Loading

ஆட்சியர் கனவு💞 10

கனவு என்று

நினைத்தேன்

நின்னை கண் கொண்டு

காணும் வரை!

கனவும் நனவானது

நிந்தன் கைசேரும் நொடிதனில்!

காதல் செய்து

களவு செய்யும் நின் எண்ணம்

கள்(வ)ளன் உன்னைக்

கைது செய்ய விழைகிறேன்

என் மஞ்சம் தனில்…!!

 

அதிகாலை விடியலில் போதுத் தன் தொ(ல்)லைபேசியில் அடித்த எச்சரிக்கை மணியை அமர்த்திவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள் திவி. குளித்து முடித்துவிட்டு மனநிம்மதிக்காக தியானத்தில் அமர்ந்தவள், பிறகு வெளியேக் கிளம்ப ஆயுத்தமானாள்.

 

ரோஜா “இவ்ளோ சீக்கிரமா எங்க கெளம்புற.?”

 

திவி “ஹான் அம்மா, ஆதி வீட்டுக்கு தான் மா. அங்க செல்வி அம்மா தனியா வேலை செஞ்சிட்டு இருப்பாங்கல அதான்.”

 

ரோஜா “நீ செய்றது சரியா வருமா திவ்யா.?”

 

திவி “ப்ப்ச்… அம்மா! முயற்சியே பண்ணாம எப்டி மா நான் ரிசல்ட் சொல்றது.? நான் முழுசா முடிவு எடுத்திட்டேன் மா. அதை சரியா செய்யணும். நீங்க என்கூட இருப்பீங்களா மா.?”

 

ரோஜா “இது என்ன கேள்வி.? கண்டிப்பா நான் உன்கூட இருப்பேன். நீ உண்மைய சீக்கிரம் ஆதிக்கிட்ட சொல்லு. அவன் கிட்ட மறைக்குறது நல்லதா எனக்கு தோணல” என்று யோசனையுடன் கூறினார்.

 

திவி “ம்ம்ம் சரி மா! நேரம் பாத்து கண்டிப்பா சொல்லிடுறேன், சரியா.?” என்றாள் புன்னகையுடன்.

 

ரோஜா “சரி.. சாமி கும்புட்டு போ!”

 

திவி “ம்ம்ம் சரி மா!” என்று கடவுளிடம் தான் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளில் தாங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் தன் மனது சஞ்சலப்படாமல் அனைத்தையும் செய்து முடிக்கும் தைரியத்தையும் தரும்படி வேண்டிக்கொண்டு இருந்தாள்.

 

பாரதி (திவியின் இரட்டை சகோதரியில் ஒருவள்): ” என்ன கா காலைலயே சாமிக்கிட்ட இவ்ளோ ஆடர் போடுற.? என்ன விஷயம்.?”

 

திவி “ஹான்…. உன் வருங்கால மாமாவை சீக்கிரம் என் கண்ணுல காட்டுன்னு வேண்டிக்கிட்டு இருக்கேன்.”

 

பாரதி “பார்ரா..! அதுக்குள்ள உன் வருங்காலத்தை பாக்கணும்ன்னு ஆசை வந்துடுச்சா.?.. கடவுளே.. சீக்கிரம் என் மாமாவ கண்ணுல காட்டு. இந்த அக்கா தொல்லை என்னால தாங்க முடியல! தினமும் படி படின்னு சொல்லி டார்ச்சர் பண்றாங்க! இவங்களை அடக்க என்னாலேயே முடியல. எங்க மாமா தான் பாத்துக்கணும்!” என்று தன் குறையை கடவுளிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

 

திவி செல்லமாக அவளின் தலையில் அடித்து “வாய்… வாய்… வாய்… இந்த வாய் மட்டும் இல்லன்னா, உன்னலாம் நாய் தூக்கிட்டு போயிடும்.”

 

பவித்ரா(மற்றோர் தங்கை) “நாய் தூக்கிட்டு போற அளவுக்கா நீ வீக்கா இருக்க.?” என்று தன் அதி முக்கியமான கேள்வி கேட்க,

 

பாரதி அவளை முறைத்துவிட்டு திவியிடம் “அக்கா காமெடியாம் சிரிச்சிடு. பாவம் புள்ள மனசு கஷ்டப்பட போகுது”

 

திவி “ஏ… போதும் டி உங்க அலப்பறை. காலையிலேயே மொக்க காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. நானும் எவ்ளோ நேரம் தான் அமைதியா இருக்குறது.?” இப்போது இருவரும் ஒருசேர திவியை முறைத்தனர். திவி அதை கண்டுகொள்ளாது தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்ப,

 

ரோஜா “பாத்து போய்ட்டு வா.” என்று விட்டு தன் வேலையை கவனிக்க சென்று விட்டார்.

 

சகோதரிகளும் தங்கள் வேலையை செய்ய செல்ல, திவி கிளம்பினாள்.

 

ஆதியின் வீடு…

 

செல்வி “டேய் சக்தி, எந்திரிடா. இன்னைக்கு முக்கியமான கேஸ் இருக்குன்னு சொன்ன.? எந்திரிச்சு குளி” என்று சக்தியை எழுப்பி விட்டு ஆதியின் அறைக்கு சென்றார்.

 

சக்தி எழுந்து தன் காலை கடன்களை முடித்துவிட்டு ஹாலுக்கு வந்து அன்றைய செய்திகளை படித்துக்கொண்டு இருந்தான்.

 

ஆதி ஆழ்ந்து உறங்கி கொண்டு இருக்க, செல்வி அவனை எழுப்ப மனமில்லாது சமயலறைக்குத் தன் வேலைகளைக் கவனிக்க வந்துவிட்டார்.

 

“ஹாய் அண்ணா, குட் மார்னிங்!” என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் திவி.

 

சக்தி “ஹான். குட் மார்னிங் திவி மா! என்ன காலையிலேயே இந்த பக்கம்.?”

 

திவி “இன்னைக்கு காலேஜ் லீவ் தான்ண்ணா. அதான் வந்தேன். என்று விட்டு தன் பார்வையை சுழற்றியவள் அம்மா எங்க.?”

 

சக்தி “உள்ள கிட்சன்ல இருக்காங்க”

 

திவி “ம்ம் சரிண்ணா.” என்று விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

 

“மா, என்ன சமைக்குறீங்க.? வாசனை ஆள தூக்குது?”-திவி

 

செல்வி “வா திவி. ஆதிக்கு புடிச்ச கத்திரிகா பிரட்டல் மா. பாவம் நேத்து முழுக்க அவன் ஒண்ணுமே சாப்டலல அதான். கொஞ்சம் காரசாரமா சாப்ட நல்லா இருக்கும்ல”

 

திவி “அம்மா, இப்போ தரலாமா மா.? உடம்புக்கு ஒத்துக்கும்ல.?”

 

சக்தி “அதுலாம் எல்லாம் சாப்டலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டாரு திவி.” என்று கூறிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தான்.

 

திவி தலையசைத்து “ண்ணா, இன்னைக்கு ஆதி கிட்ட நான் எல்லாமே சொல்லாம்ன்னு இருக்கேன் ண்ணா!”

 

சக்தி “அதுக்குள்ளயா.? ஏன் இவ்ளோ அவசரம் திவி.? அவன் கோவத்துல ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது.?”

 

திவி “அதுலாம் நான் பாத்துக்குறேன் ண்ணா. அவனுக்கு எல்லாமே தெரியணும்ன்னு நான் நினைக்குறேன். அவனும் சில விஷயங்கள் என்கிட்ட சொல்லவே இல்லல. எனக்குள்ள நிறைய கேள்விகள் இருக்குண்ணா. அதுக்கு தியா கிட்ட தான் விடை கிடைக்கும். சோ, நான் தியா கிட்ட எல்லாமே சொல்லணும்.”

 

சக்தி “ம்ம்ம் ஆமா திவ்யா. நமக்கு தெரியாத சில விஷயங்கல அவனா சொன்னதான் உண்டு. எல்லாம் பேசிட்டு ஒரு தெளிவோட அடுத்து என்ன செய்யலாம்ன்னு சொல்லு. நான் டூயூட்டிக்கு கிளம்புறேன்.”

 

செல்வி “சாப்பிட்டு போ டா.”

 

சக்தி “அம்மாவும் பொண்ணும் சமைக்குறதுக்குள்ள பொழுது போயிடும். நான் வெளில சாப்டுக்குறேன்” என்று விட்டு சென்று விட்டான்.

 

செல்வி “டேய், சக்தி…” என்ற வார்த்தை காற்றில் தான் கரைந்தது.

 

திவி “என்ன மா, தினமும் இப்டி சாப்பிடமா போனா என்ன ஆகுறது.?”

 

செல்வி “சொல்லி சலிச்சு போச்சுமா. இவனுக்குன்னு ஒரு கால்கட்டு போட்டதான் சரி வரும். நானும் முயற்சி பன்றேன் பிடியே கொடுக்க மாட்டிங்குறான்.” என்று தன் வருத்தத்தை கூற,

 

திவி “நான் பாத்துக்குறேன் மா! அண்ணாவை சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு.”

 

செல்வி “அவன் சம்மதிச்சா போதும் மா. நான் கோவில் வரை போய்ட்டு வந்துடுறேன். ஆதி எந்திரிச்சா அவன சாப்ட வச்சிடு மா!”

 

திவி “ம்ம்ம் சரி மா… நீங்க பாத்து போய்ட்டு வாங்க. அந்த லூச நான் பாத்துக்குறேன்.” என்று விட்டு ஆதியின் அறை நோக்கி சென்றாள்.

 

ஆதியின் அறைக்குள் நுழைந்தவள் அவனின் நிலை கண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.

 

மெத்தையின் ஒரு முனையில் தலையையும் மற்றொரு முனையில் காலையும் வைத்துக்கொண்டு, தலையணையை இரண்டு கால்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டு கைகள் இரண்டும் மற்றொரு தலையணையை கட்டிபிடித்துக்கொண்டு உறங்கி கொண்டு இருந்தான்.

 

அவனின் அருகே சென்று தலையணைகளை விலக்கி விட்டு போர்வையை சரியாக போர்த்து விட்டு அவனின் தலையை கோதி கொண்டு இருந்தாள். அவளின் ஸ்பரிசத்தை உணர்ந்தவன் தூக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வேண்டுமென்றே கண்களை மூடிக்கொண்டு அந்த இனிமையை ரசித்துக் கொண்டு இருந்தான்.

 

திவி அமைதியாக அவனின் கேசத்தை கோதி கொண்டு இருந்தாள். மணியை பார்த்து விட்டு மெல்ல அவனை எழுப்பினாள். “ஆதி… ஆதி… ” அவனிடம் எந்த பதிலும் இல்லை, “தியா….நீ முழிச்சிட்டன்னு எனக்கு தெரியும். ஒழுங்கா எந்திரி..” என்று கூறினாள்.

 

ஆதி புன்னகையோடு கண் விழித்து “கண்டுபுடிச்சிட்ட? யூ ஆர் சோ பிரில்லியண்ட். குட் மார்னிங் யது”..

 

திவி “ம்ம்ம்… ம்ம் மார்னிங்… மார்னிங்… போ, போய் பிரஷ் ஆகிட்டு வா. கீழ நான் சாப்பாடு எடுத்து வைக்குறேன்.” என்று எழ,

 

ஆதி “ப்ச், போலாம் இரு யது. கோவம்லாம் போய்டுச்சா?” என்று அவள் மடியில் தலையை வைத்து கொண்டு அவளின் கைகளை தன் தலையில் வைத்து கோதிவிடும்படி செய்கை செய்தான்.

 

திவி ஒரு நிமிடம் அதிர்ந்தவள் அவனின் குழந்தைத் தனத்தை பார்த்து மெல்லிய முறுவலுடன், ஒரு சிறு தலையசைப்புடன் அவனின் தலையை கோதி விட்டாள்.

 

ஆதி:”யது..”

 

திவி:”ம்ம்..”

 

ஆதி:”யதுது…”

 

திவி:”ம்ம்ம்ம்… சொல்லு ஆதி.!”

 

ஆதி:”உன்கிட்ட நிறய பேசணும் யது..”

 

திவி:”முதல நீ பிரஷ் ஆகிட்டு சாப்டு. சாப்டுட்டு பேசலாம்.”

 

ஆதி:”கீழ போன அம்மா சக்தி லாம் இருப்பாங்களே..?”

 

திவி:”இல்ல.. அண்ணா டூட்டிக்கு கிளம்பிட்டாங்க.. அம்மா கோவிலுக்கு போய் இருக்காங்க.. நீ பர்ஸ்ட் சாப்டு.. நாம பொறுமையா பேசலாம்.!”

 

ஆதி:”ம்ம்ம் அப்போ ஓகே. 10 மினிட்ஸ் நான் பிரஷ் ஆகிட்டு வரேன்!” என்று விட்டு குளியலறைக்குள் சென்றான். சொன்னது போல் பத்தே நிமிடங்களில் உணவருந்த வந்தான்.

 

திவி, ஆதிக்கு உணவை பரிமாறி விட்டு அவன் சாப்பிட்டு முடித்த பிறகு என்ன என்ன பேச வேண்டும் என்று மனதில் ஒரு ஒத்திகை பார்த்து கொண்டு இருந்தாள். அவனும் உண்டு முடித்தான்.

 

திவி:”சாப்பிடியா.?”

 

ஆதி:”ம்ம் சாப்பிட்டேன்”

 

திவி:”நல்லா சாப்டியா.?”

 

ஆதி:”ம்ம்ம் நல்லா சாப்டேன்”

 

திவி:”ம்ம் ஓகே! இப்போ சொல்லு என்ன என்கிட்ட பேசணும்.?”

 

ஆதி புன்னகையோடு திவியை சோபாவில் அமர வைத்து அவள் மடியில் மீண்டும் தலை வைத்து படுத்து கொண்டான். திவிக்கு தான் அயோ என்று இருந்தது. அவனை விலக்கவும் முடியாமல் அவனின் செயல்களை ஏற்று கொள்ளவும் முடியாமல் இருதலைகொல்லியாய் இருந்தாள்.

 

திவி:”ஆதி, எந்திரி. யாராவது பார்த்தா என்ன சொல்லுவாங்க..? பேசணும்ன்னு சொல்லிட்டு என்ன பண்ற.?” என்று நெளிந்து கொண்டே கூற,

 

ஆதி:”எங்க அம்மா மடில நான் படுத்ததே இல்ல யது.. “

 

திவி இந்த ஒற்றை பதிலில் எதுவும் சொல்லாமல் தன் உணர்வுகளை ஒதுக்கிவிட்டு ஆதிக்கு தாயாய் அதை அனுமதித்தாள்.

 

ஆதி “அதான் உன் மடில படுத்தேன். உன் மடில படுக்கிறப்போ அப்டியே செம பீல் தெரியுமா. தப்புன்னா சொல்லு நான் எந்திரிச்சுக்குறேன்” என எழ முயல

 

திவி “நீ சொல்லு.? என்ன என்கிட்ட பேசணும்” என்று அவனின் சிகையை வருடிய படி கேட்டாள்.

 

ஆதி தன்னவளின் ஸ்பரிசத்தை அனுபவித்து கொண்டே, தன் கடந்த கால நினைவுகளை கூற தொடங்கினான் ஆதித்யா

 

“ஆறு வயசுல நான் எங்க அப்பா அம்மாவ பிரிஞ்சேன் யது. எப்டி அவங்கள விட்டு வந்தேன்னு எனக்கு சுத்தமா நியாபகம் இல்ல. ஆனா அந்த நாள்… ஏதோ ஒரு காரணத்துக்காக நான் வீட்டை விட்டு போறேன்னு சொல்லிட்டு வெளில வந்தேன். அதுக்கு அப்புறம் நேரம் ஆக ஆக இருட்டு யது… அந்த இருட்டுல பயத்தோட சேர்ந்து பசி. என்ன பண்றது ஏது பண்றதுன்னு தெரியல. எங்க போறேன்னு தெரியாம நான் பாட்டுக்கு வந்தேன். ஒரு இடத்துல உட்காந்து அப்பா அம்மான்னு அழுதேன். தேம்பி தேம்பி அழுதேன் யது. அழுதுகிட்டே வந்தேன்.

 

அப்போ கீழ ஒரு பெட்டி கிடந்துச்சு. அதுல சில பேப்பர்ஸும் ஒரு லட்சம் பணமும் இருந்தது. அப்போ இருந்த பசிக்கு எடுத்துட்டு ஓடிடலாம்னு தான் இருந்துச்சு. அப்ரோம் என்ன நினச்சேன்னு தெரியல. அங்கேயே உட்காந்துத்துட்டேன்.

 

அப்போ தான் அவரை சந்திச்சேன். சரவணகுமார். அவரோட பெட்டிதான் அது, எதையோ தேடிக்கிட்டு வந்தவரு அதை என் கைல பாத்த உடனே கொஞ்சம் பதட்டம் கொறஞ்சு இருந்தாரு. அப்போவே நான் சரியான ஒரு விஷயம் செஞ்சு இருக்கேன்னு புரிஞ்சிகிட்டேன். அவர் கிட்ட ‘சார் இது உங்க பெட்டியா?’ன்னு கேட்டேன் அவர் ‘ஆமா’ன்னு சொன்னாரு..

 

சரவணன் “ஆமா தம்பி, ரொம்ப நன்றிபா.. நீ இந்த நேரத்துல என்ன பண்ற.? அதுவும் இருட்டுல.?”

 

ஆதி அழுது கொண்டே”சார் நான் தப்பு பண்ணிட்டேன் சார். நான்… நான்.. எதையோ கூற வந்தவன் நான் வீட்ல இருந்து சண்டை போட்டு வந்துட்டேன் சார். எனக்கு பயமா இருக்கு” என்றான் தேம்பி கொண்டே..

 

சரவணன் “சரி சரி அழாத. உன் வீடு எங்க இருக்கு.? ஏன் வீட்ல இருந்து வந்த.?”

 

ஆதி அமைதி காக்க, இதற்கு மேல் அவன் எதுவும் கூற விரும்பவில்லை என்று உணர்ந்த சரவணன், “சாப்டியா பா.?” என்று கேட்க,  ஆதி மறுத்து வேகமாக தலை ஆட்டினான்.

 

சரவணன் “சரி என் கூட வா!” என்று அவனை அழைக்க, ஆதி தயங்க, “நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன் பா! உன் வயசுல எனக்கும் ஒரு பையன் இருக்கான். நீ இப்போ என் கூட வா. காலைல அடுத்து என்ன பண்ணலாம்ன்னு பாக்கலாம்” என்று விட்டு மறுநாள் அவனின் வீட்டில் அவனை விட வேண்டும் என்ற எண்ணத்தில் அழைத்தார்.

 

ஆதியும் ஒப்புக்கொண்டு அவருடன் சென்றான். அங்கு தான் அவனின் எதிர்காலம் மாறப்போகிறது என்பதும், வீட்டிற்கு செல்பவர்களுக்கு பேரிடி காத்து இருந்தது என்பதும் இருவரும் அறியாத ஒன்று…

 

சரவணகுமார், அன்று வளர்ந்து வரும் தொழிலதிபர். தன் பெற்றோர்களை மீறி காதலித்தப் பெண்ணை கைபிடித்தவர். நேர்மையின் மறு உருவம். எதற்கும் அஞ்சாதவர். தன் மனைவி மக்கள் மீது உயிரையே வைத்து இருப்பவர். அவரின் நிழலை கூட எதிரிகள் நெருங்க முடியாத அளவுக்கு இருக்கும் அவரின் தோரணை.

 

ஆதி அவருடன் சேர்ந்து மகிழுந்தில் பயணிக்க, இருவரும் ஒரு உணவு விடுதியில் நுழைந்தனர். அந்த விடுதியையே இமைக்கொட்டமல் பார்த்து கொண்டு வந்தான் ஆதி. அதை பார்த்து சிரித்த சரவணன் “உன் பேர் என்ன பா?”

 

ஆதி “முன்ன பின்ன தெரியதவங்க கிட்ட பேர் சொல்ல கூடாது. அப்ரோம் நான் இங்க சாப்பிடத்துக்கு பெரியவனாகி வேலைக்கு போய் காசு குடுத்துடுறேன்” என்றான்.

 

இருவரும் ஒரு மேஜையில் அமர, சரவணன் சிரித்துக்கொண்டே உணவை ஆர்டர் செய்தார். ஆதி அவரையே விழி விரித்து பார்க்க அதில் சிரித்தவர், “எனக்கு உன் காசு வேணாம். அதுக்கு பதில் வேற ஒன்னு தருவியா நீ.?”

 

ஆதி தன் சட்டை பை மற்றும் கால் சட்டையில் கை விட்டு பார்த்து விட்டு “இப்போ என்கிட்ட ஒன்னும் இல்ல! என்று உதட்டை பிதுக்கி கூறி, கண்டிப்பா நான் வேலைக்கு போய் தரேன். என்ன வேணும்னு சொல்லுங்க.?” என்றான்.

 

சரவணன் “உன் பேர முதல சொல்லு நான் சொல்றேன்”

 

ஆதி “என் பேர் ஆதித்யன். எல்லாரும் ஆதின்னு கூப்டுவாங்க.. உங்க பேர் என்ன?” என்றான் உணவை உண்டு கொண்டே.

 

சரவணன் “என் பேர் சரவணகுமார். குமார்ன்னு கூப்பிடுவாங்க” என்றார்.

 

ஆதி “எல்லாரும் முத பாதி பேர தான கூப்பிடுவாங்க. சோ நான் உங்களை சரவணன்னு கூப்டுரேன் என்று விட்டு நைஸ் டு மீட் யூ சரவணன்” என்றான்.

 

சரவணன் அவன் கூறியதில் மகிழ்ந்து “சரி ஆதி. இப்போ நாம எங்க வீட்டுக்கு போலாமா.?”

 

ஆதி தயங்க, சரவணன் “உங்க வீட்டுக்கு தான் நீ இனி போக மாட்டல.? அப்போ வேற எங்க போவ.? இப்போ எங்க வீட்டுக்கு வா. கொஞ்ச நாள் இரு. உனக்கு பிடிக்கலனா நீ சொல்ற மாதிரி நான் கேக்குறேன்” என்றார்.

 

ஆதியும் அரை மனதாக அவருடன் சென்றான். மகிழுந்து பெரிய மாளிகை முன் வந்து நிற்க, ஒரு வேலையாள் வந்து கதவை திறந்தார். மகிழுந்தில் இருந்து வீட்டிற்குள் இருவரும் நுழைய, ஆதி தான் மலைத்து போனான். கனவிலும் இவ்வாறு நினைத்து பார்க்காதவன் மிக பெரிய மாளிகையில் இருப்பது கனவு தான் என்று விழி விரித்து பார்த்தான்.

 

அனைத்தையும் ஒரு நிமிடத்தில் குலைக்கும் வகையில் நடந்தது அந்த சம்பவம். சரவணனின் மனைவியும் மகன்களும் இறந்து விட்டதாக வந்தது அந்த அதிர்ச்சி தகவல்….

 

 

கனவு தொடரும்…

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்