Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!

அத்தியாயம் – 13 ( 13.1 )

கல்லூரி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த கௌரி , வீட்டில் யாருமில்லா நேரம்  தற்கொலைக்கு முயன்றாள். அதே நேரம் , சரணும் மதுரையில் தன் கல்லூரி  படிப்பை  முடித்து விட்டு , யாருக்கும் சொல்லாமல் சென்னை வந்திறங்கியவன் , கௌரிக்கும் வந்திதாவிற்கும் ஓர் இன்ப அதிர்ச்சி குடுக்க முடிவு செய்தவன்.

கௌரியையும் , வந்திதாவையும்  காண அவர்கள்  வீட்டிற்கு  சென்றான். வீடு பூட்டியிருப்பதை கண்டு குழம்பியவன் , வீட்டின் ஜன்னல் மட்டும் திறந்திருப்பதை கண்டு , உள்ளே எட்டி பார்த்தான்.

சரியாக சரணின் கண்களில் கௌரி கத்தி கொண்டு தன் கையை அறுத்துக்கொள்ள போகும் காட்சி பட , விரைந்து , அவளை தடுத்து , அவள் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை அறைந்தான்.

 அவன் அடித்ததில் தான் ஏதோ மயக்கத்திலிருந்து சுயநினைவிற்கு வந்தவள் போல் கௌரி முழிக்க , அவளது செய்கை புரியாமல் , விழித்த சரண் , அவளை உலுக்க , அதில் தன்னிலை உணர்ந்தவள் , அப்போது தான் , தான் இருந்த நிலையை கண்டு பயந்தவள் , மீண்டும் தன் அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள்.

பின் ஓர் அரை மணி நேரம் கழித்து அறையிலிருந்து வெளியில் வந்தவள் , ஏதும் நடக்காதது போல் , சரணிடம் மிகவும் சகஜமாக நடந்துகொண்டாள்.

கௌரியின் செய்கையில் முழுவதுமாய் குழம்பி போன சரண் , வந்திக்கு அழைத்து சாதாரணமாக பேசுவது போல் பேசி , கௌரியின் உடல் நலனை  பற்றி  விசாரித்தான் . 

வந்திதாவிற்கு சரண் கௌரியை ஒருதலையாக காதலிப்பது தெரியும் , அதுமட்டுமல்லாமல் சரணை சிறு வயதிலிருந்தே அறிந்தவள் , அவன் காரணமில்லாமல் எதையும் பேச மாட்டான் என்பதை உணர்ந்து , அவன் திடீரென்று கௌரியின் உடல் நலனில் அக்கறை காட்டுவதை உணர்ந்து , என்ன ஏதென்று விசாரிக்க , சரணோ கௌரி தற்கொலைக்கு முயன்றதை கூறினால் , எங்கே வந்திதா வருத்தம் கொள்ள போகிறாளோ என்று பயந்து , அவளிடம் உண்மையை மறைத்தவன் , பொதுவாக கேட்பதாய் பொய் உரைத்தான்.

வந்திதாவும் அவன் கூறியதை நம்பி , கௌரிக்கு ஏற்பட்டிருக்கும் நோயை பற்றி பகிர்ந்து கொண்டவள் , இந்நேரத்தில் அவளை சரியாக கவனித்துக்கொள்ள முடியாத நிலையில் தான் இருப்பதை நினைத்து வருந்தியவள் , தப்பி தவறி கூட தேவகி பாட்டி மரண படுக்கையில் கௌரி ஓர் அனாதை என்பதையும் , அவர் குடும்பம், ஜோசியரை நம்பி ஏமாந்ததை பற்றியெல்லாம் கூறியதை , எக்காலத்திலும் சரணிடம் கூற கூடாது என்பதில் தெளிவாக இருந்தவள் , அதில் வெற்றியும் கண்டாள்.

வந்திதாவிற்கு ஆறுதல் கூறி , இனி தான் கௌரியை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வதாய் கூறி அழைப்பை துண்டித்தவன் கண்கள் குளமாகி இருந்தது.

கௌரியின் நிலையை அறிந்து துடித்து போன சரண் , அவளை இந்நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் கொண்டு வர முயன்றான். முயன்ற அளவு அவளுடன் அதிக நேரம் செலவழிக்க துவங்கினான்.

நித்யாவும் அவனுக்கு துணையாய் இருக்க , கௌரி கொஞ்சம் கொஞ்சமாக தன் கூண்டிலிருந்து வெளியில் வர துவங்கினாள்.

முதலில் சரணை தவிர்த்தவள் , பின் மெல்ல மெல்ல அவனுடன் ஓர் நல்ல நட்பை உருவாக்கி கொண்டாள். கௌரிக்கு சரண் மேலிருந்த நட்பு வளர்ந்து காதலாக மாறியது. ஆனால்  அதை வெளியில் கூற முடியாமல் தவித்தாள். கௌரியின் நிலையை புரிந்து கொண்ட சரணும் , அவள் முழுதாய் சரியாகி வர வேண்டும் என்பதற்காய் தன் காதலை அவளிடம் கூறாமல் நாட்களை கடத்தி கொண்டிருந்தான்.

இருவருக்கும் இடையில் ஓர் அழகிய புரிதல் உருவாயிற்று.கௌரி இப்போதெல்லாம் சரணிடம் எந்த ஓர் தயக்கமுமின்றி தன் விருப்பு , வெறுப்புகளை பகிர்ந்துகொள்ள துவங்கியிருந்தாள்.

சரண் கௌரி ஜோடி ஒருபுறமிருக்க , மறுபுறம் நம் அமுதன் வந்திதா ஜோடி மோதலும் காதலுமாக தங்கள் கல்லூரி காலத்தை கழித்தனர்.

இவர்களின் காதல் விவகாரத்தை தெரிந்து கொண்ட வல்லி ,  முதலில் சரணை நேரில் சந்தித்து , அவன் காதலின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்டவர் , பின் கௌரியை பற்றி தேவகி தன்னிடம் கூறிய அனைத்தையும் ஒன்று விடாமல் பகிர்ந்து கொண்டார்.

வல்லி, கௌரி ஆதி கேசவன்- பத்மா தம்பதியருக்கு பிறந்த மகள் இல்லை , என்று கூறியதை கேட்டு அதிர்ந்த சரண் , அதனூடே அவளுக்கு ஆதி கேசவன் குடும்பம் இழைக்க விருந்த அநீதியை கேட்டு முற்று முழுதாய் உடைந்து போனான். 

சரணை தேற்றிய வல்லி , இது சோர்ந்து போவதற்கான நேரமில்லை என்றும் , இனிமேல் அவன் தான் கௌரியை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவனிடம் சத்தியம் வாங்கினார்.

அதற்கு பின் சரணும் , கௌரியுடன் இன்னும் நெருக்கமாக பழக துவங்கினான். அதன் விளைவாக , கௌரி முதல் முறையாக தன் மனதை திறந்து, அவளுக்கு அவர்கள் காப்பகத்தின் மேலிருக்கும் விருப்பத்தை கூறியவள் , ஆனால் தன் அக்காவிற்கு காப்பகத்தை பற்றிய பேச்சை எடுத்தாலே பிடிப்பதில்லை என்றும் குறைப்பட்டாள்.

காப்பகத்தை பற்றி பேசும்போது கௌரியின் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு வியந்த சரண் , அவளை குணப்படுத்த அதையே ஓர் ஆயுதமாக பயன்படுத்தினான்.

கௌரிக்கு கிடைத்த ஆராய்ச்சி வாய்ப்பைபயன்படுத்தி கொண்டு அதில் வரும் பணத்தில் வந்திதாவிற்கு தெரியாமல் , அவர்கள் காப்பகத்தை மீட்டெடுத்த , அதை புதுப்பித்து மீண்டும் நடத்துவதற்கு  அவளை  கட்டாயப்படுத்தினான்.  வந்திதாவிடம் தான் எதையும் மறைக்க மாட்டேன் என்று அடம்பிடித்த கௌரியை சமாதானம் செய்வதற்குள் சரண் பாடு திண்டாட்டமாகி போனது. 

இவர்கள் இருவருடன் நித்யாவும் சேர்ந்து கொள்ள , மூவரும் சேர்ந்து , ” அன்பு ” காப்பகத்தை மீட்டெடுத்து , அதற்கு ” தேவன் இல்லம் ” என்று பெயர் சூட்டி புது பொலிவுடன் நடத்த துவங்கினர். 

முதலில் அக்காவிடம் சொல்லாமல் காப்பகம் நடத்துவதை நினைத்து பயந்த கௌரி , பின் குழந்தைகளின் சிரிப்பில் தன் துயர் துறந்தவள் , வந்திதாவிடம் காப்பகத்தை பற்றி கூறாததையே மறந்து போனாள்.

கௌரி , சரண் , நித்யா மூவரும் காப்பகத்திலிருந்த குழந்தைகளுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்தனர். அதுவும் குறிப்பாக கௌரி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்து , தன்னையும் , அவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தாள்.

வல்லி சரணிடமும் , நித்யாவிடமும் தனி தனியே கௌரியை பற்றி விசாரிக்க , அவர்கள் இருவருமே கூறிய ஒரே பதில் , கௌரி குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பது தான்.

இச்செய்தியை கேட்டு வல்லி அகமகிழ்ந்து போக , பாவம் அன்று அவர் அறியவில்லை , கௌரியின் முகத்தில் உறைந்திருக்கும் சிரிப்பு, ஒருத்தியால் கானல் நீராய் கரைய போகிறதென்று. 

கௌரியின் வாழ்வில் புதிதாக வசந்தம் வீச துவங்கியிருந்த வேலை , அவள் வாழ்வில் தென்றலாய் புகுந்து , சூறாவளியை பரிசளித்து விட்டு சென்று விட்டாள் ஒருத்தி.

 அவ்வொருத்தியின் பெயரை நினைவு கூற எண்ணுகையிலேயே  , வல்லிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

பின் முயன்று அவள் பெயரை தன் நினைவு பெட்டகத்திலிருந்து தேடி எடுத்தவர் , அவள் பெயரை உச்சரிக்க விழைய , அவள் பால் மனம் மாறா குழந்தை முகம் மனக்கண் முன் வந்து அவரை வதைத்தது.

——————————————————————————————————————————-

வி.ஆர். மருத்துவமனை 

” கம் ஆன் புஷ் புஷ் , உங்களால முடியும் , இன்னும் கொஞ்சம் புஷ் பண்ண குழந்தை வெளியில வந்துரும். கம் ஆன் யூ கேன் டூ இட் …. ” என்று கௌரி பிரசவித்து கொண்டிருந்த தாயை பார்த்து கத்தினாள் . 

” ஐயோ அம்மா ஆ ஆ …., முடியல டாக்டர் , வலி உயிர் போகுதே…… அம்மா ஆ ஆ …. ”  என்று அப்பெண் பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்தாள் .

” மானிட்டர்ல உங்க குழந்தைய பாருங்க , எவ்ளோ அழகா , பப்ளியா இருக்கு பாருங்க. எவ்ளோ நேரம் தான் குழந்தைய மனிட்டர்லயே பாக்குறது ? கொஞ்சம் புஷ் பண்ணிங்கனா , குழந்தை ரெண்டு நிமிஷத்துல உங்க கையில இருக்கும்….. கம் ஆன் யூ கேன் டூ இட் … ” என்று கௌரி அப்பெண்ணை ஊக்குவிக்க , 

அப்பெண்ணும் தன் முழு பலத்தை பயன்படுத்தி ” அம்மா ஆ ஆ ஆ அம் ..அம்மா ஆ ஆஆஆ …. ” என்று ஓர் பலத்த சத்தத்துடன் , குழந்தையை பிரசவித்தார்.

குழந்தையை முதல் முதலில் கையிலேந்திய கௌரி , ” அட அட அட டா கங்கிராஜூலேஷன்ஸ் நியூ மாம் , உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. வாரே வா , பாப்பா அப்படியே உங்கள உரிச்சுவச்சிருக்கா ” என்று உற்சாகமாக, பிரசவித்த சோர்வில் அரை மயக்கத்திலிருந்த அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள் .

அப்பெண்ணும் தன் இருகரம் கூப்பி ” எத்தனையோ டாக்டர்ஸ் உனக்கு குழந்தையே பிறக்காதுன்னு சொல்லி என்னை கைவிட்டுடாங்க. ஆனா நீங்க தான் எனக்கு நம்பிக்கை குடுத்து , ஐ.வி.எப் ( டெஸ்ட் ட்யூப் பேபி ) மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு சொல்லி ஊக்க படுத்துனீங்க. நீங்க இல்லேன்னா இன்னைக்கு எனக்கு குழந்தையே பிறந்திருக்காது. நீங்க செஞ்ச உதவிக்கு முன்னாடி நன்றிங்குறதெல்லாம் ரொம்ப சின்ன வார்த்தை. மலடிங்குற பட்டத்தை தாங்கி கிட்டு நாளுக்கு நாள் அவமானத்துல கூனி குறுகி கிட்டு இருந்த எனக்கு ,குழந்தை பாக்கியம் குடுத்த சாமி நீங்க”  என்று கண்களில் வழியும் ஆனந்த கண்ணீருடன் அப்பெண் கௌரியின் காலில் விழ போக. அப்பெண்ணை தடுத்த கௌரி , 

” ஐயோ என்ன பண்ண போறீங்க ? இப்போ தான் டெலிவெரி ஆகியிருக்கு , இந்த நேரத்துல இந்த மாதிரியெல்லாம் ஓவரா ஸ்ட்ரைன் பண்ண கூடாது. அது மட்டுமில்லாம நா ஒன்னும் உங்களுக்கு உதவி செய்யல , எஸ் எ டாக்டரா நா என் கடமைய தான் செஞ்சிருக்கேன்.

அப்புறம் இன்னொரு விஷயம் , “மலடி “ங்குறதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை தயவு செஞ்சு அதையெல்லாம் பயன்படுத்தாதிங்க. இருக்குறவனுக்கு ஒரு குழந்தை , இல்லாதவனுக்கு , அப்பா , அம்மாவ இழந்துட்டு அனாதைங்குற பட்டத்தை தாங்கி கஷ்ட பட்டுக்கிட்டு இருக்க, கடவுளின் குழந்தைங்க எல்லாருமே அவுங்க குழந்தைங்க தான். ஆனா இந்த சுயநலவாதிகள் தான் அதையெல்லாம் ஒத்துக்க மாட்டேங்குறாங்க .

சரி இப்போ இத பத்தி பேசுறதுக்கு நேரமில்ல , நீங்க முதல்ல குழந்தைய வாங்கி பாருங்க. குழந்தை கொஞ்சம் சில்லுனு இருக்கு , அதான் இன்க்யூபட்டர்ல வைக்க குழந்தைய குடுத்து அனுப்ப போறேன். ” என்றவள் தன் கையிலிருந்த குழந்தையை அப்பெணின் கையில் குடுத்தாள்.

அப்பெண்ணும் குழந்தையை கொஞ்சியவள் , கௌரியின் புறம் திரும்பி , ”  டாக்டரம்மா நா ஒன்னு கேப்பேன் , ப்ளீஸ் என் குழந்தைக்கு நீங்களே பெயர் வைங்களேன் ப்ளீஸ், ப்ளீஸ் …. ” என்று கெஞ்ச , 

கௌரியோ ” மா ப்ளீஸ் , இந்த குழந்தைய  நீங்க எவ்ளோ  கஷ்ட பட்டு பெத்துருக்கீங்கன்னு உங்களுக்கும் தெரியும் , எனக்கும் தெரியும்.  சோ இந்த குழந்தைக்கு நீங்க தான் பெயர் வைக்கனும். உங்களுக்கு தான் அந்த உரிமை இருக்கு. ” என்றவள் , அவ்விடத்தை விட்டு நகர போக , அப்பெண் கௌரியின் பதிலில் நெகிழ்ந்து போனவள் , தன் குழந்தையை ஆசையாய் தூக்கி , அதன்  காதில் ” தேவஸ்வரூபி ” , ” தேவஸ்வரூபி ” , தேவஸ்வரூபி ” என்று மூன்று முறை அப்பெயரை கூற , அப்பெயரை கேட்ட மறுநொடி கௌரியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்ட துவங்கியது.

———————————————————————————————————————

இங்கே வீட்டில் வல்லியும், தன் உயிர் தோழி தேவகியுடனான தன் கடந்த காலத்தை நினைவு கூர்ந்து கொண்டிருந்தவர் , ” தேவஸ்வரூபி ” என்று அதே பெயரை உச்சரிக்க  , அவர் கண்களும் கண்ணீரை தாங்கியிருந்தது.

———————————————————————————————————————

அதே நேரம்  வந்திதாவிடம் சொல்லி கொண்டு கிளம்பிய அமுதன் , சரணுடன் அவனது  இருசக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தவன் , சரணிடம் ” ஆமா அந்த பொண்ணு பேரென்ன ? ” என்று வினவ , சரணின் இதழ்களோ அப்பெயருக்கு கூட வலித்து விடுமோ என்னும் பயத்தில் ” தேவஸ்வரூபி ” என்று மெல்லமாய் சொன்னவன் கண்களும், மௌனமாய் கண்ணீரை சுரந்து கொண்டிருந்தது.

யார் இந்த தேவஸ்வரூபி ? 

தொடரும் …

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

ஏற்கனவே தனக்கு தெரிந்த ஓர் விஷயத்தை , சரண் ஏன் , மீண்டும் ஒருமுறை அமுதன் , வல்லி பாட்டியின் வாயால்  கேட்டான் ? அதை கேட்டு விட்டு தனக்கு ஏதும் தெரியாது என்பது போல் ஏன் நடித்தான் ? 

அமுதன் ஏன் சரணை அழைத்து கொண்டு தனியே செல்கிறான் ? 

விடைகள் அடுத்த பதிவில் ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      யார் தேவஸ்வரூபி🤔🤔 தெரிந்து கொள்ளும் அவாவில் நான்😝😝 ச்சுக்கு… புக்கு..ச்சுக்கு… புக்கு பிக்பாஸ்💃💃💃💃