Loading

எனதழகா – 55 ❤️

“என்னய்யா ஆறுமுகம் யோசனை பலமா இருக்கு ? “என்று முத்தரசன் ஆறுமுகத்தின் தோளில் அடித்துக் கேட்டார். ஒன்றும் இல்லை என்று கூறி  விட்டு, வசுதேவரிடம் “சொல்லுங்க மாமா ” என்று கூறினான்.

“அதான் ஆறுமுகம் ! எந்த மாசமும் இல்லாமல் இந்த மாசம் நல்ல லாபம். அது உங்க இரண்டு பேராலத் தான். என் கனவுக்கு மதிப்பும் மரியாதையும்  கொடுத்து இருக்கீங்க. என் அப்பாக்கிட்ட இனிமே தைரியமா இதை தொடர்ந்து நடத்த போறேனு சொல்லிடுவேன் ” என்று அவர் உணர்ச்சி வசத்தில் கூறினார்.

” என்ன மாமா ! நான் செய்யாம யாரு செய்ய போறா? நீங்க பெரிய மாமா பேச்சை மீற வேண்டாம். அவங்க சொல்லுற மாதிரி நீங்க கட்டிட தொழிலுக்கு உள்ள வியாபாரத்தை பாருங்க. நான் இந்த கடையை பாத்துக்குறேன் ” என்று அவனின் ஆசையை உளறி விட்டான்.

“என்னய்யா ஆறுமுகம் ! விட்டால் கடையை எழுதி வாங்கிருவப் போல ? ” என்று முத்தரசன் சிரித்துக் கொண்டே கேட்டார்.

“என்ன முத்தரசன் மாமா! எனக்கும் மாமாக்கு இடையில சண்டையை கொண்டு வர பாக்குறீங்களா? ” என்று முயன்ற அளவு முகத்தை கடுமையாக வைக்காமல் சிரித்துக் கொண்டே கேட்டான்.

“அட ஏன்ய்யா ! சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். நீயும் எனக்கு வடிவேலன் மாதிரி தான் “என்று சொல்லிவிட்டு, முத்தரசன் வசுதேவரிடம் விடைபெறக் கேட்டான்.

ஆறுமுகம்”என்ன முத்தரசு மாமா போறேனு சொல்லுறீங்க? மாமா கூப்பிட்டு ஏதோ சொல்லவராரு மரியாதை இல்லாம போறேங்குற ? “

“டேய், இப்போ உன் பங்கா ? ” என்று வசுதேவர் கூறி அவனின் முதுகில் அடித்து விட்டு, ” இந்த லாபம் உங்களாலத் தான். அதனால, கடை மொத்தமும் ஆறுமுகம் பார்க்கட்டும் . கணக்கு வழக்குலாம் முத்தரசன் பாக்கட்டும் “என்று கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து வேறு வேலை பார்ப்பதற்கு நகர்ந்து விட்டார்.

முத்தரசனும் கண்டுகொள்ளாமல் வேறு வேலை செய்ய கிளம்பி விட்டார். ஆனால், ஆறுமுகம் தான் அவ்விடத்திலேயே அமைதியாக அமர்ந்து கொண்டான்.

“வேலைக்காரங்க மாதிரி நான் வேலை செய்யனும். அவரு முதலாளி மாதிரி உட்காரணுமா? ” என்று மனதிற்குள் கருவி கொண்டிருந்தான் . ஆனால், ஒன்றும் கூற முடியாது அல்லவா. அதனால், அமைதியாக அன்றைய வேலையை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்று எப்பொழுதும் போல் அல்லாமல் இன்று அசதிக்கு பதில் ஆத்திரத்திற்காக குடித்தான்.

மதுவை தேடியவுடன் மாதுவையும் தேடத் தோன்ற அவ்விடத்திற்கு சென்று விட்டான். நடுநிசி தாண்டி வீட்டிற்கு பின் வாசல் வழியே தள்ளாடிய படியே செல்ல, தடுக்கி விழப்போனவனை யாரோ பிடித்து கைத்தாங்கலாக அவனை அழைத்து அவனது வீட்டில் விட்டனர்.

இவன் இவ்வாறு மதுக்கடைக்கு இராப்பொழுது செல்வது அங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும். பின்வாசலில் தான் அனைத்து ஊழியர்களுக்கும் இடம் ஒதுக்கி கொடுத்துள்ளனர். அதனால், அவ்வழியே செல்வதால் ஒரு சில நேரம் அவர்களே வீட்டில் விட்டுவிட்டு செல்வார்கள்.

அதன் மாதிரியே இப்பொழுதும் யாரோ அழைத்து வந்து விட்டனர் என்று நினைத்து உறங்கி விட்டான். மறு நாள் காலையில், தனது மாமன் மற்றும் முத்தரசன் மேல் உள்ள கோபத்தை ஒதுக்கி விட்டு, அவன் சென்ற ஊர்களில் எடுத்து கொண்டு வரச் சொல்லியிருந்த சேலைகளை அடுக்கி கொண்டிருந்தான்.

முத்தரசனும் வசுதேவரும் ஒரு சேரக் கடையினுள் உள்ளே நுழைந்தனர். முத்தரசன் ஆறுமுகத்தின் அருகில் அமர்ந்து அவன் எடுத்து வைத்திருக்கும் சேலைகளைக் குறித்துக் கொண்டிருந்தார். ஆறுமுகத்திற்கு அச்செயல் சந்தேகப் படுவது போல் இருந்தது.

ஏனென்றால், ஆறுமுகமே அனைத்து சேலைகளையும் எடுத்து வைத்து விட்டு அவனே குறிப்பு எடுக்கத் தான் நினைத்திருந்தான். முத்தரசன் இவ்வாறு செய்தும்  கோபத்தை காண்பிக்க முடியவில்லை . அதே சமயம் அடக்கவும் தெரியாமல் அருகில் எடுத்துக் கொண்டிருப்பவனை ஏச நினைத்து வாயைத் திறக்கும் சமயம் “நீ வேற வேலையைப் பாரு முத்தரசு. அவன் எடுத்து வச்சுட்டு கணக்கு எழுதிக்குவான் ” என்று கூறிக் கொண்டே அருகில் வந்தார் வசுதேவர்.

“இல்லைய்யா! கணக்கு விட்டு போச்சுனா சிரமம் “என்று கூறிக் கொண்டே கணக்கைத் தான் பார்த்தார். தன் மேல் சந்தேகம், நம்பிக்கை இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார் என்ற கடுப்பில்  சேலையை எடுத்து அருகிலுள்ளவனிடம் வாங்குகிறானா என்பதை கவனிக்காமல் கொடுக்க, அடுக்கிய பத்து சேலைகளும் கீழே விழுந்து கசங்கியது.

ஏற்கனவே இருந்த கடுப்பில் அவனை திட்டி விட்டான் ஆறுமுகம். பதின் பருவம் தாண்டாத அந்த இளம் மொட்டு ஆறுமுகத்தின் அதட்டலில் பயந்து விட்டான். அவனின் அதிர்ச்சியைக் கண்டு முத்தரசன் “ஏப்பா நீ கவனிக்காமல் கொடுத்துட்டு அவனை ஏன் திட்டுற? ” என்று கேட்க, ஆறுமுகத்திற்கு கோபம் கொப்பளித்து விட்டது.

“நான் என் வேலையை நானா செஞ்சா தான் சரியா வரும். நீங்க நடுவுல வந்து கேள்வி கேட்குறீங்க, அதுக்கு பதில் சொல்வேனா,அவன்கிட்ட சரியா அடுக்க சொல்லுவேனா இல்லை ஊர்க்காரங்க சொன்னதை விட்டு போகாம எடுப்பேனா? ” என்று கொஞ்சம் குரல் உசத்தியேக் கேட்டான்.

முத்தரசன் அதை உணர்ந்து, தன் மேல் இந்நாள் வரை யாரும் குறை கூறியது இல்லை ஆனால் இன்று வசுதேவரே கேட்டது   அவர் மனதிற்கு அதிர்வாக இருந்ததால், “இங்க நீயா கணக்கு பாக்குற. நான் தான் பார்க்குறேன். ஏதாச்சும் தப்பா இருந்தால் நான் தான் பதில் சொல்லனும். போனத் தடவை இப்படி தான் விட்டுப்போச்சு . “என்று அவரும் அவர் பங்கிற்கு எகிறினார்.

பின், இருவரின் பேச்சும் வாக்குவாதமாக மாறி அந்த இடத்தில் சலசலப்பு உண்டாகியது. அச்சத்தத்தில் வந்த வசுதேவர் இருவரின் அருகில் வந்து “இருவருக்கும் ஒரே மாதிரியான இடத்தை மற்றும் உரிமையை கொடுத்துள்ளேன். யாரும் யாருக்கும் பதில் கூற வேண்டிய அவசியமில்லை. “என்று இருவருக்கும் பொதுவாக கூறி முத்தரசுவிடம் திரும்பி “முத்தரசு அவன் அடுக்கி வச்சுட்டு எழுதிக் கொடுப்பான். அப்பறம் கணக்கு பாரு. “என்றதோடு ஆறுமுகத்திடம் “ஆறுமுகம் நீ போறதுக்கு முன்னாடி கணக்கை சரிப்பார்த்து விட்டு போ “என்று கூற , முத்தரசு விடக் கொண்டனாக அவரது பேச்சிலேயே நிற்க, வசுதேவருக்கு வழித் தெரியாமல் முத்தரசுவின் பேச்சை ஒப்புக் கொண்டார்.

ஆறுமுகத்திற்கு முதன்முறையாக முத்தரசுவின் மேல் உள்ள கோபம் வன்மமாக மாறியது. இவ்வாறு சிறு சிறு வேலைகளில் இருவருக்கும் சண்டை வர, வசுதேவர் முத்தரசுவின் பக்கம் செல்ல, வசுதேவரின் மேலும் கோபம் வன்மம் மற்றும் ஆக்ரோசம் வளர்ந்தது.

ஆனால், வியாபாரத்திற்கு வெளியில் சென்றவுடன் இவ்விஷயத்தை மறந்து விட்டு, அடுத்தடுத்து முன்னேறுவதற்கான காரியங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்படியே ஐந்தாறு வருடங்கள் ஓடியது. மீராவிற்கு ஆறு வயதாகி விட்டது. கேசவருக்கும் ஒன்பது அகவையை அடைந்திருந்தது. வடிவேலனின் பிள்ளைச் செல்வங்களும் 

குணா மற்றும் தீன வெங்கடேஷனுக்கு பதின்மூன்று வயதும், வைதேகிக்கு பதினைந்து வயதும் ஆகி இருந்தது. வழக்கம் போல் அனைத்தும் நன்றாக செல்லும் சமயம் வசுதேவரின் தந்தை தவறி விட்டார்.

அந்நேரம், அவருக்கு கட்டிடத் தொழிலை மிகவும் சிரத்தையோடு வேறு திசை திரும்பி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், துணிக்கடைக்கு தினமும் ஒரு முறை வருபவர், வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என்பது மாறி மூன்று மாதத்திற்கு ஒரு முறை வந்துக் கொண்டிருந்தார்.

அதனால் கணக்கு வழக்குகளை முத்தரசனே எடுத்துச் செல்லும் சமயம் அங்கு உள்ள கணக்கு வழக்குகளை எடுத்துப் பார்த்து வடிவேலனை குறைக் கூறிக்கொண்டிருந்தார். இதையே வழக்கமாக வைத்திருக்க வடிவேலனுக்கும் கோபம் துளிர் விட்டது.

அதே சமயம், துணிக்கடையை விரிவுப்படுத்தும் நோக்கத்துடன் சரக்குகளை வாங்குவதற்கு  பேசிக் கொண்டிருக்க , ஆறுமுகம் வட நாட்டில் வாங்குவதற்கு கூறிக் கொண்டிருந்தான்.

வழக்கம் போல் முத்தரசன் முட்டுகட்டை இட, வசுதேவர் இம்முறை ஆறுமுகத்திற்கு ஆதரவாக பேச, அந்த நம்பிக்கையில் ஆறுமுகம் பாய்ந்து கொண்டு பதிலடி கொடுக்க, வாய் சண்டை கைச் சண்டையாக மாற்ற ஆறுமுகம் கைலியை கட்டிக் கொண்டு எழுந்தான்.

அதில் முத்தரசனுக்கும் கோபம் வந்து எழ , வசுதேவரும் மற்ற வேலையாட்களும் தடுக்க முயற்சிக்க, ஆறுமுகம் தரையில் உள்ள கல்லை எடுத்து வீசி விட்டான்.

” அய்யோ …….. ” “அம்மா “என்ற கதறல்கள் மட்டுமே கேட்டது.

எனதழகா – 56 ❤️

“அய்யோ அம்மா “என்ற கத்தலில் அனைவரும் அதிர்ந்து விட்டனர். ஆறுமுகத்திற்கு உடல் வியர்த்து பயத்தில் வெடவெடத்து வலிப்பு வர ஆரம்பித்து விட்டது.

வசுதேவருக்கோ என்ன செய்ய வேண்டும் என்பது புலப்படவில்லை. சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் அருகில் அமர்ந்து வடிவேலனுக்கு முதலுதவி செய்தார்.

முத்தரசன் அதன் பின்பே உணர்ச்சி பெற்று , பின்னந்தலையில் விழுந்த அடியில் மயங்கி விழுந்திருக்கும் தனது மச்சினனை பார்த்து ஆறுமுகத்தை அடிக்க பாய்ந்தார்.

அதற்குள் அருகிலிருந்தவர்கள் அவரைத் தடுத்து, அனைவரையும் சமாதானம் செய்து வடிவேலனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் சமயம் வடிவேலனின் மனைவி அன்னக்கொடி தனது பிள்ளைச் செல்வங்களுடன் வந்து சேர்ந்தார்.

முத்தரசன் அவர்களை நோக்கி வர, தீனா மற்றும் குணா முத்தரசனை அடிக்கப் பாய்ந்தனர். அன்னமும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். முத்தரசன் அதிர்ந்து நோக்க, வசுதேவர் முத்தரசனின் ஆதரவுக்கு அருகில் நின்றார்.

” ஏப்பா என்னப்பா நீ ? எதுக்கு இவரை அடிக்க வர? ” வசுதேவர் பாய்ந்து கொண்டு கேட்க, “அய்யா உங்களுக்கு தெரியாது? ” குண வெங்கடேஷன் ஆவேசமாக பேசினார்.

“எப்பா உங்க அப்பனை அடிச்சது ஆறுமுகம். உங்க அப்பனை ஆஸ்பத்தரி கூட்டிட்டு வந்தது உங்க மாமன். அவரை போய் அடிக்க வர்றீங்க? ” என்று உதவிக்காக வந்த கடை ஊழியர் முத்தரசனுக்கு ஆதரவாக பேசினார்.

“அண்ணே நீங்க அங்க தான இருந்தீங்க? ” தீனா கேட்க , ஆம் என்று அவர் கூறியவுடன் ” ஆறுமுகம் சித்தப்பா வேணும்னே எங்க அப்பனை அடிச்சாரா? ” என்று மிக மிக பொறுமையாக அதே சமயம் அழுத்தமாக கேட்டான்.

“இல்லை….. அது ” என்று அவன் இழுக்க, “இந்தோ நிக்கிறாரே இந்த உத்தமரு இவர் ஏதாவது பேசிருப்பாரு. கோபத்துல இவரை அடிக்க வர்றப்போ எங்க அப்பனை அடிச்சிறுப்பாரு ” தீனா கூறினான்.

அதுதான் உண்மை என்பதால் அமைதியாக நின்றனர் அனைவரும். ஆறுமுகம் சிகிச்சை முடித்து அங்கு வர , அன்னக்கொடியையும் , அவர்களின் பிள்ளைகளை கண்டதும் உக்கி உருகி வேகமாக அன்னக்கொடியின் காலில் விழுந்து விட்டான் ஆறுமுகம்.

அன்னக்கொடியின் முன்பு கைகளை கூப்பி ” என்னோட தப்புதான் மா . கோபத்துல என்ன பண்ணுறதுனு தெரியாம பண்ணிட்டேன். மன்னிச்சிடு அம்மா ” கண்களில் நீர் வடிய மன்னிப்பு கோரி நின்றார்.

ஆறுமுகத்தின் மேல் கோபம் இருந்தாலும் காரணமாக இருந்த முத்தரசனின் மேல் தான் அதிகமான கோபம் இருந்தது.

கணவனுக்கு அடிப்பட்டது என்று  பதறி கொண்டு வரும் வழியில் அரைகுறையாக முத்தரசனின் பேச்சினால் கோபம் வந்து ஆறுமுகம் அடித்தார் என்றும், முத்தரசனை காப்பதற்கே நடுவில் பாய்ந்தார் என்று வருவோர் போவோர் கூறியதில்  இளந் ரத்தம் துடிக்கும் இரு விடலைகளுக்கும் தனது மாமன் மேல் கோபம் அதிகரித்தது.

இரவு முழுவதும் அசதியில் வடிவேலன் தனது மாமன் செய்வதை புலம்பவதை தினந்தோறும் கேட்கும் அன்னத்திற்கும் இப்பேச்சில் முத்தரசனின் மேல் கோபம் வந்தது.

அனைத்தும் முடிந்து ஒரு வாரக் காலம் தாண்டியும் வடிவேலனின் நிலை மாறவில்லை. பெரிய மருத்துவமனைக்கும் அழைத்து சென்றும்  ஒரு பயனும் இல்லை. அப்பொழுது தான் அவரின் இறுதிகாலம் வரை இது தான் அவரின் நிலை என்று அனைவருக்கும் புரிப்பட்டது.

இதற்கு மேல் செலவு செய்தும் பயனில்லை என்று நினைத்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். வீடு வறுமையை சென்றடைய படித்துக் கொண்டே இரு ஆண் பிள்ளைகளோடு, அன்னமும் வேலை செய்ய குடும்பம் ஓடியது.

முத்தரசன் இந்த ஐந்தாறு மாதங்களில் அவர்களின் வீட்டிற்கு வராத நாளில்லை. அது போல், இவர்களின் பாதுகாப்பிற்காக திண்ணையில் குளிரிலும் வெயிலிலும் இரவு நேரம் படுத்துக் கொள்வார்.

இவ்வாறு நாட்கள் சென்றடைய , ஆறுமுகம் வழக்கம் போல் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தான். அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த வைதேகியை அழைத்து குடிபோதையில் தவறாக நடக்க முயற்சித்தான்.

அதனை தடுக்க வந்த முத்தரசனை அடித்தே கொன்றவன், போதையில் வடிவேலனை வேண்டுமென்றே தான் அடித்தான் என்று உளறி விட்டான்.

முத்தரசனின் அறிவு வடிவேலனுக்கு உண்டு. அவரை விட ஒரு படி மேலாக வடிவேலனுக்கு அடக்கம் உண்டு. அந்த அடக்கத்தினால் வந்த லாபத்திற்கு எல்லாம் வசுதேவர் சன்மானம் அதிகமாக வழங்குவார். இவ்வாறு செய்து வசுதேவருக்கு நம்பிக்கையின் பாத்திரமாக விளங்கினார்.

முத்தரசனை பற்றி கூறினால் கூட, வசுதேவர் சில இடங்களில் ஆம் என்று கூறுபவர், வடிவேலனை பற்றி கூறினால் இல்லை என்று அடித்து பேசுவார். அதனாலேயே நேரத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தவன், முத்தரசனிடம்  சண்டையிட்ட நேரம் வடிவேலன் தடுக்க வருவதை உணர்ந்து வேண்டுமென்றே வடிவேலனின் தலையைப் பார்த்து குறி வைத்தே அடித்து விட்டான்.

இறுதியில் தனக்கு ஆதரவாக இருந்த இரு ஜீவன்களையும் கொன்று விட்டான் என்ற ஆத்திரத்தில், போதையில் இருந்தவனை துடைப்பத்தால் வெளுத்து விட்டாள் அன்னம்.

காலையில் எழுந்த பொழுது ஆறுமுகத்திற்கு உடல் வலித்ததே தவிர என்ன நடந்தது என்று புலப்படவில்லை. அதுவும் வீட்டிற்கு செல்லாமல் வெளியில் படுத்திருப்பதும் ஒன்றும் புரியாமல் இருக்க, அவன் யோசனையுடன் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தான்.

அப்பொழுது பக்கத்தில் இருப்பவன், “என்ன ஆறுமுகம், நீ அய்யாவோட மச்சினன். அந்த மட்டு மரியாதை இல்லாமல் நேத்து இந்த அன்னம் உன்னை வெளக்கமாத்தால வெளுத்திருச்சே பா! எவ்வளவு நெஞ்சழுத்தம் அந்த புள்ளைக்கு “என்று ஒன்றுக்கு பத்தாக கூறினான். இரவு தூரத்தில்  அதுவும் பாதியில் வந்து அன்னம் அடித்ததை மட்டும் கண்டு இவனிடம் கூறினான்.

கோபம் வந்து அவள் வீட்டிற்கு சென்று கதவை தட்டும் சமயம் அங்கு போலீசாரால் கைது செய்யப்பட்டான் ஆறுமுகம். ஆனால், காண வந்த லஷ்மியிடம் நயவஞ்சமாக பேசி , வசுதேவரின் உதவியில் வெளியில் வந்தான்.

ஆனால், யாரையும் எதுவும் கூறாது அமைதியாக அவனது இல்லத்திற்கு சென்று விட்டான். புலி பதுங்கி இருந்து பாய்வது போல் நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.

ஆனால், காலம் தான் வரவில்லை. வருடங்கள் ஓடியது. கிட்டதட்ட எட்டு வருடங்கள் ஓடிவிட்டது. அனைவருக்கும் நரை எட்டிவிட்டது. பிள்ளைகள் பொறுப்பு எடுக்கும் வயதிற்கு வந்து விட்டனர். அன்னக் கொடியும் மற்ற நினைவுகளை மறந்து விட்டு வசுதேவரிடமே வேலை செய்து, தனது தவப்புதல்விக்கு தனது தராதரத்திற்கு கூடுதலாக உள்ள இடத்தில் நிச்சயம்  செய்ய ஏற்பாடு செய்து விட்டாள்.

அந்நேரம் ஆறுமுகம் எதுவும் செய்வானோ என்று நினைக்க, முன்பு போல் இல்லாமல் அமைதியாகவே  இருந்தான். அதனால் அன்னக்கொடியும் கண்டுகொள்ளாமல் தனது மகளின் வாழ்க்கை சிறக்க போகிறது என்று ஆர்வமாக அனைத்தையும் பார்த்து செய்தாள்.

நிச்சியத்தர்க்கு முதல் நாள் மாலையும் கழுத்தமாக அன்னக் கொடியின் முன்பு செல்லாமல், வசுதேவரின் முன்பு நின்றாள் வைதேகி. அவள்  விரும்பி மணந்தது  கூட யாருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. தனது தம்பிகளின் நண்பனை மணந்ததே அனைவருக்கும் அதிர்ச்சியாகி இருந்தது.

ஆறுமுகம் அப்பொழுதும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார். அன்னக் கொடித் தான்  மகளின் செயலினாலும், ஊர்மக்களின் பேச்சாலும் வீட்டிலேயே ஒடுங்கி விட்டார்.  அதன் பின்பு, வசுதேவர் பேசித்தான் அவர்களை சேர்த்துக் கொண்டார்.

இருந்தும் அன்னக்கொடி மனதிற்கும் உடம்பிற்கும்  ஒப்பாததால் மூன்று வருடத்தில் தவறி விட்டார். அந்த மூன்று வருடமும் தனது தாய்க்கும், தம்பிகளுக்கும் தாயாக மாறி அனைத்தும் செய்தாள். அதன் பின்பே, லஷ்மியின் ஆலோசனைக்கு இணங்க தனது குடும்பம் விருத்தி அடைய நினைத்தாள். ஆனால், கடவுள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

காலங்களும் ஓடியது வைதேகிக்கு இருப்பத்தி எட்டு வயது ஆனது. வெங்கடேஷன் இருவருக்கும் இருப்பத்தி ஐந்து வயது ஆனது. மீராவிற்கு பதினெட்டு வயது ஆனது. அதே போல் கேசவருக்கு இருப்பத்தி மூன்று வயதானது. கல்யாணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கையில், யாரும் அறியாமல் தனது பெற்றோரிடம் மட்டும் முத்தரசனை போல் இன்னொரு கணக்கரின் பெண்ணான பாமாவை பிடித்திருப்பதைக் கூற, அந்தஸ்து பார்க்காமல் கட்டி வைத்தனர்.

ஆனால், மகன் விரும்பித்தான் மணந்துக் கொண்டான் என்பதை இன்றளவும் யாருக்கும் தெரியாவண்ணம் பார்த்துக் கொண்டனர்.

அவன் திருமணம் முடிந்து நிமிரும் தருணம், மீரா குண வெங்கடேஷனை விரும்புவதாக கூறினாள். பிள்ளைகள் நல்ல பிள்ளைகள், பெற்றவர்களின் கோபத்திற்கு பிள்ளைகள் பலி ஆவதா என்று நினைத்து, மீராவிற்கு பச்சைக் கொடி காட்டினர் .

வைதேகியும், அவளது கணவனும் அவர்களின் தரத்திற்கேற்ப ஏற்பாடு செய்து கல்யாணத்தை முடித்தனர். மீரா , குணா, தீனா, வைதேகி மற்றும் அவளது கணவன் அனைவரும் அவ்வீட்டில் இருந்தனர்.

வைதேகி கருவுற்றாள். என்னதான் மீரா அந்நேரத்தில் பதின்பருவ ஆசையில் பிடித்தவரை கைப்பிடித்தாலும், போக போக நிதர்சனம் புரிய குண வெங்கடேஷன் மேல் வெறுப்பு வர ஆரம்பித்தது.

ஆனால், உண்மையில் மீரா குணாவை விரும்பவில்லை. வசுதேவர் தான் தனது மகளிடம் அவனின் நற்செயல்களை கூறி கூறி ஆசையை வளர்த்தார். இவ்விஷயம் எவர்க்கும் தெரியாது. அக்குடும்பத்தின் இத்தகைய நிலைக்கு தனது குடும்பம் தான் காரணம் என்று நினைத்து, எதுவும் இல்லாமல் உதவி செய்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று மகளின் கணவன், மகளின் குடும்பம் என முன்னேற்றி விட நினைத்தார்.

ஆனால், அவர் எதிர்பாராத திருப்பம் மீராவின் மாற்றமே. தனது நாத்தனாருக்கு எவ்வுதவியும் செய்யவில்லை. வைதேகியே அனைத்தும் பார்த்துக் கொண்டாள். இது ஆண்கள்  மூவருக்கும் தெரியாவண்ணமும் பார்த்துக் கொண்டாள்.

நாட்கள் ஓடியது. வைதேகிக்கு நிவான் பிறந்தான். அவனை அழைத்துக் கொண்டு தனது அப்பனிடம் காண்பிக்க , கண்கள் நிரம்பி தனது பேரனை கண்டு விட்டு தனது இறுதி மூச்சை விட்டு விட்டார். அவருக்கு அனைத்து சடங்களும் முடிந்து, ஆறு மாத காலம் கடந்த நிலையில் மீரா கருவுற்றாள்.

இதையே சாக்காக வைத்து தனது இல்லத்திற்கு சென்றவள், தனது கணவரையும் அழைத்து சென்று விட்டாள். தீண வெங்கடேஷனுக்கு வைதேகியும் அவளது கணவனும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர். ஆருஷியும் பிறந்தாள். அடுத்த ஒன்பது மாதத்தில்  அபியும் பிறந்து விட்டான்.

ஆருஷி ஒருத்தவள் தான் பெண் பிள்ளை என்று  வைதேகிக்கு உயிர். அதனால் , அடிக்கடி அவளை அழைத்துக் கொள்வாள். அதனாலேயே மீரா அல்வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். மீராவிற்கு அவ்வீட்டின் வசதி தான் பிடிக்காது. மற்றபடி அவ்வீட்டு மக்களின் மேல் ஒரு நல்ல அப்பிராயம் இருந்தது.

அதே போல் ஒரு நாள் வீட்டிற்கு சென்ற பொழுது , நிவான், அபி மற்றும் ஆருஷி தோட்டத்திற்கு விளையாட சென்று விட்டனர். வைதேகி , அவளின் கணவன் மற்றும் மீரா மதிய உணவு உண்டு கொண்டிருந்தனர்.

வசுதேவர் மற்றும் கேசவர் வீட்டிற்குள் நுழைய, அர்ஜுன் ஓடி வந்து “தாத்தா…. அத்தை…. அத்தை …. தீ…………… தீ…. “

கீர்த்தி ☘️

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்