Loading

 

 

 

ஈர்ப்பு 13

 

ஷீலா வீட்டை விட்டு சென்று ஒரு வாரம் கழிந்திருந்தது. இந்த ஒரு வாரத்தில் நான் எங்கும் வெளியே செல்லவில்லை. அப்படியே தப்பித் தவறி சென்றாலும் சுற்றத்தாரின் பார்வை என்னை துளைத்தெடுத்தது.

 

‘இவங்க ஏன் என்னை இப்படி பார்க்குறாங்க? என்னமோ நான் தான் ஓடிப் போன மாதிரி!’ என்று அலுத்துக் கொண்டேன்.

 

என்னைப் பார்த்ததும் அவர்களுக்குள்ளேயே கிசுகிசுத்தனர். சிலர் என் முன்னிலேயே என்னை தவறாகப் பேசினர். இவற்றால் நான் எங்கும் வெளியே செல்லாமல் இருந்தேன். அதற்காக வீட்டிலேயே அடைந்து இருப்பதும் எனக்கு பிடிக்கவில்லை.

 

ஒரு நாள் இதைப் பற்றி க்ரிஷிடம் கூறியபோது, அவனோ “நீ இப்படி வீட்டிலேயே அடைஞ்சு இருந்தா தான் எல்லாருக்கும் உன் மேல தப்பான அபிப்ராயம் வரும். அவங்க சொல்றதை எல்லாம் காதிலேயே வாங்காம கடந்துடு. நம்ம ஏதாவது ஒன்னுக்கு இம்போர்ட்டன்ஸ் தந்தா தான் அது எல்லாராலையும் கவனிக்கப்படும்.  நீ அவங்க சொல்றதை பெருசா எடுத்துக்காம விட்டுட்டா அவங்க ஆட்டோமாட்டிக்கா அடுத்த விஷயத்துக்கு போயிடுவாங்க.” என்று எனக்கு அறிவுரை கூறி மறுபடியும் வெளியில் செல்ல வைத்தான்.

 

அவன் சொன்னதும் சரியே என்பது போல சில நாட்களில் என்னை விட்டு பக்கத்துக்கு வீட்டு அனிதாவின் டிவோர்ஸ் பற்றி எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

 

வாழ்க்கையும் ஒரு பக்கம் சென்று கொண்டே இருந்தது பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல்!

 

என் ஜாதகத்தில் திருமண யோகம் வராததால் என் கல்யாணப் பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  அதற்கு தனியாக கடவுளிடம் நன்றி கூறினேன்.

 

வீடும் பழைய நிலைக்கு மெல்ல திரும்பியது. எப்போதும் போல என் அம்மாவையும் அபியையும் வம்பிழுப்பது, சாண்டியுடன் வெட்டியாக ஊர் சுற்றுவது, சிறுவர்களுடன் விளையாடுவது, புலனத்தில் தோழிகளுடன் அரட்டையடிப்பது, நான் சமைத்த ‘கொடுமை’யை ஃபோட்டோ எடுத்து ‘படவரி’யில் பதிவேற்றுவது, கடைசியாக ‘பற்றிய’த்தில் க்ரிஷுடன் அளவலாவுவது என்று என் நேரம் மிகவும் பயனுள்ளதாகவே கழிந்தது.

 

இதற்கிடையில் ராகுலின் ஞாபகம் எழுந்தாலும், என் காதலை சற்று ஆறப் போடுவோம் என்று அவனை நோக்கி எந்த அடியும் நான் வைக்கவில்லை.

 

மேலும், எப்போதும் நானே அவனிடம் வழிவது போல தோன்றியது. அதனால் சில நாட்கள் அவனைக் காண்பதை தவிர்த்து வந்தேன். அவன் பேச்சு எழுந்தாலே அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

 

இந்த இடைப்பட்ட காலத்தில் அபி அவன் நண்பனுடன் சேர்ந்து ‘மல்டி க்யுஸைன் ரெஸ்டாரண்ட்’ ஒன்றை ஆரம்பித்தான். அங்கு இந்தியன், சைனீஸ் போன்ற பல்வேறு உணவு வகைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் இந்த யோசனை பிடிக்காத அப்பா கூட அந்த ரெஸ்டாரண்ட்டிற்கு உள்ள டிமாண்ட்டைப் பார்த்து வாயடைத்து போனார்.

 

எனக்கு எப்போதும் அபியின் சமையல் பிடிக்கும். வீட்டில் கூட அவன் ஏதாவது புதிதாக சமைத்தால் நான் தான் அதை சுவைப்பேன். அப்பாவிற்கு அண்ணன் சமையலறையில் இருந்தாலே பிடிக்காது. ஆண்கள் சமையல் செய்ய கூடாது என்ற எண்ணம் அவருக்குள்!

 

அபி பள்ளிப் படிப்பு முடிந்ததும் இளங்கலை சமையல் கலை பிரிவில் சேர நாட்டம் கொள்ள, அப்பாவோ பொறியியல் தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அதில் சேர்த்து விட்டார். அதிலிருந்தே இருவருக்கும் மோதல் தான்.

 

கல்லூரியில் அவனுக்கு பிடித்த பிரிவு சேர முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், பகுதி நேரமாக சமையல் கலையில் டிப்ளமோ முடித்தான், அப்பாவிற்கு தெரியாமல் தான்!

 

கல்லூரி முடிந்ததும் அப்பாவோ அவன் மென்பொருள் நிறுவனத்தில் வேலை தேடுவான் என்று எதிர்பார்க்க, இவனோ அங்கெல்லாம் வேலைக்கு செல்ல முடியாது என்று கூற, அன்று வீட்டில் பெரும் கலவரமே வெடித்தது.

 

அதன்பிறகு, இருவரும் சரிவர பேசிக் கொள்ளவில்லை. அபியும் பேங்க் லோன் விஷயமாக அலைந்து திரிய அதற்கு அப்பா சிறிதும் உதவ முன்வரவில்லை. இறுதியாக அவன் நண்பனின் உதவியோடு பேங்க் லோன் கிடைத்து ரெஸ்டாரண்ட்டை மிகுந்த சிரமத்துடன் திறந்தும் விட்டான்.

 

நானும் அவன் ரெஸ்டாரண்ட்டிற்கு அடிக்கடி செல்வேன். இப்போதும் அவனின் அதிகாரப்பூர்வ சுவை தேர்வாளர் (அஃபிஸியல் ஃபுட் டேஸ்டர்) நான் தான்!

 

முதல் தடவை அங்கு சென்ற போது அந்த ரெஸ்டாரண்ட்டின் உட்புற வடிவமைப்பைப் பார்த்து வியந்து தான் போனேன். அவனிடம் கேட்டதற்கு அவையெல்லாம் அவன் நண்பனின் யோசனை என்றே கூறினான்.

 

“எப்படி அபி உனக்கு இப்படி ஒரு அறிவாளி பிரெண்ட்! ஒரு முறை கூட இந்த மாதிரி பிரெண்ட்டை எல்லாம் என் கண்ணுல காட்டவே மாட்டிங்குற. எப்போ பார்த்தாலும் பல்லிக்கு பேண்ட் ஷர்ட் போட்ட மாதிரி ஒருத்தனையும், சட்டைக்கு போடுற கஞ்சியை குடிச்சுட்டு விரைப்பா இருக்குற ஒருத்தனையும் தான வீட்டுக்கு கூட்டிட்டு வருவ. இவன் யாரு புது பிரெண்ட்?” என்று அவனிடம் கேட்டேன்.

 

“நீயெல்லாம் யாருக்கும் மரியாதையே கொடுக்க மாட்டியா?” என்று என்னை அடிக்க துரத்தினான் அவன்.

 

அதன்பிறகு, அவன் நண்பனைப் பற்றி அவன் பேசியதில்லை. நானும் மீண்டும் வினவவில்லை.

 

இன்று, ஏதோ புதிதாக செய்ததாக என்னை அழைத்திருந்தான். அங்கு சென்ற போது நிறைய வாடிக்கையாளர்கள் இருந்ததால் அங்கே சற்று நேரம் நான் காத்திருந்தேன்.

 

அப்போது தான் ராகுலை பார்த்தேன். அவனின் தோழர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து  இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கும். அவனின் மகிழ்ச்சியான முகத்தையே கன்னத்தில் கைவைத்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

சிறிது நேரம் கழித்தே, நான் செய்யும் காரியம் உணர்ந்தேன். அது போக, இருக்கும் இடத்தையும் சூழ்நிலையையும் மனதிற்கொண்டு உடனடியாக என் பார்வையை வேறு திசைக்கு திருப்பினேன்.

 

அதன்பிறகு, என் பார்வை முழுவதும் அங்கு விளையாடிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையிடமே நிலைத்திருந்தது. அதுவும் சற்று நேரத்தில் போரடித்ததால், அபியை தேடினேன்.

 

நான் கண்களை சுழற்றி அபியை தேட, அவனோ ஒரு ஓரத்தில் ராகுலுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டது உண்மையே!

 

இத்தனை வருடங்கள் ராகுல் என் எதிர் வீட்டில் இருந்தாலும் இது வரை அபியும் ராகுலும் பேசி நான் பார்த்ததில்லை. ஆனால், இன்றோ இருவரும் பல நாட்கள் பழகிய தோழர்கள் போல பேசிக்கொள்வது எனக்கு வியப்பக இருந்தது.

 

இருவரின் நட்பில் ஆர்வமாகி அவர்கள் அனைவரும் வெளியேற காத்திருந்தேன். அவன் செல்லும்போது என்னை ஒரு பார்வை பார்த்தான்.

 

என் உடலை துளைத்து உயிரை ஊடுருவும் அவன் பார்வையில், ‘ஸ்ஸ்ஸ், உன்னை பார்க்கக் கூடாதுன்னு ரெண்டு மாசமா பல்லைக் கடிச்சுட்டு இருந்தா, ஒத்த பார்வைல ஃபுல்லா ஃபிளாட் ஆக்கிட்டு போயிட்டியே டா!’ என்று புலம்ப மட்டும் தான் என்னால் முடிந்தது.

நான் அங்கு நின்று வாசலையே வெறித்துக் கொண்டிருந்ததைக் கண்ட அபி என்னை உலுக்கி, “அங்க என்ன பார்த்துட்டு இருக்க?” என்று வினவினான்.

 

நானோ வாய்க்கு வந்ததை உளறிவிட்டு அவனை இழுத்துக் கொண்டு சமையலறைக்கு சென்றேன். அங்கு அவன் சமைத்ததை சுவைத்துக் கொண்டே அவனுக்கும் ராகுலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டேன்.

 

அதற்கு அவன், “எதிர் வீட்டுல இருக்குறவனை எப்படி தெரியாம இருக்கும்?” என்று சாதாரணமாக கூறினான்.

 

“நம்புற மாதிரி இல்லையே!” என்று அவனை சந்தேகத்துடன் பார்த்தேன் நான்.

 

“நம்பு டி எருமை, ரெண்டு வருஷமா தான் அவனை எனக்கு பழக்கம். பழகுறதுக்கு ஈஸியா ரொம்ப பிரெண்ட்லியா இருந்தான். நான் படிச்சுட்டு வேலைக்கு போக பிடிக்காம சும்மா சுத்திட்டு இருந்தப்போ இவன் தான் எனக்கு பிடிச்ச வேலையை பார்க்க சொல்லி என்கரேஜ் பண்ணான்.”

 

“டேய் அண்ணா, உண்மைய சொல்லு. இந்த ரெஸ்ட்டாரன்டோட  ‘சைலண்ட் பார்ட்னர்’ யாரு?” என்று சந்தேகத்துடன் நான் வினவ, அவனோ சிரித்துக் கொண்டே, “ராகுல் தான்.” என்று கூறினான்.

 

அதைக் கேட்ட அதிர்ச்சியுடன் அங்கிருந்து வெளியே சென்றேன். என்னை யாரோ பார்ப்பதை என்னால் உணர முடிந்தாலும், அதிர்ச்சியில் பிடியில் சிக்கியிருந்த நான் திரும்பிப் பார்க்க முயலவில்லை.

 

*****

 

அடுத்த நாள் காலை நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் அம்மா என்னை எழுப்பி ஆனந்த் வந்திருப்பதாகக் கூறினார். நான் ஆனந்தை ஊட்டியில் தான் இறுதியாக பார்த்தது.

 

நான் உடனே சுத்தப்படுத்திக் கொண்டு அவனை பார்க்கச் சென்றேன். அவனோ இயல்பாகவே இருந்தான்.

 

என் தந்தையோடு பேசிக் கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து சிநேகமாக தலையசைத்தான். என் தந்தை சிறிது பதட்டமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால், ஆனந்தோ பேசிப் பேசியே அவரை இயல்பாக்கினான்.

 

நாங்கள் இருவரும் எங்கள் ஊட்டி பயணத்தைப் பற்றி பேசினோம். என் அப்பாவும் இதில் கலந்து கொண்டது அன்றைய நாளின் முதல் ஆச்சரியமாக அமைந்தது.

 

இப்படியே அன்று காலை நேரம் நல்ல படியாக சென்றது. மிகுந்த நாட்கள் கழித்து என் குடும்பத்தில் மகிழ்ச்சியை கண்டதில் எனக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.

 

ஆனந்த் கிளம்பும்போது, “டோன்ட் ஒர்ரி, அவ ஒன்னும் அவ்ளோ ஒர்த் இல்ல.” என்று நான் கூற, அவனோ அவனின் ‘ட்ரேட் மார்க்’ சிரிப்பை சிந்திவிட்டு சென்றான்.

 

அவன் கிளம்பியதும் ஒரு பெருமூச்சுடன், நான் பால்கனிக்கு சென்றேன். இந்த வாழ்க்கை எனக்கு என்ன வைத்திருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தான், நேஹாவை ராகுலின் வீட்டில் பார்த்தேன்.

 

தவறானவரிடம் கொள்ளும் காதல் ஒருவரை எப்படியெல்லாம் மாற்றிவிடும் என்று அவளைப் பார்த்து அறிந்துக் கொள்ளலாம். மிகவும் பரிதாபகரமாக இருந்தாள் நேஹா.

 

அவளை அந்த நிலையில் பார்க்க கஷ்டமாக இருந்தது. நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவளும் என்னைத் திரும்பி பார்த்து சிரித்தாள். ஆனால், அந்த சிரிப்பினில் சற்றும் உயிர்ப்பில்லை.

 

அப்போது தான் ராகுல் வெளியே வந்தான், நேஹாவை அனுப்பி வைப்பதற்காக.  அந்த நிலையிலும் நான் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்ததை அவனும் பார்த்துவிட்டான்.

 

‘ஐயோ, இந்த மானம் கெட்ட மனசை வச்சுக்கிட்டு நான் தான் அடிக்கடி அவன்கிட்ட மாட்டிக்கிறேன்!’ என்று என்னை நானே வசைப்பாடிக் கொண்டு வீட்டிற்குள் சென்று மறைந்தேன்.

 

*****

 

மாலையில் முகநூலில்  பக்கத்தை புரட்டிக் கொண்டிருந்த போது க்ரிஷிடமிருந்து மெசேஜ் வந்ததற்கான அறிவிப்பு வந்தது.

 

க்ரிஷ் : ஹாய்! ரொம்ப நாள் ஆளையே காணோம். ஹவ் ஆர் யூ?

 

நான் : ம்ம்ம், நல்லா தான் இருக்கேன்…

 

க்ரிஷ் : என்ன ரொம்ப சலிச்சுக்குற? அப்படி என்ன ப்ராப்ளம்? என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு.

 

நான் : அப்படி ஒன்னும் பெருசா இல்ல. எப்பவும் போல தான். ஒரே போரிங்கா இருக்கு! உனக்கு எப்படி போகுது லைஃப்?

 

க்ரிஷ் : எக்சைட்டிங்!!!

 

நான் : ம்ம்ம்…

 

க்ரிஷ் : அப்பறம்… படிப்பு முடிஞ்சது, நெக்ஸ்ட் என்ன பிளான்?

 

நான் : ஒரு ஐடியாவும் இல்ல!

 

க்ரிஷ் : என்ன! இப்படியே வீட்டுல சும்மா இருக்க போறியா?

 

நான் : அப்படி இல்ல… யோசிக்கணும்! ஐடி ஜாப்ல எனக்கு சுத்தமா இன்ட்ரெஸ்ட்டே இல்ல.

 

க்ரிஷ் : அப்போ உனக்கு எதுல இன்ட்ரெஸ்ட்டோ அதை பண்ணு!

 

நான் : எனக்கு சின்ன வயசுல இருந்தே சொந்தமா ஷாப் வைக்கணும்னு ஆசை. இப்போ அதுவே பெருசாகி ‘பொடிக்’ வைக்கணும்ங்கிற அளவு வளந்துருக்கு.

 

க்ரிஷ் : சூப்பர்… அப்போ அதுக்கான வேலையை ஸ்டார்ட் பண்ண வேண்டியது தான.

 

நான் : எங்க அப்பா இதுக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டார்.

 

க்ரிஷ் : நீ தான் உங்க அப்பாவை ஒத்துக்க வைக்கணும்.

 

நான் : அபி ரெஸ்டாரன்ட் ஸ்டார்ட் பண்ணதுக்கே ஃபர்ஸ்ட் அவரு ஒத்துக்கல. இப்போ எனக்கு மட்டும் எப்படி ஒத்துப்பாரு?

 

க்ரிஷ் : கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் நீ அதை ஃபேஸ் பண்ணித் தான் ஆகணும்!

 

இப்படி பேசியே, என்னுள் புதைந்து கிடந்த ஆசையை பூதாகரமாக்கியவன், என் அப்பாவை எப்படி சமாளிப்பது என்ற திட்டத்தை திட்டவும் உறுதுணையாக இருந்தான்.

 

*****

 

அடுத்த நாள் காலையில் நான் மிகவும் அமைதியற்று இருந்தேன். அங்கும் இங்கும் நடைபயின்று கொண்டிருந்த என்னை பார்த்து என் அம்மா என்னவாயிற்று என்று வினவினார்.

 

நான் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. என் மனதிற்குள் அப்பாவை எப்படி சம்மத்திக்க வைக்க என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது. எப்படியெல்லாம் பேச வேண்டும், என்னென்ன கேள்விகளுக்கு எப்படி எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

என் அப்பா நல்ல மனநிலையில் வர வேண்டும் என்று கடவுளிடம் ஒரு கோரிக்கையை வைத்து அவருக்காக காத்திருந்தேன். ஆனால் அவரோ எக்கச்சக்க எரிச்சலில் வந்து என் நம்பிக்கையை தகர்த்தெறிந்தார்.

 

‘ஆத்தி! இப்போ சூழ்நிலை சரியா இல்ல. அதனால இன்னைக்கு இந்த மேட்டரை ஓபன் பண்ண வேண்டாம்.’ என்று எனக்குள்ளே கூறிக் கொண்டு அறைக்குள் சென்றேன்.

 

சிறிது நேரத்தில் அபி வீட்டிற்கு வந்து தந்தையோடு உரையாடிக் கொண்டிருந்தான். அவர்கள் ரெஸ்டாரண்ட்டின் லாப நஷ்ட கணக்குகளைப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். இன்றோடு அபி அந்த ரெஸ்டாரண்ட்டை துவங்கி ஒரு மாதம் முடிவுற்றிருந்தது.

 

நானோ எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  தூரத்தில் நின்று பார்த்ததால் அவர்கள் ஏதோ பேசுவது மட்டுமே எனக்கு தெரிந்தது.

 

சிறிது நேரத்தில் என் அப்பா அவன் தோளில் தட்டி ஏதோ சொல்வதும் இவன் சிரிப்போடு அதை ஆமோதிப்பதும் தெரிந்தது. அப்பா சென்றதும் மெல்ல அவன் அருகில் சென்று விசாரித்தேன்.

 

“ஹே ப்ரோ, என்ன ஆச்சு? ஃபர்ஸ்ட் மந்த் சக்ஸசா?” என்று மெல்லிய குரலில் நான் வினவ, அவன் என்னை கையோடு சமையலறைக்கு அழைத்து சென்று எனக்கும் என் அம்மாவிற்கும் அவன் வாங்கி வந்திருந்த சாக்லேட்டை ஊட்டிக் கொண்டே, “நம்ம ரெஸ்டாரண்ட் சூப்பர் சக்ஸஸ் ஆகிடுச்சு. அப்பா கிட்ட இந்த மந்த்தோட ப்ரோஃபிட் பத்தி சொன்னதும் அவரு என்னை பாராட்டினாரு. இது வரைக்கும் அவரு இப்படி என் கூட பேசுனதே இல்ல தெரியுமா!” என்று அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் பொங்கி வழிய கூறினான்.

 

அப்பாவிடம் சொன்னதை போல அவனுக்கு பிடித்த துறையில் சாதித்த பெருமை அவன் முகத்தில் நிரம்பி வழிந்தது. அதைக் கண்டதும், நானும் இது போலவே எனக்கு பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வலுப்பெற்றது.

 

‘அப்பாவோட மூட் நல்லா தான் இருக்கு. ஏற்கனவே அபி ஜெய்ச்ச சந்தோசத்துல இருப்பாரு. இப்போவே ‘பொடிக்’ பத்தி பேசிட வேண்டியது தான்!’ என்ற முடிவோடு அவரிடம் சென்றேன்.

 

நான் கூறியதும் அவரின் முடிவு என்னவாக இருக்கும்?!

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
23
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்