Loading

காதல் 7

 

 

“சஞ்சு, இப்போ மழை நின்னுடுடுச்சுன்னு நினைக்கிறேன். சோ, நான் கிளம்பு…” என்று கூறியபடியே வந்தவள், அங்கு சஞ்சீவுடன் நின்றிருந்தவனை கண்டு அதிர்ந்தாள்.

சஞ்சய்யோ ஏதோ ஒரு பெண்ணின் குரல் கேட்க, புகைப்படத்தில் பார்த்த பெண்ணோ என்று அவளைக் கண்டவனும் அதிர்ந்து தான் போனான். ஆனால், இருவரின் அதிர்ச்சிக்கும் வித்தியாசம் இருந்தது.

ரஞ்சு, புதிதாக ஒருவனைக் கண்ட முதல் நொடியில் தோன்றும் அதிர்ச்சியில் இருந்தாள் என்றால், சஞ்சயின் அதிர்ச்சியிலோ துரோகமும் ஏமாற்றமும் கலந்திருந்தது.

இருவரும் அதிர்ந்தது ஒரு நொடியே, அடுத்த நொடி சஞ்சய் சஞ்சீவை முறைத்தான். ரஞ்சுவிற்கோ, அதிர்ச்சி போய் குழப்பம் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது, சஞ்சயின் பார்வையைக் கண்டு.

சஞ்சயின் பார்வையில் என்ன இருந்தது? வலி, ஏமாற்றம், துரோகம், கவலை… எல்லா உணர்ச்சிகளையும் அல்லவா அது பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

ரஞ்சு சஞ்சயை ஆராய்ச்சி பார்வை பார்க்க, சட்டென்று அவன் அவளைப் பார்த்தான். இப்போது அவனின் பார்வையில் கலப்படமே இல்லாத குற்றச்சாட்டு தெரிந்தது.

‘எதுக்கு இவன் இப்படி பார்க்குறான்?’ என்று யோசிக்கும் போதே, சூழ்நிலையை சற்று மாற்ற வேண்டி, “ரஞ்சு, இது என் அண்ணா, சஞ்சய்… சஞ்சய் பிரசாத். கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸோட சி.இ.ஓ, தி கிரேட் எஸ்.ஜே.” என்று சஞ்சீவ் அவனை அறிமுகப்படுத்தினான். அவனின் குரலில் தெரிந்த கேலியை ரஞ்சு புரிந்து கொள்ளவில்லை என்றாலும் சஞ்சய் நன்கு உணர்ந்து கொண்டான்.

சற்று முன் அவனை கிண்டல் செய்த போது கூட பொறுத்துக் கொண்டவன், இப்போது அவளின் முன்னே அவனை கேலி செய்ய, கைகளை மடக்கி கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான்.

ரஞ்சுவோ, சஞ்சீவ் இவ்வளவு பணக்கார வீட்டின் வாரிசா என்று வியந்தாள். அவளிற்கும் கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸ் பற்றி தெரியும். உலகளாவிய வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் வீட்டின் பிள்ளைகளா இவர்கள்! எத்தனையோ வி.வி.ஐ.பிக்கள் காத்திருந்து பார்ப்பவர்களா என்று ஆச்சரியத்தில் மூழ்கியவளை சுயத்திற்கு அழைத்து வந்தது சஞ்சயின் முகபாவனை.

ஏனோ, அவனிற்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பதை நன்குணர்ந்து கொண்டாள் ரஞ்சு. அதே போல், அண்ணன் – தம்பிக்கு இடையே ஏதோ உட்கட்சி பூசல் உள்ளது என்பதையும் அவர்களின் முகமே தெளிவாகக் காட்டிக் கொடுத்தது.

இனிமேலும், அங்கு இருக்க அவள் என்ன லூசா?

“சஞ்சு..” என்று ஆரம்பித்தவள், சஞ்சயின் முகபாவனையில், “சஞ்சீவ், நேரமாகிடுச்சு. நான் கிளம்புறேன்.” என்று மாற்றிக் கூற, சஞ்சீவிற்கும் அவள் இங்கிருந்து செல்வதே நலம் என்று தோன்ற, அமைதியாக தலையசைத்தான்.

சஞ்சீவின் தலையசைப்பிற்கு தலையசைப்பின் மூலமே, மறுமொழி கூறியவள், சஞ்சயிடம் திரும்பினாள். ‘ஒரு கர்டஸிக்காக சொல்லிட்டு போயிடுவோம்.’ என்று நினைத்துக் கொண்டு அவனைப் பார்க்க, அவனோ கண்களிலேயே அனலைக் கக்கினான்.

அதைக் கண்டு பயந்தவள், அவனை திரும்பிக் கூட பார்க்காமல், வெளியே சென்று விட்டாள்.

வெளியே வந்ததும் தான் அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டவள், “ச்சே, என்ன இப்படி பார்க்குறான்? எதுக்கு இவ்ளோ கோபம்? இவ்ளோ வெறுப்பு? ப்பா சாமி, என்ன கண்ணு அது? அப்படியே உள்ள இழுக்கும் போல! இன்னொரு தடவை அவன் கண்ணு முன்னாடி போகவே கூடாது.” என்று புலம்பிக் கொண்டே, சஞ்சீவின் வேலையாள் கொடுத்த வண்டி சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.

அவளின் எதிரில் வந்த மனிதன், தான் தனியாக பேசிக் கொண்டு செல்வதை வித்தியாசமாக பார்ப்பதைக் கூட கண்டுகொள்ளவில்லை ரஞ்சு. அந்த அளவிற்கு, அவனின் ஒற்றைப் பார்வை அவளை பாதித்து தான் இருந்தது.

அந்த எதிரில் வந்த மனிதன், வேறு யாருமில்லை கோகுல் தான். சஞ்சயும் கோகுலும், சஞ்சீவ் இருக்குமிடம் தெரிந்த மறுநொடியே கிளம்பியிருந்தனர்.

வீட்டிற்கு வந்ததும், கோகுலிற்கு அவனின் வீட்டிலிருந்து அழைப்பு வர, அவன் சஞ்சயை உள்ளே செல்லுமாறு கூறிவிட்டு, அங்கிருந்த தோட்டத்தில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

பேசி முடித்தவன், வீட்டிற்குள் செல்ல முற்படும்போது, அவனைக் கடந்து சென்றவளைக் கண்டான். தனக்குள்ளேயே பேசிக் கொண்டு கடந்து சென்றவளை புருவம் சுருங்கப் பார்த்தவன், ‘லூசா இவ!’ என்று குழம்பியபடியே உள்ளே சென்றான்.

****

ரஞ்சு சென்ற பிறகு, சஞ்சய் சஞ்சீவிடம், “என்ன நடக்குது இங்க சஞ்சு? இதுக்கு தான் யாருக்கும் தெரியாம இங்க இருக்கியா?” என்று கோபமாக வினவ, சஞ்சீவோ ஒரு பெருமூச்சுடன், “என் லைஃப் எப்படி இருக்கணும்னு நான் தான் டிசைட் பண்ணுவேன் மிஸ்டர். சஞ்சய். இந்த வீட்டுல உங்களுக்கும் உரிமை இருக்கு. சோ, இங்க நீங்க என்ன வேணும்னாலும் பண்ணலாம். ஆனா, என் லைஃப்ல குறுக்க வந்தா, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்று உறுதியாகக் கூறினான்.

அவனின் கூற்றைக் கேட்ட சஞ்சய்க்கு மனது உடைந்து தான் போனது. அவனின் தவறுக்காக எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டாகிற்று!

இனி என்ன செய்வது என்று அவனிற்கும் புரியவில்லை. வியாபாரத்தில் எத்தனையோ அசாத்திய பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் சட்டென்று யோசிப்பவனிற்கு, குடும்ப சிக்கல்களை அவிழ்ப்பதற்கான தீர்வுகளை கண்டறிய முடியவில்லை. இதில் சரியான பயிற்சி இல்லாதது தான் காரணமோ!

இவர்களின் காரசார உரையாடலை நிறுத்துவதற்காகவே கோகுல் உள்ளே நுழைந்தான்.

வந்ததும் வராததுமாக, நேரே சென்று சஞ்சீவை அணைத்தவன், “டேய் மச்சான், நீ பாட்டுக்கு என்னை உங்க அண்ணன் கூட கோர்த்து விட்டுட்டு போயிட்ட. ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காரு டா அந்த மனுஷன்.” என்று அவனின் காதுக்குள் முணுமுணுத்தான்.

இவ்வளவு நேரமிருந்த கடின பாவம் மாற, சஞ்சீவின் முகத்தினை கண்டே, கோகுல் தன்னைப் பற்றி தான் கூறியிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட சஞ்சய்க்கும் லேசாக சிரிப்பு வந்தது.

கோகுலை சீண்டிப் பார்க்க எண்ணியவன், “ஹலோ பி.ஏ.” என்று விளிக்க, கோகுலோ சஞ்சீவிடமிருந்து பிரிந்து, “எஸ் பாஸ்…” என்று அட்டென்ஷனில் நின்றான்.

அவனைக் கண்ட சகோதரர்கள் இருவருக்குமே சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டனர்.

“இங்க நான் நிக்குறேன், வந்ததும் ஓடிப் போன உன் பிரெண்டு கிட்ட போற.” என்று சஞ்சய் கூற, “அதான, டேய் சஞ்சு, எதுக்கு டா சொல்லாம கொள்ளாம ஓடிப் போற? அதுவும் என்னை விட்டுட்டு! நெக்ஸ்ட் டைம் அப்படி போறதா இருந்தா என்னையும் கூட்டிட்டு போயிடு டா. முடியல!” என்று கோபத்தில் ஆரம்பித்தவன் கெஞ்சலில் முடிக்க, இம்முறை சிரிப்பை அடக்க முடியாமல் இருவருமே சத்தமாக சிரித்தனர்.

இருவரின் சிரிப்பையும் கண்ட கோகுல், ‘இனிமேலாவது ரெண்டு பேரும் எந்த கஷ்டமும் இல்லாம சிரிச்சுட்டே இருக்கணும்.’ என்று வேண்டினான், கடவுள் அவனின் வேண்டுதலை தள்ளிப் போடப் போவதை அறியாமல்!

நண்பர்கள் இருவருக்கும் பேச வேண்டியவை இருக்கும் என்று உணர்ந்த சஞ்சய், அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டி கோகுலிடம், “நான் ரெஸ்ட் எடுக்க போறேன் கோகுல். ஈவினிங் வரைக்கும் என்னை டிஸ்டர்ப் பண்ணாத.” என்று மாடிக்கு சென்றான்.

சஞ்சய் செல்லும் வரை காத்திருந்த கோகுல் சஞ்சீவிடம், “இப்போ சொல்லுங்க சார், மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? இந்த உலகத்துல உனக்கு ஒண்ணுன்னா கவலைப்பட யாருமே இல்லன்னா. ஹான், உனக்கு என் நினைப்பு, எங்க அம்மா அப்பா நினைப்பு வரலைன்னா கூட பரவால, அது எப்படி உனக்கு ஒண்ணுன்னா துடிக்கிற உன் ஜெய் நினைப்பு கூடவா வரல?” என்று கோபத்தில் பேசினான்.

சஞ்சீவ் ஏதோ சொல்ல வர, அவனை தடுத்த கோகுல், “நீ என்ன சொல்லப் போறன்னு எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் எத்தனை நாளைக்கு பழசயே நினைச்சு அவரை ஒதுக்கி வைப்ப? அவரு சிரிச்சு எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா?” என்றவன் சஞ்சீவின் தோளில் ஆறுதலாக கைவைத்து, “இங்க நீயும் எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பன்னு எனக்கு நல்லா தெரியும் சஞ்சு.” என்றான்.

கோகுல் கூறுவது உண்மை என்பதால் அதை மறுத்துக் கூறாமல் அமைதியாக நின்றான் சஞ்சீவ். தன்னுடைய பயணப் பொதிகளை எடுக்க வந்த சஞ்சயின் காதிலும் கோகுலின் பேச்சு விழ, அவன் தங்கள் இருவரின் மேல் கொண்ட பாசத்தை உணர்ந்தவன் மனதிற்குள், ‘பார்த்தீங்களா… எங்களுக்கும் பாசத்தைக் காட்ட இந்த உலகத்துல ஆள் இருக்காங்க!’ என்று கூறிக் கொண்டான்.

அவன் யாருடன் மனதில் உரையாடினானோ அந்த நபருக்கு அது சென்றடைந்தது போல, அவரின் மனமே அவரைக் குற்றவாளியாக்கி, அவரை வேதனையில் வாட்டியது.

சஞ்சீவ் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருப்பதைக் கண்ட சஞ்சய் அவனிற்கு சிறிது காலவகாசம் வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு, “க்கும், கோகுல். இந்த ஒரு மாசம் இங்க தான் இருக்க போறோம். இந்த ஒரு மாசம் நான் அவைலபிலா இருக்க மாட்டேன்னு எல்லா ஹெட்ஸுக்கும் தகவல் சொல்லிடு. அண்ட் நீயும் போய் ரெஸ்ட் எடு.” என்ற அழுத்தமாக.

அவன் கூறியதிலிருந்தே, இப்போது சஞ்சீவிடம் எதுவும் கேட்க வேண்டாம். இன்னும் ஒரு மாதம் இருப்பதால், மெதுவாக கேட்டுக் கொள்ளலாம் என்பதை உணர்ந்த கோகுலும், “ஓகே பாஸ்.” என்றான் விசுவாசமான பி.ஏவாக!

சஞ்சயின் கூற்றைக் கேட்ட சஞ்சீவிற்கும் சற்று ஆறுதலாக தான் இருந்தது. இத்தனை நாட்கள் யாருக்கும் தெரியாமல் இங்கிருப்பதே சிறிது குற்றவுணர்வாக இருந்தது. அதன் காரணமாகவே மனம் எப்போதும் பாரமாக இருக்கும். இப்போது அந்த பாரம் கரைந்து விட்டதைப் போல மனம் லேசாக இருந்தது. இதற்கு காரணம் சஞ்சய் மற்றும் கோகுல் என்றால் அது மிகையாகாது.

“ஹே கோகுல், நீ என்னை பார்க்க வந்தியா, இல்ல உன் பாஸ் கூட பி.ஏவா இங்க வந்தியா?” என்று சஞ்சீவ் வேண்டுமென்றே சஞ்சயின் முன் வினவ, ‘அடப்பாவி! என்னை எதுக்கு டா கோர்த்து விடுற?’ என்று கோகுல் தான் முழிக்க வேண்டியதாயிருந்தது.

சஞ்சயின் இதழும் லேசாக சிரிப்பில் வளைய, கோகுல் என்ன சொல்லப் போகிறான் என்பதைப் போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஐயோ! இவரு வேற பார்க்குறாரே.’ என்று மனதிற்குள் புலம்பியவன், “அது வந்து…. இப்போ என்ன சொல்றது… ஹான் டூ இன் ஒன் டா.” என்று இளித்தான்.

சஞ்சீவ் மீண்டும் ஏதோ கேட்க வர, “போதும் நீ என்னை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது போதும். இப்போ என் ரூம்மை காமி.” என்று கையோடு இழுத்துச் சென்றான்.

*****

ரஞ்சு, எப்படி வண்டியை ஓட்டிக் கொண்டு விடுதியை அடைந்தாள் என்பது அவளிற்கே ஆச்சரியமாக தான் இருந்தது. ஏனெனில், அவளின் சிந்தனை முழுவதும் அவனின் பார்வையில் தானே இருந்தது.

அவன் பார்வையிலிருந்த வெறுப்பிற்கான காரணத்தை அலசிக் கொண்டிருந்தவள், இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தாள்.

‘நான் அவங்க தம்பி கூட பழகுறது பிடிக்கலையோ? இருக்கலாம்… ஹை கிளாஸ்ல இருக்குறவங்களே இப்படி தான்! இனிமே சஞ்சய் கூட அளவா பழகணும்.’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள், நாளையே அதை உடைத்தெறியப் போவதை அறியாமல்…

தங்களின் அறைக்கு வந்தவள், சஞ்சுவின் அருகில் சென்று தொட்டுப் பார்க்க, காய்ச்சல் வெகுவாக குறைந்திருந்தது.

தர்ஷு ரஞ்சுவிடம் அலைபேசியில் கூறியிருந்ததை மறுபடியும் கூறி, “உன் மொபைலுக்கு என்னாச்சு? திரும்ப கால் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வந்துச்சு.” என்று வினவினாள்.

“சார்ஜ் இல்ல தர்ஷு. அதான் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு.” என்றவள், தான் வாங்கி வந்த இட்லியை தர்ஷுவிடம் கொடுக்க, இருவரும் அதை உண்டனர்.

ரஞ்சு இட்லி வாங்கிய கடையில் தான் மழைக்கு ஒதுங்கியிருப்பாள் என்று நினைத்து தர்ஷு அவளிடம் எதுவும் கேட்கவில்லை. குழப்பத்திலிருந்த ரஞ்சுவும் அவளிடம் எதுவும் கூறவில்லை.

*****

அடுத்த நாள் காலை… ரஞ்சுவிற்கு சீக்கிரமே விழிப்பு ஏற்பட எழுந்து விட்டாள். ஒருமுறை சஞ்சுவை சோதித்துப் பார்த்தவள், அவளிற்கு காய்ச்சல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

முதல் நாள் சஞ்சுவை பார்த்துக் கொண்டிருந்ததால், தர்ஷுவும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்ப மனமில்லாத ரஞ்சு, அவள் மட்டுமே நடைப்பயிற்சிக்கு தயாரானாள்.

மனம் மீண்டும் மீண்டும் அவனை நினைக்க, ‘ச்சே, என்னது இது? இப்போ எதுக்கு அவனைப் பத்தியே யோசிச்சுட்டு இருக்கேன்? அவனும் அவன் பார்வையும்! இனி அவனை பத்தி யோசிக்கவே போறதில்ல.’ என்ற முடிவுடன் அந்த பூங்காவிற்குள் நுழைந்தாள்.

சுத்தமான காற்றை சுவாசித்தப்படியே ஓடிக் கொண்டிருந்தவள், பாதையோரமாக இருந்த கல் மேஜையில் சஞ்சீவ் அமர்ந்திருப்பதைக் கண்டவளின் கால்கள் அவளின் அனுமதியின்றியே அவனிடம் அழைத்துச் சென்றன.

சஞ்சீவ், தலையில் கைவைத்து அமர்ந்திருப்பதைக் கண்டவள் ஒரு நொடி தயங்கி பின், “சஞ்சு…” என்று அழைத்தாள்.

அவளைக் கண்டதும் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டவன், “ஹாய் ரஞ்சு.” என்றான்.

அவனருகே அமர்ந்தவள், “என்னாச்சு? ஏதாவது பிராப்ளமா? என்கிட்ட ஷேர் பண்ணலாம்னா சொல்லுங்க.” என்றாள் ரஞ்சு.

“உன்கிட்ட ஷேர் பண்ண முடியாததெல்லாம் இல்ல ரஞ்சு. ஜஸ்ட் பழைய நினைவுகள்… அது கொடுத்த வலிகள்! அதான் இப்படி. கொஞ்ச நேரத்துல நார்மல் ஆகிடுவேன்.” என்றான்.

“உங்க ஃபேமிலி பத்தி நான் கேட்டுக்கவே இல்ல. இவ்ளோ நாள் நீங்க மட்டும் தான் இங்க இருந்தீங்களா? அவங்க எங்க இருக்காங்க?” என்று அவன் தான் குடும்பத்தைப் பற்றிய பேச்சை எடுக்கவில்லை என்பதை மறந்தவளாக வினவினாள்.

சஞ்சீவும் அன்று அவளிடம் பகிர்ந்துவிடும் எண்ணத்தில் இருந்தானோ, அவனின் குடும்பத்தைப் பற்றி கூற ஆரம்பித்தான்.

“எங்க ஃபேமிலி இருந்தது ஆஸ்திரேலியால. எங்க தாத்தா காலத்துல அங்க போய் செட்டிலாகிட்டோம். நான் அங்க தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே. கே.பி குரூப்ஸ்… எங்க தாத்தா கிருஷ்ண பிரசாத் காலத்துல ஆரம்பிச்சு, எங்க அப்பா சத்ய பிரசாத், அதை பெருசா டெவலப் பண்ணாரு. ஹ்ம்ம், எங்க அப்பாவை பத்தி என்ன சொல்ல? ஹி இஸ் எ மான்ஸ்டர்!” என்றான் வேதனை நிறைந்த குரலில்…

அவன் கூறிய விதத்தைக் கேட்டவளிற்கு சிறிது பதட்டமாக இருந்தது. தந்தையையே ‘மான்ஸ்டர்’ என்று கூறும் அளவிற்கு அப்படி என்ன ஆகியிருக்கும் என்று யோசித்தாள். அவளின் சிந்தனையைக் கலைப்பது போல பேச ஆரம்பித்தான் சஞ்சீவ்.

“ஹி இஸ் எ குட் பிசினஸ்மேன். ஆனா, கண்டிப்பா நல்ல கணவனோ, நல்ல அப்பாவோ இல்ல! நாங்க பிறந்ததே அவருக்கு அப்பறம் அவரோட பிசினஸ் பார்த்துக்கணும்னு தான்னு அடிக்கடி அவரே சொல்லுவாரு. எங்க படிப்பை பத்தியோ, வளர்ச்சியை பத்தியோ அவருக்கு அக்கரையே இல்ல. ஆனா, நாங்க யாரு கூட பழகுறோம்னு செக் பண்ணிப்பாரு. ஏன்னா, அது அவரோட ஸ்டேட்டஸை பாதிக்குமாம்! இதுவரைக்கும் எனக்கு ஒரே ஒரு பிரென்ட் தான் தெரியுமா. ஜெய்க்கு அது கூட இல்ல. நாங்க ரெண்டு பேரும் பொண்ணா பிறந்துருந்தா, எங்களை பார்த்துருக்க கூட மாட்டாருன்னு இப்போ ஃபீல் பண்றேன்.” என்று கூறினான் சஞ்சீவ். அவனின் குரலிலிருந்தே தந்தை மீதான அப்பட்டமான வெறுப்பு தெரிந்தது.

“எங்க அம்மா… வாயில்லா ஜீவன்! நாங்க ஏதாவது தப்பு பண்ணா கூட அவங்களை தான் அடிப்பாரு அப்பா. இவ்ளோ ஏன்? சாப்பாடு நல்லா இல்லைனா கூட அவங்க தான் அடி வாங்குவாங்க. இத்தனைக்கும் சமைச்சது செர்வன்ட்ஸா இருப்பாங்க. இவரு தொல்லை தாங்க முடியாம தான் எங்களை விட்டுட்டு போயிட்டங்களோ!” என்றவனின் கண்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்த்தது.

“அண்ட் ஃபைனலி என்னோட ஜெய்… எவ்ளோ நாளாச்சு தெரியுமா, என்னோட ஜெய்னு சொல்லி. என் ஃபேமிலில எனக்கு ரொம்ப க்ளோஸ் அவன் தான். அவனுக்கு அப்பறம் தான் அம்மா கூட! எனக்கும் அவனுக்கும் மூணு வருஷம் டிஃப்பரன்ஸ். சோ, அண்ணான்னு எல்லாம் கூப்பிட மாட்டேன். இவ்ளோ க்ளோஸா இருந்த நாங்க பிரிஞ்சதும் எங்க அப்பாவால தான். ஒரு தடவை, அவரு ஏதோ கோபமா சொல்லிட்டாருன்னு ஹாஸ்டல்ல போய் படிக்க போயிட்டான். அப்போ கூட சண்டை போட்டேன், என்னை விட்டுட்டு போயிட்டியேன்னு. அப்பறம் தான் அம்மா கூட க்ளோஸானது. அதுவும் ரொம்ப நாள் நிலைக்கல. அம்மா ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்கன்னு நியூஸ் வந்துச்சு. பாடியை கூட பார்க்க விடல. அப்போ தான் ரொம்ப தனிமையை ஃபீல் பண்ணேன். ஐ மிஸ்ட் ஜெய் எ லாட்! ஆனா, அவனுக்கு அப்படி இல்ல போல. அவன் கரியர் தான் முக்கியம்னு வீட்டுக்கே வரல.” என்று விரக்தியுடன் சஞ்சீவ் கூற, அதைக் கேட்டுக் கொண்டிருந்த இரண்டு ஜோடி விழிகளிலும் அவன் வேதனையை எண்ணி கண்ணீர் சுரந்தது.

“அதுக்கு அப்பறம் எனக்கும் என் அப்பாவுக்கும் ஒத்துப் போகல. முக்கியமா என் படிப்பு விஷயத்துல. நான் கேட்டரிங் ஜாயின் பண்ண போறது அவருக்கு பிடிக்கல. நானும் ஜெய் மாதிரியே சண்டை போட்டு வெளிய படிக்க போயிட்டேன். ஒரு நாள் அப்பா இறந்துட்டாருன்னு போன் வந்துச்சு. நானும் ஜெய்யும் ஜஸ்ட் ரிலேடிவ்ஸ் மாதிரி தான் அதுல கலந்துகிட்டோம். ஹ்ம்ம், அப்பறம் என்ன, ஜெய் அப்பா விட்டுட்டு போன பிசினஸை கவனிக்க நாள் முழுக்க ஓடுனான். அப்பயாவது என்கூட பேசுவான்னு நினைச்சேன். பேசுனான் தான். ஆனா, பழைய மாதிரி இல்ல. எனக்கு எல்லாத்தையும் இழந்த ஃபீல். அதான் ஒரு சேஞ்சுக்கு இங்க வந்தேன்.” என்று கூறி முடித்தான்.

ரஞ்சுவிற்கு தான், கலகலப்பாக இருப்பவனிற்கு பின்னால், இவ்வளவு ஏமாற்றங்களா என்று மனம் கனத்து போனது. சஞ்சய் மீது கோபமாக வந்தது.

‘இவ்ளோ தூரம் அன்புக்காக தேடியிருக்கான். அதை கூட கொடுக்க முடியாம அப்படி என்ன வேலை அந்த சிடுமூஞ்சிக்கு?’ என்று நொடித்துக் கொண்டாள் மனதிற்குள்.

அவளின் எண்ணங்கள் அவனை அடைந்ததோ, “ஹாய்..” என்றவாறே அந்த மேஜையில் அவளருகே அமர்ந்தான் சஞ்சய்.

சட்டென்று அவனைக் கண்டவளிற்கு தூக்கிவாரிப் போட, அதிர்ந்து அவனை விட்டு நகர்ந்தவளைக் கண்ட சஞ்சய், கேலியாக புருவத்தை தூக்கினான்.

இப்போது சற்று சமன்பட்ட மனதுடன் இருந்ததால், அவனை முறைத்தாள். சாதாரணமாக இருந்திருந்தால், இந்த முறைப்பு சாத்தியமா என்பது சந்தேகம் தான். ஆனால், சஞ்சீவின் கதையைக் கேட்டதால் உருவான கோபத்தின் காரணமாக, அவனின் நேற்றைய பார்வையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டதால், அந்த முறைப்பு சாத்தியமானது.

சஞ்சீவ் அவனை புருவம் சுருங்க பார்த்தானே தவிர, வேறெதுவும் சொல்லவில்லை. அங்கு நிலவிய அமைதியைக் கலைத்தவனாக, “ஹாய், ஐ’ம் சஞ்சய்.” என்று ரஞ்சுவின் முன் கை நீட்டினான்.

அவனைப் புரியாத பார்வை பார்த்த ரஞ்சு தயக்கத்துடன், “ஐ’ம் ரஞ்சனா.” என்றாள்.

அவனிடம் கைகுலுக்கி விட்டாலும், ரஞ்சுவின் சிந்தனை நின்றபாடில்லை.

‘நேத்து முறைச்சான்! இன்னைக்கு சிரிக்கிறான்!’ என்று ரஞ்சு யோசிக்க, அதே யோசனையில் தான் சஞ்சீவும் இருந்தான்.

இருவரின் யோசனை சுமந்த முகத்தைக் கண்டு புன்னகைத்துக் கொண்ட சஞ்சய், மனதிற்குள் தான் வகுத்த திட்டங்கள் சரியான பாதையில் தான் செல்வதாக எண்ணிக் கொண்டான்.

அண்ணன் தம்பிக்கு இடையில் ரஞ்சு குழப்பத்துடன் அமர்ந்திருக்க, அவர்களை சத்தமில்லாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டது அந்த உருவம்.

 

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
11
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்