Loading

அத்தியாயம் – 5 

வெண்டைப்பிஞ்சு விரல்களை மென்மையாகப் பற்றி, மறு கரத்தில் மோதிரத்தைப் பிடித்திருந்த ராகவ், மணியின் விரலில் அதை அணிவிக்காமல் சில நிமிடங்கள் தாமதிக்கவும், அதுவரை தரையிலேயே பார்வையை ஓட்டிக் கொண்டிருந்த மணி.. தயக்கத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

அவள் கேள்வியாய் பார்க்கவும்.. அவளை பார்த்து பிறருக்குத் தெரியாதபடிக்கு மெல்லியதாகக் கண்ணடித்தவன், அவள் அதிர்ந்து விழிக்கவும் சிரித்த முகமாகவே அவளது விரலில் மோதிரத்தைப் போட்டுவிட்டான்.

 

அவளுக்கு என்னவோ எல்லாமே குழப்பமாக இருந்தது!

 

யாரிடம் சென்று தன் குழப்பத்தைப் போகிக் கொள்வது?

 

பலருக்கும் அவள் அறிவுரை வழங்கியிருக்கிறாள். தங்களது சொந்த விஷயங்களை எல்லாம் அவளிடம் பகிர்ந்து, அவளது ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்கள் அவள் தோழிகள்.

 

தோழிகள் என்று பலரும் இருந்தாலும், அவர்களுடன் ஆடிப் பாடி மகிழ்ந்தாலும், நேரம் காலம் தெரியாமல் ஊர் சுற்றினாலும் இவளது மனதின் வருத்தங்கள்.. குழப்பங்கள் என எதையும் அவள் தன் தோழிகளிடம் பகிர்ந்ததில்லை.

 

தாய், தந்தை இப்பொழுது உயிருடன் இல்லை என்ற வருத்தம் மட்டுமே அவளுக்கு எப்பொழுதும் இருப்பது. ஆனால் அது குறித்தும் எவராவது பரிவாகவோ.. பச்சாதாபம் காட்டியோ பேசினால், காளியாவதாரம் எடுத்து விடுவாள் மணி.

 

அவளுக்குத் தான் பெற்றோர் பற்றிய ஏக்கத்தையும் தீர்க்க அவளது பாட்டி இருக்கிறாரே..

 

அதனால் எந்தவொரு சோகமான, மன சங்கட்டமா விஷயத்தையும் அவள் தன் தோழிகளுடன் பேசியதே இல்லை.. இப்பொழுது திடீரென்று எப்படித் தன் திருமண விஷயத்தைப் பற்றி மற்றவரிடம் பேசுவது என்ற தயக்கம் மேலிட.. ராகவைப் பற்றிய குழப்பம் தீராமலேயே நிச்சயதார்த்தம் முடிந்தது.

 

விழாவெல்லாம் முடிந்து, இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்பதால்.. வந்திருந்த நெருங்கிய உறவினர்கள் எல்லாருக்கும் ஒரு பெரிய ஹோட்டலில் அறையெடுத்து கொடுத்திருக்க அவர்கள் எல்லாரும் அங்கே சென்றுவிட்ட பிறகு, இவர்கள் மட்டுமாக களைப்பு தீர மாடியில் நிலவின் வெளிச்சத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

அனைவர்க்கும் பாட்டி தான் உணவு பிசைந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அலங்காரமெல்லாம் களைந்து, ஒரு மெரூன் நிற பைஜாமாவில், தூக்கிக் கட்டிய கொண்டையுடன் மாடியேறி வந்தவளை விழியகலாது பார்த்தான் ராகவ்.

 

மணியின் பார்வை எதேச்சையாக அவன் புறம் திரும்ப, அவன் பார்த்த பார்வையில் மெல்ல அவள் காதோரம் சிலிர்த்தது.

 

‘இவன் எதுக்கு இப்படி பார்க்கறான்? என்ன தான் வேணும் இவனுக்கு? எப்படி இவனால இப்படி உடனே மாற முடியுது? என்னால இன்னமும் இவன என் புருஷனா நினச்சு பார்க்கக் கூட முடியலையே கடவுளே..’ என்று இவள் உள்ளூர அவஸ்த்தையாய் புலம்பிக் கொண்டிருக்க, அவளருகில் அமர்ந்திருந்த தேவகியோ..

 

“என்னடி.. மோதிரம் டிசைன் எல்லாம் உனக்குப் பிடிச்சுருக்கா?” என்று சாதாரணமாகப் பேச்சைத் துவங்கினார்.

 

அதுவரை திருமண ஏற்பாடுகள் பற்றி பேசிக் கொண்டிருந்த அனைவரிடத்திலும் சட்டென ஓர் அமைதி.

 

இன்னமும் மணி மனதளவில் இந்தத் திருமணத்திற்குத் தயாராகவில்லை என்று அனைவருக்குமே உள்ளுக்குள் தோன்றித் தான் இருந்தது. ஆனாலும் வீட்டின் பெரியவர்.. அழகுமணி பாட்டியின் விருப்பத்திற்கிணங்க உடனே நிச்சயம், திருமணம் என்று வைத்துவிட்டாலும்.. மணி அனைத்திற்கும் சம்மதம் சொல்லிவிட்டாலும்.. அவள் எதிலாவது முழு ஈடுபாட்டோடு கலந்து கொள்ள மாட்டாளா என்ற ஆர்வம் அனைவருக்குமே, மானபரன் உட்பட இருக்கத் தான் செய்தது.

 

ஆனாலும் அவனும் கூட எதையும் பெரிதாகக் கொள்ளவில்லை.

 

‘பொண்ணுன்னா கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்குப் போய் தான் ஆகணும்.. இதுல இவ மட்டும் என்ன ஸ்பெஷல்? அதுவும் சின்னதுல இருந்து கூடவே வளர்ந்த ஒருத்தன தான கல்யாணம் செஞ்சுக்கப் போறா?

 

அப்படி அவன் தப்பு கிப்புன்னு ஏதாவது செஞ்சான்னா.. அவன் அப்பாவே அவன சும்மா விடமாட்டார். இருந்தும் எதுக்கு இவ இவ்வளவு சீன போட்டுட்டு இருக்கா?’ என்று அலட்சியமாக எண்ணியவன்..

 

‘எப்படியோ இவ சீக்கிரம் கல்யாணம் பண்ணி போய்ட்டா.. நம்ம தலைல ஏறின பொறுப்ப இறக்கி வச்சுடலாம்..’ என்ற மனநிலையில் தான் அவன் இருந்தான்.

 

எனவே தான் அவள் இந்தத் திருமணத்திற்கு சந்தோசமாக ஒப்ப வேண்டும் என்றும் விரும்பினான்.

 

இப்பொழுதும் தேவகியின் இந்தக் கேள்விக்காவது மணி சற்று உற்சாகமாக பதில் சொல்லுவாள் என்று அவன் எதிர்பார்த்தால்.. அவனுக்கு மட்டுமல்ல, சுற்றி இருந்த அத்தனைப் பேருக்குமே பேரதிர்ச்சி தான்!

 

ஏனென்றால்.. மணி அந்த மோதிரத்தைப் போட்டிருக்கவே இல்லை அப்பொழுது!!

 

தன் கையைத் திருப்பிப் பார்த்தவள்.. “தெரியல அத்தை.. நான் அத சரியா கவனிக்கவே இல்லையே..” என்க.. அப்பொழுது தான் எல்லோரும் அவள் அந்த மோதிரத்தை கழற்றியிருந்ததையே கவனித்து அதிர்ந்தார்கள்!

 

“ஏய்.. என்னடி மோதிரத்த அதுக்குள்ளே கழட்டிட்ட?” என்று பாட்டி கேட்க, பாலாஜியோ.. சங்கடமாக முகத்தைத் திருப்பிக் கொள்ள.. தேவகியோ வாயில் கை வைத்து அதிர்ந்துவிட.. ராகவுக்கோ கோபத்தில் கண்கள் சிவந்து, அங்கிருந்து விருட்டென எழுந்து சென்றுவிட்டான்.

 

அதைக்கண்ட மானபரனுக்கு சிரிப்பு தான் வந்தது!

 

“இவளுக்கெல்லாம் கல்யாணம் செஞ்சு வைக்க நினைச்சீங்க பாருங்க.. உங்கள சொல்லணும்..” என்று அவன் பாட்டியிடம் கேலியாய் உரைக்க, அது ராகவின் காதிலும் விழுந்தது.

 

மற்றவர் யாரும் எதுவும் கூறும் முன்னர் மீண்டும் அங்கு வந்த ராகவோ..

 

“ஏய்.. வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றான் மணியைப் பார்த்து.

 

அவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. பாட்டியின் மடியிலேயே படுத்திருந்தவள், தன் கையிலிருந்த மெஹந்தியை அப்படியும் இப்படியுமாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்க.. பொறுமையிழந்த பெருமூச்சுடன் அவளருகே வந்தவன்..

 

“ஹேய்.. உன்ன தான் கூப்பிடறேன்..” என்று சற்று சத்தமாகக் கூற, இப்பொழுதும் அவள் அதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

 

அவனது சத்தத்தில் தேவகி தான்..

 

“மணி.. உன்ன தான கூப்படறான்.. என்னனு கூட கேட்காம படுத்துட்டு இருக்க?” என்று அவளிடம் கூற, மணியோ..

 

“ஹோ?!” என்று ஆச்சர்யப்பட்டாள்!

 

“எனக்கு “ஏய்”ன்னு கூட இன்னொரு பேர் வச்சீங்களா அத்தை?” என்று அவள் போலியாய் வியப்பு காட்டி கேட்க, ராகவின் பொறுமை கரையைக் கடந்தது.

 

“உனக்கு என்னென்ன பேரெல்லாம் வச்சாங்கன்னு நான் சொல்லறேன் வா..” என்று அவளது கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, இழுத்துக் கொண்டு செல்ல, சுற்றி இருந்தவர்களிடம் பதட்டம்.

 

“டேய் மனோ.. போய் என்னன்னு பாருடா.. அவன் வேற கோபத்துல இருக்கற மாதிரி தெரியுது..” என்று மானபரனிடம் பதறிப்போய் கூற, அவனோ..

 

“விடுங்க.. ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்ல..” என்று சாதாரணமாகக் கூறிவிட்டு, பாட்டியிடம்..

 

“ஹ்ம்ம்.. பாட்டி இன்னும் கொஞ்சம் சாப்பாடு வைங்க..” என்று கைய நீட்டினான்.

 

சிறியவர்களின் இந்தப் போக்கு பாலாஜிக்கு பயத்தைக் கொடுத்தது. எந்தத் தெளிவும் இல்லாது இவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்தது தவறோ என்று தோன்றியது அவருக்கு. 

 

ஆனால்.. அவருக்கு எப்பொழுதும் தாயிடம் இருக்கும் மரியாதையாலும், அதையும் விட பயத்தாலும் அவரிடம் எதுவும் கேட்க முடியவில்லை.. இந்தத் திருமணத்தைப் பற்றி கருத்தும் கூட கூற முடியவில்லை அவரால்.

 

மணியை விறுவிறுவென அவளது அறைக்கு இழுத்துப் போன ராகவோ.. “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க?” என்று அவன் ஆத்திரமாய் கேட்க, அவளோ அவனை அலட்சியமாய் பார்த்தாள்.

 

“ஒரு மோதிரத்தை கழட்டுறது என்ன பெரிய விஷயமா? தாலிய கூட கழட்டி வைப்பேன்.. என் இஷ்டம்.. உனக்கு என்ன?” என்று அவள் கேட்க, ராகவுக்கு கோபம் கட்டுக்கடங்காது விரிந்தது!

 

“இங்க பாரு மணி.. எனக்கு இந்த மோதிரம், தாலி இது மேல எல்லாம் சென்ட்டிமென்ட் இல்ல.. நம்பிக்கையும் இல்ல.. 

 

ஆனா கல்யாணத்து மேல நம்பிக்கை இருக்கு.. என்னைக்கு பாட்டி, உனக்கும் எனக்கும் கல்யாணம்னு பேசினங்களோ அப்பவே நான் முடிவெடுத்துட்டேன்..

 

எனக்கு எல்லாமே தெளிவாகிடுச்சு.. இன்னும் உன் மரமண்டைக்கு எதுவும் தெளிவாகலன்னா, இப்போ நல்லா புரிஞ்சுக்கோ.. இந்தக் கல்யாணம் எனக்கு வாழ்க்கை முழுசுக்குமானது.

 

இது உனக்கும் அப்படித் தான் இருக்கும்.. இருக்கணும்.. 

 

உன் இஷ்டப்படி விளையாட்டுத் தனமா இருக்க இது ஒன்னும் ஸ்கூல் டிராமா கிடையாது. புரிஞ்சுக்க..” என்று அவன் மிகவும் தீவிரமாகக் கூறிக் கொண்டிருக்க, அவன் பேசுவதை இவள் இப்பொழுதும் காதிலேயே வாங்கி கொள்ளவில்லை.

 

வெளியில் தெரிந்த பால்நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தவள், இப்பொழுதும் ஏளனமாகவே..

 

“ஹ்ம்ம்.. இந்த தாலி சென்டிமென்ட்டெல்லாம் இல்ல அப்படின்னு நீ கதை விடறது நல்லாவே தெரியுது ராகவ்..

 

எதுக்கு என்கிட்ட இவ்வளவு பாலிஷா பேசற? நான் மோதிரத்தைக் கழட்டி வச்சதும் உன்னோட ஈகோ முழிச்சுகிச்சு.. அதனால அப்படி இப்படின்னு பேசி நானே அதை எடுத்து போட்டுக்கணும்னு நினைக்கற..

 

என்கிட்டயே எதுக்கு இந்த நாடகம்?

 

உன்னோட உண்மை முகம் எனக்கு தெரியாதுன்னு நினைக்கறியா என்ன?” என்று கேட்க, அவளையே ஒரு முழு நிமிடம் ஆழ்ந்து பார்த்தான் ராகவ்.

 

மணியும், அவனிடம் சத்தமே இல்லாது போகவும், வெளியில் தெரிந்த நிலவை விடுத்து, இவள் அவனைத் திரும்பிப் பார்க்க.. அவனோ, 

 

“அப்போ உனக்கு என்ன பத்தி எல்லாமே தெரியும்?” என்று கேட்டான் ஆழ்ந்த குரலில்.

 

அதற்கும் மணி சாதாரணமாகவே.. “தெரியாதா என்ன?” என்று கேலியாக சிரிக்க..

 

“என்னோட எல்லா முகமும் உனக்குத் தெரியும் இல்லையா?” என்றான் ஒரு மாதிரியாக பாவனையில்..

 

அதற்கும் மணி, “ஹ்ம்ம்..” என்று கூறி முடிக்க, ராகவோ சட்டென அவளைப் பற்றி இழுத்து அணைத்தான்.

 

அவள் திகைத்து என்னவென்று சுதாரிக்கும் முன்னரே.. அவள் கன்னத்தை இரு கரங்களிலும் தாங்கி அவள் இதழ்களை சிறையெடுத்தான்.

 

என்ன நடக்கிறது என்று அவள் உணர்ந்து அவனை விலக்கும் முன்னர் தானாகவே அவளை மென்மையாக விடுவித்து விலகியவன்..

 

“நீ மட்டுமே தெரிஞ்சுக்கக்கூடிய இப்படி ஒரு முகமும் இருக்கு.. சீக்கிரம் இத நீ முழுசா தெரிஞ்சுப்ப..” என்றுவிட்டு அவன் வெளியே செல்ல, கால்களெல்லாம் தரையோடு தரையாக பதிந்து போக.. இதயமெல்லாம் “டப்.. டப்..” என்று வேகவேகமாக அடித்துக் கொள்ள அசைவற்று நின்றிருந்தாள் பெண்.

 

‘என்ன செஞ்சுட்டான்.. என்ன செஞ்சுட்டான்? இவனுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம் வந்துச்சு?

 

அன்னைக்கு ஏதோ சும்மா சீண்டி விளையாடறான்னு நினச்சா.. இப்போ இப்படி?!

 

அதுவும் நான் மட்டுமே பார்க்கக்கூடிய முகம்னு சொல்லிட்டு போறான்?’ என்று உள்ளுக்குள் சற்று நடுங்கித் தான் போனாள்.

 

கூடவே உடல் முழுக்க வெடவெடுத்து, கால்கள் அப்படியே மடங்க, தரையிலேயே அமர்ந்துவிட்டாள் அவள்.

 

இவன் இதழில் முறுவலுன் மாடியேறிச் செல்ல, அனைவருக்கும் அவன் முகத்தைப் பார்த்ததும் தான் சற்று நிம்மதியே பிறந்தது.

 

“டேய்.. என்னடா கோபமா அவள கூட்டிட்டு போன? இப்போ சிரிச்சுகிட்டே திரும்பி வர?” என்று பாலாஜி சந்தேகமாகக் கேட்க, அவனோ..

 

“ஹ்ம்ம்.. எங்களுக்குள்ள நடக்கற ஊடலெல்லாம் இப்படித் தான் குடும்பமா உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணனுமா?” என்று அவன் ஒரு மாதிரியாகக் கேட்க, பாலாஜியோ முகம் சிவந்தார்.

 

“டேய்.. பெத்த அப்பாக்கிட்ட பேசற மாதிரி பேசுடா..” என்று அவர் கூற.. ராகவோ,

 

“நீங்க பெத்த பையன்கிட்ட கேட்க வேண்டிய கேள்விய கேளுங்கப்பா..” என்று அவரை மேலும் வாரியவன், பாட்டியிடம் திரும்பி..

 

“என்ன பேத்தி வளர்த்து வச்சுருக்கீங்க பாட்டி? உங்க பேத்தி தாலி கூட போட்டுக்க மாட்டாளாம்?” என்று வத்தி வைக்க, அவரோ அதிர்ந்து போய் நெஞ்சில் கை வைத்துக் கொண்டார்.

 

“என்னடா சொல்லற? தாலி கட்டாம எப்படி கல்யாணம்?” என்று அவர் கேட்க, ராகவ் சிரித்தான்.

 

“கல்யாணத்தப்போ தாலி கட்டறது தான்.. ஆனா.. அவ அதுக்கப்பறம் தாலி போட்டுக்க மாட்டாளாம்?” என்று அவருக்குப் புரியும்படி விளக்கிக் கூறினான்.

 

ஆனால் அதில் மேலும் கோபம் வந்தது பாட்டிக்கு!

 

“எங்க அவள இங்க வரச்சொல்லு.. அதென்ன பொட்டப்புள்ள தாலி கட்ட மாட்டேன்.. மோதிரம் போட்டுக்க மாட்டேன்னு சொல்லறது?” என்று அவர் அந்தக் கால ஆளாக சொல்ல, ராகவோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு நகைத்தான்.

 

“டேய்.. போடா.. போய் அவள இங்க கூட்டிட்டு வா..” என்று அவர் மீண்டும் ராகவை விரட்ட, அவனோ..

 

“இருங்க.. போய் கூட்டிட்டு வரேன்..” என்றுவிட்டு மீண்டும் கீழே அவளது அறைக்கு வந்தான்.

 

ஆனால் அங்கே.. சூனியத்தை வெறித்தபடி இன்னமும் முகமெல்லாம் சிவந்திருக்க, தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவளைக் கண்டதும் ராகவுக்கோ அதுவரை இருந்த கேலி மனநிலை முற்றிலும் மாறியது.

 

அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்று உணர்ந்து கொண்டவனுக்கும் கூட வெகு லேசாக வெட்கம் எட்டிப் பார்க்க.. தன்னை நினைத்தே மென்மையாக சிரித்துக் கொண்டவனின் பார்வை வியர்த்து, விறுவிறுத்து அமர்ந்திருந்தவளை, தலை முதல் கால்வரை ஆவலுடன் தழுவியது.

 

காற்றுக்கும் கூசும் குரலில்.. “மணி..” என்று அவன் அழைக்க, அவளோ இன்னமும் முழுதாகத் தெளியாமலேயே.. அவனைத் திரும்பி மட்டும் பார்த்தாள்.

 

“பாட்டி கூப்பிடறாங்க..” என்று அவன் அதே குரலில் கூற, மணியோ.. இன்னமும் எதுவுமே புரியாதவளாக.. “ஆங்?” என்று மட்டும் கேட்டாள்.

 

மெல்ல அவளை நெருங்கியவன் குனிந்து அவளைக் கைபிடித்துத் தூக்கிவிட, இன்னமும் தன் வசப்படாத கால்கள் துவளவும், அவளை அப்படியே கையில் ஏந்திக் கொண்டான்.

 

அவன் இப்படி உரிமையாய் தன்னைத் தூக்கவும், அதிர்ந்து விரிந்த பார்வையில் இன்னமுமே கரைந்தே போன ராகவோ.. தன்னிலை மறந்து அவளைப் படுக்கையில் கிடத்தி அவள் புறமாய் குனிய, மணியோ.. பெண்மைக்கான உள்ளுணர்வுடன்..

 

“ஏய்.. என்ன?” என்று அதிர்ந்து அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட, சட்டென சுயஉணர்வு மீண்டவன்.. சட்டென நெற்றியில் அறைந்து கொண்டான்.

 

ஆனால் அவனையும் அறியாது தன் நெஞ்சில் அவள் வைத்த கையை இன்னமும் அவன் பிடித்து வருடிக் கொண்டிருக்க, எதேச்சையாக அதைப் பார்த்தவனது விழிகள் அதிர்ந்து, அவளது படுக்கையில் இருந்து எகிறிக் குதித்து கீழே இறங்கி ஓடினான்.

 

மூச்சிரைக்க, பேயறைந்தவன் போல மாடிப்படியேறி வந்தவனை இப்பொழுது அதிர்ந்து போய் பார்த்தது மொத்தக் குடும்பமும்.

 

“டேய்.. இப்போ என்னடா ஆச்சு?” என்று அவனை தேவகி கேட்க, ராகவோ..

 

“ஒன்னும் ஆகல.. எ.. எனக்கு.. ஒரு.. ஒரு முக்கியமான வேலை இருக்கு.. நான் முன்னாடி வீட்டுக்குப் போறேன்.. நீங்க பின்னாடி வாங்க..” என்று கூறிவிட்டுப் படியிறங்க முனைய, பாட்டியோ..

 

“டேய்.. எங்கடா போற? இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்.. கல்யாணம் முடியற வரைக்கும் எல்லாரும் இங்க தான் தங்கணும்னு சொல்லியிருக்கேன்ல?” என்று அதிகாரமாய் கூற, ராகவோ..

 

“பாட்டி ப்ளீஸ்.. நான் வீட்டுக்குப் போறேன்..” என்றான் அவன் கெஞ்சுதலாக.

 

ஆனால் பாட்டி கொஞ்சமும் இளகாது போகவும்.. “அப்பறம் உங்க இஷ்டம்.. தப்பு கிப்புன்னு பின்னாடி என் மேல குறை சொல்லக் கூடாது..” என்று முணுமுணுத்தவன், மீண்டும் படியிறங்கப் போக.. ஒரு திடுக்கிடலுடன் பாதியிலேயே நின்று தலையை உலுக்கிவிட்டுக் கொண்டு மீண்டும் படியேறி மேலே வந்தான்.

 

“பாட்டி.. சோறு கொடுங்க..” என்று அவன் கையை நீட்ட, அப்பொழுது தான் ஏதோ ஒரு போன் காலை முடித்துவிட்டு வந்த மானபரனோ..

 

“இவனுக்கும், அவளுக்கும் என்ன தான் பிரச்னையாம்? இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்த வச்சுக்கிட்டு இன்னும் குழந்தைங்க மாதிரி சண்டை போட்டுட்டு இருக்குதுங்க..” என்று கூற, ராகவோ அவனைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்.

 

ஒருவழியாக அவரவர், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் செல்ல, ராகவை.. மானபரன் அறையில் தங்க சொன்னார்கள்.

 

அப்படிக் கூறிய தன் தாயை முறைப்பாகப் பார்த்தபடியே ராகவ், மானபரனைப் பின் தொடர்ந்து செல்ல, தேவகியோ நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்.

 

படுக்கையில் விழுந்த ராகவுக்கோ உறக்கமே வரவில்லை.. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவன், தனது இந்த மாற்றத்தை நினைத்து தானே சிரித்துக் கொண்டான்.

 

தன்னை நினைத்து அவனுக்கே வியப்பாக இருந்தது.

 

‘நான் ஏன் இப்படி ஆனேன்? கல்யாணம்னு சொன்னதும்.. மஞ்சக்கயிறு மாஜிக் வேலை செய்யறது இப்படித் தானா?’ என்று எண்ணி முகம் சிவந்தவனுக்கு, மணியை ஒரு

முறையாவது பார்க்காது தூக்கமே வராது போலிருந்தது!

 

மெல்லப் படுக்கையில் இருந்து மேலே எழுந்தவன், பதுங்கிப் பதுங்கி பூனை போலக் கதவருகே செல்ல..

 

“ஏய்..” என்ற அதிகாரக் குரல் கேட்டு, திடுக்கிட்டான்!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
20
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்