திருமணம் முடிந்த கையோடு அனைவரும் சிதாராவின் வீட்டுக்கு கிளம்பினர்.
காலையிலிருந்தே திருமணத்திற்காக தயாரானதில் சிதாராவுக்கு சோர்வாக இருக்கவும் தேவியிடம்,
“மா… எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு… நான் கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கிறேன்…” என்க,
தேவி அவசரமாக, “இல்ல சித்து… இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்பி ஆகனும்… உன்ன அங்க கொண்டு போய் விடனுமே…” என்க சிதாராவின் முகம் வாடியது.
யாருக்கு தான் பிறந்த வீட்டைப் பிரியும் சோகம் இல்லாமல் இருக்கும்.
அதுவும் ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் சொந்த வீட்டுக்கே விருந்தாளியாகி விடுவாள்.
சரியாக சங்கரும் ஆர்யானுடன் அவ்விடம் வர,
“என்னாச்சு தேவி… ஏன் சித்து ஃபேஸ் டல்லா இருக்கு…” என சங்கர் கேட்டார்.
தேவி, “ஒன்னுமில்லங்க… டயர்டா இருக்கு தூங்குறேன்னு சொன்னா… நான் தான் மாப்பிள்ளை வீட்டுக்கு போகனும்னு வேண்டாம்னு சொன்னேன்…” என்க,
ஆர்யான், “அதொன்னும் பிரச்சினை இல்ல அத்த… மினி நீ போய் ரெஸ்ட் எடு…” எனக் கூறினான்.
சங்கர், “இல்ல மாப்பிள்ளை… இப்போவே உங்க வீட்டுக்கு கிளம்பினா தான் நேரமா போய் சேர முடியும்… கல்யாணம் முடிஞ்சதும் முதல்ல மாப்பிள்ளை வீட்டுக்கு போறது தான் முறையும் கூட…” என்கவும் ஆர்யான் ரஞ்சித்தை அழைத்தான்.
ரஞ்சித் வர அவரிடம், “டாட்… நான் சொன்ன விஷயம் என்னாச்சு… எல்லாம் ஓக்கேயா…” என ஆர்யான் கேட்க,
“ஆமா ஆரு.. எல்லாம் அரேன்ஜ் பண்ணி இருக்கேன்.. நாம கிளம்பினா சரி..” என்றார் ரஞ்சித்.
தந்தை மற்றும் மகனின் உரையாடலில் சங்கர், தேவி, சிதாரா மூவரும் புரியாமல் குழம்ப,
ஆர்யான் சங்கரிடம், “மாமா… இப்ப என்ன… உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதும் நேரா மாப்பிள்ளை வீட்டுக்கு போகனும்னு தானே யோசிக்கிறீங்க… தாராளமா போலாம்… இங்க கோயம்புத்தூர்லே அப்பா ஒரு வீடு வாங்கி இருக்காரு… அங்க போய் எல்லாம் செய்யலாம்…” என்றான்.
“எப்போ மாப்பிள்ளை வீடெல்லாம் வாங்குனீங்க… அதுவும் இங்க எதுக்காக வாங்கி இருக்கீங்க..” என சங்கர் கேட்டார்.
“இல்ல மாமா… எப்படியும் கல்யாணம் முடிஞ்சா மறுவீடு அது இதுன்னு நிறைய சம்பிரதாயம் இருக்கும்… எனக்கும் மினிக்கும் இப்போதைக்கு அத பத்தி பிரச்சினை இல்லன்னாலும் இருக்குற சின்ன சின்ன சடங்கயாவது செஞ்சா பெரியவங்க உங்களுக்கு திருப்தியா இருக்கும்… என்ன இருந்தாலும் எங்க கல்யாணம் அவசரத்துல நடந்தது உங்க மனசுல ஒரு பெரிய குறையா இருக்கும்… அதான்… சென்னை கோயம்புத்தூர் மாறி மாறி போய்ட்டு இருந்தாலும் கஷ்டமா இருக்கும்… கொஞ்ச நாளுக்கு தானே நாங்க ரெண்டு பேரும் இங்க இருக்க போறோம்… அது வர அந்த வீட்டுலயே தங்கிக்கலாம்னு இருக்கோம்… அம்மாவும் அப்பாவும் எங்க கூடவே இருக்கேன்னு சொன்னாங்க… மினிக்கும் இங்க இருந்தா உங்கள அடிக்கடி பாக்கலாம்…” என்றான்.
ஆர்யான் கூறியதைக் கேட்டு சிதாராவுக்கு சந்தோஷமாக இருந்தது.
அதை அவளது முகமே காட்டிக் கொடுத்தது.
அதன் பின் அனைவரும் ஆர்யான் வாங்கிய வீட்டுக்கு கிளம்பினர்.
சென்னையிலிருக்கும் வீடு போல் இல்லாவிட்டாலும் ஓரளவு பெரிய வீடாகவே வாங்கி இருந்தார்கள்.
சங்கர், தேவி இருவருக்குமே தம் மகள் நல்ல இடத்தில் வாக்கப்பட்டு உள்ளதில் மகிழ்ச்சி.
அகிலா இருவருக்கும் ஆரத்தி எடுத்தவர், “வலது கால எடுத்து வெச்சி உள்ள வாம்மா…” என்க சிதாராவும் அதன் படி செய்தாள்.
பின் சிதாராவை விளக்கேற்றக் கூற அதையும் செய்தாள்.
அவளுக்கு எப்போதுடா இந்த சடங்குகள் முடியும் என்றிருந்தது.
சிறிய சிறிய சடங்குகள் எல்லாம் முடிய சிதாரா இன்னும் களைத்துப் போய் இருந்தாள்.
சிதாராவிடம் வந்த அவளது தோழிகள் இருவரும் சிதாரா ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டு அவள் காதில் பே…. எனக் கத்தினர்.
பதறிய படி தன்னிலைக்கு வந்தவள் இருவரையும் முறைக்க,
அக்ஷரா, “என்னாச்சு சித்து… நானும் நேத்துல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன்.. ஒன்னு ஏதோ பெரிய யோசனைல இருக்க… இல்லன்னா முகத்த சோகமா வெச்சிட்டு இருக்க… ஒருவேளை உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையா…” என்க லாவண்யாவும் அதை ஆமோதித்தாள்.
“ச்சீச்சீ… அப்படில்லாம் எதுவுமில்ல… ஐம் ஓக்கே…” என சிதாரா அவசரமாகக் கூற,
அவளை சந்தேகமாக பார்த்த லாவண்யா,
“இல்ல… கன்ஃபோர்ம் நீ எதையோ எங்க கிட்ட மறைக்குற… சொல்லு சித்து…” என்க சிதாராவின் முகம் பதட்டமடைந்தது.
சிதாரா பதட்டமாக இருப்பதை தூரத்திலிருந்து அவதானித்த ஆர்யான் அவசரமாக அவ்விடம் வந்து அக்ஷரா மற்றும் லாவண்யாவிடம்,
“என்ன சிஸ்டர்ஸ்… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் பொண்டாட்டிய டிஸ்டர்ப் பண்ணுறது போல தெரியுது… புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு பிரைவசி குடுத்துட்டு போங்க அந்த பக்கம்….” எனப் பொய்யாக முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு கூறினான்.
அவனைப் பார்த்து சிரித்த அக்ஷரா, “சாரி ப்ரதர்… உங்க பொண்டாட்டிய நாங்க ஒன்னும் கொத்திட்டு போய்ட மாட்டோம்… பரவாயில்ல… ஏதோ நீங்க சொல்றதுக்காக நாங்க போறாம்…” என ஆர்யானிடம் கூறியவள்,
சிதாராவைப் பார்த்து, “நீங்க நடத்துங்க மேடம்… ” எனக் கூறி கண்ணடித்து விட்டு லாவண்யாவுடன் அங்கிருந்து சென்றாள்.
சிதாரா இன்னும் பதட்டமாக இருக்க,
“மினி… நீயே இப்போ எல்லாரு கிட்டயும் நடந்தத சொல்லிடுவ போல… டென்ஷன் ஆகாம இரு முதல்ல… நான் தான் சொல்றேன்ல… நான் எல்லாம் பாத்துக்குறேன்…” என ஆர்யான் கூற சிதாரா அவனிடம் சரி என தலையாட்டினாள்.
பின் அனைவரும் சொல்லிக் கொண்டு கிளம்ப சிதாராவிடம் வந்த அகிலா,
“நீ மேல ரூம்ல போய் ரெஸ்ட் எடுமா… நான் ஆருவ அனுப்பி வைக்கிறேன்…” என்க,
“சரி அத்த…” என்று விட்டு மேலே இருந்த அறைக்குச் சென்றாள்.
அறையைக் கண்டதும் தான் சிதாராவுக்கு சீராக மூச்சு வந்தது.
அகிலா சடங்கு என்று ஏதாவது ஏற்பாடு செய்திருந்தால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தவள் அறை எந்த அலங்காரமுமின்றி சாதாரணமாக இருக்கவும் நிம்மதியாக இருந்தது.
ஆனால் ஆர்யான் தான் இப்போதைக்கு எதுவும் ஏற்பாடு செய்ய வேண்டாம் எனத் தாயைத் தடுத்திருந்தான்.
வீட்டு முற்றத்தில் கையில் இருந்த மொபைலை வெறித்த வண்ணம் இருந்த ஆர்யானுக்கு முந்தைய நாள் இரவு நடந்தவைகள் நினைவு வந்து அவன் உடல் இறுகியது.
முந்தைய நாள் இரவு
லாவண்யா, அக்ஷரா இருவரும் சிதாராவை நிச்சயத்துக்கு தயார்ப்படுத்தி விட்டு வெளியேற,
அறைக்குள்ளே அடைந்து கிடக்கப் பிடிக்காமல் மொபைலை எடுத்துக் கொண்டு பின் வாயில் வழியாக மண்டபத்திற்கு வெளியே வந்தாள் சிதாரா.
அவளின் கெட்ட நேரம் அனைவரும் நிச்சய வேலைகளில் மூழ்கி இருந்ததால் யாரும் அவள் வெளியே சென்றதைக் கவனிக்கவில்லை.
சிதாரா மண்டபத்துக்கு வெளியே சற்று மறைவான இடத்தில் நின்று காற்று வாங்கிக் கொண்டிருக்க,
திடீரென பின்னாலிருந்து ஒரு கை வந்து முரட்டுத்தனமாக அவள் வாயை அடைத்தது.
அதிர்ந்தவள் கத்தவும் முடியாமல் தன் வாயை மூடியிருந்தவனின் கையை ஒரு கையால் எடுக்கப் பார்க்க,
சிதாராவின் வாயை மூடி இருந்தவனோ இன்னும் அழுத்தமாக அவள் வாயை அடைத்துப் பிடித்து,
“ஒழுங்கு மரியாதையா கத்தி கூச்சல் போடாம என் கூட வந்துடு… இல்லன்னா சங்க அறுத்துறுவேன்…” என மிரட்டினான்.
அவன் யாரென சிதாராவுக்கு அடையாளம் தெரியவில்லை.
முகத்தை மறைத்திருக்க இதற்கு முன் கேட்டிராத குரலாக வேறு இருந்தது.
அவனின் முரட்டுப் பிடி போலவே அவன் குரலும் பயங்கரமாக இருந்தது.
தலையை அங்குமிங்கும் ஆட்டி அவனிடமிருந்து விடுபடப் போராடியவள் கையிலிருந்த மொபைல் ஞாபகம் வரவும் அவனுக்கு தெரியாதவாறு கடைசியாக அழைத்து இருந்த எண்ணுக்கு அழைத்தாள்.
மண்டபத்தினுள் ரஞ்சித்துடன் பேசிக் கொண்டிருந்த ஆர்யான் திடீரென சிதாராவிடமிருந்து அழைப்பு வரவும் யோசனையுடன் சற்று தள்ளி வந்து அழைப்பை ஏற்றான்.
மொபைல் வைப்ரேட் ஆகியதும் அழைப்பு ஏற்கப்பட்டது எனப் புரிந்தவள் அவசரமாக மொபைலைக் கீழே போட்டு விட்டு இரு கையாலும் அந்த முரடனின் கையை விலக்கப் போராடினாள்.
“ம்ம்ம்…. ம்ம்ம்ம்….” என சிதாரா சத்தமெழுப்ப,
அந்த முரடன், “ஹேய்… சத்தம் போட்டா கொன்னுருவேன்… இப்போ ஒழுங்கா என் கூட வரலன்னா உன் கூட சுத்துறானே… அவனையும் சேர்த்து போட்டு தள்ளிருவேன்…” என்க சிதாரா அதிர்ந்தாள்.
அவளுக்கு அழுகையாக வந்தது.
எதுவும் செய்ய முடியவில்லை.
அந்த முரடன் பேசியதைக் கேட்ட ஆர்யான் சிதாராவுக்கு ஏதோ ஆபத்து என விளங்கி மொபைலைக் காதில் வைத்தவாறே வெளியே ஓடி வந்தான்.
மண்டபத்துக்கு வெளியே சுற்றி முற்றிப் பார்க்க எதுவுமே தெரியவில்லை.
அந்த முரடனின் கையை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளிய சிதாரா,
“விடுடா… யாருடா நீ.. பின் வாசல் வழியா வந்து என்ன எங்க கூட்டிட்டு போகப் போற…” என அழைப்பில் இருந்தவருக்கு தான் எங்கிருக்கிறோம் என விளங்கிக் கொள்ளக் கூறினாள்.
சிதாரா தன் கையை விலக்கி விட்டு கத்தத் தொடங்கவும் அவசரமாக தன் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த மயக்க மருந்தடித்த கைக்குட்டையை எடுத்து அவள் மூக்கைப் பொத்தினாள்.
அந்த மயக்க மருந்தின் தாக்கத்தில் சிதாரா மயக்கமடைய,
அவளை எடுத்துச் செல்ல சிதாராவின் வாயையும் கையையும் கட்டிக் கொண்டிருக்கும் போது அவனின் பின் பக்கத்திலிருந்து முதுகில் பட்ட உதையில் சிதாராவை விட்டு தள்ளிச் சென்று விழுந்தான் அந்த முரடன்.
சிதாரா கூறியது விளங்கி ஆர்யான் தான் அங்கு வந்திருந்தான்.
ஆர்யான் அங்கு வரவும் பயந்த முரடன் அவசரமாக அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆர்யான் அவனைத் துரத்திச் சென்றான்.
பாதி தூரம் செல்லும் போதே எப்படியோ அந்த முரடன் தப்பித்து விட,
சிதாராவிடம் மீண்டும் ஓடி வந்தான் ஆர்யான்.
அவள் இன்னும் மயக்கத்திலிருக்க,
“மினி… மினி..” என அவள் கன்னம் தட்டியவன் அருகிலிருந்த டெப்பிலிருந்து தண்ணீர் எடுத்து சிதாராவின் முகத்தில் தெளித்தான்.
சிதாரா கண் முழித்தவள் ஆர்யானைக் கண்டு, “ரயன்….” என அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.
பயத்தில் அழுது அவளுக்கு மூச்சு வாங்க மீண்டும் வலிப்பு வந்திடுமோ எனப் பயந்த ஆர்யான்,
“எதுவும் ஆகல மினி… அழாதே… அழாதே.. கூல்… கூல்… நான் தான் உன் கூட இருக்கேனே… உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்… காம் டவுன்…” என அவளை சமாதானம் செய்ய சற்று ஆசுவாசமடைந்தாள் சிதாரா.
சிதாரா, “யாரு ரயன் அது… எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. எதுக்காக என்ன கடத்த முயற்சி பண்ணான்..” என பயந்து நடுங்கியவாறு கேட்க,
“அதான் நான் வந்துட்டேனே மினி… நீ பயப்படாதே… முதல்ல கண்ண தொடச்சிக்கோ… யாராவது பாத்துட போறாங்க… வா நாம உள்ள போலாம்… யாரு கிட்டயும் இத பத்தி சொல்லாதே… பயந்துடுவாங்க… உனக்கு எதுவுமில்ல… அமைதியா இரு…” என பல சமாதானம் கூறி சிதாராவை உள்ளே அழைத்துச் சென்றான்.
ஆர்யான் கூறியதால் சிதாரா இது பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை.
ஆனால் அவள் மனதில் பயமும் குழப்பமும் இருந்து கொண்டே இருந்தது.
அது பற்றி யோசித்துக் கொண்டிருந்த ஆர்யான் டூர் சென்று வந்த அன்று இரவு பூஞ்சோலைக் கிராமத்தில் வைத்து பிரணவ் தன்னிடம் கூறியதை எண்ணிப் பார்த்தான்.
இரவு டூர் சென்று வந்த களைப்பில் அனைவரும் தூங்கி இருக்க அகிலாவுடன் பேசுவதற்காக தோட்டத்தில் இருந்தான் ஆர்யான்.
தாயுடன் பேசி விட்டு வீட்டினுள் செல்லத் திரும்ப அங்கு பிரணவ் நின்று கொண்டிருந்தான்.
ஆர்யான் அவனைக் கேள்வியாகப் பார்க்க,
“உனக்கும் தாராவுக்கும் இடைல என்ன இருக்கு…” எனத் திடீரென பிரணவ் கேட்டான்.
அவனைப் பார்த்து சிரித்த ஆர்யான்,
“எங்க ரெண்டு பேருக்கும் இடைல என்ன இருந்தாலும் அது உனக்கு தேவையில்லாதது…” என்றான்.
பிரணவ், “தேவை இருக்கு… நான் தாராவ காதலிக்கிறேன்… அவளும் என்ன தான் காதலிக்கிறா…” என்க சத்தமாக சிரித்தான் ஆர்யான்.
“யாரு நீ அவள லவ் பண்ற… போடா… ஏதாவது அசிங்கமா சொல்லிடப் போறேன்… ” என ஆர்யான் கூறவும் பிரணவ்விற்கு கோவம் வந்தது.
பிரணவ், “இங்க பாரு… எனக்கும் தாராவுக்கும் நடந்த சின்ன பிரச்சினைல நாங்க பிரிஞ்சிருக்கோம்.. அவ்ளோ தான்… ஆனா அவ மனசுல நான் மட்டும் தான் இருக்கேன்… வீணா எங்க ரெண்டு பேருக்கும் இடைல வர ட்ரை பண்ணாதே…” என்க,
பிரணவ்வின் சட்டையைப் பிடித்த ஆர்யான், “ச்சீ… திரும்ப திரும்ப உன் வாயால நீ பண்ணின அந்த கருமத்த காதல்னு சொல்லாதே… அது காதலுக்கே அசிங்கம்… உன்னால ஆல்ரெடி மினி ரொம்ப கஷ்டப்பட்டுட்டா… இதுக்கு மேல ஏதாவது பண்ணி அவள நெருங்க ட்ரை பண்ண… என்னோட இன்னொரு முகத்த பார்க்க வேண்டி வரும்…” என மிரட்டினான்.
தன் சட்டையிலிருந்து ஆர்யானின் கையை எடுத்து விட்ட பிரணவ் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டு,
“உன்னால முடிஞ்சத பாத்துக்கோ… சும்மா மினி மணின்னு அவ பின்னாடி சுத்திட்டு இருக்காம வேற வேலை இருந்தா பாரு… நீ என்ன பண்ணாலும் சரி… தாரா எனக்கு தான்… நான் அவளை அடஞ்சே தீருவேன்…” என்று விட்டு அங்கிருந்து சென்றான்.
பிரணவ்வால் மீண்டும் சிதாராவுக்கு ஏதாவது பிரச்சினை வரும் என்று தான் சங்கரிடம் கூறி திருமண ஏற்பாட்டை செய்தான்.
அன்று தன்னிடம் சவால் விட்டுச் சென்ற பின் பிரணவ்விடமிருந்து எந்த ஒரு பிரச்சினையும் வராததால் தான் திருமணத்தைத் தள்ளிப் போட்டு விட்டு நிச்சயத்தை மட்டும் முடிக்கலாம் எனக் கூறினான்.
ஆனால் நேற்று ஒருவன் சிதாராவைக் கடத்த முயன்றதும் அவளுக்கு ஏதாவது ஆபத்து வரும் எனப் பயந்து இன்றே திருமணத்தை நடத்த வைத்தான்.
நிச்சயம் பிரணவ் தான் இந்த காரியத்தை செய்தான் என்றே ஆர்யான் நினைத்தான்.
ஆனால் இது பற்றி சிதாராவிடம் கூறினால் எங்கே அவள் மீண்டும் பயப்படுவாள் என்று தான் அவளிடம் மறைத்தான்.
ஆனால் வந்தவன் இதற்கு முன் பரிச்சயம் இல்லாத ஒருவனாக இருப்பது தான் ஆர்யானுக்கு சற்று குழப்பத்தைத் தந்தது.
கூடிய சீக்கிரம் வந்தவன் யார் எனக் கண்டு பிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டவன் வீட்டினுள் சென்றான்.
நேராக சிதாரா இருந்த அறைக்குள் நுழைய,
அவளோ கட்டிலில் கால்களை மடித்து அமர்ந்து அதனுள் முகம் புதைத்து படுத்திருந்தாள்.
அவள் அருகில் சென்ற ஆர்யான் அவள் தோள் தொட,
சிதாரா பதறி எழுந்தாள்.
“ஹேய்.. ரிலாக்ஸ் மினி… நான் தான்…” என ஆர்யான் கூறவும் தான் சிதாராவுக்கு சீராக மூச்சு வந்தது.
சிதாரா, “நைட் வந்தது யாருன்னு கண்டு பிடிச்சியா ஜிராஃபி… எனக்கு பயமா இருக்கு… அவன் திரும்பவும் வந்தா என்ன பண்றது…” எனக் கேட்க,
“இன்னும் இல்ல மினி… கூடிய சீக்கிரம் அவன் யாருன்னு நான் கண்டு பிடிச்சிடுவேன்… அதான் நான் கூட இருக்கேன்ல… உனக்கு எதுவும் ஆகாது… நீ டயர்டா இருப்ப… தூங்கு…” என்றான் ஆர்யான்.
“நீ தூங்கலயா ஜிராஃபி…” என சிதாரா கேட்க,
ஆர்யான், “நீ இந்த ரூம்ல தூங்கு மினி… நான் அடுத்த ரூம்ல தூங்குறேன்… உனக்கு ஏதாவது தேவைப்பட்டா என்ன கூப்பிடு…” என்க,
சிதாரா சரி என அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
❤️❤️❤️❤️❤️
– Nuha Maryam –
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.