அர்ஜுன் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்க “கிளம்பிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே அம்ரிதா வந்து நின்றாள்.
“எவ்வளவு சந்தோசமா சொல்லுற? நான் கிளம்புறேன்னு சோகமா இல்ல?”
“சோகமா?” என்று அவள் முழிக்க “உன் கிட்ட போய் இதெல்லாம் எதிர் பார்க்குறேன் பாரு.. என்னைச் சொல்லனும்” என்று திரும்பிக் கொண்டான்.
உடனே சிரித்தவள் “உன் கிட்ட ஒன்னு கேட்கவா?” என்றாள்.
“கேளு”
“என்ன ஏன் லவ் பண்ணுற?”
“சொல்லட்டா?”
“ம்ம்.. ம்ம்”
“சொல்லட்டா?”
“சொல்லேன்டா”
“மாட்டேன்”
அம்ரிதா அவனை முறைக்க “நீயே கண்டு பிடி. இல்லனா நான் மூனு மாசம் கழிச்சு வந்து கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் சொல்லுறேன்” என்றான்.
கல்யாணம் என்ற வார்த்தையில் அம்ரிதா முகத்தை மூடிக் கொள்ள சிரிப்போடு அவள் தலையை பிடித்து ஆட்டினான்.
“நீ இப்போ காலேஜ் எல்லாம் சேர வேணாம். உன்ன அங்க கூட்டிட்டு போய் படிக்க வைக்கிறேன்”
“என்ன படிக்க வைக்க உன் கிட்ட பணம் இருக்குமா?”
“உனக்கு இல்லாம வேற யாருக்கு இருக்கும்?”
“நல்லா பேசுற…”
“சரி .. ஹெல்ப் பண்ணு.. லேட் ஆகுது” என்று கூறி இருவரும் அவனது உடைமைகளை சரி படுத்தினர்.
அர்ஜுனும் கல்யாணியும் கிளம்பிச் சென்றுவிட்டனர். அதற்கு முன் கல்யாணி தனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு செயினை அம்ரிதாவிற்கு போட்டு விட்டார். கிட்டத்தட்ட திருமணம் பேசி முடித்த நிலைக்கு வந்து விட்டது. மூன்று மாதம் கழித்து அர்ஜுன் வந்ததும் நிச்சயமும் திருமணமும் ஒன்றாக வைத்துக் கொள்ளாமல் என்று முடிவு செய்தனர்.
அப்படியே நடந்து இருந்தால் இப்போது அம்ரிதா இரண்டு குழந்தைக்கு தாயாக தன் கனவுகளை நிறைவேற்றி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருப்பாள். தெய்வம் அவர்களுக்கு வேறு ஒன்றை வைத்து இருந்தது.
அவர்கள் கிளம்பிச் சென்ற ஒரு மாதம் வரை பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதன் பிறகு திடீரென சரவணனின் உடல் மோசமாக ஆரம்பித்தது.
அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை. அவரை பார்ப்பதற்கும் செலவு செய்வதற்குமே நேரம் சரியாக இருந்தது. அன்பரசி கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சேமிப்பு கற்பூரமாக கறைந்து விட்டது.
கணவனுக்காக மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் ஓட வேண்டியிருந்தது. வரவே இல்லாத செலவு அவர்களை மூச்சு முட்ட வைத்தது.
அம்ரிதா அர்ஜுன் சொல்வதற்காக என்றாலும் வீட்டின் நிலையை மனதில் கொண்டு மேலும் படிப்பை தொடர நினைக்கவில்லை.
இப்போது நிலைமை மோசமாக அன்பரசியின் வேலையை அவள் கையில் எடுத்துக் கொண்டாள். அவர் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை.
அவளே தையல் வேலை வீட்டு வேலை என்று ஓடி ஓடிப்பார்க்க அன்பரசிக்கு கணவனை கவனிப்பது மட்டுமே மிஞ்சியது.
ஒரு மாதமாக போராடியும் மருத்துவ செலவு கை மீறிப்போனது. அதை ஈடு கட்ட அந்த ஊரில் இருக்கும் ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கினார்கள்.
அருகில் கல்யாணி இருந்திருந்தால் அவர் உதவி கிடைத்து இருக்கலாம். ஆனால் அவரது உதவியை அம்ரிதா ஏற்பாளா என்பது கேள்வியே.
பணத்தை வாங்கி ஓரளவு தந்தையை தேற்றி வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர். சரவணனுக்கோ மனைவியும் மகளையும் கஷ்டப்படுத்துகிறோம் என்ற குற்ற உணர்வு.
உயிர் உடனே பிரிந்து போகாதா என்று நினைக்க ஆரம்பித்து விட்டார். அது இன்னும் அவரது உடலை வருத்தியதே தவிர எதையும் சரி செய்யவில்லை.
அம்ரிதா இதை அர்ஜுனிடம் சொல்லவில்லை. அவனே தனியாக ஊரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். இதை சொல்லி கஷ்டப்படுத்த வேண்டுமா என்று விட்டு விட்டாள்.
அவன் இங்கு வந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்து அமைதியாக இருந்து விட்டாள்.
அர்ஜுன் சொன்னது போல் மூன்று மாதங்களில் திரும்பி வந்தான். வந்தவன் கல்யாணியை அழைத்துக் கொண்டு அம்ரிதாவை பர்க்கலாம். அப்படியே நிச்சயதார்த்த வேலைகளை பற்றிப்பேசலாம் என்று நினைத்தான்.
அவன் கல்யாணியை பார்க்கச் சென்ற நேரம் அவர் மயங்கிக் கிடந்தார். பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்தான். செந்தில் குமார் வெளிநாட்டில் படப்படிப்பில் இருந்தார்.
கல்யாணியை பரிசோதித்த மருத்துவருக்கு என்ன வியாதி என்றே புரியவில்லை. ஒரு முறை மூளையில் கட்டி என்றனர். ஒரு முறை உள்ளுறுப்புகள் பாதித்து உள்ளது என்றனர்.
என்னவென்று கண்டு பிடிக்கவே முடியாமல் இரண்டு நாட்கள் சென்று விட்டது. அர்ஜுன் அமைதியாக அன்னையின் அருகில் அமர்ந்து இருந்தான். இன்னும் செந்தில் குமார் வந்து சேரவில்லை.
அந்நேரம் வேறு ஒரு வதந்தி சுற்றிக் கொண்டிருந்தது. செந்தில்குமார் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் படத்தில் நாயகியாக நடிக்கும் நயனிக்கும் செந்தில்குமாருக்கும் தவறான தொடர்பு இருப்பதாக விசயம் பரவியது.
வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பவர்கள் திருமணமே செய்து கொண்டனர் என்று சிலர் கூறி விட்டனர். அன்னையின் நிலை ஒரு பக்கம் என்றால் மீண்டும் இது போன்ற விசயங்களை கேட்டு அர்ஜுன் பலமாக பாதிக்கப்பட்டான்.
இன்னும் அவர் வந்து சேராதது வேறு அவனது கோபத்தை அதிகபடுத்திக் கொண்டே இருந்தது. கல்யாணி மகனின் முகத்தை பார்த்தார்.
அவன் முகத்திலிருந்தே மனதை படித்தவர் அவன் தலையை தடவிக் கொடுத்தார்.
“அர்ஜுன்.. அப்பா மேல கோபமா?”
“…”
“கோப படாத பா.. பாவம் அவரு”
“நீங்க நிறைய பேச வேணாம். தூங்குங்க மா”
“ம்ஹும்.. உனக்கு இத சொல்லி தான் ஆகனும். எனக்கு ஏற்கனவே இப்படி ஒன்னு என் உடம்புல இருக்க விசயம் தெரியும்”
அதிர்ந்து போய் பார்த்தான் அர்ஜுன்.
“அப்புறம் ஏன் மா அப்பவே சொல்லல?”
“அப்பவே சொல்லி இருந்தாலும் எதுவும் பண்ணி இருக்க முடியாது. என் பெரியப்பா பையன் இதே மாதிரி என்ன வியாதினே தெரியாம இருபது வயசுல செத்துட்டான். கொஞ்ச நாளா எனக்கு மயக்கம் வாந்தினு வரும் போதே அந்த வியாதி தான் எனக்கும் வந்துடுச்சுனு புரிஞ்சுடுச்சு”
“ம்மா..”
“உன் அம்மா ஆயுசு அவ்வளவு தான் அர்ஜுன்”
“அப்படிலாம் சொல்லாதீங்கமா”
“சரி வருத்தபடாத.. சொல்லல. ஆனா நீ அம்ரிதாவ கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறது தெரிஞ்சப்போ எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்துச்சு தெரியுமா?
அம்ரிதா ரொம்ப நல்ல பொண்ணு. நீ அவ கிட்ட பேசும் போது தான் நிறைய சிரிப்ப சந்தோசமா இருப்ப. அவளும் உன் கிட்ட சண்டை போட்டாலும் பேசாம இருக்க மாட்டா. உங்கள பார்க்கும் போது மனசு நிம்மதியா இருக்கும். உன்ன அம்ரிதா சந்தோசமா பார்த்துப்பா. அது மட்டும் நிஜம்.”
“ம்ம்..”
“அந்த பொண்ணுக்கு உன் அப்பாவ ரொம்ப பிடிக்கும். ஆனா சார்னு தான் கூப்பிடுவா. என் கிட்ட மட்டும் பாசமா இருப்பா. அத்த அத்தனு ஓடி வருவா. உரிமையா பேசுவா. பார்க்கும் போதே ஆசையா இருக்கும். உன் வாய உடைச்சப்போ எனக்கு கோபம் தான். ஆனா அத அவ நேர்மையா ஒத்துக்கிட்டு சாரி சொல்லும் போது ரொம்ப நல்ல பொண்ணுனு தோனுச்சு. என்னைக்கும் அவள விட்ராத அர்ஜுன். அவள விட சிறப்பா உனக்கு ஒரு பொண்ண என்னால கூட தேட முடியாது”
“மாட்டேன் மா”
“அப்பாவயும் விட்ராத. அவரும் பாவம்”
“…”
“அப்பா பத்தி தப்பா நினைக்கிறியா? அவர் என்ன தவிர வேற எந்த பொண்ணையும் திரும்பி பார்க்க மாட்டார். நீ எப்படி அம்ரிதா கிட்ட காதல சொன்னியோ அதே மாதிரி தான் என் கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டாரு. அப்போ இருந்து இப்போ வர அவரோட மனசுல நான் மட்டும் தான் இருக்கேன். அது என்னைக்குமே மாறாது.”
“…”
“அவர் சினிமால இருக்கது உனக்கு பிடிக்கல தான?”
“ஆமா.. அந்த சினிமா தான் எல்லாத்துக்கு காரணம். கேட்டாலே எரிச்சலா இருக்கு”
“ஆனா அது தான் உன் அப்பாவோட கனவு ஆசை எல்லாம். அத எப்படி விடுவாரு?”
“ஆனா அதுல இருக்க வரை நிம்மதியா வாழ விட மாட்டிறாங்களே”
“அதுல மட்டும் தான் பிரச்சனை வருமா? இதோ.. அம்ரிதாவோட அப்பா.. ஒரு கம்பெனில இன்ஜினியர் தான். ஆனா அவர அசைய விடாம வாழ்க்கை படுக்க வச்சுடுச்சுல. எல்லா வேலையிலையும் பிரச்சனை இருக்கு. பிரச்சனைக்கு பயந்து நம்ம கனவ விட்டுற முடியுமா?
அப்புறம் வாழுறதுல என்ன அர்த்தம் இருக்கு? நீ கூட உனக்கு பிடிச்சத படிச்சுட்டு வேலைக்கு போயிட்ட. அவ்வளவு தூரம் போய் வேலை பார்க்காத ஆபத்துனு சொன்னா வேலைய விட்டுட மாட்டியே
அப்போ நீ சின்ன பையன். உனக்கு எத சொல்லுறது எத விடுறதுனு கூட எங்களுக்கு தெரியல. அதுனால தான் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனோம். இப்போ நீ வளர்ந்துட்ட. உனக்கே நிறைய விசயம் புரியும். உன் அப்பாவயும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு”
கல்யாணி அதோடு முடித்து விட்டு கண்ணை மூடி படுத்துக் கொண்டார். அடுத்த நாள் செந்தில்குமார் வந்து சேர்ந்தார். அவரிடமும் எதோ பேசினார். அதன் பிறகு கல்யாணியால் தொடர்ந்து பேச முடியவில்லை. அடுத்த இரண்டு நாட்களில் அவரது உயிர் பிரிந்து விட்டது.
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த விசயங்கள் அர்ஜுனை நிலைகுலைய வைத்தது. முதல் நாள் தான் அம்ரிதாவிற்கு கல்யாணிக்கு உடல் நிலை சரியில்ல என்ற செய்தி சென்று சேர்ந்தது. அடுத்த நாளே அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்து போய் விட்டாள்.
அவளுடைய தந்தை இருக்கும் நிலையில் அன்பரசி கிளம்ப முடியாது. ஆனால் அர்ஜுன் என்ன ஆனானோ என்று தெரியாமல் அம்ரிதாவால் இருக்க முடியவில்லை. மஞ்சுளாவின் குடும்பம் கிளம்ப அவர்களோடு அம்ரிதாவை அனுப்பி வைத்து விட்டார் அன்பரசி.
அங்கு சென்றதும் அம்ரிதா அர்ஜுனிடம் ஓடிப்போய் கையை பிடித்துக் கொண்டாள். இறுகிப்போய் துக்கம் தொண்டை அடைக்க நின்று இருந்தவன் அம்ரிதா கையை பிடித்ததும் திரும்பி பார்த்தான்.
அவளை பார்த்ததுமே கண்கலங்க ஆரம்பித்து விட வேகமாக குனிந்து கொண்டான். அவனை விட்டு அம்ரிதா அசையவே இல்லை.
வந்தவர்கள் எல்லோரும் அமைதியாக மாலை போட்டு விட்டுச் சென்றால் உண்ட உணவு செரிக்காமல் போய் விடும் என்று வாய்க்கு வந்ததை பேசினர்.
சிலர் செந்தில்குமாருக்கும் நடிகை நயனிக்கும் இருந்த தொடர்பு தெரிந்ததால் கல்யாணி உயிரை விட்டு விட்டார் என்றனர். சிலர் கல்யாணியை செந்தில் குமாரே கொன்று விட்டார் என்றனர்.
நயனியை திருமணம் செய்ய தடையாக இருப்பதால் செந்தில்குமார் அவருடைய மனைவியை விசம் வைத்து கொன்று விட்டார் என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் பேச ஆரம்பித்தனர்.
இத்தனையும் கேட்டபின்பு அர்ஜுனின் மனதில் மறைந்து கிடந்த பழைய நினைவுகள் வெளியே வர ஆரம்பித்தது. கோபம் அதிகமாக எல்லோரிடமும் கத்த வேண்டும் போல் தோன்றியது.
அம்ரிதா அவனது கையை விடாமல் பிடித்துக் கொண்டு நின்றிருந்தது தான் அவனை கட்டு படுத்தியது. அவனும் முடிந்தவரை அமைதியை இழுத்துப் பிடித்தான்.
இது எதையுமோ உணராமல் அருமை மனைவியை இழந்ததில் இடிந்து போய் அமர்ந்து இருந்தார் செந்தில்குமார். அவருடைய அன்பு மனைவி. உலகமே எதிராக நின்றாலும் அவருக்கு துணையாக நின்ற மனைவி. இன்று அவளை இழந்து விட்டார்.
கூடவே தன் உயிரையும் எமன் பறித்திருக்க கூடாதா என்று மனதில் புலம்பலோடு அமர்ந்து இருந்தார். இது எதுவும் தெரியாதவர்கள் வாய்க்கு வந்ததை பேசி விட்டு சென்று விட்டனர்.
கல்யாணியின் உடல் தகனத்திற்கு சென்றது. அர்ஜுன் கொல்லி வைத்து விட்டு வந்தான். எல்லோருமே உடனே கிளம்ப அம்ரிதாவிற்கு கிளம்ப மனம் இல்லை. அன்னையிடம் பேசி விட்டு மஞ்சுளாவின் குடும்பத்தை மட்டும் அனுப்பி விட்டாள். நாளை அர்ஜுனோடு கிளம்பி வந்து விடுவதாக கூற அன்பரசி அனுமதித்து விட்டார்.
எல்லோருமே கிளம்பிச் சென்று விட வீட்டில் இருந்தது இரண்டு வேலை செய்யும் ஆட்கள் மற்றும் அர்ஜுன், அம்ரிதா, செந்தில் குமார் மட்டுமே.
அர்ஜுன் இரவு வீட்டிற்கு வந்து யாரிடமும் பேசாமல் அறையில் அடைந்து கொண்டான்.
அடுத்த நாள் அதிகாலையிலேயே வீட்டை விட்டு கிளம்பியவன் இரவு வரை வரவேயில்லை. அம்ரிதா வீட்டுக்கும் வாசலுக்கும் பல முறை நடந்து இருப்பாள்.
ஒரு வழியாக அர்ஜுன் வந்து சேர்ந்தான். அவனை பார்த்தும் வேகமாக ஓடினாள்.
“டேய்.. எங்க போன? எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே அருகில் சென்றவள் அவனது முகத்தை பார்த்து விட்டு அப்படியே நின்று விட்டாள்.
“அர்ஜுன் குடிச்சியா?” என்று கேட்க அவன் குற்ற உணர்வில் பார்வையை தாழ்த்திக் கொண்டான்.
“உன் கிட்ட தான் கேட்குறேன். குடிச்சியா?”
“…”
“பதில் சொல்லித் தொலை” என்று அவள் கத்த செந்தில் குமார் வேகமாக அறையை விட்டு வந்தார்.
“சொல்லுடா… வாய்ல என்ன வச்சுருக்க?”
அர்ஜுன் விழி நிமிர்த்தாமல் “ஆமா” என்றான்.
அவனது சட்டையை பிடித்தவள் ஓங்கி அறைந்து விட்டாள். அவள் அடித்த அடியில் அர்ஜுனுக்கு தலை சுற்றியது. ஏறியிருந்த மது போதை மொத்தமாக இறங்கி விட்டது.
“போடா வெளிய”
“அம்மு..”
“இந்த வாயால என் பேர சொல்லாத.. போ வெளிய”
செந்தில் குமார் எதோ பேச வர “நீங்க பேசாதீங்க.. இந்த குடிகாரனுக்கு வீட்டுல இடம் கிடையாது. வெளிய போ” என்றாள்.
அர்ஜுன் அசையாமல் நிற்க சட்டையை பிடித்து இழுத்துச் சென்று கதவிற்கு வெளியே தள்ளி விட்டாள். விழப்போனவன் சுவரை பிடித்து நின்றான்.
“வீட்டுக்குள்ள வந்த கொன்னுடுவேன்.” என்று கூறியவள் செந்தில்குமாரிடம் “அவன உள்ள விடாதீங்க” என்றாள்.
பிறகு விறுவிறுவென சமையலறை பக்கம் சென்றாள். கோபம் குறைய தண்ணீரை குடித்து பார்த்தாள். அது முடியாமல் போக அங்கேயே அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.
கல்யாணி இறந்ததற்கும் இப்போது நடந்ததற்கும் சேர்த்தே வாய் விட்டு அழுதாள்.
செந்தில் குமார் வாசலில் அமர்ந்து இருக்கும் மகனையும் சமையலறையில் அழுது கொண்டிருக்கும் அம்ரிதாவையும் நினைத்து நொந்து போனார்.
அவருக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. அங்கேயே அமர்ந்து விட்டார். பத்து நிமிடத்திற்கு பின் அம்ரிதா அழுது முடித்து விட்டு முகத்தை கழுவிக் கொண்டு வந்தாள்.
“சாப்பிடுறீங்களா மாமா?”
“வேணாம் மா”
“அப்போ நான் பால் கொண்டு வரேன். அத குடிங்க. நீங்களும் சாப்பிடாம இருந்து அத்த மாதிரி பாதில விட்டுட்டு போகாதீங்க. நீங்களாவது எங்க கூட கடைசி வர இருங்க”
அவரது பதிலை எதிர் பார்க்காமல் சென்று பாலை எடுத்து வந்தாள். அவளுக்காக குடித்து முடித்தார்.
“படுத்து தூங்குங்க. மன பாரம் குறையும்” என்று கூறி விட்டு சென்று விட்டாள்.
அங்கிருந்த புத்தகங்களில் ஒன்றை கையில் எடுத்தாள். அதை எடுத்துக் கொண்டு வெளியே வர அர்ஜுன் படியில் அசையாமல் அமர்ந்து இருந்தான்.
அவனை கண்டு கொள்ளாமல் புத்தகத்தை பிரித்து படித்தாள். அது கதை பத்தகம் இல்லை. ஆனால் அதை படித்து தன்னை நிதான படுத்தினாள். கழுத்து வலி வரவும் மூடி விட்டு நிமிர்ந்தாள். அர்ஜுன் அப்போதும் அசையாமல் அமர்ந்து இருந்தான்.
உடனே எழுந்து வந்து அவன் முன்னால் கையை கட்டிக் கொண்டு நின்றாள்.
“சாரி..”
“ஏன் பண்ண?”
“இல்ல அம்மு.. நான் எதுவுமே பண்ணல”
“பின்ன?”
“என் காலேஜ் ஃப்ரண்ட் எல்லாம் என்ன கூட்டிட்டு போனாங்க. எங்கனு சொல்லவே இல்ல. அங்க போனப்புறம் தான் பார்னு தெரிஞ்சது. நான் ட்ரின்க் பண்ண மாட்டேன்னு சொன்னேன். சரி ஜுஸ் குடினு சொல்லி… அதுல மிக்ஸ் பண்ணி கொடுத்துட்டானுங்க”
“இடியட்ஸ்”
“பாதில வித்தியாசம் தெரிஞ்சுடுச்சு. ஆனாலும் எதோ ஒரு கோபத்துல மொத்தமா குடிச்சுட்டேன். சாரி”
“லூசு.. நீ ஒரு லூசு உன் ஃப்ரண்ட்ங்க ஒரு லூசு. பிடிக்கலனு சொன்னா விட வேண்டியது தான… அதென்ன தெரியாம அவங்களுக்கு மிக்ஸ் பண்ணி கொடுக்குறது? கேட்டா ஃபன் தானேனு சொல்லுங்க. ஃபன்க்கு ரோட்டுல இருக்க எதையோ அவங்க சாப்பாட்டுல கலந்து கொடுத்தா சாப்பிடுவாங்களா?”
“சாரி”
“பேசாத.. இப்படி ஒரு ஃப்ரண்ட் இனி உனக்கு இருந்தாங்க கொன்னுடுவேன் உன்ன”
“அவனுங்க என்ன உளற வைக்க ட்ரை பண்ணானுங்க. என் குடும்ப பிரச்சனைய நான் உளறனும்னு எதிர் பார்த்தானுங்க”
“இப்படி ஒரு ஃப்ரண்ட எங்க இருந்து பிடிச்ச? அசிங்கம் பிடிச்சவனுங்க. இனி அவங்க கிட்ட நீ பேச கூடாது”
“ம்ம்..”
“இனி பார் பக்கம் தலை வச்சு படுக்க கூடாது”
“ம்ம்”
“மீறி போயிட்டாலும் பச்ச தண்ணி கூட குடிக்காம வந்துடனும்”
“ப்ராமிஸ்”
“போ.. பின்னாடி போய் தண்ணிய தலையில ஊத்திட்டு வா. இல்லனா வீட்டுக்குள்ள வராத”
அர்ஜுன் மறுத்து பேசாமல் அவள் சொன்னதை செய்தான். தண்ணீரை ஊற்றிக் கொண்டு வந்து நடு வீட்டில் நிற்க “உள்ள போய் தலைய துவட்டிட்டு வேற ட்ரஸ் போட்டுட்டு வா” என்றாள்.
அதையும் தட்டாமல் செய்தான். வந்தவனுக்கு சூடாக பாலை கொடுத்தாள்.
“குடி அப்போ தான் சளி பிடிக்காது” என்க கேள்வியே கேட்காமல் குடித்து விட்டான்.
அவனது தலையை தொட்டு பார்த்தவள் “ஈரமா இருக்கு.. நல்லா துடை” என்று டவலை கொடுத்தாள்.
அவன் துடைக்க “துடைச்சுட்டு போய் தூங்கு” என்று கூறி திரும்ப கையை பிடித்துக் கொண்டான்.
“கொஞ்ச நேரம் பேசிட்டு இரேன்”
அம்ரிதா சோபாவில் அமர்ந்து கொள்ள அருகே அவனும் அமர்ந்து கொண்டான்.
“நீ ஊருக்கு போயிருப்பனு நினைச்சேன்”
“அப்படி போயிருந்தா நீ குடிச்சுட்டு வந்து படுத்துருப்ப. அப்புறம் அதுவே பழகி கெட்டு குட்டிச்சுவராகி இருப்ப.. அப்படி தான?”
“அய்யோ தெரியாம நடந்துடுச்சுடி. இத்தனை வருசத்துல இந்த கருமத்த எல்லாம் நான் தொட்டு பார்த்து இருக்கியா?”
“ஆனா இன்னைக்கு நடந்துடுச்சே.. ஒரு கொலைய பண்ணிட்டு இத்தனை நாள் கொலை பண்ணி இருக்கனா? இன்னைக்கு மட்டும் தெரியாம நடந்துடுச்சுனு சொன்னா தப்பு சரியா போயிடுமா?”
“எக்ஸாம்பிள் கூட கொலை தானா? கொலைகாரி”
“குடிகாரா”
“போதும் விட்ரு”
அம்ரிதா அவன் முடியை தொட்டு பார்த்தாள். இன்னும் ஈரம் மிச்சம் இருக்க துண்டை தூக்கி அவன் தலையில் போட்டாள்.
“இத கூட ஒழுங்கா செய்ய தெரியல” என்று அவளே துடைக்க அர்ஜுன் அமைதியாக இருந்தான்.
“என்ன விட்டு அம்மா போயிட்டாங்க அம்மு”
“அப்படினு யாரு சொன்னா? இங்க தான் இருப்பாங்க. எங்கயாவது நின்னு பார்த்துட்டே இருப்பாங்க”
“ப்ச்ச்”
“நம்பலையா? உனக்கு இந்த மாமியாருங்கள பத்தி தெரியாது. எங்கயாவது நின்னு பார்த்துட்டே இருப்பாங்க. நான் சரியா துவட்டி விடலனு வை கனவுல வந்து இது கூட என் பிள்ளைக்கு ஒழுங்கா செய்ய மாட்டியானு சண்டை போடுவாங்க”
அர்ஜுன் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது. கூடவே கண்ணும் கலங்கிப் போனது. அவள் துண்டை விலக்கப்போக கையை பிடித்து விட்டான்.
அப்படியே அவள் தோளில் சாய்ந்தவன் “நான் கொஞ்சம் அழட்டுமா?” என்று கேட்டான். கேட்கும் போதே அவன் குரல் உடைந்து விட வேகமாக அணைத்துக் கொண்டாள்.
அம்ரிதாவின் தோளில் சாய்ந்து இருந்தவனின் முகத்தை துண்டு மறைத்து இருந்தது. அதே நிலையில் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தான்.
அம்ரிதாவிற்கும் கண்கலங்கி விட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி கண்ணீர் வடித்தனர். ஆண் பிள்ளை எல்லோர் முன்பும் கரைந்து விடக்கூடாது என்ற தடையெல்லாம் இப்போது அடி பட்டுப்போக அர்ஜுன் பறி கொடுத்த அன்னையை நினைத்து அழுது விட்டான்.
அம்ரிதாவின் கழுத்தில் இன்னமும் இருந்த அந்த சங்கிலியை பிடித்துக் கொண்டு அவளும் அழுதாள். அழுது அவர்களாகவே ஓய்ந்து விட்டனர்.
கண்ணை துடைத்துக் கொண்டு அர்ஜீன் நிமிர்ந்து அமர்ந்தான். பிறகு இருவருமே சென்று முகத்தை கழுவினர்.
“இனி தூங்கு. முழிச்சு இருக்காத” என்று கூற அர்ஜுன் மீண்டும் அவள் கையை பிடித்துக் கொண்டான்.
“ப்ளீஸ் என் கூடவே இரேன்”
“ராத்திரி எல்லாமா?”
“ஆமா.. என் கூட தூங்கு”
“ஹான்!”
அவசரமாக கையை உயர்த்தியவன் “தப்பா எல்லாம் கேட்கல.” என்றான். அம்ரிதாவின் முகத்தில் புன்னகை வந்தது.
“இப்ப என்ன பண்ணனும்? நான் உன் கூட தூங்கனுமா? இல்ல நீ என் கூட தூங்க போறியா?”
“ரெண்டுமே கஷ்டம்ல” என்றவனின் முகம் சுருங்கி விட்டது. அம்ரிதாவும் என்ன செய்வது என்று யோசித்தாள்.
அர்ஜுன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டது இரண்டு பெரிய சோபாக்களை ஒன்றை ஒன்று பார்ப்பது போல் இழுத்து போட்டு விட்டான். இடையில் டீபா இருந்தது. தலையணை போர்வை எல்லாவற்றையும் எடுத்து வந்தவன் அம்ரிதாவை படுக்கச்சொல்லி போர்த்தி விட்டான். அவளை பார்ப்பது போல் அவனும் படுத்துக் கொண்டான்.
அவன் அம்ரிதாவை பார்த்துக் கொண்டே இருக்க “இப்படியே பார்த்துட்டே இருந்தா எனக்கு எப்படி தூக்கம் வரும்?” என்று கேட்டாள்.
“நீ கண்ண மூடி தூங்கு. நானும் தூங்கிடுவேன்”
“சரி” என்று கண்ணை மூடிக் கொண்டாள். மன உளைச்சல் களைப்பு எல்லாம் அம்ரிதாவை சீக்கிரத்தில் தூக்கத்தில் ஆழ்த்தியது. அவளை பார்த்துக் கொண்டே படுத்திருந்த அர்ஜுனுக்கு கல்யாணி சொன்னது ஞாபகம் வந்தது.
‘இவ நிஜம்மாவே பொக்கிஷம் மா. என்னைக்கும் விட்டுற மாட்டேன்’ என்று நினைத்துக் கொண்டான்.
அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கும் தூக்கம் கண்ணை சுழட்ட நிம்மதியாக தூங்கி விட்டான்.
அவர்கள் தூங்கியப்பின் செந்தில்குமார் எழுந்து வந்தார். இவ்வளவு நேரம் அவர் தூங்கவில்லை. அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே தான் இருந்தார். இருவரின் வாழ்வும் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளாக மாறி விட்ட தன் மனைவியிடமே கேட்டுக் கொண்டார்.
தொடரும்.