Loading

சித்துவின் தட்டில் வைக்கப்பட்ட பதார்த்தத்தை பார்த்ததும், அவன், “என்னடி இது” என சற்று வேகமாகவே கேட்க, “இருங்க. இருங்க. இன்னும் இருக்கு.” என அடுத்ததாக கேசரியை வைத்தாள். “இது என்ன?” என சித்து கேட்க, “ஸ்வீட். ஸ்ஸ் பேசாம சாப்பிடுங்க” என்றவள் அதோடு பூரி, பொங்கல், கிச்சடி என நிறைய வகைகள் செய்திருந்தாள்.

அதற்கு பிறகே, சாப்பிட ஆரம்பித்தவன், கவின் சிரிப்பதை கண்டு, “என்னடா. ஒழுங்கா சாப்பிடு” என அதட்ட, மற்றவர்களும் உணவருந்த ஆரம்பித்தனர். “எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு அண்ணி. தேங்க்ஸ்” என சிந்து கூற, முறுவலித்த மகிழ், “அப்ப நல்லா சாப்பிடு” என பரிமாறினாள்.

மற்ற அனைத்து உணவு வகைகளையும் ஏன் கேசரியை கூட ரசித்து சாப்பிட்ட சித்து உப்புமாவை மட்டும் தொடவே இல்லை. மற்றவர்கள் அனைவரும் உணவருந்தி அறைகளுக்கு செல்ல, சிந்து மகிழ்க்கு பரிமாறுவதாக கூற, சித்துவோ தான் பார்த்துக் கொள்வதாக கூறி அவளையும் அனுப்பினான்.

அனைவரும் சென்றதும் அவளை மடியில் அமரவைத்து தனது தட்டிலேயே உணவை வைத்து ஊட்டிவிட, அவளோ மறுத்தாள் யாரேனும் பார்த்து விடுவார்களோ என. “அதெல்லாம் இன்னும் அரை மணி நேரத்துக்கு இந்தப்பக்கம் யாரும் வர மாட்டாங்க. நீ சாப்பிடு” எனவும் வாங்கி கொண்டவள், “நீங்க இன்னும் முழுசா சாப்பிடவே இல்லையே” என்றாள்.

அதோடு இல்லாமல் அவன் மீதம் வைத்த உப்புமாவை எடுத்து அவனுக்கு ஊட்டப் போக, “உன்னையை யாரு இப்ப உப்புமா பண்ண சொன்னது” என்றான் சித்து. “இல்ல அபி. உங்களுக்கு நான் பர்ஸ்ட் டைம் இதானே பண்ணிக் குடுத்தேன். அதான் அதே நியாபகமா இன்னைக்கும் பண்ணேன்” என்றாள் மகிழ் பெருமையாக.

“எனக்கு உப்புமாவே பிடிக்காது” என சித்து கூறவும், “அன்னைக்கு மட்டும் நல்லா சாப்டீங்க” என்றாள் மகிழ். அதற்கு சித்து, “அடிப்பாவி. அன்னைக்கு ஏதோ பர்ஸ்ட் டைம் பண்ற. எதுவும் சொல்லக் கூடாதுனு சாப்பிட்டேன். இன்னையோட நீ இதை மறந்திடனும் புரியுதா.” என்றான்.

“சரி இனிமே பண்ணல. இன்னைக்கு மட்டும் சாப்பிடுங்க. எனக்காக. ப்ளீஸ்” என கொஞ்சினாள் மகிழ். “சரி சாப்பிடறேன். ஆனா ஒரு கண்டிஷன். ஒவ்வொரு முறைக்கும் ஒரு முத்தம் கொடுக்கனும். ஓகேவா?” என்றான் பதிலுக்கு கண்ணடித்து.

“அப்படி ஒன்னும் சாப்பிட வேண்டாம். விடுங்க” என மகிழ் கூற, “ஆனா எனக்கு வேணுமே” என்றவன் அவன் நினைத்ததை நடத்தி முடித்தபின்பே அவளை விட்டான். “போங்க. இனிமே உப்புமாவே பண்ண மாட்டேன். நீங்க ரொம்ப மோசம்” என மகிழ் பொய்க்கோபம் காட்டி சொல்ல, “அதானே எனக்கும் வேணும்” எனக் கூறி சிரித்தான் சித்து.

அதன்பிறகு அனைவருமே அங்கிருந்து கிளம்பி மகிழின் வீட்டிற்கு மறுவீட்டிற்காக செல்ல, அனைவரையும் ஆவலாக வரவேற்றார் மீனாட்சி. மதிய விருந்துக்காக பலவித அசைவ உணவுகளை சமைத்திருந்தவர், ஆசையாக பரிமாற, ரசித்து உண்டனர் அனைவரும்.

அப்போது, “இன்னும் கொஞ்சம் வைச்சுக்கோங்க மாப்பிள்ளை” என மீனாட்சி வைக்க, சித்து, “அத்தை. என்னை அவ்ளளோ மரியாதையா எல்லாம். கூப்பிட வேண்டாம். நானும் உங்களுக்கு ஒரு பையன் மாதிரிதான்” என்க, “ஆமா அத்தை நானும்தான்” என்றான் சந்துருவும்.

“ஆமாம்மா, அதனால வாடா போடான்னே கூப்பிடலாம். சரிதானே சந்துரு” என இசை பட்டென கூறிவிட, “ஹேய். என்ன பேச்சு இது. மரியாதை இல்லாம பேசாத” என்றார் மீனாட்சி கண்டிப்பாக. “விடுங்க அத்தை. அவ சொன்னதுல எந்த தப்பும் இல்ல. நீங்க எப்படி வேணா கூப்பிடலாம். நாங்க தப்பாவே நினைக்க மாட்டோம்” என சந்துரு உதவிக்கு வந்தான்.

இருந்தும் இசையின் முகம் வாடிவிட, “என்ன மச்சினி நீ. உன் மாம்ஸ் வந்துருக்கேன். நீ என்ன விட்டுட்டு எல்லார்க்கிட்டயும் பேசிட்டு இருக்க” என அவளை வம்பிழுத்து இயல்பாக்க முயன்றான் சித்து. விருந்து முடிந்ததும் அவளிடம் இதைப்பற்றி பேசவேண்டும் என நினைத்த மகிழும் அவ்வாறே பேசினாள்.

“என்னாச்சு இசை உனக்கு. எல்லார்க்கிட்டயும் நல்லா பழகற. ஆனா சந்துருகிட்ட மட்டும் ஏன் எப்பவும் கோபத்தோட இருக்கிற. அவருக்கு உன்னை பிடிச்சிருந்தது. அதை நேரடியா வீட்ல சொல்லி பொண்ணு கேட்டாரு. தெரியாத யாரையோ கல்யாணம் பண்றதை விட, சொந்தமாவும் இருக்காரு.

உனக்கும் அவரைப்பத்தி நல்லா தெரியும். அதோட உன்னை விரும்பறதால உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சுதான் வீட்ல எல்லாரும் சம்மதிச்சோம். ஆனா நீ இந்த ஒரு விசயத்தை பிடிச்சிட்டு இன்னும் சரியா கூட பேசமாட்ற. உனக்கு பிடிக்கலன்னா இப்பக் கூட இந்த ஏற்பாட்டையெல்லாம் நிறுத்திடலாம்.

ஏன்னா கல்யாணத்துக்கு அப்பறமும் நீ இதே மாதிரி வீம்பா இருந்தா இரண்டு பேரோட லைஃப்ம் போய்டும். அவரு உன்னை மிரட்டி சம்மதிக்க வைக்கல. நீதான் கல்யாணம் வீட்ல சொல்றபடிதான் சொன்ன. அப்பறம் அவரோட விருப்பத்தை எப்படி நிறைவேத்திக்க முடியும் நீயே சொல்லு. இப்பக் கூட சந்துருக்கு நான் சப்போர்ட் பண்ணி இதை பேசல.

இப்பவும் முடிவு உன் கையில தான் இருக்குனு சொல்றேன். ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டுட்டோம் எல்லாரும். இப்ப ஒரு புது பிரச்சனை தேவையா சொல்லு. அதுக்குதான் பேசறேன்” என்றாள் மகிழ் விளக்கமாக. இசைக்கும் இது புரியாமல் இல்லை. இருந்தும் ஏதோ ஒன்று தடுத்தது. இப்போது ஓளவு தெளிவாகிட, “சாரி அக்கா” என்றாள் வருத்தத்துடன்.

“நீ சாரி சொல்றதுக்காக இல்லடா. உன் மனசு அவரை ஒரு கணவனா ஏத்துக்க நாளாகலாம். அது தப்பில்ல. ஆனா வெறுப்பா பார்க்காதன்னு சொல்றேன். உன் குணத்துல இயல்பா இரு. அவ்ளோதான்” என மகிழ் தமக்கையாக அறிவுரை கூற, அவளை கட்டிக் கொண்ட இசை, “கண்டிப்பா அக்கா” என்றாள்.

அதோடு இல்லாமல் தோட்டத்தில் தனியாக நின்றிருந்த சந்துருவிடம் சென்று, “சாரி. ஃப்ரண்ட்ஸ்” என கையை நீட்ட, அவனோ புரியாமல் பார்த்தான். பிறகு அவனே, “இந்த கல்யாண ஏற்பாடை நிறுத்திடலாம் மகி. உன்னை ரொம்ப சந்தோஷமா பார்த்துக்கனும்னு நினைச்சேன்.

ஆனா எப்ப இந்த பேச்சு வந்ததோ அப்ப இருந்து உன்னோட சிரிச்ச முகமே காணாம போயிடுச்சு. நீ எப்பவும் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும். இப்பவும் உன் மேல எனக்கு கோபம் இல்ல. உள்ள நீ சொன்னதுக்காக இதை நான் சொல்லல.

உன்னை நானும் கவனிச்சிட்டுதான் இருக்கேன். எதையோ பறிகொடுத்த மாதிரி. உன் கண்ணுல நான் முதல் நாள் பார்த்த அந்த மகிழ்ச்சி இல்ல. இது வேண்டாம்” என்றான் வருத்தமாக.

“டேய். என்ன நினைச்சிட்டு இருக்க. உன் இஷ்டத்துக்கு கல்யாணம்னு சொல்லுவ. உன் இஷ்டத்துக்கு வேண்டாம்னு சொல்லுவியா? இப்ப சொல்றேன். என்னைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும். உனக்கு மரியாதைலாம் கொடுக்க முடியாது. உன்னால ஆனதை பார்த்துக்கோ. எப்பவும் நீ எனக்கு அதே சந்துருதான். இதுக்கு ஓகேதானே?” என அதிரடியாக ஆரம்பித்து இயல்பாக முடித்தாள் இசை.

“நிஜமாதான் சொல்றீயா?” என சந்துரு அப்போதும் நம்பாமல் கேட்க, “உன்னை நம்பி மாம்ஸ் எப்படி அந்த கம்பெனியை கொடுத்தாருன்னு தெரியல. இவ்ளோ மக்கா இருக்க. இதைவிட டைரக்டா எப்படி சொல்லனும். ஐ லவ் யூ போதுமா?” என இசை கூறி முடித்த நொடியில் சந்துருவின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.

எதார்த்தமாக தோட்டத்துப்பக்கம் வந்த கவினும், ஆகாஷூம் அதைப்பார்த்துவிட, வாசலிலேயே காவலாக நின்றனர். அப்போது ஆகாஷ், “இவங்க எப்ப ஒன்னு சேர்ந்தாங்க. நம்பவே முடியலயே!!” என ஆச்சர்யப்பட, “அதுதாண்டா காதல். எப்ப எப்படி வரும்னு தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்தே தீரும்” என்றான் கவின்.

ஆகாஷ், “இதுக்கு பஞ்ச் டையலாக் வேறயாண்ணா. முடியல” என்க, “உனக்கும் சீக்கிரம் அந்த மேஜிக் நடக்கும் பாரு.” என்றான் கவின். “வேண்டாம்ணா. கொஞ்ச நாள் ஜாலியா இருந்துக்கறேன். அப்பறமா பார்க்கலாம் அதெல்லாம்” என அந்த பேச்சை முடித்த ஆகாஷ், அங்கு சிந்து வரவும், “நீங்க கன்ட்னியூ பண்ணுங்க” என்றபடியே சென்றுவிட அவளோ கவினை கேள்வியாக பார்த்தாள்.

கவின் தோட்டத்தை காட்ட, அண்ணனின் வாழ்வு சரியாகி விட்டதை அறிந்து மகிழ்ந்தவள் தானும் கவினின் தோளில் சாய்ந்து கொண்டாள். அங்கோ, “சாரிடி. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல” என சந்துரு கூற, “அதெல்லாம் இல்ல. நான்தான் உன்னை புரிஞ்சுக்கல. விடு. யாராவது வந்திட போறாங்க” என்றாள் இசை.

“வந்து காவலுக்கு நிக்கறாங்க” என சந்துரு கூறவும், பதறி விலக, அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன், “அதெல்லாம் என் தங்கச்சி யார்க்கிட்டயும் சொல்லாது. நாம கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்” எனும்போதே, மீனாட்சி குரல் வரவும், இசை ஓடியே விட்டாள்.

அவளது மனமாற்றம் தந்த மகிழ்வு அப்படியே சந்துரு முகத்தில் தெரிய, “என்ன அண்ணா, எப்ப ட்ரீட்டு?” என்ற சிந்து, மகிழ் பேசியதாக தகவலும் தந்தாள்.

“கண்டிப்பா நாளைக்கே போகலாம். உனக்கு இல்லாததா? சரி நான் போய் அண்ணியை பார்க்கறேன்” என்ற சந்துரு மகிழிடம் சென்று நன்றி கூற, அவளோ, “இதுல என்ன இருக்கு. அவளுக்கு ஏதோ குழப்பம் அவ்ளோதான். இப்ப சரியாகிட்டால்ல. இனிமேல்தான் உங்களுக்கு கஷ்டம் சந்துரு” என்க, அங்கு வந்த சித்துவும் அதை ஆமோதித்தான்.

“அப்படியெல்லாம் இல்லையே. என் ஆளு சமத்துதான்” என்றபடி அவன் செல்ல, அகலும், ஆதித்யாவும் அவளிடம் வந்தனர். “நாங்க ஊருக்கு கிளம்பறோம்மா” என ஆதி கூற, “ம்ம் பத்திரமா போய்ட்டு வாங்க. எதுனாலும் கூப்பிடுங்க” என்ற மகிழ், அகலிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி அனுப்பி வைத்தாள்.

அவர்கள் சென்றதும், சித்து, “மாமா, அத்தை அப்ப நாங்களும் கிளம்பறோம்” எனவும், “இன்னும் ரெண்டு நாளு இருந்துட்டு போகலாம்ல மகிழு” என மகளிடம் மீனாட்சி கேட்க, அவளோ, எங்கே போகிறோம் என்பது போல சித்துவை பார்த்து வைத்தாள்.

“அவளுக்கு தெரியாது அத்தை. ஒரு வாரம் வெளியூர் போயிட்டு வரலாம்னு” என இழுத்தான். இசை, “அம்மா. மாம்ஸ் அக்காவோட ஹனிமூன் போறாராம். அதைத்தான் இப்படி சொல்றாரு” என போட்டுடைக்க, “எந்த ஊருக்குங்க” என்றாள் மகிழ்.

“அதெல்லாம் சர்ப்ரைஸா சொல்லுவாருக்கா. நீ கிளம்பு முதல்ல” என அவளை பேக் செய்து வெளியில் கூட்டி வர, தயாராக இருந்த காரில் இருவருமாக கிளம்பினர்.

“நான் கூட நம்ப மேல இருக்கிற அக்கறையிலயும், பாசத்துலயும் கம்பெனியை நம்ப பேர்ல மாத்திட்டானு நினைச்சேன். ஆனா அப்படி இல்ல சந்துரு. உங்கண்ணன் விவரமா வேலையெல்லாம் நம்ப தலையில கட்டிட்டு ஜாலியா பொண்டாட்டியோட எஸ்கேப் ஆகிட்டான் பாரு” என்றான் கவின்.

“அதனால என்ன இப்ப. ஒழுங்கா நாளைல இருந்து போய் வேலையை பாருங்க. அக்காவையும், அண்ணாவையும் டிஸ்டர்ப் பண்ணீங்க நடக்கறதே வேற” என கோரசாக சிந்துவும், இசையும் கூறிவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி ஹைபை கொடுத்துக் கொள்ள, “ஆகட்டும் ராணிகளா” என தலையை தொங்க போட்டபடி இருவரும் உள்ளே சென்றனர்.

அங்கே காரிலோ மகிழ் கேட்ட கேள்விக்கு விடை கூறாமல், “நான்தான் சொன்னேன்ல. கல்யாணம் முடிஞ்சதும் உன்னை கடத்திடுவேன்னு. அதான் பண்றேன். பேசாம தூங்கு. நான் சொல்லும்போது எழுந்தா போதும்” என அவளை தோளில் சாய்த்துக் கொள்ள அவளும் உறங்கி போனாள்.

அடுத்தநாள் அழகான அதிகாலை வேளையில் கார் சென்று நின்றது கடவுளின் சொர்க்கமாம் கேரளாவில் உள்ள தேனிலவு தேசமான வயநாட்டில். மேகக்கூட்டங்கள் தவழ்ந்து விளையாடும் அந்த இயற்கை அழகினை கண்டபடி கண் திறந்தவள், மெய்மறந்து போனாள்.

அடுத்து வந்த ஒருவாரமும், அந்த சொர்க்க பூமியில், காதலெனும் சொர்க்கத்தில், தனியொரு உலகில் இருவரும் சஞ்சரித்து வாழ்ந்தனர். அங்கிருந்து திரும்பி வரும்போது, அவளை போடிமெட்டிற்கு அழைத்து செல்ல, அவளோ வேண்டாமென மறுத்தாள்.

ஆனால் அங்கிருந்த மக்களுக்கு ஏற்கனவே கிரிசங்கரையும், சந்தேஷையும் பற்றி கூறியதோடு அவர்களது அயோக்கியத்தனங்களை பற்றியும் சித்து தெரியப்படுத்தியிருக்க, மகிழை அனைவரும் ஆவலோடு வரவேற்றனர்.

அதன்பிறகு அந்த உற்சாகம் மகிழையும் தொற்றிக் கொள்ள ஒருநாள் முழுக்க, இத்தனை வருடமாக பழகிய அனைவரையும் கண்டு பேசி, சித்துவை அறிமுகப்படுத்தி, அவர்கள் கொடுத்த சிறு சிறு பரிசுகளை ஏற்றுக் கொண்டு, ஏதாவது உதவி தேவைப்பட்டால் அழைக்கும்படி தொடர்பு எண், விலாசத்தை பகிர்ந்து அகமகிழ மனது லேசாகி போனது அவளுக்கு.

திரும்பி வரும்போது சித்துவிடம் கண்களாலே அவனுக்கு நன்றி உரைக்க, “இந்த கண்கள் காட்ட வேண்டியது நன்றியை அல்ல மகிழ்வதனி. காதலை” என பாகுபலி பாணியில் கூறிவிட்டு அவளிடம் முறைப்போடு சேர்த்து காதல் பார்வையையும் பெற்றுக் கொண்டான்.

வீட்டுக்கு வந்ததும் மகளின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் மனம் மகிழ்ந்தனர் மகிழின் பெற்றோர். இதற்கிடையில் ஊருக்கு போன அகலும், ஆதியும் திரும்ப வந்திருக்க, இவர்கள் வந்தது தெரிந்து பார்க்க வந்தனர். அப்போது இருவரும் காட்டிய நெருக்கமே அவர்களுக்கிடையே இருந்த ஊடல் தீர்ந்ததை காட்டியது.

பிறகு அகலிடம் விசாரிக்க, “நான் கூட இவர் சொல்லும்போது நம்பவே இல்ல மகிழு. ஆனா அங்க யாருமே என்னை எதுவுமே சொல்லல. அதுமட்டுமில்லாம, வேலைக்குதான் வந்திருக்கோம்னு நினைச்சு, எத்தனை நாளைக்குதான் பெரியவங்களே வந்து பார்த்துட்டு போறது.

இனிமேல் அடிக்கடி நீங்களும் வாங்க. அப்படின்னு ஊர்ல எல்லாரும் சொல்றாங்க. என்னனு பார்த்தா மாசத்துக்கு ஒருமுறை எங்க அத்தை அம்மா வீட்டுக்கும், அம்மா அத்தை வீட்டுக்கும் இங்க வர்றதா பொய் சொல்லிட்டு போய்ட்டு வந்தாங்களாம்.

அதுக்கு அப்பறம் இவரும் ஏதோ கோபத்துல பண்ணிட்டாரு. அதான் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுட்டேன்” எனக் கூறி அகல் சிரிக்க, “ஆமாமா. ரொம்ப பெரிய மனசுதான்” என்றான் ஆதியும் சிரித்தபடி. அதற்கு பிறகு ஒருவாரம் கழித்து மீண்டும் எல்லோரும் மகிழ் வீட்டில் குழுமியிருந்தனர்.

அவர்களோடு சேர்ந்து நிரஞ்சனி, அஜய், அருணும் கூட இருந்தனர். சித்துவின் திருமணத்தின் போது ஒரு முக்கிய வேலையில் மாட்டிக் கொண்டதில் வர முடியவில்லை என இப்போது வந்திருந்தனர். அப்போது சித்து, “நானும், நிரஞ்சனியும் சேர்ந்து ஒரு ஆபிஸ் போடலாம்னு இருக்கோம்” என்றான்.

“என்ன ஆபிஸ்டா. என்ன திடீர்னு. எங்க?” என கவின் கேட்க, “இங்கதான்டா. அது சைபர் சொல்யூஷன்ஸ் மாதிரி போடலாம்னு. ரொம்ப நாளா இந்த ஐடியா இருந்தது. இப்பதான் கரெக்டா டைம் வந்திருக்கு” என்றான் சித்து.

“ஆமா கவின் முன்னாடியே இந்த பீல்ட்ல சித்துக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. எங்ககிட்ட வர்ற கேஸ்ல பாதியை இவன்தான் சால்வ் பண்றான். ஆன்லைன்ல நடக்கற சைபர் கிரைம்ஸ் இப்பல்லாம் அதிகமா ஆகிடுச்சு. என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிக்கவே நாளாகிடுது.

அது மாதிரி நேரத்துல சித்துதான் எங்களுக்கு ஹெல்ப் பண்ணுவான். இப்ப இதே பீல்ட்ல புல் டைம் இருந்தா இன்னும் யூஸ் அதிகம். நிரஞ்சனி பத்தியும் இப்பதான் சொன்னான். எத்திக்கல் ஹேக்கிங் ரொம்பவே நல்ல பீல்ட்.” என்றான் அஜய்.

இப்போதுதான் மகிழுக்கு, சந்தேஷ் வந்த அன்று சித்து எப்படி அவ்வளவு துரிதமாக செயல்பட்டான் என புரிந்தது. அதற்கு பிறகு மற்றவர்களும் அவன் இஷ்டப்படியே செய்யட்டும் என்றுவிட, இன்னும் ஒரு மாதத்தில் அலுவலகம் திறப்பதாக முடிவு செய்தனர்.

பிறகு அருண் சித்துவிடம் தனியாக, “சந்தேஷை உள்ள தள்ளியாச்சுடா. மினிமம் த்ரீ இயர்ஸ் அவனால வெளில வர முடியாது” என விவரம் சொன்னான். அதைக் கேட்டும் மகிழ் பெரிதாக எந்த ஆர்வமும் காட்டவில்லை.

அவனை பற்றி இனி யோசிக்காமல் இருக்க முடிவு செய்துவிட்டாள். அதன்பிறகு வேலைகள் மளமளவென நடக்க, சித்துவின் அலுவலக ஏற்பாடுகள் ஒருபுறமும் கவின்- சிந்து திருமண ஏற்பாடுகள் ஒருபுறமாக நடந்து கொண்டிருந்தது.

அதேபோல அலுவலகம் திறந்து சித்துவும், நிரஞ்சனியும் அந்த வேலைகளில் இறங்க, மகிழ் மருத்துவராக தனது பணியினை செய்து கொண்டிருந்தாள். கவினின் திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது, மகிழ் கருவுற்றிருந்த சேதி தெரியவர, அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.

அதே உற்சாகத்தோடு கவினின் திருமண நாளும் வர, சிந்து திருமணத்திற்கு முன் நிற்க வந்த ஐயம்மாளிடம், சித்து திருமணத்தின்போதே “கல்யாணத்தப்ப எங்கம்மா போனீங்க?” எனக் கேட்டிருக்க, அவரோ, “இதுக்கெல்லாம் நான் முன்னாடி நிற்கக் கூடாது” என கூறியிருந்ததை நினைவில் வைத்து, “இப்பவும், நீங்க முன்னாடி நிற்க வேண்டாம். அண்ணா, அண்ணியே இருக்கட்டும்” என தெளிவாக கூறிவிட்டாள்.

அதன்படியே சிந்துவின் சார்பாக சித்துவும், மகிழும் நிற்க, கவின் சார்பாக, மகிழின் பெற்றோர் நின்று சடங்குகளை செய்ய, நல்லதொரு முகூர்த்த நேரத்தில் தனது மனம் கவர்ந்தவளை மாங்கல்யம் அணிவித்து தன்னவளாக ஆக்கிக் கொண்டான் கவின். நீண்ட நாட்களாக காத்திருந்த காதல் கைகூடியதில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது சிந்துவுக்கு.

“இதுதான் கடைசி டைமா இருக்கனும். என் தங்கச்சி கண்ணுல தண்ணி வர்றது” என சித்து கவினை செல்லமாக மிரட்ட, “அது எப்படிடா வரும். வெங்காயம் கூட நான்தானே வெட்ட போறேன். இனிமேல் என் கண்ணுல தான் ஆறே ஓடும்” என்றான் கவினும் அதே போல கேலியாக.

ஸ்ரேயாவும் திருமணத்திற்கு வந்ததோடு கவினுக்கும், சிந்துவுக்கும் திருமண பரிசாக தங்க மோதிரம் போட, சிந்துவும் அவளும் சிரித்து பேசுவதை ரசித்து பார்த்தான் கவின். சித்து கூறியது போலவே பெரிய மண்டபத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடந்து சிந்துவின் திருமணத்தை கண்டு ஐயம்மாளே சற்று ஆச்சர்யப்பட்டுதான் போனார்.

ஆனால் அவரை யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. திருமணம் முடிந்ததும் பெங்களூரில் தனது சம்பாத்தியத்தில் கவின் புதிதாக வாங்கிய வீட்டில் இருவரும் குடியேறி அவர்களது இல்லற வாழ்வை இனிதே தொடர்ந்தனர்.

அதேபோல ஆதித்யாவும் சென்னையில் ஒரு ப்ளாட்டை அகல்யா பெயரில் வாங்கி அவன் கூறியபடி அவளது வீட்டில் குடியேறினான். அடுத்ததாக, சந்துரு-இசையின் திருமண வேலைகள் தொடங்கிவிட, பரபரப்பாகவே சென்று கொண்டிருந்தது அனைவரின் வாழ்வும்.

இசையின் ஆசைப்படி, சொந்த பந்தங்களின் ஆசியோடு, தோழமைகளின் அன்பு நிறைந்து முறைப்படி சடங்கு, சம்பிரதாயங்களோடு சிறப்பாக நடந்தது அவளது திருமணம். மூன்று மாத கருவோடு வந்து தனது தோழியின் திருமணத்தை சிறப்பித்தாள் ராகினி.

அன்றைய இரவின் தனிமையில், பால் சொம்போடு வந்த இசையை சோபாவில் அமரவைத்துவிட்டு, “மகி, நமக்கு வந்த மேரேஜ் கிஃப்ட் எல்லாம் பிரிச்சு பார்க்கலாமா?” என சந்துரு கேட்க, “ஏன் இப்பவே?” எனக் கேட்டாள் இசை. “சும்மாதான். இரு வரேன்” என சில பரிசு பொருட்களை எடுத்து வந்தவன், ஒவ்வொன்றாக பிரித்தான்.

“இது வித்தியாசமா இருக்குல்ல. மகி நீயும் எனக்கு கிஃப்ட் குடுத்திருக்க?” என சந்துரு கேட்க, “நானா?” எனக் கேட்டபடி அதை வாங்கி பார்க்க, அவளது பெயரில்தான் இருந்தது. பிரித்து பார்த்தால் உள்ளே அழகான, ராகினி திருமணத்திற்கு வாங்கிய அந்த ராதா-கிருஷ்ணன் சிலை இருந்தது.

‘இது எப்படி’ என குழப்பத்தோடு அவனை கண்டவள் அவனது கள்ளச்சிரிப்பை கண்டதும், “இது உங்க வேலைதானா?” எனக் கேட்க, “ம்ம். நான்தான் அன்னைக்கே என் மேரேஜ்க்கு இந்த கிஃப்டை குடுன்னு சொன்னேன். நீதான் மறந்துட்ட. அதான்” என்ற சந்துரு அவளது முறைப்பையும், சிரிப்பையும் வாங்கி இல்லற வாழ்விற்கான அடுத்த அடியை எடுத்து வைத்தான்.

இசையின் திருமணம் நெருங்கியதுமே ஆகாஷ் சொன்னபடி, மீனாட்சி, குணசேகரன் தம்பதியின் மகனாக அந்த வீட்டிலேயே தங்க ஆரம்பித்து விட்டான். அதில் அனைவருக்கும் ஏக மகிழ்ச்சி. அவரவர் வீடுகளில் இருந்த அனைவருக்கும் அந்த ஏகாந்த இரவு பெருமகிழ்ச்சியை தந்து கொண்டிருந்தது.

தங்களது அறையினில் காதல் மனைவியின் பாதம் தாங்கி அவளுக்கு சொடக்கு எடுத்துக் கொண்டிருந்த சித்துவின் வதனம் பெரு நிம்மதியை காட்ட, அதில் மகிழ்ந்து மகிழும் அவனை அருகில் இழுத்து தனது காதலை காட்டினாள் மகிழ். இத்தனை உறவுகளையும் இணைக்க காரணமாக இருந்த தங்களது காதலை கொண்டாடி.

வேறு வேறு வயிற்றில் பிறந்திருந்தாலும் சகோதர பாசம் மாறாமல், தோழமைகளாக இருந்து உறவுகளாக மாறி, காதலில் திளைத்து, நட்பை கொண்டாடி வாழும் இந்த இனிய இதயங்கள் இனி எப்போதும் இனித்திருக்க வேண்டுமென எண்ணி, அவர்களை விட்டு விடைபெறுவோம்.

                                                                               💞💞💞💞💞முற்றும்💞💞💞💞💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
2
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.