Loading

“குட்டிமா!”

“குட்டி!!!”

“கொஞ்சம் இருங்க மா. நான் கூப்பிடுறேன்.”

“ஹே!!! மெனு!!! உன்னை அம்மா கூப்பிடுறாங்க வா…லேய்!!!”என்று ஒரு குழந்தைக்கு தாயாகவுள்ள திவ்யபாரதி

சிறுமி போல் கத்த

“கத்தாதடி வரேன்” என்றவாறே கூடத்திற்கு வந்தாள்.

“பாத்தியா மா.  நீ எவ்ளோ அன்பா கூப்பிட்ட வந்தாளா னு பாத்தியா?”என

மொழி அவளைப் பார்த்து திரும்பி,” சரி தான் போடி” என்று அவள் தலையில் கொட்டி விட்டு அன்னையிடம் திரும்பினாள்.

“சொல்லு மா”

“ம்ஹும்….இப்பவாவது என்னை திரும்பிப் பார்த்தியே”

“ஏன்?” என்று‌ அவரை குறு குறு வென பார்க்க

“உன்னோட பார்வை மட்டம் எல்லாம் ஒரே ஒருத்தர சுத்தி மட்டும் ல இருக்கு”

மொழி திரும்பி பாரதியை முறைக்க

“நான் ஏதும் சொல்லலை பா” என்று தோளைக் குலுக்கினாள். 

“என் குட்டிக்கு அம்மாவா இருக்கியே னு சும்மா விடுறேன்”

“ஹான்……..இல்லாட்டி அம்மணி என்ன பண்ணிருப்ப?”

இதற்கு அவள் பதிலளிக்கும் முன் இவர்களின் தாய் புண்ணியவதி ஷாஷ்வதி , “அச்சோ!!! போதும் நான் சொல்ல வந்ததையே மறந்துடுவேன் போல” என்றவுடன் தான் இருவரும் அமைதியாகி அவரை கவனித்தனர்.

“மொழி, மகிழ் பீஸா தோசை கேட்டுட்டு இருந்தான்.”

“அதுக்கு???”

“அதுக்கு மாவும், வெஜிடபிள் மிக்ஸும் சீஸும் வச்சிருக்கேன். சுட சுட சுட்டுக்கொடுத்துரு டா”

“நீயே சுட்டு ஹாட் போக்ஸ் ல..” என்று ஆரம்பிக்கும் போது

பாரதி அவள் காதருகே குனிந்து ” நல்ல சான்ஸ மிஸ் பண்ணாதடி….” என்று முணுத்ததை கேட்டவள் அதுவே சரியென தோண “சரி மா….நீ இவ்ளோ சொல்ற நானே போறேன்” என்று தேவையான சாமானை எடுத்துக் கொண்டு எதிர் வீட்டிற்கு நடையை கட்டினாள்.

ஷாஷ்வதி,” ஏலாது னு சொல்ல வந்துட்டு போறதை பாத்தியா?”

பாரதி,” கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலங்குறா” என்று சிரிக்க அவரும் சிரித்தார். 

வீட்டை அடைந்தவள் ‘கதவை திறவுங்கள் மச்சான்….’ என்று கன்றாவியாக  பாடிக்கொண்டு ‘ஜின்தாத்தா’ மாடிலேஷனில் கதவை தட்ட

முன்னறையில் எதையோ யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் இந்த சத்தத்தை கேட்டதுமே பதறியடித்து எழும்பி கதவைத்திறந்த அடுத்த நொடி அவளின் வாயைப் பொத்தி உள்ளே இழுத்து வெளியே உள்ள வீடுகளை ஒரு தடவை நோட்டம் விட்டு பின் நிம்மதி பெருமூச்சுடன் மொழியை நோக்கி திரும்பினான்.

அதுவரை ஏதோ படத்தை பார்ப்பதைப் போல அவனது கைச்சிறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகிழ் அதன் பிறகே தம் நிலையை உணர்ந்து விலகினான்.

அவளோ இயல்பாக அவனைக் கடந்து சமையலறைப் பக்கம் செல்ல 

“ஹே! அங்க எங்க போற?”என்று அவள் கையில் உள்ளதையும் பார்த்து கேட்டான்.

“உனக்கு தோசை சுட சுட ஊத்திக் குடுக்க சொன்னாங்க” என்று தோசைக் கல்லை அடுப்பில் சூடாக வைத்தாள்.

‘இவளுக்கு கொஞ்சம் கூட இந்த அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இப்பிடி எதுவுமே இல்லையா?’ என்று தனக்குள்ளே பேச

அவளோ தோசையை ஊத்தியவாறு 

“சாரி பாஸ் மெனியூஃபெக்சரிங் ல புரோப்ளம்” என்றாள்.

தோசை ஊற்றும் போது வரும் ‘உஷ்’ என்ற சத்தமும் இவனின் ‘இது தேறாத கேஸ்’ என்று விட்ட பெருமூச்சின் சத்தமும் ஒரே டைமிங் கில் ஒலித்தது.

“ஒரு தோசை ரெடி. மேசைக்கு போ கொண்டு வரேன்” என்க 

தோசையின் நறுமணத்தில் சமத்தாக அமர்ந்தான்.

அவள் ஊற்றிக் கொண்டு வந்த தோசையின் ஒரு பகுதியை பிய்த்து வாயில் வைக்க முன் ஏதோ தோன்ற

” நீ…நீ சாப்டியா?” என்று நிமிர்ந்து பார்க்காமலே கேட்க

தன் காதில் கேட்டது சரிதானா என்று அவனையே பார்த்திருந்தாள்.

“கேள்வி கேட்டேன்ல. பதில் சொல்லு” என்று நிமிர்ந்து அவளைப் பார்க்க

‘ம்ம்…நல்ல முன்னேற்றம் தான்’ என்று மனதில் நினைத்து விட்டு

“இல்லை இனி தான். உனக்கு தோசை சுட்டு குடுத்துட்டு தான் போய் சாப்பிடனும்” என்றாள்”

“நான் வேணும் னா சுட்டு தரவா?” என்று ஆர்வமாக கேட்க 

அவளும் ‘அதிசயம் ஆனால் உண்மை’ என்ற பாவனையில் சிரித்து விட்டு

” யெஸ் பிளீஸ்” என்று வழி விட்டாள்.

அவனும் எழுந்து வந்து தன் நீள் கை டீசர்டை கை முட்டி வரை மடித்து விட்டு 

ஏப்ரனை மாட்டி தோசை சுட தயாராகினான்.

“உனக்கு தோசை சுட தெரியுமா?”

“ம்ம்….நீ செய்றதைப் பாத்தேன்.” என்று வேலையை தொடர்ந்தான்.

ஒரு முறை பார்த்தவுடனேயே கற்றுக்கொள்ளும் அவன் ஆற்றலைப் பற்றி தெரிந்தவள் அமைதியாக சமையலறை மேடையில் அமர்ந்தாள்.

சிறிது நேரம் சம்பந்தமே இல்லாத கதைகளை பேசிக்கொண்டு தோசையையும் சுட்டு முடித்தனர்.

இருவருக்கும் இந்த நொடிகள் அனைத்தும் அழகான நினைவுகளாகியது. இது காதலா இல்லையா என்பதை தாண்டி இந்த தருணத்தை இரசித்தனர்.

பின் அவற்றை மேசைக்கு கொண்டு வந்து எதிரெதிராக அமர்ந்து சாப்பிட்டுக் கொட்டிருக்கும் போது ஏதோ ஞாபகம் வந்தவளாக,” மாமா எங்கடா?”

“பிஸினஸ் ட்ரிப்” என்று சலிப்பாக பதில் வந்தது.

“ஏன் டா. எப்போ பார்த்தாலும் அவரை பத்தி கேட்டாலோ சொன்னாலோ சலிச்சுக்கிற?”

“வேற என்ன பண்ண சொல்ற? தான் பெத்த புள்ளைய விட அவருக்கு பிஸ்னஸ் மட்டும் தான் முக்கியம்”

” ஹே…அப்பிடி இல்ல. அவர் உன் மேல அவ்ளோ பாசம் வச்சிருக்காரு.”

” என்ன சொன்ன? பாசம் வச்சிருக்காரா. 

நைஸ் ஜோக்! அவருக்கு எல்லாமே பணம் தான். அது மட்டும் தான் அவர் வாழ்க்கை”

என்று சற்று தடித்து விழுந்தன வார்த்தைகள்.

“அவர் உன் மேல பாசம் இல்லாமலா உனக்கு என்ன வேணுமோ அதை உடனே உன் கிடைக்கிற மாதிரி செய்யனும் னு எல்லாம் செஞ்சாரு”

“என்ன செஞ்சாரு? அவர் சம்பாத்தியத்தை கடமைக்காக புள்ளைக்கு குடுக்கிறாரு”

“அப்போ ஏன் டா. நீ அவரோட காசு வேணாம் னு சொன்னாலும் உனக்கு ஸ்டூடியோ வைக்க நல்ல இடம் கிடைக்க தன்னோட நிலையை விட்டு அந்த லூசு செட்டியார் கிட்ட வந்து உனக்கு குறைஞ்ச ரேட்ல கிடைக்கிற மாதிரி பேசி குடுத்தாரா?”

“தன் புள்ளைக்கு ஒரு இடத்தை பேசி குடுக்கிறது கூட தரக்குறைவுனா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது”

“ஏன் டா எல்லாத்தையும் தப்பாவே எடுத்துக்குற? அவர் உன் கிட்ட டைம் ஸ்பென்ட் பண்ணலயே தவிர. உன்னை பத்தி ஒவ்வொரு நிமிஷமும் நினைச்சுட்டு தான் டா இருக்காரு. எங்க போனாலும் உன்னை பத்தி விசாரிக்காம இருந்ததில்லை”

“அதை அதை தான் சொல்றேன். நான் உசிரோட தானே இருக்கேன். இல்லாட்டி நான் என்ன செத்தா போயிட்டேன்”

“டேய்!!!!”

“உன் கிட்ட கேக்குறாரே ஒரு…ஒரு வார்த்தை என்னைக் கேட்டுருக்கிறாரா? 

எத்தனை நாள் என்னோட ஒவ்வொரு அச்சீவ்மென்ட்ஸும் அவர்கிட்ட ஷேர் பண்ணி அவர் முகத்தில சந்தோஷத்தை பாக்கனும் நினைச்சிருப்பேன். 

பெருசா வருவாரு. நான் சொல்ல முன்னாடியே யாரோ சொன்னதை கேட்டு கிஃப்ட் ட தூக்கிட்டு வருவாரு. யாருக்கு வேணும் அவர் கிஃப்ட்டு. அன்பா ஒரு வார்த்தை, இறுக்கமா ஒரு ஹக்.

சின்ன சின்ன சண்டை. இப்பிடி எத்தனையோ எதிர்பார்த்திருக்கேன். ஏதாவது ஒன்னாவது செஞ்சிருக்கிறாரா? சொல்லுடி. அன்புக்காக ஏங்கி ஏங்கி அந்த ஏமாத்துக்காரி கிட்ட ஏமாந்து நின்னப்போ கூட எனக்கு ஆறுதலா இருந்தாரா?”

உன்கிட்ட பேச மட்டும் நேரம் இருக்கு. ஆனா ஏன் என் கிட்ட இல்லை?”

“அவரை உனக்கு பிடிக்கல னு நினைச்சு அப்பிடி பண்ணாரு” என்று தன்மையாக சொன்னாள்‌.

“ஹப்பா இப்போவாது அவருக்கு தெரிஞ்சுதே. அதுவரைக்கும் சந்தோஷம்”

என்று மேசையை விட்டு எழுந்தே விட்டான்.

“டேய்!!!! சரி அவர் செஞ்சது ஒரு வகைல உனக்கு தப்பாவே இருந்துட்டு போட்டும். இவ்ளோ பேசுறியே அவருக்காக ஒரு பையனா என்னடா பண்ண?”என்க அமைதியாக அவளைப் பார்த்தான்.

” அவருக்கு நீ எதிர் பார்த்த மாதிரி நடந்துக்க தெரியலையே தவிர. உன் மேல பாசம் இல்லாம இருந்ததே இல்லை. இத்தனை வயசுக்கு பிறகும் உனக்காகவும் அவரோட சின்ன வயசு கனவுக்காகவும் நேரம் பாக்காம ஓடினாரு. 

நீ பைத்தியம் பிடிச்சு அந்த சிறுக்கி கிட்ட சிக்கி ஏமாந்த போ கூட உன் மனசை மாத்த தான் பிஸ்னஸை பாக்க சொன்னாரு. இல்லனா அவரோட பிஸ்னஸை உன்கிட்ட ஒப்படைக்க இல்லை. அவர் பாரத்தை உன் தோள் மேல ஏத்தாம உன் சந்தோஷம் உன் கனவுனு உனக்காக வாழ்றாரு டா. உன்னோட ஒவ்வொரு அச்சீவ்மென்ட்ஸ்கும் அவ்ளோ பூரிச்சு சந்தோஷப்படுவாறு. “

“சரி மா தெரிஞ்சிக்கிட்டேன். இப்போ தயவு செஞ்சு இங்க இருந்து போறியா. உன்னை மாதிரி ஜால்ரா அடிக்க லாம் என்னால  முடியாது.”

“சரி டா போறேன். உனக்கு எதுவும் கிட்ட இருக்கும் போது புரியாது‌. அதெல்லாம் உன்ன விட்டு தூரமாகும் போது தான் புரியும். கடைசியா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ எல்லார்கிட்டயும் பாசத்தை வெறும் வார்த்தையால கொண்டு வரமுடியாது. அதுக்கு வாழ்க்கை ஒன்னும் படம் கிடையாது. பாசம் என்றது ஒரு உணர்வு. அதை முழுசா உணர்ரத்துக்கு உன் ஈகோ தடுக்குது. முதல்ல அவர் இப்பிடி செய்றாரு னு மட்டும் வாய்கிழிய பேசுறதை ஒரே ஒரு நாள் மனசு விட்டு சொல்லிருக்கியா. அவரே உன்கிட்ட கேட்க வந்த மனுஷனையும் மதிக்கல. எதையும் மனசு விட்டு பேசாம தீர்வு கிடைக்காது. அவர் தப்பையும் அவருக்கு புரிய வை மகிழ். காதலிச்ச பொண்டாட்டிய இழந்து தனியா தவிச்சவரு வேலை னு ஒரு பாதையை போட்டு அவர் நினைப்பதெல்லாம் கிடைச்சதுக்கு பிறகும் ஓடினாரு. நீ மட்டும் தான் லோன்லியா ஃபீல் பண்ணியா? ஏன் அவர் பண்ணிருக்க மாட்டாரா? வயசு போன காலத்துல மனுஷன் ஏங்கி போய் இருக்காரு டா. இதை இப்போ கூட புரிஞ்சுக்காம இருக்கத்துக்கு நீ ஒன்னும் சின்ன பையன் கிடையாது. யோசிச்சு நட. நான் கிளம்புறேன்.” என்று வெளியே சென்றாள்.

____________________________________________

“அந்த குரங்கை பாத்தாலும் இம்சை. பாக்காட்டியும் இம்சை. இரண்டு நாளா என் கண்ணுல மாட்டாம என்னை பைத்தியமாக்குற டி நீ” என்று ஆபிஸில் உள்ள “யெஸ் ஐம் அ ரைட்டர்!” என்று பொறிக்கப்பட்டு அவளது குறும்பு புன்னகையுடன் ஃபிரேம் செய்யப்பட்ட படத்தைப் பார்த்து பேசி விட்டு தன் பின்னந்தலையை தட்டி அழகாக புன்னகைத்தான். 

ஆம்,அம்மணி அவன் முன்னால் மட்டும் அல்ல ஆபிஸிற்கும் வராமல் இரண்டு நாளாகின்றது.

ஒரு பெருமூச்சை வெளியில் விட்டு

அவள் புன்னகையை படத்தில் பார்த்தவாறு ” ஐ மிஸ் யூ” என்று மெதுவாக முணுமுணுத்தான்.

தொடரும்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்