Loading

அத்தியாயம் -2

இந்த நவீன காலத்தில் எத்தனையோ வளர்ச்சி வந்து விட்டது. வீட்டிலிருந்தபடியே வேலை, வீட்டில் இருந்தபடியே படிப்பு,  வீட்டில் இருந்தபடியே சாப்பாடு.

அதேபோல் வீட்டிலிருந்தபடியே மருத்துவம் என்பதை கொண்டு வருவது தான் இவர்களின் இந்த புதிய ப்ராஜெக்டின் நோக்கம்..!

“வைத்தியசாலா ” என்று ஒரு ஆப்பை உருவாக்கி.. பிரீமியம் கட்டணத்தின் அளவு கோல் வைத்து டாக்டருடன் வீடியோ கால், மருந்துகள் மற்றும் மருத்துவம் சார்ந்த பொருட்களை ஹோம் டெலிவரி செய்வது ,  வீட்டிற்கே வந்து சுகர்,  பி.பி,  பிளட் டெஸ்ட் எடுத்து கொள்வது.

என எது எல்லாம் முடியுமோ, அது எல்லாம் எளிமையாக மற்றும் சிறப்பாக கொண்டு வருவது தான் இவர்களின் நோக்கம்.

முதலில் அதற்கான டெமோ ஆப்பை டெவெலப் செய்து,  லீகல் பார்மேலிட்டீஸ் முடிந்த பிறகு  மேல் இடத்தில் இருந்து அப்ரூவல் வாங்க வேண்டும்.

அதற்கான கால கேடு தான் இந்த மூன்று மாதம். அவன் நினைத்திருந்தால் கண்மணியை வேலையை விட்டு தூக்கி இருக்கலாம் தான், ஆனால் ஏற்கனவே நேரம் குறைவாக இருக்கும் வேளையில் மறுபடியும் புதிய ஆள் சேர்ப்பது என்பது நேரவிரயம் மட்டுமில்லாமல், கண்மணி வேலையை சிறப்பாக தான் செய்கிறாள். என்ன சோம்பேறி தனம் மட்டும் தான் கிலோ கணக்கில் உள்ளது.

அவனுக்குமே,  தான் அருகில் இருந்து பார்த்து கொண்டால் ப்ராஜெக்ட்டை சீக்கிரம் முடிக்க முடியும் என தோன்ற, கிளம்பி வந்துவிட்டான் அலுவலகத்திற்கு. 

யானை தன் தலையில் மண்ணை அள்ளி போட்டு கொண்ட கதையாக ஆகி விட்டது கண்மணிக்கு. ஸ்கிரீனிலிருந்து அவன் முகம் மறைந்ததும் கால் கட் ஆகி விட்டது என எண்ணி அவள் பாட்டிற்கு பேச அதுவே அவளிற்கு விபரீதமாகி போனது.

அவன் வேலையை விட்டு தூக்கி விடுவானோ என பயந்தவளிற்கு அதை விட மோசமான தண்டனை தான் கிடைத்தது. அவனின் நேரடி கண் பார்வைக்கு கீழ் அவள் வேலை செய்ய வேண்டும்.

அன்று அவள் சொன்னதிற்கு பதிலளிக்கும் விதமாக,

” ஓகே மிஸ் கண்மணி நீங்க சொன்ன மாதிரி எல்லாம் பண்ணிருலாம் அப்போ உங்க ப்ரோகரஸ் எப்புடி இருக்குனு நானு பாக்கறேன் ” சொன்னவன் சொன்னதோடு மட்டும் இல்லாமல் கிளம்பியும் வந்து விட்டான் அலுவலகத்திற்கு, அவளை குறை சொல்லுவதையே முழு நேர வேலையாக வைத்து கொண்டு.

” இதுக்கு என்னைய செருப்பால அடிச்சி வேலய விட்டு தூக்கி இருந்தா கூட சந்தோச பட்டு இருப்பேனேடா மாதவா.. ஹையோ கோடிங்  அடிச்சு அடிச்சே என் கண்ணு அவிஞ்சிரும் போலயே,  ராட்சசன் லஞ்ச் ஹவர் முடிச்சிட்டு ஜஸ்ட் ஒரு ஒருமணி நேரம் தான் டா கண்ணு மூடி இருப்பேன் அத மோப்பம் புடிச்சிட்டு வந்து ரெண்டு நாளா நா டிமிக்கி கொடுத்த வேலைய எல்லாம் கண்டு புடிச்சி.  முடிச்சிட்டு தான் வீட்டுக்கு போகனும் சொல்லிருச்சி, அந்த காட்டு பூனை. ஸ்கூல் காலேஜ் ல கூட இவளோ சின்சியரா உக்காந்து ஹோம் ஒர்க் பண்ணது இல்லடா.

 என்ன போய்யி..ஹையோ ஹையோ முடிலயே.. முடிலயே..!! அவன் யாரு எனக்கு பனிஷ்மென்ட் கொடுக்க?? நான் கொடுக்கறேன் பாரு சாபம்..!

 நைட் அவன் கனவுல பவர் ஸ்டார் வந்து ஐட்டம் டான்ஸ் ஆட, உச்சா போக எந்திரிச்சா பல்லி அவன் மண்டையில்ல கக்கா போக..!! “

புலம்பி தீர்த்தாள் கண்மணி. மாதவனிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..

” உனக்கு நல்லா வேணும் டி மண்டு ” என அவள் தலையில் கொட்டு வைத்து விட்டு சென்றான்.

எப்படியோ, இப்படி அப்படி என ஒரு வழியாக அவன் கொடுத்த வேலையை முடித்தவள் அவனிடம் அதை சரி பார்க்க எம்.டி அறைக்கு சென்றாள்.

கையில் லேப் டாப்புடன் சென்றவளிற்கு அறை கதவை தட்ட சற்று சிரமமாக இருந்தது.

‘தட்டாம போனா அதுக்கு அந்த பேய்யி எதாச்சி கத்துச்சினா என்ன பண்ணறது. எதுக்கு வம்பு?  ‘ என நினைத்தவள் லேப்டாப்பை அருகில் இருந்த ஸ்டூலில் வைத்து விட்டு,

“பாஸ்,  மே ஐ கம் இன்..?” என மெதுவாக தட்டினாள்.

எந்த பதிலும் வராமல் இருக்க..அதில் கடுப்பானவள் இப்போ தட்டுற தட்டுல்ல எப்புடி அலறி அடிச்சிட்டு வெளிய வரான் பாரு! என மனதிற்குள் திட்டியவள்,

தூ.. தூ.. தூ.. என கையில் மூன்று முறை துப்பி விட்டு, “ரெடி ஓன் டூ.. த்ரீஈஈஈ.. “

அவளின் மொத்த பலத்தயும் கூட்டி அவள் கதவை தட்டுவதற்கும் போன் பேசி கொண்டே அவன் கதவை திறப்பதிற்கும் சரியாக போக..

‘சத்’ என்ற சத்ததுடன் அவன் மூக்கிலேயே நன்றாக அடித்து விட்டாள் அவள்..!!

‘இஸ்ஸ் ‘ என்ற சிறு முனகலுடன்,

” அப்றம் பேசறன் டா உன்கிட்ட” என்றவன் காலை கட் செய்து விட்டு அவளை தீயாய் முறைத்தான்.

‘ஆத்தாடிஈஈ..  மறுபடியும் சொதப்பிட்டியே டி மணி. ஹையோ இந்த கொரில்லா வேற பார்வையிலயே எரிச்சிரும் போலயே..! ஐ.. ஐடியா ‘ என மனதிற்குள் ஒரு திட்டத்தை தீட்டியவள்.

” ஆஆ அம்மா ஆஆ அய்யயோ கையி போச்சே போச்சே..!” என கத்தி கொண்டே கீழே மடிந்து விழுந்தாள்.

“ஹா.. வலிக்குது வலிக்குது “

என வராத கண்ணீரை துடைத்தவள்,

“ஹையோ போச்சு இனி டைப்பிங்கே.. பண்ண முடியாது போல.. சாரி பாஸ் தெரியாம உங்க மேல கை பட்டுருச்சி.. ஆனா பாருங்க அடிவாங்குன நீங்க கூட மல மாடு மாறி ச்ச.. ச்ச.. பழனி மல மாறி ஸ்ட்ராங்கா நிக்கறீங்க.. எனக்கு தான் கை சுழிக்கிருச்சுனு நெனைக்கிறேன்..

இருந்தாலும் நீங்க கவல படாதீங்க பாஸ் ஃபெவி குயிக் போட்டு கை ஒட்ட வெச்சாவுது நம்ம ப்ராஜெக்ட்டா கரெக்ட் டைம்முக்கு முடிச்சி கொடுத்துருவேன் பாஸ். ஏனா ஒரு தடவ ஒரு பொறுப்ப எடுத்தா அத வேக வெச்சி பருப்பா மாத்துற வரைக்கும் ஓய மாட்டா இந்த கண்மணி..!!  உங்களுக்கு நிறைய வேல இருக்கும் நீங்க பாருங்க.. அப்றம் இந்த லேப்டாப் ல தான் கோடிங் எல்லாம் ஏத்தி வெச்சிருக்கேன் நீங்க அத கரெக்ஷன் பாருங்க. நான் கொஞ்சமா ரெஸ்ட் எடுத்துட்டு,  அத விட கொஞ்சமா வேல செஞ்சிட்டு வீட்டுக்கு கெளம்புறேன். ஓகே? பை பாஸ் டேக் கேர். “

ரெண்டு கைகளையும் பாக்கெட்டுக்குள் 

வைத்து கொண்டு அவள் முகத்தில் காட்டும் அபிநயங்கள் பார்த்து கொண்டிருந்தான் வருண் ஆதித்யன்.

‘ப்பா ஒரு வசனம் பேசறதுக்குள்ள ஓராயிரம் ரியாக்ஷன்! எங்க இருந்து தான் புடிச்சாங்களோ இவள. சரியான ட்ராமா கோஷ்ட்டி ‘ என மனதில் நினைத்து கொண்டான்.

‘ ஹப்பாடா எங்க இந்த காட்டு பூன புடிச்சி கொதறிருமோனு பயந்துட்டேன். நல்ல வேள தப்பிச்ச டி மணி..

குரு நமக்கு உச்சில இருக்காரு போல.. இனி யாராலயும் உன்ன ஒன்னும் பண்ண முடியாது!’ என்ற வெற்றி மிதப்போடு அவள் அவ்விடம் விட்டு நகர..

“ஹ்க்கும் ” என தொண்டயை செறுமி, 

” எங்க போறீங்க கண்மணி? நான் தான் உங்க பாஸ். நீங்க என்ன பண்ணனும்னு நான் தான் சொல்லணும் புரிஞ்சிதா? பாஃலோ மீ. ” என்றவன் அவன் பாட்டிற்கு கிடு கிடு வென நடக்க ஆரம்பித்து விட்டான்.

ஓடாத குறையாக அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்தாள் கண்மணி.

அஷ்வினிக்கு லோகோ டிசைனிங் மற்றும் இதர வேலைகளை சொல்லி கொடுத்து கொண்டிருந்தாள் சாத்விகா.

” நா மெயின் ஸ்கெட்ச் போட்டுடேன் மீதி ஹெட்டிங் அப்றம் கொஞ்சம் கலர் ஃபில்லிங் எல்லாம் நீ பண்ணிரு “

எவ்வளவு முயன்றும் சாத்விகாவால் முழு மனதுடன் வேலையில் லயிக்க முடியவில்லை. 

எப்பொழுதும் 6.30 மணிக்கு எழுபவள் வேலைக்கு போக ஆரம்பித்ததில் இருந்து ஐந்து மணிக்கு எழுந்து வேலையை ஆரம்பிப்பாள்.

அப்பொழுது தான் சமைத்து, வீட்டு வேலைகளை முடித்து துருவ் ஆஃபிஸ் கிளம்பியவுடன் மகள் மகிஷாவை  ப்லே ஸ்கூலில் விட்டு விட்டு அவள் வேலைக்கு கிளம்ப சரியாக இருக்கும்.

திருமணமான புதிதில் இவர்களை போல ஒரு அன்னியோனியமான ஜோடியை யாரும் பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ஈர் உடல் ஓர் உயிராய் உலா வந்தவர்கள்.

திருமணம் முடிந்து ரெண்டு மாதத்திலேயே அவள் கரு தரித்து விட ஒரே சந்தோசமும் கொண்டாட்டமுமாய் சென்றது அவர்கள் வாழ்க்கை.

இவ்வளவு நாள் லவ்வர் பாய் மோடில் சுத்தி திரிந்தவனிற்கு தனக்கென ஒரு குடும்பம், என் மனைவி என் மகள் என பூரித்து போனான்.. ஆனால் கூடவே கணம் இல்லா பாரம் ஒன்று அவன் நெஞ்சில் கூடி போனது.

நன்றாக அவர்களை பார்த்து கொள்ள வேண்டும், மகிழ்வாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மேலோங்க இன்னும் கடினமாக உழைக்க தொடங்கினான் துருவ். அதில் வெற்றியும் கண்டான்.

ஐ.டி வேலையில் டீம் லீடாக பொறுப்பேற்றவனிற்கு வெளிநாடு க்ளைன்ட்ஸ் உடன்,  பல நாள் வேலை  நைட்  ஷிப்டாகவே அமைந்தது.

சில சமயம் டபிள் ஷிப்டும் வேலை இருக்கும். பணம் கூட கூட பொறுப்பும் கூடும் தானே!?

“ஏங்க எவளோ கஷ்டப்படறீங்க?” என கரிசனையாக வந்து தலை அழுத்தி விடுவதில் ஆரம்பித்து,

” என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுறதேயில்லை!” என செல்ல சண்டையிட்டு 

” நா ஒருத்தி இங்க இருக்கேங்கற நெனப்பு இருக்கா இல்லாயா? ” என கத்தும் அளவிற்கு இந்த ஒரு வருட காலத்தில் அவர்களின் ஊடல் வளர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்!

இப்படி தான் இன்று காலையும் நைட் ஷிப்ட் முடித்து விட்டு கண் சிவந்து போய் வீடு வந்து சேர்ந்தான் துருவ். அவன் செய்த வேலையில் சிறு தவறு இருப்பதாக சுட்டி காட்டி உடனடியாக முதலில் இருந்து அனுப்ப வேண்டும் என கட்டளை வர, பயங்கர கோவமும் எரிச்சலுடன் அந்த வேலையை முடித்தவனிற்கு உடம்பில் சுத்தமாக தெம்பே இல்லை.

சோர்வாக வந்து சோபாவில் சாய்ந்தவனின் தலை வின் வின்னு என்று வலித்தது. தலையை புடித்து கொண்டே, “சாத்வி ஒரு காஃபி கொடேன் ” என்றவன் கண் மூடி அமர்ந்தான்.

சிங்க் நிறைய நிரம்பி கிடந்த பாத்திரத்தை தேய்த்து கொண்டிருந்தவளிற்கு சுர்ரென கோவம் வந்தது.

எப்பொழுதும் இரவு தூங்கும் முன்னே அடுப்படியை சுத்தம் செய்து விட்டு தான் படுப்பாள்.  ஆனால் நேற்று  இரவு சாமான் கழுவலாம் என அடுப்படிக்கு போக தண்ணியே வரவில்லை. என்ன ஏது என ஆராய்ந்த பிறகு தான் பாத்ரூம் பைப் லீக் ஆகி மொத்த டேங்க் தண்ணீரயும் காலி செய்திருக்கிறது என்று தெரிய வந்தது.

பல முறை சொல்லி விட்டாள் அதை சரி பார்க்க. அதற்கு அவன்,

“எல்லா வேலையும் நான் தான் பாக்கனுமா, இது மாறி சின்ன வேல கூட உன்னால பண்ண முடியாதா?”  என சொல்ல, பிறகு அதை வைத்து ஒரு சண்டை போட்டு… இந்த விஷயத்தையே மறந்திருந்தாள். 

எந்த விஷயமாக இருந்தாலும் முளையிலேயே சரி செய்வது தான் நல்லது. பிறகு அதுவே நமக்கு பிற்காலத்தில் பெரிய விபரீதத்தை அளிக்கும்.பைப்பும் சரி.. லைஃபும் சரி..!

பிறகு ஒரு பிளம்பரை கூப்பிட்டு அதை சரி செய்து, மோட்டார் போட்டு டேங்க் பில் செய்யவே நேரம் சரியாக போய்விட்டது.

போதா குறைக்கு காலையிலேயே அவள் மாமியாரிடம் இருந்து போன்..!

அவரின் மாமன் மகளின் பேத்தி வயதிற்கு வந்துவிட்டாளாம்.. ஒரு வாரத்திற்குள் பலகாரம் கொண்டு போய் பார்க்க வேண்டுமாம்..!!

பொதுவாகவே நெருங்கிய உறவு தவிர மீதி விஷேசங்கள் எல்லாம் உடனுக்கு உடன் போய் பார்ப்பதில்லை..

முதலில் அவனிற்கு லீவ் கிடைக்காது. பிறகு போக்கு வரத்து அலைச்சலும் கூட. ஆதலால் லீவிற்கு வரும் பொழுது மொத்தமாக எல்லாத்திற்கு சேர்த்து ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு விடுவர்.

எத்தனை முறை சொன்னாலும் அவள் மாமியார் அதை புரிந்துகொள்வதாக இல்லை.. போனை போட்டு நச்சரிக்க வேண்டியது. அதுவும் இவளிற்கு தான் போன் வரும். தப்பி தவறி கூட மகனிற்கு அழைத்து விட மாட்டார்..! 

காலையிலேயே அந்த எரிச்சலுடன் அந்த பாத்திரத்தை பார்த்து இன்னும் எரிமலையாய் கொதித்து கொண்டு இருந்தவளை,  வெடிக்க வைத்தது துருவின் அழைப்பு. 

காஃபியை போட்டு கொண்டு போய் அவன் முன்பு ‘டம்’  என வைத்தவள்

” உங்க அம்மா போன் பண்ணாங்க..!

ஊருக்கு வரனுமாம்.. “

” இதான் ரொம்ப முக்கியமா? மனுஷனுக்கு இருக்க ஆயிரத்தி எட்டு பிரச்னையில்ல.. “

“ஏன் உங்களுக்கு மட்டும் தான் பிரச்னையா எங்களுக்கு எல்லாம் இருக்காதா “

“ம்ம்ச்ச இப்போ ஏன் சண்ட போடுற?”

” ஆமா பின்ன உங்களுக்கா போன் பண்ணுறாங்க என்னயில்ல புடிச்சி நச்சுறாங்க..!”

” வர முடியாது னு சொல்ல வேண்டியது தானே? “

“ஹான்.. ஏன் உங்க அம்மா தானே நீங்க போன் பண்ணி சொல்லலாம் ல..? உங்களாலயே சமாளிக்க முடியாதுனு தானே என்ன பேச சொல்லறீங்க..? கடைசியில்ல நான் கெட்ட பேர் வாங்கிட்டு உக்காந்து இருக்கனும் அப்படி தானே?”

“சப்பாஆஆ.. காலங்காத்தாலே ஆரம்பிக்காத தலை வலிக்குது!!”

“ஆமா ஆமா நா பேசுனா தான் உங்களுக்கு தல வலி வரும். ஏன்னா நா தான் உங்கள ரொம்ப கொடுமபடுத்துறேன் பாருங்க “

” ஏய்.. கொஞ்சம் நிருத்தறியா. ச்ச்சை வீடா இது?  மனுஷனுக்கு கொஞ்சம்கூட நிம்மதியே இல்லை.. ” என கத்தியவன் காஃபி கப்பை தூக்கி எரிந்து விட்டு கிளம்பி விட்டான்.

சிதறிய காஃபி கப்பை போலவே..

விரிசலடைந்து இருந்தது அவர்களின் உறவு..!

இன்று காலை நடந்ததை நினைத்து பார்த்தவளிற்கு முன்னுக்கென கண்ணீர் எட்டி பார்க்க,

“அஷ்வினி யூ கேரி ஆன்,  நா வாஷ் ரூம் போய்டு வரேன் ” என்று சென்றாள். 

“ஓகே மேம் “

சாத்விகா கேபினை விட்டு வெளியே போகவும் மாதவன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

” லோகோ டிசைன் நாளைக்கு பைனல் பண்ணி அப்ருவலுக்கு அனுப்பனும் முடிச்சிட்டீங்களா அஷ்வினி “

” அவளோ தான் சார் இன்னும் கொஞ்சம் எடிட்டிங் ஒர்க் தான் இருக்கு ஈவினிங்குள்ள முடிஞ்சிரும். “

“நோ ப்ரோப்லம் பஞ்சுமிட்டாய், டேக் யுவர் டைம் “

அவனின் அந்த அழைப்பில் அவனை முறைத்தவள்.

” என்னோட நேம் அஷ்வினி ” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

“அதான் தெரியுமே அதுனால என்ன?”

அவன் பேச்சு வார்த்தையை வளர்த்தி கொண்டே போக அவளிற்கு தான் ஒரு மாறி அசெளகரியமாக போனது.

சாத்விகாவை தேடி வாஷ் ரூமிற்கே போகலாம் என முடிவெடுத்தவள்,  இறுக்கையை விட்டு எழுந்தாள்.

” ஹேய் பஞ்சு எங்க போற? ” என்றவன் அவள் கையை புடித்து நிறுத்தினான்.

அவன் கையை பட்டென உதறியவள்,

” ஏன் இப்படி பொறுக்கி மாறி பிஹேவ் பண்ணுறீங்க..? கண்மணி உங்கள அண்ணன் னு சொன்னா?உங்க தங்கச்சி ப்ரண்ட்ஸ் கிட்ட இப்படி தான் நடந்துக்குவீங்களா?அன்னைக்கு ரோட் ல, இன்னிக்கி இங்க. என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல..? “

“ஹேய்..நிறுத்து நிறுத்து. விட்டா நீயே என்ன ரவுடி னு பச்ச குத்தி போலீஸ் ல புடிச்சி கொடுத்துருவ போல? என்ன.. இல்ல என்னங்கறன்? “

அவன் பேச்சில் ஒன்றும் விளங்காமல் அவள் விழிக்க

” என்ன நல்லா பாத்து சொல்லு. என்ன தெரிலயா பஞ்சுமிட்டாய் ஒனக்கு?

கவிதா மிஸ், பஞ்சுமிட்டாய், லவ் லெட்டர்ஸ், மேக்ஸ் பேப்பர்? ம்ம்ம்? “

“கவிதா மிஸ், லவ் லெட்டரா?” நெற்றி சுறுங்க யோசித்தவளிற்கு மெல்ல மண்டையில் பொறி தட்ட…

“ஹேய் அப்போ நீங்க தான் அந்த மன்மதன்?”

“யா.. இட்ஸ் மீ. தி கிரேட் மன்மதன் மாதவன்!” என்றவன் சட்டை காலரை தூக்கி விட்டு ஒரு விதமாய் உடலை சாய்த்து பேச , அவன் பாவனையில் சட்டென சிரித்தவள்..

” இருந்தாலும் ரொம்ப பயம் காட்டிட்டீங்க போங்க “

” ஹப்பாடா இப்போவாச்சி ஒனக்கு நியாபகம் வந்துச்சே..! அதுக்குள்ள என்ன பாத்து பொறுக்கி னு சொல்லிட்ட.. ஒரு பையன் ஸ்மார்ட்டா தாடி மீச வெச்சி இருக்க கூடாதே. உடனே சந்தேக பார்வ பார்க்க வேண்டியது”

“அப்படிலாம் இல்ல சாரி “

” ப்ரண்ட்ஸ் ” என அவன் கை நீட்ட புன்னகையுடன்,  அதை ஏற்று கொண்டாள் அஷ்வினி.

இங்கு மேனுஃபாக்சரிங் டிப்பார்ட்மென்ட்டிற்கு கண்மணியை கூட்டி வந்திருந்தான் வருண்.

‘ எதுக்கு இங்க வந்துருக்கோம். ஒரு வேள சுழுக்கு எடுக்கிறேன்னு சொல்லி சுட்ட எண்ணைய கையில ஊத்தி விட்டுருமோ.. ஓ மை காட் கருப்பு சாமி ப்ளீச் எலுப்பு மீஈஈஈ..! ‘ என மனதிற்குள் வேண்டி கொண்டாள்.

“மிஸ். கண்மணி “

“எஸ் பாஸ் “

” எனக்கு லக் அண்ட் டேலண்ட் மேல சுத்தமா நம்பிக்கை இல்ல. ஹார்ட் ஒர்க் அண்ட் டிசிப்ளின் இருந்தா மட்டும் தான் நம்மளால கண்டிப்பா முன்னேற முடியும்!”

” எஸ் பாஸ் “

” சோ..டிசப்ளின் பத்தி நீங்க தெரிஞ்சுக்கறதுக்கு தான் இந்த ஒர்க்” என்றவன் அங்கு வேலை செய்யும் ஒரு ஆளை கூப்பிட்டு அவனிடம் ஏதோ சொல்ல.. அவள் முன்பு வந்து வைக்கப்பட்டது அந்த கூடை.

அந்த கூடை முழுக்க சின்ன வெங்காயம் நிறைந்திருந்தது.

இன்னிக்கி உங்களுக்கு இந்த ஒர்க் தான் கண்மணி,  ஐ ஹோப் இதுக்கு அப்றம் டிசப்ளின் அண்ட் டெடிகேஷன் பத்தி கொஞ்சமாவுது தெரியும்னு நெனைக்கறேன். 

ஆம் அவளை இன்று முழுக்க வெங்காயம் உறிக்க விட்டுவிட்டான் அவளின் பாஸ்..!

கேன்டீனில் சோகமே உருவென அமர்ந்திருந்தாள் கண்மணி.

அவளின் கதையை கேட்டு அஷ்வினி திகைத்து பார்க்க, மாதவன் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தான்.

” என்ன சொல்லுற கண்மணி.. நிஜமாவே வெங்காயம் உரிச்சயா? “

” அட ஆமா வினி. நீ வேற நம்பவே மாட்டீங்கற.. அதுவும் நல்ல காரமான நாட்டு வெங்காயம் போல.. எவ்ளோ எரிச்சல் தெரியுமா? நா ஆசை ஆசையா பாத்து பாத்து  காசு போட்டு வளத்த  நெகம் எல்லாம் போச்சு “

“ஹப்பாடி நா கேட்டரிங் ஆரம்பிச்சா வெங்காய உரிக்க ஆள் தேடற வேல மிச்சம்.. “

” டேய் வளந்து கெட்டவனே வாய, மூடுறா! இரு வீட்டுக்கு சாப்பிட வருவல்ல அப்போ மொளகா பொடி அபிஷேகம் பண்ணி விடுறேன். ஆமா என்னோட கலவரத்துல்ல இங்க நடக்கற நெலவரத்த கவனிக்காம விட்டுட்டேனே? வாட்ஸ் ஹாப்பனிங் யா? என்ன வினி எங்க அண்ணன்ன எங்க பாத்தாலும் தெரிச்சி ஓடுவ,  இப்போ என்ன ரெண்டு பேரும் ஜோடி போட்டு உக்காந்து பேசிட்டு இருக்கீங்க.. சம்திங் ராங்..!”

“நானும் உங்க அண்ணாவும் டென்த் வரைக்கும் ஒரே ஸ்கூல் தான்.. அவரு என்ன நியாபகம் வெச்சி பேசி இருக்காரு. எனக்கு தான் சட்டுனு நியாபகம் வராம பயந்துட்டேன்”

” உன்ன போய் எப்படி தாயே மறக்க முடியும். ஏன்னா நீ பண்ண காரியம் அப்படி “

” டேய் என்ன டா ரெண்டு பேரும் கோட் வெர்ட் வெச்சி பேசிகறீங்க? எனக்கும் புரியற மாறி சொல்லுங்க..! “

“சரி வா..ஒரு கொசுவத்தி சுருள்ள சுத்தி விடுவோம்!”

” அதாவுது கண்மணி.. ஒன்ஸ் அப்பான டைம், நான் அப்போ அஞ்சாவது படிச்சிட்டு இருந்தேனா.. எங்க வீட்டுக்கு பக்கத்துல்ல புதுசா ஒரு குடிதனம் வந்தாங்க.. அவங்க வீட்டுல என்ன பலகாரம் போட்டாலும் அவங்க வீட்டு குட்டி பாப்பா தான் எங்க வீட்டுக்கு வந்து தட்டுல்ல கொடுத்துட்டு போகும்..! நாங்க அத எல்லாம் காலி பண்ணதுக்கு அப்றம் எங்க அம்மா அந்த தட்டு ல வேற எதாவுது வெச்சு நிரப்பி என்ன அவங்க வீட்டுக்கு அனுப்பி விடுவாங்க..

இத ஏரியா பசங்க எல்லாம் பாத்து என்ன டா உங்க வீட்டுக்கு மட்டும் ஸ்பெஷலா வந்து அந்த பாப்பா கொடுக்குதுனு சொல்லி கலாய்க்க..கடைசியா பட்டிமன்ற குழு போட்டு இது லவ் தானு நாங்களே முடிவு, பண்ணி லெட்டரும் எழுதிடோம்.  அந்த புள்ளயும் எங்க ஸ்கூல் தா ஆனா மூணாவது.

சரி லெட்டர எப்படி டா கொடுக்கறதுனு யோசிக்கும் போது தான் அவ கிளாஸ் ல படிக்கற இன்னொரு பாப்பா அவங்க அப்பா கிட்ட பஞ்சுமிட்டாய் வேணும் னு அழுதுட்டு இருந்தத பாத்தேன்.  அந்த பஞ்சுமிட்டாயிக்கு பஞ்சாயத்து பண்ண பாப்பா இவ தான்..!

 இவ கிட்ட போயி, ” பாப்பா பாப்பா இந்த லெட்டர போய் நீ கவிதா கிட்ட கொடுத்தேனா உனக்கு நா பஞ்சுமிட்டாய் வாங்கி தரனு சொல்ல.. அதுவும் ஆசையா வாங்கிட்டு போய்யிருச்சி..

பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுத்துட்டு அவ என்ன சொன்னானு கேட்டா? தெரில அவ இடத்துல்ல வெச்சிட்டு வந்துட்டேனு சொல்ல.. மறுபடியும் ஒரு லெட்டர் மறுபடியும் ஒரு பஞ்சுமிட்டாய் மறுபடியும் நோ ரெஸ்பான்ஸ்.. இப்படியே ஒரு வாரம் போக தீடிருனு ஒரு நாள் அவ கிளாஸ் மிஸ்ஸோட வந்து, ” இந்த அண்ணா தா லெட்டர் கொடுக்க சொன்னாங்க ” னு சொல்ல அப்றம் என்ன பட்டாசே இல்லாம வெடி வெடிச்சிருச்சு.

அப்றம் தா தெரிஞ்சிது அந்த புள்ள பேரு மொதல்ல கவிதாவே இல்ல, அது வீட்டுல செல்லம்மா கூப்பிடற பேரு. அவ செர்டிபிகேட் நேம் அஞ்சனானு.

இவ கிட்ட கொடுத்த லெட்டர  எங்க மேத்ஸ் மிஸ் கவிதா டேபிள்ள போய் வெச்சுட்டா ! அவங்களும் ஒரு வாரமா யாருடா லெட்டர் வைக்கறாங்கனு யோசிச்சு கடைசி ல கண்டு புடிச்சிட்டாங்க.

வழக்கம் போல ஆண்களை தானே குத்தம் சொல்லும் இந்த உலகம்..!!

அவ தப்பிச்சிட்டா நா மாட்டிட்டேன்..! “

சத்தமாக சிரித்த கண்மணி, ” அப்படி என்ன டா எழுதுன அந்த லெட்டர் ல “

” வேற என்ன கலர் கலரா மன்மதன் ஹார்ட் கவிதா னு தான் எழுதி வெச்சேன்..!”

“ஏதே மன்மதனா?”

“ஆமா அப்போ மன்மத ராசா பாட்டு தான் பயங்கர ட்ரெண்டிங்கா போச்சா.  அதான் அப்படி ” என்றவன் தலையை குனிந்து வெட்கப்பட..

“தூ ” என துப்பினாள் கண்மணி..!

ஒருவழியாக அரட்டை அடித்து முடித்து கிளம்ப,

” வினி உன் வீடு எங்க ” என கேட்டாள் கண்மணி.

” இல்ல நான் இங்க செல்வி ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்கேன். “

” ஓ சரி, இந்தா என் நம்பர் வெச்சிக்கோ. எதுனாலும் கூப்பிடு ஓகே “

மனம் நிறைந்து போய், அவளை பார்த்து புன்னகைத்தாள் அஷ்வினி.

உறவின் நெருக்கம் என்பது ரத்த பந்ததை பொறுத்து வருவதல்ல. அவர்கள் எப்படி நம்மை உணர வைக்கிறார்கள் என்பதை பொறுத்தே அதன் நெருக்கம் அமைகிறது..!

அது போல, இன்று அஷ்வினியின் வாழ்வில் ஒரு முக்கியமான உறவாக மாறினாள் கண்மணி..!

உடனே மாதவனும், ” எனக்கும்”

” என்ன டா உனக்கும்? “

” இல்ல எனக்கும் கூப்பிட சொன்னே “

” உனக்கு எல்லாம் அவ கூப்பிட மாட்டா பே..! நீ கெளம்பு வினி. இவன் இப்படி தான் எனத்தயாவுது போட்டு ஒலப்பிட்டு இருப்பான்.. “

சிரித்து விட்டு அவள் விடை பெற்று கொள்ள..

” ம்ம்க்கும் என் வாழ்கையில்ல எதாவுது நல்லது நடக்க விட மாட்டியே..! ” என சலித்து கொண்டவன் கிளம்பி விட்டான். 

அவர்கள் இருவரும் கிளம்புவதற்காவே காத்திருந்தவள், அக்கம் பக்கம் யாரும் இல்லை என உறுதிப்படுத்தி விட்டு..

” காயப்பட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து, கர்ஜனையை விட பெருசா இருக்கும்..!

 இஃப் யூ ஆர் பேட் (bad) ஐ ஆம் யூவர் டேட் (dad) ரா வெண்ணமவனே..!! “

என்ற கண்மணி, வருணின் கார் டையரின் காற்றை பிடிங்கி விட்டாள்..!!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
65
+1
9
+1
7

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  2 Comments

  1. Indhu Mathy

   சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டா இந்த கண்மணி…. 🤣 இவளுக்கு வாயில வாஸ்து சரியில்லை… அராத்து கண்மணி… 😂

   மாதவா உன் பஞ்சு மிட்டாய் கதை இது தானா… 🤭🤭🤭 இதுல மன்மதன்னு பேரு வேற…. 🤪

   பாவம் துருவ் சாத்வி… புரிதல் இல்லாத காதல்….. 😔