Loading

“அம்மா நான் வந்துட்டேன்” என உற்சாகத்தில் கத்திக்கொண்டே அம்மாவை ஓடி போய் கட்டிப்பிடித்து கொண்டாள் வினுமதி. வினுமதியை பார்த்த அடுத்த சில வினாடிகளிலேயே கண்களில் பெருகி கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தனர் ராமசாமியும், சாந்தாவும்.

 

“ஏன் மா ரெண்டு பேரும் அழுகறீங்க, அக்காவை கல்யாணம் பண்ணி கொடுக்க போறோம்னு அழுகறிங்களா, அக்காவை பக்கத்துல தான மா கட்டிக்கொடுக்க போறோம் இதுக்கு போய் அழுகறீங்க, பிரியா ஞாபகம் எடுத்தா ஒடனே ஓடி போய் பாக்க போறோம், வெளிநாட்டுக்கா கட்டி கொடுக்கறீங்க?”

என்ன நடந்தது என்பதை அறியாமல் இவள் எதார்த்தமாய் பேசுவதை பார்த்த இருவரும் இவளிடம் எப்படி உண்மையை சொல்லுவது என்று குழம்பி தான் போயிருந்தார்கள்.

 

“சரிம்மா பிரியா எங்க? ஆளையே காணோம், கல்யாண பொண்ண பாக்காம எனக்கு ஒரு மாதிரி இருக்கு, ஒடனே போய் அவளைப் பார்க்கிறேன்”

 

“அது… அது…. அது வந்து பிரியா ரெடி ஆகிட்டு இருக்கா”

 

” அது தான் எங்க, மேல் மாடில இருக்க ரூம்லயா”

 

இருவரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க,

” சரி பிரியா இருக்கட்டும், அத்தான் எந்த ரூம்ல இருக்காரு? அவர தான் நான் இன்னும் பாக்கல, பிரியா அனுப்பின போட்டோ கூட டெலீட் ஆகிருச்சு”

 

“அதெல்லாம் இருக்கட்டும், அப்றம் பாத்துக்கலாம், உன்கிட்ட பிரியா பத்தி ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”

 

“பிரியாவ பத்தி அப்றம் பேசிக்கலாம், நொவ் ஐ வாண்ட் அத்தான்” என்று எந்த முகூர்த்ததில் சொன்னாலோ தெரியவில்லை,

 

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே மீண்டும் எதை பற்றியோ பேச உள்ளே வந்த சந்திரனின் அப்பா ராஜன்,

 

“அப்றம் ஒரு முக்கியமான விஷயம், உங்க பொண்ணு பத்தி போலீஸ் கம்பளைண்ட் எதுவும் கொடுக்க வேணாம், ஏன்னா அதுல எங்க குடும்ப பேரும் தேவ இல்லாம அடிப்படும், அதுக்காக தான் சொல்றேன்”

எனக் கூறிவிட்டு மீண்டும் அறை கதவைத் திறக்கும் முன் இப்பொழுது ராமசாமி சாந்தாவுடன் மேலும் மூன்றாவதாக ஒரு நபர் நிற்பதை அறிந்தார் ராஜன்.

 

“இது யாரு?”

 

“எங்க ரெண்டாவது பொண்ணுண்ணா”

 

“உங்களுக்கு ரெண்டு பொண்ணா, இந்த விஷயத்தை பத்தி எனக்கு தெரியாதே”

 

“உன்கிட்ட முதல் நாள் பேசும் போதே சொன்னோம் சம்மந்தி”

 

“ஓஹோ, அவசர அவசரமா கல்யாணம் பிக்ஸ் ஆனதால நீங்க சொன்னது எனக்கு ஞாபகம் இருக்காதுன்னு நினைக்கிறேன், சரி நான் சொன்ன விஷயம் ஞாபகம் இருக்கட்டும், நோ கம்பளைண்ட் சரியா?” எனக் கூறிவிட்டு அறையைவிட்டு வெளியேறினார் ராஜன்.

 

பிறந்த குழந்தையிடம் போய் ஏபிசிடி சொல்லி தந்தது போல், அவர் என்ன சொல்லிவிட்டு போகிறார் என்பதை அறியாமல், அப்பா அம்மாவை மாற்றி மாற்றி பார்த்தாள். அவர்கள் கண்களில் கண்ணீர் துளிர, நிலைமை சரி இல்லை என்பதை உணர்ந்தாள் வினுமதி.

 

“யாரும்மா இவரு? இப்போ இங்க வந்து என்ன சொல்லிட்டு போனாரு? எனக்கு ஒன்னுமே புரியலையே” என ஒன்றும் விளங்காமல் வினு தன் அம்மாவிடம் கேட்க,

 

” அவர் தான் மா நம்ம சம்மந்தி, மாப்பிளையோட அப்பா”

 

” ஓஹ் சரி அவர் ஏதோ சொன்னாரே போலீஸ் கம்பளைண்ட் ன்னு, அதெல்லாம் என்னமா விஷயம்”

 

” அதை பத்தி தான் உன்கிட்ட சொல்லணும்னு சொன்னேன் வினு”

 

“சொல்லுங்கம்மா என்னாச்சு”

 

வார்த்தைகள் ஏதுமின்றி பிரியா எழுதிவைத்த கடிதத்தை எடுத்து நீட்டினார் ராமசாமி. அதை வாங்கி பிரித்து படித்தாள் வினு.

 

“அப்பா, அம்மா, வினு எல்லாரும் என்ன மன்னிச்சிருங்க, எல்லாரும் தப்பு பண்ணிட்டு தான் மன்னிப்பு கேப்பாங்க ஆனா நான் தப்பு பண்ண போறேன்னு மன்னிப்பு கேக்கறேன். கண்டிப்பா என்னை மன்னிக்க மாட்டிங்கனு எனக்கு நல்லாவே தெரியும். ஏன்னா நான் பண்ண போற விஷயம் அப்படி. அப்பா உங்க கடன் தீரணும் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக என்ன இப்படி அடகு வைக்க பாக்கறிங்களே பா இது உங்களுக்கே நியாயமா இருக்கா? ஏதோ முகூர்த்த தேதி இல்லன்னு இவ்ளோ அவசரமா கல்யாணம் பண்றிங்கனு பாத்தேன், என்னைய கல்ல கட்டி கிணத்துல தள்ள பாக்கறீங்களேப்பா, எனக்குன்னு ஒரு மனசு இருக்குல்ல ப்பா, அதுல எனக்குன்னு ஒரு ஆசை இருக்கும்ல அதையெல்லாம் இப்படி சுக்கு நூறா உடைக்க பாக்கறீங்களே. என் கல்யாண வாழ்க்கை இப்படி தான் இருக்கணும், எனக்கு புருஷனா வர போறவரு இப்படி தான் இருக்கணும்னு கனவு இருக்குப்பா, எல்லாத்துக்கும் இருக்கறது ஒரு வாழ்க்கை தான் ப்பா எனக்கும் அதே தான், அத நான் சந்தோசமா வாழணும்னு நினைக்கிறேன். நான் படிச்சு வாங்கின செர்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டேன். நான் போறேன் ப்பா, ரொம்ப தூரம் போறேன், என்னை தேடி வராதீங்க. இந்த விஷயத்தை இவ்ளோ தூரம் இழுத்துட்டு வந்து இப்போ உங்கள அசிங்க படுத்தறது தப்பு தான். ஆனா நீங்க முன்னாடியே என்கிட்ட அவரை பத்தின முழு விபரத்தையும் சொல்லிருந்தா இவ்ளோ தூரம் நான் கொண்டு வந்துருக்க மாட்டேன், இப்போ உங்க சந்தோஷத்துக்காக இல்லாம என் சந்தோஷத்துக்காக போறேன், சில சமயம் நமக்கு சந்தோசம் வேணும்னு சுயநலமா இருந்து தான் ஆகணும் ப்பா, இது ஒன்னும் உங்களுக்கு புதுசு கிடையாது இல்லப்பா, அம்மா, வினு ஐ மிஸ் யூ அண்ட் ஐ எம் சாரி”

என முடிந்தது அந்த கடிதம்.

 

படித்து முடித்தவளிற்கு இதயம் கனமானது, கண்களில் நீர் தேங்கிற்று,தன் அக்கா கல்யாணம் இப்படியா ஆக வேண்டும் என மனதிற்குள் புழுங்கினாள்.

 

” என்னம்மா இது இப்படி பண்ணிட்டா? ” என அம்மாவை கட்டிக்கொண்டு அழுதாள்.

குடும்பமே இடிந்து விழுந்தது போல் அறையின் உள்ளே ஆளுக்கு ஒரு மூளையில் அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் சோர்ந்து போய் அமர்ந்து இருந்தனர்.

 

மணி விடியற்காலை நான்கை நெருங்கியது, மூவரும் அதே இடத்தில் அச்சு பிசராமல் அமர்ந்து இருக்க,

 

அறையின் கதவு திறந்திற்று, இம்முறையும் ராஜன் தான்,

 

“என்ன முடிவு பண்ணிருக்கீங்க மிஸ்டர் ராமசாமி?” என்றவாறே சேரில் வந்து அமர்ந்தார். இவர் வந்ததைப் பார்த்து மீதி அனைவரும் எழுந்து நின்றனர்.

 

” ஒன்னும் புரியாம தான் சம்மந்தி அழுதுட்டு உக்காந்துருக்கோம், இந்த ஒரு தடவை எங்கள பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்ருங்க சம்மந்தி “

 

“உங்க நிலைமை எனக்கு புரியுது ராமசாமி, இப்போ எனக்கு ரெண்டு மூணு வாய்ப்பு இருக்குன்னு வெச்சுப்போம் அப்போ உங்கள இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்ரலாம், ஆனா எனக்கு இருக்கறதே இந்த ஒரு வாய்ப்பு தான் அப்போ நான் என்ன முடிவு பண்றது சொல்லுங்க?”

 

” சார், எங்க அக்கா ரொம்ப நல்ல பொண்ணு தான் சார், ஆனா இவ ஏன் இப்படி பண்ணுனானு சுத்தமா எங்களுக்கு புரியல சார், ஒரு ஒன் வீக் டைம் குடுத்தீங்கன்னா எங்க அக்காவை தேடி பிடிச்சு உங்…… “

 

“தேடி பிடிச்சு… அப்றம் என் பையன பிடிக்கலைனு போன பொண்ண மறுபடியும் கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணி வைப்பிங்களா?”

 

“சார், இப்படி பண்றது ரொம்ப தப்பு சார்”

 

“எப்படி?”

 

“பொண்ணு ஓடி போனதுக்காக அவங்க குடும்பத்தை கேள்வி கேக்கறது, நாங்க என்ன சார் பண்ணுவோம் அவ ஓடிப்போனா”

 

” அது எல்லாம் எனக்கு தெரியாது, இந்த விஷயம் எல்லாம் உங்க அப்பா ராமசாமி அக்ரீமெண்ட் சைன் பண்றதுக்கு முன்னாடி யோசுச்சு இருக்கணும்”

 

” அக்ரீமெண்ட் ஆஹ்? “

 

“எஸ், இது ஒரு அக்ரீமெண்ட் கல்யாணம், இத பத்தி எல்லாம் உங்ககிட்ட மிஸ்டர் ராமசாமி சொல்லலையா “

 

இல்லை என்பது போல் இருவரும் தலையசைக்க,

 

“உங்க அப்பா சூதாட்டத்துல தோத்து தோத்து பத்து லட்சம் கடன், அதை கட்ட முடியாம வட்டிக்கு மேல வட்டி வாங்கி இப்போ அது இருப்பதஞ்சு லட்சமா வந்து நிக்குது, அதுக்கு பதிலா தான் உங்க வீட்டு பொண்ண என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வெக்கறதா அக்ரீமெண்ட்” என விவரங்களை இவர் கூற,

 

அம்மா மகள் இருவரும் அதிர்ந்து போய் நின்றனர்.

 

“சார், இவர் பண்ணது பெரிய தப்பு தான் சார், உங்க கடன கொஞ்சம் கொஞ்சமா செட்டில் பண்ணிடறேன் சார் “

 

“எப்படி மா செட்டில் பண்ணுவ”

 

“எனக்கு வேலை கிடைச்சிருச்சு சார், இன்னும் ஆறு மாசத்துல ஜாயின் பண்ணிடுவேன் சார், ஜாயின் பண்ணதுக்கு அப்றம் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா செட்டில் பண்ணிடறேன் சார் “

 

” அதெல்லாம் சரி பட்டு வராதுமா, எனக்கு ஒன்னும் அந்த இருப்பத்தஞ்சு லட்சம் பெருசு இல்லை என்னோட ரெண்டு மாச வருமானம், எனக்கு அக்ரீமெண்ட் தான் முக்கியம்” என அவர் ஒரே முடிவில் நிற்க மூவரும் சிறிதும் அசையாது சிலை போல உறைந்தனர்.

 

ஏதோ மனதில் தோன்ற வினுமதியையே உற்று நோக்கிய ராஜன், திடீரென சேரில் இருந்து எழுந்து,

 

“உங்களுக்காக வேணும்னா ஒரு சலுகை பண்ணி தரேன், ராமசாமி கொஞ்சம் என் கூட வரிங்களா?” என அவரை அழைத்து கொண்டு ரூமை விட்டு வெளியேறினார் ராஜன்.

 

“வினு,அப்பாவை எங்க கூட்டிகிட்டு போறாரு, எனக்கு ரொம்ப பயமா இருக்கு வினு”

 

“அதெல்லாம் ஒன்னும் பண்ண மாட்டாரும்மா, நான் சொன்ன ஐடியாவை பத்தி தான் அப்பாகிட்ட எடுத்து சொல்லுவாருன்னு நினைக்கிறேன்”

 

“அப்படி இருந்தா இங்கயே சொல்லலாமே, ஏன் இப்படி தனியா கூட்டிட்டு போறாரு”

 

அம்மா சொல்வதிலும் அர்த்தம் உண்டு என்பதை புரிந்து கொண்டவள் பதில் ஏதும் இல்லாமல் அமைதி காத்தாள்.

 

“மிஸ்டர் ராமசாமி, உங்களுக்காக நான் வேணும்னா ஒரு சலுகை பண்ணி தரேன்”

 

“சொல்லுங்க சம்மந்தி “

 

” நம்ம அக்ரீமெண்ட் ல என்ன இருக்குன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா”

 

“இருக்கு சம்மந்தி”

 

“என்ன?”

 

“நான் வாங்கின கடனுக்கு பதிலா என் பெரிய பொண்ண உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி தரேன்னு சைன் பண்ணினேன் சம்மந்தி”

 

“பாதி சரியா சொல்லிருக்கீங்க, பாதி தப்பு”

 

“புரியலையே சார், என்ன தப்பா சொல்லிருக்கேன்”

 

“அக்ரீமெண்ட் ல நீங்க வாங்கின கடனுக்கு உங்க பொண்ண கல்யாணம் பண்ணி தரேன்னு தான் சொன்னிங்களே தவிர உங்க பெரிய பொண்ணுன்னு சொல்லல”

 

“ரெண்டும் ஒன்னு தான சார் “

 

“எப்படி ராமசாமி ஒன்னாகும், பொண்ணு வேற, பெரிய பொண்ணுங்கிறது வேற தான மிஸ்டர் ராமசாமி”

 

ராமசாமிக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது இப்பொழுது விவரமாக விளங்கிற்று.

“சம்மந்தி, இன்னும் என் சின்ன பொண்ணு காலேஜ்ஜே முடிக்கல, அவளுக்கு போய் கல்யாணம்ன்னா வேணாம் சம்மந்தி”

 

” அப்போ என்னோட இருப்பத்தஞ்சு லட்சம் எனக்கு இன்னிக்கே செட்டில் ஆகணும், இல்லன்னா உங்க சின்ன பொண்ணுக்கும் என் பையனுக்கும் கல்யாணம் நடந்தே ஆகணும்” என ராஜன் திட்டவட்டமாக கூற ராமசாமியிற்கோ இதனை எவ்வாறு தன் குடும்பத்திடம் சொல்லுவது என்று தெரியாது தவித்தார்.

 

மெதுவாக அறை கதவினைத் திறக்க அமர்ந்திருந்த இருவரும் வேகமாக எழுந்து வந்தனர்.

“என்னாச்சுங்க அண்ணன் என்ன சொன்னாரு, வினு சொன்ன விஷயத்த ஏத்துகிட்டாறா?”

 

ஒத்துக்கிட்டார் என்பது போல் தலை அசைக்க, இருவருக்கும் அளவு கடந்த சந்தோசம் பற்றிக்கொள்ள, கண்களில் துளிர்த்த கண்ணீர் துளிகளைத் துடைத்து கொண்டனர்.

 

“நான் தான் சொன்னேன்ல மா நான் சொன்ன விஷயமா தான் பேச கூட்டிட்டு போயிருப்பாருனு”

 

“ஆமா,ஆமாங்க வினு அப்போவே சொன்னா நான் தான் நம்பல”

 

“எத நம்பல?”

 

“வினு சொன்ன விஷயத்தை அவர் ஏத்துப்பாருன்னு நான் நம்பல”

 

“இப்பவும் அவரு வினு சொன்ன விஷயத்தை ஏத்துக்கல, வினுவதான் ஏத்துக்கிட்டாரு”

 

“என்னங்க சொல்றிங்க, சரியா புரியல”

 

“ஆமா சாந்தா, அவரு வினுவை அவங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வெக்க கேக்கறாரு” என்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் வினுவின் மனதில் ஈட்டியைப் போல் தாக்கியது.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்