Loading

ஆட்சியர் கனவு – 54.💕

 இறுதிப் பாகம்

தன்னவனின் அருகாமையைத் தேடித் தவித்தவளை மேலும் தவிக்க விட்டவன், வெகு நேரம் சக்தியிடம் உரையாடிவிட்டு அறைக்கு வந்தான். ஆராவைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கி விட, அவளை அணைத்தவாறு இவனும் படுக்கையில் வீழ்ந்தான். தன்னவனின் ஸ்பரிசம் கண்டவுடன் அவனை அணைத்துக் கொண்டாள் பெண்ணவள்.

“என்னடி?”

“இவ்ளோ நேரம் எங்க மாமா போன?”

அவளின் அழைப்பிலேயே தன்னை அதிகம் தேடி இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன், அவளை இன்னும் தன்னுள் பொதித்துக் கொண்டு,
“என்ன ஆச்சு, என் யதுக்கு?”

இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவனுக்குள் இன்னும் புதைய,

அவளை அணைத்தவாறே “எத பத்தியும் நினைக்காத யதுமா, எதுவா இருந்தாலும் பேசினா சரி ஆகாதது எதுவும் இல்லன்னு என் பொண்டாட்டி சொல்லி இருக்கா தெரியுமா?”

அவனை கண்டு புன்னகைத்தவள் எழுந்து அமர்ந்தாள்.

மனைவியைத் தொடர்ந்து அவனும் எழ, ஆரா தூங்குகிறாளா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, பால்கனி பக்கம் சென்றாள். அவனும் பின்னோடே செல்ல, “என்கிட்ட எதயாவது மறைக்குறியா மாமா? எனக்கு பல விசயங்கள்ல ரொம்ப குழப்பமா இருக்கு. எப்டி யது இருக்கான்னு ஹரி சொல்றாங்க? அவ… அவ…. அப்டி இருந்தாலும் இந்த மாதிரிலாம் செய்ய மாட்ட மாமா. அவள பத்தி எனக்கு தெரியும்.” என்று வினவுபவளிடம் எதைக் கூறி சமாதானம் செய்ய.

அவளை அணைத்து உச்சியில் முத்தமிட்டு தன்னோடு இருத்திக் கொண்டவன், “இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. எல்லாமே உனக்கு சொல்றேன். அது வரை நாம விட்ட இடத்துல இருந்து நல்லா லவ் பன்றோம் சரியா?” என்றான் அவளின் இடையில் கையிட்டு அணைத்தவாறே.

அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள், “இனிமே என்னை விட்டு எங்கயும் போக மாட்ட தான?” என்றபடி அவள் மீண்டும் கட்டிலில் வந்து அமர, அவள் அருகில் வந்தவன்,

“ப்ராமிஸ். எங்கயும் போக மாட்டேன் சரியா..?” என்றான்.

“உன்கிட்ட நிறைய விசயம் பேசணும்”

“பேசு…”

“இப்போவா?”

“ம்ம்.. ஆமாடி என் செல்ல பொண்டாட்டி” என்று அவள் தலையில் முட்டி செல்லம் கொஞ்சிட,  அவளை தன் மடியில் இருத்திக் கொண்டவனின் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கியவள், இந்த நிமிடத்தை மனதில் பொதித்துக் கொண்டாள். அப்படியே அவளின் பார்வை தன் மகளை வருட, மென்னகை புரிந்தவள் பேசத் தொடங்கினாள்.

“என் வாழ்க்கைல வந்த வரம்டா நீங்க ரெண்டு பேரும். நான் வீட்ட விட்டு வந்ததுக்கு அப்ரோம் பாலைவனமா இருந்த இடத்த மாத்துனது இவ தான்டா. இவ எப்டி என் கைல கிடச்சா தெரியுமா? அன்வர் ரன் பன்ன ஸ்கூல்ல ஒரு ரூம்ல பத்து குழந்தைங்க மூச்சு பேச்சு இல்லாம கிடந்தாங்க.

சர்வீஸ்ல இருந்தப்போ ரேஷ்மா தான் அன்வர் இந்த மாதிரி இல்லீகலா குழந்தைங்கள கடத்தி அவங்கள ஏதோ ரிசர்ச்க்கு கொண்டு போக இருக்குறதா சொன்னா. அப்போ தான் உடனே காப்பாத்துனோம். எல்லாக் குழந்தைகளயும் உடனே ஹாஸ்பிட்டல சேத்தோம். எல்லாருக்கும் அளவுக்கு அதிகமா குளோரோபார்ம் கொடுத்து இருக்குறதா சொன்னாங்க. இவள தவிர மத்த குழந்தைங்க எல்லாம் கண்ணு முழிச்சிட்டாங்க. அதுனால அவங்கள மட்டும் உடனே ஹோம்க்கு அனுப்பியாச்சு. இவ கண்ணு முழிக்கவே மூணு நாள் ஆச்சு. ரொம்ப பயமுறுத்திட்டா. அவ முழிச்சப்போ கூட இருந்தது நான் தான். என்னை பாத்த உடனே அவ சொன்ன மொத வார்த்தை என்ன தெரியுமா?” என்று நிறுத்தி ஆதியை காண “யது..” என்று அவனும் “யது மா..” என்று தூக்கத்தில் ஆராவும் கூறினார்கள். சட்டென்று திவியின் கண்களில் நீர் வந்து விட்டது.

ஆதி அதை துடைத்துவிட்டு, கண்களால் அழ வேண்டாம் என்றவனின் கைகள் தன் மகளை தட்டிக் கொடுத்தது.

“ஏன்னு தெரியலடா.. அந்த நிமிசம் முடிவு பண்ணேன், அவ என்கூட தான் இருக்கணும்னு. அப்போ தான் அவளோட டீடையில்ஸ் எல்லாம் விசாரிச்சப்போ தெரிஞ்சது, அவ அன்வரோட குழந்தைன்னு.. என் தேவதைடா. உன்னை விட்டு வந்த அப்ரோம் நான் சிரிச்சன்னா அதுக்கு காரணம் ஆரெழில் தான்.

இந்த சின்ன வயசுலயே எவ்ளோ பக்குவம் தெரியுமா.? அப்டியே உன்னையும் யதுவயும் பாக்குற மாதிரி இருக்கும். நீயும் அப்டி தான் ரொம்ப மெச்சூர்ட்டு. யது கூட சின்ன வயசுல மெச்சூர்ட்டா நடந்துப்பா. உங்க ரெண்டு பேர் மாதிரியும் என் மேல உயிரா இருக்குறா..” என்றவள் ஆசையுடன் தன் கணவனை ஏறிட, இதுவரை புன்னகை பூத்த முகம் தற்போது இறுகிப் போய் இருந்தது.

ஆதியின் முகபாவனையில் பதட்டமானவள், அவன் தாடையைப் பற்றி “என்ன ஆச்சு” என்றிட, அவளை தன்னை விட்டு விலத்தியவன், நிலவை வெறிக்க ஆரம்பித்தான்.

தன்னவனின் செயலில் புரியாமல் தவித்தவள், அவன் முன்பு போய் நிற்க, அவன் கண்கள் சிவந்து போய் இருந்தது.

அதில் பதறியவள் “மாமா.. ஏன் அழற? நா.. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?”

மறுப்பாய்த் தலையசைத்தவன்… “என்னை மன்னிச்சிடுடி.. நா.. நான் இதுக்கு எப்டி காரணம்னு தெரிஞ்ச அடுத்த நொடி செத்துட்டேன் யது.. சாரிடி..” என்றவனின் குரல் தழுதழுத்தது.

 
“என்ன ஆச்சு மாமா?”

“ஆரா… அன்வரோட குழந்தை கிடையாது யது..”

 

“என்ன சொல்ற.? ஆமா அவ இப்போ நம்ம குழந்தை தான் மாமா.. பீல் பண்ணாத…”

அவள் சொல்லில் நெஞ்சம் அடைத்திட, அவள் கைகளை தன் கைகளுக்குள் அடைத்தவன், “ஆரா.. யதுவோட குழந்தைடி… எனக்கும் யதுவுக்கும் பிறந்த குழந்தை…” என்றதில் திவியின் உலகம் ஒரு நொடி நின்று சுற்றியது போல் இருந்தது. அவளை அறியாமல் கண்கள் நீரை சொறிந்திட, “என்.. என்ன சொல்ற?…”

ஆம் என்பது போல் தலையசைத்தவன் நெஞ்சம் கனக்க நின்று கொண்டு இருந்தான்.

“எப்.. எப்டி?”

“ஆனா… அதுக்கு காரணம் நான் இல்லடி.. எனக்கே இந்த விசயம் ஆரா அன்னைக்கு ஹாஸ்பிட்டல இருந்தான்னு சொன்னல்ல அப்போ தான் தெரியும். அவ ஹாஸ்பிட்டல இருந்தப்போ சந்தனா எனக்கு ஒரு ரிப்போர்ட் சென்ட் பன்னா. அதுல இது தான் ரிசல்ட். அப்போ கூட நான் நம்பல. மறுபடியும் நான் டெஸ்ட் எடுத்தப்போ தான் தெரிஞ்சது.

ஆனா அப்போ கூட அது யதுவர்ஷினியோட குழந்தைன்னு எனக்கு தெரியாது யது… ஒரு வாரத்துக்கு முன்னாடி யதுவர்ஷினி உயிரோட தான் இருக்கான்னு கண்டுபிடிச்சப்போ தான் ஹரி சொன்னான், ஏன் ஆரா யதுவோட குழந்தையா இருக்க கூடாதுன்னு? ஒரு டவுட்ல தான் டெஸ்ட் எடுத்தோம். பட் அது கன்பார்ம் ஆகிடுச்சு.”

“எப்டின்னு கேட்டேன்?”

அவளை அடிப்பட்ட பார்வை பார்த்தவன், “அன்னைக்கு உன் ஸ்கூல்ல நான் மயங்கி விழுந்தேன்ல அப்போ என்னோட ஸ்பர்ம் செல்ல எடுத்து பிரிசர்வ் பண்ணி வச்சு யதுவர்ஷினிக்கு கொடுத்து இருக்காங்க.”

“யாரு?”

“இன்னும் ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சிடுவேன்டி. அவனத்தான் நானும் தேடிட்டு இருக்கேன். ஆனா இதுக்கு உடந்தையா இருந்தது ராஜரத்தினம் தான்.”

திவி எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, ஆதி தான் துடித்துப் போனான். எதை கூறினால் அவள் தாங்கமாட்டாள் என்று அறிந்தும் அதனை தன்னாலேயே தெரிவிக்கும் சூழ்நிலையை கடிந்து கொண்டான். பல நொடிகள் அமைதியாய் கழிய..

திவி எழுந்து படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள்.

அவள் பின்னோடே சென்றவன், “யது… சண்டை கூட போடுடி.. இப்டி பேசாம இருக்காத…” என்று கண்ணீர் விட, அவனை பார்த்தப்படி திரும்பியவள், “நான் எதுக்கு சண்டை போடணும்.?” அவன் புரியாமல் பார்க்க, “நீ என்ன தப்பு பண்ண மாமா? நான் ஏன் சண்டை போடணும்? இது உன் சுயநினைவுல நடந்தது கிடையாது. அதுவும் இப்டி ஆனதுக்கு காரணம் நீ கிடையாது. யதுவும் கிடையாது. ஆனா பாதிப்பு மட்டும் என்.. இல்ல நம்ம பொண்ணுக்கு… அந்த ஆண்டவனே அவளோட அப்பாவ கொடுத்துட்டான். யது உயிரோட இருக்காளோ இல்லையோ.. ஆனா ஆராவ என்னால யாருக்கும் விட்டுத் தர முடியாது. அவ லீகலா இப்போ நம்ம குழந்தை தான். நீ எதுவும் நினைக்காம படு…” என்றவளை வாரி அணைத்துக் கொண்டான்.

இந்த புரிதல்… இந்த நம்பிக்கை… இந்த காதலுக்கு தான் என்ன செய்தாலும் தகும் என்று தான் நினைத்தான். இனி ஒரு நொடியும் அவளையும் ஆராவையும் பிரியக் கூடாது என்ற முடிவுக்கு வந்தான்.
 

அடுத்த நாள் பொழுது புது விடியலாக இருந்தது. தன் சுயகழிவிரக்கத்தில் இருந்து மீனா தன்னிலை திரும்பிட, ஆதியும் திவியும் கூட புதிதாய் பிறந்தது போல் உணர்ந்தனர். எப்போதும் போல், ஆரா தனக்கும், கவின் மற்றும் மொழியனுக்கும் பால் எடுத்துக் கொண்டு போக, புன்னகையோடு அனைவரும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

சக்தியும் ஆதியும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைக்காக சென்று விட, தெய்வானை சமையல் வேலைகளை கவனிக்க சென்று விட்டாள். ரவீணாவும், மீனாவும் அவருக்கு உதவியாய் சென்று விட, சிவஞானம் எப்போதும் போல் கோவிலுக்கு புறப்பட்டு சென்று விட்டார். செல்வி அம்மாவும் அவருடன் சென்று விட, குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை திவி எடுத்துக் கொண்டாள். இது வரை தேவ்வுடன் பேசவே அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவனும் வேலை வேலை என ஓடிக் கொண்டு இருக்க, தற்போது தான் தன் அறையில் இருந்து வெளியே வந்தான். “சித்தப்பா….” என்றபடி ஆரெழில் அவன் கால்களை கட்டிக் கொள்ள, புன்னகையுடன் அவனை தூக்கி சுற்றியவன், அவளோடு திவியின் அருகில் வந்து அமர்ந்தான்.

“வாங்க,.. தொழிலதிபரே… பாக்கவே முடியல.. ரொம்ப பிஸி போல..”

“ஏன், அண்ணி? அப்டிலாம் ஒன்னும் இல்ல அண்ணி..” என்றவனின் சொல்லில் மருந்துக்கும் சந்தோசம் இல்லை.

“தேவ்..” என்று அவனை தொட, ஆராவைக் கொஞ்சியபடி இருந்தவனின் கண்கள் அவளிடம் திரும்பியது.

திவி அவனை உற்றுக் கவனிக்கையில், கண்கள் முழுதும் கருவளையம் இட்டிருக்க, உதடுகள் இரண்டும் கறுத்துப் போய் இருந்தது.

“என்ன அண்ணி?”

“தம் அடிக்குறியா தேவ்?” திவியின் கண்களை தவிர்த்தவன், பேசாமல் இருந்தான்.

“ஆரா, கவின், மொழியா முணு பேரும் உள்ள போய் விளையாடுங்க. நான் வரேன்” அவர்களும் சமத்தாய் சென்றிட, “இப்போ சொல்லு என்ன பிரச்சனை உனக்கு? எப்போல இருந்து இந்த பழக்கம்?”

அவன் அப்போதும் அமைதி காத்திட, “இந்த பழக்கத்த விடு தேவ். பாரதி கிட்ட நான் பேசுறேன்” என்று மட்டும் கூறிவிட்டு சென்று விட்டாள். என்றும் தான் கூறாமலேயே தன் எண்ணங்களை உணர்ந்து தோழியாக உடன் இருப்பவரை அன்று சாடியதை எண்ணி வருந்தினான் தேவ்.

 
அன்றைய பொழுது குழந்தைகளுடனே கழிய இரவு வீடு சேர்ந்தனர் ஆதியும், சக்தியும். ஆதி தன்னறைக்குள் செல்ல, எப்போதும் போல் மகளை தட்டிக் கொடுத்து கொண்டு இருந்தாள் ஆதியின் யது.

அவளிடம் தான் கொண்டு வந்திருந்த கடிதத்தை நீட்டியவன் அவள் அருகில் அமர்ந்து கொண்டான். யோசனையோடு அவள் அதை பிரிக்க, சந்தோசத்தில் துள்ளிக் குதித்து விட்டாள். ஆம், அவளின் கனவு நனவாகி இருந்தது. மீண்டும் மாவட்ட ஆட்சியர் என்ற இடத்தினைப் பெற்று இருந்தாள். அதுவும் சேலம் மாவட்டத்திற்கே. அவளின் மகிழ்ச்சியில் தன் மனது நிறைவடைந்ததாக உணர்ந்தான் ஆதி. எதையோ சாதித்தது போன்றதொரு மகிழ்வு அவனுள்.

மகிழ்வோடு தன்னவனை வாரி அணைத்துக் கொண்டாள் பெண்ணவள். அவனும் அவளோடு ஒன்றிப் போனாள். அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, கடுப்போடு அவளை விடுவித்தான் ஆதி. “நாம சந்தோசமா இருந்தா மட்டும் எவனுக்கு தான் எரியுமோ தெரியலடி” என்று புலம்பியவாறே கதவை திறக்க, சக்தி மொழியன் மற்றும் கவினோடு நின்று இருந்தான். தற்போது ஆதியின் பார்வை கனலாக சக்தியை தாக்கிட, “தப்பான நேரத்துல கதவ தட்டிடனோ” என்று யோசிக்க மட்டுமே முடிந்தது அவனால்.

“என்னடா வேணும்?”

“ஆராவ அம்மா தூக்கிட்டு வர சொன்னாங்கடா?”

“ஏன்டா?”

“இவனுங்க ரெண்டு பேரும் அம்மா கூட படுக்க போறாங்களாம். சோ ஆராவும் வேணும்னு அடம்புடிக்குறாங்க?” திவி ஏதும் கூறாமல் ஆராவை கொண்டு வந்து சக்தியிடம் கொடுத்தாள். அவனும் தூக்கிக் கொண்டு சென்று விட்டான்.

“ஏன்டி கொடுத்த?”

“அத்த தான் கேட்குறாங்கள. அதான்.”

“நடுவுல ஆரா எழுந்தா என்ன பண்ணுவ?”

“அவலாம் சமத்துப் பொண்ணு. நடுவுல எழுந்திரிக்க மாட்டா…”

“கன்பார்ம்..?”

“ம்ம்ம்… கன்பார்ம் தான்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளை தூக்கி இருந்தான் ஆதி.

“ஏய்… ப்ராடு.. என்னடா பன்ற?”

“ம்ம்ம்… என் ஆரா செல்லத்துக்கு தங்கச்சிய ரெடி பண்ணலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?”

“தங்கச்சியா… நோ.. நோ எனக்கு பையன் தான் வேணும்…”

“கொடுத்துட்டா போச்சு…” என்றபடி கட்டிலில் கிடத்தினான் தன் மனையாளை… மென் சீண்டல்களோடு அவன் முன்னேற, தன்னவளின் சம்மதத்தோடு அங்கு அழகான இல்லறம் அரங்கேறியது.

அடுத்த நாள் திவி, விசயத்தை அனைவரிடமும் கூறிட, அனைவரும் மகிழ்ந்துதான் இருந்தனர். அன்றே அவள் பணியில் சேர, சக்தியும், ஆதியும் அரெஸ்ட் வாரன்டரிக்கு அனுமதி கேட்டு அவளின் அலுவலகம் வந்தனர். திவியும் அதற்கு ஒப்புதல் வழங்க, அவளையும் அழைத்துக் கொண்டு விரைந்தனர்.

அந்த ஓட்டு வீட்டிற்குள் நுழைய, வெளியே பார்க்க பழைய வீடாக இருப்பினும், உள்ளே ஒரு பெரிய ஆய்வக கூடமே நடந்து கொண்டு இருந்தது.

அதனை காவலர்கள் சுற்றி வளைத்திட, அங்கிருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அனைத்துப் பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட,  இதற்கு முக்கிய காரணமாக இருந்த யதுவர்ஷினியும் அவளது கணவன் ஹரியும் கைதாகினர்.

அவர்கள் செய்த குற்றம் தகுந்த சாட்சியங்களோடு வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

வேதியியல் பட்டதாரியான ஹரி, அதன் மீதுள்ள அதிக ஆர்வத்தால் பல விதமான வேதியியல் கலவைகளை அரசு அனுமதியின்றி பயன்படுத்தியது மட்டும் இல்லாமல் அதனை ஆய்வுக்கு உட்படுத்த பல குழந்தைகளை கடத்தி உள்ளார். ஆய்வில் இரண்டு குழந்தைகள் மரணித்தும் உள்ளார்கள். சிறார் கொடுமையும் செய்துள்ள இவர், குழந்தைகளுக்கு போதை தரும் பொருட்களையும் கொடுத்து உள்ளது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவரும் அரசாங்கம் தடை விதித்த போதை வஸ்துகளை உபயோகப்படுத்தி உள்ளார். இவரின் இத்தகைய செயல் சமூகத்திற்கு புறம்பானது மட்டும் இல்லாமல் அதீத கேடும் ஏற்பட்டு உள்ளது. ஆகவே இவருக்கு மரண தண்டனையும், அதற்கு உடந்தையாக இருந்த அவர் மனைவிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படுகிறது. இத்தகைய செயலை துணிச்சலுடன் செய்த காவல்துறை அதிகாரி சக்திக்கும் தன் அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்திய மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆதித்யாவிற்கும் இந்த நீதிமன்றம் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

தன் நிலை இப்படி ஆகுமென தெரிந்து அதனை எண்ணி கவலைக் கொள்ளாமல் தனக்களித்த தண்டனையை மனதார ஏற்றுக் கொண்டு சிறை சென்றாள் யது வர்ஷினி.

போகும் தருவாயில், “உனக்கு செய்யக் கூடாதது எல்லாம் செஞ்சி இருக்கேன் திவி. என்னை நீ எப்டிலாம் பாத்துக்கிட்ட. ஆனா நான் உனக்கு உண்மையா இல்ல. எனக்காக எவ்ளோவோ செஞ்சு இருக்க, இன்னொன்னும் செய்வியா?” திவி எதுவும் பேசாமல் அமைதி காக்க, “என் பொண்ண மட்டும் நல்லா பாத்துக்க. தெரியும் நீ கண்டிப்பா நல்லா பாத்துப்பன்னு. அவ இனிமே என்னோட பொண்ணா இருக்க வேண்டாம். உன்னோட பொண்ணாவே இருக்கட்டும்.” இதற்கும் அவள் பதில் பேசாமல் அப்படியே நிற்க, “என்கிட்ட பேசக் கூட உனக்கு விருப்பம் இல்லையா திவி. நிச்சயம் இருக்காது. காரணம், நான் பண்ண செயல் அப்டி.. போயிட்டு வரேன்.. இல்ல இனிமே வந்து தொல்லை கொடுக்க மாட்டேன். நான் போறேன்டி.. மாமாவயும், ஆராவயும் நல்லா பாத்துக்க” என்றபடி சென்றுவிட்டாள்.

 

இரண்டு வருடம் கழித்து….

 

ஆதி ஆராவை அவசரம் அவசரமாக பள்ளிக்கு கிளப்பிக் கொண்டு இருக்க, தன் ஒரு வயது குழந்தை இசையெழிலை தூக்கிக் கொண்டு வந்தாள் ஆதியின் திவி.

“ஆரா, வா சீக்கிரம் சாப்டு..”

“யதுமா, பாரதி சித்தி ஊட்டி விட்டுடாங்கமா. நான் சாப்டேன். டாடா..” என்றபடி அருகே வந்தவள், தன் அன்னைக்கு ஒரு முத்தம் தந்து விட்டு, தன் தம்பியிடம் “எழிலா சமத்தா இருக்கணும். அக்கா ஸ்கூல் போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என்று விட்டு “கவின், அண்ணா டைம் ஆச்சு…” என்று குரல் கொடுத்தாள். இருவரும் வழக்கம் போல் முட்டிக்கொண்டு நிற்க, அவர்களை சமாதானம் செய்து அழைத்து செல்ல ஆரா தான் படாதபாடு பட்டு விட்டாள். தன் மகள் செய்ததை மற்றவர்கள் அறியாது தன் மனையாளின் கன்னதிற்கும் ஒரு முத்தத்தை கொடுத்தவன் அவள் திரும்புவதற்குள் ஓடிவிட்டான்.

ரவீணா மொழியனை அழைத்துக் கொண்டு வர, மீனா தன் நிறைமாத வயிற்றோடு பொறுமையாக கவினை அழைத்துக் கொண்டு வந்தாள். தேவ்வும் தன் மனையாள் பாரதியோடு நிற்க, கோகுலும் பவித்ராவும் புன்னகையோடு நின்றுக் கொண்டு இருந்தனர். அனைவருக்கும் தன் மழலை மொழியாள் பைபை சொல்லிவிட்டு ஆதியோடு பள்ளிக்கு சென்றனர் மூவரும்…

 

கனவு நிறைவேறியது…💕

 

முற்றும்.🌺🌺🌺

வணக்கம் பிரண்ட்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க… இதுல இன்னும் நிறைய சொல்லப்படாத விஷயங்கள் இருக்கு.

அது எல்லாம் அடுத்த பாகத்தில் வரும். ஆட்சியர் கனவு முதல் பாகம் முடிவுற்றது.

இரண்டாம் பாகத்தில் மீதமிருக்கும் அனைவரின் நிலையும் காணலாம்.

நன்றி…

தங்கள் கருத்துக்களை பகிருங்கள்🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.