ஆராதனாவும் யுவனும் குழப்பத்துடன் அந்த நாளை கடந்து காலையில் அலுவலகம் கிளம்பினர்.
யுவன் வழக்கம் போல் ஆராதனாவிற்கு முன்பே கிளம்பி சென்று விட்டான். அவன் நேராக செல்லும் இடம் தொழிற்சாலை. அங்கு உற்பத்தி ஏற்றுமதி எல்லாவற்றையும் பார்த்து விட்டு அலுவலகம் வந்து சேர்வான்.
ஆராதனாவிற்கு வேலையில் கவனம் செல்லாமல் நேற்று பேசிய விசயமே மூளையில் ஓடிக் கொண்டிருந்தது. சில நிமிடங்கள் போராடிப் பார்த்தவள் எல்லாவற்றையும் தூக்கி மற்றவர்கள் கையில் ஒப்படைத்தாள்.
தனது மடிக் கணினியை எடுத்துக் கொண்டு அலுவலகத்தில் இருக்கும் தனிமையான இடத்தில் வந்து அமர்ந்து வரைய ஆரம்பித்து விட்டாள். சில நிமிடங்களில் சிதறிய கவனம் எல்லாம் ஒன்று சேர வரைவதில் மூழ்கிப் போனாள்.
யுவன் வந்ததும் இம்ரான் வேலைகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டான். அதையெல்லாம் பொறுமையாக கேட்டு பதில் சொன்னான் யுவன். இம்ரான் பேசி விட்டு கிளம்ப “ஒரு நிமிஷம் இரு” என்று நிறுத்தினான்.
“என்னடா?”
“நேத்து வீட்டுல ஒன்னு நடந்துச்சு”
“என்னது?”
“அம்மா எனக்கு பொண்ணு பார்த்து வச்சுருக்காங்க”
“வாவ்… மச்சி… சூப்பர் டா. எப்போ கல்யாணம்? ட்ரீட் பெருசா வைக்கனும் ஓகே வா? நம்ம செட் ல நாலாவது கல்யாணம் உனக்கு தான் இல்ல?”
“அதெல்லாம் இருக்கட்டும். பொண்ணு யாரு னு கேட்டியா?”
“ஆமால.. யாரு ?”
“ஆரா”
இம்ரான் வாயை பிளந்து எழுந்து விட்டான்.
“என்னது????” என்று இம்ரான் அதிர “ஸ்ஸ்… உட்காரு முதல்ல” என்றான்.
“என்னாடா இது? எதுக்கு இப்படி ஒரு விபரீத முடிவு?”
“என்ன கேட்கல. அவங்களே முடிவு பண்ணிட்டாங்க”
“உனக்கு சம்மதம் மாதிரி தெரியுதே” என்று இம்ரான் சந்தேகமாக பார்க்க யுவன் அவனை அருகில் அழைத்தான்.
இம்ரான் காதை அருகில் கொண்டு செல்ல “டபுல் ஓகே” என்றான் யுவன்.
இம்ரானுக்கு அதிர்ச்சியில் இதயம் வெடித்து விடும் போல் இருந்தது.
“இது எப்ப? எனக்கு தெரியாம?”
“எனக்கும் தெரியல. ஆனா எனக்கு டபுள் ஓகே”
“மச்சி…. உன்ன என்னவோ நினைச்சேன் டா.. நீ கலக்கு… ஆரா பதில் என்ன?”
“நோ தான் வரும் னு தெரியாதா?”
“யாருக்கு தெரியும்? உன்ன மாதிரி அவளும் உள்ளுக்குள்ள எதையும் மறச்சு வச்சுருப்பாளோ என்னவோ”
“அவ? அட போடா…”
“பாரு… ஒரு நாள் அவளுக்கும் உன்ன பிடிச்சு இருக்கு னு கல்யாணத்துக்கு ஓகே சொல்ல போறா”
“அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சாலும் என்ன பிடிச்சு இருக்கு னு ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டா.. பார்க்குறியா?”
“பார்ப்போமா?”
“பெட்.. ?”
“பெட்”
இம்ரான் கூறி விட்டு எழுந்து சென்று விட ஆராதனா கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள்.
“இதுல சைன் பண்ணு” என்று நீட்ட வாங்கி பிரித்தவன் ஆராதனாவை ஓரக்கண்ணால் பார்த்தான். அவள் அவனை பார்க்காமல் அறையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
தனக்குள் சிரித்துக் கொண்டவன் அவள் கொடுத்ததை படித்தான்.
“புது டீம் ஆ?”
“ஆமா… ஓகே வா னு பாரு”
“நீ ரெடி பண்ணியா?”
“இல்ல… பண்ண சொல்லி இருந்தேன்”
“ஏன்?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து அவளருகில் வந்தான்.
“ஏன்னா? வேலை பார்க்க தான்”
“நிஜம்மாவா?” என்று கேட்டுக் கொண்டே அவன் மேலும் நெருங்கி வர ஆராதனா தடுமாறினாள். இதற்கு முன்னால் அருகருகே அமர்ந்து பேசி இருக்கின்றனர். சண்டை கூட போட்டிருக்கின்றனர்.
ஆனால் இன்று அவன் அருகில் வருவது ஆராதனாவிற்கு படபடப்பை ஏற்படுத்தியது. அவசரமாக நாற்காலியில் அமர்ந்து தள்ளிச் சென்றாள்.
“இப்ப சைன் பண்ணுறியா இல்லையா?”
“பண்ணிட்டேன்” என்று போட்டு கொடுக்க வாங்கிக் கொண்டு எழுந்தாள். ஃபைலை விடாமல் அவன் பிடித்து இருக்க ஆராதனா இழுத்து பார்த்தாள்.
“கொடு யுவா”
“ஏன் ரெடி பண்ண சொன்ன னு சொல்லு. தரேன்”
“வேலை முடியனும் னு தான். வேற எதுக்கு?”
“நேத்து சண்டை போட்டுட்டு போனியே?”
“எந்த சண்டைய சொல்லுற?” என்று கேட்டவளுக்கு கல்யாண பிரச்சனையை சொல்கிறானோ என்று சந்தேகமாக இருந்தது. அதை உடனே புரிந்து கொண்ட யுவனுக்கு சிரிப்பு வந்தது. ஃபைலை தன் பக்கம் அவன் இழுக்க ஆராதனா தடுமாறி இரண்டடி முன்னால் வந்தாள்.
அவள் பக்கம் குனிந்தவன் “நான் ஆபிஸ் சண்டைய மட்டும் தான் சொன்னேன்” என்றான். யுவன் குரலில் சிரிப்பு இருக்க ஆராதனா அவனை முறைத்து விட்டு ஃபைலை பிடுங்கிக் கொண்டாள்.
“நானும் அதான் சொன்னேன்” என்றவள் வேகமாக வெளியே செல்ல திரும்ப கையை பிடித்துக் கொண்டான்.
“என்னடா பண்ணுற?” என்று ஆராதனா அதிர “காரணம் சொல்லிட்டு போ னு சொன்னேன்” என்றான்.
“சொன்னனே…”
“சண்ட போட்டுட்டு போயிட்டு எனக்காக வேலை பார்த்து இருக்கியே.. அதான் இடிக்கிது”
“டேய் இப்ப கைய விட போறியா இல்லையா?” என்று ஆராதனா கோபமாக கேட்க உடனை கையை எடுத்து விட்டான். அவனை திட்டிக் கொண்டே ஆராதனா அங்கிருந்து சென்று விட்டாள்.
கையிலிருந்த பேனாவை தூக்கி போட்டு பிடித்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
*.*.*.*.*.
ஆராதனா தண்ணீரை எடுத்து மடமடவென அருந்தினாள். அப்படியும் பதட்டம் குறையவில்லை. கையை யுவன் பிடித்த இடத்தை தூக்கி பார்த்தாள். இன்னும் அவன் கை அங்கு இருப்பது போல் தோன்ற அவசரமாக கையை தேய்த்து அதை அழிக்க பார்த்தாள்.
இதற்கு முன்பு தொட்டு பேசியதே இல்லையா? இன்று மட்டும் ஏன் எல்லாம் வித்தியாசமாக தெரிகிறது?
“எல்லாம் அம்மாவும் அத்தையும் பண்ணது.. தேவையில்லாம கிளறி விட்டு… எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் போல. இருக்கட்டும். அப்பா கிட்டயும் மாமா கிட்டயும் போட்டு கொடுக்குறேன்” என்று முடிவு செய்து கொண்டாள்.
அவளுக்கு எங்கே தெரியும் நேற்று இரவே அந்த வாய்ப்பை இரண்டு அன்னைகளும் பறித்து விட்டார்கள் என்பது.
அர்ச்சனாவும் பத்மினியும் நேற்றே தாங்கள் கண்டதை விளக்கமாக கூறி விட்டனர். அதன் பின் ரகுநாதனும் சத்தியனும் கூட பேசி முடிவுக்கு வந்து விட்டனர்.
இது தெரியாமல் ஆராதனா அன்று இரவு உணவு முடிந்ததும் எல்லோரையும் ஒன்று கூட்டி விட்டாள். யுவன் போனில் எதையோ பார்த்துக் கொண்டு இருக்க மற்றவர்கள் ஆராதனா பேசுவதை பார்த்தனர்.
“இந்த அம்மாவும் அத்தையும் நேத்து என்ன கேட்டாங்க னு தெரியுமா?” – ஆராதனா.
“என்னடா கேட்டாங்க?” – சத்தியன்.
“கல்யாணத்த பத்தி கேட்டாங்க”
“அதுனால என்ன?” – ரகுநாதன்.
“என்னவா?”
“ஆமா.. எங்களுக்கு ஓகே தான்.”
“ஆக்சுவலா எந்த ஹால புக் பண்ணலாம் னு யோசிக்கிறோம்” – சத்தியன்.
“நிச்சயத்துக்கு ஒன்னு கல்யாணத்துக்கு ஒன்னு ரிசப்ஷன்க்கு ஒன்னு னு மூணு பண்ணிடலாம்” – அர்ச்சனா.
“கல்யாணத்துக்கும் நிச்சயத்துக்கும் இடையில கேப் விட்ரலாம். அப்ப தான் எல்லாரையும் கூப்பிட வசதியா இருக்கும்” – பத்மினி.
“அதுவும் சரி தான். நிச்சயத்துக்கு சொந்த பந்தம் மட்டும் தான் வரும். கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்பிடனும்” – அர்ச்சனா.
“முதல்ல நல்ல நாள் பார்ப்போமா? அப்புறம் ஹால் கிடைக்காம போயிடும்… என்னங்க…” – பத்மினி.
“என்னமா?” – ரகுநாதன்.
“நல்ல நாள் எப்போ னு அந்த ஜோசியர் கிட்ட கேளுங்க”
“சரிமா”
“ஏங்க.. நீங்க ஊருக்குள்ள இருக்க பெரிய கல்யாண மஹால் எது எது னு பாருங்க ” – அர்ச்சனா.
“இதோ பார்க்குறேன்” – சத்தியன்.
நடுவில் பேச வந்த ஆராதனாவை யாரும் கவனிக்கவில்லை. யுவனுக்கு ஆராதனாவின் கோபத்தை பார்த்து சிரிப்பு வந்தது. ஆராதனா கோபத்துடன் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நிற்க யுவன் அவள் கையை பிடித்து அமர வைத்தான்.
“பொறுமையா இரு” என்று கூறியவன் “பேசி முடிச்சுட்டீங்களா?” என்று கேட்டான்.
“இல்லடா.. ஆராவுக்கு எப்படி எல்லாம் நகை வாங்கனும் னு யோசிக்கிறேன்” – அர்ச்சனா.
“ஒன்னு பண்ணுங்க”
“என்னது?”
“இன்விடேஷன் அடிச்சு எங்க கையில கொடுங்க. நாங்க ரெண்டு பேரும் வந்து அட்சதை போடுறோம்”
“கல்யாணமே உங்களுக்கு… நீங்க அட்சதை போட போறீங்களா?” – பத்மினி.
“ஓஹோ.. எங்களுக்கு தானா? அப்படி எதுவும் தெரியலையே.. நீங்களா பேசிக்கிறீங்க. நீங்களே முடிவு பண்ணிக்கிறீங்க”
“பெத்தவங்க நாங்க தான முடிவு பண்ணனும்?” – அர்ச்சனா.
“நீங்களே முடிவு பண்ணி யாருக்காச்சும் கல்யாணம் பண்ணி வைங்க. நாங்க கிளம்புறோம். வா ஆரா”
“டேய்… என்ன இப்போ?”
“என்ன வா? உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறீங்க. இதுக்கு நாங்க எதுக்கு?”
“நாலு மஹால் நல்லா இருக்கு” என்று இடையில் சத்தியன் கூற “அப்பா…” “மாமா…” என்று ஆராதனாவும் யுவனும் ஒன்றாக கத்தினர்.
உடனே அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு “என்னங்கடா?” என்று கேட்டு வைத்தார்.
“ஜோசியர் கிட்ட அடுத்த வாரம் பேசலாம். இப்போ ஊருல இல்லையாம்” என்று ரகுநாதன் கூற ஆரா தலையிலடித்துக் கொண்டாள்.
“அப்போ எங்க விருப்பத்துக்கு உங்க கிட்ட மதிப்பு இல்ல?” என்று யுவன் கேட்க “முதல்ல உட்காரு யுவா” என்று சத்தியன் அவனை பிடித்து அமர வைத்தார்.
“இங்க பாரு… நாங்க உங்க சம்மதம் கேட்காம கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோம் போதுமா?”
“அப்போ இப்போ பேசுறது?”
“அது ஒரு பக்கம் நடந்துட்டு போகட்டும். யாரும் நாளைக்கே உன் கையில தாலிய எடுத்து கொடுத்து ஆரா கழுத்துல கட்ட சொல்ல போறது இல்ல. உங்களுக்கு எப்போ சம்மதமோ சொல்லுங்க. அது வரை நாங்களும் வெயிட் பண்ணுறோம்.”
“எனக்கு இப்பவே சம்மதம் இல்ல” என்று ஆராதனா கூற “சரி… ஆனா கடைசி வர கல்யாணம் பண்ணாம இருந்துடுவியா? அதுக்கு ப்ரிப்பேர் பண்ணுறோம் னு நினைச்சுக்கோ” என்றார் ரகுநாதன்.
ஆராதனா ஒன்றும் பேச முடியாமல் எழுந்து சென்று விட்டாள். யுவனும் செல்ல பார்க்க அர்ச்சனா பிடித்துக் கொண்டார்.
“உண்மைய சொல்லு… உனக்கு ஆராவ கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லையா?”
யுவன் பதில் சொல்லாமல் தோளை குலுக்கினான்.
“வாய திறந்து சொல்லு” என்று பத்மினி அதட்ட “என்ன என்னை மட்டும் தனியா பிடிச்சு கேட்குறீங்க?” என்று கேட்டான்.
“நீ பதில் சொல்ல போறியா இல்லையா?” என்று அர்ச்சனா மிரட்ட “எனக்கு சரி னா என்ன செய்யுவீங்க?” என்று கேட்டான்.
“ஆராவ ஓகே சொல்ல வைக்கிற வேலைய உன் கிட்ட கொடுத்துடுவோம்” என்றார் ரகுநாதன்.
“ஆமா.. உன் முடிவ சொல்லு இப்ப” – சத்தியன்.
“ஆராவ ஓகே சொல்ல வைக்கனும். அவ்வளவு தான? என் கிட்ட விட்ருங்க” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டான்.
“அடப்பாவி… எப்படி வாய திறந்து சொல்லாமலே ஓடிட்டான் பாரேன்” என்று அர்ச்சனா முறைக்க “அதான் சரி னு சொல்லிட்டானே.. இன்னும் என்ன? ஆராவயும் யுவா பார்த்துப்பான். நாம நம்ம வேலைய பார்ப்போம்” என்றார் பத்மினி.
*.*.*.*.*.
மெத்தையில் தூக்கம் வராமல் ஆராதனா புரண்டு கொண்டே இருந்தாள். அவளால் இந்த திடீர் மாற்றத்தை உடனே ஜீரணிக்க முடியவில்லை. யுவனை ஒரு நண்பனாக கூட பார்க்காதவளை கணவனாக பார்க்க சொன்னால்?
அவளது மறுப்பு எதுவும் பெரியவர்கள் மத்தியில் எடுபடாது என்று நன்றாக புரிந்தது. இவனை வேண்டாம் என்றால் அடுத்து யாரையும் அழைத்து வருவார்களோ என்று தோன்றியது.
அப்படி அழைத்து வந்தால் அடுத்து பார்த்துக் கொள்ளலாம். இப்போது இருக்கும் பிரச்சனைக்கு ஒரு தீர்வை தேடுவோம் என்ற முடிவுக்கு வந்தாள். ஆனால் தீர்வு தான் கிடைக்கவில்லை. யோசித்து களைத்து உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தவளை யுவன் அழைத்தான்.
“இந்த ப்ராடெக்ட்க்கு ரிவ்யூ சரியில்ல. என்ன மெட்டிரியல் னு செக் பண்ணி சொல்லு” என்று கொடுக்க வாங்கிக் கொண்டாள்.
அவள் வெளியில் வரும் முன்பு கதவை தட்டி விட்டு யாரோ உள்ளே நுழைந்தனர். சங்கவி தான் வந்து நின்றாள். அவளை பார்த்ததும் ஆராதனா சலிப்பாக தலையாட்டி விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
“ஹாய் யுவா…. நீ வெளிய போகலயா ஆராதனா?” என்று சங்கவி கேட்டு வைக்க ஆராதனாவிற்கு சட்டென கோபம் ஏறியது.
“அத பத்தி நீ… நீங்க கவல பட வேணாம். வந்த வேலைய பாருங்க. எனக்கு இவன் கிட்ட வேலை இருக்கு” என்று பட்டென பதில் கூறினாள்.
சங்கவி கேட்டது யுவனுக்குமே பிடிக்கவில்லை. அதனால் ஆராதனாவின் பேச்சை அவன் எதிர்க்கவில்லை.
“உட்கார்… இந்தியா எப்போ வந்த?” என்று யுவன் கேட்க “டூ டேய்ஸ் ஆகிடுச்சு. உன்ன பார்த்துட்டு போகலாம் னு வந்தேன்.” என்றாள்.
“ஓஹோ… எதாச்சும் சாப்டுறியா?”
“இல்ல வேண்டாம்”
“சரி கொஞ்சம் வேலை இருக்கு. இன்னொரு நாள் வெளிய பார்க்கலாமா?”
“நோ ப்ராப்ளம். இனி இங்க தான் இருப்பேன். எப்போ வேணா பார்க்கலாம்” என்று சங்கவி கூற ‘ஒரு லூசோட இன்னொரு லூசும் சேர்ந்துடுச்சா’ என்று ஆராதனா நினைத்துக் கொண்டாள். ஆராதனாவின் முகத்தை பார்த்த யுவனுக்கு அவளது நினைப்பு புரிந்து போனது. அது சிரிப்பை வரவழைக்க உதட்டை கடித்து சிரிப்பை அடக்கினான்.
அந்நேரம் இம்ரான் வந்து நின்றான். சங்கவி இம்ரானிடம் பேச திரும்பி விட ஆராதனா யுவனை எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தாள். யுவன் அவளை பார்த்து புருவம் உயர்த்தி சிரிப்பை அடக்க அவனது சிரிப்பின் காரணம் ஆராதனாவிற்கு புரிந்தது. கையில் இருந்த பேனாவை அவன் மீது தூக்கி எறிந்தாள்.
யுவன் வாயை மூடி கஷ்ட்டப்பட்டு சிரிப்பை அடக்க விரல் நீட்டி எச்சரித்தாள். இம்ரானிடம் பேசிக் கொண்டிருந்தாலும் சங்கவியின் கவனம் இவர்கள் மேல் தான் இருந்தது.
‘இதுங்க எப்படி இவ்வளவு க்ளோஸ் ஆச்சுங்க?’ என்று யோசித்தாள்.
ஆராதனா யுவனை முறைத்து விட்டு குனிந்து வேலையை பார்க்க “ஓகே சங்கவி.. இன்னொரு நாள் பார்க்கலாம். ” என்று யுவன் அவளை அனுப்பி வைத்தான்.
இம்ரான் வந்த விசயத்தை பேசி விட்டு சென்று விட “ஆரா உன் மைண்ட் வாய்ஸ்ஸ கேட்ச் பண்ணிட்டேன்” என்றான் யுவன்.
“எங்க சொல்லு பார்ப்போம்?”
“ஒருத்தி ரெண்டு பேர் ஆயிட்டாளுங்க னு தான நினைச்ச?”
ஆராதனா பதில் சொல்லாமல் உதட்டை சுழித்தாள். யுவன் அதற்கு சிரிக்க “ரெண்டும் அரை வேக்காடு. நீ தான் கட்டி மேய்க்கனும். நான் போய் இத முடிக்கிறேன்” என்று எழுந்து சென்று விட்டாள்.
*.*.*.*.*.*.
சங்கவிக்கு மட்டுமல்ல யாமினிக்கும் இவர்கள் சண்டை போடாமல் இருப்பது சந்தேகத்தை கிளப்பியிருந்தது. என்ன முயன்றும் அவர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் ஊருக்கே விவரம் தெரிந்து போனது.
இது வரை யுவனுக்கு தான் தன் மகளை கட்டி வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்த மாதவனுக்கு தான் விசயம் உவப்பாக இல்லை. அவருக்கு நம்பிக்கை இருந்தது. நிச்சயமாக தன்னுடைய பொண்ணை தான் யுவன் திருமணம் செய்து கொள்வான் என்று.
அதற்காக தான் தன் மகளை யுவன் இருக்கும் இடத்திற்கே வேலை செய்ய அனுப்பினார். இப்போது யாமினியிடம் விசயத்தை எப்படி சொல்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.
சத்தியனும் ரகுநாதனும் மஹாலை புக் செய்தது ஊர் முழுவதும் பரவி விட்டது. யுவனுக்கு வலை விரித்து காத்திருந்த அத்தனை பேருக்கும் இது ஏமாற்றம் தான். ஆராதனாவை வீட்டு மருமகளாக்கி சொத்தில் பங்கை அடைய நினைத்த பலரும் ஏமாந்து விட்டனர்.
முதலில் இந்த விசயம் சங்கவியின் காதுக்கு தான் சென்று சேர்ந்தது. அதை கேட்டதும் அவளுக்கு இதயம் நின்றே விட்டது.
“ப்பா… தப்பா கேட்டுருப்பீங்க. அந்த ஆராதனாவுக்கும் யுவனுக்கும் ஆகவே ஆகாது. நீங்க வேற யாரையோ கேட்டுட்டு மாத்தி சொல்லாதீங்க” என்று கூறி பார்த்தாள். ஆனால் சங்கவியின் தந்தை அடித்து கூற அவளால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
எப்படியாவது இதை கலைத்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். எப்படியும் யுவனை அவள் கரைக்க முடியாது. ஆராதனாவை யுவனுக்கு எதிராக திருப்பி விட வேண்டும் என்று தீர்மானத்திற்கு வந்தாள்.
யாமினிக்கு விசயம் போய் சேர முதலில் அதிர்ந்தவள் உடனே அமைதியாக அமர்ந்து விட்டாள்.
“என்ன மா?” என்று மாதவன் கேட்க “கொஞ்ச நாளாவே ரெண்டும் சண்டையே போட்டுக்காம சிரிச்சு பேசிட்டு இருக்குங்களே னு பார்த்தேன். இதான் காரணமா?” என்றாள்.
“அந்த ஆராதனா எப்பவும் யுவன் கூட பேச மாட்டா தான?”
“அப்படிலாம் கிடையாது. நல்லா பேசுவா. யாராச்சும் அவங்க பேசும் போது நடுவுல வந்தா மூக்க உடச்சுருவா”
“அப்படியா?”
“ம்ம்.. யுவன் கூட அவள யாரு முன்னாடியும் அதட்ட மாட்டான். நம்மல கூப்பிட்டு தான் அட்வைஸ் பண்ணுவான். நடுவுல வராத னு”
“ஆராதனா சின்ன பொண்ணு னு நினைச்சுட்டு இருந்தேனே… இப்படி வரும் னு யோசிக்கவே இல்லையே”
“நானும் தான். பார்ப்போம். பேசிட்டு தான இருக்காங்க. அதுக்குள்ள இதுங்களே சண்டை போட்டு பிரிஞ்சாலும் பிரிஞ்சுடுங்க”
“அப்படியும் நடக்குமா?”
“பார்க்கலாம்”
யாமினிக்கும் ஆராதனா சம்மதித்து இருப்பாள் என்பதில் நம்பிக்கை இல்லை. அதை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.
தொடரும்.