அடுத்த வந்த நாட்கள் ஆராதனாவிற்கு சுலபமாக சென்றது. யுவன் இருக்கும் அதே தளத்தில் தான் இருந்தாள். ஆனால் அவனை பார்க்கவே முடியவில்லை. ஸ்கூட்டியை விட்டு விட்டு காரை அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு வந்து போக பழகி இருந்தாள்.
காலையில் ஆராதனா வீட்டில் இருந்து கிளம்பும் போது யுவனும் வருவான். இடையில் எங்கு செல்கிறான் என்று தெரியாது. ஆனால் எங்காவது அலைந்து கொண்டே இருப்பான். ஆராதனா அவன் ஓடி ஓடி வேலை செய்வதை ஒரு பிரம்மிப்போடு பார்த்தாள்.
முதலில் அவன் மேல் இருந்த வெறுப்பு எல்லாம் குறைந்து போனது. முதலிலும் கூட அவன் பக்கம் நியாயம் இருந்த போதும் ஆராதனா எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டாள். இப்போது இத்தனை பேர் மதிக்கும் ஒருவனிடம் சிறு பிள்ளை தனமாக சண்டை பிடித்ததை நினைத்து அவளுக்கே வெட்கமாக இருந்தது.
அவளும் யுவனை தவிர்த்து வேலையை மட்டும் கவனிக்க முடிவு செய்தாள். மாதம் ஒரு முறை இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க மட்டுமே யுவனை சந்திக்க வேண்டியிருந்தது.
ஆராதனா யுவனுக்கு நெருங்கியவள் என்று மரியாதை கொடுத்து பலர் அவளிடமிருந்து விலகி நின்றனர். நான்கு மாதங்கள் கடந்து போக இம்ரான் ஆராதனாவை அழைத்தான்.
“இங்க வா… இத படிச்சு பாரு” என்று அவளிடம் கணினியில் எதையோ காட்ட ஆராதனா அதை நன்றாக உற்று பார்த்து படித்தாள்.
அதிர்ச்சி தாங்காமல் ஒரு முறைக்கு நான்கு முறை படித்து விட்டாள்.
“டேய்.. இது… இந்த ஆராதனா நான் தானா?” என்று கேட்க “ஆமா” என்றான்.
“என்னடா இது? நான் வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம் கூட ஆகல அதுக்குள்ள என்ன இது?”
“நான் பண்ணல… யுவன் தான் போட்டான். அவனையே கேளு போ”
“எங்க அவன்?”
“அவன் கேபின்ல தான் இருப்பான்”
“இரு வரேன்”
“இங்க வந்து என் கிட்ட தான் சைன் பண்ணனும். பேசிட்டு வா. நான் அதுக்குள்ள ஒரு வேலைய முடிச்சிட்டு வரேன்”
இம்ரான் அவன் வேலையை பார்க்க கிளம்பி விட ஆராதனா யுவனிடம் சென்றாள். முகம் முழுவதும் குழப்பத்துடன் ஐடி கார்டை பிடித்து பிய்க்காத குறையாக இழுத்து ஆட்டிக் கொண்டே லிஃப்டில் நுழைந்தாள்.
மேலே சென்று திறக்க யுவன் அவளை தாண்டி நடந்து சென்றான். அவசரமாக “ஏய் நில்லு…” என்று கூறி விட்டாள். அவனுக்கு அருகில் இருந்த இருவர் திரும்பி பார்க்க அப்போது தான் தன் தவறை உணர்ந்தாள்.
‘போச்சு இன்னைக்கு அட்வைஸ் பண்ணி அறுக்க போறான். ஒரு சண்டை இருக்கு’ என்று நினைத்துக் கொண்டே பார்க்க “இங்க வா ஆரா..” என்று அழைத்தான் யுவன்.
சந்தேகமாகவே அருகில் செல்ல “இவங்க ஆராதனா.. டிஸைனிங் செக்ஷன் ஹெட். ரகுநாதன் சார் பொண்ணு” என்று மற்றவர்களுக்கு அறிமுக படுத்தினான்.
அவர்கள் கை நீட்டும் முன் அவசரமாக ஆராதனா வணக்கம் வைத்தாள். அதில் யுவனுக்கு ஏக போக திருப்தி. உடனிருந்தவர்களும் அவளுக்கு வணக்கம் வைக்க நால்வரும் யுவனின் அறைக்குள் சென்றனர்.
வந்திருந்தவர்கள் ஒரு சிறிய நிறுவனத்தினர். இவர்கள் நிறுவனத்தின் ஆண்களுக்கான பர்ஸை விளம்பர படுத்துவதற்காக பல நிறுவனங்கள் வந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதில் இப்போது வந்தவர்களும் அடக்கம்.
“உங்க வொர்க் பைனல்க்கு செலக்ட் ஆகிட்டா உங்கள கண்டிப்பா காண்டாக்ட் பண்ணுவோம்” என்று கூறி அனுப்பி வைத்தான்.
அவர்கள் சென்றதும் “சொல்லு… இப்போ கொடுத்த போஸ்ட் பிடிக்கலையா?” என்று கேட்டான்.
“முதல்ல எனக்கு என்ன தகுதி இருக்கு னு இதுல போட்ருக்க னு புரியல”
“இத நான் பண்ணல ஆரா.. இதுக்கு தனி டீம் செட் பண்ணிட்டேன். அவங்க ஒவ்வொருத்தரையும் தனி தனியா வாட்ச் பண்ணுவாங்க. இது யாருக்கும் தெரியாது. அவங்க தான் டிசைட் பண்ணுவாங்க. யாருக்கு ப்ரமோட் கொடுக்கனும். யார தூக்கனும் எல்லாமே”
“என்னடா.. ரகசிய உளவு படையே நடத்துற போல?”
“ஆமா… இல்லனா இத்தனை பேர எப்படி சமாளிக்குறது?”
“அப்படி என்ன சமாளிக்க வேண்டி வரும்?”
“இங்க மட்டும் இல்ல. அப்பாவும் மாமாவும் இருக்க ஆபிஸ்ல யும் ஒரு நாளுக்கு நூறு பிரச்சனை வரும். அதெல்லாம் சிசிடிவி கேமராவயும் அடுத்தவன் சொல்லுறத வச்சும் எல்லாம் முடிவு பண்ண முடியாது. அதே போல தனி தனியா எல்லாரோட வேலையையும் நான் போய் தனி தனியா செக் பண்ண முடியாது.
சோ வந்த உடனே நான் செஞ்ச முதல் வேலை இதான். எல்லாரையும் கவனிக்க னு தனி டீம் போட்டேன். இந்த கார்னர் ல லாஸ்ட் ல தான் இருக்கு அந்த செக்ஷன். அதுல யாரு வேலை செய்யுறாங்குறது யாருக்குமே தெரியாது. அவங்க எப்போ வருவாங்க போவாங்க னு கூட இது வரை யாருக்கும் தெரியாது. அங்க போறதுக்கே யாருக்கும் அனுமதி கிடையாது”
“எப்பா… பெரிய கில்லாடி தான் டா நீ”
“வா… உனக்கு காட்டுறேன்”
அவளை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
“இங்க நானும் இம்ரானும் மட்டும் தான் வர முடியும்” என்று கூறி விட்டு உள்ளே அழைத்துச் சென்றான்.
உள்ளே இருபது பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கென எல்லாமே அங்கு இருந்தது. தனி லிஃப்ட்டும் இருந்தது. அதன் வழியாக நேராக பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று விட முடியும். மேலே வேறு யாரேனும் வந்தாலும் லிஃப்டை திறந்து உள்ளே வர அவர்களது கை ரேகை தேவை படும்.
“இவங்க யாருமே மத்த ஸ்டாஃப் கிட்ட பேச மாட்டாங்க. இவங்களுக்குள்ள தான் பேசிப்பாங்க. “
யுவன் சொல்லிக் கொண்டே வர மற்றவர்கள் அவனுக்கு கையாட்டி விட்டு வேலை பார்த்தனர். ஒரு சிலர் மட்டும் ஆராதனா யார் என்று விசாரித்தனர்.
“இவளா… சொல்லுறேன்.. எல்லாரும் கவனிங்க” என்று எல்லாரையும் அழைத்தான்.
“இவங்க பேர் ஆராதனா… சின்ன வயசுல இருந்தே என் கூட வளர்ந்தவ. வாய் கொஞ்சம் ஓவரா பேசுவா… மத்தபடி நல்லவ தான்”
“ஹாய் ஆராதனா” என்று எல்லோரும் கூற “ஹாய் ஹாய்” என்றவள் யுவனை முறைக்க தவறவில்லை.
அங்கிருந்தவர்களிடம் சில நேரம் பேசி விட்டு அங்கு நடக்கும் வேலைகளை பார்த்தாள். எல்லோரும் ஒரே வயதினராக இருந்தனர். யுவனையும் பெயர் சொல்லித் தான் அழைத்தனர். கிட்டத்தட்ட மொத்த அலுவலகமும் அங்கு தான் இயங்கிக் கொண்டிருந்தது.
ஒவ்வொருவருடைய வேலையும் தனி தனியாக அலசி ஆராயப்பட்டது. அதன் முடிவுகள் நேரடியாக யுவனுக்கு வந்து சேர்ந்தது.
“இத உருவாக்க ஆறு மாசம் ஆச்சு எனக்கு… இங்க இருக்க யாருக்குமே யாரையும் முதல்ல தெரியாது. இங்க வந்து பழக்கமானவங்க தான். எனக்கு ஆபிஸ்ல போரடிச்சா இங்க வந்து உட்கார்ந்து இவங்களோட பேசிட்டே வேலை பார்ப்பேன். எல்லா வகையிலயும் நம்ப கூடிய ஆளுங்க.”
“உன்ன பாராட்டனும் தோனுதே.. அய்யய்யோ ஆரா.. உனக்கு என்னமோ ஆயிடுச்சு” என்று ஆராதனா தனக்கு தானே பேச யுவன் அவள் தலையில் தட்டி சிரித்து விட்டு சென்றான்.
“இங்க நடக்குறது எல்லாம் இவங்க பேமிலிக்கு கூட தெரியாது. எல்லாம் கல்யாணம் ஆகாத பசங்க. கல்யாணம் ஆகிட்டா அவங்கள வேற டிப்பார்ட்மெண்ட் அனுப்பிடுவேன்”
“ஏன்? கல்யாணம் ஆகுறது தப்பா?”
“இல்ல. பட் கல்யாணம் ஆகிட்டா அவங்க குடும்பத்தோட நேரம் செலவு பண்ணனும். அத நான் பிடிச்சுக்க கூடாது. ஒரு நல்ல வேலையில சேம் சேலரில மாத்தி விட்ருவேன். ஆனா அவங்க திரும்ப இந்த ஏரியாக்கு வர முடியாது. இவங்களும் ஆபிஸ் மேட்டர அவங்க கிட்ட பேச மாட்டாங்க. ரூல்ஸ் அப்படி”
“இதெல்லாம் எப்படி டா யோசிச்ச?”
“இந்த ப்ரான்ச் ஆரம்பிச்சு சில மாசம் செம்ம பிரச்சனை. அத தீர்க்கவே எனக்கு நேரம் சரியா போச்சு. வேலைய பார்க்கவே முடியல. அதுல தான் இப்படி ஒரு ஐடியாக்கு வந்தேன். இப்போ எங்க என்ன பிரச்சனை நடந்தாலும் அதோட முழு டீடைல் எனக்கு வந்துடும். அது மட்டும் தான் ஸ்டார்டிங் ல பார்த்துட்டு இருந்தாங்க. அப்புறம் தான் வேலையையும் அனலைஸ் பண்ண செட் பண்ணேன். யாருக்கும் தப்பா எந்த விசயமும் நடக்காது. நல்லா வேலை பார்த்தவங்களுக்கு ப்ரோமோஷன் உண்டு. யாரு உழைப்பையும் யாரும் திருட முடியாது பாரு”
“அப்போ என்னோடதையும் இவங்க பார்த்தாங்களா?”
“எஸ்… இவங்க அனலைஸ் பண்ணி அனுப்பின ரிப்போர்ட்ல உனக்கு ஹெட் ஆ இருக்க முழு தகுதியும் இருக்கு னு சொல்லிட்டாங்க. அதுனால தான் போட்டேன்.”
“அப்போ இப்போ இருக்க ஹெட்?”
“தூக்கியாச்சு”
“ஏன்?”
“கஸ்ட்டமர் சைட்ல இருந்து நிறைய கம்ப்ளைண்ட். இதுக்கு மேல வச்சுருக்க முடியாது. புது ஹெட் செலக்ட் பண்ணுங்க னு சொன்னேன். உன்ன தான் அனுப்புனாங்க. பார்த்தல.. நீ யாரு னு கூட அவங்களுக்கு தெரியாது. உன் திறமை தான் பேசும்”
“எங்கயோ போயிட்ட போடா”
“இப்போ அந்த வேலை ஓகே தான? போய் இம்ரான் கிட்ட சைன் பண்ணு”
“ஓகே.. உன் மேல இல்லனாலும் நீ உருவாக்குன டீம் மேல நம்பிக்க வச்சு பார்க்குறேன்”
ஆராதனா சென்று விட யுவன் அவள் செல்வதை வேடிக்கை பார்த்தான். இது வரை யாரிடமும் அவன் இவ்வளவு விளக்கத்தை கூறியதில்லை. இம்ரானும் அவனும் தான் இந்த குழுவை உருவாக்கினார்கள். அதனால் இருவருக்கும் நன்றாக தெரியும். அதே நேரம் ரகுநாதனும் சத்தியனும் அனுமதி கொடுக்கும் போது அறிந்து கொண்டனர்.
நால்வரை தவிர ஆராதனா தான் முதல் முறையாக இதை அறிகிறாள். இவளை விட பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு கூட இது எதுவும் தெரியாது. அவளிடம் சொல்ல வேண்டும் போல் தோன்ற யோசிக்காமல் சொல்லி விட்டான். அவனுக்கு இங்கு இருக்கும் அதே உரிமை அவளுக்கும் உண்டு. அதனால் மறைக்க தோன்றவில்லை.
ஆராதனா புது வேலையில் அமர்ந்தாள். பல பல கைப்பைகளின் புதிய டிசைன்கள் அவளிடம் வரும். அதில் சிறந்ததை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் டிசைன்களை எடுத்து தயாரிப்புக்கு அனுப்ப வேண்டும்.
வேலை அவளுக்கு பெரிதாக இருந்தது. அதை பார்த்து சில நாட்களில் ஓய்ந்து போனாள். ஆனால் வேலையை விட வில்லை. அவள் வேலையில் சேர்ந்து ஆறு மாதம் வெற்றிகரமாக கடந்து விட்டது.
அன்று யுவனை தேடி சென்றாள். புதிய ப்ரபோஸல் பற்றி பேசச் செல்ல உள்ளே வேறு யாரோ இருந்தனர். அதனால் உடனே உள்ளே செல்லாமல் அங்கு நின்று இருந்தாள். உள்ளே இருந்து திடீரென யுவன் கதவை திறந்தான்.
ஆராதனா அவனை நிமிர்ந்து பார்க்க “வந்தா கதவ தட்டிட்டு உடனே உள்ள வா.” என்று மெதுவான குரலில் கூறி விட்டு அவள் செல்ல வழி விட்டு நின்றான்.
உள்ளே ஒரு பெண் அமர்ந்து இருந்தாள். அவள் ஆராதனாவை திரும்பி பார்க்க ‘யாரு இது?’ என்று ஆராதனா யோசித்தாள். எங்கோ பார்த்தது போல் இருந்தது அந்த பெண்ணின் முகம்.
“ஹாய் ஆராதனா” என்று அவள் கூற “ஹாய்…” என்றவள் யுவனை கேள்வியாக பார்த்தாள்.
“தெரியலையா… மாதவன் சித்தப்பா பொண்ணு.. யாமினி”
“ஓ… அதான் பார்த்த மாதிரியே இருக்கு னு யோசிக்கிறேன்… எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“ஹேய்.. நீங்க வாங்க எல்லாம் வேணாம். யாமினி னு கூப்பிடு போதும்” – யாமினி
“நோ ப்ராப்ளம்… “
“கையில என்ன?” – யுவன்.
“இது ஒரு நியூ ப்ரப்போஸல். டைம் இருந்தா பாரு”
“ஓகே வச்சுடு”
“ம்ம்.. நான் கிளம்புறேன்”
“இரு இரு… யாமினி இனி இங்க தான் வொர்க் பண்ண போறா. மேனேஜ்மென்ட் டிப்பார்ட்மெண்ட்.”
“ரியலி?”
“ஆமா.. இவ்வளவு நாள் அந்த ஆபிஸ்ல வொர்க் பண்ணா. மாமா தான் கொஞ்சம் ட்ரைனிங் கொடுத்து அனுப்பு னு சொல்லி இங்க அனுப்பிட்டார்”
“ஓகே ஓகே.. கன்க்ராட்ஜ்.”
“தாங்க்யூ” – யாமினி
அதே நேரம் இம்ரான் வந்தான்.
“இவங்கள கூட்டிட்டு போய் வேலைய சொல்லிடு இம்ரான். நீ இவர் கூட போ. “
யாமினி “ஏன் நீ வந்து காட்ட மாட்டியா?” என்று தலையை சாய்த்து வினவினாள்.
“நோ.. இவர் கூட தான் போகனும் நீ”
ஆராதனாவை ஒரு பார்வை பார்த்தவள் “ஏன்?” என்று கேட்டாள்.
“இங்க ஆயிரம் பேர வேலைக்கு சேர்க்குறோம். எல்லாருக்கும் நான் போக முடியாது பாரு அதான்”
“ஓகே” என்று தோளை குலுக்கி விட்டு ஆராதனாவை பார்த்துக் கொண்டே யாமினி வெளியேற இம்ரான் யுவனை சலிப்போடு பார்த்து விட்டு சென்றான்.
“சரி நானும் போய் வேலைய பார்க்குறேன்” என்று ஆராதனா கிளம்ப “இரு… இத பத்தி விளக்கமா சொல்லிட்டு போ” என்றான்.
“ஏன் உனக்கு கண்ணு இல்லையா? பார்த்து படி”
“கண்ணு இருக்கோ காது இருக்கோ அத பத்தி கவலை படாம ஒழுங்கா சொன்னத செய்”
“முடியாது போடா”
“ஆபிஸ் ல டா சொல்லாத சொன்னேன்ல”
“பின்ன? நீயே படிச்சு பாரு னா… என்ன படிக்க சொல்லுற?”
“முதல்ல இது யாரோடது?”
“டீம் பி யோடது”
“அத ஏன் நீ கொண்டு வந்த?”
“என் கையில கொடுத்து கொடு னு சொன்னாங்க”
“இத படிச்சியா?”
“ம்ம்”
“பிடிக்கலையா?”
“தெரியாது”
“அப்போ பிடிக்கல னு தான் எடுத்துப்பேன்”
“அது உன் இஷ்டம். என் கருத்த நான் சொல்லுறதா இல்ல”
யுவன் அதை படித்து விட்டு “சரி இத கொடுத்தவங்கள வர சொல்லு” என்று கூற அவளும் வெளியே சென்று விட்டாள்.
அதை தயார் செய்தவர் வர அதில் ஆயிரத்தெட்டு குறைகளை கண்டு பிடித்து கூறி யுவன் அதை மறுத்து விட்டான். அவர் கொண்டு வந்து கொடுத்தால் வேண்டாம் என்று கூறுவான் என்று தெரிந்து தான் ஆராதனாவிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் அவன் நேராக அவரை அழைத்து வேண்டாம் என்று கூறி விட முகத்தை தொங்க போட்டுக் கொண்டு சென்று விட்டார்.
தொடரும்.