Loading

அத்தியாயம் – 20

“உன்ன ரீபிலேஸ் செய்யத் தான் நான் இங்கே வந்திருக்கேன்..” என்று தர்ஷா கூறியது தான் தாமதம், “வாட் நான்சென்ஸ்?” என்று வெகுண்டு தனது இருக்கையில் இருந்து எழுந்தேவிட்டாள் மணி.

அதைக் கண்டு சத்தமாகச் சிரித்த ராகவ்.. “அடியேய்.. இப்போ எதுக்கு இவ்வளவு டென்சன் ஆகற? அவ நீ செய்யற ஜூவல்லரி டிசைனிங் வேலைக்குத் தான் வந்திருக்கா..” என்று கூற, இதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை மணியால்.

“இப்போ என்ன அவசியம் அதுக்கு?” என்று அவள் முறைப்புடனே கேட்க, ராகவுக்குப் பதில், தர்ஷா பதில் கூறினாள்.

“என்ன செய்யறது அழகு? உனக்கு வீட்டுலையும் வேலை, இங்கயும் வேலை.. அதனால தான் உனக்கு எல்லாத்துலயும் கூட மாட ஒத்தாசையா நான் இருந்தா, அது சாருக்கும் வசதி தானேன்னு என்ன வேலைக்கு வரச் சொன்னார்.” என்று இரு பொருள்படக் கூற, அது ராகவுக்குப் புரிந்ததோ இல்லையோ, மணிக்கு மிகவும் தெளிவாகப் புரிந்தது.

ஆனால் அந்த நேரத்தில் தான் ஏதாவது பதில் கூறினால், வேண்டுமென்றே தர்ஷாவின் பேச்சை குதர்க்கமாக எடுத்துக் கொண்டு சண்டை பிடிக்கும் சந்தேகம் பிடித்தவள் என்ற பட்டம் தான் வருமே தவிர, இதனால் உருப்படியாக எதுவும் நடந்துவிடாது என்று கருதியவள், அப்போதைக்கு எதுவும் பேசாது அமைதியானாள்.

ஆனால் அந்த அமைதியெல்லாம் வெறும் வெளிபபார்வைக்கு மட்டும் தான். உள்ளுக்குள் அணு உலையாக கொதித்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

ஒவ்வொரு நாளும் ராகவுக்கும், தர்ஷாவுக்கும் நெருக்கம் அதிகமாவைப் போலத் தோன்ற அதைச் சகித்துக்கொள்ளவே இயலவில்லை அவளால்.

தயக்கத்தை உடைத்து ராகவிடம் கேட்கவும் முடியவில்லை. அவளது ஒரு மனம் ராகவ் தப்பானவன் அல்ல.. அவனை சந்தேகப்படாதே என்று எச்சரிப்பதால், தான் இப்படி அவனைச் சந்தேகித்துக் கேட்பதால், நேர்மையாளனான அவன் மனம் புண்படுமே என்று எண்ணி தன்னையே கேவலமாய் நினைத்துக் கொண்டது.

ஆனால் அதே சமயம் அவளது மற்றொரு மனமோ.. “உன் முன்னாடியே இவ்வளவு கூத்தடிக்கறாங்கன்னா.. உன் கண்ணுக்கு மறைவா இன்னும் என்னவெல்லாம் செய்வாங்க?

உனக்குத் துணையா இருக்கட்டுமேன்னு உன் ப்ரண்ட கூப்பிடணும்னா முதல்ல உன்கிட்ட தான சொல்லியிருக்கணும்? எதுக்காக உன்கிட்ட ஒரு வார்த்தை கூடக் கேட்காம அவன் தர்ஷாவை வேலைக்கு வரச் சொல்லணும்?” என்று ஓத, மணியின் ஆழ்மனமோ.. “ஆமா.. ஆமா.. அவன் தான சொன்னானே.. கல்யாணத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருந்தாலும், கல்யாணம்னு பேச்செடுத்ததும் என் முகம் தான் நினைவு வந்துச்சுன்னு..

அப்போ கல்யாணத்துக்கு முன்னாடி ஊர் சுத்த அவ, காசு.. பணத்தோட கல்யாணம் செய்ய நான்?

இப்போ விட்டுட்டுப் போனவ திரும்பி வரவும் மறுபடியும் அவனுக்கு சபலம் தட்டுது..” என்று எண்ணி எண்ணி தன்னையே காயப்படுத்திக் கொண்டாள் அவள்.

தன் மனதுக்குள் கொண்ட இந்த சந்தேகத்தால் தன்னையும் வருத்திக் கொண்டு, ராகவிடம் எதையும் வெளிப்படையாகப் பேசாது அவனிடமும் முகம் திருப்பினாள்.

முதலில் அவளது முகம் திருப்புதலை ராகவ் கவனிக்கக் கூட இல்லை. ஆனால் சில நாட்களிலேயே கண்டுகொண்டவனுக்கு.. மீண்டும் என்ன? என்று ஒரு சலிப்பே பரவியது.

அதிலும் கண்காட்சிக்கான நாட்கள் நெருங்கிவிட்ட இந்த நிலையில் அவனுக்கு கடையிலும் வேலைகள் அதிகம் இருக்க, இங்கு மணிக்கு இப்பொழுது என்ன புதிய பிரச்சனை என்றும் புரியாத நிலையில் மண்டை காய்ந்தது அவனுக்கு.

அதில் ஒருநாள் வெடித்தே விட்டான் அவளிடம்!

“உன் மண்டைக்குள்ள அப்படி என்ன கருமத்தைத் தான் யோசிச்சுட்டு இருக்க? ஒரு மனுஷன் எத்தனை முறை உன் கால்ல விழுந்து கேட்கணும் மணி? இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படி மெச்சூரிட்டி இல்லாமலேயே இருக்கப் போற நீ?

மனுஷன வதைக்காம உன்னோட பிரச்சனை என்னனு மட்டும் என்கிட்டே சொல்லு..” என்று அவன் கத்திய பிறகு தான் ஒருவாறாக வாயைத் திறந்தாள் அவள்.

“யாரைக் கேட்டு நீ தர்ஷாவை வேலைக்கு சேர்த்த?” என்று அவள் வெறித்த பார்வையுடன் கேட்க, ராகவுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.

“வ்.. வாட்? இதுல தர்ஷாக்கும், நமக்கும் என்ன சம்மந்தம்? நீ இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டு இருக்கறதுக்கும்.. தர்ஷாவுக்கும் என்னடி சம்மந்தம்?” என்றான் அவன் ஒன்றுமே புரியாத விரக்தியில்!

“அவளை வேலைய விட்டு துரத்து.. அப்போ தான் நான் நார்மல் ஆவேன்..” என்று அவள் கூறிய விதத்தில் ராகவின் கோபம் கரையைக் கடந்தது! அவள் பேசுவதின் அர்த்தமும் புரிந்தது!

“இங்கப் பாரு மணி.. உன் மண்டைக்குள்ள இருக்கற சாக்கடையெல்லாம் வெளில தூக்கி வீசறது தான் உனக்கும் நல்லது.. எனக்கும் நல்லது..

உன்னோட அசிங்கமான கற்பனைக்கெலலாம் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. அதுவும் இல்லாம போன வாரம் வேலைக்கு சேர்த்துட்டு இந்த வாரம் வேலைய விட்டு அனுப்பறது.. அதுவும் இப்படிப்பட்ட கேவலமான காரணத்துக்காக அனுப்பறது என்னால முடியாது..

நீ சொல்லற பைத்தியக்காரத் தனத்துக்கெல்லாம் ஆட, ரோட்டுல நிஜமாவே பைத்தியக்காரன் எவனாவது சுத்திட்டு இருப்பான்.. அவன்கிட்ட போய் சொல்லு இதெல்லாம்..” என்று அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் செல்ல, உயிர் கரைந்தது மணிக்கு!

‘ஐயோ.. நான் ஏன் அவன்கிட்ட இப்படிப் பேசினேன்? நான் இப்படிப் பேசியிருக்கக் கூடாது தானே? நான் சந்தேகப்படறேன்னு என்ன கேவலமா நினைச்சுட்டான் அவன்..’ என்று அதே போல ஒரு மனம் கலங்கினாலும், அந்த சாத்தான் குடியிருந்த மற்றொரு மனமோ..

‘நான் இவ்வளவு வேதனைப்படறேன்னு தெரிஞ்சும்.. நான் இவ்வளவு இன்செக்குயூரா பீல் பண்றேன்னு தெரிஞ்சும்.. அந்த தர்ஷாவை வேலையை விட்டு அனுப்ப முடியாதுங்கறான். அப்போ என்னைவிட அவனுக்கு அந்த தர்ஷா தானே முக்கியமாகிட்டா?’ என்று அவன் மீதான கறுப்புச் சாயத்தை இன்னும் கெட்டிப்படுத்தியது.

அன்றிலிருந்து முற்றும் முழுமையாக அவனிடம் பேசுவதையே நிறுத்திவிட்டிருந்தாள் மணி. இரண்டு, மூன்று முறை அவளை சமாதானப்படுத்த ராகவ் எடுத்த முயற்சிகள் யாவும் பலனின்றித் தான் போனது.

அவனுக்குத் தெரியும், தங்களது திருமணத்திற்கு முன்பு தன்னையும், தர்ஷாவையும் அவள் தவறாக நினைத்துக் கொண்டு தர்ஷாவிடமே கண்டபடி உளறிக் கொட்டியதும், அவளது உளறலில் தலையும் புரியாது, காலும் புரியாது தர்ஷா திணறியதும்.

ஆனால் இப்பொழுதும் அதே போல உளறுவதற்கெல்லாம் மதிப்பு கொடுத்தால் தன்னுடைய தன்மானத்தத்துக்கு இழுக்கு என்று எண்ணினான் அவன். ஆம்.. அவனை அசிங்கப்படுத்துவது போலத் தானே மணியின் சந்தேகம் இருக்கிறது என்று கருதினான் அவன்.

கண்ணில் பார்க்கிற பெண்களின் பின்னாடியெல்லாம் போகின்ற கயவனா நான்? என்ற எண்ணத்தில் தான் மணி இவ்வளவு செய்தும் அவன் தர்ஷாவை வேலையை விட்டு விலக்குவதாக இல்லை. ஆனால் அவனது இந்தப் பிடிவாதம் பின்னாளில் எத்தகைய பாதிப்பை அவன் வாழ்க்கையில் ஏற்படப்போகிறது என்று அவன் மட்டும் அறிந்திருந்தால், தர்ஷாவை வேலைக்கு அமர்த்தியே இருக்க மாட்டான்.

அவன் அதை அறிந்திராத காரணத்தால் மணியின் பிடிவாதத்தில் தானும் முறுக்கிக் ஒண்டு தான திரிந்தான்.

இது வெளிப்பார்வைக்குக் கூட அப்பட்டமாக வெளிப்பட்டு, ஊழியர்களுடையே சிறு கிசுகிசுப்பை ஏற்படுத்தியது. அனால் அதில் பாதிக்கும் மேற்போட்டவர்கள் அவர்களது ஸ்தாபனங்களில் வெகு காலமாகவே வேலை செய்து வருபவர்கள். அதனால் இதுவும் அவர்களது சிறுவயது சண்டை போலவே தெரிய, அந்த கிசுகிசுப்புகளும் சந்தோஷமான ஒன்றாகவே அமைந்தது.

ஆனால் அங்கு வேலைக்கு வந்ததே சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் உள்ளே புகுந்து, ராகவை அடைந்து விடவேண்டும் என்று சபதம் எடுத்து வந்த தர்ஷாவுக்கு, இந்த ஊடல், அவளுக்கான ஒரு வாய்ப்பாகவே தெரிந்தது.

ராகவ், மணியிடம் காட்டும் முறைப்புகளுக்கெல்லாம் தர்ஷா இன்னும் இன்னுமாய் அவனிடம் நெருங்கினாள்!

நகை வடிவமைப்பில் தர்ஷாவின் திறமையையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது தான்.

அவள் தன்னுடைய சில யோசனைகளை ராகவிடம் கூற, ராகவோ அதற்கு ஒப்புதலும் கொடுத்துவிட்டு, மறுபுறம் திரும்பி.. “மணி.. நீ செய்துட்டு இருந்த வேலை என்ன ஆச்சு? முடிச்சுட்டியா?” என்று கேட்க, ஏற்கனவே அவன் மேல் அத்தனை கோபத்தில் இருந்தவளோ..

“அது தான் என்ன ரீபிலேஸ் செய்ய ஒரு ஆள் வந்தாச்சுல்ல? அவங்ககிட்டையே வேலை வாங்கிக்கோ..” என்று கூறிவிட்டு சென்றவள், அதன் பிறகு அன்றைக்கு முழுவதுமே கடைப்பக்கம் வரவே இல்லை.

அவள் தனது வேலைகளை எல்லாம் முடித்தே விட்டாள் தான்! அவள் வடிவமைத்த ஒவ்வொரு நகையிலும், ராகவ் – மணியின் சிறு வயது வாழ்க்கை முதல் படமாக ஓடியது.

கால் கொலுசில், ராகவும், மணியுமாக துரத்தி விளையாடுவது ஒரு சிறுவனும், சிறுமியும்!

கை வளையல்களில் சற்று வளர்ந்த பதின் பருவத்து ஆணும், பெண்ணும் கை பிடித்திருக்க, கண்களில் மட்டும் சிறு கோபம்.. அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும். அவர்களுக்கான சிறு சண்டையை அந்த வளையலில் வடிவமைத்திருந்தாள். அந்த வளையலின் வடிவமைப்பில் கூட அவர்களது முக உணர்ச்சி அவ்வளவு தெளிவாக வெளிப்பட்டது.

சின்னஞ்சிறு மோதிரத்தில் கூட, அவர்களது நிச்சய தினத்தன்று அவன், அவள் விரலில் மோதிரமிட்ட நிகழ்வே வடிவமைக்கப்பட்டிருக்க.. காது ஜிமிக்கியில் பெண்ணவளின் பின் நின்ற ஆண், அவள் செவியில் முத்தமிடுவதை வடிவமைத்திருந்தவள்.. தன்னவன் உறையும் மார்பைத் தொடும் நீண்ட ஆரத்தில், ராகவ், மணிக்கு மங்கள நாண் பூட்டியதை வடிவமைத்திருந்தாள்.

முழு வடிவமைப்பு ராகவ், மணியின் முகத்தோற்றத்தை அப்படியே பிரதியெடுத்து எல்லா வேலையும் முடிந்திருக்க, இந்த ஈகோ பிரச்சனையால் அதை அவனிடம் நேராகக் கூறாது, தனது லாப்டாப்பை மட்டும் அவனது டேபிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டாள்.

ஆனால் அதை ராகவ் பார்க்கும் முன்பு, அவன் வெளியே சென்றிருந்த நேரத்தில் தர்ஷா அதை எடுத்துப் பார்த்துவிட, அவளது கண்கள் தனக்குள் உதித்த குயுக்தியான யோசனையில் சிரித்தது!

மறுநாள் ராகவ் அலுவலகத்திற்கு வரும் முன்னே அங்கு வந்திருந்த தர்ஷா, தன்னுடைய வடிவமைப்பை எடுத்துக் காண்பிக்க, ராகவின் கண்கள் விரிந்தன.

“தர்ஷா.. என்னதிது?” என்று அவன் கண்கள் மகிழ்ச்சியில் விரிய.. தர்ஷாவோ.. “ராகவ்.. எனக்கு உங்களுக்கும், மணிக்கும் இருக்கற பாண்டிங் ரொம்பப் பிடிக்கும்.. அதனால தான் உங்கள ரெஃபெரென்ஸா வச்சு இதை நான் டிசைன் செய்தேன்..” என்று முந்தைய நாள் மணியின் லேப்டாப்பில் இருந்து எடுத்த அவளது டிசைன்களை, தனதாகக் காட்டிக் கூற, ராகவுக்கு அத்தனை சந்தோசம்!

“எனக்கு.. எனக்கு.. என்னோட சந்தோஷத்தை எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னே தெரியல.. பட்.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ் சோ மச்..” என்று அவன் கூறி, வெளியே கூட்டிச் சென்று கடை ஊழியர்களிடத்தில் அதை காண்பித்து தர்ஷாவைப் பாராட்டிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்தாள் மணி.

அவள் உள்ளே வருவதைக் கண்டவன்.. இப்படி இந்த தர்ஷா தங்களது உறவை புனிதமாகக் கருதி அதை நகை வடிவமைப்பில் கொண்டு வந்திருக்கிறாள் என்ற எண்ணத்தில்.. ‘இந்தப் பெண் இவ்வளவு நல்லவளா இருக்கா.. ஆனா இவளையே இப்படி சந்தேகப்படறா இந்த லூசு..’ என்று எண்ணியவன்.. உள்ளே வந்த மணியிடம் சத்தமாக..

“ஹ்ம்ம்.. உனக்கு கட்டின புருஷனோட கடை மேல இருக்கற அக்கறைய விட, உன்னோட ஈகோ தான் பெருசா தெரியுது.. ஆனா தர்ஷாவைப் பாரு.. வந்து ஒரு மாசம் கூட ஆகல.. ஆனா எக்ஸ்போக்கு தேவையான ஜூவல்லரி டிசைனெல்லாம் எவ்வளவு சீக்கிரமா முடிச்சுட்டா..” என்று நக்கலாகக் கூற மணிக்கோ.. அத்தனை பேர் முன்னிலையில் அறை வாங்கிய உணர்வு!

கூடவே அந்த டிசைன்களை பார்த்தவள் அதிர்ந்தாள்! இது.. இது தன்னுடைய உழைப்பு.. அதற்கு எப்படி இவன், தர்ஷாவின் பெயரைச் சூட்டலாம் என்ற கோபமும் பொங்க.. அவள், “ராகவ்..” என்று ஏதோ கூற வருவதற்குள், அவனுக்கு அலங்காரின் மற்றொரு கிளையில் இருந்து ஒரு முக்கியமான அழைப்பு வர, இவளைத் திரும்பியும் பார்க்காது அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அத்தனை ஊழியர்களின் முன்னிலையில் எதுவும் பேச முடியாத மணியோ, தர்ஷாவின் கையைப் பற்றி இழுத்தபடி விறுவிறுவென தங்களது அறைக்குள் வந்தாள்.

“தர்ஷா.. என்னதிது?” என்று அவள் கேட்க, அவளோ அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு..

“எனக்கு எதுவும் தெரியல அழகு.. அவர் தான் இதோ.. இந்த லாப்டாப்பிலிருந்த டிசைன் எல்லாம் காண்பிச்சு, இதையெல்லாம் நான் செஞ்சதா சொல்லி எனக்கு க்ரெடிட் கொடுக்கறதா சொன்னார்..” என்றாள்.

மணி அவளை சந்தேகமாக நோக்கவும்.. “நான் என்ன செய்யறது மணி.. நானும் வெறும் ரத்தமும், சதையும், உயிரும், உணர்ச்சியும் இருக்கற மனுஷி தானே?

உனக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் அவரைவிட்டு விலகத் தான் செஞ்சேன்.. ஆனா அவர் தான் என்ன தேடிக் கண்டுபிடிச்சு இங்க கூட்டிட்டு வந்தார். இப்போ.. அவரோட சரி பாதி நான் தான்ற மாதிரி, யாரோ செஞ்ச டிசைனுக்கு எனக்கு க்ரெடிட் தந்து.. அவரோட உயிரா இருக்கற இந்தக் கடைல, என்ன முக்கியமானவளா சேர்த்திருக்கார்.

இதுல இருந்தே உனக்குப் புரியலையா மணி? அவர் உன்ன கல்யாணம் செய்துக்கிட்டது உங்க குடும்பத்துக்காகத் தான்.. அவங்களுக்காகத் தான் அவர் உன்கூட வாழ்ந்ததும்.. ஆனா.. அவர் மனசு முழுக்க நான் தான் இருக்கேன்..

இனியாவது எங்கள வாழவிடு மணி.. ப்ளீஸ்.. அவரோட கடை, சொத்து, காசு, பணம்னு எல்லாமே நீயே எடுத்துக்கோ.. எனக்கு ராகவ் மட்டும் போதும் ப்ளீஸ்..” என்று அவள் காலிலேயே விழுந்துவிட.. அதிர்ந்து போன மணியோ அவளிடம் எதுவும் பேசாது கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

அவள் வெளியேறுவதை அபார்த்த தர்ஷாவோ, குரூரமாகச் சிரித்தபடியே நிமிர்ந்தாள்!

தர்ஷாவுக்கு, மணியின் குணம் பற்றி நன்றாகத் தெரியும்.. பாசக்காரி தான். ஆனால் முன்கோபி! பிடிவாதமும் அதிகம்!

எனவே தான் ராகவுக்கும், தனக்கும் காதல் என்று கூறி, ஏற்கனவே இவர்களுக்குள் தோன்றியிருக்கும் ஊடலை, முழு பிரிவாக மாற்றிவிட முயற்சித்தாள். அவளது முயற்சி, இதோ.. இப்பொழுது பலனளித்தும் தான் விட்டது.

தன் கால் போக்கில் நடந்து சென்ற மணி, தான் வந்த காரிலேயே தனது பிறந்த வீட்டிற்குச் சென்றாள். அவளுக்கு இதைப் பற்றி நன்றாக யோசிக்க வேண்டியிருந்தது. அது ராகவை அருகிலேயே வைத்துக் கொண்டு யோசிக்க முடியாது. அவனிடம் ஏதாவது கேட்டாலும், அவன் மறுபடியும் பாட்டிக்காகவோ, அல்லது அவன் பெற்றோருக்காகவோ தர்ஷா கூறியதை இல்லை என்று தான் மறுப்பான் என்று எண்ணினாள் அவள்.

ஆம்.. மணி, தர்ஷா கூறியதை முழுவதுமாக நம்பிவிட்டாள்! ஏற்கனவே தர்ஷாவை வேலைக்கு அவன் அழைத்து வந்ததிலேயே மனம் சலனமுற்று இருந்தவள், இப்பொழுது அவனது மேஜையில் தான் வைத்துவிட்டு வந்திருந்த லாப்டாப்பிலிருந்த டிசைன்களுக்கெல்லாம் தர்ஷாவுக்கு உரிமை கொடுத்ததை, தர்ஷாவின் மீதான அவன் காதலாகத் தான் பார்த்தாள் அவள்.

எனவே தான் ராகவிடம் எப்படிக் கூறிப் பிரிவது என்று யோசித்தபடியே அவள் வீட்டுப் படியேறி உள்ளே வந்தால்.. அங்கு அப்பொழுது தான் வெளியே கிளம்பத் தயாராகி வந்த மனோ.. வந்தவளை ஆத்திரமாகப் பார்த்தான்.

அவனது ஒற்றைப் பார்வையிலேயே மணிக்குப் புரிந்துவிட்டது.. ‘இல்லை.. இல்லை.. இதுவும் என் வீடு இல்லை.. என்னைச் குற்றி இருக்கும் எதுவுமே எனக்குச் சொந்தமில்லை..’ என்று எண்ணம் பலமாகத் தாக்க.. மனதுக்குள் கதறியவள், அமைதியாகத் தலைகுனிந்து வெளியே நடக்கலானாள்.

கால் கடுக்க தன் போக்கில் நடந்தவள் எங்கே செல்கிறோம் என்ற இலக்கின்றி வெகு தூரம் நடந்தாள். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு பேருந்தைப் பார்த்தவள், அதைக் கைகாட்டி நிறுத்தி அதில் ஏறி அமர்ந்து கண்மூடிக் கொண்டாள்.

அவளது மூடிய இமைகளில் இருந்து சூடான கண்ணீர் வழிந்தது!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
13
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்