Loading

அத்தியாயம் – 8

தனது மொபைல் திரையில் தெரிந்த பெயரைக் கண்டு உள்ளுக்குள் சற்று ஆச்சர்யமுற்றவள் சிறு தயக்கத்துடன் தான் அந்த அழைப்பை ஏற்றாள்.

மெல்ல தனதறைக்குள் நுழைந்தபடி இவள், “ஹலோ..” என்னும் முன் மறுமுனையில் மணியின் அண்ணன், மானபரனின் குரல் கேட்டது.

“ஹலோ..” என்றவன், நேரடியாக விசயத்துக்கு வந்தான்.

“இங்க பாரு ஏதோ கல்யாணமாகிப் போன தங்கச்சி மேல இருக்கற பாசத்துல உனக்கு அண்ணனா நான் போன் பண்ணினேன்னு நினைச்சுக்காத.. நான் சொல்ல வந்த விஷயமே வேற..” என்கவும், தலை முதல் பற்றிக்கொண்ட கோபத்துடன்..

“உன்ன என் அண்ணனாவே நான் நினைச்சது கிடையாது.. இதுல பாசக்கார அண்ணனா வேற நினைக்கப் போறனா?” என்று இவள் எடுத்தெறிந்து பேசினாள்.

“அதான பார்த்தேன்.. உன்கூடப் பொறந்தது, இப்படி தேளா கொட்டற நாக்கு! அது என்னைக்காவது மாறுமா?” என்று சீறினாள் மறுமுனையில் அவன்.

“இங்க பாரு.. சொல்லறதுக்கு ஏதாவது விஷயம் இருந்தா சொல்லு.. அதைவிட்டுட்டு கண்டதையும் பேசி என் நேரத்த கெடுக்காத..” என்று மீண்டும் அலட்சியம் காட்டினாள் மணி!

“ஆமாமா.. நான் மட்டும் உன்கிட்ட பேசறதுக்கு அப்படியே துடிச்சுட்டு இருக்கேன் பாரு..” என்று தன் பங்குக்கு தானும் திருப்பிய மானபரன்.. “நான் சொல்ல வந்தது இது ஒன்னு தான்.. கல்யாணம் முடிஞ்ச பிறகு ஏதோ மறுவீட்டுக்கு வரணும்னு சடங்கு இருக்காம்.. உன்னையும், உன் புருஷன்.. அந்த ‘அவனையும்’ நான் தான் அங்க வந்து கூட்டிட்டு வரணுமாம்.

அப்படி நான் வரும் போது.. ஏதோ அண்ணன், பாசத்துல தங்கச்சிய பார்க்க வரேன்னு மட்டும் நினைச்சுக்காத.. அப்பறம் உன் புருஷன்கிட்டயும் சொல்லி வை.. இந்த மாப்பிள்ளை மரியாதையெல்லாம் என்கிட்டே எதிர்பார்க்க வேண்டாம்னு..” என்று கூறி, இவள் பேச இடமே கொடுக்காது அவன் போனை வைத்துவிட.. அவ்வளவு தான் மணிக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன, கன்னம் துடித்தது! அவள் நாசியோ.. அனல் காற்றை நெருப்பாய் கக்கியது!

கோபத்தில் மூச்சு வாங்க, கையிலிருக்கும் மொபைலை பார்த்தவள்.. “அந்த வெண்ணகிட்ட நான் ஏண்டா சொல்லறது? உனக்கு வேணும்னா நீ சொல்லிக்கோடா வெண்ண..” என்று ஆத்திரத்தில் கத்தியவள், அந்த போனை தூக்கி எறியப் போக, சற்று நிதானித்தவள்.. ‘ஹையோ.. இது என்னோட போன்.. இது போச்சுன்னா அவ்ளோ தான்..’ என்று உணர்ந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.

ஆனாலும் ஆத்திரம் அடங்காது.. அந்த அறையில் இருந்த டிவியை உடைக்கப் போனவள்.. ‘ஹையோ.. இது என்னோட கல்யாண கிப்ட்டு..’ என்று அதற்கும் எந்த சேதாரமும் விளைவிக்காது தன்னை அடக்கிக் கொண்டாள்.

இருந்தாலும், சுற்றி சுற்றிப் பார்த்து எதையாவது சேதப்படுத்தி, தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்று அவள் நினைக்கையில் அப்பொழுது தான் வாகாக ஓர் ஆடு வலையில் சிக்க வாண்ட்டடாக வந்தது!

கீழே உறவினர்கள் சூழ அவர்களது கேலியையும், கிண்டலையும் சகிக்க முடியாமல் தாங்கிக் கொண்டிருதவனை, தேவகி தான் காப்பாற்றும் நோக்கில்.. “ராகவ்.. இங்க என்ன செஞ்சுட்டு இருக்க? போ.. உன் ரூம்ல போய் கொஞ்ச நேரம் தூங்கு..” என்று கூறி அவனது அறைக்கு அனுப்பி வைத்தார்.

‘ஹப்பாடா.. தப்பித்தால் போது’மென்று தனதறைக்கு வந்தவன், அங்கே கோபக்கனல் வீச நின்றிருந்த மணியை ஒரு பார்வையால் கடந்து சென்று தனது படுக்கைக்கு போனான்.

அவன் வந்ததையும்.. தன்னை ஒற்றைப் பார்வையால் அலட்சியம் செய்துவிட்டு, இப்பொழுது கட்டிலில் படுத்து தலையோடு போர்த்திக் கொண்டு அவன் உறங்க முனைவதையும் பார்த்தது மணிக்கு அடிவயிறு எரிந்தது.

‘அடேய்..! நான் இங்க இப்படி கோபத்துல நின்னுட்டு இருக்கேன். நீ என்னனு கூட கேட்காம, பட்டப்பகல்ல இழுத்து போர்த்திட்டு தூங்கப் போறியா? மவனே.. நீ தாண்டா இன்னைக்கு பலி..

அது மட்டும் இலலாம உனக்கு எந்த சேதாரம் ஆனாலும், அது என்ன எந்த விதத்துலையும் பாதிக்கப் போறதுமில்லை..’ என்று எண்ணியவள், அவன் போர்த்தியிருந்த போர்வைக்கு மேலே தலையணையை வைத்து அழுத்தி.. அதன் மேல் தானும் தொப்பென்று குதித்து.. அவன் தலைமுடியைப் பிடித்த ஆட்டு.. ஆட்டென்று ஆட்டி.. பிறநகு மீதமிருந்த தன் மிச்ச ஆத்திரங்களும் தீரும் வகையில் அவன் தலையிலேயே ‘நங்கு.. நங்கென்று’ கொட்டி.. ராகவ் சுதாரித்து எழுவதற்குள், கதவைத் திறந்து ஓடியே விட்டாள்.

அதற்குள் ராகவோ.. “அடியேய்.. என்னடி பண்ண? எதுக்குடி அடிக்கற? ஏய்.. எரும மாடு.. என்ன ஆச்சு உனக்கு? ஹையோ வலிக்குது விடுடி..” என்று அந்த அறையே அதிரும்படி அலற, மணி, சமையலறையில் இருக்கும் தேவகியிடம் தப்பித்து ஓடி வந்துவிட்டாள்.

மேல் மூச்சு.. கீழ் மூச்சு வாங்க வந்து நின்றவளைப் பார்த்த தேவகி.. “என்னடி.. ஏதோ நாய் துரத்தற மாதிரி ஓடி வர?” என்று கேட்க, இன்னும் மூச்சு வாங்கி கொண்டே.. “நாய் இல்ல அத்தை.. நீங்க பெத்து வச்சுருக்கீங்களே அந்த பேய் தான் துரத்துது..” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, கண்களில் கொலை வெறியுடன் ராகவன் வருவது தெரிய,

“அய்யயோ.. அத்தை, நான் இங்க ஒளிஞ்சுக்கறேன்.. அவன் என்னைக் கேட்டா, நான் எங்க போனேன்னு தெரியலைன்னு சொல்லிடுங்க..” என்று கூற, இன்னமும் சிறுபிள்ளைகளைப் போல விளையாடும் அவர்களை எண்ணி சிரிப்பு தான் வந்தது தேவகிக்கு.

மணி, குளிர்சாதனப்பெட்டிக்கு அருகே இருக்கும் சிறு மறைவில் ஒளிந்து உள்ள, கண்களில் தேடலுடன் வந்த ராகவ்.. “அம்மா.. மணி எங்க?” என்று கேட்டான்.

அவனைப் பார்த்து உதட்டுக்குள் சிரித்துக் கொண்ட தேவகியோ..

“மணியா? எனக்குத் தெரியாதேப்பா..” என்று கூறியவர், சற்று யோசிப்பது போல பாவனை செய்து..

“ம்ம்ம்.. அவ இங்க வரவே இல்லையே ராகவா.. அதுவும் அந்த ஃப்ரிட்ஜுக்கு பின்னாடி மட்டும் அவ போய் ஒளிஞ்சுக்கவே இல்லையே..” என்று கூற, மணியோ பட்டென்று தலையில் அடித்துக் கொண்டாள்.

ராகவ் மெல்ல அந்த மறைவில் எட்டிப் பார்க்க, தொங்கிப்போன தலையுடன் வெளியே வந்தவள், தேவகியைப் பார்த்து.. “நீங்க தேவகி இல்ல.. சரியான எட்டப்பி..” என்று குமுற, ராகவிக்கோ அவள் பேச்சில் சிரிப்பு வந்தாலும், உள்ளுக்குள் இருந்த கோபம் இன்னமும் இருக்க.. அவளை இப்படியே விட்டு வைத்தால் சரிப்பட்டு வராது.. அவளிடம் தான் வாங்கிய அடியை, அவளுக்குத் திருப்பிக் கொடுத்தாக வேண்டும் என்று முடிவு செய்தவன், இங்கே இந்த வீட்டுக்குள் அது முடியாது!

இங்கிருந்து மணியை ஏதாவது செய்தால், ஒன்றுமில்லாததற்கே கத்தி ஊரைக் கூட்டும் அவள், இப்பொழுது தான் ஏதாவது செய்யப் போக.. நிச்சயம் ஒரு பஞ்சாயத்தைக் இழுத்து வைத்துவிடுவாள் என்று சரியாகவே கணித்தவன், அவளை வெளியே அழைத்துச் செல்வது போல கூட்டிச் சென்று, காருக்குள் வைத்து கும்மிவிட வேண்டும் என்ற திட்டத்துடன்..

“அங்க போய் ஒளிஞ்சுக்கிட்டு என்ன பண்ற மணி? நான் உன்ன எவ்வளவு நேரமா தேடிட்டு இருக்கேன் தெரியுமா?

சரி வா.. நாம ரெண்டு பேரும் எங்கயாவது வெளில போயிட்டு வரலாம்..” என்று கூற, மணிக்கு ஆச்சர்யத்தில் விழிகள் பிதுங்கி வெளியே வந்து விழுந்துவிடும் போலானது!

‘என்ன.. நாம கொட்டுன கொட்டுல, மூளை கழண்டு வெளில வந்து விழுந்துடுச்சா?’ என்று யோசித்தவள், அவனது கண்களின் பளபளப்பில், அவனது எண்ணத்தை புரிந்து கொண்டவள்..

‘அட டேய்!!! இப்போ தான தெரியுது.. சைத்தான் எதுக்கு சைக்கிள்ல போகுதுன்னு..’ என்று எண்ணிக்கொண்டு அவன் புறமாகத் திரும்பி..

“என்ன ராகவ்! இப்படி திடீருன்னு கேட்டா நான் என்ன பண்றது? இங்க பாருங்க வீடு நிறைய சொந்தக்காரங்க கூட்டம்.. இப்ப எப்படி நான் அத்தைய தனியா விட்டுட்டு வருவேன்?

வீட்டுல எவ்வளவு வேலை இருக்கு? பாவம் அவங்க தனியா செய்துட்டு இருப்பங்கல்ல?” என்று கேட்க, ராகவோ.. ‘அடியேய் குள்ள கத்தரிக்கா.. உன்னோட சூது என்னன்னு எனக்குத் தெரியாதா? இருடி.. உன்ன எப்படி மடக்கறேன்னு பாருடி..’ என்று கறுவியவன்..

“அதான் வீட்டுல இவ்வளவு வேலைக்காரங்க இருக்காங்க இல்ல? அவன் பார்த்துப்பாங்க.. இங்க நாம இருந்தா தான், நம்மள பார்த்துக்கணும், நம்மள கவனிக்கனும்னு அவங்க இன்னும் அதிகமா வேலை செய்துட்டு இருப்பாங்க..” என்றுஅவன்கூறிக்கொண்டிருக்க இருவரது பேச்சையும் இடைவெட்டினார் தேவகி.

“அட.. போதும் போதும் நிறுத்துங்க.. இங்க நான் யாருக்காகவும் எதுவும் செய்ய வரல.. இப்போ நீங்களும் வேற எங்கயும் போக வேணாம்.. இப்போ உங்க ரெண்டு பரையும் மறுவீடு கூட்டிட்டு போக மனோ வரான்..” என்று அவர் கூறி முடிப்பதற்குள், மணி..

“நானெல்லாம் அங்க போகல..” என்றாள் முகத்தைத் திருப்பிக் கொண்டு!

ஆனால் அவள் கூறியதை சற்றும் பொருட்படுத்தாமல்.. “சரிம்மா.. அப்போ நான் சீக்கிரம் கிளம்பறேன்.. மனோ எப்ப வரான்?” என்று சாதாரணமாகக் கேட்க, மணியோ கோபத்தில் கண்களைச் சுருக்கினாள்.

“நான் எதெல்லாம் வேணாம்னு சொல்லறனோ, அதெல்லாம் தான் இவனுக்கு செய்தே ஆகணும்னு தோணுமா?” என்றாள் அதே கோபத்துடன்.

தேவகி சிரித்துக் கொண்டார்!

“ஹேய்.. உன்ன சீண்டிச் சீண்டி விளையாடறது தான் அவனோட பொழுது போக்கு.. இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமா?” என்றார் அவர் வாஞ்சையுடன்.

ஆனால் அதற்கும்.. “ஹ்ம்க்கும்.. இவன் விளையாடறதுக்குத் தான் நான் பிறப்பெடுத்தே வந்தேனாக்கும்?” என்றாள் மணி நொடித்துக் கொண்டு!

இந்த கோபத்திலும், அலட்சியத்திலும் தேவகியின் முகத்தில் சற்று இருள் படர்ந்தது!

‘கடவுளே.. இதெல்லாம் வெறும் சிறு பிள்ளைக் கோபமா இருக்கணும்ப்பா..’ என்று அவரையும் அறியாமல் அவரது இதயம் சிறு பயத்துடன் வேண்டிக் கொண்டது.

சற்று நேரத்தில் மானபரன் அங்கு வந்துவிட, அவனை தேவகி சாப்பிட அழைத்ததற்கு, அவன் எங்கேயோ பார்த்துக் கொண்டு.. “எனக்கு வேணாம்..” என்று முறுக்கிக் கொண்டு கூறினான்.

அதைப் பார்த்த தேவகியோ, சிரித்துக் கொண்டே.. “அடேயப்பா.. என்னடா நீ தான் புது மாப்பிள்ளை மாதிரி முறுக்கிக்கற? ரெண்டு வாய் சாப்பிட்டுட்டு போ..” என்று மீண்டும் கூற, மானபரனோ..

“எனக்கு உங்க மருமக சமைச்ச சாப்பாடெல்லாம் ஒண்ணும் வேணாம்..” என்று கூற அப்பொழுது தான் தனது அறையில் இருந்து வெளியே வந்த ராகவோ.. விழுந்து விழுந்து சிரித்தான்.

அப்படி சிரித்தவனை திரும்பிப் பார்த்து மானபரன் முறைக்க, அவனோ..

“அடேய்.. கல்யாணமான அடுத்த நாளே சமைக்கற அளவுக்கா உன் தங்கச்சிக்கு சமையல் கத்துக் கொடுத்துருக்கீங்க?” என்று மீண்டும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க.. அங்கிருந்த மணிக்கும் சரி.. மானபரனுக்கும் சரி காதில் புகை வந்தது!

“அத்தை.. அவங்க ரெண்டு பேரையும் சீக்கிரம் கிளம்ப சொல்லுங்க..” என்று தேவகியிடம் மானபரன் கூற, தேவகியோ..

“நீ உன் மாப்பிள்ளைக்கிட்ட.. ‘மாப்பிள்ளை.. மாப்பிள்ளை.. என் தங்கச்சிய கூட்டிட்டு எங்க வீட்டுக்கு மறுவிருந்து சாப்பிட வாங்க மாப்பிள்ளை’ன்னு சொல்லு.. அப்போ அனுப்பி வைக்கறேன் அவங்கள..” என்று கேலி செய்ய, பற்களைக் கடித்தான் மானபரன்.

‘பாட்டி பேச்ச கேட்டு இங்க வந்தா.. எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்!’ என்று கடுப்புடன் எண்ணினாலும், வேறு வழியின்றி தேவகி கூறியதைப் போல, ராகவை அழைத்தான்!

அதைக் கேட்டு உதட்டுக்குள் நக்கலாக சிரித்துக் கொண்ட ராகவ்.. “என்னம்மா?.. என் மச்சான் இவ்வளவு கெஞ்சறான்!.. போனா போகுதுன்னு மறுவீட்டு விருந்துக்கு கிளம்பட்டுமா?” என்று கேட்க, தேவகியும்..

“ஆமாண்டா.. பார்க்க பாவமா இருக்கு.. போயிட்டு வாங்க..” என்று கூற, மூவரும் கிளம்பினார்கள்.

காரில் செல்லும் போது மானபரனுக்கு, தேவகியும்.. ராகவும் சேர்ந்து அவனை கேலி செய்தது மனதுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது!

தான் அவமானப்பட்டதாய் எண்ணியவன், ராகவுக்குத் திருப்பிக் கொடுக்கும் விதமாக, பின்னே இருந்த மணியிடம் திரும்பி.. “ஏய்..” என்று அழைத்தான்.

வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்க்க.. “உன் புருஷன்கிட்ட ஒண்ணு சொல்லசொன்னேனே அத சொன்னியா?” என்றான் மானபரன்.

“என்ன சொல்லணும்?” என்றாள் அவள் சற்று சந்தேகத்துடனே!

“ஹ்ம்ம்.. அதான் சொன்னனே.. உன்னையும், உன் புருஷனையும் மறுவீட்டுக்குக் கூப்பிடறது, பாட்டியோட வற்புறுத்தலுக்காகத் தானேயொழிய.. உன் மேல இருக்கற பாசத்துக்காகவோ.. உன் புருஷன நான் மாப்பிள்ளையா நினச்சு மரியாதை கொடுக்கறதுக்காகவோ இல்லைன்னு சொன்னனே.. அத உன் புருஷன்கிட்ட சொன்னியா?” என்று அவன் மீண்டுக் கேட்க, இப்பொழுது புகை வந்தது ராகவின் காதுகளில்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்