Loading

            “நீ என்ன சொல்ற ராகினி. ஆபிஸ்ல பாதி பேரு அப்படி நினைக்கறாங்களா நான் இந்த ஆபிஸ்ல சேர்ந்தே ஒரு மாசம் கூட ஆகல தெரியும்ல.” என்றாள் மகி. “அதுதான் பிரச்சனையே மகி. பொதுவா சந்துரு சார் ரொம்ப ரூடா தான் எல்லாகிட்டயும் பிகேவ் பண்ணுவாரு.

யாரும் காரணம் இல்லாம அவர்கிட்ட பேச கூட முடியாது. ஆனா நீ அவர்கூட இயல்பா பழகுற. அடிக்கடி கேபினுக்கும் போய்ட்டு வர்ற. அந்த காண்டுதான் வேற என்ன. இது எல்லாத்துக்கும் மேல நீ மிடில் கிளாஸ் அவரு ஹைகிளாஸ் அது பத்தாதா. அவ்ளோதான் ரீசன்.” என்றாள் ராகினி.

“சரி. நான் பார்த்துக்கறேன்.” என்ற மகி.. தனது வேலைகளை கவனிக்க ராகினியும் அவளிடத்திற்கு சென்றாள். ஆனால் உள்ளே இன்னும் சண்டை ஓயவில்லை. எது பேசினாலும் நிரஞ்சனி எதிர்த்தே பேசிக் கொண்டிருக்க, “இப்ப என்னதான் சொல்ல வரீங்க?” என்றான் சந்துரு.

நிரஞ்சனி, “இதை முன்னாடியே கேட்டு இருந்தா இவ்வளவு பேசி இருக்க வேண்டியதில்ல.” எனவும், சந்துரு கடுப்பாகி அவளை முறைக்க அவளோ அதை கண்டு கொள்ளாமல், “சிஸ்கோ கம்யூட்டர் சொல்யூஷன்ஸ் பெங்களூர்ல இருக்குல்ல. அதோட எம்.டி இப்ப யாரு தெரியுமா?” எனக் கேட்டாள்.

“ஓ நீங்க வாங்கிட்டிங்களா. இந்த பெருமையை சொல்லதான் இங்க வந்தீங்களா. எப்ப அங்க கிளம்பறீங்க?” என்றான் சந்துரு. “நானெல்லாம் கம்பெனிக்கு எம்.டி ஆக முடியாதுனு நக்கல் பண்றீயா? அதுக்கு உங்கண்ணன் தான் இப்ப எம்.டி. அது தெரியுமா உனக்கு.” என நிரஞ்சனி கேட்டதில் திகைத்து போய் பார்த்தான் சந்துரு.

“என்ன அப்படி பார்க்கற. நம்ப முடியலயா? ரொம்ப நாளாவே அங்கதான் இருந்துருக்கான். இப்ப பத்து நாளுக்கு முன்னாடிதான் பொறுப்புக்கு வந்துருக்கான். இங்க எல்லாரையும் சுத்தல்ல விட்டுட்டு அவன் அங்க ஜாலியா இருந்துருக்கான் பாரு.” என்றாள் நிரஞ்சனி.

சந்துருவுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. தனது அண்ணன் இருக்குமிடம் தெரிந்த மகிழ்ச்சியில் இருந்தான். “உங்களுக்கு எப்படி தெரியும்? நிஜமாவா சொல்றீங்க?” என சந்துரு கேட்கவும், “நான் அவன் காணாம போனதுல இருந்து தேடிட்டு தான் இருந்தேன்.

ஆனா எல்லாருக்கும் தெரியற மாதிரி பெங்களூர்ல இருப்பானு நானே எதிர்பார்க்கல. என் ப்ரண்ட் வொர்க் பண்ற கம்பெனி சிஸ்கோவோட கிளையண்டாம். ரீசன்டா நடந்த ஒரு மீட்டிங்ல தான் சித்து அங்க எம்.டினு தெரிஞ்சு எனக்கு கால் பண்ணி சொன்னா.” என்றாள் நிரஞ்சனி.

“ஓகே.” என்ற சந்துரு ஏதோ யோசனையில் இருக்க, “என்ன யோசனை. எப்ப கிளம்பலாம்.” எனக் கேட்டாள் நிரஞ்சனி. சந்துரு “எங்க?” எனவும், “இவ்ளோ நேரம் நான் என்ன கதையா சொல்லிட்டு இருந்தேன். உன் அண்ணனை போய் பார்த்து கூட்டிட்டு வர வேணாமா?” என்றாள் நிரஞ்சனி கோபமாக.

“அவரே இங்க இருக்க பிடிக்காமதானே அங்க போய் இருக்காரு. அப்பறம் ஏன் அவரை கூப்பிடனும்.” என்றான் நிரஞ்சனியை குற்றம் சாட்டும் பார்வையில். “ஓ. அப்ப அங்க அவன் எம்.டி ஆகிட்டானு தெரியவும் இந்த கம்பெனியை நீயே வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்ட. அதானே?” என நிரஞ்சனி கூறியதில் அதிர்ந்தான் சந்துரு.

ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், “ஆமா அப்படின்னே வச்சுக்கோங்க இப்ப என்ன. எனக்கு நிறைய வேலை இருக்கு. வெளில கிளம்புனா நல்லா இருக்கும்.” என்றான் நேரடியாகவே. “நீ வரலன்னாலும் நான் போய் பார்க்கதான் போறேன். அதுக்கு அப்பறம் இருக்கு உனக்கு.” என்ற நிரஞ்சனி வெளியேற புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது சந்துருவிற்கு.

          சித்துவுக்கும் கவினுக்கும் அன்று வேலை முடியவே ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட சோர்வு இருந்தாலும் புராஜக்டை கிளயண்ட் எந்த குறையும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டதில் உற்சாகமாகவே இருந்தனர். அன்றிரவு பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருந்தான் சித்து.

மதுவிருந்தாக தான் இருக்கும் என நினைத்து உற்சாகமாக சென்றவர்களுக்கு சற்று ஏமாற்றமே. பஃபே முறையில் பலவித சைவ, அசைவ உணவுகள் வைக்கப்பட்டிருக்க, அந்த ஹால் முழுதும் இன்னிசை ஒலிக்க அழகான சூழலாக இருந்தது. ஐ.டி கலாச்சாரத்தில் முக்கியமாக பார்க்கப்படும் மதுவிருந்து எப்போதும் சித்து விரும்பாத ஒன்று.

தனியாக மதுப்பழக்கம் வைத்திருப்பதை பற்றி அவன் எதுவும் கூறமாட்டான். ஆனால் பொதுவெளியில் அனைவரும் ஒன்றுகூடும்போது மகிழ்ச்சியாக இருக்க நிறைய விசயங்கள் இருக்கும்போது மதுவை ஏன் நாட வேண்டும் என்பது அவனது கருத்து.

அவ்வாறே எல்லோரும் பேசி சிரித்துக் கொண்டு விளையாட்டாக இரவு உணவை உண்டனர். அப்போதுதான் கவினுக்கு சந்துரு ஃபோன் செய்தான். தனியாக வந்து அழைப்பை ஏற்றவன், “சொல்லு சந்துரு. என்னாச்சு. இந்த டைம்ல பண்ணியிருக்க?” எனக் கேட்டான்.

“அண்ணா இருக்கற இடம் தெரிஞ்சுடுச்சு. அதான் பண்ணேன்.” என சந்துரு கூறவும் அதில் அதிர்ந்த கவின், “என்ன சொல்ற. எங்க இருக்கான். உனக்கு எப்படி தெரியும்?” என கேட்க, “ஆமாம்ணா. நீங்க இருக்கற அதே பெங்களூர்ல தான். இப்ப கூட உங்களுக்கு பக்கத்துல தான் இருக்காரு.” என்றான் சந்துரு.

“என்ன உளர்ற. இங்க எதுக்கு அவன் வர போறான். உனக்கு யாரோ தப்பா தகவல் சொல்லியிருக்காங்க.” என்றான் கவின் பதட்டத்துடன். அவன் சமாளிப்பதற்குள் “யார்டா ஃபோன்ல. ஏன் டென்ஷனா இருக்க?” என கேட்ட சித்து, “குடு நான் பேசறேன்.” என ஃபோனை வாங்கி விட கவின் தடுத்தும் முடியவில்லை.

“யார் பேசறீங்க என்ன பிராப்ளம்?” என சித்து கேட்க சந்துரு, “அண்ணா நல்லா இருக்கீங்களா?” என்றான் பாசத்துடன். சித்துவோ, “ஏண்டா சொல்லல?” என கவினிடம் சைகையிலே கேட்க, “ஆமா. அப்படியே நீ சொல்ல விட்டுட்ட. போடா.” என முணுமுணுத்து விட்டு அங்கிருந்து அகன்றான்.

அதற்குள் மறுமுனையில் சந்துருவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க, “ம்ம். இருக்கேன். சொல்லு..” என்றான் சித்து குரலை கடினமாக்கி. சந்துரு, “உங்களுக்கு என்கிட்ட பேச பிடிக்காதுனு தெரியும்னா. இருந்தாலும் ஒரு முக்கியமான விசயம் சொல்லனும். அதான் பண்ணேன்.

எப்படியும் நீங்க எங்க இருக்கீங்கன்னு கவின் அண்ணாக்கு தெரியாம இருக்காதுனு கெஸ் பண்ணேன். ஆனா அவரோடவே இருப்பிங்கன்னு நினைக்கல. இட்ஸ் ஓகே. இன்னிக்கு நிரஞ்சனி ஆபிஸ் வந்துருந்தாங்க. அவங்கதான் நீங்க அங்க இருக்கறத சொன்னாங்க.

உங்களை டிஸ்டர்ப் பண்றதுக்காக பண்ணல. நாளைக்கோ இல்ல அடுத்த நாளோ நிரஞ்சனி அங்க வர சான்ஸ் இருக்கு. நீங்க கொஞ்சம் கவனமா இருக்கனும் தான் சொல்ல பண்ணேன்.” எனவும், “சரி நான் பார்த்துக்கறேன் அவ்ளோதானே.” என சித்து வைக்க போகவும் “ஒரு நிமிஷம்னா” என்ற சந்துரு,

“நீங்க நல்லா இருக்கிங்களான்னு தெரியலன்னா ஆனா நீங்க இல்லாம இங்க எதுவுமே நல்லா இல்ல. அது மட்டும் உண்மை.” எனக் கூறிவிட்டு பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டிக்க சித்துவின் மனதிலும் பாரம் ஏறியது.

அப்போது அவனருகில் வந்த கவின், “என்ன மச்சி ஓவர் பாசமோ?” எனக் கேட்டு வைக்க சித்து, “தம்பியுடையான் படைக்கஞ்சான் கேள்விப்பட்டதில்ல.” எனவும், “அது யாரு மச்சி. தம்பியுடையான். நான் கேள்விப்பட்டதே இல்லையே. உங்க தாத்தாவா.” என்றான் கவின்.

“இல்லடா. நம்ப ஆபிஸ்ல வேலை பார்க்கிற வாட்ச்மேன் பேரு. அவரு நல்லா இருக்காறானு கேட்டேன். வேற ஒன்னுமில்ல. எல்லாம் முடிஞ்சதா கிளம்பலாமா?” என்றான் சித்து சிரிக்காமல். கவின், “ம்ம் போலாம். எல்லாரும் கிளம்பிட்டாங்க.” எனவும் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

        அன்றிரவு, வீட்டிற்கு வந்த மகியோ என்றுமில்லா திருநாளாக அமைதியாக இருக்க, உடல்நிலை ஏதும் சரியில்லையோ என நினைத்த மீனாட்சி, “என்னாச்சுமா. ஏன் வந்துல இருந்து ஒரு மாதிரி இருக்க? வேலை அதிகமா? உடம்பு ஏதும் சரியில்லையா?” என அக்கறையாக கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னுமில்லமா. எப்பவும் போலதான் இருக்கேன்.” என விட்டேத்தியாக கூறியவள் அன்னையின் மடியை தஞ்சமடைய அவளது தலையை கோதி கொண்டே மீனாட்சி விவரம் கேட்க, மகியும் அலுவலகத்தில் நடந்ததை இயல்பாக அன்னையிடம் பகிர்ந்தாள்.

அதை கேட்டவர் அவளிடம் சில விசயங்களை கூற, அதில் கொஞ்சம் கொஞ்சமாக முகம் தெளிந்தவள் சற்று நேரத்திலே மனமும் தெளிவுற எழுந்து அமர்ந்தவள், “நீ நிஜமாலுமே மேஜிக் அம்மாதான்மா. எப்படி ஈசியா சொல்யூஷன் சொல்லிட்ட பாரு.” என்றவள் மீனாட்சியை கட்டிக் கொண்டாள்.

“சரி வா. சாப்பிடலாம். நீ ஈவ்னிங் ஸ்னாக்ஸ் கூட சாப்பிடலயே.” என மீனாட்சி கூறவும் மகி, “ஆமாம்மா. என்ன செஞ்ச.” என்க, “உனக்கு பிடிக்குமேனு உளுந்தவடை செய்தேன். ஆனா நீதான் எதுவும் வேணாம்னு சொல்லிட்ட.” என்றார் மீனாட்சி.

“இதை சொல்லியிருந்தாலே என் மூட் சரியா போயிருக்கும். என்னம்மா நீ. எனக்கு இருக்கா, இல்ல நீங்களே சாப்பிட்டிங்களா?” என எழுந்து சமையலறைக்கு ஓடினாள் மகி, “ஹேய். பார்த்து போ.” எனும்போதே அவளது தந்தையும் வந்துவிட அனைவரும் இணைந்து உணவருந்தினர்.

அடுத்தநாள் காலையில் வழக்கம்போல சிரித்தபடி அலுவலகத்திற்கு வந்தவள் ஆகாஷிடம் பேசி வம்பிழுத்து கொண்டே வர அவனோ இன்றைக்கு பார்த்து அவளை கண்டுகொள்ளாமல் ஏதோ டென்ஷனில் இருந்தான்.

“என்னாச்சு ஆகாஷ். ஏன் ஒரு மாதிரி இருக்க நீ?” எனக் கேட்க, “இல்ல இன்னிக்கு அம்மா வரேனு சொன்னாங்க. அதான் யோசிச்சுட்டு இருந்தேன். வேற ஒன்னுமில்ல.” என்றான் ஆகாஷ்.

“அம்மா வந்தா ஹேப்பிதானே. அதுல என்ன யோசனை.?” என மகி கேட்கவும் ஆகாஷ், “சும்மாதான்.  சரி வா வேலையை பார்க்கலாம்.” என்றபடியே தனது இடத்திற்கு செல்ல மகியும் தனது வேலைகளை கவனித்தாள்.

அன்று காலை அலுவலகத்திற்கு வந்த சந்துரு, நேற்று அண்ணனிடம் பேசிய மகிழ்ச்சி இருந்தாலும் நிரஞ்சனி பேசிய பேச்சுக்கு மகி எப்படி ரியாக்ட் செய்ய போகிறாளோ என்கிற எண்ணம் ஓடிக் கொண்டிருக்க, யோசனையுடனே உள்ளே வந்தான்.

ஆனால் தனது அறையில் வழக்கம் போல உணவு டப்பா இருக்க அதில் வியந்தவன் மகியை இண்டர்காமில் அழைக்க அவளும் உள்ளே வந்தாள். “இன்னிக்கு நீயே வருவியான்னு நினைச்சேன். ஆனா சாப்பாடும் எடுத்துட்டு வந்திருக்க?” எனக் கேட்டான் சந்துரு. அதற்கு மகி கூறிய பதில் அவனை வியக்க வைத்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்