Loading

அத்தியாயம் – 3 : கபீர் – காலன் அவன்!

“என்னப்பா கபீர்.. இந்த ஆர்மி ஆட்கள எல்லாம் எரிச்சு கொன்னதுல உனக்கு எந்த சம்மந்தமும் இல்லையாமே?” என்று தன் எதிரில் இருந்தவன் முகத்தைப் பார்த்து நக்கலாகக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.. இந்தியாவின் அமைச்சரவையில் இருக்கும் முக்கியமானவர் – பல்வீர் குமார்!

அவர் முன்பாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்தவன்.. மும்பையின் மிகப்பெரிய நிழலுக தாதா!

பற்பல அரசியல் கொலைகள்.. கொள்ளை சம்பவங்கள்.. குண்டு வெடிப்புகள்.. கலவரங்கள் என நடத்தி, இந்திய அரசியல்வாதிகளில் பலருக்கும் ஆஸ்தான அடியாள் அவன் தான்.

ஆனால் அவன் ஒன்றும் சாதாரணன் கிடையாது!

வெளிநாட்டு தீவிரவாதக் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்.. இந்திய அரசியலமைப்பில் இருப்பவர்களே சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருக்கும் தீவிரவாதி!

அவன் முன்பு அமர்ந்திருந்த அந்த அமைச்சரின் பார்வையில் இருந்த நக்கலைத் தாங்க முடியாது பற்கடித்தான் அவன்!

“ஆமா.. அந்த சம்பவத்துல, எனக்கோ.. என் கூட்டத்துக்கோ சம்மந்தம் இல்ல..” என்று அவன் முகம் திருப்பிக் கூற.. அதைப் பார்த்து இன்னமும் கேலியாய் சிரித்தார் அந்த அமைச்சர்.

“அதான் தெரியுதே.. சரி உனக்கு ஒன்னு தெரியுமா? இப்போ இந்த ஒட்டுமொத்த இந்தியாவும் அந்த கோஸ்ட்ட தான் தேடிட்டு இருக்கு..” என்றவர், கபீர் திரும்பி இவரைப் பார்க்கவும் அவன் புறமாகக் குனிந்து..

“போட்டு தள்ளறதுக்காக இல்ல.. வேலை கொடுக்கறதுக்காக..” என்று கூறி இடி இடியென சிரிக்க, உச்சந்தலை முதற்கொண்டு வெறியேறிப் போனவனோ, தனது முதுகுக்குப் பின்னால் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்து அவரைச் கூற்றிலும் சுட.. அதில் அரண்டு, மிரண்டு போன அமைச்சரோ அவரது நாற்காலியில் ஒண்டிக் கொண்டு அமர்ந்தார்.

“யோவ்.. என்ன கொம்பு சீவி விடறியா?

அந்த துக்கடா பையனெல்லாம் எனக்குப் போட்டியா?

இங்க நீ என் முன்னாடி இப்படி இவ்வளவு பெரிய மினிஸ்டரா உட்காந்துட்டு இருக்கறதுக்கே நான் தான் காரணம்.. உனக்காக, உனக்கு போட்டியா இருந்தவன ஒத்த புல்லட்டுல போட்டுத் தள்ளின எனக்கு, இபப்டி என் முன்னாடி கொத்தா சிக்கியிருக்கற உன்ன, மிச்சம் இருக்கற இந்த ஒத்த புல்லட்டுல போட்டுத் தள்ள முடியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா?

யார்கிட்ட பேசறன்னு பார்த்து பேசணும் சரியா?..” என்றவன், தனது துப்பாக்கியில் மிச்சம் இருந்த ஒற்றைக் குண்டில் எதிரில் இருந்தவரது நெற்றிப் பொட்டைத் துளைத்திருந்தான்!

அந்த அமைச்சரின் உதவியாளன் முதற்கொண்டு.. அங்கு அவர்களுடன் இருந்த கபீரின் மற்ற அடியாட்களும் கூட அவனது அந்தச் செய்கையில் அதிர்ந்துவிட்டிருந்தனர்!

“ஜி.. ஜி.. என்னஜி இப்படி பண்ணிட்டீங்க?” என்று அவர்கள் பதற, அங்கு பயந்து நடுங்கிக் கொண்டிருந்த அமைச்சரின் உதவியாளனிடம் மெல்ல நடைபோட்டு சென்றான்.

அவன் ஒவ்வொரு அடியாக நெருங்கி வர வர, அந்த உதவியாளனுக்கோ நெஞ்சமெல்லாம் திக் திக் என்றது.

தாறுமாறாய் துடிக்கின்ற இதயம், வாய் வழியாக வெளியே வந்து விழுந்துவிடுமோ என்ற பயத்தில் அவன் நடுங்கி கொண்டிருக்க, அவனிடம் சென்ற கபிரோ, நொடி நேரத்தில் தனது துப்பாக்கியை எடுத்து அந்த உதவியாளன் நெற்றிப்பொட்டில் வைத்து அதன் ட்ரிக்கரை அழுத்தினான்!

இதுவே தான் இழுக்கும் கடைசி மூச்சு என்று தனது மூச்சைப் பிடித்துக் கொண்டு, இறுக மூடிய கண்களுடன் அவன் இருந்தால்.. கபீரின் துப்பாக்கியோ, சிறியதாக “க்ளுக்..” என்ற சத்தத்தை மட்டும் வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிட.. அதுவரை இறுக்க மூடியிருந்த உதவியாளனின் கண்கள் இப்பொழுது மெல்லத் திறக்க.. அதைக் கண்டு கபீர் கோரமாக நகைத்தான்!

“ப்ச்.. லாஸ்ட் புல்லட் உன்னோட தலைவனோட நெத்திலயே இறக்கிட்டேன்.. உனக்கு மிஸ் ஆகிடுச்சு இல்ல?” என்று அவன் சோகமாக கேட்க, அடுத்து என்ன வருமோ என்ற பயத்தில் அந்த உதவியாளர் பீதியுடன் நடுங்கியபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது கழுத்தை சட்டெனப் பிடித்த கபீரோ.. “நேத்து மழைக்கு, இன்னைக்கு முளைச்ச காளானால என்ன உன் தலைவன் குறைச்சலா எடை போட்டுட்டானா?

இப்போ சொல்லச் சொல்லு.. யார் டாப்புன்னு இப்போ அவனை சொல்லச் சொல்லு..” என்று இறந்த அமைச்சரின் உடலைக் காலால் உதைத்தவன், அந்த அமைச்சரின் முகத்தின் மீதே காரி உமிழ்ந்துவிட்டு.. காதில் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டினான்.

அதை எல்லாம் விழிவிரிய அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த உதவியாளிடம் மீண்டும் திரும்பியவன்..

“உங்க இந்திய கவர்மெண்ட்டுன்ற மிஷின் இயங்கறதே நான் கொன்ன ஆட்களோட ரத்தத்துல தான்..

புதுசா முளைச்ச புல்லுருவியால, இந்த வல்லூற மறந்துட வேண்டாம்னு உன் பிரதமர்கிட்ட போய் சொல்லு..” என்று அவனது கழுத்தை விடுவிக்க, கபீரின் ஆட்கள் அவசர அவசரமாக ஓடிவந்து அமைச்சரின் உடலை ஒரு கோணிப் பையிலும், அந்த உதவியாளை மற்றொரு கோணிப் பையிலும் வைத்துக் கட்டினார்கள்.

தன்னை அப்படி கோணியில் அடைத்துக் கட்டுவதை எதிர்க்கக் கூட பயந்து அப்படியே சிலையாய் உறைந்து போயிருந்தான் அந்த உதவியாளன்!

மறுநாள் காலையில் அந்த அமைச்சரின் வீட்டு வாசலில் அவசர அவசரமாக ஒரு பெரிய வேன் வந்து நின்றது.. அதற்குள்ளிருந்த சில ஆட்கள், அங்கே இரண்டு கோணிகளை வீசிவிட்டுச் செல்ல.. வாசலில் காவலுக்கு இருந்த காவலர்கள் ஓடிவந்து பார்ப்பதற்குள் அந்த வேன் மின்னல் வேகத்தில் பறந்துவிட்டது.

காவலர்கள் மெல்ல அந்தக் கோணிகளை அணுகிப் பிரித்துப் பார்க்க.. அதிர்ந்து போய் பின்னால் விழுந்தார்கள்!

அவர்கள் அலறிய அலறலில் அடுத்த இரண்டாவது நிமிடம் அந்த இடம் முழுக்க போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

அந்த அமைச்சரின் வீட்டைச் சுற்றி சைரன் ஒலியுடன் போலீஸ் வாகனமும், ஆம்புலன்ஸும், இன்னும் பற்பல பத்திரிகை நிறுவனங்களின் வாகனங்களும் வந்து சூழ்ந்திருந்தது.

“காபினட் அமைச்சர் பல்வீர் குமார் படுகொலை!”

“கொலையாளி.. பிரபல நிழலுலக தாதா, “கபீர்..” என அமைச்சரின் இறுதி நேரத்தில் அவருடன் இருந்த அவர் உதவியாள் மூலம் தெரியவந்துள்ளது.”

“இந்த கபீர் பிரபல குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவன்.. மேலும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளுடன் நேரடித் தொடர்புடையவன்..”

“கொலைக்கான காரணம் தெரியவில்லை.. ஆனால்.. “என்னை மறந்துவிட்ட இந்த இந்தியாவுக்கு.. ஒரு சிறிய நினைவூட்டல்..” என்று அவன் செய்தி அனுப்பியதாக அமைச்சரின் உதவியாள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.” என்றெல்லாம் பத்திரிகை நிபுணர்கள் டி.வியில் அலறிக் கொண்டிருக்க.. அதையெல்லாம் நெற்றியில் துளிர்த்த வியர்வையுடன் ராஜேஷ் ஷர்மா பார்த்துக் கொண்டிருந்தார்.

இன்னும் மருத்துவமனையில் தான் இருந்த பிரதமரின் அறையில் தான் அவர் அமர்ந்திருந்தார்.

“அடுத்து இவனும் தன்னோட ஆட்டத்த ஆரம்பிச்சுட்டான்..” என்று பிரதமர் இறுகிய குரலில் கூற, ஷர்மாவோ..

“இவங்கள எல்லாம் இன்னும் எத்தனை நாள் நாம சும்மா விடப்போறோம்..” என்று தனக்குளாகப் புலம்பினார்.

“முதல்ல இந்த கபீர பிடிக்க ஒரு தனி டீம் பார்ம் பண்ணுங்க..” என்று பிரதமர் கடுமையான குரலில் உத்தரவிட.. அவரை நிமிர்ந்து பார்த்த ஷர்மாவோ..

“இல்ல சார்..” என்றார் உடனேயே!

அவர் கூறியதைக் கேட்டு புருவத்தில் ஆச்சர்ய ரேகைகள் வந்து அமர்ந்துகொள்ள.. வியப்பாய் ஷர்மாவை ஏறிட்டார் பிரதமர்.

“ஆமா சார்.. இப்போதைக்கு இந்த கபீர நாம எதுவும் செய்ய வேண்டாம்..” என்று கூற பிரதமருக்கு இரத்தம் கொதித்தது.

“என்ன ஷர்மா சொல்ல வர?” என்று அவர் எகிற, பொறுமையாய் பதிலுரைத்தார் மற்றவர்.

“ஆமா சார்.. இந்தக் கொலை எதனாலன்னு நீங்க நினைச்சீங்க? எல்லாம் போட்டி.. பகையால..

யார் கூட போட்டின்னு கேட்கறீங்களா?

அந்த கோஸ்ட் கூட இவனுக்குப் போட்டி..

இப்போ இந்த டிவி, பத்திரிகை எல்லாம் அந்த கோஸ்ட் பத்தி மட்டுமே தான் பேசறாங்க.. அதனால உண்டான வெறில, தன்னை எல்லாரும் மறந்துட்டாங்க.. தன் மேல இருந்த பயம் போய்டுச்சுன்ற நினைப்புல இவன் இப்படி செஞ்சிருக்கான்.

இது ஒரு எச்சரிக்கை தான் சார்.. ஆனா நமக்கு இல்ல..

அந்த கோஸ்ட்டுக்கு!” என்று கூற, பிரதமர் வாய் பிளந்தார்.

ஆனாலும்.. “ஆனா.. அதுக்காக இந்த கபீர அப்படியே விட்டுட முடியுமா?” என்று அவர் கேட்க.. ஷர்மாவோ..

“அப்படியே விடணும்னு சொல்லல சார்.. ஆனா, இந்த கபீர் சீக்கிரம் கோஸ்ட்ட கண்டுபிடிச்சுடுவான்.. அவன் கோஸ்ட்ட போட்டாலும் சரி.. இல்ல அந்த கோஸ்ட் இவன போட்டாலும் சரி.. நமக்குத் தான் லாபம்.

அப்பறம் கடைசியா மீதி இருக்கறவன நாம ஈஸியா போட்டுடலாம்..” என்று அவர் கூற அவரைக் கண்களாலேயே பாராட்டினார் பிரதர்.

“இதுல இன்னொரு பிரச்சனையும் இருக்கு சார்.. என்ன தான் நாம இப்படி நினைச்சாலும், மக்களோட கண் துடைப்புக்காக, சும்மா ஒரு அதிரடிப்படை அமைச்சிருக்கோம்னு காண்பிக்கணும் சார்..” என்று கூற, சம்மதமாய் தலையசைத்தார் பிரதமர்.

அதன் பின் பிரதமரின் அறையை விட்டு வெளியே வந்த ஷர்மாவோ, முக்கிய அதிகாரிகளை அழைத்து விஷயத்தைக் கூற, அவரது கட்டளைகளின் படி செயல்பட ஒரு பெரிய போலீஸ் படையே கிளம்பியது.

நடப்பதையெல்லாம் காளிஷேத்ராவின் அருகிலிருக்கும் ஒரு சிறு கிராமத்தின் குடிசையில் அமர்ந்தபடி, கருங்காப்பியைப் பருகிக் கொண்டிருந்த ஒரு பெண், தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த விடிகாலை நேரத்தில் ஒரு புதியவனுடன் உள்ளே நுழைந்தான் அந்த வீட்டின் உரிமையாளனான ராம்.

“இங்க நீயே தண்டச்சோறு சாப்பிட்டுட்டு இருக்க.. இதுல உன் தங்கச்சிக்கும் சேர்த்து வேற நான் உழைச்சு கொட்டணுமா?” என்று அவன் அந்தப் பெண்ணைப் பார்த்தபடியே கூறிக் கொண்டிருக்க, உள்ளே இருந்து வெளிய வந்த ராமின் மனைவி தாமினியோ, அவனை முறைத்தபடியே.. அவனுக்கும், அவனுடன் வந்த இன்னொருவனுக்கு காபியைக் கொடுத்தாள்.

“பார்த்தீங்களா சாப் இவளுக்குத் திமிர.. எவ்வளவு எகத்தாளமா வந்து காபி கொடுத்துட்டு போறா?

நான் கத்தறத கொஞ்சமாவது காதுல வாங்கிக்கறாளான்னு பாருங்களேன்..

பாருங்க.. இந்தப் பொண்ணுக்காகத் தான் நான் வேலை கேட்டேன்..” என்று அவன் கூற, அந்தப் புதியவனோ, ஒரு கணம் தனது கறுப்புக் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு அந்தப் பெண்ணைப் பார்த்தானே தவிர, வேறெதுவும் கூறவில்லை.

மாறாக..

“சீக்கிரம் காபிய குடிச்சுட்டு கிளம்பு ராம்.. உன்ன பக்கத்து ஊருல டிராப் பண்னனிட்டு, நான் என் வேலைய பார்க்க போகணும்..” என்று கூற, ராமோ..

“இதோ.. இதோ சாப்.. சீக்கிரம்.. சீக்கிரம் குடிச்சுடறேன்.. நீங்க என் வீட்டுக்கு வரணும்னு ஆசைப்பட்டேன்..

அதுவும் இந்தப் பெண்ணுக்காக.. இந்தப் பொண்ண நேர்ல பார்த்தா இவள எந்த வேலைக்கு சேர்த்துக்கலாம்னு நீங்க முடிவெடுக்க சுலபமா இருக்கும்னு நினச்சேன்..” என்று அவன் வழிய, தன் கையிலிருந்த காபியை ஒரே மடக்கில் குடித்து முடித்துவிட்டு வெளியே சென்றான் அந்தப் புதியவன்.

அவன் எழுந்ததும், கையிலிருந்த காபியைக் கூட குடித்து முடிக்காமல் அதை அப்படியே வைத்துவிட்டு அவன் பின்னேயே ஓடினான் ராம்.

அவர்கள் சென்று இரண்டு மணிநேரம் கழித்து காலைச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, அதே ராம் கையில் ஒரு பொட்டலத்துடன் உள்ளே வந்தான்.

வந்தவன் கதவை வேகமாக மூடிவிட்டு..

“மன்னிச்சுக்கங்க மேடம்.. நமக்கு அந்த ஊர்ல வேலை நடக்கணும்னா நம்ம மேல கொஞ்சமும் சந்தேகம் வராதபடிக்குத் தான் நாம நடந்துக்கணும்..” என்று பதவிசாகக் கூறியவன்.. தன் கையிலிருந்த பொட்டலத்தை அவளிடம் கொடுத்தபடி..

“இங்க நம்ம வீட்டு சாப்பாடெல்லாம் மேடமுக்கு பிடிக்குமான்னு தெரியல.. அதான் அப்படியே வேற டவுனுக்கு போய் உங்களுக்குத் பிடிச்ச மாதிரி ஏதாவது வாங்கிட்டு வந்தேன்..” என்று அவன் கூற..

“அதுக்கென்ன பரவாயில்ல.. இந்த வேலைக்கு வந்த பிறகு நீங்க சொல்லற மாதிரி எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது ராம்..

கூடவே எனக்கு தீதீயோட சாப்பாடும் ரொம்ப பிடிச்சுருக்கு..” என்று தாமினியைப் பார்த்து முறுவலுடன் கூறிக் கொண்டிருந்தது வேறு யாருமல்ல.. அக்னி மித்ராவே தான்!

இப்படி ஒரு ஆண்ட்டி ஹீரோ கதை இது தான் நான் முதன்முதலா எழுதறது.. சோ உங்களிளோட கருத்துக்களையும் என் கூட ஷார் பண்ணிக்கிட்டீங்கன்னா எனக்கு கொஞ்சம் கான்பிடென்ட் வரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Indhu Mathy

      கபீர் பயங்கரமானவனா இருக்கானே…😱 மினிஸ்டரை அசால்ட்டா போட்டுட்டான்…. ஆனா கோஸ்ட்ட ஜெயிக்க முடியமா…

      சர்மா செம பிரில்லியண்ட் ஐடியா…. 🤩

      அடேய் ராம்… உன் ரீல் அறுந்து போய் ரொம்ப நாளாச்சு… அது தெரியாம…. 🤭🤭🤭

      கோஸ்ட்ட காணோம்…. 🧐