706 views

 

 

 

 

 

அர்ஜுன் தன் முன்னால் தேனிக்கள் போல் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த மக்களை பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் திவ்யா காட்டியதையும் கூறியதையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.

 

அமைதியாகவே இருந்த திவ்யா திடீரென ஒரு கேள்வி கேட்டாள்.

 

“உன் அம்மாவோட கனவு என்ன தெரியுமா அர்ஜுன்?”

 

‘கனவா?’ என்று யோசித்தவனுக்கு கல்யாணி அப்படி எதையும் சொன்னது போல் ஞாபகம் வரவில்லை. திவ்யாவை திரும்பி பார்த்தான். இன்னும் கண்ணை மூடி தான் அமர்ந்து இருந்தாள்.

 

“என்ன கனவுனு தெரியலல?”

 

இந்த கேள்விக்கும் அர்ஜுன் அமைதியாக இருந்தான்.

 

“உங்க அம்மாவோட ஒரே ஒரு கனவு அவங்க ஒரு சிறந்த நடிகையா தேசிய விருது வாங்கனும். அது தான் அவங்களோட பெரிய கனவு. கடைசி வர நடக்கவே இல்ல”

 

அர்ஜுனுக்கு இந்த விசயம் புதிது. இதற்கு முன்னால் இதை அவன் கேள்விப் படவே இல்லை.

 

“அவங்களோட ஆசை கனவு எல்லாமே அந்த விருது தான். ஆனா அந்த கனவையும் அசையையும் உனக்காக தூக்கி போட்டாங்க. கேட்குறதுக்கு என்னவோ தியாகம் பண்ணிட்ட மாதிரி பெருமையா இருக்கும். ஆனா அது எவ்வளவு வலிக்கும்னு விட்டவங்களுக்கு தான் தெரியும்”

 

அர்ஜுன் வார்த்தை வராமல் திவ்யாவை பார்த்தான். அவள் இன்னுமே அசையவில்லை. கையை கட்டிக் கொண்டு சாய்ந்து தான் அமர்ந்து இருந்தாள்‌.

 

“ஒரு டீச்சர் வாழ்நாள்ல ஒரு தடவையாச்சும் நல்லாசிரியர் விருது வாங்கனும்னு ஆசை படுறது தப்பு இல்ல. அதே போல ஒரு நடிகை சிறந்த நடிகை விருது வாங்கனும்னு ஆசை படுறதும் தப்பு இல்ல தான? இல்ல தப்பா? “

 

வாயை திறக்க முடியாமல் அமர்ந்து இருந்தான்.

 

“அத்தைக்கும் அப்படி ஒரு கனவு இருந்ததுல தப்பே இல்ல. அதுக்காக அவங்க எவ்வளவோ உழைச்சு இருக்காங்க. பட்….”

 

இடையில் நிறுத்தி விட்டு கண்ணை திறந்தாள்.

 

“உனக்காக அர்ஜுன். உனக்காக மட்டும் தான் அத்த அவங்க பல வருச கனவ தூக்கி போட்டுட்டாங்க. அவங்களோட ஒரே ஒரு ஆசைய தூக்கி போட்டுட்டாங்க.” என்றவள் ஒரு நொடி நிதானித்தாள்.

 

“எனக்கு உன் மேல ரெண்டு விசயத்துல கோபம். ஒன்னு நீ மோதிரத்த தூக்கி போட்டது. அத நீ செய்வனு எதிர் பார்க்கவே இல்ல. அடுத்தது நீ மாமாவ நல்ல அப்பா இல்ல நல்ல ஹஸ்பண்ட் இல்லனு சொன்னது.

 

அவர் நல்ல அப்பாவா இல்லையானு இப்போ பேச்சு இல்ல. ஆனா அவர விட சிறந்த ஹஸ்பண்ட் உலகத்துல யாருக்குமே கிடைக்க மாட்டாங்க. உன்னால கூட அவர மாதிரி நல்ல ஹஸ்பண்டா வாழ முடியாது.

 

அவங்க கல்யாண வாழ்க்கை தெரியுமா? கல்யாணம் பண்ணி ஒரே மாசத்துல அத்தைக்கு வெளி நாட்டுல சூட்டிங். போயிட்டு நாலு மாசம் கழிச்சு தான் வருவாங்கனு தெரிஞ்சும் மாமா அனுப்பி இருக்காரு.

 

புதுசா கல்யாணம் ஆன எந்த ஹஸ்பண்ட் தன் வொய்ஃப்ப ஒரே மாசத்துல பிரிய சம்மதிப்பான்? அதுவும் மத்தவங்க கூட அவங்கள தனியா அனுப்ப சம்மதிப்பான்? சத்தியமா யாருமே சம்மதிக்க மாட்டாங்க.

 

மாமா பண்ணாரு. ஏன் தெரியுமா? அவருக்கு அத்தையோட கனவு தெரியும். அத்தையோட லட்சியம் தெரியும். என் வொய்ஃப் ஆசை படுறத பண்ணுறா. நான் சப்போர்ட் பண்ணுறேன்னு சொல்லுற தைரியம் அவருக்கு இருந்திருக்கு.

 

அவர் நினைச்சு இருந்தா கல்யாணம் ஆகிடுச்சு நடிக்கலாம் கூடாதுனு முடிச்சுருக்கலாம். ஆனா அவர் செய்யவே இல்ல. கல்யாணம் ஆனப்புறமும் நடிக்கிற நடிகைகள் எத்தனை பேரு? விரல் விட்டு எண்ணலாம்.

 

ஆனா கல்யாணம் ஆகியும் பதிமூனு வருசம் அத்த தன் கனவ விடவே இல்ல. அப்படினா மாமா எவ்வளவு சப்போர்ட்டா இருந்திருப்பார்? அந்த அளவுக்கு யாராலையும் இருக்க முடியாது.

 

அவங்க செஞ்ச தப்பு அவங்க பீக் லெவல்ல இருக்கும் போது உன்ன பெத்துக்கிட்டது தான். அவங்க கனவயும் விட முடியாம உன்னயும் ஒழுங்கா வளர்க்க முடியாம போச்சு.. கடைசில உன் மனசு பாதிக்குதுனு அத்த கனவ தூக்கி எறிஞ்சுட்டாங்க.

 

அதையே செய்ய போன மாமாவ தடுத்து நான் பார்த்துக்கிறேன் பிள்ளைய.. நீங்க உங்க கனவ விட வேணாம்னு சொல்லி நல்ல மனைவியா இருந்திருக்காங்க. அவங்க ஒரு நல்ல அம்மா.. பிள்ளைக்காக தியாகம் பண்ணுறது அவங்க கடமைனு எல்லாம் சொல்லிடாத.. கோபத்துல நானே உன்ன கொன்னுடுவேன்.

 

அம்மானா தியாகம்னு ஏன்டா நீங்களா உருவத்த உருவாக்குறீங்க? அவங்களுக்கு ஆசை இருக்க கூடாதா? அவங்களுக்கு கனவு இருக்க கூடாதா? அவங்களா அவங்களுக்கு பிடிச்சத செய்ய கூடாதா? சும்மா சும்மா அம்மானா தியாகினு சொல்லி அவங்களுக்கு ஆசை படுற உரிமை கூட இல்லாம பறிச்சுடுறது.

 

என்ன கருமமோ.. கேட்கும் போதே பத்திக்கிட்டு வரும். ஏன் தியாகம் அம்மா தான் பண்ணனும்? அப்பா தான் பண்ணனும்? அவங்க உயிர கொடுத்த பெத்த பிள்ளைங்க பண்ண வேண்டியது தான?

 

உனக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா எதோ ஒன்னு. அதான் இப்போ பலர் நிலைமை. அடுத்தவங்க தியாகத்த அனுபவிக்குறதுக்கு தான் ஆசை. தான் தியாகம் பண்ணுறதுக்கு யாரும் ரெடியா இல்ல. நீ என் கிட்ட லாஸ்ட்டா பேசிட்டு போனத நீ கோமால இருக்கப்போ மஞ்சுக்கு சொன்னேன். அவ நீ பெரிய தியாகினு சொல்லிட்டா.

 

சோ நீ தியாகி தான? அந்த தியாகம் உனக்கு இனிச்சதா? உனக்கு வலிக்கல? ஆசை பட்ட பொண்ண எல்லாரும் சம்மதிச்சப்புறமும் கல்யாணம் பண்ணிக்க முடியாம விட்டுட்டு அவ மனசுக்காக நல்லதுக்காகனு தியாகம் பண்ணியே அது உனக்கு சுகமாவா இருந்துச்சு?

 

வாய்ப்பே இல்ல. அந்த தியாகம் மரணத்த விட அதிகமா வலிக்கும். அதே தான் உன்னால உனக்காக உன் அம்மாவுக்கு நடந்தது. பிள்ளைக்காகனு அவங்க இழந்த கனவ நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருப்பி கொடுக்க முடியாது.

 

அதோட வலி சாகுற வரை அனுபவிச்சுட்டு தான் அத்த செத்தாங்க. மாமா நல்ல அப்பா இல்லனு சொன்ன.. நீ நல்ல பையனா? உன் அம்மா அப்பா ஆசை எதுனு கூட தெரிஞ்சுக்காம உன் ஆசைக்காக உனக்காக அவங்க தான் தியாகம் பண்ணனும்னு எதிர் பார்த்த நீ நல்ல பிள்ளையா?”

 

திவ்யா மூச்சு வாங்க பேசி விட்டு கேள்வியோடு நிறுத்த அர்ஜுனுக்கு கண்ணீர் வந்து விட்டது. அவனுக்கும் தெரியுமே தியாகத்தின் வலி எது வென்று. மனதுக்கு பிடித்த ஒன்றை தியாகம் செய்து விட்டு பல நாள் தூக்கம் இல்லாமல் அலைந்து இருக்கிறான்.

 

அதே போல் தான் கல்யாணியும் தனக்கு பிடித்ததை விட்டு விட்டு வேதனையோடு வாழ்ந்து இருக்கிறார். தியாகம் என்ற வார்த்தை கேட்பதற்கு மட்டுமே இனிக்கும். அதை செய்தவர்களுக்கு தான் அதனுடைய வலி தெரியும்.

 

அர்ஜுன் முகத்தை பார்த்தவள் உடனே காரை எடுத்து விட்டாள். அர்ஜுன் சன்னல் பக்கமாக திரும்பி இருந்தான். போகும் சாலைகளிலெல்லாம் கல்யாணியின் முகங்கள் தெரிந்தது.

 

“அம்மா இனிமே நடிக்க மாட்டேன். அம்மா எங்கயும் போக மாட்டேன். சரியா.. அம்மா கூட பேசுடா” என்று கல்யாணி கூறியது ஞாபகம் வந்தது. அந்த வார்த்தைகளை சொல்வதற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டும்.

 

“உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவன் அம்ரிதாவிடம் சொல்லும் போது வலித்த அதே வலி தன்னுடைய மகனுக்காக கனவை துறந்த அன்னைக்கும் இருந்தது என்று நினைக்கும் போதே கண்ணீர் வடிந்து ஓட ஆரம்பித்தது.

 

துடைக்காமல் கல்யாணியை பற்றி நினைத்துக் கொண்டே வந்தான்.

 

அம்மாவுக்கு மட்டும் தான் தன்னை பிடித்திருக்கிறது. அதனால் அந்த சினிமாவை விட்டு விட்டார். அப்பாவுக்கு என்னை விட சினிமா தான் பிடித்திருக்கிறது என்று அவரின் மீது கோபமும் அன்னையின் மீது பாசமும் வைத்த அர்ஜுனை நினைத்து அவனுக்கே கேவலமாக இருந்தது.

 

அன்னைக்காக அவன் ஏன் தியாகம் செய்யவில்லை? அம்ரிதாவை பற்றி ஆயிரம் விசயம் வரும் போது, என் அம்ரிதா அப்படி எல்லாம் இருக்க மாட்டாள் என்று நம்பினானானே…

 

அதே நம்பிக்கையை பெற்றவர்கள் மீது வைத்து விட்டு, யார் பேசினால் எனக்கு என்னவென்று இருந்திருக்கலாமே. எல்லாவற்றையும் நம்பி பெற்றவர்களின் மீது கோபப்பட்டு தன் மனதையும் கெடுத்துக் கொண்டானே.

 

அவனைப் போன்ற பதிமூன்று வயதில் அம்ரிதா வீட்டு வேலைகளை எல்லாம் பார்த்து அன்னைக்கு முழு உதவியாக இருந்தாள். அவனை விட பலமடங்கு பக்குவப்பட்டவளாக இருந்தாள்.

 

அப்போதெல்லாம் இவளுக்கு அம்மாவும் அப்பாவும் கூடவே இருக்கிறார்கள் என்று பொறாமை பட்டிருக்கிறான். அவளது கஷ்டங்கள் தெரிந்த பிறகு வருத்தப்பட்டு இருக்கிறான்.

 

அவனும் சற்று புரிந்து கொண்டிருக்கலாம். அல்லது எதையுமே காதில் வாங்காமல் போயிருக்கலாம். அதை விட்டு விட்டு பெற்றவர்களின் மீது குற்றம் சுமத்தி அவர்களை காயபடுத்தி விட்டான். அதை கூட இப்போது திவ்யா சொல்லும் போது தான் உணர்கிறான்.

 

இவ்வளவு நாள் காயப்பட்டது தான் மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவனை விட அதிகமாக பெற்றோர்கள் காயப்பட்டு இருக்கின்றனர்.

 

அவனது எண்ணங்கள் எல்லாம் இப்போது எதிர் திசைக்கு மாறி அவனது தவறுகளை சுட்டிக் காட்ட ஆரம்பித்து இருந்தது. கார் நிற்காமல் போய்க் கொண்டிருப்பதை கூட அவன் உணரவில்லை.

 

வெகு தூரம் வந்த பின்பு கார் நின்றது. கார் கண்ணாடியை இறக்கி விட்டு விட்டு அம்ரிதா மீண்டும் கண்ணை மூடி சாய்ந்து கொண்டாள்.

 

அர்ஜுனும் ஒன்றுமே பேசவில்லை பத்து நிமிடம் வரையிலுமே இருவரும் வாயை திறக்கவில்லை.

 

“இன்னைக்கு ஏன் ஸ்டுடியோ கூட்டிட்டு போனேன் தெரியுமா? உன் கண்ணுல நீயே போட்டு வச்சுருக்க திரைய கலட்ட தான். பாரு.. சினிமா உலகம் எவ்வளவு பெருசு.. அதுல நீ பார்த்தது கேட்டது எல்லாத்தையும் தாண்டி நிறைய இருக்கு. அத நீ புரிஞ்சுக்காத வரை மாமாவ நிம்மதியா இருக்கவே விட மாட்ட. அதான் காட்டினேன்”

 

அர்ஜுனுக்கு குற்ற உணர்வு அதிகமாகியது.

 

“அத்த டெத்ல வந்தவங்க பேசுனாங்கனு அவ்வளவு கோபப்பட்ட.. பேசுனது பத்து பேரு தான். மத்த தொன்னூறு பேரும் அத்த மாமா மேல வச்சுருக்க அளவு கடந்த மரியாதைக்காக அங்க வந்தவங்க. உனக்கு அந்த நல்லது எதுவுமே தெரியல. தப்ப மட்டுமே தேடி தேடி பார்த்துட்டு இருந்தா எல்லாமே தப்பா தான் தெரியும்”

 

கார் கதவை திறந்தவள் “இறங்கு” என்றாள். அர்ஜுன் இறங்கியதும் கடற்கரை பக்கம் அழைத்துச் சென்றாள்.

 

“இந்த இடம் ப்ரைவேட் இடம். அங்க இருக்கே அந்த ரெண்டு வீடும் தேவ்க்கு சொந்தமானது. விவேகா அக்கா என்ன இங்க கூட்டிட்டு வந்தாங்க. கவலைகள் இருந்தா நானோ விவேகா அக்காவோ இங்க தான் வருவோம். எங்களால கூட்டத்துல இருக்க முடியாது. தனிமை தான். இங்க ரொம்ப நேரம் உட்கார்ந்துட்டு இருந்திருக்கேன்.”

 

அர்ஜுனை அமர வைத்து அருகிலேயே அமர்ந்து காலை கட்டிக் கொண்டாள். முகத்தை மோதும் உப்பு காற்றை சுவாசித்தபடி இருவருமே அமர்ந்து இருந்தனர்.

 

“இப்போ சொல்லு.. இவ்வளவு நேரம் நான் சொன்னதுல என்ன புரிஞ்சது?”

 

அர்ஜுன் அமைதியாக இருக்க திவ்யாவும் அமைதியாகி விட்டாள். சில நொடிகளுக்கு பிறகு பெரு மூச்சு விட்டான்.

 

“ரொம்ப லேட்டா எல்லாம் புரிஞ்சுக்கிட்டேன்”

 

“ம்ம்..”

 

“நான் இதுக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு நினைக்கவே இல்ல. அப்போ தான் மெச்சூரிட்டி இல்லனா வயசு கூடும் போதும் யோசிக்காம இருந்திட்டேன். நான் தப்புனு நினைக்கிறேன். அது தப்பு தான்னு சண்டை போட தான் தெரிஞ்சது. அது மத்தவங்களுக்கு சரியா இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல. ஏன் நினைக்க ட்ரை கூட பண்ணல”

 

“அப்பாவோட செலவுக்காக கடன் வாங்கி இருந்தோம். கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல வச்சு பார்க்க முடியல. ப்ரைவேட்ல தான் ட்ரீட்மெண்ட் பார்த்தோம். ஒரு மாசமா பெட்ல இருந்தார். பணம் கடன் வாங்கி செலவு பண்ணாலும் மொத்தமுமே கரைஞ்சு போச்சு. இதுல வட்டி கட்டவே திண்டாட்டம் தான்.

 

வட்டியும் கொஞ்ச நாள்ல கட்ட முடியாம போச்சு. அந்த கடன் கொடுத்தவன் அசல் வட்டி ரெண்டையும் கொடுனு கேட்டான். பணம் எவ்வளவு தெரியுமா?”

 

அர்ஜுன் கேள்வியாக பார்க்க திவ்யா தொகையை சொன்னாள்.

 

“அவ்வளவா?”

 

“ஆமா.. என் ரெண்டு பட பேமண்ட்னா யோசிச்சுக்க. அவ்வளவு செலவு ஆச்சு. அவன் வட்டி‌ மட்டும் கேட்ருந்தா கூட மாமா கிட்ட வாங்கி கொடுத்துருப்பேன். மாமாக்கு அப்புறம் திருப்பி கொடுத்துடலாம்னு யோசிச்சுருப்பேன். அவன் அசலும் கேட்டான்.

 

இருக்க வீட்ட வித்தா கூட அவ்வளவு வராது. ஆனா வித்துட்டு அம்மா எனக்கு வாங்கின நகைய எல்லாத்தையும் விக்கலாம்னு முடிவு பண்ணேன். அவன் பணத்த கொடு இல்ல உன் பொண்ண கொடுனு கேட்டான்”

 

“வாட்?”

 

“அதுனால தான் அவசரமா வீட விக்க நினைச்சேன். பத்து வருசத்துக்கு முன்னாடி மாமா கிட்ட இவ்வளவு பணம் இருந்துச்சா என்ன? அவரும் எங்கயாவது வாங்கி கொடுக்கனும். இல்ல அவரோட சொத்த வித்து கொடுக்கனும்.

 

என் இடத்துல உன்ன வச்சு பாரு. அவ்வளவு பெரிய சுமைய மாமா மேல தூக்கி வைக்க முடியுமா? முடியாதுல.. நான் வேலைக்கு போனாலும் அவ்வளவு பணத்த சம்பாதிக்க ஆறு வருசமாச்சும் ஆகிடும். உடனே பணம் வேணும். அதுவும் நல்ல வழியில அவ்வளவு பணம் எப்படி கிடைக்கும்னு யோசிச்சு தான் மாமா சினிமாவ சூஸ் பண்ணார்.

 

சினிமா உனக்கு பிடிக்காதுனு சொல்லித்தான் என் கிட்ட சொன்னார். ஆனா எனக்கு என் குடும்பம் பெருசா பட்டுச்சு. உண்மை தான். நான் உன்ன லவ் பண்ணவெல்லாம் இல்ல. நீ லவ்னு சொல்லாத வரை எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்ல. நீ என்னோட ஃப்ரண்ட். அவ்வளவு தான்.

 

அந்த மோதிரம் போட்டப்போ கூட எனக்கு வித்தியாசமா இல்ல. யாரையாவது கல்யாணம் பண்ணிக்கனும். அதுக்கு பிடிச்ச உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். அதுக்கு மேல நான் எதுவுமே யோசிக்கல. ஆனா என் குடும்பத்த நடுத்தெருவுல விட முடியாது.

 

உன் கிட்ட அவ்வளவு பணம் இருந்தா உன் கிட்ட கேட்ருப்பேன். இல்ல… அதுனால பணம் வர இருந்த ஒரே வழி சினிமா தான். அதுவும் நல்ல வழி. தப்பான வழி இல்ல. சரினு சம்மதிச்சேன். நீ என் நிலைமை என்னனே கேட்காம மோதிரத்த தூக்கப்போட்டப்போ தான் நான் அந்த மோதிரத்த எவ்வளவு மதிச்சுருக்கேன்னு எனக்கே தெரிஞ்சது.

 

ஆனாலும் அந்த நிமிசத்துல இருந்து உன்ன விட்டுட்டு என் அம்மா அப்பாக்காக என் உணர்ச்சி எல்லாத்தையும் மூடி வச்சுட்டு நடிக்க ஆரம்பிச்சேன். எத்தனையோ நாள் அம்மா வேணாம்மா.. இத விட்ரு.. நீ அர்ஜுன கல்யாணம் பண்ணிக்க. நாங்க கடன பார்த்துக்கிறோம்னு சொல்லி இருக்காங்க.

 

அவங்க எனக்காக எதையும் செய்வாங்க. அட்லீஸ்ட் அவங்களுக்காக நான் இத கூட செய்யலனா நான் என்ன பொண்ணு? அதான் கடைசி வர உன்ன தேடி நான் வரவே இல்ல. நடிச்சு முடிச்சதும் பிரச்சனை ஓய்ந்திடும். அப்புறம் அவன் கிட்ட பேசிக்கலாம்னு மனச தேத்திக்கிட்டேன்.

 

என்ன பெத்தவங்களுக்காக தெரியாத ஒரு விசயத்துல மாமாவ மட்டும் நம்பி நான் இறங்குனேன் அர்ஜுன். உன்னால உன்ன பெத்தவங்களுக்காக எதையுமே தியாகம் பண்ண முடியல இல்ல?

 

மாமா மேல நான் வச்சு நம்பிக்கையில பாதியாச்சும் பெத்த பிள்ள நீ வச்சுருந்தா இன்னைக்கு எல்லாமே நல்லா இருந்திருக்கும்”

 

நடந்ததை எல்லாம் கேட்டப்பின்பு மஞ்சுளா அவனை ஏன் குறை கூறினாள் என்று அவனுக்கு புரிந்தது. அவனுக்கு நெருக்கமான அத்தனை பேரும் வேதனையில் இருக்கும் போது தான் மட்டுமே காயப்பட்டதாக நினைத்து முகத்தை திருப்பிக் கொண்டு இருந்திருக்கிறான்.

 

“சாரி”

 

“என்ன சொன்ன?”

 

“சாரி… “

 

“இத உன் அப்பா கிட்ட சொல்லு.”

 

“ம்ம்..”

 

“அவர் கிட்ட நீ சாரி சொன்னா நானும் என் சித்தப்பா கிட்ட ஹர்ட் பண்ணதுக்கு சாரி சொல்லுறேன்”

 

அர்ஜுன் முகத்தில் புன்னகை வந்தது. அவளை திரும்பி பார்க்க கண் சிமிட்டி சிரித்தாள்.

 

தொடரும்.

 

 

(ரெண்டு எபியும் ஒரே எபி தான். ஒன்னா போட தான் நினைச்சேன். பெருசா போயிடுச்சேனு பிரிச்சுட்டேன். சோ நாளுக்கு pre-final எபி வந்துடும். இன்னும் ரெண்டு எபில முடிக்கலாம்னு பார்க்குறேன். பெருசா போனா மூனு எபி வரலாம்)

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்