Loading

 

 

 

 

 

திருமணம் முடிந்ததும் யாமினியும் இம்ரானும் யாருக்கும் தெரியாமல் சங்கவியை அடைத்திருக்கும் இடத்திற்கு வந்தனர். யாமினி சங்கவியை அடைத்து விட்டு வரும் போது இம்ரானும் அங்கு வந்தான்.

 

யாமினி அவன் கையில் படத்தை கொடுத்து விவரத்தை கூறினாள்.

 

“கல்யாணம் முடியட்டும் பார்த்துக்கலாம். அது வர இங்க யாரையும் வர விடாம பண்ணிடலாம்” என்று கூறி விட்டு அந்த பக்கம் செல்லும் பாதையை மறைத்து விட்டு இருவரும் வந்து விட்டனர்.

 

இப்போது அங்கு சென்று சங்கவியை பார்த்தனர். பைத்தியம் பிடித்த நிலையில் சங்கவி அமர்ந்து இருக்க இம்ரான் யாமினியை கதவை மீண்டும் பூட்ட சொல்லி விட்டான்.

 

எல்லோரும் சாப்பிட்டு கிளம்பிவிட வீட்டிற்கு கிளம்பும் நேரம் இம்ரான் யுவனிடம் ரகசியமாக விசயத்தை கூறினான்.

 

“போலிஸ் கிட்ட ஒப்படச்சுடு. அதோட அவ பேரன்ட்க்கும் சொல்லிடு. கூட பழகுன பாவத்துக்கு இதான் நம்மலால செய்ய முடியும்” என்று கூறி விட்டான்.

 

இம்ரான் யுவன் சொன்னதை செய்ய கிளம்பி விட மற்றவர்கள் வீட்டுக்கு சென்றனர்.

 

சங்கவி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டாள். அதோடு அவளது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. வழக்கை ரகசியமாக வைக்க சொல்லி காவல் துறையினரிடம் கேட்டுக் கொண்டனர்.

 

வீட்டில் அடுத்தடுத்து நடந்த விளையாட்டுக்களில் எல்லாம் ஆராதனாவும் யுவனும் சந்தோசமாக பங்கேற்றுக் கொண்டனர். இம்ரான் வேலையை முடித்து விட்டு வந்து கூற “இதோட அவள மறந்துடுங்க. அவள அவ குடும்பம் பார்த்துக்கட்டும்” என்று கூறினாள் ஆரா.

 

உறவினர்கள் எல்லோரும் கிளம்பிச் சென்ற பின் பெரியவர்களுக்கு விசயம் தெரிவிக்கப்பட்டது. முதலில் கோபம் வந்த போதும் திருமணம் தடையில்லாமல் நடந்ததே போதுமானதாக இருந்தது அவர்களுக்கு.

 

யாமினியின் குடும்பம் விடை பெற்று கிளம்பியது. அர்ச்சனாவிடம் பேசி விட்டு யாமினி வெளியே வர ஒருவன் போன் பேசிக் கொண்டே படியேறினான். யாமினியை கவனிக்காமல் அவன் மோதி விட யாமினி காலை ஊன்றி விழாமல் தப்பித்தாள்.

 

“சாரி சாரிங்க. நான் பார்க்கல” என்று அவன் கூற “இட்ஸ் ஓகே” என்று அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல் கூறி விட்டு கிளம்பி விட்டாள். அவனுக்கு தான் அவள் மீது சுவாரஸ்யம் வந்தது.

 

அங்கு வந்த இம்ரானை பிடித்தவன் “யாருடா இந்த பொண்ணு?” என்று கேட்டான்.

 

“எந்த பொண்ணு?”

 

“அந்த ப்ளூ சேலை”

 

“அது யாமினி. யுவனோட மாமா பொண்ணு”

 

“ஓ… “

 

“ஏன்?”

 

“இல்ல சும்மா தான் கேட்டேன்”

 

“நீ சும்மா கேட்ட இத நான் நம்ப?”

 

“இல்லடா.. போன் பேசிட்டே வந்து அந்த பொண்ணு மேல இடிச்சுட்டேன்.‌ சாரி கேட்டேன். திரும்பி கூட பார்க்காம போயிட்டாங்க. அதான் யாரு னு கேட்டேன்.”

 

“ஓ.. இது வரை எங்க ஆபிஸ்ல தான் வேலை பார்த்துட்டு இருந்தா. இனி பெங்களூர் போக போறா.”

 

“நிஜம்மாவா?”

 

“நீ ஏன் இவ்வளவு சந்தோச படுற?”

 

“ஹி ஹி ஒன்னும் இல்லையே”

 

“டேய் மரியாதையா சொல்லிடு”

 

“இல்ல மச்சி… கடவுள் பாரேன். சந்தோசத்த கொடுத்தா கூரைய பிச்சு கிட்டு கொடுக்குறார்”

 

“உன் தலையில வந்து எத்தனை விழுந்துச்சு?”

 

“இப்ப தான் கால் வந்துச்சு. பெங்களூர் ஆபிஸ்க்கு நான் ப்ரமோட் ஆகி இருக்கேன் னு”

 

“வீரா.. நீயாடா இப்படி?”

 

“அதெல்லாம் பிடிச்ச பொண்ண பார்க்குற வரை தான் டா. பார்த்துட்டா எல்லாரும் இப்படி தான். நீயும் ஒரு நாள் உணருவ”

 

“நடத்து நடத்து…”

 

“எனக்கு நல்ல செய்தி சொன்னதால உனக்கு கண்டிப்பா ட்ரீட் உண்டு. அப்புறம் பார்க்கலாம்” என்று கூறி விட்டு விரேந்தர் சென்று விட இம்ரான் தலையிலடித்துக் கொண்டான்.

 

“இவனுக்கும் முத்திடுச்ச” என்று சலிப்பாக கூறி விட்டு வேறு வேலையை பார்க்க சென்றான்.

 

மாலை வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு தனி அலங்காரத்துடன் ஆராதனா வந்து நிற்க “அழகா இருக்கடி” என்று காதில் கூறினான் யுவன்.

 

“அப்போ முன்னாடி அழகா இல்லையா?”

 

“இல்ல”

 

ஆரா அவனை திரும்பி பார்த்து முறைக்க “அப்போ இந்த தாலி கழுத்துல இல்லையே. இப்போ பாரு அது எவ்வளவு அழகா இருக்கு” என்றான்.

 

ஆராதனாவிற்கு வெட்கத்துடன் சிரிப்பு வர “லூசு.. பே” என்று திரும்பிக் கொண்டாள்.

 

பூஜாவும் கீர்த்தனாவும் அன்பளிப்பை கொடுத்து விட்டு “நிச்சயம் பண்ணவர கல்யாணம் பண்ண ரெண்டு வருசமாடி உனக்கு?” என்று கேட்டனர்.

 

“ரெண்டு வருசம் நாங்க லவ் பண்ணுறதுக்கு. தெரியாதா?” என்று ஆரா கேட்டு வைக்க பூஜாவும் கீர்த்தனாவும் வாயை பிளந்தனர். அவர்களிடம் சிரிப்போடு பேசி அனுப்பி வைத்தாள்.

 

இரவு வரும் வரை நின்று ஆராதனாவிற்கு கால் வலிக்க யுவன் அவளுக்காக ஒரு நாற்காலியை கொண்டு வந்து அமர வைத்தான். அதற்கும் நண்பர்கள் கூட்டம் சிரிக்க இருவருமே அதை கண்டு கொள்ளவில்லை.

 

சுற்றி ஆயிரம் பேர் இருந்த போதும் ஆராவும் யுவனும் அவர்களது தனி உலகில் தான் இருந்தனர்.

 

விழா முடிந்து வீட்டிற்கு வந்ததும் யுவனின் அறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. ஆராதனாவிற்கு மீண்டும் ஒரு முறை அலங்காரம் நடந்தது.

 

அர்ச்சனாவும் பத்மினியும் ஆராதனாவை அறைக்கு அழைத்து வந்தனர். “என் மருமகன் பாவம் டி. இன்னைக்கும் சண்டை போட்டு வைக்காத” என்று பத்மினி கூற “நீ தோனுறத பண்ணுடா. அவன் என்ன பண்ணிடுறான் னு நான் பார்த்துறேன்” என்று அர்ச்சனா கூறினார்.

 

இருவரையும் பார்த்து சிரித்து விட்டு அறைக்குள் நுழைந்தாள்.

 

யுவன் பால்கனியில் நிற்க ஆராதனா “ஹலோ” என்று அழைத்துக் கொண்டே அவனருகில் சென்றாள். யுவன் அவளை திரும்பி பார்த்து புன்னகைத்தான்.

 

வானில் வலம் வந்த வெண்ணிலவை இருவரும் ரசிக்க ஆரம்பித்தனர்..

 

“உன்ன கல்யாணம் பண்ணுவேன் னு நினைச்சு கூட பார்க்கலடா” என்று ஆராதனா ஆச்சரியமாக கூறினாள்.

 

“நானும் தான். ஆனா உனக்கு நான் தான் எனக்கு நீ தான் னு எழுதி இருக்கு.”

 

“ம்ம்.. இத புரிஞ்சுக்காம அந்த சப்ப மூக்கி சங்கவி கடுப்ப கிளப்பிட்டா” என்று ஆரா முகத்தை சுழித்து கூறினாள்.

 

ஆராவின் பக்கம் திரும்பியவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு முகத்தை பார்த்தான்.

 

“அந்த போட்டோஸ் மேல ஏன் டி உனக்கு நம்பிக்கை வரல?”

 

“அத பார்த்து நம்ப நான் என்ன லூசா? பைக்லயே என்ன தவிர எவளையும் உட்கார விட மாட்ட. உன்ன போய் அப்படி சொன்னா?”

 

“அப்புறம் ஏன் டி என்ன கட்டிக்க மாட்டேன் னு சொன்ன?” என்று கேட்டு நெற்றியில் முட்டினான்.

 

“அது அப்போ.. இது இப்போ”

 

“அப்போ போட்டோ காட்டிருந்தா நம்பி இருப்பியா?”

 

“அட… எப்ப காட்டி இருந்தாலும் நம்பி இருக்க மாட்டான். நீ என் எதிரி தான். அதுக்காக உன் கேரக்டர சந்தேக பட மாட்டேன். அது நம்ம குடும்பத்தையே சந்தேக படுற மாதிரி”

 

“அப்ப என்ன முழுசா நம்புறவ கல்யாணம் வேணாம் னு அடம் பிடிச்சுட்டு எப்படி சம்மதிச்ச?”

 

“சும்மா.. சிங்கிளா இருந்து போரடிச்சது . அதான்”

 

அணைப்பை மேலும் இறுக்கியவன் “ஒழுங்கா ரீசன் சொல்லு டி” என்றான்.

 

“சொல்லிடவா?” என்று கேட்டு அவனது கழுத்தை சுற்றி கையை மாலையாக போட்டவள் “ஏன்னா… உன்ன என் உயிருக்கு உயிரா விரும்புறேன்” என்றாள்.

 

“ஸ்ஸ்… ப்ப்ப்பா…”

 

“என்னடா?”

 

“ஐ லவ் யூ னு இங்கிலீஸ்ல சொல்லுறத விட விரும்புறேங்குற தமிழ் வார்த்தைய கேட்கும் போது எவ்வளவு நல்லா இருக்கு”

 

“தாய் மொழி மாமா. அப்படி தான் இருக்கும்”

 

“மாமா வா?”

 

“ஆமா.. புருசன் பேர சொல்லி கூப்பிட கூடாதாம். அம்மா காலையில தலையில கொட்டி சொன்னாங்க. அதுனால உன்ன இனிமே டேய் யுவா க்கு பதிலா டேய் மாமா னு தான் கூப்பிட போறேன்”

 

“இதுக்கு தான் மேடையில உட்கார்ந்து கேள்வி கேட்டியா?”

 

“ம்ம்… ஆமா.. அதென்ன பொட்ட வச்சுட்டு கிஸ் பண்ணிட்ட? நல்லா தான் இருந்துச்சு.. பட் கிஸ் பண்ண இடம் கொஞ்சம் சரி இல்ல”

 

அவள் கண்ணடித்து கூற “இப்ப வேணா இடத்த மாத்திடவா?” என்று கேட்டவன் அவளது முகத்தை நெருங்க வேகமாக தலையாட்டி சம்மதித்தாள்.

 

சிரிப்போடு அவளது நெற்றியில் முட்டியவன் “நான் ஏன் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன் னு கேட்க மாட்டியா?” என்று கேட்டான்.

 

“தெரியுமே… நான் உயிருக்கு உயிரா நேசிச்சா… நீ உன் உயிர விட அதிகமா என்ன விரும்புற னு” என்று கூறியவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

“இது தான் டி… இந்த உலகத்துல என்ன நூறு சதவீதம் தெரிஞ்சு வச்சுருக்க ஒரே ஆளு நீ தான். என் மனசு முழுக்க நிறைஞ்சு இருக்க உனக்கு தெரியாதா என்ன? ஆனாலும் சண்டைக்கு நிப்ப”

 

ஆரா பதில் சொல்லாமல் சிரித்து வைத்தாள். யுவன் அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருக்க “என்ன?” என்று ரகசிய குரலில் கேட்டாள்.

 

“உன்ன அதிகமா பிடிக்குது டி. உன்ன ரொம்ப அதிகமா விரும்புறேன்”

 

“நானும் உன்ன அதிகமா காதலிக்குறேன் மாமா”

 

காதலை சொன்ன உதடுகளை பார்த்தவன் தன் இதழ்களை அதனுடன் கலக்க விட்டான். உறவாடிய இதழ்களுக்கு அவள் இதழ்கள் பதில் சொல்ல ஆரம்பிக்க வெள்ளி நிலா அவர்களை புன்னகையுடன் கடந்து மேகத்தினுள் மறைந்து போனது.

 

முற்றும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
20
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்