ஆராதனா வீட்டிற்கு வரும் போது வீடு அமைதியாக இருந்தது. கதவு பூட்டி இருக்க “இன்னேரத்துல எங்க போனாங்க? சொல்லவும் இல்லையே” என்று யோசித்துக் கொண்டே அர்ச்சனாவின் வீட்டை பார்த்தாள்.
அங்கு விளக்கு எரிய “அங்க இருப்பாங்களோ.. ” என்ற சந்தேகத்துடன் எட்டி பார்த்தாள். வீட்டிற்கு வெளியே யாரும் இல்லை என்றதும் உள்ளே சென்றாள்.
ரகுநாதனும் சத்யனும் பேசிக் கொண்டிருக்க அர்ச்சனாவும் பத்மினியும் இல்லை.
“நீங்க மட்டும் தான் இருக்கீங்க. எங்க அவங்க ரெண்டு பேரும்?” என்று கேட்க இருவருமே அவளை கண்டு கொள்ளவில்லை.
“ப்பா… உங்கள தான்”
இருவருமே திரும்பி பார்க்காமல் பேசிக் கொண்டிருக்க அர்ச்சனாவும் பத்மினியும் உள்ளே இருந்து வந்தனர்.
“அத்த… என்ன இவங்க என் கிட்ட பேச மாட்றாங்க?”
“பின்ன… உன்னால சம்பந்தி ஆகுற அவங்க ஆசை வீணா போச்சு. அதான் உனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டோம். மாப்பிள்ளை வெளிநாட்டுக்கு பிஸ்னஸ் விசயமா போயிருக்காராம். நாளைக்கு வந்ததும் உன்ன பார்க்க வருவாங்க”
“அய்யோ.. அத்த… என்ன இது திடீர் னு?”
“உனக்கு யுவன பிடிக்கலல அப்புறம் எப்படி ஃபோர்ஸ் பண்ணுவோம்? அதான் வேற பையன பார்த்துட சொல்லிட்டேன். யுவனுக்கு பேசாம யாமினிய கல்யாணம் பண்ணி வைச்சுடலாம் அர்ச்சனா.” என்று பத்மினி பேச ஆராதனா கோபத்துடன் எழுந்து விட்டாள்.
“என்ன விளையாடுறீங்களா?”
“யாருடி விளையாடுறது?”
“நீங்க தான்… இப்போ எதுக்கு வேற ஒருத்தன பார்த்திங்க?”
“நீ தான் யுவன பிடிக்கல னு சொல்லிட்டியே?” – அர்ச்சனா.
“அது அப்போ..”
“அப்ப இப்போ?”
“இப்போ… அது…”
“இப்ப என்ன தவிர யாரையும் கட்டிக்க மாட்டாளாம்” என்று சொல்லிக் கொண்டே யுவன் வந்து நின்றான்.
“அத வாய திறந்து அவள சொல்ல சொல்லு நம்புறோம்” என்று அர்ச்சனாவும் பத்மினியும் ஒன்றாக கூற யுவன் ஆராதனாவை பார்த்தான்.
“அதெல்லாம் எனக்கு ஓகே தான்” என்று ஆராதனா மெல்லிய குரலில் கூற எல்லோரும் சிரித்து விட்டனர்.
“ஏம்மா.. நாங்க இத்தனை தடவ கேட்குறோம் எங்க கிட்ட சொல்லாம அவன் கிட்ட மட்டும் தனியா சொல்லி இருக்க” என்று சத்தியன் கேட்க “அவன் தான கட்டிக்க போறான் அதான்” என்றாள்.
“எங்க கிட்ட சொல்ல என்னடி தயக்கம்?” என்று பத்மினி முறைக்க “ஆமா… வீராப்பா பிடிக்கல னு சொல்லிட்டு இப்போ சரி னு சொன்னா கிண்டல் பண்ணுவீங்களே…” என்றாள்.
“இனிமேலாவது நடிக்காம கல்யாணத்துக்கு ரெடியாகுங்க” என்றார் அர்ச்சனா.
அன்று எல்லோரும் சந்தோசமாக தூங்கி விட ஆராதனாவிற்கு அதிக சந்தோசத்தில் தூக்கம் வரவில்லை. போனை எடுத்து யுவனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள். யுவனிடமிருந்து உடனே பதில் வந்தது.
பத்து நிமிடம் எதெதோ பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். அவள் பேசியதை திரும்ப படித்து விட்டு யுவனும் புன்னகையுடன் தூங்கி விட்டான்.
மூன்று நாட்கள் கழித்து ஆராதனா வீட்டிற்குள் வரும் போதே கோபமாக வந்தாள். அதை பார்த்து விட்டு அர்ச்சனா விசாரிக்க “ஒன்னும் இல்ல” என்று சமாளித்து வைத்தாள்.
யுவன் வந்ததும் விசாரிக்கலாம் என்று விட்டு விட்டனர். ஆராதனா உடை மாற்றி விட்டு அர்ச்சனாவிடமே வந்து அமர்ந்து கொண்டாள். இரண்டு மணி நேரம் கழித்து யுவன் வந்து சேர்ந்தான். நேராக உடை மாற்றி விட்டு வந்தவனுக்கு அர்ச்சனா காபியை கொடுக்க குடித்துக் கொண்டே “என்ன பண்ணுறீங்க?” என்று விசாரித்தான்.
“நிச்சயத்துக்கு யார எல்லாம் கூப்பிடலாம் னு லிஸ்ட் போட்டுட்டு இருக்கோம்” – பத்மினி.
“அதுவும் சரி தான்.. என் ஃப்ரண்ட்ஸ் சிலர கூப்பிட வேண்டி இருக்கும்”
“ம்ம்.. சேர்த்துடலாம்”
“யாரு ஃப்ரண்ட்ஸ்?” – ஆராதனா.
“முக்கியமான சிலர் தான்”
“அந்த சங்கவி வரக்கூடாது”
“ஏன்?”
“அதெல்லாம் கேட்காத. அவ வரக்கூடாது”
“காரணம் சொல்லு ஆரா”
“ப்ச்ச்.. அவ வர கூடாது அவ்வளவு தான்” என்றாள் திட்டவட்டமாக.
சற்று முன்பு நடந்த விசயங்கள் அவள் மனதில் ஓடியது. அலுவலகத்தில் இருந்து கிளம்பும் நேரம் சங்கவி வந்து சேர்ந்தாள். ஆராதனாவிற்கும் யுவனுக்கும் கூடிய விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க போகும் விசயம் அவள் காதுக்கு சென்று சேர்ந்து இருந்தது. அந்த கோபத்துடன் கிளம்பி வந்து இருந்தாள். அந்நேரம் யுவன் வேறு வேலையாக வெளியே சென்று இருந்தான். நேராக ஆராதனா வை தேடி வந்தாள். ஆராதனா அங்கு வேலை செய்யும் சில பெண்களுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ஓவர் சிரிப்பா இருக்கு?” – சங்கவி
“மனுசங்களுக்கும் மிருகத்துக்கும் சிரிப்பு தான் வித்தியாசம். உனக்கும் எனக்கும் கூட அதான் வித்தியாசம்” என்று கூறி ஆராதனா சர்வசாதாரணமாக மூக்கை உடைத்தாள்.
சுற்றியிருந்தவர்கள் வாயை மூடி சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டனர்.
“ஏய் என்ன? யுவன் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறான் னு சந்தோசமா?”
“அப்படி னு தான் வச்சுக்கோயேன்”
“அட… ரெண்டு கொம்பு முளைச்ச மாதிரி பேசுற… அவனுக்கு நீயும் ஃப்ரண்ட் தான் நானும் ஃப்ரண்ட் தான்”
சங்கவி உள் அர்த்தத்தோடு கூற ஆராதனா புருவம் சுருக்கினாள்.
“என்ன சொல்ல வர?”
“நீ வெறும் ஃப்ரண்ட் னு சொல்லுறேன். அவன கட்டிகிட்டா எல்லாம் மாறிடுமா? அதே போல நானும் அவன் ஃப்ரண்ட் தான்.. அப்போ என் இடம்….”
சங்கவி ஒரு மாதிரி இழுத்து பேச ஆராதனாவிற்கு கோபம் வந்தது.
“ஏய்… யோசிச்சு பேசு”
“உண்மைய சொன்னேன். நானும் ஃப்ரண்ட் நீயும் ஃப்ரண்ட் தான். சோ நீ பொண்டாட்டி னா நானும்…”
சங்கவி முடிப்பதற்குள் ஆராதனா பட்டென அவள் கன்னத்தில் அறைந்து விட்டாள்.
“இன்னொரு தடவ அவன கேவல படுத்துற மாதிரி ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சு.. பல்ல உடச்சுடுவேன்”
“ஏய்…”
மீண்டும் ஒரு அறை விழுந்தது.
“என்னடி ஏய்?? நீயும் நானும் ஒன்னா? எந்த வகையில? உனக்கு அவன பத்தி என்னடி தெரியும்? கார்ல அவன் உன்ன முன்னாடி உட்கார விட்ருக்கானா? அந்த இடம் எனக்கும் அவனோட அம்மாவுக்கும் தான்.
பைக்ல பின்னாடி உட்கார்ந்து இருக்கியா? அந்த இடம் அவங்கம்மாவுக்கு கூட கிடையாது. எனக்கு மட்டும் தான். நீயும் நானும் எந்த வகையிலயும் ஒன்னு கிடையாது. இனி ஒரு தடவ இப்படி என் முன்னாடி பேசுன… பேசுன வாய உடைச்சுட்டு தான் மறு வேலை பார்ப்பேன்”
சங்கவி மீண்டும் எதோ பேச வர ஆரா மீண்டும் கை ஓங்கினாள். அவள் கையை பார்த்து விட்டு சங்கவி பம்ம முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
அதை மனதில் வைத்துக் கொண்டு ஆரா கூற யுவன் அவளை முறைத்தான்.
“அவ வருவா.. என்ன பண்ணுவ?” – யுவன்.
“நான் முக்கியமா ? அவ முக்கியமா?”
“என்ன சின்னபிள்ளதனமான கேள்வி இது?”
“எனக்கு பதில் வேணும்”
“இல்லனா?”
“அப்ப இந்த கல்யாணத்த நிறுத்துங்க. எனக்கு கல்யாணம் வேணாம்”
“இப்படி சொல்லாத னு ஏற்கனவே சொல்லி இருக்கேன்”
“அப்படி தான் டா சொல்லுவேன். என்ன பண்ணிடுவ? உங்க அம்மா கிட்ட சொல்லுவியா? இந்தா இருக்காங்க சொல்லு பார்க்குறேன்”
“நான் என்ன ஸ்கூல் பிள்ளையா அழுதுட்டு அம்மா கிட்ட போக.. கல்யாணம் முடியட்டும் டி உனக்கு இருக்கு”
“அடேங்கப்பா.. நானும் பார்க்க தான போறேன்”
“நீ அப்புறம் பாரு . எனக்கு ஆயிரம் வேலை இருக்கு “
“அதுல ஆயிரத்தி ஒன்னா என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ”
“இந்த சில்லியான கேள்விக்கு பதில் சொல்லுற அளவு நான் வெட்டியா இல்ல. தள்ளு அங்குட்டு”
அவளை பிடித்து தள்ளி விட்டு அறைக்குள் சென்று விட்டான்.
“டேய்.. நில்லு.. அப்ப நான் வெட்டியா இருக்கேனா? அடிங்க …”
வேகமாக அவனது அறை பக்கம் சென்றாள்.
“இதுங்க ஆரம்பிச்சா இன்னைக்குள்ள முடிக்காதுங்க. வா நாம போய் மத்த வேலைய பார்ப்போம்” என்று கூறி அர்ச்சனாவும் பத்மினியும் இறங்கி சென்று விட்டனர்.
ஆராதனா கதவை தட்ட யுவன் கதவை திறந்து அவளுக்கு பின்னால் பார்த்தான். யாரும் இல்லை என்றதும் வேகமாக அவளை உள்ளே இழுத்து கதவை அடைத்து விட்டான்.
ஆரா விழி விரித்து பார்க்க தோளில் கை போட்டு உள்ளே அழைத்துச் சென்றான். அவன் கையை வேகமாக தட்டி விட்டவள் “கேட்டதுக்கு பதில் சொல்லு. அவ முக்கியமா நான் முக்கியமா?” என்று கேட்டாள்.
“இப்படி லூசு தனமா கேட்காத னு சொன்னேன்”
“எனக்கு பதில் சொல்லி தான் ஆகனும்.”
ஆராதனா அடம்பிடிக்க அவளை பிடித்து மெத்தையில் தள்ளினான். அவள் அதிர்ந்து பார்க்கும் போதே யுவன் அவள் மேல் விழப்போக பயந்து கண்ணை மூடிக் கொண்டாள். அரை நிமிடமாகியும் எதுவும் மாற்றம் தெரியாமல் இருக்க ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள்.
முன்னால் யாரும் இல்லாமல் இருக்க இரண்டு கண்ணையும் திறந்து பார்த்தாள். அவள் கண் முன்னால் யுவன் சொடக்கிட திரும்பி பார்த்தாள்.
பக்கத்தில் தலைகீழாக படுத்திருந்தான். இருவரின் தலையும் உரசும் அளவில் தான் படுத்திருந்தான். அவள் எழப்போக “ஸ்ஸ்.. அசையாத” என்றான்.
தன் போனை கையில் எடுத்தவன் இருவரும் படுத்திருந்த நிலையை படம் பிடித்துக் கொண்டான்.
“நிறைய போட்டோ அனுப்புறல இதையும் சேர்த்து ஃப்ரேம் போட கொடு. உனக்கு அனுப்பிட்டேன்” என்றான்.
ஆராதனா பத்திரிக்கைக்காக படங்களை எடுக்கும் போது சில படங்களை ஃப்ரேம் போட சொல்லி இருந்தாள். அதோடு தான் யுவன் இப்போது எடுத்ததையும் சேர்த்துக் கொள்ள கூறினான்.
அவனுக்கு பதில் சொல்லாமல் ஆரா படுத்திருக்க திரும்பி பார்த்தான். அவள் விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்க போனை தூக்கி போட்டு விட்டு உருண்டு குப்புற படுத்து அவள் முகத்திற்கு நேராக தன் முகத்தை கொண்டு வந்தான்.
அருகில் யுவன் முகம் தெரிந்த போதும் ஆரா மௌனமாக இருக்க “ஏய் லூசு.. என்ன தான் டி ஆச்சு?” என்று கேட்டான்.
“சங்கவி எப்படி பேசுனா தெரியுமா? என்னமோ நான் உன்ன வசியம் பண்ணிட்ட மாதிரி பேசுறா.. அத விட கடைசியா ஒன்னு சொன்னா பாரு…”
“என்ன சொன்னா?”
“அத கேட்டுட்டு கோபத்துல அவள அடிச்சுட்டேன்”
“அடிக்குற அளவு என்ன சொன்னா?”
விழியகல பார்த்தவள் “உனக்கு கோபம் வரல?” என்று கேட்டாள்.
“அவ உன்ன கோப படுத்திருப்பா அடிச்சுருப்ப. இதுக்கு நான் ஏன் கோப பட போறேன்? என்ன சொன்னா? அத சொல்லு”
“அவனுக்கு நீ ஃப்ரண்ட் தான். தாலி கட்டினா மட்டும் மாறிடாது. அதே போல நானும் ஃப்ரண்ட் தான் னு ஒரு மாதிரி சொன்னா. பட்டுனு அடிச்சுட்டேன். நானும் நீயும் ஒன்னு கிடையாது. இன்னொரு தடவ இந்த மாதிரி பேசுன பல்ல உடச்சுடுவேன் னு சொல்லிட்டு வந்துட்டேன்”
பக்கத்தில் மீண்டும் படுத்துக் கொண்டவன் விட்டத்தை பார்த்தான். ஆரா திரும்பி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இதுக்கு தான் அவ முக்கியமா நீ முக்கியமா னு கேட்டியா?”
“ம்ம்..”
“அறிவு கொழுந்து.. அதான் நீயே சொல்லிட்டு வந்துட்டியே.. நீயும் அவளும் ஒன்னு இல்ல னு.”
“ப்ச்ச்..”
ஆரா தெளிவு இல்லாமல் உச்சு கொட்ட திரும்பி பட்டும் படாமல் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“ஃப்ரண்ட் ஆயிரம் பேர் வரலாம் ஆரா. பொண்டாட்டி னு ஒருத்தி தான் வரனும். வர முடியும். அது நீ மட்டும் தான். தெளிவா மனசுல வச்சுக்க. புரியுதா?”
“ம்ம்”
“அவள நான் பார்த்துக்குறேன். இன்னொரு தடவ இப்படி அவ பேச மாட்டா”
ஆரா தலையாட்டி விட்டு எழுந்து கொள்ள அவனும் எழுந்தான். அவள் அறையை விட்டு வெளியே போக பார்க்க “நில்லு” என்று கூறி எதையோ எடுத்துக் கொடுத்தான்.
அதை வாங்கி பிரித்து பார்த்தவள் சந்தோசத்தில் குதித்தாள்.
“ஹேய்…. இது நேத்து நடந்த ஆர்ட் எக்ஸிபிஷன் ல பார்த்தது. இது எப்படி உனக்கு கிடைச்சது?”
“நீ இத ஆயிரம் போட்டோ எடுத்து வச்சுருந்த. அதான் உனக்கு பிடிச்சுருக்கத ஏன் விடனும் னு வாங்கிட்டேன்”
“டேய்.. இதோட விலை…”
“அதை எல்லாம் ஏன் யோசிக்குற? பிடிச்சுருக்குல? வச்சுக்கோ”
“ஹைய்யோ தாங்க்யூ சோ மச்….”
படத்தை பிடித்துக் கொண்டு குதித்தவள் “எல்லாரு கிட்டையும் காட்ட போறேன்” என்று வெளியே ஓடினாள்.
கீழே அன்னையர் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க “அம்மா… அத்த இங்க பாருங்க” என்று வேகமாக ஓடிச்சென்று காட்டினாள்.
“இத தான அன்னைக்கு காட்டி பத்து பக்கத்துக்கு பேசிட்டு இருந்த… ஆமா இதோட விலை அதிகம் னு சொன்ன? எவ்வளவு செலவழிச்ச?” – பத்மினி
“அய்யோ ஆத்தா… பொறுங்க.. இத நான் வாங்கல.. உங்க அன்பான மருமகன் வாங்கி கொடுத்தான். கேள்விய அவன் கிட்ட கேளுங்க”
யுவனும் இறங்கி வந்து நின்றான். அவள் அர்ச்சனாவிடம் காட்டி சந்தோசமாக பேசிக்கொண்டிருக்க “இது தேவையா யுவா?” என்று பத்மினி கேட்டார்.
“அவளுக்கு பிடிச்சுருக்கு அத்த. அதான் வாங்குனேன்.” என்றவன் ஆராவின் முகத்தை காட்டினான்.
சற்று நேரத்திற்கு முன் வீட்டிற்குள் நுழையும் போது கடுகடுவென வந்தவளா இவள்? என்று பத்மினி ஆச்சரிய பட்டார்.
“இத போய் என் ரூம்ல மாட்ட போறேன்” என்று கூறி வேகமாக எழுந்த ஆரா தடுமாறி விட மூவருமே அவளை பிடித்து நிறுத்தினர்.
“ஏய் பார்த்துடி” – யுவன்.
“ஏன் டி எந்திரிக்க கூடவா உனக்கு தெரியாது? இவ்வளவு செலவு பண்ணி உனக்கு ஒன்ன வாங்கிட்டு வந்து கொடுத்தா அத உருப்படியா பார்த்துக்க தெரியுதா?” – பத்மினி.
“விடுங்க அத்த. இங்க கொடு. நானே வந்து உன் ரூம்ல மாட்டி விடுறேன். வா” என்று யுவன் வாங்கிக் கொள்ள ஆராவின் கண்ணில் மின்னல் வந்து போனது.
அதை யுவன் கவனித்தாலும் அங்கு ஒன்றும் பேசாமல் படத்தை வாங்கிக் கொண்டு முன்னால் நடந்தான். ஆரா பின்னால் ஓடி விட மற்ற இருவரும் விட்ட பேச்சை தொடர்ந்தனர்.
தோட்டத்து பக்கம் இருந்த கதவின் வழியாக இருவரும் ஆராவின் வீட்டிற்கு சென்றனர். உள்ளே நுழையும் போதே அவள் தோளில் கை போட்டுக் கொண்டான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் வந்த தைரியம்…
“எதுக்கு டி அப்படி பார்த்த?”
“எப்படி?”
“நான் வந்து மாட்டி விடுறேன் னு சொன்னதும் பார்த்தியே?”
“அதுவா… என் ரூம்குள்ள நீ வர மாட்டியே.. அதான் அதிசயமா பார்த்தேன்”
அவளை குனிந்து பார்த்தவன் “அது சந்தோசமா பார்த்த மாதிரில தெரிஞ்சது?” என்று கேட்டான்.
“எப்படியோ பார்த்துட்டு போறேன். இப்போ வா…” என்று அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அறையை நோக்கி ஓடினாள்.
கதவை திறந்து விட்டவள் “இளவரசியின் அந்தரங்க அறைக்கு பக்கத்து நாட்டு ராஜகுமாரனை அன்போடு வரவேற்கிறேன்” என்று கை கூப்பினாள்.
அவளை பார்த்து சிரித்தவன் உள்ளே நுழைந்தான். இது வரை சன்னல் வழியாக அவளை பார்த்து இருக்கிறான். அறைக்குள் வந்தது இல்லை. பேச வேண்டும் என்றாலும் அவளை வெளியே வரவழைத்து பேசுவான்.
இப்போது தான் அறையை நன்றாக பார்க்கிறான். அவனது கையில் இருந்த படத்தை மெத்தை மீது வாங்கி வைத்தாள்.
“இது என்னடி?” என்று மேசையை பார்த்து கேட்க “அதெல்லாம் ஸ்னாக்ஸ் டா.. பார்த்தா தெரியல?” என்றாள்.
“அடிப்பாவி… இருபது பாக்கெட்க்கு மேல இருக்கு.. இவ்வளவுமா தின்னுவ?”
“வளருற பிள்ள சாப்டுறத கண்ணு வைக்காத டா.. முதல்ல அந்த போட்டோவ எங்க மாட்டலாம் னு பாரு”
“ஆணி வேணும்… சுத்தியல் எல்லாம் எடுத்துட்டு வா”
“ஆணி கபோர்ட்ல இருக்கு. எடுத்துக்கோ.. சுத்தியல எடுத்துட்டு வரேன்” என்று அவளது உடை அலமாரியை திறந்து விட்டு சுத்தியலை எடுக்க ஓடினாள்.
அலமாரியில் அவள் சொன்ன இடத்தில் இருந்து ஆணியை எடுத்துக் கொண்டவன் கண்ணில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நெகிழிப்பை பட்டது.
ஆணியை மேசையில் வைத்து விட்டு அதை கையில் எடுத்தான். உள்ளே பிரித்து பார்க்கும் முன் “ஏய்… அத வச்சுடு” என்று கத்திக் கொண்டே ஆரா ஓடி வந்தாள்.
யுவன் அவளை நிமிர்ந்து பார்க்க அவசரமாக அவன் கையிலிருந்ததை பிடுங்கினாள். பிடுங்கிய வேகத்தில் உள்ளே இருந்த சேலை கீழே விழுந்து விட்டது.
அதை வேகமாக எடுத்து அலமாரியில் திணிக்க போக யுவன் அவளது கையை பிடித்துக் கொண்டான். பின்னால் திரும்ப முடியாமல் அவள் நின்று விட “திரும்பு ஆரா. அந்த சேலைய பார்த்துட்டேன்” என்றான்.
‘ஈஸ்வரா… என்ன சொல்ல போறானோ’ என்று நினைத்துக் கொண்டு அசையாமல் நிற்க அவள் கையிலிருந்த சேலையை வாங்கியவன் அவளை நெருங்கி நின்றான்.
அவன் முன் உடல் முழுவதும் அவளது பின் உடலில் பதிந்து இருந்தது. மாட்டிக் கொண்டதிலும் அவன் நிற்கும் கோலத்திலும் வெட்கம் வந்து விட அவசரமாக திரும்பியவள் துணிகளை இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டாள்.
அலமாரியின் கதவு திறந்து கிடக்க உள்ளே இருந்த துணிகளால் முகத்தை மூடி நின்றிருந்தவளை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.
கையில் இருந்த சேலையை அவனுக்கு நன்றாக நியாபகம் இருந்தது. வேலைக்கு செல்வதற்காக அவள் உடைகள் வாங்க வேண்டும் என்று சென்ற போது அவன் முதலில் பார்த்த சேலை இது.
“இத எப்ப வாங்குன?” – யுவன்.
“….”
“பதில் சொல்லு ஆரா”
யுவன் அவளை நெருங்கி வர அவர்களை தேடி வந்த பத்மினி அறைக்குள் நுழைந்தார். இருவரின் காலும் அலமாரியின் அடியில் தெரிய என்ன நடக்கிறது என்று அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
மகளை அழைக்க போனவரை அவசரமாக அர்ச்சனா தடுத்து வெளியே இழுத்து வந்து கதவை அடைத்து விட்டார்.
“அர்ச்சனா அதுங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அதுங்க சண்டை போட்டத பார்த்தல? இப்போ தான் ரெண்டு கொஞ்சமா இறங்கி வந்துருக்குங்க. இப்போ போய் பேசுனா இவங்க கல்யாணம் நடந்த மாதிரி தான்.”
“ஆனா…”
“ரொம்ப யோசிக்காத.. ரெண்டும் நம்ம பிள்ளைங்க. நம்ம வளர்ப்பு தப்பாகாது. அவங்க எல்லை அவங்களுக்கு தெரியும். நாம நல்ல நாள் பார்த்து நிச்சயத்த வைப்போம். வா”
அர்ச்சனா சொன்னது பத்மினிக்கு சரி என்றே பட்டது. அவருக்கு மகள் மேல் நம்பிக்கை இருந்தது. அதை விட அதிகமாக யுவன் மேல் இருந்தது. ஆரா பருவம் எய்திய பின் அவளது அறைக்குள் இன்று வரை யுவன் சென்றதில்லை.
திருமணம் பேசிய பின்னும் இருவரும் அடித்துக் கொண்டு தான் இருந்தனர். இதற்கும் மேல் சண்டை நடந்தால் திருமணம் நடந்த மாதிரி தான். சமாதானமாகி திருமணத்திற்கு இருவரும் சம்மதித்தால் போதும் என்று நினைத்து அர்ச்சனாவோடு சென்று விட்டார்.
“ஓய்.. ரவுடி.. பதில் சொல்லு டி” என்று அவள் முகத்தை மறைத்து இருந்த துணியை விலக்கி விட்டான்.
“என்னைக்கு வாங்குன?”
“அன்னைக்கே”
“அன்னைக்கே வா… நான் பார்க்கல?”
“உனக்கு தெரியாம தான் வாங்குனேன்”
“ஓஓ.. ஏன் வாங்குன?”
“…..”
“ஏன் வாங்குன ஆரா?” என்று கேட்டு அவளை மேலும் நெருங்கினான். அவனை விட்டு விலக முடியாமல் அகப்பட்டுக் கொண்டாள்.
“தள்ளு யுவா ப்ளீஸ்”
“ஏன் வாங்குன னு சொல்லு டி” என்று ரகசிய குரலில் கேட்டான்.
“அய்யோ இந்த வாய்ஸ்ல பேசாத” என்று முகத்தை மூடிக் கொண்டாள். அந்த குரல் அவளை எதுவுமே யோசிக்க விடாமல் செய்து விடுகிறதே..
யுவன் அவள் கையை விலக்கி விட்டு “சொல்லு” என்பது போல் புருவத்தை உயர்த்தினான்.
“தெரியல.. அப்போ ஏன் னு தெரியல. வாங்கிடனும் னு தோனுச்சு.”
“இப்போ பதில் கிடச்சதா?”
“இல்ல” என்று சிரிப்போடு “பொய் தான் சொல்லுறேன்” என்று முகத்தில் தெளிவாக காட்டிக் கொண்டே கூறினாள்.
“சொல்ல மாட்ட?” என்று புன்னகையுடன் இருக்கும் அவள் உதட்டை பார்த்து கேட்டான்.
அவன் பார்வையை கவனித்தவள் அவசரமாக கையால் வாயை மூடிக் கொண்டாள். பார்வையை உயர்த்தி அவள் விழியை பார்த்தவன் பார்வை மாற்றாமல் வாயை மூடியிருந்த அவளது புறங்கையில் அழுத்தமாக முத்தமிட்டான்.
அவள் விழிகளில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தெரிந்த போதும் கையை எடுக்கவில்லை.
“ஒரு நாள் நீயே சொல்லுவ. சொல்ல வைக்குறேன்” என்றவன் அவளை விட்டு விலகி பின்னால் வந்தான்.
அவனை வேகமாக பிடித்து தள்ளியவள் “நீ… நீ என்ன.. நீ… கிஸ் பண்ணிட்ட என்ன” என்று கூறியவள் அவனை முறைக்க முடியாமல் முறைத்து பார்க்க “உன் கையில தான கிஸ் பண்ணேன். உன் லிப்ல கிஸ் பண்ணலயே” என்று கேட்டுக்கு கொண்டே சுத்தியலை எடுத்து ஆணி அடிக்க இடம் பார்த்தான்.
“அது வேற பண்ணுவியா நீ?”
“ஏன் வேணுமா?”
அவன் கேட்டதும் பதில் சொல்ல தெரியாமல் ஆரா முழிக்க சிரித்துக் கொண்டே ஆணி அடித்து படத்தை மாட்டி விட்டான்.
“ஓகே வா பாரு” என்று கூற “ம்ம்” என்றாள். அவளை திரும்பி பார்த்தவன் அவள் முகத்தில் இருந்த கலவையான உணர்வுகளை கவனித்தான்.
“ஓகே. ரெஸ்ட் எடு. பை” என்று கூறி அறையை விட்டு வெளியேறி விட்டான். அவன் அங்கிருந்து போனதும் தான் ஆராவுக்கு மூச்சே வந்தது. அதோடு அவன் முத்தமிட்ட கையை தூக்கி பார்த்தவள் வேகமாக முகத்தை மூடிக் கொண்டு மெத்தையில் விழுந்தாள்.
தொடரும்.