அத்தியாயம் – 5
இவன் தீயென்று புரிகிறதா?
அந்த வேன் ஊர்ந்து ஊர்ந்து மிக நீண்ட நேரம் செல்லுவது போல் இருந்தது அக்னிக்கு.
‘அடேய்.. ஓட்ட சொன்னா என்னடா உருட்டிட்டு இருக்கீங்க?’ என்று உள்ளுக்குள் சலித்தவள்.. சற்று நேரம் கண் மூடி அமர்ந்திருந்தாள்.
மூடிய விழிகளுக்குப் பின்னே, இன்னுமிரு விழிகள் தென்பட்டன!
‘அது.. அது.. அவனோட கண்களே தான்.. அதே இடக்கண்ணுக்குள், கருவிழியை ஒட்டியபடி இருக்கும் அந்த மச்சம்!’
திடுக்கிட்டு கண் விழித்தாள் அக்னி. அந்த ஒற்றை நொடியில் முகமெல்லாம் முத்து முத்தாய் வியர்வை!
‘எப்படி மறந்தேன் அதை?’ என்று இவள் தனக்குள்ளாக நொந்து கொண்டிருந்த சமயத்தில், பின்னிருக்கையில் அந்த சூர்யா யாருடனோ பேசி சிரிக்கும் சததம் கேட்டது.
திரும்பிப் பார்த்தால்.. பளிச்சிடும் அவன் இடக்கண்ணுக்குள் அதே கருநிற மச்சம்!
மூச்சடைத்தது பெண்ணுக்கு!
‘இல்ல.. எல்லாம் வெறும் கனவு.. எப்பவோ.. எங்கயாவது இந்த மாதிரி கதை படிச்சிருப்பேன்.. அதனால வரும் கனவு இது.. இப்போ இந்த சூர்யாவுக்கு இப்படி மச்சம் இருக்கறது வெறும் தற்செயல்..’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
ஆனால் நிஜம் மருட்டியது! மூளையின் சமாதானத்தை மனம் ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் அதே கனவும், அந்தக் கனவுடன் சம்மந்தப்படுத்தி சூர்யாவின் நினைவுகளும் பாறை இடுக்கினில் தளிர்விட்ட சிறு கொடியாய் வளர்ந்து கொண்டே வந்தது!
அவள் மனதில் இதுவரை வேறு எந்த விதமான வயதின் உணர்ச்சிகளுக்கும் அவள் இடம் கொடுத்ததே இல்லை.. ஆனால் இப்பொழுது நிச்சயமாய் அவள் மனது அவள் பேச்சைக் கேட்கவில்லை.
அது பாட்டிலும் தன் போக்கில் தான் செல்வேன் என்று அடம்பிடித்தது. அதன் கடிவாளத்தை அவ்வப்பொழுது இறுக்குவதே இப்போதெல்லாம் அக்கினிக்கு முழுநேர வேலையாகிப் போனது!
அந்த நினைவுகளிலேயே, அவ்வளவு நீண்ட தூர பயண.. க்ஷண நேரமாய் சுருங்கிவிட, அவர்கள் சென்ற வேன், மெதுவே அந்த பேலஸின் வெளி கேட்டின் முன்பு நின்றது.
அது அங்கு நின்றது கூட உணராத அக்னியோ, தன் சிந்தனையிலேயே உழன்றிருக்க, சூர்யா தான் அவளருகே வந்து அழைத்தான்.
“அக்கா..” என்று அவன் அழைக்கையில் திடுக்கிட்டு நனவுலகிற்கு வந்தவள், மொழியறியா பேதையாய் விழிக்கவும்.. “பேலஸ் வந்துடுச்சு.. வாங்க..” என்றான் நகை முகமாகவே.
ஆனால் அக்னிக்கோ இதயத்தின் தாளம் எகிறியது!
சிங்கத்தின் குகைக்குத் தன்னந்தனியாக.. கையில் எவ்வித ஆயுதமும் இன்றி.. தானாக வரும் பலியாடு போல வந்தாகிவிட்டது.
இனி.. அந்த சிங்கம் மெல்ல வந்து, அவள் தலையைத் தடவி.. அவள் கழுத்தில் பல் பதிக்கப்போவது தான் பாக்கி.
ஆனால்.. அந்த சிங்கத்திடம் இவள் உயிர் போகும் முன்னர்.. அதன் வயிற்றை, இவள் விரல் கொண்டேனும் பிளந்துவிடுவாள்.. அந்த வெறி.. அந்த நம்பிக்கை.. அதீதமாகவே இருந்தது அக்னிக்கு.
எனவே ஒரு பெரு மூச்சுடன் எழுந்த அக்னி.. மெல்ல அந்த வேனிலிருந்து கீழிறங்கினாள்.
ஹப்பா.. கழுத்தை நிமிர்ந்து பார்த்தால்.. அந்த பேலஸின் உயரம் நீண்டு கொண்டே போய் கொண்டிருக்கிறது..
அதன் வெளி கேட்டிலிருந்து பார்க்கும் பொழுதே அந்த பேலஸ் இவ்வளவு உயரம் என்றால்.. அதனருகே செல்லுகையில் அதன் உச்சி கூட தெரியுமோ என்னவோ?
அத்தனை ஆடம்பரத்தைப் பார்த்து வளர்ந்திருந்த அக்னிக்கே, அந்த பேலஸின் தோற்றம் வாயைப் பிளக்க வைத்தது என்றால், அருகிலிருக்கும் சூர்யாவுக்கு எப்படி இருக்கும்? என்று எண்ணத்துடன் அக்னி, அவனைத் திரும்பிப் பார்த்தால், அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, இவள் திரும்பிப் பார்க்கவும் சட்டென தனது தலையைத் திருப்பிக் கொண்டான்.
‘இவ்வளவு நேரம் என்னையே பார்த்துட்டு இருந்தானா என்ன?
ச்சே.. ச்சே.. இருக்காது..’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டவள், மீண்டும் சூர்யாவின் புறம் திரும்பி..
“என்ன தம்பி பேலஸே இவ்வளவு பெருசா இருக்கு?” என்றாள் போலியாய் மிரண்ட குரலில்.
அதே குரலிலேயே.. “ஆமால்ல.. இதெல்லாம் நாம பார்க்கறதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்..” என்றான் பிரம்மிப்புடன்.
அவனை வெறித்து நோக்கினாள் அக்னி.
“பளபளப்பான பொருட்கள்ல தான் சூர்யா ஆபத்து இருக்கும்..” என்று அவள் ஒரு மாதிரியான குரலில் கூற, சூர்யாவின் நடை நின்றது.
சில அடிகள் முன்னே சென்ற அக்னி, தன்னுடன் சூர்யா வராததைக் கண்டு திரும்பினாள்.
“என்னாச்சு?” என்று அவள் கேட்க, அவளையே பார்த்திருந்த சூர்யா, சட்டென மாற்றிக்கொண்ட தன் முகபாவத்தோடு.. “ஒன்னுமில்லையே..” என்று தொடர்ந்து நடக்கலானான்.
அங்கே பேலசுக்குள் சென்றதும், விரைப்பாக காட்டன் புடவை அணிந்த மத்திம வயதுப் பெண் ஒருவர் அவர்களை வரவேற்றார்.
வரவேற்பென்றால்.. ‘வருக மகாராணி.. வருக..’ என்றெல்லாம் இல்லை.
ரொம்பவும் மிடுக்காக..
“ஹ்ம்ம்.. எல்லாரும் இவ்வளவு நாள் ரோடு போடற வேலைல ரொம்ப கஷ்டப்பட்டு வெயிலையும், மழையையும் வேலை செஞ்சிருப்பீங்க.. இப்போ இந்த பேலசுக்குள்ள ஏ.சில வேலை செய்யலாம்.. என்ன எல்லாருக்கும் சந்தோசமா?” என்று கேட்க, அக்னியோ..
‘ஆமா.. பெரிய கலெக்டர் வேலை போட்டு கொடுக்கப்போறாங்க, நாங்க சந்தோசப்படறதுக்கு..’ என்று வாய்க்குள் முணுமுணுக்க, அருகில் நின்றிருந்த சூர்யா, பக்கென்று சிரித்துவிட்டான்.
அவன் சிரித்ததைக் கண்டு அந்தப் பெண்மணி..
“ஏய்.. அங்க என்ன சிரிப்பு..” என்று கேட்க, சூர்யாவோ படக்கன தலையைக் குனிந்து கொண்டான்.
“தம்பி.. கொஞ்சம் வாய வச்சுட்டு சும்மா இருடா.. நீயே என்ன மாட்டிவிட்டுடுவ போலிருக்கே..” என்று உதடு அசையாமல் அவள் கிசுகிசுக்க, இன்னமும் பீறிட்ட சிரிப்பை உதட்டுக்குள் அடக்கிக் கொண்டான் அவன்.
பிறகு அந்தப் பெண்மணி, சூர்யாவை ஐந்தாவது தளத்திலும், அக்னியை மூன்றாவது தளத்திலும் சுத்தம் செய்ய அனுப்ப, அது போலவே அவர்களுடன் வந்த மற்றவர்களையும் தளம் தளமாகப் பிரித்து அனுப்பினாள்.
மெல்ல மூன்றாம் தளத்திற்கு வந்த அக்னியோ, அவளுடன் வந்த மற்றொரு பெண்ணைப் பார்த்தாள். அந்தப் பெண்ணை முன்னமே அக்னிக்குத் தெரியும்.. எனவே மெதுவே அவளிடம் பேச்ச கொடுக்க ஆரம்பித்தாள்.
“என்ன ஆயிஷா.. வெளில துர்காம்மா சொன்ன மாதிரி அந்த வெய்யில்ல வேலை செஞ்சதுக்கு.. இனி இந்த வீட்டுல தான் வேலை செய்யப்போறோம்ன்றது மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்குல்ல?” என்று கேட்க, ஆயிஷாவோ அவளை வித்தியாசமாகப் பார்த்தாள்.
“என்னக்கா.. உங்களுக்கு எதுவுமே தெரியாதா?” என்று கேட்டவள்.. தானாகவே..
“அட நீங்க இங்க புதுசுல்ல.. அதான் தெரியல.. அக்கா.. இது நீங்க நினைக்கற மாதிரியான இடம் கிடையாது.
இங்க யாரும் ஒரே இடத்துல தொடர்ந்து வேலை செஞ்சுட்டு இருக்க மாட்டாங்க.. அடிக்கடி நாம வேலை செய்யற இடத்தை மாத்திக்கிட்டே இருப்பாங்க.. அதே மாதிரி இந்த க்ரூப்ல இருக்கற ஆளுங்க மறுபடியும் அப்படியே ஒன்னா வேற இடத்துக்கு வேலைக்குப் போவாங்கன்னும் சொல்ல முடியாது.. அவங்க கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு அனுப்புவாங்க..” என்று அவள் கூறவும் அக்னிக்குத் திகைப்பு..
அவளது திகைப்பைக் கண்டுகொள்ளாது.. “இன்னைக்கே கூட நம்மள்ல யார வேணாலும், எங்க வேணாலும் மாத்தி அனுப்புவாங்கக்கா.. எல்லாம் சேஃப்ட்டிக்காகத் தான்.” என்று அவள் முழுதாகக் கூறி முடிக்கவும்.. அக்னி, தான் உடனே செய்யவேண்டியது என்னவென்று முடிவெடுத்துவிட்டாள்.
அந்தப் பெண்ணிடம் பேசி முடித்துவிட்டு சற்றுத் தள்ளி வந்தவள்.. தனது திட்டத்தை உடனே செயலாக்க முனைந்தாள்.
அதன்படி அந்தத் தளத்தில் இருந்து மெல்ல யார் கண்ணையும் கவராது மேலே இரண்டு தளங்கள் ஏறி வந்தவள்.. விழிகளால் துழாவி சூர்யாவை அடைந்தாள்.
ஏதோ வேலை செய்வது போல, மெல்ல மெல்ல அவனருகே சென்றவள்.. வெகுவாகக் குரலைத் தனித்து.. “தம்பி..” என்று அழைக்க, அவனோ திடுக்கிட்டான்.
“நீங்களா? இங்க என்ன பண்ணறீங்க நீங்க?” என்று அவன் கேட்க, இவளோ..
“தம்பி.. அக்காக்கு ஒரு ஹெல்ப் வேணும்டா..” என்றாள் கெஞ்சுதலாக.
“ஹெல்ப்பா? இங்க என்ன ஹெல்ப் வேணும்? உங்களுக்கு ஏதாவது வேணும்னா துர்காம்மாக்கிட்டயே கேட்டிருக்கலாம்ல?” என்று அவன் பதில் கேள்வி கேட்க, அக்னியோ..
“தம்பி.. அக்காக்கு உன்னோட ஹெல்ப் தான் வேணும்..” என்று பாவமாக முகத்தை வைத்துக் கேட்கவும்.. ஒரு பெருமூச்சுடன்,
“சரி என்ன ஹெல்ப் வேணும் அக்கா?” என்றான்.
சுற்றும் முற்றும் பார்த்து யாராவது அவர்களைக் கவனிக்கிறார்களா என்று அவதானித்துவிட்டு, அவனிடம் ரகசியக் குரலில் பேசத் துவங்கினாள் அக்னி.
“தம்பி.. அக்கா ஒரு முக்கியமான விஷயத்துக்காக இங் வந்திருக்கேன்.. இங்க நம்ம ஓனர் ருத்ர பிரதாபன் இருக்காருல்ல?” என்று அவர் கேட்க, சூர்யாவின் விழிகள் விரிந்தன!
“ஹோ?! ஆமாம்.. அவருக்கு என்ன?” என்று தனது விழிகளின் பளபளப்பை அடக்கியவாறு அவன் கேட்க, அக்னி தொடர்ந்தாள்.
“அவர் ரூம்ல ஒரு முக்கியமான விஷயம் அக்கா பார்க்கணும்..” என்று கூறவும், சூர்யா திடுக்கிட்டான்.
“அவர் ரூமுக்கேல்லாம் நாம எப்படி போக முடியும்?” என்று அவன் கேட்க, அதற்கும் அக்னி அவனது உதவியைத் தான் நாடினாள்.
“தம்பி.. இங்க பாரு.. அவர் ரூம் எங்க இருக்குன்னு மட்டும் சொல்லு.. மத்தத அக்கா பார்த்துக்கறேன்..” என்று கூற, இப்பொழுது தெளிவடைந்தான் சூர்யா.
“எனக்கு அவர் ரூம் தெரியும்.. வாங்க போலாம்..” என்று அவளைக் கூட்டிக் கொண்டு போனான்.
“இதே ஃப்ளோர்ல தான் இருக்கு..” என்று கூறியபடி அவன் முன் செல்ல, அக்னி அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவனது அறையைக் கண்டுபிடித்து அந்த அறைக்குள் சென்றதும், அதன் பிரம்மாண்டம் அக்னியை பிரம்மிக்க வைத்தது.
கூடவே காரணமறியாத ஒரு திகிலையும் உண்டாக்கியது!
அந்தத் திகில் உண்டாக்கிய பீதியில், சூர்யாவிடம் திரும்பியவள்.. “தம்பி.. அக்காவ எந்த சூழ்நிலையையும் கை விடமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு பார்க்கலாம்..” என்று அவள் தன் வலது கையை நீட்ட, அவளுக்கும் மேலே வானளாவ வளர்ந்திருந்த அவனோ.. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல்..
“அக்கா ப்ராமிஸ்.. போதுமாக்கா..” என்றான் சிரித்துகொண்டே சத்தமாக.
“டேய்.. டேய்.. ஷ்.. ஷ்.. ஏண்டா கத்தற? அந்த ருத்ர பிரதாபன் வந்துடப் போறேன்டா..
நீயே என்ன காட்டிக் கொடுத்துருவ போலிருக்கே..” என்று அவள் கோபமாகக் கூற, அந்த அப்பாவியோ..
“அக்கா.. என்னக்கா இப்படி சொல்லிட்ட? நான் போய் உன்ன காட்டிக் கொடுப்பனா?” என்று சிணுங்கலுடன் கேட்டான்.
“உன் உயரமே போதும்டா என்ன காட்டிக் கொடுக்க.. நாம எங்க இருக்கோம்னு தெரியும்ல? அந்த ருத்ர பிரதாபனோட ரூம்ல.. இப்படி சாவகாசமா நாம நின்னு பேசறத அவன் பார்த்தா.. ரெண்டு பேருக்குமே சங்கு தாண்டி..
அதனால இப்போ நீ என்ன பண்ணற? அக்காவ அப்படியே ஃபாலோ பண்ற..” என்றபடி கீழே மண்டியிட்டு அவள் தவழ்ந்து செல்ல, அந்த இளைஞனோ..
‘கர்மம்டா..’ என்றபடி தலையில் அடித்துக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்தான்!
ஊர்ந்து சென்று அங்கிருந்த ஒரு மேசையை மெல்லத் திறக்க.. அதே வேளையில்.. அதன் கதவு திறக்கும் ஓசையுடன், அந்த அறையின் கதவு திறக்கும் ஓசையும் சேர்ந்து கேட்க, அங்கு வந்தான் அவன்!
அவளுடைய உயரத்திற்கு புதிதாக வந்தவனும் வான் தொட்டே நிற்க.. அவனைப் பார்த்ததும் தொண்டைக்குழி வறண்டுவிட்டது அவளுக்கு.
‘அய்யயோ.. அந்த ருத்ர பிரதாபன் வந்துட்டானா?’ என்று முகமெல்லாம் வியர்த்து வழிந்தபடி மெல்ல மிடறு விழுங்கி கொண்டே அந்த அப்பாவி தம்பியைத் திரும்பி பார்த்தால்.. அந்த அப்பாவியோ, புதியவனைப் பார்த்தபடியே மேலே எழுந்து நின்றான்.
அந்த அப்பாவி, அவனை விடவும், சற்று உயரமாக இருக்க.. ‘சரி அந்த ருத்ர பிரதாபான விட இந்தத் தம்பி கொஞ்சம் ஹைட்டா இருக்கான்.. இவன வச்சு இங்கிருந்து தப்பிச்சுட வேண்டியது தான்..’ என்று எண்ணமிட்டபடியே.. மெல்லத் தந்தியடித்த தன் வாயைக் கட்டுப்படுத்திக் கொண்டு..
“தம்பி..” என்று அவள் பாவமாகக் கூற, அவனோ.. இவளைக் கை பிடித்து மேலே எழுப்பிவிட்டான்.
அவள் மேலே எழுந்தவுடன்.. அந்தப் புதியவனோ.. சட்டென தரையில் மண்டியிட்டு அமர்ந்து, நெஞ்சோடு கை வைத்து.. தலையையும் குனிந்து கொண்டபடி..
“உடனே இங்க வர சொல்லி மெசேஜ் வந்துச்சு ஜி..” என்று பணிவுடன் கூற.. பெண்ணனவளின் மூளைக்கோ அப்பொழுது தான் உண்மை உறைத்தது!
‘அய்யயோ.. இவன் தான் அப்போ ருத்ர பிரதாபனா? இத்தனை நாள் இது கூட தெரியாமத் தான் இவன் கூடப் பழகிட்டு வந்தோம்..
எங்கெங்கேயோ கத்துகிட்ட வித்தையெல்லாம் இப்படி ஒரே நிமிஷத்துல புஸ்ஸுன்னு போய்டுச்சா? கடவுளே..” என்று பயத்தில் நடுங்கியபடியே அவள் திரும்பிப் பார்க்க.. அந்த ருத்ர ப்ராதபனின் விழிகளில் இருந்தது என்ன?!
அவளால், அவனது முக பாவனையில் இருந்து எதையும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்.. அந்தக் கண்களைப் பார்த்ததுமே உள்ளுக்குள் குளிர் பரவ.. அவன் பிடியில் இருக்கும் தன் கையை மெல்ல உருவ முயன்றாள்!
ஆனால்.. அவனது உடும்புப் பிடியில் இருந்த கரமோ, இவள் பக்கம் வருவதாய் தான் இல்லை!
இவளது திகைத்த முகத்தைப் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்த ருத்ரனோ, சட்டென அவளது கையைத் தன் புறமாய் இழுக்க.. அந்த விசையில் பொத்தென அவன் மார் மீதே போய் விழுந்தாள் பெண்!