Loading

அத்தியாயம் 6

இடம் : xxx

இளஞ்சிவப்பு நிற ஒளிக்கதிர்கள் சுற்றிலும் இருந்த புகைமூட்டத்தை தாண்டி தரையைத் தொட ஒவ்வொரு முறையும் முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. மெல்லிய இசை கசிய, அந்த இடமே பூலோகத்திற்கு அப்பாற்பட்ட இடம் போல காட்சியளித்தது. அந்த இடத்திற்கே உரிய ஒரு வித மயக்கம், ஒரு வித போதை அங்குள்ளவர்களிடம் காணப்பட்டது.

ஆம்… போதை தான். உலகில் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பல போதை பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்கும் இடம் இது. இத்தகைய இடம் பூமியில் உண்டு என்பது கூட பலருக்கு தெரியாது. பல கேடுகெட்ட திட்டங்களின் துவக்கப் புள்ளி இது. பலரது வாழ்வை நாசமாக்கும் போதை வஸ்துக்களின் பிறப்பிடம் இது. பல ரகசிய பரிவர்த்தனைகளின் மையம் இது. ஆள் கடத்தல் முதல் ஆயுதக் கடத்தல் வரை, இங்கு எதுவாயினும் நடக்கும் பணமிருந்தால்…

அத்தகைய இடத்தில் தானும் ஒருவனாக அமர்ந்திருந்தான் அவன். அவன் கண்களில் போதையையும் தாண்டிய வெறி… பல வருடங்கள் கழித்து வெற்றிக் கனியை சுவைக்கப் போகும் ஆனந்தம் அவன் முகத்தில் தாண்டவமாடியது. அவன் நினைத்தது நடந்தால், உலகின் தலையெழுத்தையே அல்லவா மாற்றியமைக்க முடியும். பின் மாஃபியாவாவது இல்லுமினாட்டியாவது… இவன் தான் ராஜா… உலகின் முடிசூடா சக்கரவர்த்தி…

அங்கு அவன் கனவை கலைத்தது அருகில் கேட்ட “பாஸ்” என்ற சத்தம்.

தன் கனவைக் கலைத்தவனை ஓங்கி அடித்ததற்கு பின் தான் அவன் வந்த காரணத்தை வினவினான்.

அவனிடம் அடி வாங்கியவனோ, பயத்துடன் அந்த புகைப்படங்களை அவனிற்கு காட்ட, அந்த இடமே அதிரும் வண்ணம் இடியென சிரித்தான்.

“இனி என் கனவ யாரு நினைச்சாலும் தடுக்க முடியாது… ஐ’ம் கம்மிங் ஃபார் யூ..” என்றான்.

ஆம் அவன் தான் கதையின் வில்லன்… வில்லன் என்பதை விட அரக்கன் என்பது சரியாகப் பொருந்தும். ‘யார் மடிந்தால் எனக்கென்ன… நான் மட்டும் சந்தோஷமாக, சுகபோகமாக வாழ வேண்டும்…’ என்ற எண்ணம் இவனைப் பார்க்கும் அனைவருக்குமே தொற்றிவிடுமளவிற்கு சுயநலத்தின் மறுஉருவம்.

அவன் கையில் சிக்கிய பலர் நரக வேதனை அடைந்து இறந்திருக்கின்றனர். பலர் இவனிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று தற்கொலை செய்தும் இறந்திருக்கின்றனர். ஆக மொத்தம் இவன் பார்வை படும் இடம் சர்வநாசம்…

இப்போது யாரைத் தேடிச் செல்லவிருக்கிறான்… இல்லை இல்லை தன்னைத் தேடி வரச் செய்வான் அரக்கனவன்.

*****

ஊர் தலைவரின் வீடு.

“ஐயா…” என்று அழைத்தவாறு அந்த பெரியவர் அவ்வீட்டிற்குள் சென்றார். அது பெரிதும் அல்லாத சிறிதும் அல்லாத நடுத்தரமான வீடு. வீட்டை சுற்றிலும் தென்னை மரங்களும் பல காய்கறி செடிகளும் அழகாக பராமரிக்கப்பட்டு வந்தன.

வீணா தன்னை மறந்து அதனை பார்வையிட, ராகவும் அந்த இடத்தின் ஒவ்வொரு இடுக்கிலும் பார்வை பதித்து ஆராய்ந்தான். ஆம் சந்தேகப் பார்வை தான்… அவனின் துறை அவனிற்கு கற்றுக் கொடுத்தது.

‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது…’ என்பது போல, இங்கிருப்பவர்களில் சிலர் அவர்களுக்கு ஒத்துழைக்காமல் இந்த திடீர் வளர்ச்சி சாத்தியமற்றது. அப்படி அவர்களின் கைக்கூலிகளாக இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சந்தேகப் பார்வை.

அப்போது அங்கு வந்தார் அந்த ஊரின் தலைவர். ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும்.வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில், நெற்றியில் விபூதி பட்டையுடன் மரியாதையான தோற்றத்தில் காட்சியளித்தார். அவரைப் பார்க்கும் போது, அவரிடம் எந்த தவறையும் காண முடியவில்லை ராகவிற்கு.

“வணக்கம் தம்பி. நீங்க நேத்தே வந்ததா இந்த ஆவுடையப்பன் சொன்னாரு. வீடு சௌகரியமா இருக்கா…” என்று பேச்சை ஆரம்பித்தார்.

ராகவ் பதில் கூறும் முன்பே, “அதெல்லாம் சூப்பரா இருந்தது அங்கிள்… சாப்பாடும் சூப்பர்..” என்றாள் வீணா.

‘ஆரம்பிச்சுட்டா…’ என்று ராகவ் மானசீகமாக தலையில் கைவைக்க, அந்த தலைவரோ வீணாவைப் பார்த்து சிரித்தார்.

“ரொம்ப சந்தோஷம் மா..” என்று வீணாவிடம் கூறியவர், “இங்க எதுக்காக வந்துருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..?” என்று ராகவை நோக்கி வினவினார்.

அவர்கள் இருவரையும் பற்றி சுருக்கமாக கூறியவன், (இப்போதும் பத்திரிக்கை பெயரைத் தவிர்த்தான்) வளர்ச்சியடைந்த ஊர்களின் வரிசையில் இடம்பெற்றிருக்கும் அவர்களின் ஊரைப் பற்றிய கட்டுரையை எழுதுவதற்காக தகவல் சேகரிக்க வந்ததாக, மெய்யும் பொய்யும் கலந்த கதை ஒன்றைக் கூறினான்.

ஊரின் வளர்ச்சியைப் பற்றிக் கூறியதும், தலைவரின் முகம் ஒரு நொடி இயலாமையில் சுருங்கியதைக் கண்டு கொண்டான் ராகவ்.

“ஐயா, உங்க ஊருக்கு புதுசா ரோடு, ஹாஸ்பிடல், ஃபேக்டரின்னு கட்டிருக்காங்க… இதைப் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க..?” என்றான் ராகவ்.

சற்று தயங்கியவர், “ஊர் மக்களுக்கு சந்தோஷம்னா எனக்கும் சந்தோஷம் தான் பா… பத்து வருஷமா நல்ல ரோடு வேணும், ஆஸ்பத்திரி வேணும்னு அலஞ்சுட்டு இருந்தோம்… இப்போ எல்லாமே கிடைச்சுருக்குங்கிறப்போ சந்தோஷம் தான்…” என்று சமாளித்தார் தலைவர். மற்ற இருவருக்கும் அவரின் சமாளிப்பு புரியவில்லை என்றாலும் ராகவிற்கு தெரிந்தது.

மேலும் அவரிடமே எங்கிருந்து தகவல்களை பெறத் துவங்கலாம் என்று பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

“அப்போ நாங்க போயிட்டு வரோம்ங்க ஐயா…” என்றவாறே கிளம்பினான் ராகவ்.

அவனின் கையைப் பிடித்து அவன் செல்வதை தாமதப்படுத்தினார் தலைவர். வீணா அந்த பெரியவருடன் பேசிக் கொண்டே முன்னே சென்று விட்டாள்.

ராகவ் புருவம் சுருக்கி தலைவரைப் பார்க்க, அவரோ சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “ஜாக்கிரதையா இருங்க… யாரையும் நம்பிடாதீங்க…” என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

ராகவும் அவர் கூறியதை மனதில் நினைத்துக் கொண்டே.வீணாவுடன் சேர்ந்து கொண்டான்.

“அப்போ நான் கிளம்புறேன் பா… நீங்க உங்க வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துடுங்க… மதியம் சாப்பாடு…” என்று அந்த பெரியவர் இழுக்க, “அதை வெளிய பார்த்துக்குறோம்ங்க…” என்றான் ராகவ்.

“அப்போ சரி ராவுல பார்க்கலாம்…” என்று அவரும் விடைபெற்றார்.

“ஹே ராக்கி, அந்த அங்கிள் கிட்ட என்னை விட்டு என்ன ரகசியம் பேசுன…” என்று ராகவின் காதைக் கடிக்க, “அதுவே எப்படி உனக்கு தெரியும்..?” என்று ராகவ் வினவ, “அதெல்லாம் தெரியும்… அதுக்காக தான் அந்த பெரியவர இங்குட்டு இழுத்துட்டு வந்தேன்…” என்று கண்ணடித்தாள்.

இருவரும் பேசியபடியே அந்த ஊரின் மத்திய பகுதிக்கு வந்தனர். ஆங்காங்கே சில மனித தலைகள் தென்பட்டது.

“ஹே ராக்கி… கிராமம்னா, பொண்ணுங்களாம் வீட்டு திண்ணைல உக்கார்ந்து புரணி பேசுவாங்கன்னு கேள்விப்பட்டேன்… இங்க யாருமே இல்லாம வெறிச்சோடி இருக்கு…” என்று வெற்று திண்ணைகளைப் பார்த்து வீணா கேட்க, “அதான் அரசாங்கமே இலவச டிவி, மிக்சி, கிரைண்டர்ன்னு கொடுத்து வீட்டுக்குள்ளேயே இருங்கன்னு சொல்லிட்டாங்களே…” என்று கூறினான்.

பின் தெருவில் திரிந்த சிலரிடம் அந்த தொழிற்சாலை பற்றி விசாரித்தனர். அனைவரும் அதை ‘ஆஹா ஓஹோ’ என்று பாராட்டவே செய்தனர்.

“என்ன ராக்கி இது… விட்டா கோவில்னு நினைச்சு கும்பிடுவாங்க போல…” என்று வீணா அலுத்துக் கொள்ள, “ம்ம்ம் இங்க இருக்க யாருக்கும் அவ்ளோ அவேர்னெஸ் இல்ல… வா இன்னும் கொஞ்ச தூரம் போய் பார்ப்போம்…” என்றான் ராகவ்.

“ஹுஹும்… என்னால முடியல ராக்கி… ஃபீலிங் சோ டையர்ட்…” என்று அங்கிருந்த பெரிய கல்லில் அமர்ந்தாள்.

“இந்த ‘ஃபீலிங் சோ டையர்ட்’ கதையெல்லாம் என்கிட்ட வேணாம்… வரப்போவே என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன்…”

“போதும் போதும் நிறுத்து… கொஞ்சம் கேப் கிடைச்சா போதுமே… உடனே ஆரம்பிச்சுடுவியே…” என்று உதட்டை சுழித்துக் கொண்டாள் வீணா.

இரண்டு வினாடிகளில் அவளே ஆரம்பித்தாள். “ஹே ராக்கி கிராமத்துல கள்ளு கிடைக்குமாமே… சும்மா கிக்கா இருக்குமாம்…” என்று அவள் கண்ணடித்துக் கூற, அவளின் தலையில் தட்டியவன், “இதெல்லாம் யாரு உனக்கு சொல்றது…” என்றான் ராகவ்.

“ப்ச் அதெல்லாம் எதுக்கு உனக்கு… அங்க பாரு… கொஞ்ச தூரத்துல தோட்டம்னு நினைக்குறேன்… வா அட்லீஸ்ட் இளநீராவது கிடைக்குதான்னு பார்ப்போம்…” என்று அவன் மறுக்க மறுக்க இழுத்துச் சென்றாள்.

“ஹே லூசு வீன்ஸ்… என்னமோ நீ போனவொடனே, ‘வாங்க மகாராணி’ன்னு உன்னை வரவேற்குற மாதிரி போற…” என்று ராகவ் கேட்க, அதெல்லாம் அவள் காதில் விழுந்தால் தானே. ‘கொக்குக்கு மீன் ஒன்றே மதி’ என்பது போல, இப்போது வீணாவுக்கு இளநீர் ஒன்றே மதி…

இவர்கள் இருவரும் தோட்டத்தை நெருங்க, உள்ளே இருந்து சில பேச்சு குரல்கள் கேட்டன.

“என்ன மாடசாமி… எதுக்கு இப்படி இடிஞ்சு போயி உக்கார்ந்துருக்க…”

“உனக்கே தெரியுமே சுப்பு… அந்த ஃபேக்டரி ஆரம்பிச்சதும் தான் ஆரம்பிச்சாங்க… எல்லா பயலுகளும் அங்க போயிட்டாங்க… இப்போ அறுவடை பண்ற நேரம்… கூலிக்கு கூட ஆளுங்க வரமாட்டிங்குறாங்க… பக்கத்து ஊரு ஆளுங்கன்னா கூடுதலா காசு கேக்குறாங்க… இத்தன நாள் உழைப்பெல்லாம் வீணா போயிடுமோன்னு மனசு கெடந்து தவிக்குது சுப்பு…”

“என்ன பண்றது… எல்லாருக்கும் சாப்பிட சாப்பாடு வேணும்… ஆனா அதை விளைவிச்சு குடுக்குற விவசாயிங்க எப்படி போனாலும் பரவாலன்னு வாழுற உலகம் இது… இதுக்கு வெசனப்பட்டுட்டு இருக்காத…”

அந்த விவசாயியின் குரலிலிருந்த கவலை இருவரையும் தாக்கியது என்னவோ உண்மை தான்.

“ப்ச் அவரு சொல்றது உண்மை தான்ல… நமக்கெல்லாம் சோறு போடுற விவசாயிங்க ரோட்டுல இருக்காங்க… நாம அவங்க கொடுத்த சாப்பாட சாப்பிட்டு அவங்க படுற வேதனைய கொஞ்சமும் கண்டுக்குறது இல்ல…” என்று வீணா கூற, “உண்மை தான் வீன்ஸ்…நமக்கு மூணு வேள சாப்பாடு குடுக்குற அவங்க, சாப்பிடுறது என்னவோ ஒரு வேளை கஞ்சி தான்… என்ன தான் நாம சாப்பிடுற சாப்பாட்டுக்கு காசு கொடுத்தாலும், இடைநிலைல இருக்குறவங்க பங்கு போட்டுக்குறது போக அவங்களுக்கு கிடைக்குறது ரொம்ப கம்மி… இதுல அந்த திட்டம் இந்த திட்டம்னு கொண்டு வந்து அவங்க வாழ்வாதாரத்தையே மொத்தமா முடக்கிடுறாங்க… இது பத்தாதுன்னு, இந்த மாதிரி பெரிய பெரிய ஃபேக்டரிய விவசாய நிலத்துக்கு பக்கத்துலயே கட்டுறதுக்கு ஒப்புதல் கொடுத்துடுறாங்க… ஒரு பக்கம், இதுல இருந்து வர கழிவு நீரால பிரச்சனைனா… இன்னொரு பக்கம், இப்போ பார்த்தோமே, கூலித் தொழிலாளிங்கள எல்லாம் வேலைவாய்ப்புன்னு சொல்லி அவங்க பக்கம் இழுத்துடுறாங்க… இப்படியே போச்சுன்னா நமக்கு பின்னாடி வர ஜெனரேஷனுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்னாடி விவசாயம்னு ஒரு ‘தொழில்’ இருந்துச்சுன்னு புத்தகத்துல படம் போட்டு காட்ட வேண்டிய சூழல் உருவானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல…” என்று ராகவ் கூறிக் கொண்டே திரும்பிப் பார்க்க, அங்கு வீணா இவன் பேசியதை அலைபேசியில் பதிந்து கொண்டிருந்தாள்.

“ஹே என்ன பண்ற..?” என்று ராகவ் அலைபேசியை பறிக்க முயல, “ப்ச் சும்மா இரு ராக்கி… இதெல்லாம் பின்னாடி யூஸ் ஆகும்…” என்றாள்.

“பின்னாடி யூஸ் ஆகுமா..?” என்று ராகவ் வீணாவை குழப்பமாக பார்க்க, “ஆமா… பிற்காலத்துல நம்ம பசங்களுக்கு நீ அப்படி வீராவேசமா பேசுனன்னு போட்டு காட்டலாம்ல…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூற, “அடிங்… என்னையே கலாய்க்குறீயா…” என்று அவளைத் துரத்த யாருமில்லாத நடுரோட்டில் ஓடி பிடித்து விளையாடினர்.

சற்று நேரத்தில் இருவருக்குமே மூச்சு வாங்க, அவர்களின் நல்ல நேரமாக, அருகிலேயே ஒரு இளநீர்க் கடை இருந்தது. ஒரு முதியவர் அந்த வேகாத வெயிலிலும் குடையை விரித்துக் கொண்டு, இளநீர்க் கடையை வைத்திருந்தார்.

இருவரும் அங்கு சென்று அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே இளநீரைப் பருகினர்.

“பெரியவரே இந்த ஊர்ல ஒரு ஃபேக்டரி ஆரம்பிச்சுருக்காங்களே… அதைப் பத்தி என்ன நினைக்குறீங்க..?” என்று வினவினான் ராகவ்.

“அதைப் பத்தி எனக்கு என்ன தெரியப் போகுது… இந்தா உக்கார்ந்துருக்கானே அவன்கிட்ட கேளுங்க… அந்த பய தான் அங்க வேலை பார்த்தவன்… திடீர்னு நேத்து வந்து அங்க வேலைக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கான், கேனப்பய… யாராவது இவ்ளோ சம்பளம் தர வேலைய தூக்கிப் போடுவாங்களா…” என்று அந்த முதியவர் புலம்பிக் கொண்டிருக்க, அவர் கூறிய ‘கேனப்பய’னோ சற்று தள்ளியிருந்த கல்லில் மீது அமர்ந்து தூரத்தில் எதையோ வெறித்துக் கொண்டிருந்தான்.

ராகவ் அவனருகே நகர முயல, அவனின் சட்டையைப் பற்றி பின்னே இழுத்த வீணா, “ராக்கி நான் இன்னொரு இளநீர் வாங்கி குடிக்குறேனே…” என்று இளிக்க, வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டு, அவளிற்கு இன்னொரு இளநீர் வாங்கிக் கொடுத்து குடிக்க சொல்லிவிட்டு, அந்த இளைஞன் அருகில் சென்று அமர்ந்தான்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவன், அவனிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்பதால், “ஹாய் என் பேரு ராகவ்…” என்று அவனே அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அவனோ ஓரக்கண்ணில் இவனைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிப் கொண்டான். ‘பார்ரா…’ என்று நினைத்துக் கொண்ட ராகவ், விக்ரமாதித்யன் முதுகில் தொங்கும் வேதாளம் போல மீண்டும் மீண்டும் அவனை பேச வைக்க முயற்சித்தான்.

பத்து நிமிட முயற்சி சற்று பயனளித்தது. அவனின் பெயர் இளங்கோ என்றும், அந்த தொழிற்சாலையில் தான் மேற்பார்வையாளராக இருந்ததாகவும் கூறினான்.

“நல்ல வேலை… நல்ல சம்பளம்… அப்பறம் ஏன் அங்கயிருந்து வெளிய வந்துட்டீங்க..?” என்ற ராகவின் கேள்விக்கு, “நிம்மதி இல்ல சார்… ஏதோ தப்பு பண்ற மாதிரி தோணுச்சு…” இன்று அவன் கூற, ராகவோ அதை முதல் முறை கேட்பது போலவே ஆச்சரிய பாவம் காட்டினான்.

“நீங்க நம்பமாட்டீங்கன்னு எனக்கு தெரியும் சார்… ஊருக்குள்ள பாதி பேரு நான் சொன்னதை நம்பல… எனக்கு ‘லூசு’, ‘பொழைக்க தெரியாதவன்’னு நிறையா பட்டம் கொடுத்தது தான் மிச்சம்… ஆனா எனக்கு நல்லா தெரியும் சார்… அங்க ஏதோ தப்பு பண்றாங்க…” என்றான் உறுதியாக.

ராகவும் அவனிடம் விடாமல், “எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க, இளங்கோ..?” என்று வினவினான்.

“வாரத்துக்கு ரெண்டு தடவ ஆக்சிடென்ட்னு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறாங்க சார். ஆக்சிடென்டானா, எதுனால அப்படி ஆச்சுன்னு கண்டுபிடிச்சு அதை சரி செய்யணும்ல சார்… ஆனா, அதை அவங்க காதுலயே வாங்க மாட்டாங்க… திரும்ப ஒரு ஆக்சிடென்ட்… திரும்பியும் ஹாஸ்பிடல்… இப்படி தான் போயிட்டு இருக்கு சார்… எல்லா ஃபேக்டரிலயும், வேலை முடியலைனா வேலை நேரத்துக்கு பின்னாடி கூட இருந்து முடிச்சு கொடுத்துட்டு போக சொல்லுவாங்க… ஆனா இங்க மட்டும், வேலை இருந்தாலும் டான்னு அஞ்சரைக்கு எல்லாரையும் அனுப்பிடுவாங்க… சில நாட்கள், நைட்ல கூட அங்க ஏதோ தோண்டுற சத்தம் கேக்கும் சார்… எதுக்கு நைட்ல வேலை செய்றாங்கன்னு யோசிச்சுருக்கேன்… அது மட்டுமில்லாம, அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாத சிலர் அங்க வந்துட்டு போறத நானே பார்த்திருக்கேன்… இதெல்லாம் தனி தனியா பார்த்தா பெருசா தெரியாது சார்… ஆனா எல்லாத்தையும் சேர்த்து வச்சு பார்த்தா… எனக்கு சரியா சொல்லத் தெரியல சார்… ஆனா ஏதோ தப்பு நடக்குதுன்னு மட்டும் புரியுது…” என்றான் இளங்கோ.

“ம்ம்ம் இது வரைக்கும் நான் கேட்டது எல்லாமே ஃபேக்டரிய பத்தின பாசிட்டிவ் விஷயங்கள் தான்… அதுவே எனக்கு சந்தேகத்த கொடுத்துச்சு… அதுக்கு தான் உங்க கிட்ட திரும்ப திரும்ப கன்ஃபார்ம் பண்ணிக்க கேட்டேன்…” என்றவாறே எழுந்தான் ராகவ்.

“ஓகே இளங்கோ… கண்டிப்பா அது என்ன தப்புன்னு கண்டுபிடிக்கலாம்… நீங்க எங்களுக்கு உதவியா இருப்பீங்களா…” என்று வினவ, இளங்கோவும், “கண்டிப்பா சார்…” என்று சொல்லி முடிக்கும் வேளையில் எங்கிருந்தோ வந்த மகிழுந்து இளங்கோவை இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments