கிழக்கு வெளுக்கத்தொடங்கும் வேளையது. வண்ண வண்ண முகில்களுக்குப் பின்னிருந்து பூமியை எட்டிப்பார்த்து சிரித்த ஆதவன் தனது மின்மினிக் கதிர்களை பார் எங்கும் பரப்பிட, அவன் சிமிட்டிய கதிர்களில் சில அந்த வீட்டின் சாளரத்தின் வழி உட்புகுந்து பஞ்சு மெத்தையில் சுகமாய் துயில் கொண்டிருந்தவனின் தேகத்தை தீண்ட, காலை நேர இளங்குளிரில் குறுக்கிக்கொண்டு படுத்திருந்தவனுக்கு அந்த இதமான வெம்மையில் இதழ்களின் ஓரம் புன்னகை அரும்ப சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தமர்ந்தான் கார்த்திக்.
கண்களை கசக்கிக்கொண்டு நேரத்தை பார்த்தவன் மணி ஆறாகியிருக்க எழுந்து சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவன் கிச்சனுக்கு சென்று காலை உணவாக தோசையும் சட்னியும் செய்து, உண்டது போக மீதியை பிரிட்ஜில் எடுத்து வைத்துவிட்டு கிச்சனை சுத்தப்படுத்திக்கொண்டு அறைக்கு வந்தவன் பாத்ரூம் சென்று குளித்து பிளாக் கலர் பான்டும் இள ஊதா நிற முழுக்கை சேர்ட்டும் அணிந்துகொண்டு நிலைக்கண்ணாடி முன் வந்து நின்றான். அவன் அணிந்திருந்த சேர்ட் அவனது வெள்ளை வெளீரென்ற சருமத்திற்கு எடுப்பாக இருக்க, தான் அணிந்திருந்த சேர்ட்டை பான்டினுள் டக்கின் செய்து சேர்ட்டிற்கு பொருத்தமான கலரில் டை கட்டி கைக்கடிகாரத்தையும் எடுத்து அணிந்து கொண்டவன் தனது சுருள் சுருள் கேசத்தை அழகாக வாரி அலுவலகத்துக்கு தயாராகினான்.
தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டவன் அறையை விட்டு செல்லும் முன் ரெசிங் டேபிள் மேல் இருந்த போட்டோ பிரேமை கையில் எடுத்து அதில் மகாலட்சுமியை போன்று வதனத்தில் காருண்யத்துடன் தோற்றமளித்த தனது தாய் மீனாட்சிக்கும் அவர் தனது கரத்தில் தூக்கிவைத்திருந்த அந்த குட்டி தேவதைக்கும் வாஞ்சையுடன் முத்தம் கொடுத்தவன் அந்த போட்டோ பிரேமை இருந்த இடத்தில் வைத்துவிட்டு தனது தோள் பையையும் கார் சாவியையும் எடுத்துக்கொண்டு தான் தங்கியிருந்த வீட்டைப் பூட்டிவிட்டு தனது BMW காரை கிளப்பிக்கொண்டு அலுவலகம் சென்றான்.
பாண்டிச்சேரியின் சனநெரிசல் இல்லாத சாலையில் காரின் fm இல் ஒலித்த பாடலுக்கேற்ப சீல் அடித்துக்கொண்டே காரை செலுத்திக்கொண்டு தான் பணிபரியும் வங்கிக்கு வந்து சேர்ந்தவன் காரை பார்க் பண்ணி விட்டு வங்கியினுள் நுழைந்து அங்கு இருந்த மற்றைய ஊழியர்களுக்கு சம்பிரதாயப்படி வணக்கம் வைத்துவிட்டு தனது இடமான கஷியர் செக்சனில் வந்து அமர்ந்தான்.
அப்போதே எட்டு மணி ஆகியிருக்க கம்பியூடரை ஆன் செய்து தனக்கு தேவையானற்றை எடுத்து வைத்து ஒழுங்கு படுத்தியவன் கவுன்டர் ஓபன் என்ற கட்டையையும் தூக்கி தன் முன்னால் வைக்க எட்டரை மணிக்கு வங்கியும் திறக்கப்பட்டு வாடிக்கையாளர் சேவையும் ஆரம்பமானது.
கார்த்திக் ஆறடி உயரம் கொண்ட ஆளுமை நிறைந்த ஆண்மகன் தான்.. நவீன கலாச்சாரத்தில் ஆண்களுக்கு இலக்கணம் கூறும் பெண்கள் கூட அவனை கண்டால் அசந்து தான் போவர். அவனது கம்பீரத்தில் அல்ல… கண்ணியமான தோற்றத்தில். புன்னகைக்கு சொந்தக்காரன் என்று ஊழியர்களே கிண்டல் செய்யும் அளவு எப்போதும் அவனது உதடுகளில் கலப்படமில்லாத புன்னகை ஒட்டிக்கொண்டிருக்கும். வாடிக்கையாளர்களிடம் இதமாகவும் பணிவாகவும் நடந்து கொண்டு அவர்களின் நற்பெயரை சம்பாதித்ததாலேயே மூன்று வருடங்களாக மேனேஜர் அவனுக்கு கஷியர் செக்சனை பட்டா போட்டுக்கொடுத்துவிட்டார்.
என்றும் போல் தனது வேலையை சோர்வின்றி செய்து கொண்டிருந்தவன் மதியம் இரண்டு மணிக்கு கஸ்டமர் சேர்விஸ் குலோஸ் ஆனதும் கிடைத்த இடைவேளையில் கான்டினுக்கு செல்ல எழுந்தவனின் போன் அடிக்க எடுத்துப்பார்த்தவன் அவனது தந்தை அழைப்பதை கண்டு முகம் மலர கூடவே யோசனையுடன் போனை அட்டெண்ட் செய்து காதில் வைத்தவன் “ப்பா.. என்னப்பா.. வழக்கமா நீங்க வேல நேரத்தில எடுக்க மாட்டீங்களே… ஏதாவது முக்கியமான விசயமா…” என கேட்க
“ஆமாடா.. முக்கியம் தான்.. நீ உடனே கிளம்பி சென்னைக்கு வாடா…” என்று மறுமுனையில் அவனது தந்தை சுந்தரம் பதட்டமாக பேச
அதில் புருவங்கள் முடிச்சிட “என்னப்பா… என்னாச்சு… ஏன் இவ்வளவு டென்சனா பேசுறீங்க… ஏதாவது பிரச்சனையா…” என்றவனுக்கும் சற்றே பதற்றம் தொற்றிக்கொள்ள,
“கா..கார்த்தி…. நம்ம ஐயாவுக்கு கார்ட் அட்டாக்டா…..” என்று சுந்தரம் நடுக்கத்துடன் கூற
தந்தை கூறிய செய்தியில் கார்த்திக் அதிர்ந்துதான் போனான்.
“அப்பா! அப்பா நீங்க என்ன சொல்றீங்க… அங்கிளுக்கு என்ன ஆச்சு… அவரு நல்லாத்தானே இருந்தாரு….”
“எனக்கும் தெரியலடா.. நேத்து ஹோட்டல்ல இருந்து நான் தான் அவர கூட்டிட்டு வந்தேன்.. அப்ப நல்லாத்தான் இருந்தாரு.. திடீர்னு என்னாச்சுன்னு எனக்கே தெரியலடா… கார்த்தி எனக்கு படபடப்பா வருதுடா.. நீ இப்பவே கிளம்பி வா….”
“சரிப்பா நீங்க டென்சன் ஆகாதீங்க… நான் உடனே கிளம்பி வரன்” என்றவன் சிறிதும் தாமதிக்காது மேனேஜரிடம் சென்று அவசரமாக சென்னைக்கு புறப்படுவதாக கூறி விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவன் தனது உடமைகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சென்னைக்கு பயணமானான்.
நாராயணன் சென்னையில் உள்ள முக்கிய புள்ளிகளில் ஒருவர்… சென்னை, கோயம்பத்தூர், திருநெல்வேலி, மதுரை என்று தமிழ் நாட்டில் பல இடங்களில் அவரது ரெஸ்டாரன்டுகள் எழும்பி நிற்கின்றன.
கார்த்திக் பிறந்த கையோடு வேலை தேடி சென்னைக்கு சென்ற சுந்தரம் நாராயணனிடம் தான் கார் ட்ரைவராக வேலைக்கு சேர்ந்து கொண்டார். அப்போது தான் தனது தொழிலில் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்த நாராயணன் தனது தொழிலை விஸ்தரிப்பதற்கு ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்ததில் சுந்தரமும் தனது சொந்த ஊருக்கு வரமுடியாமல் போனது… அடுத்து வந்த மூன்று வருடங்களும் முழுமூச்சாக போராடியதற்கு பலனாக நாராயணன் சென்னையில் பிரபலமான தொழிலதிபராக உருவாகினார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் சுந்தரம் நம்பிக்கைக்குரிய வேலைக்காரனாகவும் நெருக்கத்துக்குரிய நபராகவும் நாராயணனின் மனதில் இடம்பிடிக்க, சுந்தரமும் முதலாளி முதலாளி என்று அவருக்கு விசுவாசமான தொழிலாளியாக மாறிப்போனார். அதன் பயனாக சுந்தரத்தின் குடும்பத்தையும் ஊரில் இருந்து அழைத்து வந்து தனது அவுட்ஹவுசிலேயே தங்குமாறு நாராயணன் கூறி விட முதன்முதலாக தாயின் கரம்பிடித்து சென்னைக்கு வந்து சேர்ந்தான் கார்த்திக்.
அப்போது அவனுக்கு வயது மூன்று.. அவனது தாய் மீனாட்சி அந்த மாளிகை போன்ற வீட்டிலேயே சமையல் வேலைக்குச் சேர்ந்து விட கார்த்திக் சென்னையிலேயே பள்ளிப்படிப்பை ஆரம்பித்தான்.
நாராயணனே கார்த்திக்கை நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்து அவனது படிப்பு செலவை பொறுப்பெடுத்துக்கொண்டார். முதலாளி தொழிலாளி என்ற வேறுபாடு பார்க்காது அவர் சுந்தரத்தின் குடும்பத்தை அக்கறையாக பார்த்துக்கொள்ள தந்தையைப்போல் அவனும் சிறுவயதில் இருந்தே அவருக்கு விசுவாசமானவனாக வாழத்தொடங்கினான்.
நாராயணனுக்கும் கார்த்திக் என்றால் கொள்ளை பிரியம்… அவர் பார்த்து வளர்ந்த குழந்தையல்லவா.. அவனுக்கு ஆசையாக அனைத்தையும் செய்தார். சுந்தரம் தயக்கத்துடன் மறுக்கும் வேளையில் கூட எனக்கு செய்ய உரிமையில்லையா என்று கேட்டு அவர் வாயையும் அடைத்து விடுவார்.
இப்படியாக தந்தை தாயின் பாசம்மிக்க வளர்ப்பிலும் நாராயணனின் வழிகாட்டலிலும் ஒழுக்கத்துடனும் நல்ல குணாதிசயத்துடனும் பெற்றோர் பெருமை கொள்ளும் அளவு வளர்ந்து வந்த கார்த்திக் பரீட்சையில் நல்ல மதிப்பேறு பெற்று கல்லூரியிலும் கால் பதிக்க, ஒரேயொரு குறையை தவிர்த்து அழகாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் பேரிடியாக அமைந்தது அவனது தாயின் இறப்பு..
மீனாட்சியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாது கார்த்திக்கும் சுந்தரமும் விக்கித்து நின்ற சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாக இருந்து அந்த நிர்க்கதியில் இருந்து மீட்டுக்கொண்டு வந்தது நாராயணன் தான்.
கல்லூரிக்கு செல்லவே மனம் வராது நாள் முழுதும் தாயின் புகைப்படத்துக்கு அருகிலேயே அமர்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த கார்த்திக்கை ஆறுதல் கூறி தேற்றி அவனை கல்லூரி படிப்பை முடிக்க வைத்தார்.
தனது வாழ்வின் இக்கட்டான நேரங்களிலெல்லாம் கை கொடுத்து தன்னை வளர்த்து விட்ட மனிதர் இன்று ஹாஸ்பிட்டலில் இருப்பதை நினைத்தவனுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது.
செல்லும் வழி முழுவதும் அவர் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று வேண்டியபடியே சென்னை வந்து சேர்ந்த கார்த்திக் வீட்டுக்கு கூட செல்லாது நேராக ஹாஸ்பிட்டலுக்கு தான் வந்தான்.
ரிசப்ஷனில் விசாரித்து ஐசியுவிற்கு விரைந்து சென்றவன், அந்த அறை வாசலிலேயே கலங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த தந்தையை கண்டு அவரிடம் ஓடிச்செல்ல மகனை கண்டவருக்கு அப்போது தான் மூச்சே வந்தது…
“அப்பா… டாக்டர் என்ன சொன்னாங்கப்பா… அங்கிள் எப்பிடி இருக்காரு…”
“ஐயா புழைச்சிட்டாருடா… டாக்டர்ஸ் பயம் இல்லன்னு சொல்லிட்டாங்க…. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும்….” என்று சிறு குழந்தையாய் விம்மியவரை தேற்றியவன் அவருடன் அந்த அறைக்குள் நுழைந்தான்.
அங்கே செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்தார் நாராயணன்.
அவரை பார்த்த சுந்தரம் அழத்தொடங்கி விட்டார். எப்போதும் கம்பீரத்துடன் வலம் வரும் முதலாளி இப்படி படுத்த படுக்கையாய் இருப்பதை அவரால் காணமுடியவில்லை. கார்த்திக்கும் அவரது நிலையை கண்டு கலங்கிப்போனான்.
இருவரும் அமைதியாக கண்மூடிப் படுத்திருந்தவரின் அருகில் சென்று அமர்ந்தனர். நள்ளிரவாகியும் இருவரும் அந்த ஹாஸ்பிட்டலிலேயே இருக்க சுந்தரம் தான் மகனது களைத்த முகத்தை பார்த்து “கார்த்தி நீ ட்ராவல் பண்ணினது டயர்டா இருக்கும்…. நீ வீட்டுக்கு போய் குளிச்சிட்டு கொஞ்சம் தூங்குபா..” என்று பரிவாக கூற
“அப்பா.. நான் எப்பிடிப்பா போவன்… பிளீஸ் அங்கிள் எந்திரிக்கற வரைக்கும் இங்கயே இருக்கன்…”
“இல்லடா.. டாக்டர் சொன்னாங்க ஐயா காலம தான் கண்ணு முழிப்பாங்கன்னு… நீ வீட்டுக்கு போய்ட்டு காலம வாடா.. நான் அதுவரைக்கும ஐயா கூட இருக்கன்…” என்று கூறியவர் வற்புறுத்தி அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தவனுக்கு உறக்கம் வராது போக நேரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் விடிந்ததும் கிளம்பி ஹாஸ்பிட்டல் சென்றான்.
அவன் செல்லும் நேரம் நாராயணன் கண்விழித்திருந்தார். அவரை கண்டவன் கண்ணீர் துளிர்க்க அவரையே பார்க்க, சுந்தரம் அவனை அங்கு இருக்கச்சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிச்சென்றார்.
மெதுவாக அவர் அருகில் வந்தவன் அமைதியாக அவருக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள அவனது கரத்தை பற்றிக்கொண்டவர் “பயந்திட்டியாப்பா…” என புன்னகையுடன் கேட்க
“ம்ம்.. ரொம்பவே..” கார்த்திக் கண்கலங்க சிறு குழந்தையாய் தலையை சரித்து கூற
அவனது பதிலில் கரத்தில் அழுத்தம் கொடுத்தவர் “அவ்வளவு சீக்கிரம்லாம் நான் போயிட மாட்டேன் பா… எனக்கு முடிக்க வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு…” அவர் தெளிவாக கூற கார்த்திக் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான்.
“எனக்கு இப்பிடி ஆனது கூட ஒரு வகையில நல்லது தான் பா..”
கார்த்திக் புரியாமல் அவரை ஏறிட சில நொடிகள் அமைதிகாத்தவர் “சுருதி வாராப்பா…” ஏக்கம் சுமந்த விழிகளுடன் ஒரு வித பரவசத்தில் அந்த பெயரை அவர் உச்சரிக்க
தன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை கேட்டவன் சிலையென சமைந்தான். அந்த நொடி பன்னிரண்டு வருட ஏக்கங்கள் அனைத்தும் அவன் முன் பிரவாகமாய் எழுந்து நிற்க அவனது உதடுகளோ “பாப்பா…”என்று முணுமுணுத்தது.
தொடரும்..
குரங்குவெடி.
அடுத்த எபிலே இந்த பையனே அடிக்கன்னே ப்ளைட் ஏறி அந்த பொண்ணு வருதா🤣🤣🤣 சுருதி எபிக்காக வெயிட்டிங்😎😎😎.
ஹா..ஹா.. தாங்ஸ் அக்கா💐💐
பையன் ரொம்ப சாஃப்டா இருக்கானே… அப்போ அந்த பொண்ணு, சரவெடியா இருக்குமோ??? செம எபி…
ஆமா சிஸ் 😊
Achoo pavam….. 12 varusathukku munnadi patha Shruti nu ninachuten bhaiyan…. Varrava Ivana thooki mithika porannu terunjuruntha alert ah vanthu irunthurupan…. Un vithi avaluvu thn nu iruntha yarala yenna panna mudiyum… Govinda Govinda aga vazhthukkal Karthik….. Good start sis …
Ha ha 😂😂.. nice comment sis.. thank you
அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.