Loading

S M Hospital – Ooty

ஆதர்ஷ், அபினவ், பிரணவ், ஆர்யான், லாவண்யா, அக்ஷரா என அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.

தன்னை அணைத்தபடி இருந்தவள் திடீரென வலிப்பு வந்து தன் கரங்களிலே சரிய அதிர்ந்த ஆர்யான் “மினி….” எனக் கத்த,

அவன் கத்தலில் திரும்பியவர்கள் சிதாராவின் நிலையைக் கண்டு அதிர்ந்து அவசரமாக அவளிடம் ஓடினர்.

பிரணவ், “தாரா..” என அவளிடம் செல்லப் பார்க்க அவன் கையை யாரோ பிடித்து வைத்திருப்பதை உணர்ந்தவன் யாரெனப் பார்க்க, ஆதர்ஷ் தான் அவனை செல்ல விடாமல் பிடித்திருந்தான்.

ஆதர்ஷ், “நீ பண்ணது எல்லாம் போதும்… தயவு செஞ்சி இங்கயே இரு..” என கோவமாகக் கூறியவன் சிதாராவிடம் விரைந்தான்.

பிரணவ் எதுவும் செய்ய முடியாமல் அங்கு நின்றே கவலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிதாரா வலிப்பு வந்து துடிக்க ஆர்யான் அவசரமாக அருகிலிருந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்து அவள் உள்ளங்கையில் வைத்து மடித்து  அழுத்தினான்.

மெதுவாக அவளது வலிப்பு நிற்க சிதாராவை கரங்களில் ஏந்திய ஆர்யான் யாரிடம் எதுவும் கூறாது ஓடிச் சென்று டாக்சி பிடிக்க அக்ஷராவும் லாவண்யாவும் அவனுடன் சென்றனர்.

ஏனையோரிடம் தகவலைக் கூறி அவர்களை ரெட் ஹவுஸ் செல்லக் கூறிய அபினவ் இன்னொரு டாக்சி பிடித்து ஆதர்ஷ், பிரணவ்வுடன் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

ஹாஸ்பிடலில் அனைவரும் டாக்டர் சிதாராவைப் பரிசோதித்து விட்டு வரும் வரை தவிப்புடன் இருக்க,

பிரணவ் அங்கு ஒரு ஓரமாக கை கட்டி நிற்பதைப் பார்த்த ஆர்யான் பிரணவ்விடம் சென்று அவன் சட்டையைப் பிடித்து, 

“எதுக்குடா இன்னும் இங்க நின்னுட்டு இருக்காய்… இன்னும் என்ன வேணும் உனக்கு… அவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேன் தானே இப்ப எதையும் பேச வேணாம் நிறுத்து நிறுத்துன்னு… கேட்டியாடா… இப்ப பாரு மினி எந்த நிலைல இருக்கான்னு… இதுக்கெல்லாம் நீ மட்டும் தான்டா காரணம்… உன்ன….” என கோபத்தில் கத்தி விட்டு பிரணவ்வை அடிக்கக் கை ஓங்க,

அபினவ் அவனைத் தடுக்க முயற்சிக்க, சிதாராவைப் பரிசோதித்து விட்டு வெளியே வந்த டாக்டர் அவர்களைக் கண்டு,

“நிறுத்துங்க… இங்க என்ன நடக்குது… இது என்ன ரௌடிசம் பண்ணுற இடம்னு நெனச்சீங்களா… பேஷன்ட்ஸ் இருக்குற இடம்… திரும்ப இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்திங்கனா நான் போலிஸ கூப்பிட்டுருவேன்… மைன்ட் இட்…” என அவர்களைத் திட்ட,

பிரணவ்வை விட்டு டாக்டரிடம் ஓடி வந்த ஆர்யான், “சாரி.. சாரி டாக்டர்… மினி இப்போ எப்படி இருக்கா… நல்லா இருக்கால்ல… ” என பதட்டமாய்க் கேட்டான்.

டாக்டர், “ப்ளீஸ் பீ காம் சார்… அவங்க இப்போ நல்லா தான் இருக்காங்க… டோன்ட் வொரி… அவங்களுக்கு இதுக்கு முன்னாடி ஃபிட்ஸ் வந்து இருக்கா…” என்க,

லாவண்யா இல்லை என சொல்ல வர,

“ஆமா டாக்டர்… இது தேர்ட் டைம்…” என ஆர்யானிடமிருந்து பதில் வர அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

டாக்டர், “ஆஹ் ஓக்கே… ஏதோ ஒரு விஷயம் அவங்க மனச ரொம்ப பாதிச்சிருக்கு… அத ஞாபகப்படுத்துற விதமா ஏதாச்சும் நடந்தா தான் இப்படி ஃபிட்ஸ் வருது இவங்களுக்கு… ஐ திங்க் இன்னெக்கி ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்து இருக்காங்க… அதனால தான் இன்னும் கான்ஷியஸ் வரல… நாங்க ட்ரீட்மன்ட் பண்ணி இருக்கோம்… சோ ஒரு டூ த்ரீ ஹவர்ஸ்ல கண்ணு முழிச்சிருவாங்க… அவங்கள வார்டுக்கு சேன்ஜ் பண்ணுறோம்… அதுக்கப்புறம் நீங்க போய் பார்க்கலாம்..” என்க,

ஆர்யான், “தேங்க் யூ டாக்டர்..” என்றதும் அவர் சென்றார்.

சிதாராவை வார்டுக்கு மாற்ற ஆர்யான் முதலிலே உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்து அவள் கையை தன் கைக்குள் வைத்து பிடித்துக் கொண்டவன் கண்கள் அவனையும் அளியாமல் கண்ணீர் சிந்த யாரும் காணாதிருக்க அவசரமாக துடைத்துக் கொண்டான்.

ஆனால் சிதாராவைக் காண உள்ளே வந்த லாவண்யா அதனைக் கண்டு கொண்டாள்.

பின் அனைவரும் உள்ளே வர லாவண்யா ஆர்யானிடம் சென்று,

“அண்ணா ப்ளீஸ்… உண்மைய சொல்லுங்க.. சித்துக்கு இதுக்கு முன்னால ஃபிட்ஸ் வந்திருக்கா… எப்படி வந்தது… இது வரைக்கும் அவ என் கிட்டயும் அச்சு கிட்டயும் இத பத்தி எதுவுமே சொல்லி இல்லயே… அவளுக்கு என்னாச்சி.. ஏன் இப்படி மாறி இருக்கா..” என்க,

“ஆமாண்ணா.. ப்ளீஸ் எதையும் மறைக்காம சொல்லுங்க… எங்க ஃப்ரெண்டுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருந்திருக்கு… ஆனா இது வரைக்கும் நாம யாரும் அத பத்தி தெரிஞ்சிக்காம இருந்திருக்கோம்…” என கவலையாக கூறினாள் அக்ஷரா.

ஆர்யான், “சொல்றேன்மா… இதுக்கு மேல மறைச்சி என்ன பிரயோஜனம்…” என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு,

“மினிக்கு ஃபர்ஸ்ட் டைம் ஃபிட்ஸ் வந்தப்போ தான் எனக்கும் மினிக்கும் இடைல ஃப்ரென்ட்ஷிப் உருவானது…” என்க, அனைவரும் அவன் கூறுவதைக் கேட்க தயாரானார்கள்.

2 வருடங்களுக்கு முன்…

Fordham University – New York

யுனிவர்சிட்டி ஆடிட்டோரியமே அன்று பரபரப்பாக காணப்பட்டது.

ஏனென்றால் அன்று முதலாம் வருடத்திற்கான புதிய மாணவர்களை அனுமதிக்கும் தினமாகும்.

மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் புதிய மாணவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க நான்காம் ஆண்டு பயிலும் ஆர்யான் அங்கிருந்த பெஞ்ச்சில் தன் நண்பர்களுடன் அமர்ந்து வந்து செல்லும் மாணவர்களை கலாய்த்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் சரியாக யுனிவர்சிட்டியினுள் நுழைந்தாள் சிதாரா.

நீல நிற குர்த்தி அணிந்து கழுத்தை சுற்றி ஷால் போட்டு கண்களில் பெரிய கண்ணாடி, நெற்றியில் சிறிய பொட்டு, தோளில் பையுடன் ஒரு வித படபடப்புடன் நுழைந்தாள்.

சுற்றி எப்போதுமே மார்டன் ட்ரஸ் அணிந்த நவ நாகரீக பெண்களையே பார்த்து இருந்தவனின் கண்களில் முழங்காலையும் தாண்டிய குர்த்தி அணிந்து ஷால் போட்டு பதட்டத்துடன் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு வந்த சிதாராவைக் கண்டதும் விழிகளில் ரசனையுடன் அவளை ஏறிட்டான்.

இந்தியாவிலே பிறந்து வளர்ந்து படிப்பிற்காக வேண்டி நியுயார்க் வந்த ஆர்யானுக்கு இந்த ஐந்து வருடங்களாக மாடர்ன் ஆடை அணிந்த அல்லது முழங்காலுக்கு மேலேறிய ஆடை அணிந்த பெண்களே கண்ணுக்கு தென்பட இருப்பதால் அவர்களைக் கண்டாலே எரிச்சல் வரும்.

ஆனால் அது அந் நாட்டு பழக்க வழக்கம் என்பதால் உடன் பயிலும் பெண்களுடன் பழகினாலும் ஒரு இடைவெழியைக் கடைபிடிப்பான்.

அப்படிப்பட்டவனுக்கு சிதாராவைக் கண்டதும் ரசனை ஏற்பட்டது ஆச்சர்யம் இல்லை.

அவள் கண்களில் தெரிந்த பதட்டத்தைக் கண்டதும் இவனின் வழக்கமான குறும்புக் குணம் வெளிப்பட்டு விட்டது.

சிதாரா அவர்கள் இருந்த இடத்தை கடந்து செல்லப் பார்க்க ஆர்யான்,

“ஓய் சோடா புட்டி…” என அவளை அழைக்க,

அதே இடத்தில் நின்றவள் அவர்களைப் பார்த்து விட்டு தன்னையா அழைத்தான் என சுற்றிப் பார்க்க,

“உன்ன தான்மா… இங்க வா…” என மீண்டும் அழைத்தான் ஆர்யான்.

சிதாரா பயந்து பயந்து அவர்களை நோக்கி மெதுவாக அடியெடுத்து வர, ஆர்யான் அவள் வரும் வரை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் அவர்களை நெருங்கியதும் பொய்க் கோபத்துடன்,

“கூப்டதும் வர மாட்டியா… என்ன புகுந்த வீட்டுக்கா போற.. இவ்வளோ மெதுவா வர… சீனியர்ஸ்க்கு ஒரு மரியாதை இல்ல…” என்றதும் அவள் பயந்து தலை குனிந்த படியே இட வலமாக தலையசைத்தாள்.

ஆர்யானின் நண்பர்களுக்கு தமிழ் தெரியாததால் அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்தனர்.

சிதாரா பயந்து நடுங்க ஆர்யானுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

மெதுவாக வாயை மூடிய படி சிரித்தவன், 

“காசு ஏதாச்சும் விழுந்துடிச்சா சோடா புட்டி..” என்க தலையைத் தூக்கி அவனைப் புரியாமல் நோக்கினாள் சிதாரா.

ஆர்யான், “இல்ல ரொம்ப நேரமா கீழ பார்த்து ஏதோ தேடிட்டு இருந்தியே.. அதான் கேட்டேன்…” என்க அவசரமாக இல்லை என தலை அசைத்தாள் சிதாரா.

“ஆமா என்ன இது ட்ரஸ்… இவ்வளவு நீளமா போட்டு கழுத்துல ஷால்… இதுல ஆள விடப் பெரிய கண்ணாடி வேற… இன்னுமே அந்தக் காலத்துல இருக்க… இங்க வர கிட்ட எப்படி ட்ரஸ் பண்ணிட்டு வரனும்னு யாரும் சொல்லி தரலயா…” என ஆர்யான் விளையாட்டாக கலாய்த்திட,

இதை அறியாத சிதாராவோ அவனின் வார்த்தைகளைக் கேட்டதும் திடீரென தலை பாரமாக தன் சமநிலையை இழப்பது போல் இருக்க அப்படியே வலிப்பு வந்து அவன் காலின் அருகே விழுந்தாள்.

ஆர்யான் அதிர்ச்சியில் இருக்க அவன் நண்பர்கள் அனைவரும் பதட்டமாகி ஒருவன், “ஹேய் வட் ஹெப்பன்ட் மேன்..” என்க,

தன்னிலை பெற்ற ஆர்யான், “டோன்ட் நோ.. ப்ளீஸ் ஹெல்ப் மீ டு டேக் ஹர் டு த மெடிக்கல் ரூம்…” என்றவன் நண்பர்களின் உதவியுடன் அவசரமாக சிதாராவை முதலுதவி அளிக்க எடுத்துச் சென்றான்.

சற்று நேரத்தில் கண் விழித்த சிதாரா தான் எங்கிருக்கிறோம் என கண்களால் அலச, 

அவள் கண் விழிக்கும் வரை தனியாக அங்கே காத்திருந்த ஆர்யான் பதட்டமாக, “ஏங்க நீங்க நல்லா இருக்கீங்கல்ல… ” என்க ஆம் என தலையசைத்தாள் சிதாரா.

ஆர்யான், “சாரிங்க.. சீரியஸ்லி உங்கள ஹர்ட் பண்ணனும்னு எதுவும் சொல்லல… ஜஸ்ட் ரேக்கிங் பண்ண தான் பாத்தோம்…” என்க, 

“இட்ஸ் ஓக்கே..” என்றாள் சிதாரா.

“இதுக்கு முன்னாடி உங்களுக்கு இப்படி ஃபிட்ஸ் வந்திருக்கா..” என்க இல்லை என தலையசைத்தாள்.

ஆர்யான், “என்னங்க நீங்க… நானும் ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கேன்… நீங்க தலையை மட்டும் ஆட்டுரீங்க… ஒரு வேளை நீங்க இன்னும் என்ன மன்னிக்கலயா… அகைன் சாரிங்க…” என்றான்.

சிதாரா அவசரமாக, “இல்ல.. இல்லங்க… நீங்க எதுவும் தப்பு பண்ணலயே… ஜஸ்ட் விளையாட்டுக்கு தானே பண்ணீங்க… அதனால சாரி கேக்காதீங்க…” என்க,

மகிழ்ந்த ஆர்யான், “ஹப்பாடா.. ஒரு வழியா பேசிட்டீங்க… நான் கூட உங்களுக்கு பேச வராதோன்னு சந்தேகப்பட்டேன்..” என்க அவனைப் பொய்யாக முறைத்தாள் சிதாரா.

பின், “அப்படியே உங்க பேரையும் சொன்னா நல்லா இருக்கும்… ரொம்ப நேரமா நானும் வாங்க போங்கன்னு பேசி எனக்கே என்னவோ போல இருக்கு..” என்க புன்னகைத்தவள் சிதாரா என்றாள்.

ஆர்யான், “ஓக்கே தாரா.. ஐம் ஆர்யான்… உனக்கு எப்படி வேணாலும் கூப்பிடலாம்… நான் ஃபைனல் யேர் படிக்கிறேன்… உனக்கு சீனியர்… என்ன ஹெல்ப் வேணாலும் என் கிட்ட கேளு…” என்க சிதாராவிடமிருந்து பதில் வராமல் போக அவளைக் கேள்வியாய் நோக்கினான்.

ஆனால் சிதாராவோ அவ்வளவு நேரம் இருந்த புன்னகை மறைந்து கை இரண்டையும் அழுத்த மூடி ஒரு வித பதட்டத்தில் இருந்தாள்.

ஆர்யான் மீண்டும் ‘தாரா’ என அவளை அழைக்க,

“வேணாம்.. அப்படி கூப்டாதீங்க… வேணாம்.. எனக்கு பிடிக்கல…” என கண்களில் இருந்து கண்ணீர் சிந்த கூறினாள்.

“ஓக்கே ஓக்கே… கூல்… நான் இனி அப்படி கூப்பிடல…” என்கவும் அமைதியாகினாள் சிதாரா.

ஆர்யான், “சரி நான் இனி உன்ன அப்படி கூப்பிடல… பட் வன் கன்டிஷன்…” என்க அவனை என்ன என்பது போல் பார்த்தாள்.

ஆர்யான் புன்னகையுடன் அவள் முன் ஒரு கரம் நீட்டி, “ஃப்ரென்ட்ஸ்…” என்கவும் சிதாரா சிறிது தயங்க ஆர்யான் முகம் வாடினான்.

பின் சட்டென அவன் கரத்துடன் தன் கரம் சேர்த்தவள் புன்னகையுடன் பதிலுக்கு, “ஃப்ரென்ட்ஸ்…” என்றாள்.

ஆர்யானுக்கு வந்த சந்தோஷத்தில், “தேங்க்ஸ் மினி… தேங்க்ஸ் அ லாட்… நான் கூட நீ என்ன தப்பா நெனச்சி என் ஃப்ரென்ட்ஷிப்ப எக்சப்ட் பண்ணிக்க மாட்டியோன்னு நெனச்சேன்…” என்க,

அவன் மினி என அழைத்ததும் அவள் அவனைப் புரியாமல் பார்க்க அப்போது தான் அவன் மினி என அழைத்தது நினைவில் வந்தது.

“அது ஒன்னுமில்ல… நீ என்ன விட ரொம்ப குட்டையா இருக்கல்ல.. அதான் செல்லமா மினியன்.. அத கொஞ்சம் ஷார்ட் பண்ணி மினி… ” என ஆர்யான் விளக்கம் அளிக்க,

சிதாரா பட்டென, “ஓக்கே ஜிராஃபி..” என்க ஆர்யான் சிரிக்க அவனுடன் அவளும் இணைந்தாள்.

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.