அத்தியாயம் -5
காலை ஆபீஸிற்கு வந்து அங்கு இருந்தே கேப் பூக் செய்து கேம்ப் நடக்கும் இடத்திற்கு செல்வது தான் பிளான். இவர்களுடனேயே வருணும் அவனின் காரில் வந்து விடுவான்.
கேப் வந்துவிட அவர் அவரின் லக்கேஜ்ஜை அதில் அடுக்கி கொண்டிருந்தனர். கண்மணி, அஷ்வினி, மாதவன் மற்றும் இன்னும் இரண்டு உழியர்கள் உடன் வருகிறார்கள். சாத்விகா குழந்தை இருப்பதாள் வர மறுத்துவிட்டாள். ஆதலால் இந்த ஒரு வாரம் அவளிற்கு ஒர்க் ப்ரம் ஹோம் முறையில் தான் வேலை..!
அனைவரும் பரபரப்பாக இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்க கையில் ஒரு பையை கெட்டியாக பிடித்து கொண்டு ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் கண்மணி.
அதை கவனித்த வருண் அவளிடம் வந்து, ” பேக் ஏன் கையிலயே புடிச்சிட்டு இருக்க, போய் கார்ல வைக்கலாம்ல எல்லாரும் வைக்கறாங்க பாரு? “
“இல்ல பாஸ், இதுல ரொம்ப முக்கியமான விஷயம் இருக்கு. அத எப்புடி அசால்ட்டா வைக்க முடியும்? அதான் நானே பத்திரமா வெச்சிருக்கேன்..!”
“ஓஹ் லேப்டாப் வெச்சிருக்கியா?”
” ச்ச்சை அதுலா எப்பயோ கார்ல கெடாசிட்டேன். இது அத விட முக்கியம் பாஸு..!”
“அதவிட முக்கியமா? அப்படி என்ன இருக்கும்? ” என்றவன் யோசனையில் மூழ்க,
” இங்க வாங்க பாஸ் உங்களுக்கு மட்டும் காட்டுறேன் “
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அருகில் யாரும் இல்லை என உறுதி செய்தவள்.
” பாஸ் இதர் ஆவோ!”
” என்ன!”
“ஹிந்தி நஹி மாலுமா? கண்மணி அச்சா மாலும்..! ஆவோ ஆவோ ” என்றவள் அவளின் பையை திறந்து காட்டினாள்.
அதில் முழுக்க நொறுக்கு தீனிகளே நிறைந்திருந்தது.
” என்ன பாஸ் அப்படியே ஷாக் ஆகிட்டீங்க போல? ஓவர் நைட்ல எப்படி இவளோ கலெக்ட் பண்ணானு தானே யோசிக்கறீங்க..? தட் இஸ் த சீக்ரெட் பவர் ஆஃப் கண்மணி! அதுவும் இந்த மஞ்ச லேஸ் இருக்கு பாருங்க.. ரொம்ப கஷ்டம் கிடைக்கறது. அந்த மாதவ் கொரங்கு கண்ணுல மட்டும் பட்டுறவே கூடாது, அப்றம் எல்லாத்தயும் அள்ளிட்டு போயிருவான். வெரி டேஞ்சரஸ் ஃபெல்லோ! என்ன பாஸ் குறுகுறுன்னு பார்த்துட்டே இருக்கீங்க? ஓ உங்களுக்கும் வேணுமா? கூச்சப்படாம எடுத்துக்கோங்க பாஸ்..! பேசிக்கலி நான் ரொம்ப நல்ல பொண்ணு, என் ப்ரண்ட்ஸ் எல்லாம் என்ன மாடர்ன் வேர்ல்ட் அன்னை தெரசானு தான் சொல்லுவாங்க தெரியுமா? ஹீஹீ என் பெருமைய நானே சொல்லிக்க கூடாது இருந்தாலும்.. “
” அம்மா தாயே.. போதும்மா உன் புராணம்..! கொஞ்சம் இதோட நிறுத்திக்க, முடில..! போ போய் மொதல்ல வண்டில உக்காரு. கெளம்பற வரைக்கும் ஒரு வார்த்த உன் வாயில இருந்து வந்துது..! அப்படியே இறக்கி விட்டுட்டு போய்ட்டே இருப்போம்! “
” என்னது இறக்கி விட்டுட்டு போய்யிருவீங்களா? அய்யயோ நா பேச மாட்டேன், பேச மாட்டேன்ப்பா ” என்றவள் கைகளால் வாயை பொத்தி கொண்டு போய் அமர்ந்துவிட்டாள் வண்டியில்.
வண்டியும் புறப்பட, அவனிடம் சைகையால் கை ஆட்டி விடைபெற்று கொண்டாள் கண்மணி..! இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல என தனக்குள்ளயே சிரித்து கொண்டவன், தானும் புறப்பட்டு அவர்களைப் பின் தொடர்ந்தான்.
அருகில் இருக்கும் சுற்று புற கிராமங்களில் ஒரு வாரம் மெடிக்கல் கேம்ப் நடத்தி. அதன் இறுதி நாளன்று இவர்களின் ப்ராஜெக்ட் பற்றிய ஒரு சிறு முன்னோட்டம் கொடுத்து, இவர்களின் ஆப்பை ப்ரொமோட் செய்வதற்காக தான் இந்த பயணமே..!
அவர்கள் அங்கு வந்து சேர இரவாகி விட்டது. அருகில் இருக்கும் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி கொண்டனர். அங்கேயே உணவும் தருவதால், சாப்பாட்டிற்கு பிரச்சனை இல்லை.
பயண களைப்பில் அனைவரும் அவர் அவர் அறைக்கு சென்று படுத்து விட்டனர்.
மாதவின் போன் அடித்தது. அவனின் தாய் தான் அழைத்திருந்தார். உள்ளே சரியாக சிக்னல் கிடைக்காததால், வெளியில் வந்து நின்று பேசி கொண்டிருந்தான்.
“ஆமா”
“ம்ம் சாப்பிட்டாச்சி “
” சரி தூங்குங்க, வெச்சறேன் “
வெளியே இருந்த குளிர்ந்த காற்று அவன் மேனியை சில்லிட்டது. ரூமிற்கு போகலாம் என அவன் திரும்ப, அஷ்வினி வெளியே வந்தாள்.
“இந்த நேரத்துல்ல இவ எங்க வெளிய வரா ?” என யோசித்தவன்,
” ஹேய் பஞ்சுமிட்டாய் இங்க என்ன பண்ணுற “
” இல்ல தூக்கம் வரலயா, அதான் கொஞ்ச நேரம் காத்தாட வெளிய நிக்கலாம்னு வந்தேன் “
” ஓ.. சரி சரி நானு அதுக்கு தான் வந்தேன். வாயேன் ரெண்டு பேரும் சேந்து ஒரு சின்ன வாக் போயிட்டு வருவோம்”
” இல்ல பரவால்ல நா சும்மா நிக்கலானு தான் வந்தேன்”
” அட வாங்கறேன் ” என்றவன் முன்னே நடக்க, இவளும் அவனுடன் நடக்கலானாள்.
” கிளைமேட் ரொம்ப நல்லா இருக்குல்ல..”
” ம்ம் “
“இந்த சத்தம் இல்லாத ரோட்ல நடந்தாலே ஒரு குட் பீல் வருதுல்ல?”
“ம்ம் “
“எல்லாத்துக்கும் ம்ம் தானா?”
“ம்ம் “
அவன் ரெண்டு கைகளையும் இடுப்பில் வைத்து கொண்டு அவளை முறைக்க, அதில் தன்னிலைக்கு வந்தவள், “இல்ல இல்ல ஏதோ நெனப்புல்ல, சரியா கவனிக்கல்ல என்ன சொன்னீங்க? “
மீண்டும் முறைப்பையே பரிசாக பெற்றவள், ” சாரி..” என்றாள் தலை கவிழ்ந்து.
“ஹேய் பஞ்சுமிட்டாய்! இதுக்கு ஏன் மூஞ்சிய தொங்க போடுற? சரி வா சுடா ஒரு டீ அடிப்போம். நா வர வழியில பாத்தேன், அங்க ஒரு டீ கடை இருக்கு “
” அண்ணா ரெண்டு மாசாலா டீ “
என சொல்லி விட்டு அங்கு இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தான் மாதவன்.
” மாசாலா டீயா? நீங்க இதுக்கு முன்னாடி குடிச்சி இருக்கீங்களா? நல்லா இருக்கும்மா “
“ம்ம்ம் சூப்பரா இருக்கும் “
அன்று நிறைந்த பௌர்ணமி. வெண்ணிலவின் வெள்ளை கதிர்கள் வானெங்கும் பரவி குளுமையூட்ட, ஆவி பறக்க தேநீரைப் பருகுகையில் அந்த நொடி சொர்கத்தை கண்டனர் இருவரும்.
” நிலா ரொம்ப அழகா இருக்குல்ல பஞ்சுமிட்டாய்? “
” அழகா இருந்து என்ன பண்ணுறது அது எப்பவுமே தனியா தானே இருக்கு? ” என்றாள் விரக்தியாக.
” அப்படினு அந்த நிலா தான் நெனச்சிட்டு இருக்கு. ஆனா அந்த நிலாக்கு தெரில அந்த நிலாவையே நெனச்சிட்டு ஒருத்தன் இருக்கான்னு..!”
” ஹான்? “
“இல்ல.. எத்தனையோ கோடி மக்கள் இந்த நிலாக்கு கவிதை எழுதறோம், பாட்டு எழுதறோம் இன்னும் சொல்ல போனா யார் முதல்ல நிலாக்கு போய் ஆராய்ச்சி பண்ணுவானு பெரிய போட்டியே நடக்குது. நீ என்னடானா நிலாவோட ஒர்த் தெரியாம ஈசியா சொல்லிட்ட? மொத்தல்ல உன் பார்வைய மாத்து, தானா எல்லாம் மாறும்.”
காலை 7 மணிக்கெல்லாம் அனைவரையும் கூப்பிட்டு ஒரு சின்ன மீட்டிங் வைத்தான் வருண்.
” சோ காய்ஸ், இந்த மெடிக்கல் கேம்ப் மூலமா தான் நாம நம்ம ப்ராஜெக்ட் பத்தி மக்களுக்கு ப்ரோமோட் பண்ண போறோம். கேம்ப் நடக்கும் போது நீங்க எல்லாம் உங்க ஒர்க்க பாக்கலாம், பட் ஈவினிங் டைம் கேம்ப் முடியற சமயம் நம்ம ஆப் பத்தி மக்கள் கிட்ட உக்காந்து பேசி புரிய வைக்கனும். கரெக்ட்டா நடந்துகோங்க. ஏதாவுது மிஸ்டேக் ஆச்சுனா நம்ம கம்பெனி மேல ப்ளேக் மார்க் வந்துரும். ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த கேம்புக்கே அப்ரூவல் வாங்கி இருக்கேன். புரிஞ்சி நடந்துப்பீங்கனு நம்புறேன். அப்றம் கேம்ப்போட லாஸ்ட் டேட் ப்ராஜெக்ட் பத்தி இந்த ஊர் தலைவருங்க கிட்ட ஒரு பிரசன்டேஷன் கொடுக்கனும். ஷார்ட் பீரியட் ஆஃப் டைம்ல இது முடிவானதுனால பிரசன்டேஷனை நான் பிரிப்பேர் பண்ணல..! பட் இந்த ஒன் வீக்ல நா அத முடிச்சிருவேன். எதாச்சி டவுட் இருந்தா கேளுங்க. ஒன்பது மணிக்கு கேம்ப ஆரம்பிச்சுடும். ஆல் தி பெஸ்ட் நல்லா பண்ணுங்க..! ” என்றவன் அர்த்த பார்வை ஒன்று கண்மணியை நோக்கி வீச. உதட்டை மடித்து சிரித்து கொண்டாள்.
“பாஸ் பரவால பாஸ், எங்க நீங்க ஆல் தி பெஸ்ட் சொல்லாம போயிருவீங்களோனு பயந்துட்டே இருந்தேன் தெரியுமா “
” அதான் காலையில இருந்து பஜனை பண்ணிட்டே இருந்தியே, அப்றம் எப்படி சொல்லாம இருப்பேன் ? “
” ஈஈஈ.. தேங்க் யூ பாஸு. அப்றம் ஒரு டவுட்டு. டிபன் எத்தன மணிக்கு போடுவாங்க? உங்க பவர யூஸ் பண்ணி இன்னிக்கி பூரி மசால் கொடுக்க சொல்லுறீங்களா? “
” நீ வேலயை முடிச்சா தான் உனக்கு டிபனே! ஒரு வாரம் ஓப்பி அடிக்கலாம்னு மட்டும் பாக்காத. நா ப்ரெசென்டேஷன் ரெடி பண்ணுற வரைக்கும் நீயு என் கூட இருந்து தான் கோடிங் பண்ணுற புரிஞ்சிதா? “
‘ அட மல கொரங்கே..! இன்னிக்கு ஊர சுத்தி பாக்க அவுட்டிங் போலாம்னு பிளான் போட்டா அதுல பெட்ரோல் ஊத்தி கொளுத்திப்புட்டாரா.. ச்ச்சை.. யோவ் பாஸு.. நீ இனிமே வெறும் வருண் இல்ல வத்தல் வருண்..! என்கிட்ட மட்டும் எப்ப பாத்தாலும் பொறிய வேண்டியது..!’ என நொந்து கொண்டவள் அமைதியாக அவனை பின் தொடர்ந்தாள்.
அவனின் அறையில் உக்கார்ந்து வேலை பார்த்து கொண்டிருந்த கண்மணிக்கு தூக்கத்தில் கண்கள் சொருகியது. புது இடம் என்பதால் நேற்று இரவு சரியான தூக்கம் இல்லை அவளிற்கு.
‘ சோ.. தூங்குனா மறுபடியும் வெங்காயம் உறிக்க விட்டுட்டா என்ன பண்ணுறது ‘ என பயந்தவள் லேப்டாப்பில் சற்று நேரம் கேண்டி க்ரஷ் விளையாடி தூக்கத்தை விரட்டுவோம் என ஆரம்பித்தவள், விளையாட்டு சுவாரசியத்தில் முழுதாக அதனுள் மூழ்கி வேலையையே மறந்து விட்டாள்.
கேம்ப் நல்லபடியாக நடக்கிறதா என நோட்டமிட்டு வந்தான் வருண். அவன் வரும் ஆரவாரம் கேட்டவள் சட்டென சுதாரித்து வேலையை தொடர்ந்தாள்.
” சும்மா தான் சொன்னேன், நீ போய் உன் ரூம்லயே உக்காந்து வேலைய பாரு. பட் ஒன்னு ஒன்னா முடிக்க முடிக்க எனக்கு ரிப்போர்ட் பண்ணனும் சரியா? “
” இல்ல பாஸ் முடியாது நீங்க என் மேல சந்தேகப்பட்டிருந்தா கூட எனக்கு பிரச்னையில்ல. ஆனா நீங்க என்னோட உழைப்பயில்ல சந்தேகப்படறீங்க? நா என்னமோ நீங்க இல்லாத நேரம் உக்காந்து கேம் விளையாடுற மாதிரியும் நீங்க வந்த அப்றம் உக்காந்து வேலை செய்யுற மாதிரியும்ல இருக்கு நீங்க சொல்லறது..! நோ.. நோ.. நோ.. இந்த கெட்ட பேர வெச்சிக்கிட்டு என்னால நிம்மதியா ஒரு இட்லி கூட சாப்பிட முடியாது பாஸ்..! வேலைனு வந்துட்டா இந்த கண்மணி ஒரு வெள்ளகாரினு உங்ககிட்ட காட்டாம விட மாட்டேன்..” எனகூறி முடித்தாள் , ‘எங்க ஆள காணோ’ என அவனை தேட, பாத்ரூம்மில் இருந்து வெளிய வந்தான் வருண்.
” நீங்க எப்போ உள்ள போனீங்க? “
“நீ வெளிய போமாட்டேன்னு சொன்ன உடனே நா உள்ள போய்ட்டேன்..!”
“அப்போ இவளோ நேரம் நா பேசுன டைலாக் எல்லாம் வேஸ்ட்டா?”
” இப்போ பேசுனது மட்டும் இல்ல நீ எப்போ பேசுனாலும் வேஸ்ட் தா..!” அவனின் இந்த நக்கல் பேச்சில் உதட்டை சுளித்தவள். வேலையை தொடங்கினாள்.சிறிது நேரம் கழித்து,
” பாஸ் இந்த எக்ஸெல் ஷீட் மட்டும் எப்ப பாத்தாலும் எனக்கு குளறுபடி ஆகிட்டே இருக்கு பாஸ். என்னனு கொஞ்சம் பாருங்களேன் ” அவளின் கேள்வி அவனிற்கு அவனின் கல்லூரி காலத்தை நினைவூட்டியது.
” டேய் கார்த்தி இந்த எக்ஸெல் ஷீட் மட்டும் எனக்கு வரவே மாட்டேங்குது டா. கொஞ்சம் புரியற மாறி சொல்லி கொடேன் “
” விடு மாப்ள நா பாத்துக்கறேன். நீ மித்தது மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணு! லேப் அசிஸ்டன்ட் நம்மாளு தான்! எக்ஸ்டர்னல் டீ பிரேக் போற சமயத்துல நா வந்து முடிச்சி கொடுத்துறேன்.”
” நண்பேன்டா “
“நண்பேன்டா “
அதை எண்ணி பார்த்தவனின் முகம் ஏமாற்றத்தை பிரதிபலிக்க அதில் முகம் இறுகியவன்,
” எப்பவுமே நம்ம வேலைய நாம தான் பாத்துக்கணும் கண்மணி. ஒருதவங்கள டிபன்ட் பண்ணி இருந்தோம்னா அவங்க இல்லாதப்போ நம்மளால தனிச்சு எந்த முடிவும் எடுக்க முடியாத அளவுக்கு டவுன் ஆகிருவோம்..! “
” இப்போ நா என்ன கேட்டுட்டேன்னு இவரு இப்படி வசனம் பேசுறாரு?’ என யோசித்தவள்.
” சொல்லி தர தெரியாதுனா தெரியாதுனு ஓபன்னா சொல்லிருங்க பாஸ். இப்படி சுத்தி வளச்சி பேசுறது எல்லாம் வேணா! பயப்படாதீங்க உங்களுக்கு இந்த சின்ன விஷயம் கூட தெரிலனு நா வெளிய எல்லாம் போய் யார் கிட்டயும் சொல்லிட்டு இருக்க மாட்டேன்.. பிகாஸ் இந்த கண்மணி ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு..!”
” உன்ன எல்லாம் சொல்லி திருத்த முடியாது.யார் கிட்டயாவுது ஒரு நாள் செம்மதயா வாங்கி கட்டிகிட்டா தான் நா சொல்லறது உனக்கு புரியும்..!”
” என்ன பாஸ் நீங்க சின்ன புள்ள தனமா பேசிட்டு இருக்கீங்க? உங்க லாஜிக் படி பாத்தா யாரையும் நம்பவும் கூடாது, எதிர்ப்பாக்கவும் கூடாதுனு சொல்லறீங்க. ஆனா நம்ம டிசைன் அப்படி இல்ல பாஸ். இந்த பாழா போன உடம்புக்கு சாஞ்சுக்க ஒரு தோள் கண்டிப்பா வேணும், இந்த மனசுக்கு ஆறுதல் வார்த்த வேணும், மூளைக்கு வழி நடத்த ஆள் வேணும். எல்லாமே நாமளே பாத்துக்கனும்னா, எதுக்கு இத்தன மக்கள் ஊரு உறவுனு கட்டமச்சி இருக்காரு கடவுளு..!? எல்லாத்துக்கும் தனி தனியாவே ஒரு உலகம் படச்சி இருக்கலாமே? நமக்கு ஒரு விஷயம் கிடைக்கலங்கறகாக அப்படி ஒரு விஷயமே இல்ல அதுலா தப்புனு சொல்லறது முட்டாள் தனம்..! நமக்கு அமையாத விஷயத்த ஒன்னு நாம அமைச்சிக்கனும், இல்ல மித்தவங்களுக்கு அமைச்சாவுது கொடுக்கனும். அதுல கிடைக்கற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது. “
அவளின் கூற்றில் இளநகை புரிந்தவன்,
“இதுலா பேசறதுக்கு தான் நல்லா இருக்கும் கண்மணி. ஆனா நடைமுறையில எதிர்பார்ப்பில்லாத அன்புங்கறது ஒரு மாயை. இங்க எல்லாருக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கு, அந்த தேவைக்கேத்த மாதிரி அந்த உறவாட பெயரும் மாறுது. அவங்க எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது அந்த உறவு முடிஞ்சி போகுது. அவளோ தான் வித்யாசமே தவற மத்தபடி இந்த அன்பு, காதல், நட்பு எல்லாமே கடைசியில வலிய மட்டுமே கொடுக்க கூடிய ஒன்னு தான்..!”
” ம்ம்ச் என்ன பாஸு நீங்க இப்படி பேசறீங்க.. நம்பிக்கைதான் நம் வாழ்க்கையின் தும்பிக்கை பாஸ்..!
வேணும்னா பாருங்க நீங்க நெனச்சது எல்லாம் பொய்யினு நிரூபிக்கிற மாதிரி,நீங்க போதும் போதும்னு மூச்சு மூட்டுற அளவுக்கு உங்க மேல எதிர்பார்ப்பில்லாத அன்ப கொட்டோ கொட்டுன்னு கொட்ட ஒருத்தவங்க வருவாங்க, அப்போ உங்களுக்கு தெரியும் இந்த கண்மணி சொன்னது உண்மைன்னு..!”
அவர்கள் தங்கி இருந்த லாட்ஜிற்கு பக்கத்தில் இருந்த காலி இடத்தில்தான் மெடிக்கல் கேம்ப் நடக்கிறது. அதற்கு வருகை தந்திருக்கும் டாக்டர்களுடன் பேசி கொண்டிருந்தான் மாதவன்.
” எல்லாம் ஓகே மாதவன் பட் சுகர் டெஸ்ட் எடுக்குறதுக்கு அவங்க காலைல வெறும் வயித்துல இருந்தா தான் பார்க்க முடியும். சோ இன்னைக்கு சுகர் டெஸ்ட் பண்ண முடியாது. நீங்க வரவங்கள நாளைக்கு வெறும் வயித்துல வர சொல்லிட்டீங்கனா எங்களுக்கு கொஞ்சம் ஈசியா இருக்கும். “
” கண்டிப்பா சார் பண்ணிரலாம் ” என்றவன் அஷ்வினியை தேடி கொண்டு போனான்.
லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
“பிசியா இருக்கியா அஸ்வினி? “
” இல்ல இல்ல சொல்லுங்க, கொஞ்சம் ஒர்க் தா சாத்வி மேம் ஏற்கனவே எல்லாம் மெயில் பண்ணிட்டாங்க ஜஸ்ட் கொஞ்சம் கரெக்ஷன் பாக்குற வேலைதான்! “
” அப்போ ஓகே.. கொஞ்சம் முக்கியமான வேலை எல்லாம் இருக்கு அத நீ தான் பண்ணனும் “
” அப்படி என்ன வேல.. “
” வைட் பண்ணு இதோ வந்தறேன் ” என்றவன் சிறிது நேரம் கழித்து கையில் சார்ட் பேப்பர், பெயிண்ட் பிரஷ், கலர் பெயிண்ட் சகிதம் உள்ளே வந்தான்.
அவனை கேள்வியாய் அவள் ஏறிட்டுப்பார்க்க,
” நம்ம கேம்ப்கான போஸ்டர் ரெடி பண்ணனும், அதுல சில பாயிண்ட்ஸ்யும் எழுதி தரனும். அப்போ தான் கேம்ப் அன்டன் பண்ணுறவங்களுக்கு அதோட ரூல்ஸ் அப்றம் யூஸஸ் தெரியும். போஸ்டர் ரெடி பண்ணிட்டு அப்பறம் ட்ராயிங்கும் பண்ணி தர குழந்தைகள கூட்டிட்டு வந்தவங்களுக்கு அவங்கள எங்கேஜ் பண்ண யூஸ்ஃபுல்லா இருக்கும் “
” நா ட்ராயிங் பண்ணுவேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? “
” அதான் மொத்த காலேஜுக்குமே..இல்ல இல்ல அது.. அது நீ டிஜிட்டல் ஆர்டிஸ்ட் தானே? சோ கண்டிப்பா இதுவும் தெரிஞ்சிருக்கும்னு ஒரு கெஸ் அவ்ளோ தா..! என்ன என்ன எழுதனும்னு சீஃப் டாக்டர் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து உன்கிட்ட சொல்றேன். அதுவரைக்கும் நீ ரப்பா ட்ரா மட்டும் யோசிச்சி வை. “
அறையை விட்டு வெளியேறியவன், ‘ அச்சோ மாதவா இந்நேரம் ஒளரி இருப்ப ஜஸ்ட் மிஸ்ஸு.. ‘
அக்ஷரா இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி
இன்டர் காலேஜ் மீட், பாட்டு, டான்ஸ் கச்சேரி, போட்டி என கல்லூரியே கோலாகலமாக இருந்தது.
” டேய் மச்சா வா டா போய் டான்ஸ் பாப்போம்.கேர்ள்ஸ் ரவுண்ட் ஆரம்பிச்சிருச்சு ஒரே குஜிலிஸா இருப்பாங்க “
” அட ச்சீ அழையாத “என அவன் நண்பனை கடிந்து கொண்டான் மாதவன்.
“ம்ம்க்கும் தோ பார்றா துரை சொல்லிட்டாரு. நீ மட்டும் பொண்ணுங்கள சைட் அடிச்சதே இல்ல பாரு? ஆழகான பொண்ணுங்கள ஆராதிக்கலைனா தெய்வ குத்தமாகிரும் மச்சி “
” ஆனா அழகு மட்டுமே எல்லாம் இல்ல டா வெண்ண..! அழகயும் தாண்டி நிறைய விஷயம் இருக்குடா “
” ஆமா ஆமா இப்படியே நீ கிளாஸ் எடுத்துட்டு இரு கடைசி வரைக்கும் நீ ஒண்டி கட்ட தான்..!”
“டேய் மச்சா அவன எல்லாம் நம்பாத நம்ப கிட்ட தான் இந்த சாமியார் வேஷம் எல்லாம். கடைசில இவன் தான் பொண்ணுகாக ரோட் ரோட்டா அழைய போறான் பாரு..! ” மாதவனை கலாய்த்து விட்டு டான்ஸை பார்க்க ஆடிடோரியம் சென்று விட்டனர் அவன் நண்பர்கள்.
அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாது,வேலையே கண்ணாயிரம் போல் ஒவ்வொரு ஸ்டாலாக சென்று சுத்தி பார்த்து கொண்டிருந்தான்.
அப்படி பார்வையிட்டு கொண்டு வருகையில் தான் அவன் கண்ணில் பட்டது அந்த படம். மிகவும் நேர்த்தியாக ஒரு மாமரம் வரைந்து அதில் மாங்காய்களுக்கு பதிலாக இதயங்கள் தொங்கி கொண்டிருப்பது போல் இருந்தது.
அருகில் போய் அந்த போட்டி என்னவென பார்த்தான்.
ஆன் தி ஸ்பாட் கான்செப்ட் ட்ராயிங் போட்டி அது.
அவர்கள் கொடுக்கும் தலைப்பிற்கு ஏற்றவாறு வரைய வேண்டும், அப்பொழுது அவர்களுக்கு கொடுத்த தலைப்பு எதிர்பார்ப்பில்லாத அன்பு.
அதில் பங்கு கொண்ட மூக்கால்வாசி போட்டியாளர்கள் தாய்மையையே வரைந்து இருக்க, சிலர் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியை வரைந்து இருந்தனர்.
ஜட்ஜஸ் இடம் அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள் அஷ்வினி.
” என்ன பொறுத்தவரைக்கும் எதிர்ப்பார்ப்பில்லாத அன்புங்கறது இந்த மாமரம் மாறி தான் மேம்..!
தோட்டத்துல வளர்ந்தாலும் சரி ரோட்டுல வளரந்தாலும் சரி அதோட வேல பழம் கொடுக்கறது மட்டும் தான்.
அதே மாறி நீ தான் தண்ணி ஊத்துன அதுனால உனக்கு மட்டும் தான் பழம் கொடுப்பேன். நீ என் மேல குப்ப போட்ட உனக்கு கொடுக்க மாட்டேனு அது பிரிச்சு பேசுறது இல்லயே..!
எதிர்ப்பார்ப்பில்லாத அன்புங்கறது எந்த வித விதிமுறைகளுக்கு உட்படாம இருக்கறது தானே? “
அவளின் பேச்சில் வியந்தவனிற்கு அவளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது.
ஆனால் காம்பெட்டிஷன் நடந்து கொண்டிருப்பதால் அவனால் உடனடியாக அவளை நெருங்க முடியவில்லை.
” மாதவா இங்க நின்னு என்னடா பராக் பாத்துட்டு இருக்க? கேர்ள்ஸ் ரவுண்டு ஈவினிங் தானாம்! ஒரே பல்பா போச்சு மச்சி.. சரி வா போய் சாப்பிட்டு வருவோம் ” என நண்பர்கள் அவனை இழுத்து கொண்டு போய் விட்டனர்.
இருந்தாலும் அவனிற்கு அவளிடம் பேச வேண்டும், அவளை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுதியாக இருந்தது.
சாப்பிட்டு முடித்து, ” மச்சா அங்க ஒரு பொண்ண பாத்தேன் டா.. சூப்பரா வரைஞ்சிருந்தா “
“ஏதே பொண்ணா? பார்றா சாமியாருக்கு எதுக்கு பொண்ணு கேக்குது?”
“டேய் நீ நெனைக்கற மாறி எல்லாம் ஒன்னும் இல்ல.. ஜஸ்ட் அவ ஆர்ட் பாத்தேன் கங்க்ராஜுலேட் பண்ணனும் நினைக்கிறேன் அவ்வளவுதான்!”
“ஓஹோ.. சரி சரி வாங்க டா போலாம் “
ஆனால் அவர்கள் வந்து அங்கு சேரும் பொழுது அவள் அங்கு இல்லை.
” சரி விட்றா போலாம். ” என மாதவன் சொல்ல, “அதுலாம் முடியாது. எங்க மச்சான் கேட்டு நாங்க கண்டுபுடிக்காம இருப்போமா டேய் மாப்ள அந்த சதீஸ் தான இங்க ஆர்கனைசரு அவன புடி”
அப்படி இப்படி என தேடி அந்த காம்பெடிஷனில் கலந்து கொண்ட மாணவர்களின் டீடெயில்ஸ் இருந்த ரெஜிஸ்டரை கண்டு பிடித்து விட்டனர்.
“அஷ்வினி ” முதல் முறையாக அவளின் பெயரை உச்சரித்தவனிற்கு இனம் புரியாத பரவசம் அவனுள் ஏற்ப்பட்டது.
“டேய் இங்க பாருங்க டா அவ எங்க ஊரு தான். ஜோதி கேர்ள்ஸ் காலேஜ் ல தான் படிக்கறாளா? “
” அத விடு மச்சா, எப்புடி இந்த கூட்டத்துல அவள தேடி கண்டுப்புடிப்ப? “
” பாப்போம் அவள மறுபடியும் பாக்கனும்னு இருந்தா கண்டிப்பா பாப்பேன்”
” அப்போ மறுபடியும் பார்த்தா என்ன பண்ணலாம்னு இருக்கீங்க சாரு? “
” பாத்தா அப்றம் சொல்லறேன் ” என்றவன் விஷமமாக சிரிக்க.
“டேய் இவனோட போக்கே சரி இல்ல, இவன மொதல்ல டீப்பா வாட்ச் பண்ணனும் “
“வாங்க டா டேய்..!” என்றவன் அவர்களை தள்ளி கொண்டு போனான்.
என்ன தான் அவன் இங்கு இருந்தாலும் அவன் மனம் அவளையே நினைத்து கொண்டிருந்தது. ப்ரோக்ராம் முடிந்து அனைவரும் வெளிய வரும் பொழுதும், அவளையே அவன் கண்கள் தேடின. ஆனால் அவள் எங்கும் அகப்படவில்லை.
மனதில் சிறு ஏமாற்றம் தோன்ற பஸ்ஸிற்காக நண்பர்களுடன் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தான் மாதவன். திடீரென பெண்களின் சிரிப்பொலி கேட்க திரும்பி பார்த்தவனின் கண்களில் விழுந்தாள் அவள், தோழிகளுடம் கேலி பேசி சிரித்து கொண்டே ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
ஆனால் சுற்றி சிலர் நிற்க, அவளிடம் போய் பேச அவனிற்கு தயக்கமாக இருந்தது. அப்பொழுது தான் அவளின் முகத்தை நன்றாக உற்று நோக்கினான்,
“எங்கயோ பாத்த மாறியே இருக்கே? நம்ம ஊருனு தான் போட்டுருக்கு எங்க பாத்திருப்போம்?” என யோசித்தவனிற்கு சில விஷயங்கள் விளங்க,” அட நம்ம பஞ்சுமிட்டாய்யு..!” என கூறியவனின் விழிகள் அவள் மேல ரசனையாக படிந்தது..!