கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 11 ( 11.1 )
கௌரி வந்திதாவின் பாச பிணைப்பை கண்டு மண்டபத்திலிருந்து அனைவரும்
” இந்த காலத்துலையும் இப்படி ஒரு அக்கா தங்கச்சியா ? பத்மா முதல்ல உன் பொண்ணுங்களுக்கு சுத்தி போடு, மொத்த ஊரு கண்ணும் உன் பொண்ணுங்க மேல தான் இருக்கு ” என்று வாழ்த்திவிட்டு செல்ல , பத்மாவிற்கு தான் , தன் மகள்களை பிரிந்து தான் எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம், இனியாவது அவர்களுடன் இருந்து அவர்கள் இழந்த அன்பையும் , அரவணைப்பியும் குடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டார்.
பாவம் பத்மா அறியவில்லை இங்கே காலம் கடந்து கிடைக்க படும் எந்த ஓர் பொருளுக்கும் அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று.
ஒருவழியாக சடங்குகள் அனைத்தும் முடிந்து அமுதனையும் வந்திதாவையும் அமுதன் வாடகைக்கு இருக்கும் வல்லி பாட்டியின் வீட்டிற்கு வந்திதாவின் குடும்பம் வழியனுப்பி வைக்க , கௌரிக்கு தான் இத்தனை வருடம் அன்னையாய் , அக்காவாய் , தோழியாய் , எல்லாமுமாய் இருந்த வந்திதாவை பிரிய மனமில்லாமல் கதறி அழுதவள் , வாழ்வில் எதற்கும் கெஞ்சியே பழக்கம் இல்லாதவள் , இன்று முதல் முதலாய் அமுதனிடம் தன் அக்காவிற்காய்
” நா உங்கள திட்டுனதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு என் அக்காவ பழி வாங்கிடாதீங்க. அவள நல்லா பாத்துக்கோங்க. என் அக்கா வெளியில பாக்கதான் ரொம்ப தைரியமா இருக்குற மாதிரி காமிச்சிப்பா ஆனா உள்ளுக்குள்ள அன்புக்கும் , பாசத்துக்கும் எவ்ளோ ஏங்கி தவிக்கிறான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அவள குழந்தை மாதிரி பாத்துக்கோங்க ” என்று கெஞ்சினாள்.
எப்போதும் நடையில் ஓர் நிமிர்வும் , கண்ணில் ஓர் திமிரையும் கொண்டு வலம் வரும் கௌரி , இன்று வந்திதாவிற்காக இத்தனை தூரம் இறங்கி வந்து பேசுகிறாலென்றால் அதிலேயே அவள் வந்திதாவின் மேல் வைத்திருக்கும் அன்பின் அளவை புரிந்துக்கொண்ட அனைவரும் , முதல் முறையாக இத்தனை வருடம் கௌரியை பஜாரி , ராட்சசி என தவறாக நினைத்து விட்டோமே என்று வருந்த துவங்கினர்.
கௌரி இவ்வாறு கெஞ்சுவதை காணயிலாத சரண் , நிலைமையை சகஜமாக்கும் பொருட்டு
” சகல , நீ வீட்டுக்கு போன உடனே முதல் வேலையா , ஒரு தொட்டில் கட்டி அதுல என் வந்தி அத்தாச்சிய தூக்கி போட்டு , உன் அர்ஜுன் தாஸ் குரல்ல நல்லா சத்தமா ஒரு ஒப்பாரி பாடி அத்தாச்சிய தூங்க வை. ” என்க ,
கௌரியோ ” இப்போ எதுக்கு இந்த லூசு சம்மந்தமே இல்லாம பேசுது ? ” என்று விழிக்க ,
அமுதனோ ” டேய் சரா என்ன டா உளருற ? சரக்கு ஏதாச்சும் அடிச்சிருக்கியா ? ” என்று வினவ ,
பதிலுக்கு சரனோ ” சகல என்ன சகல ஒரு டீட்டோடேலர போய் சரக்கு அடிச்சிருக்கியானு கேக்குற ? ஐயோ ஈஸ்வரா இந்த ப்ரபஞ்சத்துல நல்லாவாலுக்கே காலம் இல்லையா ” என்று தன் வாயில் போட்டு கொள்ள ,
அவன் செய்கையில் சுற்றியிருந்த அனைவரும் சிரிக்க , வல்லி பாட்டியோ தன் தலையில் அடித்துக்கொண்டு
” அம்மா கௌரி இந்த சங்கு பையன் என்ன சொல்ல வரான்னு உனக்கு புரியலையா ? ” என்று வினவ , கௌரி தெரியலையே என்று உதட்டை பிதுக்க , அவள் செய்கையை கண்ட சரண் நின்ற இடத்திலேயே கண்ணெடுக்காமல் அவளை சைட் அடிக்க துவங்கினான்.
” அது ஒன்னுமில்ல கௌரி மா , நீ அமுதன் கிட்ட உன் அக்காவ குழந்தை மாதிரி பாத்துக்க சொன்னல , அத தான் இந்த சரண் பையன், வந்திய தொட்டில் கட்டி தூங்க வைனு சொல்லி கலாய்க்குறான். ” என்று வல்லி பாட்டி ஏதோ ஓர் அதிசயத்தை கண்டுபிடித்தது போல் பீற்றி கொள்ள , பதிலுக்கு சரணும்
” அவன் அவன் என்னவெல்லாம் கண்டுபிடிக்குறான் , ஆனா இந்த கிழவி நா கலாய்ச்சத கண்டுபிடிச்சிட்டு ஏதோ நாசா விஞ்ஞானி ரேஞ்சுக்கு சீன் போடுது ” என்று அலுத்துக்கொள்ள ,
அவன் பேசியதில் கடுப்பான வல்லி பாட்டி ” ஏன் டா ஒப்பாரிக்கும் , தாலாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத கிறுக்கு பையலே , என்னையவே கலாய்க்கிறியா ? ” என்று அருகிலிருந்த ஓர் குச்சியை எடுத்து கொண்டு அவனை துரத்த , சரனோ ” கிழவி உன் பல்லு போன ஓட்ட வாயால ஒப்பாரி பாடுனா என்ன , தாலாட்டு பாடுனா என்ன , எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கும் ” என்று கத்திக்கொண்டே ஓடியவன் , இது தான் சாக்கென்று அமுதன் அருகில் நின்றிருந்த கௌரியின் பின்பு ஒளிந்தவன் , அவளை அணைத்தது போல் அவள் பின்னே ஒளிந்து கொண்டான்.
சரணின் இந்த கேடி வேலையை புரிந்து கொண்ட அமுதன் , அவனை கௌரியிடமிருந்து பிரித்து , தனியே நிற்க வைத்தவன் , சரணுக்கு மட்டும் கேட்கும் குரலில் ” ஏன் டா லைசென்ஸ் வாங்குன நானே இன்னும் என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ண முடியாம இரண்டடி தள்ளி நிக்குறேன் , ஆனா ஒழுங்கா அப்ப்ரூவல் கூட வாங்காத நீ , என் கண்ணு முன்னாடியே உன் ஆளுகூட ரொமான்ஸ் பண்ண பாக்குறியா ? ” என்று அவன் இடது புற இடுப்பில் கிள்ள , அதே நேரம் வல்லி பாட்டியும் ” ஏன் டா என்னை பார்த்தா பல்லு போன கிழவினு சொன்ன ” என்றவர் அவனது வலது புற இடுப்பில் நன்றாக கிள்ளி வைத்தார்.
இருவரும் கிள்ளியதில் வலி தாங்க முடியாமல் ” சகல விடுயா , நீ உன் ஆளுகூட ரொமான்ஸ் பண்ணாம இருந்தா , நானும் என் ஆளுகூட ரொமான்ஸ் பண்ணாம இருக்கணுமா? போயா. பல்லு இருக்கவன் பக்கோடா திங்குறான் ” என்று ஹஸ்கி வாயிசில் பேச , வல்லி பாட்டிக்கோ அவன் பேசியது எதுவும் காதில் விழாமல் , கடைசியாக அவன் கூறிய “பல்லு ” என்பது மட்டும் தெளிவாக கேட்க , தன்னை தான் மீண்டும் கேலி செய்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டவர் ” டேய் படவா , என் பல்லயா கலாய்க்குற இரு டா , உன் பல்லு மொத்தத்தையும் தட்டி கையில கொடுக்கல , நா முனிவேல் பொண்டாட்டி மரகதவல்லி இல்ல டா ” என்று கத்தியவர் , அவன் முதுகில் நன்றாக மொத்தினார்.
வல்லி பாட்டியும் , சரணும் அடிக்கும் லூட்டியை கண்டு கௌரியும் , வந்திதாவும் கூட தங்கள் பிரிவின் சோகம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தனர். அவர்கள் சிரிக்கும் சத்தத்தை கேட்ட பின்பு தான் , வல்லி பாட்டியும் சரணும் தங்கள் சண்டையை நிறுத்தினர்.
” ஸ்யாபா டா , சிரிச்சிட்டியா அத்தாச்சி ? உன்ன சிரிக்க வைக்கறதுக்குள்ள என் டங்கு வாறு அறுந்து போச்சு போ ” என்று ஓர் பெருமூச்சை விட்ட சரண் , வந்திதாவை பாசமாக அணைத்து விடுவித்தான்.
சரண் கூறியதை கேட்டு , சரணை பார்த்து கண்ணடித்த வல்லி பாட்டி ” ஏன் சரா , நீ வந்திய மட்டும் சிரிக்க வைக்க தான் இவ்ளோ ப்ரஹ்ம பிரயத்தனம் பட்டியா ? ” என்று கேட்க , அதில் வெட்கம் கொண்ட சரண் அசடு வழிந்துக்கொண்டே ஓர் சிரிப்பை உதிர்க்க , அதில் அவன் கன்னத்தில் அழகாக குழி விழுந்தது.
சரணின் கன்னக்குழியில் கௌரியின் இதயம் அவள் நெஞ்சு குழியிலிருந்து தவறி விழுந்த விட , சரணின் கன்னக்குழியில் தவற விட்ட தன் இதையத்தை மீட்டெடுக்கவும் முடியாமல் , அதை அவனிடமே ஒப்படைக்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.
கௌரியின் தவிப்பை உணர்ந்து கொண்ட வல்லி பாட்டி ” அட கள்ளி உனக்கும் அவன் மேல விருப்பம் இருக்கா ? இவ்ளோ ஆசைய வச்சிக்கிட்டு தான் எப்ப பார்த்தாலும் அவன் கூட சண்டை போடுற சாக்குல அவனை ரசிக்குறியா ? இருடி உன் வாயாலயே அவன விரும்பறத ஒதுக்க வைக்குறேன் ” என்று மைண்ட் வாயிசில் உறுதி எடுத்து கொண்டார்.
” சரி சரி இப்படி ஆளாளுக்கு பேசி கிட்டே இருந்தா , அடுத்து ஆக வேண்டிய வேலைய பார்க்க வேண்டாமா ? ” என்று கூட்டத்தில் ஒரு பெண்மணி கேட்க , அமுதனும் அதற்காகவே காத்திருந்தவன் போல்
” அப்பாடா நானும் இந்த கேள்விய யாராச்சும் கேப்பாங்களானு இவ்ளோ நேரமா காத்துகிட்டு இருந்தேன்.” என்று மகிழ்ந்த அமுதன் ” சரி சரி நேரமாகுது , நாங்க வீட்டுக்கு போறோம்.” என்று வந்திதாவையும் , வல்லி பாட்டியையும் அழைத்து கொண்டு காரில் ஏறி அமர்ந்தவன் , பின் ஏதோ மறந்தவன் போல் , வண்டியிலிருந்து கீழே இறங்கியவன்
” எங்க வீடு உங்க புது வீட்லயிருந்து இரண்டு தெரு தான் தள்ளியிருக்கு, அதுனால நீங்க எப்போ ஆசைப்பட்டாலும் வந்திதாவ வந்து பார்த்துட்டு போகலாம். யு ஆர் ஆல்வேஸ் வெல்கம் ” என்று அனைவருக்கும் பொதுவாய் கூறியவன் , கடைசி வரியில் அழுத்தம் குடுத்து கௌரியை பார்த்து கூறினான்.
கௌரியும் இதை அவன் தனக்காக தான் கூறுகிறான் என்பதை புரிந்து கொண்டவள் அமுதனை நோக்கி சிநேகமாய் புன்னகைத்தாள்.
பின் மூவரும் அனைவரிடமும் விடை பெற்று தங்கள் வீட்டிற்கு சென்றனர்.
வல்லி பாட்டி புது மண தம்பதிகளை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்தவர் , அதற்கு பிறகு செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் சிறப்பாக செய்து முடித்தார்.
அதனூடே சாந்தி முகூர்த்தம் வரை மணமக்கள் இருவரும் ஒன்றாக இருக்க கூடாது என்று உத்தரவு போட்டவர் , அதை செயல் படுத்தவும் தவறவில்லை.
அமுதன் கெஞ்சி கதறி கூப்பாடு போட்டு அழுது புலம்பியதையும் கூட காதில் வாங்காமல் , அவன் கண்முன்னே வந்திதாவை அழைத்துக்கொண்டு தன் அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டுக்கொண்டார்.
” ச்ச இந்த கிழவி நா அஞ்சு மாசமா வாடகை குடுக்காததுக்கு எல்லாம் சேர்த்து வச்சு இப்போ பழி வாங்குது. சரி இந்த கிழவி தான் இப்படின்னா , இந்த வந்தி இருக்கே அதாச்சும் , இல்ல பாட்டி நா என் புருஷன் கூட தான் இருப்பேன்னு சொல்லியிருக்கலாம்ல , அதுவும் இதான் சாக்குன்னு , நல்லா வயிறு முட்ட முட்ட தின்னுட்டு இழுத்தி போத்திகிட்டு தூங்க போயிருச்சு, ஐயோ இவள கட்டிக்கிட்டு நா இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க போறேனோ ? அடியே என்னை இப்படி தனியா உட்கார்ந்து புலம்ப விட்டுட்டு அந்த கிழவியோட போய்ட்டியே டி ” என்று புலம்பிக்கொண்டிருந்த அமுதனின் பின் புறத்திலிருந்து ஒரு கை அவன் தோளை தொட ,
” ஐ ஜாலி , எனக்கு தெரியும் டி வந்தி செல்லம் , இந்த மாமாவ விட்டுட்டு உன்னால தனியா இருக்க முடியாதுன்னு. என் செல்ல பொண்டாட்டி ” என்று கொஞ்சிக்கொண்டே , அக்கையை இழுத்து அவ்வுருவத்தை தன் முன்னே கொண்டுவந்தவன் , கண்களை இறுக்கி மூடி கொண்டு , இதழோடு இதழ் பதிக்க போக ” டேய் ஐயயோ அவனா நீ ? ” என்று கத்திக்கொண்டே அமுதனிடமிருந்து பதறி இரண்டடி தள்ளி நின்றது வேறு யாருமில்லை சாட்ஷாத் நம் சரண் தான்.
சரணை அங்கே எதிர் பார்க்காத அமுதன் பதறி அடித்துக்கொண்டு அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து துள்ளி குதிக்க , ” டேய் நீ இங்க என்ன சகல பண்ற ? ” என்று வினவ , ” அட ச்ச நீ காஞ்சி போயிருக்கனு ஊருக்கே தெரியும் , ஆனா இந்த அளவுக்கு காஞ்சி போயிருப்பேனு இன்னைக்கு தான் டா தெரியுது. இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் நா வாய துறக்காம இருந்திருந்தா , என் கற்பே பறி போகியிருக்கும் ” என்று பதிலளித்த சரண் , அமுதன் இழுத்த வேகத்தில் கலைந்திருந்த தன் சட்டையை சரி செய்துக்கொண்டே அமுதனுக்கு எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அவன் பேசியதில் கடுப்பான அமுதன் ” ஐய டா துரை ரொம்ப ஓவரா தான் சீன் போடுறீங்க. நானும் பாக்க தான போறேன் , உனக்கும் கௌரிக்கும் கல்யாணம் முடிஞ்சு , உன்னையும் இதே மாதிரி முதல் ராத்திரி வரைக்கும் கௌரிய பார்க்க கூடாதுனு தனியா உட்கார வைக்கும் போது நீயும் என்ன மாதிரி நடப்பியா, இல்ல சமத்து புள்ளையா அவ வர வரைக்கும் வழி மேல விழி வச்சு அமைதியா உட்கார போறியான்னு ? ” என்க ,
அவன் பேசியதை கேட்டு ” அட ஏன் சகல நீ வேற வெறுப்பேத்துற ? இந்த கௌரி நா அவ பக்கத்துல போனாலே எரிஞ்சு எரிஞ்சு விழுறா , இதுல எங்கயிருந்து அவ என் லவ்வ அக்செப்ட் பண்ணி , எங்களுக்கு கல்யாணம் எல்லாம் நடக்கறது ? போ சகல , எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு ” என்ற சரண் தன் நிலையை எண்ணி அழுத்து கொண்டான்.
” என்ன சகல , பீலிங்ஸ் எல்லாம் பயங்கரமா இருக்கு. சகல , என்ன கஷ்டம் வந்தாலும் உன் நம்பிக்கைய மட்டும் என்னைக்கும் விட்டுறாத. நம்பிக்கை முக்கியம் சகல ” என்ற அமுதன் , சரணுக்கு ஆதரவாய் பேச ,
சரணோ ” சரி அத விடு சகல, நா உன் கிட்ட ஒரு டவுட் கேக்கணும். என்ன டா இவன் இப்படி எல்லாம் கேக்குறான்னு நீ நினைக்க கூடாது. ஓகே வா ? ” என்று பீடிகையுடன் வினவ ,
” தெரியும் சகல , நீ என்ன கேக்க போறேன்னு எனக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் உன் வாயால நீயே கேளு . எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நா பதில் சொல்லுறேன் ” என்ற அமுதன் , சரணை நோக்கி சிரித்தான்.
” அது ஒன்னுமில்ல சகல , கௌரி அன்னைக்கு உன்ன ” அனாதை “னு சொல்லி அவ்ளோ கேவல படுத்தினானு அத்தை பீல் பண்ணிட்டுஇருந்தாங்க.
கௌரியோட சின்ன வயசுல இருந்தே இவ்ளோ க்ளோஸா பழகுற எனக்கே சில நேரம் அவ ரூடா பேசும் போது கோவம் வந்து பதிலுக்கு திட்டிடுவேன், ஆனா நீ அன்னைக்கு பதிலுக்கு அவள எதுவுமே பேசலையே சகல ? நீ நினைச்சிருந்தா அன்னைக்கே , என்னை அனாதைன்னு சொல்லுறியே , நீயும் ஒரு அனாதை தான்னு சொல்லி , உண்மைய பட்டுன்னு போட்டு உடைச்சிருக்கலாம், ஆனா ஏன் சகல இத எதுவுமே செய்யல ? நிஜமாவே உனக்கு கௌரி மேல அன்னைக்கு கோவம் வரலையா ? ” என்று இத்தனை நாள் தன் மனதை அரித்துக்கொண்டிருந்த கேள்விகளை ஒரே மூச்சாக அமுதனிடம் கொட்டிய சரண் , அவன் பதிலுக்காய் காத்திருந்தான்.
நாமும் அவனது பதிலுக்காய் அடுத்த பதிவு வரை காத்திருப்போம் ….
தொடரும் …
உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …
என்னவா இருக்கும்🤔🤔🤔🤔 எனக்கு ஒன்னு தோணுது பார்ப்போம் என்ன நடக்குதுன்னு😁😁😁
Always expect the unexpected sweety ….