Loading

அத்தியாயம் – 7

கொட்டிச் சிதறிய பாலை அதிர்ச்சியாக ராகவ் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பாலை விடவும் சூடாக மணி கொதித்துப் போயிருந்தாள்.

திமிரிக் கொண்டு அவனிடம் இருந்து விலகியவள்.. “ச்சீ.. உனக்கு வெட்கமா இல்ல? கல்யாணமானதும் உனக்கு அடுத்து இது தான் முக்கியம் இல்ல?

ச்சே.. நீ எல்லாம் மனுஷனா? எப்படி உன்னால ஒரு பொண்ணுக்கு துரோகம் செஞ்சுட்டு, உடனே இன்னொரு பொண்ணு மேல கை வைக்க முடியுது?” என்று அமிலத்தை இறைக்க.. ராகவுக்கோ அவள் பேசியதில் தலையும் புரியாது, காலும் புரியாது எரிச்சல் கிளம்பியது.

“ஏய்.. என்ன? விட்டா ரொம்ப பேசிட்டே போற? யாருக்கு நான் துரோகம் செஞ்சேன்? அதுவும் இல்லாம என்னமோ உன் சம்மதம் இல்லாம உன் கைய பிடிச்சு இழுத்த மாதிரி இப்படி குதிக்கற?” என்று அவன் சீற, மணிக்கோ ஆத்திரம் அடங்குவதாய் இல்லை.

“வாட்? என் கைய வேற பிடிச்சு இழுப்பியா? என் சம்மதம் இல்லாம என்ன தொட்ட மரியாதை கெட்டுடும் பார்த்துக்கோ..

அப்பறம் என்ன சொன்ன? யாருக்கு துரோகம் செஞ்சேன்னு கூட மறந்துடுச்சா?

ஓ?! அவ்வளவு பொண்ணுங்கள ஏமாத்தி இருக்கியா நீ? உன்னையெல்லாம் கல்யாணம் செய்ய நான் எப்படித் தான் சம்மதிச்சேன்னு தெரியல?” என்று அவள் தலையில் அடித்துக் கொள்ள.. ராகவுக்கோ கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது!

“ஹேய்.. என்ன ரொம்ப சலிச்சுக்கற? சைக்.. நீ இப்படி ஒரு அரைலூசுன்னு தெரியாம உன்ன கல்யாணம் பண்ண நான் எப்படி சம்மதிச்சேன்னு தான் எனக்குத் தெரியல..

போடி.. தயவுசெஞ்சு என் கண்ணு முன்னாடி நிக்காம எங்கயாவது போய்த்தொலை..” என்று அவன் சீற, சிலிர்த்தெழுந்தாள் மணி.

“என்ன போகச்சொல்ல நீ யாருடா? இது என் மாமா வீடு.. நான் இங்க தான் இருப்பேன்.. உனக்கு குடையுதுன்னா நீ வெளில போடா..” என்று அவள் சகட்டுமேனிக்கு கத்த.. வெறுத்துப் போன ராகவோ, “ச்சை..” என்று ஆவேசமாகக் கூறிவிட்டு வெளியேறிவிட்டான்.

“புஸ்.. புஸ்..” என்று மூச்சு வாங்க கோபத்துடன் அமர்ந்திருந்தாள் மணி.

“என்ன பத்தி என்ன நினைச்சுகிட்டான்? நானும் நம்பினேனே? வீட்டுல எல்லாரும் சொல்லறாங்கன்னு கண்ண மூடிட்டு சம்மதிச்சனே? என்ன சொல்லணும்..” என்று தலையில் அடித்துக் கொண்டவளுக்கு அவளையும் மீறி கண்களில் கண்ணீர் சுரந்தது.

‘இவன யாரு என்ன கல்யாணம் செய்ய சம்மதம் சொல்ல சொன்னது?’ என்று மீண்டும் மீண்டும் அதற்காக அவன் மீது கோபம் கொண்டாளே தவிர, அவன் எதற்காக அவளைக் கல்யாணம் செய்ய சம்மதித்தான் என்று மட்டும் அவள் யோசிக்கவே இல்லை!

இங்கு மணியிடம் சண்டையிட்டு வெளியே வந்த ராகவுக்கும் கண்மண் தெரியாத ஆத்திரம் தான்.

‘என்ன பத்தி என்னன்னு நினைச்சுட்டு இருக்கா இவ? வீட்டுல கேட்டதும் நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்ல? அந்தத் திமிர் தான் இவளுக்கு..’ என்று எரிச்சலுடன் ஒரு மூச்சை இழுத்து விட்டவனுக்கு, அப்பொழுது தான் இன்னுமொன்றும் புரிந்தது.

வீடு முழுக்க உறவினர் கூட்டம். இந்த சூழ்நிலையில் முதலிரவு அறையில் இருந்து இவன் வெளியே வந்தது அங்கிருக்கும் யாராவது ஒருவர் கண்ணில் பட்டுவிட்டால் கூட போதும்.. அவ்வளவு தான்! ஒரே களேபரமாகிவிடும்..

எனவே மீண்டும் வேறு வழியில்லாமல் அறைக்குள்ளேயே புகுந்தான்.

உள்ளே மணி, வாசலுக்கு முதுகு காட்டி படுத்துக்க கொண்டிருக்க, ராகவுக்கு இப்பொழுது பெரும் குழப்பமாகியது.

அதாவது அதே படுக்கையில் படுத்து உறங்குவதா? இல்லை.. தனியாக இருக்கும் சோபாவில் சென்று படுப்பதா என்று தயங்கியவன், சற்று யோசித்து சோபாவிலேயே சென்று படுக்கலாம் என்று முடிவெடுத்தான்.

எனவே கட்டிலில் இருக்கும் தலையணையை எடுப்பதற்காக சோபாவில் முட்டிபோட்டு அதைக் குனிந்து எடுக்க, சட்டென அவன் புறமாய் திரும்பிய மணியோ, அவனைத் தீயென விழித்தாள்.

“எவ்வளவு திட்டினாலும் உனக்கெல்லாம் மானம், ரோஷம் இருக்காதுல்ல? மறுபடியும் இங்க வந்து என் பக்கத்துல படுக்க நினைக்கற?” என்று அவள் கூற, ராகவுக்கோ சீண்டி விட்டதைப் போலானது.

“என்னது நான் உன் பக்கத்துல வந்து படுக்க நினைச்சனா? ஏய்.. ஏதோ நான் கொஞ்சம் நல்லவனா இருக்கப் போய் தான் போய் சோபால படுக்கலாம்னு நினச்சேன். ஆனா நீ என்ன நல்லவனா இருக்க விடமாட்ட போலிருக்கு.

இப்போ சொல்லறேன் கேட்டுக்கோடி.. நான் இங்க தான் படுக்கப் போறேன்.. இது என் வீடு.. என் ரூம்.. நான் இங்க தான் தூங்குவேன்..” என்று கூறி அவன் அந்தக் கட்டிலிலே படுக்க.. மணியோ கொதித்துப் போனாள்.

“ஏய்.. யாரை கேட்டு இந்த பெட்டுல படுக்கற? இது எனக்கு சீதனமா வந்த பெட்.. எழுந்திரு முதல்ல..” என்று அவனை மேலே எழுப்ப முயல, அவனோ வெகு அலட்சியமாக அவளை கட்டிலின் மறுபுறம் தள்ளிவிட்டான்.

“நான் இங்க தான் தூங்கப் போறேன்.. உனக்கு வேணும்னா நீ போய் சோபால படு, போடி..” என்று கூறி போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டு படுத்துக்கொண்டான்.

அவனருகில் படுத்திருந்த மணியோ.. ‘எருமமாடு.. ஒரு முழு பெட்டே எனக்குப் பத்தாது.. சண்டை கட்டி இவன வெளில தொரத்திட்டா நான் பாட்டுக்கு சந்தோஷமா இந்த முழு பெட்டுலையும் படுத்து உருளலாம்னு நினச்சா.. இப்படி மறுபடியும் வந்து படுத்துட்டான்..’ என்று வாய்க்குள் வசைபாடியவள், அப்படியே முதுகுப்புறமாகவே நகர்ந்து மெல்ல மெல்ல அவனைக் கீழே தள்ளிவிட முயன்றாள்.

அப்பொழுது தான் லேசாக கண்சொருகிய ராகவுக்கோ, அவளது செய்கையில் விழிப்பு வந்துவிட, அவளைப் பற்றி தெரியாதா அவனுக்கு.. அவனும் அவளைப் போலவே அவனும் அவளைத் தள்ளிவிட, அவர்களது இந்தச் சண்டையிலேயே பொழுது விடிந்தே விட்டது!

விடியற்காலையிலேயே அவர்களது அறைக்கதவு தட்டுப்பட, எரிச்சலுடன் எழுந்து சென்றாள் மணி.

அதுவும்.. ‘ச்சே.. ராத்திரியெல்லாம் இவன்கூட இம்சைன்னா.. இப்படி விடிஞ்சும், விடியாமையும் கதவ வேற தட்டறாங்க..’ என்ற முனகலுடன் தான்!

கதவைத் திறந்தால் தேவகி தான் நின்றிருந்தார்.

“சீக்கிரம் வாம்மா.. இன்னைக்கு மட்டும் நேரமா எழுந்து குளிச்சுடணும்..” என்று அவர் கூற, மணியோ..

“இன்னும் நான் தூங்கவே ஆரம்பிக்கல.. அதுக்குள்ளே எழுப்பி குளிக்க வேற சொல்லறீங்களே.. இது உங்களுக்கே நியாயமா இருக்கா?

புள்ளைய பெக்க சொன்னா, தொல்லையா பெத்து வச்சிருக்கீங்க.. பைத்தியக்காரன் ராத்திரி முழுக்க தூங்கவே விடல..” என்று அவள் போக்கில் உளறிக் கொண்டிருக்க.. தேவகியோ உதட்டுக்குள் வெடித்த சிரிப்பை சிரமத்துடன் அடக்கிக் கொண்டார்.

அதே வேளையில் அறைக்குள் இருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராகவோ விலுக்கென எழுந்தான்.

‘இவளை அரைலூசுன்னு சொன்னதுல தப்பே இல்ல.. எப்படியெல்லாம் உளறிட்டு இருக்கா பைத்தியக்காரி.. இதுல நான் பைத்தியமா..’ என்று கரித்துக் கொட்டியபடியே மேலே எழுந்தவன் நேரே மணியிடம் வந்து அவளது பின்னந்தலையில் பட்டென்று ஓர் அடி வைத்தான்.

அதில் சுள்ளென்று எழுந்த கோபத்துடன் பின்னால் திரும்பியவள்.. “ஏண்டா எருமமாடு என்ன அடிச்ச? ஏற்கனவே உன் மேல செம காண்டுல இருக்கேன்.. ஓடியே போய்டு..” என்று எரிந்துவிழ, ராகவோ, அவன் அன்னையிடம்..

“ம்மா.. இவள இந்த ரூம்ல குளிக்க சொல்லுங்க.. நான் கீழ் ரூம்ல போய் குளிச்சுட்டு வரேன்..” என்று கூறித் தனது உடமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பியவன், மணியைக் கடக்கையில் அவளை அப்படி முறைத்துக் கொண்டு போனான்.

அதைக் கண்டு மணி பல்கலைக் கடிக்க.. இதை பார்த்த தேவகிக்குத் தான் வயிற்றுக்குள் குளிர் பிறந்தது!

ஏனென்றால் முதலில் மணியின் பேச்சைக் கேட்டு, ராகவும், மணியும் வெளியே சிறுபிள்ளைகளைப் போல சண்டையிட்டுக் கொண்டாலும், இந்தத் திருமணத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டார்கள் என்றே முதலில் அவர் நினைத்தார்.

ஆனால் மணியின் பாதிப் பேச்சில் ராகவ் எழுந்து வந்து அவளை அடிக்கவும், அதுவும் கூட செல்லச்சண்டையாகவே பட்டது தேவகிக்கு.

ஆனால் அதற்கு மணியின் பதிலும், ராகவ்.. மணியிடம் எதுவும் பேசாது நேராக இவரிடமே பேசிவிட்டு முறைத்தபடி சென்றதும் மனதுக்குள் ரொம்பவுமே உறுத்தியது.

‘இந்தப் பிள்ளைங்க சந்தோஷமா தான் இருக்காங்களா? இல்ல.. கல்யாணம் செஞ்சா எல்லாம் சரியாகிடும்னு நாம தான் தப்பா நினச்சுட்டமா?’ என்றெல்லாம் குழம்பித் தவித்தவர், தன் குழப்பத்தை வெளியே காட்டிக் கொள்ளாது சாதாரணமாகவே இருக்க முயன்றார்.

ஆனால்.. நேரம் செல்லச் செல்ல.. ராகவையும், மணியையும் கண்டும் காணாமல் அவதானித்தவருக்கு நிச்சயமாய் இவர்களுக்குள் இன்னமும் ஒன்றுமே சரியாகவில்லை என்ற உண்மை புரிந்தது!

இருந்தாலும் சிறு வயதில் இருந்தே இவர்களை பார்த்துக் கொண்டிருப்பவர் தானே.. ‘சின்ன பிள்ளைங்க.. ஆனாலும் ப்ராக்டிகலா யோசிக்கத் தெரிஞ்சவங்க.. அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க.. அதுவும் நல்ல விதமாவே..’ என்று நேர்மறையாகவே முடிவெடுத்தவர் அடுத்ததாக தனது மாமியாருக்கு அழைத்து அன்றைய நடைமுறைகளைப் பற்றி பேசினார்.

மறுபுறம் ராகவும், மணியுமோ ஒருவர் இருக்கும் இடத்தில் மற்றவர் இல்லாதவாறு மிகக் கவனாமாகப் பார்த்துக் கொண்டனர்.

ஆனால் இவர்களது உண்மை நிலையறியாத அவர்களது உறவினர் கூட்டமோ, ராகவும், மணியும் ஆடும் கண்ணாமூச்சியைப் பார்த்து மணமக்கள் வெட்கத்தின் காரணமாக இப்படி பாராமுகமாக இருக்கிறார்கள்.. அவர்களை சேர்த்து வைப்பதே நம்முடைய முக்கியக் கடமை என்று நினைத்து இருவரையும் வம்படியாக இழுத்து வந்து ஒன்றாக அமரவைத்து, சுற்றிலும் அமர்ந்து கொண்டு சரமாரியாகக் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

அதில் குறும்புக்கார அத்தை ஒருவர், மணியைப் பார்த்து..

“ஏண்டி அழகுமணி.. சின்ன வயசுல இருந்து ஒன்னா தான் வளர்ந்துட்டு வரீங்க.. இதுல என்னவோ காணாததை கண்டா மாதிரி நேத்து ஒத்த ராத்திரில உனக்கு எங்க இருந்துடி இவ்வளவு வெட்கம் வந்துச்சு?” என்று ஆச்சர்யமாய் கேட்பது போல அவளது காலை வாரிவிட, மணியின் முகம் ரத்தமெனச் சிவந்தது!

இதைக் இக்கட்டு ராகவோ, சொத்தென முகத்தில் அடித்துக் கொள்ள.. சுற்றி இருந்த கூட்டத்தின் கவனம் அவன்புறம் சென்றது.

“ஏன் மாமா.. ராத்திரி எல்லாம் எங்க அக்காவ நீங்க தூங்கவே விடலையாமே.. பாவம்ல அவ?” என்று மணிக்கு தங்கை முறை உள்ள பெண் ஒருத்தி துடுக்காகக் கேட்க, ராகவோ.. ‘கடவுளே.. அவ என்ன அர்த்தத்துல சொன்னா.. இதுங்க எந்த அர்த்ததுல புரிஞ்சுக்குதுங்க பாரேன்..’ என்று எண்ணியவன், இதை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்று எண்ணி, தானும் அவர்களுடனே விளையாட முடிவெடுத்தான்.

“நான் என்ன பண்றது தாரா.. உன் அக்கா அப்படி ஒரு மக்கா இருக்கா.. இதே உன்ன மாதிரி ஒரு புத்திசாலிப் பொண்ண கல்யாணம் செஞ்சுருந்தா.. ஹ்ம்ம்..” என்று பாதியில் நிறுத்தி பெருமூச்சு விட்டான்!

அதைக் கேட்ட சுற்றியிருந்த கூட்டம் கொல்லென்று நகைக்க.. மணிக்கு தான் காதில் புகை வந்தது!

‘ஓஹோ?! நான் புத்திசாலி இல்லையா? இந்த மூஞ்சிக்கு என்னைவிட புத்திசாலியா ஒரு பொண்ணு வேணுமாக்கும்?’ என்று முகத்தில் எள்ளும், கொல்லும் வெடிக்க அவள், அவனைப் பார்த்து வைக்க.. ராகவோ அவளை பார்த்து நக்கலாய் நகைக்க.. அதையும் கவனித்துவிட்ட கூட்டம் இன்னும் இன்னும் மணியை கிண்டலடிக்க, எதையும் முகத்தில் காட்டிக்கொள்ள முடியாத அவஸ்தையில் அமர்ந்திருந்தவளின் மொபைல் சங்கீதமாய் கிணுகிணுத்தது.

‘ஹப்பாடா..’ என்று ஒருவித நிம்மதிப் பெருமூச்சுடன் மொபைலின் திரையைப் பார்த்தவளது கண்கள், அதிர்ச்சியிலும்.. ஆச்சரியத்திலும் ஒருங்கே விரிந்தன!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
17
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்