Loading

இளமாறன் கொட்டியதில் அவனை முறைத்த படி வந்த சித்ராக்ஷியை, அவன் விழிகளால் விழுங்கியபடி வந்தான். பின், நேராக அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டவன், முகத்தை திருப்பிக்கொண்டு பறந்து விட, ‘எவ்ளோ நாள் உங்க கோபம் இருக்குன்னு நானும் பாக்குறேன்…’ என அவன் சென்ற திசையை கண்டு புன்னகைத்து கொண்டவள், முகத்திலும் மனதிலும் நிறைவுடன் வீட்டினுள் நுழைந்தாள்.

வீட்டினரிடம் நடந்ததை கூறிவிட்டு, உர்ரென்று இருந்த நீலாவை கண்டுகொள்ளாது அவளறைக்குள் புகுந்து கொண்டவள், சிறிது நேரம் படுக்கையில் படுத்து நடந்தவற்றை எல்லாம் அசை போட்டாள்.

இளமாறனின் முகமே கண் முன் வந்து வந்து செல்ல, “இந்நேரம் வீட்டுக்கு போயிருப்பாரா?” என சிந்தித்தவள், தயக்கமின்றியே அவன் எண்ணிற்கு அழைத்தாள்.

அப்பொழுது தான் வீட்டினுள் நுழைந்தவன், செல்பேசியில் தன்னவளின் எண்ணை கண்டு லேசாக புன்னகைத்து கொண்டான்.

போனை எடுத்து “என்ன?” என்று இறுக்கமாக வினவ, அவளோ “போன் எடுத்தா முதல்ல ஹெலோன்னு சொல்லணும் இளா… பேசிக் நாலெட்ஜ் தெரியாதா உங்களுக்கு!” என்று நக்கலாக கேட்டாள்.

அதில், போனை ஒரு முறை முறைத்தவன், “ப்ச்… இப்போ உனக்கு என்ன வேணும்? எதுக்கு தேவை இல்லாம எனக்கு போன் பண்ணிட்டு இருக்க?” என்று குரலில் எரிச்சலை ஏற்றி கூறிட, சித்ராக்ஷி தான், “நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்க போறோம் இளா. நான் எப்போ வேணா போன் பண்ணுவேன்…” என்றாள் கூலாக.

“யார் சொன்னா கல்யாணம் நடக்க போகுதுன்னு, நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்…!” என்று அவனும் முறுக்கியபடி கூற, எதிர்முனையில் சிரிப்பு சத்தம் தான் வந்தது.

“ஹே! பொய்சொல்லி பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்! கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு உங்க வாய் தான் சொல்லுது. பட் உங்க மனசு வேற ஏதோ சொல்லுதே” என கிசுகிசுப்பாக கூற, அதில் எழுந்த பொங்கிய புன்னகையை அடக்கியவன் “என்ன சொல்லுது…?” என அதே குரலில் கேட்டான்.

“ம்ம்… கேண்டி கேண்டின்னு சொல்லுது…!” என்றாள் குறும்பாக. “சாரி… மேடம். அப்படி எதுவும் என் காதுல விழுகல. எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கவும் இல்ல. நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்!” என்றவன், சோபாவில் பொத்தென சாரதாவின் மடியில் படுத்துக் கொண்டே பேச, சாரதா தான் “அடப்பாவி” என முறைத்தார்.

“ஓ! சாருக்கு கல்யாணம் பிடிக்கலையா? நோ ப்ராப்லம் இளா. உங்களுக்கு பிடிக்கலைன்னா என்ன அதான் எனக்கு பிடிச்சுருக்கே…” என்று அவன் கூறியதை திருப்பி அவனிடம் கூற, அவளின் ‘பிடித்திருக்கிறது’ என்ற வாசகம் அவனுள் பனிக்கட்டியை உருக செய்தது.

“உனக்கு பிடிக்கலைன்னா நான் கல்யாணத்தை நிறுத்தணும். பிடிச்சுருக்குன்னு சொன்னதும் கல்யாணம் பண்ணனுமா? அதெல்லாம் பண்ண முடியாது. போனை வைடி!” என்று கோபக் குரலில் பேசியவன் போனை வைக்க, வித்யா அங்கு வந்தார்.

“மாறா, செல்வி வீட்ல இருந்து மறுவீட்டுக்கு அழைக்க வருவாங்க…” என்று பதற்றமாக கூற, இளமாறன் தான், “சரி அதுக்கு ஏன் மா பதறுறீங்க?” எனக் கேட்டான் புரியாமல்.

“ப்ச்… கோவிலுக்கு போன உன் அண்ணனையும் அண்ணியையும் இன்னும் காணோம் டா! போன் பண்ணாலும் எடுக்க மாட்டுறான்…” என்றவரை கண்டு, சாரதா தான், “சின்னஞ்சிறுசுங்க எங்கயாவது சுத்திட்டு வருவாங்க அண்ணி” என்னும் போதே, செல்வியும் முகுந்தும் உள்ளே வந்தனர்.

அதில் தான் நிம்மதியான வித்யா “ஏன்டா இவ்ளோ நேரம்?” என்று போலியாய் முறைக்க, அவனோ “அட! ஏன் மா நீ வேற… உன் மருமக என்னவோ கோவிலை விலைக்கு வாங்க போற மாதிரி இந்த சுத்து சுத்துறா!” என்று சலித்து கொண்டிட, செல்வி தான் தலையை கவிழ்ந்த படி இருந்தாள்.

வித்யா புன்னகைத்து கொண்டு, “நீ போய் கிளம்பு செல்வி. நேரமாகுது…” என்று அவளை அனுப்ப, அவள் யாரையம் பாராமலேயே உள்ளே சென்று விட்டாள்.

முகுந்தோ தீவிரமாக செய்தித்தாளில் புதைய, சாரதாவும் இளமாறனும் தான் அவனை முறைத்தனர்.

சாரதா, “டேய் முகுந்தா ஏன்டா அவள் முகம் வாடி போயிருக்கு!” என்று அதட்டலாக வினவ, மாறனும் “இன்னும் நீ அவளை சுத்தல்ல விடுறியா?” என்றான் கோபமாக.

“இது என்னடா கொடுமையா இருக்கு. நாட்டுல யாரு உம்முன்னு இருந்தாலும் அதுக்கு நான் தான் காரணம்னு சொல்லுவீங்க போல” என்று சிரித்து கொண்டவனுக்கு இன்னும் முறைப்பு அம்புகள் வந்திட, அவன் எழுந்து உள்ளே ஓடி விட்டான்.

செல்வி தான் முகுந்த் தன்னிடம் சரியாக பேசாததில் வெகுவாய் வருந்தினாள். கோவிலுக்கு சென்றும் அவன் ஒரு ஓரமாக அமர்ந்து விட, அவள் மட்டுமே தனியாக அர்ச்சனை செய்து விட்டு வந்தாள். ஆனாலும், வண்டியில் அமரும் போது, “கம்பியை புடிச்சுக்கோ…” என்றும் இறங்கும் போது “புடவை தடுக்காம இறங்கு” என்றும் சிறு சிறு அக்கறை உத்தரவுகளுடன் அவளை கவனித்துக்கொண்டே தான் இருந்தான் என்றாலும் ஏனோ அவள் மனம் தான், தான் எதற்காக சோர்ந்து போகிறோம் என்றே அறியாது தவித்தது.

அவளின் தவிப்பான முகத்தை பார்த்து கொண்டு உள்ளே வந்த முகுந்த், “நீ இன்னும் கிளம்பலையா…? சீக்கிரம் கிளம்பு!” என்று பணித்தவன் அவளின் அண்மையை ரசிக்கவே செய்தான். ஆனாலும் வீம்பாக அவளிடம் பாராமுகம் காட்டினான்.

சிறிது நேரத்தில், நீலா, ராஜேந்திரன், நட்ராஜ் மற்றும் பார்வதி நால்வரும் மணமக்களை அழைக்க வந்திட, இளமாறனின் விழிகள் தன்னவளை தேடியது. அதில் சாரதாவே, “சித்ராவை கூட்டிட்டு வரலையா?” என வினவ, பார்வதி தான், “இல்லங்க அக்கா… தலையில வேற அடி பட்டுருக்கு. முதல் முதல்ல வீட்டுக்கு வரும் போது காயத்தோடயா வரணும்னு கூட்டிட்டு வரல…” என்றதும், அவர்களுக்கும் அது சரி என்றே பட்டது.

நீலா யாரிடமும் பேசாது அமைதி காக்க, முகுந்த் வந்தவன் அவரை முறைத்தபடியே “வாங்க அத்த்த்த…” என்று அத்தையை அழுத்தி கூறிட, மாறன் தான், “பார்த்து டா… மறுவீட்டுக்கு போற! விருந்துல விஷம் வைக்க போறாங்க! மாமியார் வேற சீரியல் வில்லி…” என அவன் காதில் முணுமுணுத்தான்.

அதில் முகுந்திற்கு தான் விழி பிதுங்கியது. அந்நேரம், சிவப்பு நிற பட்டணிந்து, தலை முழுக்க மல்லிகை சூடி வெளியில் வந்த தன் மனைவியின் அமைதியான அழகு வேறு அவனை கிறங்கடிக்க, சிறிது நேரம் ஏதோ யோசித்தவன், “மாறா… நீயும் வாயேன் விருந்துக்கு” என்றழைத்தான் பாசமாக.

மாறனோ தெளிவாக, “உன் மாமியார் வீட்டு விருந்துக்கு நீ போ! என் மாமியார் வீட்டு விருந்துக்கு நான் போறேன்… உன் வீட்டுக்கு நான் வரல. என்ன வீட்டுக்கு நீ வராத!” என தோளைக்குலுக்கிட, அதற்குள் ராஜேந்திரன் தான் “விருந்துக்கு எல்லாரையும் கூப்புட்டோம் மாப்பிள்ளை. கல்யாண வேலை இருக்குன்னு சொல்லிட்டாங்க. அதான் உங்களுக்கு மட்டும் கொடுக்குறோம். மாறன் மாப்பிள்ளை நீங்க மட்டுமாவது வாங்களேன்…” என அழைத்தார்.

அதனை பயன்படுத்திய முகுந்த், “ஆமா ஆமா, அவனும் வரட்டும். வாங்க ஒண்ணா போலாம்…” என மாறனை தர தரவென இழுத்துக்கொண்டு சென்றான். “டேய்… நான் வரல. ஒழுங்கா நீ போ!” என்று அடிக்குரலில் அவனை எச்சரிக்க, செல்வி தான், “அட! வாங்க கொழுந்தனாரே! என் தங்கச்சியும் வீட்ல தான் இருப்பா…!” என்றாள் குறும்பாக.

“வேணாம்… அண்ணியாரே! உன் தொங்கச்சி திடீர்னு ஏதாவது பிளாஷ்பேக் கொண்டு வந்து ட்விஸ்ட் வைச்சு, கல்யாணத்தை நிறுத்த பிளான் பண்ணுவா. இந்த விளையாட்டுக்கு நான் வரல…” என்று முறுக்கிக்கொள்ள, அவளோ முகம் சுருங்கி “அப்படி எல்லாம் ஆகாது…!” என்றாள் மெல்லிய குரலில்.

“ஹே! செல்வி டியர்! இப்ப என்ன நான் வரணும். அவ்ளோ தான… வரேன் போதுமா” என்று அவளை சமன்படுத்தும் நோக்கில் பேச ‘இதை தான நாங்களும் சொன்னோம்’ என முறைத்த முகுந்த் அவனை காருக்குள் தள்ளினான்.

பின் பேச்சும், சிரிப்புமாக அனைவரும் செல்வியின் வீட்டிற்கு செல்ல, இவர்களின் கார் சத்தம் கேட்டதும், கையில் ஆரத்தி தட்டுடன் சித்ராக்ஷி வெளியில் வந்தாள்.

“வெல்கம் மாமா…!” என புன்னகை முகத்துடன் முகுந்தை வரவேற்றவள், பின்னால் நின்ற இளமாறனை ஹை… என விழி விரித்து பார்த்து விட்டு, அவளின் அக்கா மாமாவிற்கு ஆரத்தி சுற்றினாள். ஆனால் பார்வை முழுதும் மன்னவனை மட்டுமே வலம் வந்தது.

இளமாறனோ தீவிரமாக போனை உபயோகிக்க, முகுந்த் உள்ளே செல்ல போனான். அவனை தடுத்த சித்ராக்ஷி “ஹெலோ மாமா… சும்மா போனா என்ன அர்த்தம். ஆரத்தி தட்டுல கொழுந்தியாவுக்கு பணம் வைக்கிறது இல்ல” என்று பொய்யாய் முறைத்தாள்.

அதில் முகுந்த் தான், “நீ ஆரத்தி தட்டை எங்களுக்கு காமிச்சுட்டு பார்வையால என் தம்பிக்கு தான் திருஷ்டி சுத்துன… போய் அவன் கிட்டயே வாங்கிக்க…!” என்று நக்கல் சிரிப்புடன் உள்ளே செல்ல, செல்வியின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

அசடு வழிந்த சித்ராக்ஷி தான், மீண்டும் தன் சைட் அடிக்கும் வேலையை செவ்வனே கடைபிடிக்க, இளமாறன் அவளை முறைத்து கொண்டு வீட்டினுள் நுழைந்தான். ‘எப்படி சரி பண்றது இவரை…’ என்று சிந்தித்தபடி அடுக்களைக்கு சென்றவள், அங்கு நீலா மட்டும் இருந்ததில் உள்ளே போவோமா வேணாமா என யோசனையாக நின்றாள்.

பின் எதுக்கு வம்பு என நகர போக, “சித்ரா” என நீலா அழைக்கும் சத்தம் கேட்டதில், திரும்பி அவரை என்னவென பார்த்தாள். அவர் அவளை பாராமல் “என்ன மன்னிச்சுரு!” என்றிட, அதில் விழி விரித்தவள், புன்னகையுடன் “பொண்ணு கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு அவசியம் இல்ல பெரியம்மா!” என்றாள் தலையை சாய்த்து.

“சீக்கிரம் சாப்பாடு எடுத்து வைங்க. மாமா வெயிட்டிங்… நானும் உங்க காரக்குழம்பை ரொம்ப மிஸ் பண்றேன்…” என்று இயல்பாக கூறியவள் பின் பக்கம் வாழை இலையை எடுக்க போக, நீலாவுக்கு தான் அவள் இயல்பாக பேசியதில் ஏதோ உடைந்து ஓடியது உள்ளுக்குள்.

வேகமாக அவளுக்கு பிடித்த பீர்க்கங்காய் பொரியலையும் அவசர அவசரமாக செய்ய தொடங்கினார்.

தீவிரத்துடன் வாழை இலையை நறுக்கிக் கொண்டிருந்தவளை பிடித்து இழுத்த இளமாறன், “பெரிய தியாக செம்மல்… உடனே மன்னிக்கிறீங்க!” என்றான் சற்றே கோபம் எழுந்து.

நீலாவிடம் பேசியதை அவனும் கேட்டுக்கொண்டே தான் இருந்தான். அவளோ, “ப்பா… ஆங்கிரி அல்மாண்ட் ஐஸ்க்ரீம்… இவ்ளோ சூடா இருக்கீங்க. ரியல் ஆ ஒரு ஐஸ் க்ரீம் சாப்புடுறீங்களா இளா…” என கண் சிமிட்டிட, அவன் தான் ‘ஐயோ! சோதிக்கிறாளே’ என தனக்குள் நொந்து போனான்.

ஆனாலும் வெளியில் வீராப்பாக, “எனக்கு எதுவும் தேவை இல்ல. என்னை செல்ல பேர் வைச்சு எல்லாம் கூப்பிட வேணாம்…” என அவளை போலவே சிலுப்பிக்கொள்ள, அவளுக்கு தான் அவனின் கோப முகம் ரசனையை கொடுத்தது.

“என் லவர்க்கு நான் செல்ல பேர் வைக்கிறேன்… உங்களுக்கு என்ன வந்துச்சு. வேணும்னா காதை மூடிக்கோங்க…!” என்று அழகு காட்டியவள், பின், “இப்போ ஏன் உங்களுக்கு இவ்ளோ கோபம்?” எனக் கேட்டாள் மென்மையாக.

அவன் எதுவும் பேசாமல் அவளை முறைக்க, அவளோ, “எனக்கும் அவங்க மேல கோபம் இருந்தது உண்மை தான் இளா. ஆனால் இப்போ இல்ல…” என்றதில் அவன் புரியாமல் பார்த்தான்.

“நான் அப்பா, அம்மாவுக்காக தான் முதல்ல இந்த கல்யானத்துக்கு சம்மதிச்சேன். உங்களோட அதிரடி எனக்கு கொஞ்சம் பயத்தை குடுத்தது உண்மை தான். ஆனால், பட்டு பட்டுன்னு நீங்க எடுக்குற முடிவுக்கு பின்னாடி உங்களோட அன்பு மட்டும் தான் தெரிஞ்சுது.

அக்காவுக்கு முகுந்த் மாமாவை கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சதும், நான் வேறொருத்தரை காதலிக்கிறேன்னு சொன்னப்பவும் உங்களோட நடவடிக்கையும், அக்கறையும் என் காயத்துக்கு மருந்தா தான் இருந்தது.

நம்ம நிச்சயத்துக்கு புடவை எடுக்க போகும் போதே பழசை எல்லாம் இனிமே பேசவே கூடாது. எல்லாத்தையும் மறந்துடனும்ன்னு முடிவோட இருந்தேன். என் மனசு முழுக்க அப்போ நீங்க மட்டும் தான் இருந்தீங்க. ஆனா புடவை எடுத்துட்டு வீட்டுக்கு வந்ததும், பெரியம்மா சொன்னதை கேட்டு எனக்கு அதிர்ச்சி ஆகிடுச்சு.

ஏற்கனவே ஒருத்தன் என் அக்காவை தப்பா பேசி, அதுனால கல்யாணம் நின்ன மாதிரி, இப்போ அந்த விஷயமே திரும்பி யார் மூலமாவது உங்களுக்கு தெரிய வந்தா அவளோட வாழ்க்கை பாதிக்கப்பட்டுடுமோன்னு பயமா இருந்துச்சு.

அது மட்டும் இல்ல, நான் பண்ண காதல் அவள் வாழ்க்கையை கெடுக்க அனுமதிக்கக் கூடாதுன்னு தான், நான் இன்னும் அவனை மறக்க முடியலன்னு சொல்லி நிச்சயத்தை நிறுத்த சொன்னேன்” என கமறிய குரலில் பேசியதும் இளமாறன் அவளை பார்வையால் சுட்டான்.

“எனக்கு தெரியும் இளா. உங்க பேமிலில இல்ல இல்ல நம்ம குடும்பத்துல எல்லாரும் ரொம்ப ஸ்வீட். முதல் தடவை பாக்கும் போது தான் கொஞ்சம் டெர்ரா இருந்தீங்க. ஆனால் அப்பறம் அப்பறம் தான் தெரிஞ்சுது எல்லாரும் ரொம்ப சாஃப்ட்ன்னு… அப்படியும் நிச்சயம் முடிஞ்சு நீங்க லவ் சொன்னப்போ அப்போவே உங்க கை  புடிச்சுக்கிட்டு உங்க வீட்டுக்கு வரணும்னு போல இருந்துச்சு.

ஆனால் அப்போ தான் அந்த வசந்த் வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு டார்ச்சர் பண்ணான். என்ன ஆனாலும் அக்கா கல்யாணம் நிக்க கூடாதுன்னும், என்னை கல்யாணம் பண்ணாலும் உங்களுக்கு தேவை இல்லாத பிரச்சனை மட்டும் தான் வரும்னும் பயந்துட்டேன்.

என்ன தான் எல்லாரும் பிரெண்ட்லியா இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வர்ற பொண்ணு எவனையோ காதலிச்சான்னு சொன்னா கோபம் தான் வரும்…” என்றாள் அவனுக்கு புரிய வைக்கும் நோக்கில்.

“நான் சொன்னேனா டி? என்ன பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்லுன்னு சொன்னேன்லடி…? சரி என்கிட்ட தான் சொல்லல. என்னை விட்டு போறதுக்கு கூட துணிஞ்சுட்டீல…? அப்போ நான் மட்டும் வராமல் இருந்தா என்ன ஆகியிருக்கும்.

அதை விடு, அவன் உன்ன கடத்த ட்ரை பண்ணாம இருந்திருந்தா நீ விட்டுட்டு போயிருப்ப அப்படி தான? நீ என்னை அவ்ளோ சீப்பா நினைச்சுட்டியா? என் அத்தை நான் சின்ன பையனா இருந்தப்போ எப்போ பார்த்தாலும் அழுதுகிட்டே தான் இருப்பாங்க. வளர வளர அவங்க அழுகுறதை பார்க்குற ஒவ்வொரு செகண்டும் நமக்கு வர போற பொண்ணை சந்தேகப்பட்டு, தப்பா பேசி கண்ணீர் விட வைக்க கூடாதுன்னு நானே நினைச்சுப்பேன். ஏன்னா, வலி எல்லாருக்கும் ஒரே மாதிரி தான். என் அத்தையா இருந்தாலும், நீயா இருந்தாலும், வேற எந்த பொண்ணா இருந்தாலும் காதல்ன்ற உணர்வு பொது தான்.

அது ஜெயிச்சா சந்தோசம். தோத்துட்டா அந்த பொண்ணு தப்பான பொண்ணு ஆகிடுவாளா? அப்படி பார்த்தா பசங்களுக்கு கூட தான் ஸ்கூல்ல ஒன்னு காலேஜ்ல ஒன்னு, வேலை பார்க்குற இடத்துல ஒன்னுன்னு ஏகப்பட்ட லவ் பெயிலியர் ஆகுது.

அப்போ அவங்களும் தப்பானவங்களா? என்னை பொறுத்தவரை, ஒரு பொண்ணை சந்தேகப்பட்டு, அவள் காதலிச்சதை சொல்லி காட்டி, அதை வைச்சு அவளை கார்னர் பண்ணனும் நினைக்கிற யாரும் ஆம்பளையே கிடையாது. அதுவும் உன்னை பார்த்ததும், நீ தான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணி, உன்னை காதலிச்ச என்ன போய் எப்படி டி அப்படி நினைச்ச? நீ போனப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?” என்றவனுக்கு இப்போதும் அந்த நிமிடம் கண்ணை கலங்க வைத்தது.

அவன் பேசியதில் பெண்ணவளின் மனதில் மேலும் மேலும் காதல் பொங்க, பின் செய்ய இருந்த முட்டாள்தனத்தை உணர்ந்து, “சாரி இளா! உங்களை நம்பாம இல்ல இளா. ஆனால் அந்த நேரத்துல நான் முட்டாள்தனமா நடந்துட்டேன். இனிமே நீங்களே போக சொன்னாலும் நான் போக மாட்டேன் சாரி…” என வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டாள் கண்ணை சுருக்கி.

“போடி… நீயும் உன் சாரியும்…” என அவன் மறுபுறம் திரும்பி நிற்க, அவனை நெருங்கி அவன் முகத்தை திருப்பிய சித்ராக்ஷி, “இளா… நான் ரோஹித் கூட சண்டை போட்டுட்டு அவன் வேணாம்னு வந்தப்போ அவன் பேசுன பேச்சும், அவங்க ஏமாத்துனதும் தான் ரொம்ப காயத்தை கொடுத்துச்சு. மத்தபடி அவன் மேல இருக்குற காதல் பத்தி எல்லாம் நான் யோசிக்கவே இல்லை.

ஆனால் அன்னைக்கு உங்க கிட்ட நான் நிச்சயம் வேணாம்ன்னு சொன்னப்பவும், உங்களை விட்டு பிரிஞ்சு போகணும்னு நினைச்சப்பவும் செத்துடலாம் போல இருந்துச்சு. அவ்ளோ வலி உள்ளுக்குள்ள. உங்களை விட்டு போகணும்னு என்னால யோசிக்க கூட முடியல. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இளா… உங்களை அவாய்ட் பண்ணும் போதெல்லாம் உங்ககிட்ட மனசுல இருக்குற எல்லாத்தையும் கொட்டணும்னு மனசு கிடந்து தவிக்கும். ஐ லவ் யூ இளா!

ஒருவேளை பெரியம்மா அப்படி பேசாம இருந்திருந்தா, அந்த வசந்த் இப்படிலாம் பண்ணாம இருந்திருந்தா, அப்பா, அம்மாவுக்காக மட்டுமே உங்களை கல்யாணம் பண்ணிருப்பேன். இப்போ உங்களை நல்லா புருஞ்சு ரொம்ப ரொம்ப லவ் பண்ணி கல்யாணம் பண்ண போறேன். அதான் எனக்கு அவங்க மேல கோபமே இல்லை. சீரியஸ்லி நீங்க ஒரு யூனிக் பீஸ் இளா. இப்படியும் ஆம்பளைங்க இருக்காங்களான்னு எனக்கு தெரியல. பட், உங்களை பார்த்து நம்ம பையனை கூட உங்களை மாதிரி தான் வளர்க்கணும்னு ஆசையா இருக்கு!” என்று கண்ணில் இருந்து நீர் வழிய, தன் காதலை சமர்ப்பித்தவளின் கடைசி வாக்கியத்தில் சிறிதாய் வெட்கம் வந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

தன்னவள் கூறிய காதலில் மகிழ்ச்சியின் எல்லையில் திளைத்திருந்த இளமாறன், பூவாய் மலர்ந்து குறுஞ்சிரிப்புடன், மென்மையாய் அவளை அணைத்துக் கொண்டான். பின், அவளின் காதருகில், “பட் எனக்கு பொண்ணு தான் வேணும்… உன்னை மாதிரி!” என்று கிசுகிசுக்க, அதில் மேலும் சிவந்து வெட்கியவள், அழுத்தமாக அவன் நெஞ்சில் முகத்தை புதைத்தாள்.

அவளின் வெட்கம் அவனுக்கு வெகுவாய் சுவாரஸ்யத்தை கொடுக்க, “ஓய்! பிளஷ் பேபி ருத் கேண்டி! வெட்கப்பட்டுட்டு முகத்தை மறைச்சா எனக்கு எப்படி தெரியும்…” என்று அவளை நிமிர்த்த, அவளோ கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.

அதில் மாறன் நன்றாகவே புன்னகைத்து, அவளின் கையை எடுத்து விட்டவன், அவளின் நெற்றியோடு நெற்றியை முட்டி, “இதுக்கே வெட்கப்பட்டா எப்படி மேடம்…? ம்ம்?” என விழி உயர்த்தி குறுகுறுவென பார்க்க, “அச்ச்சோ… நான் போறேன்…” என அவனிடம் இருந்து தப்பிக்க நினைத்தாள்.

“ஹான் ஹான்… எங்க ஓடுற…? இவ்ளோ நாள் என்னை அலைய விட்டதுக்கு உன்னை கல்யாணம் வரைக்கும் அலைய விடலாம்ன்னு பார்த்தேன். நீ என்னன்னா என்னன்னவோ பேசி என்னை இப்படி ரொமான்ஸ் பண்ண வைச்சுட்ட…” என்று போலியாய் முறைத்தவனை வெட்கப்புன்னகையுடன் பார்த்தவள், “அப்போ சாருக்கு கோபம் போயிருச்சா…?” எனக் கேட்டாள்.

“ம்ம்ஹும்… அது எப்படி போகும். கல்யாணம் வரைக்கும் போகாது… அப்படி போகணும்னா நீ ஒன்னு பண்ணனும்…” என கீழ்க்கண்ணால் அவளை ரசிக்க, அவளோ எதையும் யோசியாமல் “என்ன பண்ணனும்னு சொல்லுங்க பண்றேன்…” என்றாள் உடனே.

மர்ம புன்னகை பூத்த இளமாறன் தான், “கல்யாணம் வரைக்கும் டெய்லி நான் உன்ன பார்க்க வருவேனாம்… நீ எனக்கு ஒரு கிஸ் குடுப்பியாம்… கல்யாணம் வரைக்கும் இதை தொடர்ந்து பண்ணுனா, பண்ணுன எல்லா லூசுத் தனத்துக்கும் பாவ மன்னிப்பு கிடைக்குமாம் கேண்டி…!” என்று குறும்பு கொப்பளிக்க கூறியதில், அவளோ பனித்துளியாய் உறைந்திருந்தாள்.

“ஐய… ஆசை தோசை…!” என அவனிடம் இருந்து விடுபட முயல, அவளின் இடையை அவனின் கரம் கொண்டு சுற்றி வளைத்து அணை போட்டிருந்தான்.

“உனக்கு வேற வழியே இல்ல கிட்கேட்… குடுக்காம இங்க இருந்து போக முடியாது” என கண்ணடிக்க, அவளும்  ஏதேதோ கெஞ்சிப் பார்த்தும் அவன் அசையவே இல்லை. இறுதியில் வெட்கத்துடன் அவன் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டாள் சித்ராக்ஷி.

அதில் தன்னிச்சையாய் அவனுக்கு இளநகை பூக்க, “லவ் யூ கிட்கேட்!” என பரிவாய் கூறியவன், அவளின் நெற்றியிலும் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான்.

தாபத்தை விட நேசமே அதில் நிறைந்திருக்க, தன்னவனை வெட்கம் விடுத்து வாஞ்சையாய் பார்த்தவள், பார்வதி அவளை அழைத்ததும் தான் தன்னிலை வந்தாள். “ஐயோ! இலை எடுக்கவே இல்லை…” என்று தலையில் கை வைத்ததில், “இரு நான் எடுத்து தரேன்…” என இருவரும் ஏதோ பேசியபடியே இலையை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைய இருவரின் நிம்மதி கலந்த முகத்தை பார்த்த குடும்பத்தினருக்கு மேலும் நிம்மதியாக இருந்தது.

முகுந்த் தான் அவனை ஒரு மாதிரியாக பார்த்து, “அப்படி இப்படின்னு கரெக்ட் பண்ணிட்ட போல ஒரு வழியா” என கேலியாய் வினவ, “பின்ன உன்ன மாதிரியா கல்யாணம் ஆகியும் சிங்கிலா இருக்க…!” என்று அவனை வாரினான்.

“ஹய்ய… நாங்களும் பத்து நாள்ல கரெக்ட் பண்ணிடுவோமாக்கும்…!” என்று சிலுப்பிக்கொண்டவன் பின் விருந்தை சிறப்பித்தான்.

நாளும் பொழுதும் இனிய திருமண தருணத்திற்காக நகர, முகுந்தின் அக்கறை கலந்த பாசம் பல முறை செல்வியை நனைத்தாலும், அவளாக அவனிடம் சென்று பேச தயங்கவே செய்தாள். அதிலும், என்ன பேசினாலும் அவனின் முகத்தில் ஒரு ஒட்டுதல் தன்மை இல்லையோ என்ற ஏக்கமும் அவளை நிரம்ப செய்ய, வெகுவான குழப்பத்தில் இருந்தாள்.

இங்கோ இளமாறன் மற்றும் சித்ராக்ஷியின் முத்தங்கள் தினமும் தொடர்ந்திட, தினமும் ஒரு முறையேனும் அவளை காண மாறன் வந்து விடுவான்.

திருமணத்திற்கு இரு நாள் இருக்க, முகுந்த் சித்ராக்ஷிக்கு ஏதாவது பரிசு தரவேண்டும் என்றெண்ணி செல்வியை அழைத்து கொண்டு நகைக் கடைக்கு சென்றான்.

“செல்வி… உன் தங்கச்சிக்கு என்ன பிடிக்கும்னு நீயே செலக்ட் பண்ணு…” என்றதும், அவள் ஆர்வமாகி “அவளுக்கு செயின் தான் பிடிக்கும் அது பார்க்கவா…?” எனக் கேட்க, “ம்ம்… பாரு” என்றான்.

அவளும் வெகு நேரம் தேடி பிடித்து “I” என பொறிக்கப்பட்ட ஒரு செயினை எடுத்து முகுந்திடம் காட்டினாள். “இது அழகா இருக்குங்க” என விழி மின்ன கூறியவளை அப்போது இருந்து கண்ணெடுக்காமல் பார்த்திருந்தவன், இப்போதும் பார்வையை நகற்றாது, “அப்போ அதையே எடுக்கலாம்…!” என பில் கௌண்ட்டர்க்கு போக, அவளும் முகமலர்ச்சியுடன் வந்தாள்.

அவனோ ‘எதையாவது வேணும்னு கேக்குறாளா பாரேன்…’ என முணுமுணுத்துக் கொண்டிருக்க, அப்போது ஒரு பெண் முகுந்திடம் வந்து பேசிக் கொண்டிருந்தாள். அவனும் செல்வியை அழுத்தமாக “என் மனைவி” என்று அறிமுகப்படுத்தி விட்டு அவளிடம் இருந்து நகர, செல்விக்கு அவள் யாரென வாய் வரை வந்தாலும் எதுவும் கேட்காமல் வந்தாள்.

கடைசியில் முகுந்தே சற்று கோபமாக, “யாரோ ஒரு பொண்ணு கூட நின்னு பேசுறேன். யார் அதுன்னு கேட்க மாட்டியா?” என அதட்டலாக கேட்க அதில் திரு திரு வென விழித்தவள், “அது அது… உங்க பிரெண்டா இருக்கும்ன்னு நினைச்சேன். நீங்களே சொல்லுவீங்கன்னு…” என்று உள்ளே சென்ற குரலில் கூற, “அப்போ நீ எதுவுமே கேட்க மாட்ட அப்படி தான?” என்றான் சீறலாக.

அதற்கும் அவள் பேந்த பேந்த விழிக்க, அவனோ “அந்த பொண்ணை நான் பொண்ணு பார்க்க போயிருந்தேன். ஆனால் நான் கருப்பா இருக்கேன். அழகா இல்லன்னு வேணாம்னு சொல்லிட்டா. அதான் அவள் முன்னாடி உன்ன அறிமுகப்படுத்தினேன்” என்று பேசி முடிக்கும் முன்னே, “என்ன அழகா இல்லையா? எதை வைச்சு அவள் அப்படி சொன்னா…? கலரா இருந்தா அழகா இருக்கோம்ன்னு அர்த்தமா? மனசளவுல நீங்க யாருக்கும் சின்ன தப்பு கூட நினைச்சது இல்லை. அப்படி பார்த்தா உங்களை விட இங்க யாரும் அழகு இல்ல. இதை நீங்க முன்னாடியே சொல்லிருந்தா அந்த பொண்ணை நல்லா நாலு வார்த்தை கேட்டுருப்பேன்ல…” என்று பொங்கி விட்டாள் அவனின் மனையாள்.

அவளை இறுக்கி அணைக்க துடித்த கரங்களை அரும்பாடுபட்டு அடக்கிய முகுந்துக்கு ஏனோ மனமெல்லாம் சிறகடித்து பறந்தது. அவளையே ரசித்தபடி அமைதியாக நின்றவனை இப்போதும் கோபமா தான் இருக்காரோ என்றெண்ணி, “என்மேல கோபமா?” எனக் கேட்டாள் சற்றே கலங்கிய குரலில்.

“அப்பாடா… இந்த கேள்வியை கேட்க உனக்கு இவ்ளோ நாள் ஆச்சா?” என அவன் லேசாக முறைத்து, “நான் கோபமா இருக்கேன்னு தெரியுது. ஆனால் எதுவுமே கேட்க மாட்ட…! என்கிட்ட பேச மாட்ட! எதையும் சொல்ல மாட்ட…! நான் உன் ஹஸ்பண்ட் தான செல்வி…? என்கிட்ட ஏன் இவ்ளோ ஒதுக்கம். நான் கோபமா இருந்தா என்னை சமாதானம் கூட பண்ண மாட்டியா?” என ஆதங்கத்துடன் கேட்டான்.

அவளோ ஒரு நொடி விழிக்க, அவன் மேலும் “நீ கல்யாணம் வேணாம்னு சொன்னப்போ என்னவோ மனசெல்லாம் ரொம்ப ஒரு மாதிரி ஆகிடுச்சு செல்வி. எனக்கு புரிஞ்சுது. உன்னால உன் தங்கச்சி கல்யாணம் நின்னது உனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கும்ன்னு. ஆனாலும், அந்த வார்த்தை உன்ன பாதிக்குதான்னு தெரிஞ்சுக்க தான், நான் கல்யாணம் வேணாம்னு சொன்னேன். ஆனால் உன் முகம் வேதனையை குடுத்தப்பவே தெரிஞ்சுது. உன் மனசுல நான் இருக்கேன்னு.

ஆனால் நீ என்ன தான் பண்றன்னு பார்க்க தான் பேசாம இருந்தேன். கடைசியில் இப்போவாவது கேட்டியே…?” என காண்டாகி மனதில் இருந்ததை கொட்டி இருக்க, அவள் தான் சில நிமிடம் பேசாமலேயே இருந்தாள்.

பின், “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்…” என்று தலையை தாழ்த்தி கூறியவளை கண்டு விழி விரித்தவன் அவளை ஆர்வமாக பார்க்க, அவளோ “ஏன்னு தெரியல. அன்னைக்கு நீங்க வீட்டுக்கு வந்து உங்களை உள்ள விடாம நான் பேசுனப்போ நீங்க கோபப்பட்டது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதுக்கு அப்பறம் உங்களை எனக்கு கல்யாணம் பண்ண பேசுனப்போ எப்போவும் இல்லாம இது நல்லபடியா நடக்கணும்னு உள்ளுக்குள்ள எனக்கே தெரியாம அவ்ளோ வேண்டிக்கிட்டேன்.

ஆனால் கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி நினைக்கிறது தப்புன்னு என்னை நானே திட்டிக்கிட்டாலும், என்னால உங்களை நினைக்காம இருக்க முடியல.

கல்யாணத்து அன்னைக்கு ஏதோ ஒரு வேகத்துல கல்யாணம் வேணாம்னு சொன்னாலும் நெஞ்செல்லாம் வலிக்கிற மாதிரி இருந்துச்சு. ஆனாலும், என் தங்கச்சிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு தான் அந்த வார்த்தையவே சொன்னேன்.

உங்க தம்பி அவளை கல்யாணம் பண்ணிப்பேன்னு உறுதியா சொன்னதும் தான் நிம்மதியே ஆச்சு. எனக்கு தெரியும் நான் சொன்னது உங்களை கஷ்டப்படுத்திருக்கும்னு… அதான் உங்க கோபம் சரியாகுற வரை பொறுமையா இருக்கலாம்னு நினைச்சேன். ஆனால் உங்க கிட்ட எப்படி பேசன்னு எனக்கு நிஜமா தெரியல… ரொம்ப தயக்கமா…” என வலி மிகுந்த வார்த்தைகளுடன் அவளின் நேசத்தை எடுத்துரைத்தவள் இறுதியாக திக்கி திணறி, “ரொம்ப வெட்கமா இருக்கு…” என்றாள் அநியாயத்திற்கு வெட்கத்தை ஏந்தி.

அதில் ஆடவனுக்கு தான் நெஞ்சமெல்லாம் புது புது வண்ணங்கள் பிறந்தது. தனக்கு பிரியமானவர்களின் அன்பை பெறுவது தான் எத்துணை பெரிய மகிழ்ச்சியை, எதையோ சாதித்த உணர்வை கொடுக்கிறது!  என வியந்தவன், அவளை சிறு சிரிப்புடன் பார்த்திருந்தான்.

அவன் எதுவும் பேசாமல் இருந்ததில் இன்னும் கோபமாக தான் இருக்காரோ என்றெண்ணி லேசாக விழி நிமிர்த்தி பார்த்த செல்வி, பார்த்த கணத்தில் அவனின் பார்வை வீரியம் தாங்காது சட்டென குனிந்திருக்க, அவனுக்கோ சுவாரஸ்யம் தாளவில்லை பெண்ணின் பாவனையை கண்டு.

உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவன், “லூசு பொண்டாட்டி… என்கிட்ட வெட்கம் இருக்குன்னு சொல்லு. அதை நான் க்ளியர் பண்றேன். ஆனா எதுக்கு தயக்கம்? உன் அப்பாகிட்ட பேசும் போது, ஏதாவது கேட்கும் போது தயங்குவியா? நானும் உனக்கு அது மாதிரி தான். என்கிட்ட நீ என்ன வேணா பேசலாம். உன் நேசத்தை எப்படி வேணா வெளிக்காட்டலாம். சரியா?” என அவள் உயரத்திற்கு குனிந்து வினவ, அவளும் மனதில் பொங்கிய காதலுடன் கூடிய புன்சிரிப்புடன் “ம்ம்” என தலையாட்டினாள்.

“குட்… போலாமா?” என்றவன், பைக்கில் ஏற்றி அவளை அழைத்து செல்ல, ஸ்வீட் நத்திங் பேசியபடி வீட்டிற்கு வந்தவர்களின் பேச்சு சுவாரஸ்யம் வீடு வந்த பின்னும் அடங்கவில்லை. அவனும் அவனின் கோபம், கிண்டல், குறும்பை விடுத்து இயல்பாக பேச, அவளும் அவனின் பேச்சில் தன் தயக்கத்திற்கு விடுதலை கொடுத்திருந்தாள்.

“என்ன ஏதோ பேச்சு சத்தம் கேட்குது…” என்று வெளியில் வந்து பார்த்த சாரதா தான் காற்றிலேயே இருவருக்கும் நெட்டி முறிக்க, வித்யாவும் செந்திலும் “ப்பா… இவங்க ரெண்டு பேரும் பேசியே இன்னைக்கு தான் பாக்குறோம்…” என மகிழ்ந்தனர்.

இரு காதல் ஜோடிகளின் கூடல் பொழுதுகளை கண் கொண்டு காணவே தவம் இருப்பது போல, அன்றைய நிலவு மேகத்தில் மறைந்து திருமண நன்னாளில் சூரியனை பிரகாசிக்க விட, நிலவு மகளோ அச்சூரியனின் மறைவிற்காக காத்திருந்தது.

தங்கையின் திருமண வேலையில் பிசியாக சுற்றிக்கொண்டிருந்த செல்வியை கரம் பிடித்து தடுத்த முகுந்த், “என்னடி! பட்டு சேலையை இப்படி ஒழுங்கா மடிப்பு வைக்காம இருக்க…” என கீழே அமர்ந்து அவளின் புடவைக்கு மடிப்பை சரியாக வைக்க, “அவசர அவசரமா கட்டுனேன்ங்க… போதும் விடுங்க. நீங்க போய் மாறன் கிளம்பிட்டாரான்னு பாருங்க. நான் சித்ராவை பாக்குறேன்…” என உத்தரவிட்டு விட்டு சித்ராக்ஷியின் அறையில் அவள் நுழைய, அங்கோ இளமாறன் தான் “கேண்டி… இந்த நெத்திச்சூடி மேட்ச் ஆகல. வேற மாத்திக்கலாம்” என அபிப்ராயம் கூறிக் கொண்டிருந்தான்.

“என்ன கொழுந்தனாரே… மாப்பிள்ளை ரூமை எப்போ இங்க மாத்துனாங்க?” என அவள் நக்கலடிக்க, மாறனோ, “இப்போ தான் மாத்துனாங்க செல்வி டியர் உனக்கு தான் விவரம் பத்தல… இப்படி தான் கல்யாணம் பண்ணிக்க போறவங்க இருக்குற ரூம்ல பொசுக்குன்னு நுழையிறதா?” என்று இடுப்பில் கைவைத்து கேலி செய்தான்.

செல்வியோ, “பார்த்து கொழுந்தனாரே… இன்னும் கல்யாணம் ஆகல. எப்படினாலும் உங்களுக்கு அண்ணி தயவு வேணும்… சொல்லிட்டேன்…” என்று கண்களை உருட்டி மிரட்டிட, அதில் உள்ளுக்குள் புன்னகை வந்தாலும் வெளியில் பயப்படுவது போல் பாவனை செய்தவன், “அய்யயோ… மறுபடியும் முதல்ல இருந்தா… நான் போய் தாலியோட உட்காந்துருக்கேன். ட்விஸ்ட் வைக்காம என் கேண்டிய கூட்டிட்டு வந்துடு அண்ணி…” என வெளியில் ஓடியே விட்டான்.

அதில் பெண்கள் இருவரும் தான் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினர். பின், அவர்கள் ஆர்வமாய் எதிர்பார்த்த அந்நொடியும் அவர்கள் முன் வீற்றிருக்க மணமேடையில் இளாவும் கேண்டியும் ஒருவரை ஒருவர் விழியால் தீண்டியபடி அமர்ந்திருந்தனர்.

பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் இளமாறன் அவனின் கிட்கேட்டை தன் மனையாள் ஆக்கி இருக்க, அவளுக்கு தான் கண்ணோரம் ஒரு துளி நீர் கசிந்து நின்றது. இத்தனை காதலுடன், ஆசையுடன் ஒரு திருமணத்தை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலும் அத்தனை கசப்பிற்கு பிறகு… காதல் என்ற அத்தியாயம் தன் வாழ்வில் முடிந்து போனதாகவே எண்ணி இருந்தவளுக்கு இன்றைய நாள் பெரும் தவமாய் அமைந்தது. அவளை கண்ட இளமாறன் முகுந்த் காதில் ஏதோ ஓத, அவனும் ஒரு லட்டை எடுத்து வந்து மாறனிடம் கொடுத்தான்.

“ஓய்! கிட்கேட்… இப்படி கண்ண கசக்குனா… அப்பறம் வந்துருக்குற அத்தை பொண்ணு தீபாவுக்கு லட்டு ஊட்டி விடுவேன் எப்படி வசதி…” என்று மிரட்டலாய் கேட்டவனை அவள் புன்னகைத்தபடி முறைக்க, தீபா தான் “நான் ரெடி மாமா…” என்றாள் பின்னால் நின்று.

அதில் இளமாறன் தான், கையில் லட்டை வைத்துக் கொண்டு, “ம்ம்…ஊட்டிடவா?” என விழியால் வினவ, சித்ராக்ஷி உதட்டை பிதுக்கி “ம்ம்ஹும்…. எனக்கு தான்” என்றாள் சிறுபிள்ளையாக.

“கியூட் காராமில்க்…” என உதட்டை குவித்து கொஞ்சியவன் லட்டை அவளுக்கு ஊட்டி விட, அவளும் “ஹேண்ட்ஸம் ஹனி அவகேடோ!” என கொஞ்சிக் கொண்டு அவனுக்கு ஊட்டினாள்.

கேலி, கிண்டல், கொஞ்சல், அரட்டை என சித்ராக்ஷி புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்க, செல்விக்கோ குஷி தாளவில்லை. சாரதா தான், “இரு இரு… ரொம்ப சந்தோசப்படாத. ஓரகத்தி சண்டை எல்லாம் நாங்க பார்க்கலாம்ன்னு ஆவலா இருக்கோம். நீ இப்படி இருந்தா எப்படி எங்களுக்கு என்டர்டைன்மென்ட் ஆகும்…?” என்று கேலி செய்தார்.

சித்ராக்ஷி தான், “சாரதாம்மா… இவள் கிட்ட சண்டை போடணும்னா கல்யாணம் வேணாம்னு தான் சொல்லணும். இப்போ அதுக்கும் வழி இல்லையே…” என்று கண்ணடித்தாள்.

சாரதாவோ, “எப்படி வழி இருக்கும். நீ சிக்குனது என் மருமகன்கிட்டயாக்கும்…” என பெருமை அடித்தவரை, “ரொம்ப தான். உங்க மருமகன் தான் என்கிட்ட சிக்கி இருக்காரு…” என்று அழகு காட்டினாள்.

பின், இனிதாய் அவர்களுக்கே உரித்தான தனிமையும் கிடைத்தது.

சித்ராக்ஷியை முதலிரவு அறைக்கு அனுப்பி விட்டு, தன் அறைக்கு வந்த செல்வி, உறைந்து நின்றாள். அங்கோ, அவளறையும் அதே போல் அலங்கரிக்கப்பட்டிருக்க, முகுந்த் அவளை ரசித்து கொண்டிருந்தான்.

பெண்ணவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்ன, மெல்ல உள்ளே வந்தவளின் கையைப் பிடித்து அருகில் அமர வைத்தான். பின் இரு கையிலும் அவனே வளையல் அணிந்து விட, அதனை வியப்பாக பார்த்தவள் “என்னங்க இது?” என்றாள்.

“பார்த்தா தெரியல… வளையல். அன்னைக்கு சித்ராக்கு செயின் வாங்க போகும் போதே நீ செலக்ட் பண்றதுக்கு முன்னாடி நான் பண்ணிட்டேன்… என் செல்ல செல்விக்காக” என்று தலையை சாய்த்து கூறியவன், அவள் முகத்தில் தெரிந்த வெட்கத்தையும் மகிழ்ச்சியை கண்டு, “அன்னைக்கு நீ என்கூட சண்ட போடுவன்னு நினைச்சேன்” என்றான்.

அவளோ ஏனென்று பார்க்க,  “பின்ன கல்யாணம் ஆகி முதல் முதல்ல உனக்கு எதுவும் வாங்காம உன் தங்கச்சிக்கு வாங்க போறேன்னு சொல்றேனே… கோபப்பட மாட்ட…” என சிரிப்புடன் கேட்க, அவள் தான், “எப்படினாலும் என் தங்கச்சிக்கு தான் வாங்க போறீங்க. அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்” என்று தான் ஒரு நல்ல அக்கா என்று நிரூபிக்க, அதில் தலையில் அடித்தவன், “உன்கிட்ட சண்டை எதிர்பார்த்தது என் தப்பு தான். இப்படியே விட்டா நீ பாசமலர் அக்கா வெர்சன் பார்ட் த்ரீ எடுப்ப…” என்றவன், அவளை அடுத்த நொடி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

தன்னவனின் முதல் தீண்டலில் தவித்த மங்கையோ மயங்கி இருக்க, இதயம் கவர் கள்ளனோ அவளை அவனவளாக திருடிக்கொண்டிருந்தான் முத்தங்களுடன்.

மனம் முழுதும் நிறைந்த வெட்கத்துடன் அறைக்குள் புகுந்த சித்ராக்ஷி அங்கு மாறன் கட்டிலில் அமர்ந்து ஏதோ தீவிரமாக வேலை பார்ப்பது போல் இருந்ததில் அவளும் அருகில் செல்ல, அங்கோ இதுவரை அவளை கொஞ்சுவதற்கென்று கூறிய சாக்லேட்டை எல்லாம் மெத்தை முழுக்க பரப்பி இருந்தான்.

அதனை கண்டு “வாவ்…” என விழி விரித்த சித்ராக்ஷியை கண்டு குறுநகை புரிந்தவன், “எப்படி நம்ம சர்ப்ரைஸ்… ஆனால் எல்லாம் வெளிநாட்டு சாக்லேட்டா கொஞ்சிட்டேன் போல. இதை வாங்குறதுக்குள்ள போதும் போதும் ன்னு ஆகிடுச்சு கேண்டி…” என ஆசுவாசமானவன், அதன் பிறகே அவள் அணிந்திருந்த புடவையை கண்டு
சிலையானான்.

அவர்களின் நிச்சயத்திற்காக மாறனே தேர்ந்தெடுத்திருந்த புடவை அது. அதுவும் இருவரும் கண்ணாலேயே பேசியபடி எடுத்த புடவையாகிற்றே. அதனை கண்டவனின் பார்வை தான் நிமிடத்தில் மாறிட, ஒரு கிட்கேட்டை மட்டும் எடுத்து அவளிடம் நீட்டி “லவ் யூ கேட்கேட்… புடவை பக்கா” என்றான் ரசனையாக.

அவளோ சொல்லில் எழாத உணர்வுகளில் சிக்கி, காதலில் கரைந்து கை நடுக்கத்துடன் அதனை வாங்க, அவளின் நடுக்கத்தை உணர்ந்தவன், அப்படியே இழுத்து அவன் மடியில் அவளை இருத்திக் கொண்டான்.

“என்ன ஆச்சு… என் கேண்டிக்கு” என அவன் மென்மையாய் வினவ, அவளோ, ஏதேதோ கேட்க வந்தும் வார்த்தை எழாமல் அவனின் நெருக்கத்தில் சிதைய, அவனும் இப்போது தன்னிலை இழந்திருந்தான்.

தன் அதரம் கொண்டு அவளின் பின்னங்கழுத்தில் கோலமிட்டவன், கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டு இறுதியில் இதழ்களை முற்றுகையிட்டதில் இருவரும் அடுத்து வந்த சில நிமிடங்கள் காமனின் உலகில் வலம் வந்தனர்.

அவனின் தேடலும், அவளின் தவிப்பும் ஒரு முடிவுக்கு வர, பாவையின் பூ முகம் ஆணவனின் மார்பில் சரிந்திருந்தது.

“ஒய்! கிட்கேட்!” என அவளின் கூந்தலை வருடிக்கொண்டே அவனழைக்க, லேசாய் தலையை உயர்த்தி பார்த்த சித்ராக்ஷி மீண்டும் புன்னகையுடன் குனிந்து கொண்டாள்.

“என்னடி! ஒன்னும் பேச மாட்டேங்குற…!” என்று அவன் குறை பட, ‘நீ எங்கடா பேச விட்ட?’ என்பது போல் மீண்டும் நிமிர்ந்து பார்த்தாள்.

அதில் இருவருக்கும் புன்னகை பூக்க, மௌன விரதத்திற்கு விடுதலை கொடுத்தவள், “இளா… உங்க கிட்ட ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சுட்டே இருந்தேன். மறந்துட்டேன்… சாரதாம்மா ஏன் என்னை பொண்ணு பார்க்க வரும் போது அப்படி பேசுனாங்க…” என்று யோசனையாய் வினவ, அவன் தான், “ஏன்டி ரொமான்டிக் மோட்ல இருக்கும் போது கேக்குற கேள்வியா இது?” என கிண்டலடித்து விட்டு, நடந்ததை கூற, அவளோ “அடப்பாவிங்களா… இப்படியா பண்ணுவீங்க… பாவம் சாரதாம்மா…” என்று அவன் நெஞ்சிலேயே குத்தினாள்.

“நான் என்ன பண்ண கேண்டி… கல்யாணம் வேணாம்னு பொண்ணு பார்க்க வந்த என்ன, கல்யாணம் வேணும்னு மாத்திட்ட… மை ஸ்வீட் கிட்கேட்…” என்று இறுக்கி அணைத்துக் கொண்டவனின் அணைப்பில் மெழுகாய் உருகியவள், “அது என்ன… கொஞ்சும் போது எல்லாம் வேற சாக்லேட். ப்ரொபோஸ் பண்ணும் போது மட்டும் கிட்கேட்…” என அவனின் நெற்றியில் விழுந்த முடிகளை கோதி விட்டபடி கேள்வி எழுப்பினாள்.

அவனும் “அதுவா… நீ பார்க்க தான் சாஃப்ட். பட் மனசுக்குள்ள ரொம்ப போல்ட் அண்ட் ஸ்ட்ராங் கேண்டி. உன்ன பார்த்தா எனக்கு என்னவோ சாக்லேட் நினைப்பு தான் வருது. அதுவும் கிட்கேட் மாதிரி வெளிய சாஃப்ட், உள்ள கிரிஸ்பியா இருப்பியா. சோ, நீ எப்போவுமே என் கிட்கேட் கேண்டி பொண்ணு தான்…” என கன்னம் கிள்ளி அவளை கொஞ்சியவனை, காதலாக நோக்கியவள், “நீங்க எனக்கு எப்போவும் இளகி இருக்குற இளா ஐஸ்கிரீம் தான்…” என்று நேச உணர்வுகள் எல்லை மீறக் கொஞ்சிட, அவனும் அவளிடம் எல்லைகளை கடக்கத் தொடங்கினான்.

மறுநாள், இரு ஆண்களும் டைனிங் டேபிளில் முகத்தை சுருக்கியபடி அமர்ந்திருந்தனர்.

பெண்கள் இருவரும் குளித்து கிளம்பி அறையை விட்டு வெளியில் வந்திருக்க, இவர்களை கண்டு செல்வி சித்ராவை புரியாமல் பார்த்தாள்.

சித்ராவோ, “என்ன ஆச்சு இளா. ஏன் இப்படி உட்காந்துருக்கீங்க? என்ன மாமா ஆச்சு” என இருவரிடமும் கேட்க, வீட்டினர் தான் “இதை தான் நாங்களும் அப்போ இருந்து கேட்கிறோம். பதில் சொல்ல மாட்றானுங்க…” என சலித்தனர்.

அதில் சித்ரா “ப்ச்… இப்ப சொல்ல போறீங்களா? இல்லையா?” என முறைக்க, இளமாறன் தான் “நம்ம கல்யாணத்தை கேன்சல் பண்ணிடலாம்” என்றான் தீவிரமாக.

அக்கூற்றில் இரு பெண்களும் விழிக்க, முகுந்த் “ஆமா, இந்த கல்யாணம் எனக்கு வேணாம்…” என்றதில் செல்வி அவனை “ஏன்? ஏன்? வேணாம்…” என உதட்டை பிதுக்கினாள்.

மாறன் தான், “அதெல்லாம் கேட்க கூடாது. கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க வேணாம்ன்னு சொன்னப்ப நாங்க கேட்கல. இப்போ எங்களுக்கு வேணாம்…” என தோளைக் குலுக்கிட, சித்ரா கையில் தோசைக் கரண்டியை எடுத்திருந்தாள்.

செல்வியோ கையில் கத்தியையே எடுத்திருக்க, “ஆத்தி… என் பொண்டாட்டி கோபப்பட்டுட்டா…” என மிரண்டு எழுந்த முகுந்த், “டென்ஷன் ஆவாத செல்வி செல்லம். சும்மா லுலுவாய்க்கு… சொல்லி பார்த்தோம்…” என்று அனைத்து பல்லையும் காட்ட, அதில் செல்வி சிரித்து விட்டாள்.

ஆனால், சித்ரா எடுத்த கரண்டியை கொண்டு இளமாறனை துரத்த தொடங்க, “ஹே! கேண்டி. சும்மா சொன்னேன்டி….வன்முறையை கையில எடுக்காத” என்று எச்சரித்த படி ஓட, அவளோ “அப்போ நானும் சும்மா நாலு அடி அடிக்கிறேன். ஒழுங்கா நில்லுங்க…” என்றாள் மிரட்டலாக.

அதில் முகுந்த் தான், “நல்லவேளை என் பொண்டாட்டி அகிம்சாவாதின்ற நால நம்ம பாடி தப்புச்சுச்சு… எப்படி தான் பொண்டாட்டிகிட்ட அடி வாங்கி உயிர் வாழுறானுங்களோ…?” என வடிவேலு பாணியில் மைண்ட் வாய்ஸ் என எண்ணி வெளியில் புலம்பிக் கொண்டவனின் எதிரில் இளமாறன் கொலை வெறியுடன் நின்றிருந்தான்.

பின்னே, சும்மா இருந்தவனை “வா… ஆக்டிங் பண்ணி ரெண்டு பேரையும் பயமுறுத்தலாம்” என்று யோசனை கூறியதே அவன் தானே.

பிறகென்ன இளமாறன் தன் தமையனுக்கு தர்ம அடி வழங்க முற்பட, இரு பெண்களும் அவர்களை ரசனையுடன் ரசித்திருக்க, நாமும் அடி வாங்கும் முன் அவர்களை ரசித்தபடி வாழ்த்தி விடை பெறுவோம்… ❤️

கிட்கேட் உருகியது
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
73
+1
12
+1
5

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  5 Comments

  1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  4. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.