அத்தியாயம் – 2 : பெரும் மூங்கில் காடெரிய.. சிறு பொறி ஒன்று போதுமே!
ஜன்னல் வழியாக தவழ்ந்து கொண்டிருந்த காற்றில் அவளது இளஞ்சவப்பு நிறப் புடவை அசைந்தாடிக் கொண்டிருக்க, அந்த அசைவுக்கு இசையாக.. அவளது கற்றைக் கூந்தலும் ஆடிக் கொண்டிருந்தது!
கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தியே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள் அக்னி. மனமெல்லாம் கோஸ்ட்டின் நினைவுகளே!
அவளுக்கு அந்த கோஸ்டை தெரியும்.. நன்றாக!
நிறைய கேள்விப்பட்டிருக்கிறாள்!!
இந்தியாவின் தலைநகரத்திற்கு மிகவும் அருகாமையில் உள்ள அந்தப் பெருநகரம் தான் காளிஷேத்ரா. பெயருக்கு ஏற்றார் போலவே, சுதந்திரம் அடைந்ததிலிருந்து.. ஏன் அதற்கு முன்பாகவும் கூட மிகவும் ருத்ர பூமியாகவே இருந்து வந்திருக்கிறது.
ஆண்டாண்டு காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் மட்டுமே இருந்து வந்த அந்த நகரத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு, தனது பதினைந்தாவது வயதில் தலைமையேற்றானாம் அந்த கோஸ்ட் .
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவன் தலைமை ஏற்றதிலிருந்து இன்று வரை அந்தப் பகுதி அரசாங்கத்தால் அணுகப்பட முடியாத பகுதியாகவே இருந்திருக்கிறது.
அவனுக்கு முன்பாக தலைமையில் இருந்த அத்தனை பேரையும் கழுத்தறுத்து கொன்றுவிட்டு அவன் அந்த தலைமைப் பீடத்துக்கு வந்ததாக கதைகள் உதவுகின்றன. வெறும் பதினைந்து வயதில் இத்தனையும் செய்ய முடியுமா.. இவ்வளவு கொடூரமாக செயல்பட முடியுமா.. என்ற கேள்வி அவளுக்குள் என்றுமே இருந்திருக்கிறது.
அவனுக்கு முன்பாகவும் கூட இந்த காளிஷேத்ரா அப்படி ஒன்றும் அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டு இருந்ததில்லை. ஆனால் ஏதோ ஒரு நூலிழையாக அரசாங்கத்துடன்.. இந்திய அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளில் இருந்தவர்களுடன் சமூக உறவு கொண்டிருந்தது அந்த நகரம்.
ஆனால் என்று இந்த கோஸ்ட் அதன் தலைமைப் பீடத்தில் காலடி எடுத்து வைத்தானோ, அன்றிலிருந்து இந்தியாவின் இதயத்திற்கு அருகில் இருக்கும் அந்த காளிஷேத்ரா தனித்தீவானது!
அந்தப் பகுதிக்கென தனித்த ராணுவம், தனி மருத்துவ மனை, தனி பள்ளி, கல்லூரிகள்.. அதில் சிறப்பான, அந்தப் பகுதிக்கு உகந்ததாக மட்டுமேயான பாடங்கள் என அத்தனையும் அவன் ஒருவன் கட்டுப்பாட்டிலேயே!
ஆனால்.. அந்த “அவனோ..” எவர் கட்டுப்பாட்டிலுமே இல்லை!
அவளுக்கு அந்த உளவுப்படை பயிற்சி கொடுக்கப்பட்ட பொழுதும் கூட வெளிப்பகையைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விளக்கம் கொடுத்தவர்கள், இந்த கோஸ்ட்டை பற்றி அவர்களுக்கு மேலோட்டமாகத் தெரிவித்திருந்தாலும், முழுதாக ஒன்றையும் சொல்லவில்லை.
ஆனால் இதுவரைக்கும் மேலோட்டமாக அவளுக்கு கிடைத்த இந்தத் தகவலே அவளுக்குள் சற்று குளிர் பரப்பியது என்னவோ உண்மை தான்.
ஏனென்றால் அவள் படித்த அந்த வெளிப்பகைகள் எல்லாம் வரலாறுகள்.. இந்தியாவில் முன்னிருந்த உட்பகைகள் கூட நடந்து முடிந்துவிட்ட சரித்திரங்கள்!
ஆனால் இந்த கோஸ்ட்.. இப்பொழுது நிகழ்காலத்தில் அவளுக்கு அருகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
இதில் அவள் அதிர்ச்சியடைய காரணமான முக்கியமான விஷயம்.. யாராலும் நம்ப முடியாதது!
அவளாலுமே கூட!
ஏனென்றால்.. எப்பொழுதெல்லாம் அவள் அந்த கோஸ்ட்டை பற்றி நினைக்கிறாளோ.. அல்லது கேள்விப்படுகிறாளோ, அப்பொழுதெல்லாம் அவளுக்கு மிக பயங்கரமான கனவொன்று கரைபுரண்டோடுகிறது!
யாரும் இல்லாத ஒரு மயானத்தில், அவளும் வேறு யாரோ ஒரு நிழல் உருவமும் மட்டும்.
தன்னை விட்டு அவள் பிரிந்து போனால், தன் மூச்சும் அவளுடனே பிரிந்து போகும் என்பது போல அவளை அப்படி இறுக்கக் கட்டிக் கொண்டிருந்தது அந்த உருவம்.
அந்த உருவத்தின் இடது கண்ணின் கருவிழி ஓரத்தில் இருந்த ஒரு சிறு கருநிற மச்சத்தையே தவிப்புடன் இவள் பார்த்துக் கொண்டிருக்க, அந்தக் கண்களின் வழியே அவளுக்குத் தெரிந்தது, அவர்களுக்கு பின்னால் இருந்து வந்து கொண்டிருந்த ஒரு ராட்சச உருவம்!
அந்த உருவத்தைப் பார்த்தபடியே அந்த நிழலுருவமோ.. ஒரு மதகாச புன்னகையுடன் இவள் இதழில், தன்னிதழைப் பதிக்கிறான்!
இந்தக் கனவுக்கு என்ன அர்த்தம் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால்.. என்றெல்லாம் அவள் அந்த கோஸ்ட் பெயரைக் கேட்கிறாளோ, அன்றெல்லாம் அதே கனவு அச்சு பிசகாமல் இவளுக்கு வருகிறது!
மொத்தத்தில் அந்த கோஸ்ட்.. இந்திய அரசாங்கத்துக்கு மட்டுமல்ல.. தனிப்பட்ட முறையில் இவளுக்குமே கூட துர்சொப்பனம் தான்!
இதோ நேற்று அவள் தந்தை அவனைப் பற்றி கூறிய பொழுதும் கூட.. உறங்கவே முடியாது என்று எண்ணி இருந்த நேற்றைய இரவிலும் கூட, தன்னையும் மறந்து உறங்கி விட்டிருந்தவள்.. இதே கனவு கண்டு வியர்க்க விறுவிறுக்க எழுந்து அமர்ந்தாள்!
அதற்கு மேல் அவளுக்கு உறக்கம் வரவில்லை.
வெகுநேரம் அறையிலேயே நடைபயின்றவள்.. இன்னமும் அரசாங்கத்தில் இருந்தவர்களுடன் தொடர்புகொண்டு என்னவென்றே விளக்கம் எதுவும் கேட்காது, கோஸ்ட்டை பற்றி விசாரிக்கலானாள்.
அவள் அறிந்த இந்தக் கூடுதல் விவரங்களில் முதுகுத்தண்டு சிலிர்த்தது அவளுக்கு.
அதன்பிறகு தான், அந்த கோஸ்ட் இருப்பிடத்துக்குத் தனியே செல்வதென்று உறுதியாக முடிவு செய்தாள் பெண்ணவள்!
அவளைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு தற்கொலை முயற்சி.
ஆம்.. காளிஷேத்ராவுக்கு தன்னந்தனியாக யார் துணையுமின்றி செல்பவள், அங்கிருந்து நல்லபடியாக மீள்வது சாத்தியமில்லாதது!
தன் உயிரையே பணயம் வைத்தாவது அந்த ‘ப்ராஜக்ட் டி’ என்னவென்று அறிந்து கொண்டாக வேண்டும்.. முடிந்தால், அந்த கோஸ்ட்டின் உயிரையே குடித்துவிட வேண்டும்.
இந்தப் பணியில் அவளது உயிரும் போவதென்பது நிச்சயம் தான்! ஆனால்.. அவள் உயிர் பிரிவதற்கு முன்பு, அவனது உயிரை இவள் குடித்தாக வேண்டும்!
ஒரு முடிவுக்கு வந்தவளாக.. பெருமூச்சுடன் குளியலறைக்குள் புகுந்தவள், குளித்து முடித்து.. இதோ தலை நுனியில் ஈரம் சொட்டச் சொட்டத் தன்னையே கண்ணாடியில் பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறாள்.
‘நான் கண்டிப்பா போகத் தான் செய்யணுமா?
ஆமா.. நான் கண்டிப்பா போகணும்..
எனக்கும், அந்த கோஸ்டுக்கும் என்ன உறவுன்னு தெரியல.
ஆனா அவனோட உயிர்.. என் கைல தான்!’ என்று தனக்குள்ளாக சபதம் ஏற்றவள், நெற்றியில் சிறிதாக ஒரு பொட்டிட்டு விட்டு அறையைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள்.
நேராக தனது காரில் ஏறி நேஷனல் ஹாஸ்பிடலுக்கு சென்றவள், அங்கிருந்த தன் தந்தையைப் பார்க்கப் போனால் அவரும் வந்தவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு..
“ஒரு அஞ்சு நிமிஷம் இரும்மா.. பி.எம்ம போய் பாக்கலாம்..” என்று கூற, அந்த ஐந்து நிமிடங்களும் அங்கிருந்த ஜன்னலின் வழியே, வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்!
என்னமோ அந்த கோஸ்ட்டின் எண்ணமே மனதுக்குள் பெரும்மழையாக..
இந்தியாவின் ரா ஏஜென்டாக சேர வேண்டும் என்பது அவளது சிறுவயது ஆசை!
தந்தையும், தந்தையின் நண்பருமான இப்போதைய பிரதமர் அபய் குப்தாவும் சிறுவயதிலிருந்து கட்சி.. அதன் பணி என்று அலைந்திருக்க.. அக்னிக் கோ இந்தியாவின் பாதுகாப்பு படை.. அதன் உளவுப்பிரிவின் மீது ஒரு பிரேமை.
இந்திய ஆட்சிமைத் தேர்வுகளில் வெற்றி பெற்று சில காலம் பிரதமர் அலுவலகத்திலேயே கூட அவள் பாதுகாப்புத் துறையில் வேலை செய்து, சாதாரண போலீசாக சில திரைமறைவு வேலைகளில் மறைமுகமாக பணிபுரிந்துவிட்டு.. அதன் பிறகு ரஷ்யா சென்று சில பயிற்சிகள் பெற்று இரண்டு தினங்களுக்கு முன்பு தான் திரும்பி வந்தவள் உடனேயே அந்த கோஸ்ட்டை தன்னந்தனியாக சென்று பிடிக்க விரும்புவதாக கூறவும் அவள் தந்தைக்கும் பேரதிர்ச்சி தான்.
அவள் அப்படிக் கூறியதும், பிரதமரும், ஷர்மாவும் அன்றைய இரவே எதையும் முடிவு செய்ய வேண்டாம் என்று கருதினார்கள். மறுநாள் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறி அவளை வீட்டுக்கு அனுப்பியிருந்தார்கள்.
இப்பொழுது விடிந்ததும் எழுந்து குளித்துவிட்டு வந்த தன் மகளைக் கூர்ந்து பார்த்தார் ஷர்மா. சில நிமிடங்கள் வெட்ட வெளியையே வெறுத்துக் கொண்டிருந்தவளின் அருகே வந்து அவளது தோளை மென்மையாகத் தொட்டார்.
“பி.எம் கிட்ட பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் உன் கிட்ட தனியா பேசணும்..” என்று அழைத்தவரிடம், என்னவென்று கேட்டபடி தனி அறைக்கு சென்றாள் அக்னி.
“இங்க பாரு அக்னி, உன்னோட சின்ன வயசு கனவு இந்தியாவோட ரால சேர்ரதுன்னு எனக்குத் தெரியும். ஆனா உனக்கு எந்த பிராப்பரான எக்ஸ்பீரியன்ஸும் இல்ல. நீ பிரதமர் அலுவலகத்துல செக்யூரிட்டி ஆபீஸரா இருந்திருக்க.
சில பல பெரிய கேசுக்கலாம் ஐடியா கொடுத்திருக்க. ஆனா அதெல்லாம் மட்டுமே போதாது இந்த வேலைக்கு..” என்று அவர் கூற, அவரை நேராய் நிமிர்ந்து பார்த்தாள் அக்னி.
“என்னப்பா சொல்றீங்க? அப்போ எக்ஸ்பீரியன்ஸான யாராவது ஒருத்தர் அந்த கோஸ்ட்ட பார்க்குறதுக்கு நேரா போவாங்களா? அவன்கிட்ட இருக்கற சீக்ரெட் எல்லாம் கண்டுபிடிச்சு தருவாங்களா?” என்று அவள் திரும்பக் கேட்க, ராஜேஷ் ஷர்மாவின் தலை கவிழ்ந்தது.
“இங்க பாருங்க.. எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்ல தான். ஆனா என்னோட படிப்பறிவ பொருத்த வரைக்கும்.. நான் தான் ஃபர்ஸ்ட்.
என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ இந்த கோஸ்ட பிடிக்கறத வச்சு நான் வளர்த்துக்கறேன்..” என்று அவள் திடமாகக் கூற அவளைப் பார்த்து சலிப்புடன் தலையசைத்தவர்..
“இதுல நான் மட்டுமே முடிவு பண்ண முடியாது மகளே.. பி.எம்கிட்ட போய் பேசிப் பார்க்கலாம்..” என்று கூறி அழைத்துச் சென்றார்.
பிரதமரின் முன்பு பிடிவாதமாக நின்றிருந்தாள் அவள்.
இதற்கு முன்பாக பிரதமரின் தனிப்பட்ட ஒரு நேர்மையான செக்கியூரிட்டி அதிகாரி அவள். ஆனால் வெளியில் அவளது முகத்தை அவ்வளவாக அவள் காண்பித்துக் கொண்டதில்லை.
என்றாவது ஒரு நாள் இந்தியாவின் உளவுப் படையில் சேர்ந்து பணிபுரியப் போகும் அவள் அடையாளம் யாருக்கும் தெரிந்திருக்கக் கூடாது என்றே நினைத்திருந்தாள். சில பயிற்சிகளுக்காக காவல்துறையிலும் இருந்தவள், அதில் வேண்டுமானளவு அனுபவங்களைக் கற்ற பிறகு ரஷ்யாவிற்கு சென்று மூன்று வருடங்கள் பயிற்சி எடுத்தாள்.
இதையெல்லாம் பிரதமர் ஏற்கனவே அறிந்து தான் இருந்தார். அவளைக் குழந்தையில் இருந்து பார்த்து வந்திருக்கிறார் அல்லவா?
அவளது ஆசை.. லட்சியம் என அனைத்துமே அவருக்குத் தெரியும்.
ஆனால் தான் பார்த்து வளர்ந்த பெண்.. தன் பெண் போல என்றிருக்கும் அவளை அந்த கோஸ்ட் இருக்கும் இடத்திற்கு அனுப்ப அவருக்கு சுத்தமாக இஷ்டமில்லை. தனது முகத்திலேயே தனது இஷ்டமின்மையை வெளிக்காட்டியபடி அவர் இருக்க, அக்னி பேச ஆரம்பித்தாள்.
“இங்க பாருங்க அங்கிள்.. உங்களுக்கு என்ன பத்தி தெரியும். என்னோட திறமையால அந்த கோஸ்ட்ட பிடிக்க முடியும்னா நீங்க என்ன அங்க அனுப்புங்க. அதுக்கு முன்னாடி சில விஷயங்கள் நான் உங்ககிட்ட சொல்லணும்..
எனக்கு இந்த வேலைல நேரடியான அனுபவங்கள் எதுவும் இல்லை.
ஆனா.. என்ன பத்தி இங்க யாருக்குமே தெரியாது. அது தான் இப்போ வேணும். இந்த வேலைக்கு.. காளிஷேத்ராக்கு போறதுக்கு.. இந்த உலகத்துக்கு தெரியாத ஒருத்தர் தான் வேணும்..
அதுவும் கொஞ்சம் கூட அந்த கோஸ்டுக்கு சந்தேகமே இல்லாம நாங்க போகணும். ஒரு ஆண் அங்க போய் காரியத்த சாதிக்கிறத விட, ஒரு பெண் அங்க போய் காரியத்த சாதிக்கிறது ரொம்ப சுலபம்ன்னு நான் நினைக்கிறேன்.
என்ன நம்பி அனுப்புங்க அங்கிள்.. ஐ கேன் டூ இட்!” என்று அவள் கூற, பிரதமரோ ஷர்மாவின் முகத்தைப் பார்த்தார்.
ஷர்மாவோ.. “இட்ஸ் அப் டு யூ சார்.. இவ என் பொண்ணு தான். ஆனா என் பொண்ண, நான் எனக்காக மட்டுமே வளர்க்கல. இந்த நாட்டுக்காக வளர்த்திருக்கேன்.
அவ நம்மளோட இந்த ப்ராஜெக்ட்ல சேர்ந்துக்கறது ஒரு அப்பாவா எனக்குப் பெருமை தான்..” என்று அவர் கூற, பிரதமரோ இரண்டு நிமிடங்கள் கண்களை மூடி யோசித்திருந்துவிட்டு..
“சரி..” என்றார்.
அவர் சரி என்று கூறிய அடுத்த வினாடியில் இருந்து, அக்னிமித்ரா காளிஷேத்ராவுக்கு எப்படி.. யாராக.. எந்த உருவத்தில் செல்ல வேண்டும் என்பன எல்லாம் திட்டமிடலாயின!
பிரதமருக்கும், இன்னும் சில முக்கிய அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு இன்பார்மர் காளிஷேத்ராவுக்கு அருகில் இருக்கும் சிறு கிராமமான சம்பல்பூரில் இருக்கிறான்.
அவனின் மூலமாகத் தான் காளிஷேத்ராவில் நடக்கும் கொடுமைகளும், இந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை கோஸ்ட் எரித்துக்கொன்ற சம்பவமும் பிரதமருக்கு தெரியவந்தது.
இப்பொழுதும் அவன் மூலமாகவே தான் அக்னி காளிஷேத்ராவுக்குள் செல்லப் போகின்றாள். காளிஷேத்ராவுக்கும், அதன் தனிப்பட்ட அரசாங்கத்திற்கும் பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் தேவைப்படுகின்றனர்.
அவர்களெல்லாம் கோஸ்டின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அந்த ஊருக்குச் சென்று வேலை செய்கின்றனர்.
அப்படிப்பட்ட ஒருத்தியாகத் தான் அக்னியும் அங்கு செல்லப் போகின்றாள்.
அந்த இன்பார்மர் ராமிடம் விசாரித்ததற்கு, அவளைத் தன் மனைவியின் தங்கையாக அவன் வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தான். அங்கிருந்து எப்படியாவது அக்னியை, கோஸ்ட்டின் ஊருக்குள் அனுப்பிவிடத் திட்டமிட்டிருக்கிறான்.
அதன் பிறகு அவளது சாமர்த்தியம்!
அங்கு செல்வதற்காக.. தனது நடை, உடை, பாவனை என அத்தனையையும் மாற்றிக் கொண்டவள்.. தன்னைப் பற்றிய அத்தனை தகவல்களையும் இந்தியாவின் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாய் அழைத்தாள்.
சாதாரண ஒரு காட்டன் சுடிதாரை அணிந்து கொண்டு இரு பக்கமும் துப்பட்டாவை பின் செய்து கொண்டவள் தலையில் நிறைய எண்ணெய் வைத்தபடி படிய வாரி கண்ணாடியின் முன் நின்றிருக்க.. அவளது முகத்தில் அவள் செய்து கொண்ட இன்னும் சில மாறுபாட்டினால் அவளது தந்தைக்கே கூட அவளைச் சற்று கூர்ந்து பார்த்து தான் அடையாளம் காண முடிந்தது.
குரலில் கூட அத்தனை மாறுதல்கள் அவளிடம்.
தனது மகளின் திறமையை சற்று குறைத்து தான் மதிப்பிட்டு விட்டோமோ என்று ஷர்மாவே வருத்தப்பட்டு வியந்து போனார். ஒரு சிறு சாதாரண பையில் தனக்குண்டான துணிமணிகளையும் சில ரகசிய உபகரணங்களையும் எடுத்துக் கொண்டவள் அவளது மாளிகையை விட்டு கிளம்பலானாள்.
அப்படி அவள் காளிஷேத்ரா சென்ற விஷயம் பிரதமரையும், சர்மாவையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது போனது.
ஆக மொத்தத்தில்.. இந்தியாவின் அனைத்து முக்கியக் குறிப்புகளில் இருந்தும்.. ஒரு திறமைசாலியான பெண், திடீரென்று சென்ற இடம் தெரியாது மறைந்து போனாள்!
அதே சமயத்தில் காளிஷேத்ராவில் இந்தியாவையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் ருத்ரனோ.. கண்களை மூடி வெட்ட வெளியில் ஒரு உச்சி மலை மீது படுத்திருந்தான்.
அவனைச் சுற்றி யாரும் இல்லை.. மென் தென்றல் மட்டும் அவன் சிகையை தழுவிக் கொண்டிருக்க, கண் மூடிப் படுத்திருந்தவன் நிச்சயமாய் உறங்கிக் கொண்டிருக்கவில்லை!
புருவ மத்தியில் இருந்த முடிச்சு, அவன் ஏதோ சிந்தனையில் இருப்பதைச் சுட்டி காண்பிக்க, அப்பொழுது வேக வேகமாக அங்கு நடந்து வந்தார் ருத்ரனின் தாய் மாமாவான அமரேந்தர்.
அவன் அருகே வந்து அமர்ந்தவர், “பிரதாப்..” என்று அழைக்க, சட்டென விழி திறந்தவன், வெறும் பார்வையால் மட்டுமே என்னவென்று கேட்டான்!
அமரேந்தர்.. “எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு பிரதாப்..” என்று கூற, இப்பொழுது நன்றாகவே அவரை திரும்பிப் பார்த்தவன்..
“என்ன சந்தேகம் மாமா?” என்று கேட்க, அவரோ.. “நாம பண்ணுன இவ்வளவு பெரிய காரியத்துக்கு இந்திய அரசாங்கத்துகிட்ட இருந்து எந்த ஒரு எதிரொலியும் இல்ல.” என்று கூற, அலட்சியமான ஒரு முறுவல் அவன் உதட்டில்!
“என்ன பிரதாப் சிரிக்கிற? நான் எவ்வளவு பயந்து போய் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்?” என்று அவர் கேட்க, ருத்ரனின் விழிகளிலோ சினம் எட்டிப் பார்த்தது!
“என்ன மாமா சொன்னீங்க? பயமா?!
ஒரு போராளிக்கு பயம் இருக்கக்கூடாது..
ஒரு தலைவனுக்கு பயம்னா என்னன்னே தெரியக்கூடாது!” என்று அவன் கூற, ஒரு கணம் தரை தொட்ட அமரேந்தரின் பார்வை, மீண்டும் ருத்ரனை சந்தித்தது.
“சரி! எனக்கு இன்னொரு விஷயம் மட்டும் சொல்லு.. இன்னும் அந்த ராம ஏன் விட்டு வச்சிருக்க?
அவன் போலீஸோட இன்பார்மர்ன்னு தெரிஞ்சும் அவன் ஏன் இன்னமும் உயிரோட இருக்கான்?”என்று கேட்க, இப்பொழுது சத்தமான சிரிப்புச் சத்தம் ருத்ரனிடத்தில்!!
“மாமா, நம்மளோட யுத்தம் ஆரம்பமாகிடுச்சுனு நீங்க நினைக்கறீங்களா?
இல்ல மாமா.. அது இன்னும் தொடங்கவே இல்ல..
அந்த யுத்தம் தொடங்கறதுக்கு முன்னாடி.. எதிரியோட பலம் மட்டுமில்ல.. பலவீனமும் நமக்குத் தெரியணும். அதுக்காக தான் அவன உயிரோட விட்டு வச்சிருக்கேன். அவன் யாரு.. யாருக்காக வேலை பார்க்கிறான் அப்படின்றது எல்லாமே எனக்குத் தெரியும்.
அதே சமயம் இங்கிருந்து என்னென்ன விஷயங்கள் எல்லாம் அவனுக்கு போகணும்ன்றதும்.. நான் தான் முடிவு பண்ணிட்டு இருக்கேன். அதனால நாம கொடுக்கிற தகவல்களுக்கு, இந்திய கவர்மெண்ட்டுக்கிட்ட இருந்து என்ன மாதிரியான எதிரொலிகள் வரும்னும் எனக்குத் தெரியவரும்!.
சோ, நான் பாத்துக்குறேன் மாமா.. நீங்க கவலைப்படாதீங்க!” என்று கூற அமரேந்தரோ..
“என்னமோ பிரதாப்.. எனக்கு கொஞ்சம் உறுத்தலாவே இருக்கு..” என்று அவர் கூறிக் கொண்டிருந்த பொழுது, அவர்களை நோக்கி ஒருவன் புல்லட்டில் வேகமாக வந்தான்.
அவனைப் பார்த்து சினேகத்துடன் எழுந்து நின்ற ருத்ரனும்.. “வா அர்ஜுன்..” என்று கூற, “ஒரு முக்கியமான விஷயம், பிரதாப் அண்ணா..” என்றான் அந்த அர்ஜுன்.
“என்ன விஷயம்?” என்று பிரதாப் கேட்க.. மற்றவனோ.. கொஞ்சம் சீரியஸான முகபாவனையுடன்..
“அந்த ராம் வீட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்து இருக்கு.. சொந்தக்கார பொண்ணுன்னு சொல்றாங்க..” என்று சற்று பதட்டமான குரலில் கூறினான்.
“அப்படியா?” என்று மட்டும் ருத்ரன் கேட்டிருக்க, அர்ஜுனோ..
“அந்தப் பொண்ணுக்கு ஏதாவது வேலை இருக்குமான்னு ராம் என்கிட்டயே கேட்டான்..” என்று அவன் கூற, அவனை ஒரு நொடி கூர்ந்து பார்த்த ருத்ரனோ, இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு, வானை நோக்கி இடி இடி என சிரித்தான்.
“இந்த ருத்ரன.. நூத்துக்கணக்கான ஆர்மி பீப்பிளாலேயே அடிக்க முடியல.. இவங்க ஒத்த பொண்ண வச்சு என் கதைய முடிக்க பிளான் பண்ணி இருக்காங்களா?” என்ற அவனது குரலில் பிரித்துணர முடியாத அளவிற்கு கோபமும் கேலியும் இழையோடியிருந்தது!
ஆனால்.. பெரும் மூங்கில் காடெரிய, சிறு பொறி ஒன்றே போதும் என்பது அப்பொழுது ருத்ரனுக்குத் தெரிந்திருக்கவில்லை!
😯😯😯😯 நம்ம உளவுத் துறையை விட அவனுங்க உளவுத்துறை பாஸ்ட் ஆ வேலை பார்க்குது… 😱
எல்லாம் தெரிஞ்சே அக்னியை உள்ள விடுறாங்க….🤨 ஆனா அக்னி பத்தி தெரியல….. அவ்ளோ அசால்ட்டு….. 😏
Agni pathi theriyama annaikku irukku🤭🤭🤭