்சுடுவேன். ஞாபகத்துல வச்சுக்கோ.” என்று கூறிவிட்டு அங்கிருந்த போக அடி எடுத்து வைத்த பொழுது சமி,”நந்து என்னைக் காதலிப்பதா சொன்னார். நான் யோசிச்சேன் இது சரியா வருமானு. எனக்கு நந்துவ பிடிக்கும். பட் ஆர்த்தியோட நிச்சயம் ஆகாமல் இருந்திருந்தா கண்டிப்பா ஒத்துக்கிட்டுருப்பேன். இவ்ளோ நேரம் என்ன பண்ணுறதுனு யோசனையா இருந்தது. நீங்க பேச வராமல் இருந்திருந்தா கூட என்னால முடிவு எடுக்க முடியாம போயிருக்கலாம். ஆனால் நீங்க பேசினதுக்கு அப்புறம் நான் ஸ்ட்ராங்கா முடிவு எடுத்துட்டேன். நான் நந்துகிட்ட என் காதல்ல சொல்ல போறேன். உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க!!!” என்று அவரைப் பார்த்துச் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டாள். கங்கா பாட்டிக்கு என்ன செய்வதென தெரியவில்லை.

“என் வீட்டுக்கு வந்து என் வீட்டுப் பொண்ணையே உறு தெரியாம அழிச்சுடுவேன்னு அதுவும் நான் ஒரு போலிஸ் என் முன்னாடியே சொல்ற, உனக்கு இனிமே தான் கஷ்ட காலம் ஆரம்பிக்க போகுது. ஏன்டா இவங்களை பகச்சுகிட்டோம்னு நினைக்கிற வரை நான் ஓய மாட்டேன். இப்ப கிளம்பு.” என்று ராம் கூற, ஒரு நிமிடம் கங்கா பாட்டி ஸ்தம்பித்து நின்றார். பின் அதை அலட்சியம் செய்து அங்கிருந்து சென்றுவிட்டார். இவர் சென்றவுடன் ராம் ஆகாஷிற்கு அழைத்து ஏதோ பேசிவிட்டு வைத்தார்.

ரிஷி, சஞ்சய் மற்றும் ஆர்த்தி காலேஜில் இருந்து வீடு திரும்பினர். இவர்கள் வருவதற்காகவே காத்திருந்த கங்கா தேவி பாட்டி ரிஷியின் வீட்டிற்குச் சென்றார். ஆர்த்தி பாட்டி வருவதைப் பார்த்து,”என்ன பாட்டி இங்க வரீங்க??”

“நீ உள்ள வா. இன்னைக்கு எல்லாருக்கும் கச்சேரி இருக்கு.” என்று கூறிக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

ரிஷி வீட்டில் அனைவரும் ஸோஃபாவில் அமர்ந்திருந்தனர். கங்கா தேவி பாட்டி வருவதைப் பார்த்து அனைவரும் எழுந்து நின்றனர். ஒரு மிதப்புடன் வந்து அமர்ந்தார்.

“ப்ரகாஷ் நடக்குறதுலாம் உனக்கு தெரிஞ்சு தான் நடக்குதா இல்லை தெரிஞ்சும் தெரியாத மாதிரி நீ நடிக்கிறியா??”

“அம்மா நீங்க என்ன சொல்றீங்கனு எனக்குப் புரியலை.”

“ரிஷி அப்போ உன் அப்பாகிட்ட இன்னும் சொல்லலையா?? அந்த அளவுக்கு நீ பெரிய மனுஷன் ஆயிட்டியா!!”

“ப்ச் இப்ப எதுக்கு இங்க வந்திருக்கீங்க??” என்று சலிப்புடன் சஞ்சய் கேட்க, கங்கா பாட்டி அவனை முறைத்துப் பார்த்தார்.

“இந்த முறைக்கிற வேலைலாம் இங்க வேண்டாம் பாட்டி. எதுக்கு வந்தீங்க??” என்று ரிஷி கேட்க, இப்பொழுது பயங்கர கோவம் வந்துவிட்டது பாட்டிக்கு,”என்ன ப்ரகாஷ் உன் பிள்ளைங்க இப்படி பேசுறாங்க நீ வேடிக்கை பார்த்துட்டு இருக்க!!! அப்ப இதலாம் உன் வேலை தானா?? இத்தனை நாள் இப்படி இல்லையே!! அந்த அடங்காப் பிடாரி தான் அப்படி பேசுறானா இங்க உன் பசங்களும் அப்படி பேசிட்டு இருக்காங்க!!”

“நீங்க யார சொல்றீங்க??” என்று சஞ்சய் கேட்க, அதற்குப் பாட்டி,”வேற யார சொல்லுவேன்?? எல்லாம் அந்த சம்யுக்தா தான். பொண்ணா அவ!! …..” என்று ஏதோ ஏதோ கூற, ரிஷி பொறுமை இழந்து,”போதும் நிறுத்துங்க!!! இதுக்கு மேல ஏதாவது பேசுனீங்க அப்புறம் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது!!!” என்று கத்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகினர்.

“ரிஷி என்னபா இது?? எதுக்கு இவ்ளோ கோவம்??”

“அப்பா அவங்க என்ன வேணாலும் பேசுவாங்க நான் அமைதியா இருக்கனுமா?? இன்னும் எத்தனை நாள் அவங்க நம்ம வீட்டுல அதிகாரம் பண்ணுவாங்க?? நீங்க குடுத்த இடம் தான் அப்பா இது!!!”

“ஓ அவ்ளோ பேசுற அளவுக்கு வந்துட்டியா!!! அவளை பேசுனதும் உனக்கு அவ்ளோ கோவம் வருது!!! அப்ப அவ சொன்னது சரி தான். எவ்ளோ தைரியம் இருந்தா என் பேத்திகூட நிச்சயதார்த்தம் பண்ணிட்டு அவகிட்ட போய் உன் காதல்ல சொல்லிருப்ப??” என்று சொல்ல அனைவருக்கும் அதிர்ச்சி. ஆர்த்திக்குப் பயங்கர அதிர்ச்சி. ரிஷியிடம் சென்று,”ரிஷி பாட்டி சொல்றது உன்மையா??”

“ஆமா எனக்கு யுகியைத் தான் பிடிச்சிருக்கு.”

“என்ன ரிஷி இவ்ளோ ஆசால்டா சொல்ற!! என்ன பத்தி நீ கொஞ்சம் கூட யோசிக்கலைல??”

“இங்க பார் ஆர்த்தி உன்னைப் பத்தி யோசிச்சனால தான் நான் இந்த முடிவை எடுத்தேன். நமக்குக் கல்யாணம் நடந்தா கண்டிப்பா உன்னால சந்தோஷமா இருக்க முடியாது. உன்கிட்ட மெதுவா சொல்லி புரியவைக்கலாம்னு நினைச்சேன். ஆனால் அதுக்குள்ள உன் பாட்டி பெரிசு பண்ணிட்டாங்க.”

“என்னது நான் பெரிசு பண்ணிட்டேனா?? என் பேத்திய நீ ஏமாத்துவ அதைப் பார்த்துட்டு நான் அமைதியா இருக்கனுமா?? ப்ரகாஷ் என்ன இது நீயும் கேட்டுட்டு பேசாம இருக்க??”

“எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுங்க. எதுக்கு எங்க அப்பாவ மிரட்டுறீங்க??”

“என்ன ப்ரகாஷ் உன் பசங்களை பேச விட்டு வேடிக்கைப் பாக்குறியா??” என்று பாட்டி கேட்க, ப்ரகாஷ் இரு கொள்ளி எறும்பு போல் யார் பக்கம் பேசவென தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். இங்கு இவர்கள் பேசிக் கொண்டிருக்க ஆர்த்தி அழுது கொண்டு இருந்தாள்.

“அங்க பாருங்க என் பேத்தி எப்படி அழுதுகிட்டு இருக்கானு!! இதுக்கு நீ என்ன சொல்ல போற??” என்று ரிஷியைப் பார்த்துக் கேட்க, அவனுக்குக் குற்றவுணர்ச்சியாக இருந்தது. ஆர்த்தியிடம் சென்று,”ஆர்த்தி இங்க பார். அப்பா சொன்னாங்க. நீயும் நல்லா தெரிஞ்ச பொண்ணு அப்படினு தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஆனால் எனக்கு யுகி மேல் ஆசை வந்துருச்சு. இதுக்கு அப்புறமும் நமக்குக் கல்யாணம் நடந்தா அது தான் நான் உனக்கு செய்ற துரோகம். ஞாபகத்துல வச்சுக்கோ. அதனால தான் இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம். புரிஞ்சுக்கோ ப்ளீஸ்.”

“என்னடா என் பேத்தி மனசை மாத்த பாக்குறியா?? அதலாம் நடக்காது. உனக்கும் என் பேத்திக்கும் தான் கல்யாணம் நடக்கனும். இல்லாட்டி நடக்கிறதே வேற.”

“பாட்டி உங்க மிரட்டலுக்கு பயப்படுற ஆள் நான் இல்ல. நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க. ஆனால் என் கல்யாணம் யுகி கூட தான்.” என்று ரிஷி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். ஆர்த்தி அழுது கொண்டே வீட்டுக்குச் சென்றாள். பாட்டி ப்ரகாஷை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒலி கேட்க, அனைவரும் வெளியேச் சென்று பார்க்க அங்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்த்தியை ஆம்புலன்ஸில் ஏத்திக் கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்த கங்கா பாட்டி வேகமாக வந்து,”இப்ப சந்தோஷம் தான!!! உங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன். என் பேத்திக்கு எதாவது ஆச்சு உங்க எல்லாரையும் கொன்றுவேன்.” என்று கூறிவிட்டு காரில் ஏறி ஹாஸ்பிட்டல் சென்றார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்