Loading

“ஏய் ‌வேலைய பார்த்துட்டு கிளம்பு. உன் மூஞ்சில முழிச்சதுக்கு எதுவும் விளங்கல”

அவன் எரிந்து விழுந்த போதும் அவள் முகத்தில் மாற்றமே இல்லை.

“உன் கெட்ட நேரம் உன் வாயில தான்னு சொன்னேன். இப்பவும் திருந்தல நீ?”

“ப்ச்ச்… ச்சை.. கண்ட முகத்தெல்லாம் பார்த்துட்டு கிளம்புனா இப்படி தான் நாசமா போகும்.”

“இதுக்கே சலிச்சுக்குற? இன்னொன்னு நடக்க போகுது பார்க்குறியா?”

அவளை உறுத்து விழித்தவன் குனிந்து போனை பார்க்க “அட அந்த போன விடு. அங்க பாரு” என்று அவன் காரை காட்டினாள்.

எதிர் பக்கம் நிறுத்தி விட்டு போனின் நெட்வொர்க்கை தேடிக் கொண்டு இந்த பக்கம் வந்து விட்டான். அவள் அவன் பக்கத்தில் தான் நின்று இருந்தாள்.

எதற்கு‌ காரை காட்டுகிறாள் என்று அவன் அவளை திரும்பி பார்க்க “எவ்வளவு அழகான கார்.. சும்மா பளபள னு வச்சுருக்கல?” என்று அவள் கூறி முடித்த அடுத்த நொடி, இடியே அருகில் விழுந்தது போல் ஒரு சத்தம் கேட்டது.

அதிர்ந்து போய் திரும்பி பார்க்க கார் நான்கு குட்டிக்கரணம் போட்டு தள்ளிப்போய் குப்புற விழுந்து இருந்தது. அதை இடித்து விட்டு, புயல் வேகத்தில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

*.*.*.*.*.

“செத்தாலும் உன்ன மன்னிக்க மாட்டேன்” என்று அவன் கூற, “அப்படியா ?” என்று கேட்டாள்.

கையிலிருந்த காபி கோப்பையை உற்று பார்த்துக் கொண்டே அவள் கேட்க, “ஆமா” என்று அழுத்தமாக கூறினான்.

ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் அவளையே தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கண்ணில் கோபம் பொங்க அவன் நிற்க அவனது அருகில் வந்தாள்.

அவன் அசையாமல் நிற்க, “அப்போ செத்து போயிடு” என்று அவன் மீது கை வைத்துத் தள்ளி விட்டாள்.

வீட்டின் மூன்றாம் மாடியில் நின்று இருந்தனர் இருவரும். மொட்டை மாடியிலிருந்து அவனை தள்ளி விட்டு விட தடுமாறி பின்னால் விழுந்தான்.

காபியை உறிஞ்சிக் கொண்டு அவன் விழுவதை எட்டிப் பார்த்தாள். அவனும் பார்வை மாறாமல் அவளை பார்த்துக் கொண்டே கீழே சென்று கொண்டிருந்தான்.

*.*.*.*.*.

“முடியாது… நான் போறேன்… நான் செத்து போறேன்” என்று கண்ணை துடைத்துக் கொண்டே அந்த தடுப்பு இல்லாத மாடியில் திரும்பி நடந்தாள்.

“மேகா.. சொல்லுறத கேளு.. இது தப்பான முடிவு”‌ என்று கத்தினான் அவன்.

“அப்போ என் காதல ஏத்துக்கோ.. உன் காதல் இல்லாம நான் வாழ மாட்டேன். என்ன ஏத்துக்க முடியலனா சாகவிடு”

“மேகா.. ஏன் புரிஞ்சுக்க மாட்ற? நான் ஏற்கனேவே வேற ஒருத்திய லவ் பண்ணுறேன்”

“பொய்….” என்று கத்தியவள் “பொய் பொய்.. என்ன ஏமாத்த பார்க்குற.. நான் நம்ப மாட்டேன்” என்று அடம் பிடித்தாள்.

“அய்யோ.. மேகா புரிஞ்சுக்கோ.. நான் பொய் சொல்லல”

“அப்போ சரி.. நீ உன் காதலியோட சந்தோசமா இரு.. நான் இருந்தா என்ன செத்த என்ன?” என்று கேட்டவள் திரும்பி விட்டாள்.

“மேகா.. ” என்று அவன் சற்று பயத்தோடு அலற அவள் திரும்பவே இல்லை.

அந்நேரம் அங்கு கூடியிருந்த அத்தனை பேரையும் மீறிக் கொண்டு புயல் போல் உள்ளே நுழைந்தவன் யாரையும் கவனிக்காமல் வேகமாக உச்சத்தில் நின்று இருந்தவளிடம் ஓடினான்.

அவள் கண்ணை துடைத்துக் கொண்டு குதிக்கப்போகும் போது அவளது முடி பின்னால் இருந்து இழுக்கப்பட்டு தூரமாக தள்ளி எறியப்பட்டாள். அடுத்த நொடி அவள் நின்று இருந்த இடம் இடிந்து சரிய அவளை காப்பாற்றியவன் அதோடு கீழே விழ ஆரம்பித்தான்.

ஒரு நொடியில் அங்கு என்ன நடந்தது என்று யாருக்கும் புரியவில்லை. அதற்குள் அந்த இடம் சரிந்து கீழே விழ “அர்ஜூ….ன்….” என்ற அவளது அலறல் எல்லா இடத்திலும் எதிரொலித்தது. அதை கேட்டுக் கொண்டே கீழே சரிந்தவனின் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது. அடுத்த நொடி அவனது நினைவு தப்பியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்