Loading

              மகி, தான் கல்யாணத்திற்கு வரவில்லை என்றதும் ஆகாஷ் திகைத்து அவளை பார்த்தவன் “ஏன் நீ வரமாட்ட?” என்றான். “ஏன்னா. கல்யாணம் பெங்களூர்ல வைச்சிருக்காங்க. அவ்வளவு தூரம் யார் போறது.” என்றாள் இலகுவாக. “எது. இங்க இருந்து கார்ல போனா அஞ்சு மணி நேரத்துல போய்டலாம். அது தூரமா?” எனக் கேட்டான் ஆகாஷ்.

“எவ்ளோ ஈசியா சொல்ற. நான் சென்னை தாண்டி இருக்கற விழுப்புரமே தனியா போனதில்ல. இதுல நீ வேற ஸ்டேட்டுக்கு போலாம்னு சொல்ற.” என்றவளை ஆச்சர்யமாக பார்த்த ஆகாஷ், “ஏன் போனதில்ல. வேற எங்கையும் உனக்கு ரிலேஷன்லாம் இல்லயா?” எனக் கேட்டான்.

“தெரியல. மேக்ஸிமம் போனதில்ல. காலேஜ் படிக்கறப்ப டூர் கூட போனதில்ல. அது அப்பாம்மாக்கு பிடிக்காது. அதுனால நானும் கேட்க மாட்டேன். போன ஆபிஸ்லயே பெங்களூர் பிரான்ச்க்கு மாத்தவும்தானே ரிசைனே பண்ணேன்.” என்றாள் மகி.

“அது ஓகே. அங்கேயே போய் இருக்க முடியாது. இது ஒன்டே தானே?” என்ற ஆகாஷை இடைமறித்த மகி, “எப்படியும் நான் வரமாட்டேன். நீ உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாம கிளம்பு.” என்றபடி கிளம்பிவிட, ‘எதனால் இப்படி’ என யோசித்தவாறு சில நிமிடங்கள் நின்றவன், ‘எதுக்கும் அம்மாட்ட கேட்கனும்’ என நினைத்துக் கொண்டே சென்றான்.

ஆனால் அடுத்த நாள் அவனே எதிர்பாராத விதமாக சந்துரு ஆகாஷை அழைக்க, ‘இவர் எதுக்கு நம்பள கூப்பிடறாரு. அதுக்குள்ள அப்ரைசல் பண்ணுவாங்களோ?’ என யோசித்துக் கொண்டே உள்ளே சென்றான். “எப்படி இருக்கிங்க ம்ம். ஆகாஷ் ரைட்.?” எனக் கேட்டான் சந்துரு.

“எஸ் சார். ஃபைன். ஏதாவது டீடையல்ஸ் வேணுமா சார்?” என்றான் ஆகாஷ். “ம்ம் ஒன்னுமில்ல. ராகினி மேரேஜ்க்கு போக பிளான் பண்ணியாச்சா?” எனக் கேட்டான் சந்துரு. “இல்ல சார். சனிக்கிழமை ஆபிஸ் இருக்கு. ஒன்டேல எப்படி போறதுனு தெரியல.” என்றான் ஆகாஷ் யோசனையாக.

“ஓகே. எவ்ளோ பேர் ஆபிஸ்ல கண்டிப்பா போகனும்னு ஐடியால இருக்காங்கன்னு செக் பண்ணி சொல்ல முடியுமா? ஃபார் ஆல் த டிபார்ட்மெண்ட்ஸ். ஏன்னா. எல்லோரும் குளோஸா இருக்க மாட்டாங்கள்ள ராகினிக்கு.” என்றான் சந்துரு. “கண்டிப்பா சார். ஈவ்னிங்குள்ள சொல்றேன்.” என்றபடி ஆகாஷ் கிளம்ப, “ஒரு நிமிஷம்” என்றான் சந்துரு.

ஆகாஷ் என்னவென்பதை போல பார்க்க சந்துரு, “இது மகிக்கு தெரிய வேண்டாம். அவங்களை தவிர எவ்ளோ பேர்னு சொன்னா போதும்.” என்க, “கண்டிப்பா தெரியாது சார். ஏன்னா மகி லிஸ்ட்லயே இல்லயே. மேடம் மேரேஜ்க்கு வரலன்னு சொல்லிட்டாங்க.” என்றான் ஆகாஷ்.

“என்ன சொல்றீங்க. அவங்க ராகினிக்கு அமௌண்ட்லாம் கலெட்க் பண்றதா சொன்னாங்களே? ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ்தானே?” என சந்துரு கேட்கவும் மகி தன்னிடம் கூறியதை அவனிடம் பகிர்ந்தான் ஆகாஷ். அதைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்த சந்துரு, “சரி லிஸ்ட் எடுங்க. பார்க்கலாம்.” என ஆகாஷை அனுப்பினான்.

              பெங்களூரில் அடுத்த நாள் காலையிலே சித்து கிளம்பி வெளியில் வர, மகிழோ கையில் பையோடு நின்றிருந்தாள். “என்ன மகிழ் காலைலயே பேக் பண்ணி வைச்சிருக்க. எங்க கிளம்பிட்ட?” எனக் கேட்டான் சித்து. “ஆபிஸ் போய்ட்டு அப்படியே வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன் அபி” என்றாள் மகிழ்.

அவள் கூறியதில் சற்று அதிர்ந்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல், “அகல்யாகிட்ட பேசினியா?” என்று மட்டும் கேட்டான். “ம்ம் பேசிட்டேன் அபி. ஒன்னும் பிரச்சனை இல்லையாம். நேத்து ஃபுல்லா அவன் அங்க வரவே இல்லையாமா.” எனவும், “அப்ப சரி. வா சாப்பிட்டு கிளம்பலாம்.” என்றபடி உணவருந்த செல்ல அவர்களோடு கவினும் இணைந்து கொண்டான்.

அதன்பிறகு அவர்கள் கிளம்பும்போது சரியாக ஸ்ரேயா வர கவின், “ஓகே மச்சி பார்த்து வாங்க. நேத்தெல்லாம் மழை வேற” எனும்போதே மகிழ், ஸ்ரேயாவின் வண்டியில் ஏறி இருந்தாள். சித்து அவர்களை பார்த்து கவின் கூறிய அதே வார்த்தைகளை கூற இருவரும் கிளம்பினர்.

அப்போதுதான் கவினும் பையை கவனித்தான். “என்னடா உனக்கும் மகிழுக்கும் ஏதாவது சண்டையா? பை எடுத்துட்டு போற மாதிரி இருக்கு.” என கவின் கேட்க, “அதெல்லாம் ஒன்னுமில்லடா. அப்பறம் அவளும் எத்தனை நாள் இங்கையே இருக்க முடியும்?” என்றான் சித்து.

“அது ஓகே தான். ஆனா டெய்லி உன்கூட வந்துட்டு இப்ப என்னாச்சு. எனக்கென்னவோ தப்பா படுதுடா. மகிழ் உன்ன தப்பா நினைச்சிருக்குமோ” என கவலையாக கவின் கூற, “அதெல்லாம் ஒன்னுமில்லடா. நீ எப்ப பாரு ஸ்ரேயாவோட சுத்தறது என் தங்கச்சிக்கு பிடிக்கலயாம். அதான் அவ அண்ணிகிட்ட சொல்லி இப்படிலாம் நடக்குது” என்றான் சித்து சீரியசாக.

“என்னடா நாங்க நல்ல ஃப்ரண்ட்ஸ். இப்படில்லாம் பேசறது உன் தங்கச்சிக்கு நல்லதில்ல சொல்லிட்டேன். ஆமா அதுக்குள்ள மகிழை பத்தி சொல்லிட்டியா?” என்ற கவின் சித்துவை பார்க்க. அவனது கண்களின் சிரிப்பு கள்ளத்தனம் காட்டியது. “டேய் பிராடு. உங்க குடும்பத்துல வாக்கப்படறது பத்தி நான் இன்னும் யோசிக்கல. அப்பறம் அவ்ளோதான் பார்த்துக்கோ.” என்றான் கவின்.

“சரிடா. வா போகலாம்.” எனவும் கிளம்ப, அப்போது கவின், “ஆமா. இன்னமும் மகிழை எப்படி உனக்கு தெரியும்னு சொல்லவே இல்லையே” என்றான் கவின். “அது ஒரு பெரிய கதைடா. பர்ஸ்ட் டைம் அவளை பார்த்ததும் ஒரு இக்கட்டான தருணத்துல தான் இப்பவும் அப்படிதான் இருக்கு.” என்றவன் நினைவுகளுக்குள் சென்றான்.

            இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சியில், சுற்றுலா தொடர்பான நிறுவனம் ஒன்று அவர்களது தொழில் முன்னேற்றத்திற்கும், விளம்பரத்திற்கும் உதவும் வகையில் சமூக வலைதளங்கள் மூலம் சில போட்டிகளை நடத்தியது. அதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ஐந்து நாட்கள் இலவச சுற்றுலாவை பரிசாக அறிவித்திருந்தது.

அது சித்து தொழிலை வெற்றிகரமாக நடத்த தொடங்கிய காலம். அவனது துறையில் ஓரளவு அனைவருக்கும் அவனது பெயர் பரிச்சயம் ஆகியிருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக வீட்டில் பிரச்சனை ஆரம்பித்திருந்தது.

வீட்டில் உள்ளவர்கள் அவனது திருமணத்தை பற்றிய பேச்சை ஆரம்பித்ததோடு நிரஞ்சனியை மணப்பெண்ணாக காட்டியதே அதன் தொடக்கம். எப்போதும் அவனது அனைத்து முயற்சிக்கும் துணை நிற்கும் அவனது தந்தை கூட இப்போது ஆதரவாக இல்லை.

ஒரு வேலை விசயமாக கவினும் அப்போது வெளிநாட்டுக்கு சென்றிருந்தான். தனது பிரச்சனைகளை மறக்க சமூக வலைதளங்களை பார்க்க ஆரம்பித்தபோது தான் இந்த போட்டி கண்ணில்பட்டது. விளையாட்டாக பங்கேற்க ஆரம்பித்தவன் இறுதியில் வெற்றியும் பெற்றான்.

சித்துவோடு மட்டுமல்லாது மேலும் நான்கு பேர் இந்த போட்டியில் வெல்ல பரிசாக ஐந்து நாட்கள் சுற்றுலாவிற்கு நாள் குறித்து அனுப்பினர் அந்த நிறுவனத்தார். முதலில் போகலாமா வேண்டாமா? என்ற ஐயத்தில் இருந்தவனுக்கு நிரஞ்சனி பத்து நாட்கள் வீட்டில் தங்க போவதாக தகவல் வர சட்டென கிளம்பி விட்டான்.

திருச்சியில் இருந்து கிளம்புவதாக இருந்ததால், சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றவன் அவர்களோடு இணைந்து கொண்டான். அது பெரிய நிறுவனம் எல்லாம் இல்லை. நண்பர்கள் இருவரால் தொடங்கப்பட்டு இரு வருடங்களே ஆகியிருந்த ஒரு சிறிய நிறுவனம்.

அவர்களோடு இவர்களும் இணைய அழகாக ஆரம்பமானது அந்த பயணம். திருச்சியில் தொடங்கி பழநி வழியாக ஆழியாறு தாண்டி அழகான மலைப்பகுதியில் ஆபத்தான நாற்பது கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி பசுமை போர்த்திய வால்பாறைக்கு சென்றனர்.

அங்கிருந்த பாலாஜி கோவிலில் இருந்து தென்னிந்திய சிரபுஞ்சியாம் சின்னக்கல்லாறு பார்த்து, அழகிய பூ, தேயிலைத் தோட்டங்களை ரசித்து, ஆபத்தான உயரங்களில் இருந்து பள்ளத்தாக்குகளை கண்டு பயந்து, அந்த மலைவாழ் பிரதேசத்தை ரசித்துவிட்டு சோலைவனமாய் இருந்த சோலையாறு வனத்தின் வழியாக கேரளா சென்றனர்.

கடவுளின் தேசமாம் கேரளாவின் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி அதிராம்பள்ளியில் தொடங்கி, அழகிய செராய் கடற்கரையில் கால் நனைத்து, தென்னகத்து காஷ்மீராம் மூணாறு சென்று தேயிலையோடு காபி, ஏலக்காய் தோட்டங்களையும் ரசித்து, இரவிக்குளம் தேசிய பூங்காவில் இயற்கையோடும் வன உயிரினங்களோடும் அளவளாவி மாட்டுப்பட்டி அணையில் பரிசில் ஓட்டினர்.

அங்கிருந்து மேற்குத்தொடர்ச்சி மலையின் காற்று வாசத்தோடு, தேனியின் எழிலான சுருளி அருவியில் குளித்து ஆட்டம் போட்டு, அங்கிருந்தே சங்கத்தமிழ் கொஞ்சி விளையாடிய மதுரை மாநகரத்திற்கு வந்தனர். அங்கு மீனாட்சியையும், பழமுதிர்ச்சோலை முருகனையும் தரிசித்து நாயக்கர் மஹாலின் அழகை ரசித்தனர்.

கடைசி நாளன்று மதுரையில் இருந்த சித்துவின் கெஸ்ட் ஹவுசில் தங்கி அடுத்த நாள் அவரவர் இல்லங்களுக்கு சென்றனர். அதே நினைவிலே சித்து, “வெறும் ஏழு பேரு, அஞ்சே நாள்தான். அதுவும் பெரும்பாலும் நான் ஏற்கனவே போன இடம்தான். இருந்தாலும் அந்த ஃபீல் நல்லா இருந்தது. எல்லார்கிட்டயும் ஒரு ஃப்ரண்ஷிப் டெவலப் ஆகிடுச்சு.

எல்லாரும் ஒன்னா சமைச்சு, சாப்பிட்டு, ஊர்சுத்தி, தூங்கி நிஜமாலுமே ஒரு மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ் அது. அப்பறமும் கூட ரொம்ப நாள் நான் எல்லார்கிட்டயும் காண்டாக்ட்ல இருந்தேன். அப்பா இறந்த பிறகு ஃபோன் மாத்தினேன்ல அப்பதான் பேச முடியாம போச்சு.” என கவினிடம் கூற அவனோ ஆச்சர்யமாக பார்த்தான்.

“இவ்ளோ நடந்திருக்கா? இதுவரை இதையெல்லாம் என்கிட்ட சொல்லவே இல்ல.” என்றான். “அப்ப நீ பாரீன் போயிருந்தடா. வந்த பிறகு உன்கிட்ட சொல்ற சந்தர்ப்பம் கிடைக்கல.” என்றான் சித்து. “ஓ ரொம்ப பிரச்சனைன்னு சொல்லி புலம்பிட்டு இருந்தவன், கொஞ்ச நாள் ரொம்ப நார்மலா சந்தோஷமா இருந்தியே அதுக்கு இதுதான் காரணமா?” என கவின் கேட்டதற்கு தலையாட்டினான் சித்து.

சித்து சொல்ல ஆரம்பித்து சில நிமிடங்களில் அலுவலகம் வந்து விட, பார்க்கிங்கில் இருந்தே இதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். “எல்லாம் ஓகே. இதுக்கும் மகிழுக்கும் என்ன சம்பந்தம்?” எனக் கேட்டான் கவின். “செலக்ட் ஆன அஞ்சு பேர்ல மகிழும் ஒரு ஆளு. அப்ப தேனில இருந்து வந்திருந்தா. அதுதான் நான் இங்க பார்த்ததுல ஷாக் ஆகிட்டேன்.” என்றான் சித்து.

“அதுக்கு ஏன் ஷாக் ஆகனும். ஏதாவது ரிலேடிவ் வீட்டுக்கு கூட வந்து இருக்கலாம்ல.” என கவின் கூற, “அதுக்கு வாய்ப்பே இல்லடா. அவளுக்கு ரிலேடிவ்ஸ் யாருமே இல்ல. ரொம்ப சின்ன வயசிலேயே அவங்கப்பாம்மா இறந்துட்டாங்க. அவ வளர்ந்தது, படிச்சது எல்லாமே ஒரு ஆசிரமத்திலேயே தான்” என்றதில் கவின் அவனை அதிர்ச்சியாக பார்த்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்