சிறை மீளுமோ பட்டாம்பூச்சி?
அந்தக் காவலாளியின் மனைவி கொண்டு வந்த விஷயத்தில் இதயம் படபடத்துப் போனது ஜுவாலாமுகிக்கு!
அங்கிருந்து அப்பொழுதே புயல் வேகத்தில் கிளம்பினார் அவர். அவரருகே இருந்த அந்தப் பெண்ணோ.. “அம்மா.. இந்த நேரத்துல அங்க போக வேண்டாம் ம்மா.. ஏதாவது பிரச்சனையாகிடப் போகுது..” என்று கூற, திரும்பி நின்று அந்தப் பெண்ணைத் தீயாய் அவர் பார்க்க.. அவர் பார்வையில் சட்டென வாயை மூடிக் கொண்டு, தலைகுனிந்து அமைதியாகிவிட்டாள் அவள்.
அவளை நோக்கி அந்த ஒற்றைப் பார்வையை வீசியவர், மீண்டும் திரும்பி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின்னால் அந்தப் பெண்ணும் ஓட்டமும் நடையுமாக அவரைப் பின்தொடர்ந்தாள்.
வேகமாகச் சென்ற ஜுவாலாமுகியின் கால்கள் மீண்டும் சிறைச்சாலையின் முன்பு தான் நின்றது.
அவர் அங்கு மீண்டும் வருவதைக் கண்ட சிறைப் பணியாளர்கள்.. மறுபடியும் என்ன பிரச்சனை நேருமோ என்று பயந்து போனார்கள்.
ஆனால் அவரிடம் கேள்வி கேட்கவோ அல்லது, அவரைத் தடுத்து நிறுத்தவோ அங்கு இருந்த யாருக்குமே தைரியம் தான் இருக்கவில்லை.
எனவே முன்பு போலவே அவர் செல்லும் பாதையெங்கும் அவசர அவசரமாகக் கதவுகள் திறக்கப்பட்டன.
முன்பு போலவே அவரது கால்கள் அக்னியின் அறைக்கு முன்பாக நிற்கவும், அடுத்து அவரது கட்டளை என்ன என்று அவர் முகம் பார்த்தே அங்கு நின்றிருந்தார்கள் அந்தக் காவலாளிகள்.
“இந்த செல்லோட பூட்டைத் திறந்து விடுங்க..” என்று அவர் அக்னியின் மீது நிலைகுத்திய பார்வையுடன் கேட்க, சுற்றி இருந்தவர்களுக்கோ, வான் தொட்டு, மரம் தீண்டிய மின்னலின் தடம் தங்கள் தலையிலேயே விழுந்ததைப் போல ஒரு பேரதிர்ச்சி.
“அம்மா..” என்று அனைவரும் அதிர்வுடன் கூற, அவரோ நெருப்பாய் அவர்களை உறுத்து விழித்தபடி..
“ஹ்ம்ம்.. இந்த செல்லோட பூட்டைத் திறந்து விடுங்கன்னு கேட்கறேனில்லை.. திறங்க முதல்ல..” என்று கர்ஜிக்க, அந்தப் பெரிய சிறையின் காவலாளி அவருக்கு முன்பாக வந்து நின்று..
“அம்மா.. என்னை மன்னிச்சுடுங்க.. இந்த ஒரு விஷயத்தை மட்டும் எங்களால செய்யவே முடியாது.” என்று கூற, அவரோ, அடுத்து காலியாக இருந்த ஒரு சிறைக்குள் விறுவிறுவென உள்ளே நுழைந்தார்.
அதைக் கண்டவர்களுக்கு அங்கமெங்கும் பதற..
“அம்மா.. என்ன செய்யறீங்க? இந்த விஷயம் மட்டும் ஜீக்கு தெரிஞ்சா அவர் எங்களைக் கொன்னே போட்டுடுவார். தயவுசெஞ்சு வெளில வாங்கம்மா..” என்று அவரிடம் கதற, அவரோ கூரான பார்வையுடன் அனைவரையும் நிமிர்ந்து பார்த்து..
“அந்தப் பொண்ணை இந்த ஜெயில்ல இருந்து விடுவிச்சா தான் நான் இங்க இருந்து வருவேன்.
இல்ல.. அந்தப் பொண்ணு இந்தச் சிறைல எவ்வளவு நாள் இருக்காளோ.. அவ்வளவு நாளும் நானும் இங்க தான் இருப்பேன்..” என்று சாவதானமாகக் கூறி அவரது சிறையின் கதவை அலட்சியமாய் சாத்திக்கொள்ள.. அந்தச் சிறைச்சாலைத் தலைவனின் கண்ணசைவில் இரண்டு பேர் தலைதெறிக்க ஓடினர்.
அதே வேளையில் அந்த மலைமுகட்டில் தன்னந்தனியாக இருளில் படுத்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.
தேகம் சிலிர்க்கச் செய்யும் குளிர்காற்றில் கண்மூடிப் படுத்திருந்தான். அவன் விழிகளுக்குள் விளையாடிக் கொண்டிருந்ததோ, அவனவள் தான்!..
பிறந்ததிலிருந்து இந்தக் காளிக்ஷேத்ராவில் அவன் அத்தனை கொடுமைகள் கண்டிருந்தாலும், அவனுக்கு இந்தப் பிராந்தியம் அத்தனை இழப்புகள் கொடுத்திருந்தாலும், அவன் ஒரு நாள் கூடத் தன் வாழ்க்கை ஏன் இவ்வளவு கரடுமுரடாக இருக்கிறது? தனக்கு ஏன் மற்ற மனிதர்களைப் போல ஒரு சாதாரண வாழ்க்கை அமையவில்லை என்று வருத்தப்பட்டது கிடையாது.
தன் மக்களுக்கு ஒரு நியாயமான.. சாதாரணமான வாழ்க்கை பெற்றுத் தர வேண்டும்.. இந்தக் கடுமையான, அசாதாரணமான சூழலிருந்து அவர்கள் வெளிவந்து, மற்ற இந்திய மக்களுடன் கலக்க வேண்டும் என்பது தான் அவனது குறிக்கோளாக இருந்து வந்தது.
ஆனால் இன்றோ.. அவனையும் அறியாது அவன் மனம்..
“நான் ஏன் ஒரு சாதாரண மனுஷனா பிறக்கல?
நானும் மத்த பசங்க மாதிரி நல்லா படிச்சு.. ஐடி கம்பெனில வேலைக்குப் போய்.. அங்க அக்னியும் வேலைக்குச் சேர்ந்திருந்து, ரெண்டு பேரும் பார்த்ததும் காதலிச்சு.. கவிதை மாதிரி ஒரு வாழ்க்கை அமைச்சுன்னு ஏன் எனக்கு இந்த மாதிரி எதுவும் நடக்கல?
நான் ஏன் இந்த ஊர்ல பிறந்தேன்.. ஏன் என் ஊர் மக்கள் மட்டும் இவ்வளவு கொடுமைகளை அனுபவிச்சுட்டு இருக்காங்க?
ஏன் இது எதுவுமே புரியாம.. இல்ல தெரியாம அக்னி இங்க என்னை உளவு பார்க்க வந்தா?
ஏன் அவ கண்ணுல என் மேல அத்தனை காதல் இருந்தும், என்னைக் கொல்லணும்னு வெறிபிடிச்சு இருக்கா..
ஏன்.. ஏன்.. ஏன்..’ என்று கதறிக் கொண்டிருந்தது.
அந்தக் கதறலின் அழுத்தம் தாங்காமல் விருட்டென்று மேலே எழுந்துவிட்டான் ருத்ரன்.
காற்றில் அவன் சட்டை சடசடக்க, சட்டெனத் தனது சட்டையைக் கழற்றித் தூக்கி எறிந்தவன், வெற்று உடம்பில் மலையடிவாரத்தில் இருக்கும் ஊரைப் பார்வையிட்டான்!
தூரத்தில் தெரியும் சிறைச்சாலையை, அதில் இன்னமும் பளிச்சென்று எரியும் விளக்குகள் மூலம் தெரிந்து கொண்டவன், அதையே ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தான்.
தன் உயிர்கொல்லும் தன்னவளை, அங்கே தானே சிறை வைத்திருக்கும் கொடுமை அவனது உயிர் தின்றது!
ஆனாலும் அவன் மனதின் உறுதி அவனை எக்கிரும்பாய் உறையச் செய்தது.
அதே வேளையில் சிறைச்சாலையிலிருந்து ஒரு பைக் அதிவேகமாகக் கிளம்பி தானிருக்கும் மலைமுகட்டை நோக்கி வருவதைக் கண்ட ருத்ரனின் விழிகள் கூர்மை பெற்றன.
அடுத்த வினாடியே, தனது சட்டையைக் கூட அணியாமல்.. சட்டெனத் திரும்பித் தனது பைக்கைக் கிளப்பிக் கொண்டு அந்த மலைகரட்டிலிருந்து கீழே இறங்கினான் ருத்ரன்.
அடுத்த இரு நிமிடத்திலேயே இரண்டு பைக்குகளும் சந்தித்துக் கொள்ள, அவனிடம் விரைந்து வந்த காவலர்கள்..
“ஜி.. மறுபடியும் அம்மா வந்திருக்காங்க..” என்று கூறியதும் ருத்ரனின் உடல் ஒரு கணம் தூக்கிப்போட்டது.
“என்ன விஷயம்?” என்று அவன் கேட்க, தலையைக் குனிந்து கொண்ட இருவரும், அந்த விஷயத்தை எப்படிச் சொல்லுவது என்று தெரியாது திணறி நிற்க, அவர்களது தயக்கம் ருத்ரனுக்கு எரிச்சலைக் கொடுத்தது.
“என்ன விஷயம்னு கேட்டேன்..” என்று அவனது குரல் உயர்ந்த விதத்தில் அந்தக் காவலர்களுக்கு உடல் வியர்த்துப் போனது.
ஆனாலும் மனதில் திடத்தை வருவித்துக் கொண்டு அவர்கள் அங்கு நடந்த விஷயத்தைக் கூற.. அவனது இதழ்களோ ஏளனமாக வளைந்தது.
“ஜுவாலாமுகி இப்போ அவங்க மகனைப் பத்தி யோசிச்சிருக்காங்களே.. ஆச்சர்யமா இருக்கே!” என்று எள்ளலாகக் கூறியவன், அவர்களிடம் எதுவும் கூறாது, அதே ஏளனச் சிரிப்புடன் பைக்கைக் கிளப்பினான்.
அவன் உதடுகள் தான் ஏளனத்தில் வளைந்திருந்தனவே தவிர, அவனது கண்கள் செங்கனியாய் சிவந்திருந்தது!
அவன் பைக்கைக் கிளப்பிய வேகத்திலேயே அவனுக்குள் எரிந்து கொண்டிருக்கும் ரௌத்திரம் அந்தக் காவலர்களுக்குப் புரிபட்டு விட, மனத்திற்குள் பெரும் பயத்துடனே அவனைச் சிரமத்துடன் பின் தொடர்ந்தனர்.
சிறைச்சாலையின் வாசலில் சறுக்கிக் கொண்டு நின்றது ருத்ரனின் இரும்புக் குதிரை.
அவன் அப்படி அங்கு வந்து நிற்கவும், ஏற்கனவே அங்கு நிலவியிருந்த பதட்டமான சூழலில் இன்னமும் புயல் சேர்ந்தது போலானது.
அவனைக் கண்டதும் வாசலிலிருந்த காவலர்களும் அவனைச் சூழ்ந்துகொள்ள, அவர்களைச் சிறிதும் மதியாது காற்றில் சீறும் நெருப்பின் ஜுவாலையைப் போல உள்ளே சென்றான் ருத்ரன்.
அவன் வேகத்துக்குப் பின் தொடர முடியாமல் ஓட்டமும் நடையுமாக அவர்கள் அனைவரும் உள்ளே செல்ல, அவனது கால்கள் அக்னியின் சிறையின் முன்பு சடுதியில் நின்றது.
உள்ளிருந்து அவனை இப்பொழுது அனல் காக்கும் கண்களால் பார்த்தபடி கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் அக்னி.
‘இவன் அம்மாவுக்கு என் மேல என்ன இவ்வளவு கரிசனம்? எதுக்கு என்னை ரிலீஸ் பண்ணனும்னு சொல்லறாங்க?
ரிலீஸ்னா, அது இந்த ஜெயில்ல இருந்தா.. இல்ல இந்தக் காளிக்ஷேத்ரால இருந்தேவா?’ என்றெல்லாம் அவளது எண்ணங்கள் பயணப்பட்டுக் கொண்டிருந்த போது தான் எரிமலையிலிருந்து சீறிக் கிளம்பிய நெருப்புத் துண்டாய் அவள் முன்னால் அனல் பறக்க வந்து நின்றிருந்தான் ருத்ரன்.
‘என்னை ரிலீஸ் பண்ணனும்னு சத்தியாகிரகம் இருக்கறது உன் அம்மா.. வேணும்னா அவங்களை முறையேண்டா.. அதைவிட்டுட்டு என்னை ஏன் இப்படி முறைச்சுட்டு இருக்க?’ என்று மனதுக்குள் நினைத்த அவள் முகத்தைச் சுளிக்க.. ருத்ரன் பேச ஆரம்பித்தான்.
“என்ன திடீருன்னு ஜுவாலாமுகிக்கு அவங்க பையன் மேல இத்தனைக் கருணை!?” என்ற கேள்வி அவன் தாயிடம் இருந்தாலும், பார்வை என்னவோ இன்னமும் அக்னியின் மீதே பதிந்திருந்தது!
அதைக் கவனித்த ஜுவாலாமுகியோ.. “எனக்குப் பையன்னு எந்த உறவும் இல்ல..” என்று வெறுப்பாய் மொழிய, ஒரு கணம் கண்களை இறுக்க மூடித் திறந்தான் ருத்ரன்.
ஏற்கனவே சிவந்திருந்த அவனது விழிகளில் இன்னமும் காரம் ஏறிப் போய் இருந்தது!
“அப்பறம் எதுக்கு இவளை ரிலீஸ் செய்யச் சொல்லி இந்த உள்ளிருப்பு போராட்டம்?” என்றான் உடனேயே தன்னை மீட்டுக் கொண்டு இப்பொழுது தெளிவான நக்கலில்!
“எனக்கு இந்த ஊர் ரொம்ப முக்கியம்..” என்று அடுத்ததாக வந்து விழுந்த அன்னையின் பதிலில் கடகடவென வாய்விட்டுச் சிரித்தபடி..
“என்னை உளவு பார்க்க வந்தவளை.. இந்த ஊரைத் திரும்பவும் அடிமையாக்க வந்தவளை நான் ரிலீஸ் பண்ணினா அது இந்த ஊருக்கு நல்லதாகிடுமா?” என்று அவன் கேலியாய் கேட்க, அவன் கண்களில் இருந்த பளபளப்பு தன்னை அவன் முழுதும் கண்டுவிட்டான் என்று ஜுவாலாமுகிக்கு உணர்த்தியது.
ஆனால் விட்டுக் கொடுக்காமல்..
“அவ இங்க இருக்கறது அவளுக்கும் பாதுகாப்பு இல்ல.. இந்த ஊருக்கும் பாதுகாப்பு இல்ல. அதனால தான் அவளை இங்கிருந்து ரிலீஸ் செய்யச் சொன்னேன்.” என்று இப்பொழுதும் தன் பிடியிலேயே நின்றார் அவர், அதுவும் விரைப்பாகவே!
சற்று யோசிப்பது போலப் பாவனை செய்தவன்.. “ஹ்ம்ம்.. அப்போ இவளை வேற எங்க வச்சா பாதுகாப்பா இருக்கும்?” என்று சத்தமாகத் தனக்குள்ளாக்கப் பேசுவது போலப் பேசிவிட்டு.. ஒரு முடிவுக்கு வந்தவனைப் போல,
“சரி.. அப்போ அக்னிமித்ரா இனி உங்க கூடவே.. உங்க வீட்டுலயே தங்கட்டும்..” என்று அவன் சாதாரணமாகக் கூறவும், ஜுவாலாமுகியும், அக்னியும் ஒரு சேர விறுக்கென நிமிர்ந்தார்கள்!
‘என்ன சொல்றான் இவன்? நான் என்ன இவன் வீட்டுக்கு வந்த கெஸ்ட்டா? இவன் அம்மா கூட என்னைத் தங்கச் சொல்லறான்?’ என்று இவள் அதிர்ந்து போய்ப் பார்க்க, அதே வேளையில் ஜுவாலாமுகியின் கண்கள் இடுங்கியது!
அவனை நேராய் பார்த்த பார்வையை விலக்காது.. “சரி..” என்று அவர் பதிலுரைத்திருக்க, இங்கு அக்னிக்கோ தலைசுற்றியது!
அடுத்த நிமிடமே ருத்ரனின் விழியசைவில் ஒரு காவலாளி வந்து அக்னியின் சிறைக்கதவைத் திறக்க.. அவளோ, வெளியே வருவதற்கு சிறிதும் பிரயத்தனப்படவில்லை!
அவளையே விழியாகற்றாது ருத்ரன் பார்த்துக் கொண்டிருக்க, ஜுவாலாவோ..
“வெளில வா..” என்று அழைத்தார்.
அதற்கு அக்னியோ..
“நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா? நீங்க பாட்டுக்கு இங்க வா.. அங்க போன்னு ஆர்டர் போடறீங்க?” என்று அவள் சீறலாய் கேட்க, அதைத் துளியும் சட்டை செய்யாது.. நிதானமாய் உள்ளே சென்று அவள் கையைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்த ருத்ரனோ..
“திரும்பவும் உனக்கு ஞாபகப்படுத்தறேன் அக்னி.. இங்க நீ விருந்தாளி கிடையாது.
நீ.. என்னோட கைதி!
நான் என்ன சொல்லறேனோ, அதைச் செய்யறது தான் உன்னோட விதி!” என்றவன் அவளை ஜுவாலாமுகியிடம் தள்ளிவிட்டுவிட்டு..
“அவங்க வீட்டுல தங்க உனக்கு இஷ்டம் இல்லைனா, எனக்கு இஷ்டமான ஒரு இடத்துல நீ தங்கவைக்கப்படுவ..” என்று கூறி அவளைப் பார்த்துத் தனது ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி அவன் சிரிக்க, அதில் குப்பென்று அக்னியின் முகம் சிவந்தது!
அதற்குக் காரணம்.. கோபமா? அல்லது நாணமா?!