Loading

அத்தியாயம் – 19

“அதே தாண்டி நான் கேட்கறேன்.. நீ கோபமா இருந்தா நான் ஏன் பசில இருக்கனும்?” என்று அவளிடம், ராகவும் பதிலுக்குக் கத்திவிட்டு, அவளைத் தாண்டி வைக்கப்பட்டிருந்த பிரியாணியை எடுத்து உண்ணத் துவங்கினான்.

அதைப் பார்த்து மணியின் கண்கள் கனன்றாலும், அவனிடம் எதுவும் பேசாது இவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர, இதழுக்குள் சிரித்துக் கொண்ட ராகவோ..

“அடியேய் மஞ்சக்கிழங்கே..” என்று அழைத்தான்.

அவனது அழைப்பில் விழிகள் ஆச்சர்யத்தில் விரிய, மணி மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன பேரெல்லாம் புதுசா இருக்கு?” என்று மெல்ல அவள் கேட்க, அவனோ செல்லமாகக் கண்ணடித்தபடி.. “ஹ்ம்ம்.. ஆமா..” என்று கூற, மணி அவன் புறமாக நன்றாகத் திரும்பி அமர்ந்து அவனைப் பார்த்தாள்.

“உன்ன என்னால புரிஞ்சுக்கவே முடிலடா..” என்று அவள் வியப்புடன் கூற, அவளருகே நெருங்கி அமர்ந்த ராகவோ..

“எனக்கே என்ன புரிஞ்சுக்க முடில மணி.. நான் தான் சொன்னேனே.. கல்யாணத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்தாலும்.. பாட்டி கல்யாணப் பேச்சை எடுத்ததுமே எனக்கு உடனே சரின்னு தான் சொல்லத் தோனுச்சு..

அப்போதுல இருந்து எனக்கு நீ மஞ்சக்கிழங்கா தான் தெரியற..” என்று அவன் சிரித்தபடியே கூற, அதை “ஆ..” என்று கேட்டுக்கொண்டிருந்தாள் மணி.

அவள் வாய் சிறிதளவு திறந்திருக்க, அவள் தன்னையே மெய் மறந்து பார்த்திருக்கும் அந்தச் சிறு இடைவெளியில், அவளுக்கு ஒரு வாய் பிரியாணியை ஊட்டிவிட்டான் ராகவ்.

“அமைதியா சாப்பிடு.. சாப்பிட்டாலே பாதி பிரச்சனை சரியாகிடும்.. உன்னோட கோபமும் குறைஞ்சுடும்..” என்று ஓர் அன்னையின் கனிவுடன் அவன் அள்ளிக் கொடுக்க, மறுபேச்சின்றி அவனையே பார்த்தபடி உண்டு முடித்தாள் மணி.

சாப்பிட்டு முடித்துவிட்டு படுக்கையில் படுத்தவள், தனதருகே இருக்கும் ராகவின் கரத்தைப் பற்றிக் கொண்டு.. “நமக்குள்ள எல்லாமே சரியாகிடுமா டா?” என்று கேட்க, அவனோ மிருதுவான குரலில்..

“என்ன பொறுத்த வரைக்கும் நமக்குள்ள எல்லாமே சரியாகிடுச்சு மணி.. இப்போ என் மனசுல இருக்கறதெல்லாம் உன் மேல இருக்கற காதல்.

அது நிதர்சனம்! என்னென்னைக்கும் மாறாது.. உனக்குத் கொஞ்சம் தெளிவு வர வரைக்கும் நான் காத்திருக்கத் தயார். ஆனா..” என்று அவன் பாதியிலேயே நிறுத்த, மணியோ சற்று கவலையுடன்..

“ஆனா..” என்று கேட்டாள். அவனோ இதழுக்குள் அடக்கிய குறுஞ்சிரிப்புடன்.. “அப்பப்போ இப்படி நீ முத்தா கொடுத்தா கொஞ்சம் பிழைச்சுப்பேன்..” என்று கூறிக் கண்ணடிக்க, “சீ.. போடா..” என்றவள் அவனை ஆசையாகக் கட்டிக் கொண்டாள்.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மணிக்கு அவ்வளவு அழகாக விடிந்தது. திருமணம் என்பது இத்தனை சந்தோஷங்களைக் கொடுக்கக் கூடியதா என்று அவளே ஆச்சர்யப்படும் விதமாக ராகவ் அவளை அவ்வளவு தாங்கினான்.

அவளை விட்டு ஒரு நொடி கூடப் பிரிய முடியாதவனைப் போல ஒட்டிக் கொண்டே அலைந்தான். கடையில் அத்தனை வேலைகளுக்கு நடுவிலும், அவன் கவனம் அவளால் சிதறுவதை உணர்ந்துமே அவளைத் தனது அறைக்குள்ளேயே வைத்து அடைகாத்தான் எனலாம்.

அவளுடனே கடைக்கு வருவதும், அவள் சோர்ந்துவிடுவாளே என்று அவளுக்காக நேரமாகவே கடையில் இருந்து கிளம்புவதும், சேர்ந்துவிட்ட வேலைகளை, அவள் உறங்கிய பிறகு கணினிலேயே செய்து தன் தூக்கத்தைத் தியாகம் செய்வதுமென.. அவள் அறிந்தும் அறியாமலுமே அவளைக் காதலில் திலக்கச் செய்திருந்தான் ராகவ்.

இதில் மணியே.. “என்னடா.. முன்னாடி எல்லாம் உன் கண் முன்னாடி வந்தாலே இது அழகு இல்ல அகோரம்னு கிண்டல் பண்ணுவ.. இப்போ இந்த அகோரத்தை கூடக் கூட்டிகிட்டு சுத்திட்டு இருக்க?” என்று கேலியாகக் கேட்டாலும், அவனும் அதே கேலியுடனே..

“நீ கேள்விப்பட்டது இல்லையா காதலுக்குக் கண்ணில்லைன்னு? அதனால தான் அந்த அகோரம் இப்போ என் கண்ணுக்குத் தெரியாம வெறும் அழகியா மட்டுமே தெரியற..” என்று அவளை மடியில் கிடத்திக் கொண்டு கொஞ்சுவான்.

இப்பொழுதும் இருவருக்கும் முட்டிக் கொள்ளாமல் இல்லை.. சண்டை வராமல் இல்லை.. அனால் ஒவ்வொரு சண்டையும் அவனது சமாதானத்தில், சரசத்தில், சின்னச் சின்னக் கடிகளும், செல்லச் செல்லச் சில்மிஷங்களுமான தண்டனையில் வந்து முடிகின்றன.

இப்படியான ஒரு சமயத்தில் தான் மானபரனைப் பார்த்தே வெகு நாட்கள் ஆகிவிட்டது என்று கை நிறைய அவனுக்குப் பிடித்த தின்பண்டங்களுடன் அவனைத் தம்பதி சமேதராகப் பார்க்கச் சென்றனர் ராகவும் – மணியும்.

இவர்கள் சென்ற நேரம் அவனும் வீட்டில் தான் இருந்தான். ஹால் சோபாவில் சாய்ந்து, தலையில் கைவைத்து அமர்ந்திருந்தவனை வித்தியாசமாகப் பார்த்தபடி உள்ளே சென்றனர் ராகவும், மணியும்.

உள்ளே நுழைந்ததும்.. “ஏய் எரும..” என்று மனோவின் காதில் மணி கத்த, திடீரென்று கேட்ட அந்தச் சத்தத்தால் அதிர்ந்து கண் விழித்த மனோவோ..

“ஏய் அறிவுகெட்டவளே.. உன்ன தான் கல்யாணம் செய்து அனுப்பிவிட்டாச்சுல்ல? இப்பவும் எதுக்கு இங்க வந்து என்ன டார்ச்சர் பண்ணற?” என்று கேட்க அவன் பேசிய வார்த்தைகளின் வீரியம் தாங்காது அதிர்ந்து போய் நின்றாள் மணி.

“இல்லடா..” என்று அவள் ஏதோ கூற வருவதற்கு முன்பு.. “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. இப்போ யாரையும் பார்த்துப் பேசற மனநிலைல இல்ல நான். என்ன தொந்தரவு செய்யாம ரெண்டு பேரும் கிளம்பறீங்களா?” என்று கூற மணிக்கு மனதுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

அவனது பேச்சில் கண்களெல்லாம் கலங்கிவிட, தலைகுனிந்து நின்றிருந்த மணியைப் பார்த்த ராகவுக்கு உள்ளுக்குள் சுருக்கெனக் கோபம் முளைத்தது.

“ஏய்.. என்ன நீ பாட்டுக்குக் கண்டமேனிக்கு கத்திட்டு இருக்க? இது என்ன நீ சம்பாதிச்சு கட்டின வீடா? உன் அப்பா கட்டின வீடு தான? இதுல என்னவோ உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கற மாதிரி பேசற?

ஏதோ கூடப்பிறந்தவனாச்சேன்னு பார்க்க வந்தா, இப்டியாடா கட்டிக்கொடுத்த பொண்ண அசிங்கப்படுத்துவ?” என்று அவன் கூற, அவன் கூறியதன் சாராம்சம் புரியாமலேயே எகிறத் துவங்கினான் மானபரன்.

“ஓஹோ?! எனக்கு இப்போ இல்ல புரியுது, புருஷனும், பொண்டாட்டியும் இவ்வளவு அக்கறையா இங்க எதுக்கு வந்தீங்கன்னு?” என்று அவன் போலியாய் ஆச்சர்யப்பட்டுக் கேட்க, அவன் எதைப் பற்றிக் கூறுகிறான் என்று புரியாத ராகவோ அவனைப் புருவம் சுறுக்கிப் பார்த்தான்.

“என்ன புரியலையா? உனக்கு ஏற்கனவே என்கிட்டே எல்லாத்துலயும் போட்டி. இப்போ இவளைக் கல்யாணம் செய்துக்கிட்டதனால என்னோட சொத்துல பாதி உனக்கு வந்துடும். அதை வச்சு நீ என்னவிட பெரியாளாகலாம்னு தான பார்க்கற?” என்று அவன் கேட்க, ராகவுக்கோ இப்பொழுது கட்டுக்கடங்காத அளவுக்குக் கோபம் வந்தது.

“ச்சை.. தான் திருடன், பிறரை நம்பான்னு சொல்லுவாங்க. அப்படி நீ தான் உனக்கு வரப்போற பொண்டாட்டி மூலமா வரச் சொத்தையெல்லாம் கணக்குப் போட்டுக் கல்யாணம் செய்துக்குவியோ என்னவோ.. நான் மணியைக் கல்யாணம் செய்துக்கிட்டது அவளுக்காகத் தான்.

அதையெல்லாம் உன்கிட்ட சொல்லிப் புரிய வைக்கற அளவுக்கு நீ ஒன்னும் எனக்கு முக்கியமானவன் கிடையாது.

இன்னொன்னு நல்லா கேட்டுக்கோ தம்பி.. இந்த வீடு உன் அப்பாவே கட்டியிருந்தாலும், இப்போ இது என் பாட்டி வீடு. இங்க நானோ, என் பொண்டாட்டியோ வரதுக்கோ, தங்கறதுக்கோ நீ எந்தத் தடையும் சொல்ல முடியாது.

ஆனாலும் மணியோட கூடப்பிறந்தவன்னு உன்ன பார்க்க வந்தோம் பாரு.. எங்க புத்திய எதுலையாவது அடிக்கணும்..” என்று வெகுண்டெழுந்த கோபத்தில் பேசியவன் மணியின் கரத்தைப் பற்றியபடி..

“வா மணி.. இன்னும் இங்க இருந்து இவன் மூஞ்சிய பார்த்துட்டு இருக்க எனக்கு இஷ்டம் இல்ல..” என்று கூறி வெளியே சென்றவன், வாசல் தாண்டும் முன் ஒரு கணம் நின்று..

“இன்னைக்கு நீ பேசின பேச்சுக்கு அமைதியா போறேன்னு நினைச்சுக்காத. மறுபடியும் சொல்லறேன்.. இது உன்னோட வீடு மட்டும் கிடையாது.

உனக்கு இருக்குடா ஒருநாள்..” என்று மீண்டும் கருவியபடியே தான் சென்றான் அவன்.

மனோவைப் பார்த்துவிட்டு வந்த பிறகு மணி அன்று முழுவதுமே மொத்தமாய் உடைந்து போய்க் காணப்பட்டாள்.

முதலில் மனோவைப் பார்த்த்துவிட்டு வருவோம் என்று ராகவ் கூறியதற்கு, அவள் வேண்டாம் என்று தான் தடுத்தாள்.

“டேய்.. அவனுக்கெல்லாம் என் மேல நீ நினைக்கற மாதிரி பாசமெல்லாம் இல்ல.. அவன், என்ன அவனோட போட்டியா தான் பார்க்கறான்..” என்று அவள் கூறியதற்கு ராகவ் தான்..

“ஹேய்.. அவன் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாலும் இப்போ நீ கல்யாணமாகிப் போய்ட்டேன்ற காரணத்தால அவனுக்கு உன் மேல பாசம் அதிகமா தான் ஆகியிருக்கும்.

எல்லா பசங்களும் அப்படித் தான் இருப்பாங்க.. ஆனா தன்னோட அக்காவுக்கோ, தங்கச்சிக்கோ கல்யாணமான பின்னாடி தான் அவங்களுக்குள்ள உண்மையான பாசமெல்லாம் வெளில வரும்.

நானும் கூடத் தான் கல்யாணத்துக்கு முன்னாடி உன்கிட்ட எப்ப பாரு முறைசிச்சுகிட்டே இருந்தேன்.. இப்பவும் அப்படியா இருக்கேன்?” என்று அவன் நீண்ட விளக்கம் கொடுக்க, அதில் தெளிந்து தான் அவள் மனோவைச் சந்திக்கச் சென்றது.

ஆனால் அங்கே சென்று அவன் இப்படி பேசவும் இவளது ஈகோவும் தூண்டப்பட, இரண்டு நாட்கள் முகத்தை உர்ரென்று வைத்திருந்தவள், அதன் பிறகு சாதாரணமாகத் தனது வேளைகளில் ஈடுபடத் துவங்கினாள்.

இந்த நிலையில் தான் இந்த வருடத்திற்கான அகில இந்திய அளவில் நடத்தப்படும் நகைக் கண்காட்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வகையில் அலங்காரின் நகை வடிவமைப்பும், ஆபர்ணாவின் நகை வடிவமைப்பும் பரிசை வெல்லுவது உறுதி.

இந்த வருடம் அதற்கான நகை வடிவமைப்பில் தான் மணி தனது முழு கவனத்தையும் செலுத்தியிருந்தாள். ஆனால் தான் அதற்கான வடிவமைப்புகளைக் செய்துகொண்டிருக்கிறேன் என்று அவள் ராகவிடம் கூறவில்லை. நகை வடிவமைப்பு வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு ராகவுக்கு அதை சர்ப்ரைஸாக காண்பிக்கலாம் என்று எண்ணியிருந்தாள் அவள்.

ஆனால் அப்பொழுது தான் அவளுக்கு அந்தப் பேரதிர்ச்சி காத்திருந்தது!

அன்றும் வழமை போலக் கணவனின் செல்லச் சீண்டலில் கண்விழித்து, இருவரும் ஒன்றாகக் கிளம்பி கடைக்குச் செல்லும் வரையில் எல்லாமே நன்றாகத் தான் இருந்தது.

ஆனால்.. கடைக்குச் சென்ற ஒரு மணிநேரத்திலேயே அவர்களது அறைக் கதவைத் தட்டித் திறந்துகொண்டு வந்தாள் தர்ஷா!

அதிர்ச்சியில் விழிகள் விரிய, வந்தவளைப் பார்த்த மணியோ, திரும்பி ராகவைப் பார்க்க.. அவனது கண்களும் முகமும் அளவற்ற மகிழிச்சியில் பளிச்சிட்டது.

இதயத்தில் எங்கிருந்தோ வந்து ஏறிக்கொண்டு பாரத்தை கைகளால் அழுத்திவிட்டபடி அவர்கள் இருவரையும் மணி பார்த்தது பார்த்தபடி இருக்க, உள்ளே வந்த தர்ஷாவோ..

“ஹலோ அழகு.. எப்படி இருக்க? உன் கல்யாணத்தப்போ பார்த்தது.. சார் எப்படி பார்த்துக்கறார் உன்ன?” என்று கேட்க, மணியோ அவளது கேள்விக்கு பதில் சொல்ல நினைத்தாலும் வாயில் வார்த்தைகள் வராது திணறினாள்.

அவள் அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருக்க, தர்ஷாவே தொடர்ந்தாள்.

“என்ன மணி.. பேயறைஞ்ச மாதிரி பார்த்துட்டு இருக்க?” என்று கேலியாகக் கேட்டாள்.

அதற்கு மணி பதில் சொல்லுவதற்குள் ராகவ் தொடர்ந்தான்.

“உன்ன இங்க திடீருன்னு பார்த்ததால ஷாக் ஆகிட்டான்னு நினைக்கறேன். அதான் அப்படியே பிரீஸ் ஆகிட்டா..” என்று கூற, தர்ஷாவோ போலியாய் ஆச்சர்யம் காட்டி கண்களை விரித்தாள்.

“ஹோ?! அப்போ நான் இங்க வர்ரதைப் பத்தி நீங்க மணிகிட்ட எதுவுமே சொல்லலையா?” என்று புருவத்தை உச்சி மேட்டுக்குத் தூக்கியபடி அவள் கேட்க, இதழ்களைப் பிதுக்கினான் ராகவ், சிரித்த முகமாகவே!

இவர்களது இந்தப் பொடி வைத்தப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியாது மணியே, தர்ஷாவிடம்..

“சரி அவர் தான் சொல்லல.. நீயே தான் சொல்லேன் இங்க எதுக்கு இப்போ திடீர் விஜயம்னு?” என்று சாதாரணமாகக் கேட்பது போலக் கேட்க, அவளைப் பார்த்தது சிரித்துக்கொண்டே..

“உன்ன ரீபிலேஸ் பண்ண..” என்று கண்ணடித்தபடி அவள் கூறிய வார்த்தைகளில் அமிலம் தாக்கியது மணியின் நெஞ்சுக்குள்!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
13
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்