Loading

மருத்துவ அறையிலிருந்து சிதாராவை தன் நண்பர்கள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற ஆர்யான் அனைவருக்கும் அவளை அறிமுகம் செய்து வைத்தான்.

அனைவருடனும் கை குலுக்கி இன்முகத்துடன் பேச அவர்களுக்கும் அவளைப் பிடித்து விட்டது.

சிதாராவை ஆடிட்டோரியத்துக்கு அழைத்துச் சென்று வகுப்பில் சேர தேவையான அனைத்தையும் விளக்கினான்.

அதன் பின் வந்த நாட்களில் நீ.. வா… போ.. என கூறும் அளவுக்கு இருவரும் நல்ல நண்பர்கள் ஆகினர்.

வகுப்பிலுள்ள சக மாணவர்களுடனும் நட்பு பாராட்டிய சிதாராவுக்கு யுனிவர்சிட்டி வாழ்க்கை புது பிறவி எடுத்து வந்தது போல் இருந்தது.

நாட்கள் இவ்வாறு செல்ல ஒரு நாள் யுனிவர்சிட்டிக்கு அருகிலுள்ள பார்க்கில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது சிதாரா, “ஜிராஃபி எனக்கொரு ஹெல்ப் பண்றியா…” என்க,

“சொல்லு மினி… பணம் ஏதாவது தேவையா…” என ஆர்யான் கேட்க,

“இல்ல… அதெல்லாம் அப்பா தாராளமாவே அக்கவுன்ட்ல போட்டு வெச்சி இருக்காரு… ஈவ்னிங் என் கூட கொஞ்சம் ஷாப்பிங் வரியா…” எனக் கேட்டாள்.

ஆர்யான், “புக்ஸ் ஏதாவது வாங்கனுமா மினி… சொல்லு நான் வாங்கிட்டு வரேன்… நீ அலைய வேணாம்…” என்கவும்,

“இல்ல ஜிராஃபி… எனக்கு கொஞ்சம் ட்ரஸ் பர்ச்சேஸ் பண்ணனும்… அப்படியே பார்லருக்கு போய்ட்டு வரணும்… தனியா போக எனக்கு இன்னும் இங்க அவ்வளவா பழகல… அதான் உன்ன கூப்ட்டேன்…” என்றாள் சிதாரா.

ஆர்யான், “ட்ரஸ் வாங்கனும் ஓக்கே… நீ எதுக்கு பார்லர்க்கு போகனும்னு சொல்ற… நீ அங்கெல்லாம் போக மாட்டியே…” என்க அவனை முறைத்த சிதாரா,

“எதுக்கு இவ்வளவு கேள்வி கேக்குற… உனக்கு என் கூட வர முடியுமா முடியாதா… முடியாதுன்னா சொல்லு நான் அந்த ஜோன் கூட போறேன்…” என்க,

“இல்ல இல்ல நானே வரேன்… நீ எங்க போனும்னு சொன்னாலும் ஓக்கே‌… அந்த ஜோனோட மூஞ்சியும் முகரகட்டையும்… என்னமோ இதுக்கு முன்னாடி பொண்ணுங்களயே பார்க்காதது போல உன்ன பாக்குறான் ஒரு பார்வை…” என தன் பாட்டிற்கு ஜோன் என்பவனை வசைபாட சிரித்த சிதாரா அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

மாலை ஆனதும் எப்போதும் போல நீண்ட குர்த்தி, கழுத்தை சுற்றி ஷால், கண்ணில் கண்ணாடி, நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு என தயாரானவள் ஆர்யான் வந்து ஹார்ன் அடிக்கவும் அவனுடன் பைக்கில் ஏறி கிளம்பினாள்.

ATM சென்று பணம் எடுத்துக் கொண்டவள் ஆர்யானுடன் அங்கிருந்த காம்ப்ளக்ஸிற்கு சென்றாள்.

பல்வேறுபட்ட கடைகளை ஒரே இடத்தில் கொண்டதே காம்ளக்ஸ் ஆகும்‌.

முதலில் ட்ரஸ் செக்ஷனிற்கு இருவரும் சென்றனர்.

ஆர்யான் அங்கு வேலைக்கிருந்த பெண்ணிடம்,

“லைட் கலர் சிம்பள் குர்த்தி டிசைன்ஸ் காட்டுங்க…” என்கவும் சிதாரா,

“இல்ல இல்ல லாங் ஸ்கர்ட் பிளவுஸ் என்ட் டீ ஷர்ட் ஜீன்ஸ் டிசைன் காட்டுங்க..” எனக் கூற அவளை கேள்வியாய் நோக்கினான் ஆர்யான்.

சிதாரா எப்போதும் அதிக வேலைப்பாடற்ற கண்ணுக்கு கூசாத நிறங்களில் குர்த்தி மட்டுமே அணிந்து கண்டுள்ளதால் தான் அவனே அவற்றை எடுத்துக் காட்ட சொன்னான்.

பணிப்பெண் காட்டியவற்றில் தனக்குப் பிடித்தவற்றை வாங்கியவள் அடுத்து பார்லருக்கு சென்றாள்.

ஆர்யான் எதுவும் கூறாமல் அவள் செய்பவற்றை அமைதியாக பார்வையிட்டான்.

பார்லரினுள் நுழைந்தவள் பார்லர் பெண்ணிடம், “ஹேர் ஷார்ட் பண்ணனும்… அப்படியே கொஞ்சமா கேர்ள் பண்ணிடுங்க..” என்கவும் ஆர்யான் அதிர்ந்தான்.

“என்னாச்சி மினி… எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்க… இவ்வளவு நல்ல முடிய யாராச்சும் கட் பண்ணுவாங்களா…” என கோவமாக ஆர்யான் வினவ,

சிதாரா, “ப்ளீஸ்டா… நான் உன் கிட்ட அப்புறமா சொல்றேன்… இப்போ என்ன தடுக்காதே…” என்க கோவமாக வெளியே சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் ஆர்யான்.

சில மணி நேரம் கழித்து சிதாரா வெளியே வர ஆர்யான் விழி விரித்து நின்றான்.

சற்று முன் வாங்கிய லாங் ஸ்கர்ட் பிளவுஸ் அணிந்து முடியை கேர்ள் செய்து எப்போதும் அணிந்திருக்கும் கண்ணாடி இல்லாமல் வந்தாள் சிதாரா.

ஒரு நிமிடம் தான் விழி விரித்து நின்றான் ஆர்யான்.

பின் ஏற்கனவே இருந்த கோபத்துடன்,

“இன்னும் எங்கயாச்சும் போகனுமா மேடம்…” என்க,

“ஐ கேர் சென்டர் போகனும்..” என்றாள் சிதாரா.

அவளை கோவமாக ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாது முன்னே நடக்க அவனைப் பின் தொடர்ந்தாள் சிதாரா.

அங்கிருந்து ஐ கேர் சென்டர் சென்றவள் தன் கண்களுக்கு பொருத்தமான கான்டேக்ட் லென்சை ஆர்டர் செய்து விட்டு நேராக சிதாரா தங்கியிருந்த ப்ளாட்டை அடைந்தனர்.

சிதாராவைத் தாண்டிக் கொண்டு உள்ளே நுழைந்தவன் அவள் வாங்கியவற்றை வைத்து விட்டு கோவமாக அமர்ந்தான்.

சிதாரா உள் நுழைந்தவள் மனதில், “ஆத்தீ… ஜிராஃபி ரொம்ப கோவமா இருக்கான் போல… நாமளே முதல்ல ஆரம்பிச்சிரலாம்..” என நினைத்தவள் ஆர்யானைப் பார்த்து,

“நான் எப்படி இருக்கேன் ஜிராஃபி… அழகா இருக்கேனா…” என தன்னை சுற்றிக் காட்ட,

“ஏன் ஏதாச்சும் எக்சிபிஷன்க்கு ஷோ கேஸ் பொம்மையா வரேன்னு சைன் பண்ணி குடுத்திருக்கியா..” என கோவமாக ஆர்யான் வினவ தலை குனிந்தாள் சிதாரா.

ஆர்யான் எழுந்து அவளை நோக்கி வந்தவன்,

“மினி.. நீ எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்கன்னு நிஜமாலுமே எனக்கு புரியல… நீ ஃபர்ஸ்ட் டே இங்க வந்தப்போ நான் உன்னோட ட்ரஸிங் ஸ்டைல வெச்சி உன்ன கலாய்ச்சேன்… அது ஜஸ்ட் ரேக்கிங் பண்ண தான்… பட் நீ உள்ள வரும் போதே நான் உன்ன ரசிச்சி பாத்துட்டு இருந்தேன் தெரியுமா… ஏன்னா நீ அழகா இருக்கன்னு இல்ல… சுத்தி எப்பவுமே மாடர்ன் ட்ரஸ் உடுத்த பொண்ணுங்களையே பாத்து பாத்து பழகின எனக்கு ஃபர்ஸ்ட் டைம் ட்ரெடிஷனல் ட்ரஸ்ல உன்ன பாத்ததும் ஒரு டிஃபரன்ட் ஆன ஃபீல்… அப்புறம் ரேக்கிங் பண்ணலாம்னு தான் அப்படி எல்லாம் பொய் சொன்னேன்… உண்மைய சொன்னா நீ ட்ரெடிஷனல் ட்ரஸ்ல தேவதை மாறி இருப்ப… ஒரு வேளை அதுக்காக தான் நீ இப்படி எல்லாம் பண்றியா…” என்றான்.

அது வரை அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் விழிகளில் அவளையும் அறியாது கண்ணீர்.

ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தவள், “ஃபர்ஸ்ட் டைம் ஒருத்தங்க இப்படி சொல்லி கேக்குறேன்…” என்கவும்,

அவள் கண்ணீரைப் பார்த்து பதறிய ஆர்யான் அவசரமாக அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன்,

“ஹேய் மினி… நீ எப்படி இருந்தாலும் அழகா தான் இருப்ப… அழாதே… சாரி… நீ எதுவும் சொல்ல வேணா… நான் இனிமே உன் மேல கோவப்பட மாட்டேன்…” என்றான்.

சிதாரா, “ஜிராஃபி…நான் உன் கிட்ட என்ன பத்தி சில விஷயம் சொல்லனும்… ” என்க,

“நீ உன்ன பத்தி சொல்லி தான் நான் தெரிஞ்சிக்கனும்னு இல்ல மினி… உன்னோட பாஸ்ட் என்னவா இருந்தாலும் நான் உன் கூட இருப்பேன் எப்பவுமே…” எனக் கூறி புன்னகைத்தான் ஆர்யான்.

“இல்ல ஜிராஃபி… ரொம்ப நாளா இதெல்லாம் என் மனச போட்டு அறுக்குது… இத யாருக்கிட்டயாச்சும் சொல்லனும்னு தோணுது…” என்றவள் அவனிடம் தன் கடந்த காலத்தை கூற ஆரம்பித்தாள்.

ஆர்யான் பால்கனியில் சென்று நின்றவன் அவள் கூறுவதைக் கேட்க கேட்க பால்கனி கம்பி மீதிருந்த அவன் கையின் பிடி இறுகிக்கொண்டே சென்றது. 

சிதாரா பிரணவ்வுடனான தன் கடந்த காலத்தை ஆர்யானிடம் கூறி முடிக்க அவன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

சட்டென ஏதோ விழுந்து உடையும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்தான்.

வாயில் நுரை தள்ள கை கால்கள் வெட்ட கீழே விழுந்து கிடந்தாள் சிதாரா.

அவள் பக்கத்தில் அங்கு மேசையில் அழகுக்கு வைத்திருந்த பூச்சாடி உடைந்து கிடைந்தது.

அவளிடம் ஓடியவன் தன்னிடமிருந்த பைக் சாவியை அவள் கைகளில் வைத்து அழுத்த அவள் அமைதியாகினாள்.

அவசரமாக டாக்டருக்கு அழைத்து வர சொன்னவன் அவளை அறைக்குள் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தி அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்கவும் மெதுவாகக் கண் விழித்தாள் சிதாரா.

“ஆர் யூ ஓக்கே மினி… இந்த தண்ணிய குடி…” என்க ஆம் எனத் தலையசைத்தவள் நீரை வாங்கிப் பருகினாள்.

சரியாக அந் நேரம் டாக்டர் வர அவளைப் பரிசோதித்து விட்டு, “இப்போதக்கி இந்த டேப்லட்ட போட்டுட்டு நீ கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா..” என்று விட்டு அறையிலிருந்து வெளியேறினார். 

சிதாராவுக்கு மருந்தையும் நீரையும் கொடுத்து குடிக்க வைத்த ஆர்யான் டாக்டரைப் பின் தொடர்ந்தான்.

ஆர்யான் வந்ததும் டாக்டர், “என்னாச்சி சடன்னா.. இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கா..” என்க,

ஆர்யான் அன்று யுனிவர்சிட்டியில் நடந்ததையும் இப்போது நடந்தவற்றையும் கூறினான்.

“அப்டின்னா அந்த விஷயம் அவங்கள மனசளவுல ரொம்ப பாதிச்சிருக்கு… அதை பத்தி அவங்க நிறைய நேரம் திங்க் பண்ணி இருக்காங்க… அதனால தான் அவங்க ரொம்ப எமோஷனல் ஆகுறப்போ எல்லாம் அவங்களுக்கு ஃபிட்ஸ் வருது..” என டாக்டர் கூற,

ஆர்யான், “இதை கியுர் பண்ண முடியாதா டாக்டர்..” எனக் கேட்க,

“கியுர் பண்ணலாம்.. ஃபிட்ஸ் வர நிறைய ரீசன்ஸ் இருக்கு.. இது அவங்க மனசு சம்பந்தப்பட்டது…மருந்தினால அவங்கள கியுர் பண்ண முடியாது… அதனால அவங்க மனச பாதிக்கிற அந்த விஷயத்த அவங்க தலைல இருந்து எடுக்கனும்… அத பத்தியே அவங்க மறக்கனும்…இல்லன்னா அது சாதாரண விஷயம்னு அவங்க அத கடந்து போற மனநிலைக்கு வரனும்… இத விட்டா வேற வழி இல்ல..” என்க, நன்றி கூறி அவரை அனுப்பி வைத்தான். 

அறைக்குள் நுழைந்த ஆர்யான் சிதாரா எடுத்த ஆடைகளை கட்டிலில் விரித்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் அவளைப் பார்த்து முறைக்க, அவளோ புரியாது விளித்தாள்‌.

ஆர்யான், “எவனோ ஒருத்தன் உன்ன பத்தி புரிஞ்சிக்காம உன்ன தப்பா பேசினான்னு நீ எதுக்கு உன்ன மாத்திக்கனும்…” என்க,

இப்போது முறைப்பது அவளானது.

“டேய் வளந்து கெட்டவனே.. எவனோ சொன்னங்குறதுக்காக நான் மாறனும்னா அப்போவே மாறி இருப்பேனே… க்ளாஸ்ல நான் மட்டும் தனியா தெரியக் கிட்ட எல்லாரும் என்னையே பாக்குற போல ஒரு‌ ஃபீல்… என்ட் நான் ஒன்னும் அரை குறையா ட்ரஸ் போடல்லயே… இப்போ க்ளாஸ்ல மத்த பசங்க கூட பழகும் போது எனக்கு அன்கம்ஃபிடபிளா இருக்காது… ஏன்னா நானும் இப்போ அவங்கள போல தானே இருக்கேன்… போதாத்துக்கு அந்த ஜோன் வேற ஒரு மார்க்கமா பாக்குறான்னு சொன்னியே.. இனி அவனும் அப்படி பாக்க மாட்டான்…” என்க,

“ஏதோ நீ சொல்ற… நானும் நம்புறேன்…” என்றவன் அதன் பின் இருவரும் வேறு கதைகள் பேசினர்.

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.