Loading

அத்தியாயம் – 17 : தாள் திறவுதே பூங்கதவு!

கம்பீர நடையுடன், சிறு கேலியும், நக்கலும் கலந்தோடியதோ என்று பார்ப்பவர்களைச் சந்தேகம் கொள்ள வைக்கும் வகையில் ஓர் அலட்சிய பாவனையுடன் மிதுனை நெருங்கினான் ருத்ரன்.

நேரே வந்தவன், மிதுனிடம் கையை நீட்டி..

“ஹெலோ.. ஐயம் ருத்ரன்! ருத்ர பிரதாபன்!” என்று வேண்டுமென்றே முன் பின் அறிமுகமில்லாதவர்களிடம், அப்பொழுது தான் புதிதாக அறிமுகப்படுத்திக் கொள்வதைப் போல ருத்ரன் கூற, மிதுனோ தொண்டையின் நடுக்கத்தை உள்ளடக்கிக் கொண்டு..

“தெ.. தெரியும்..” என்றான் முயன்று வருவித்த சாதாரண குரலில்.

அதைக் கேட்டு ருத்ரனின் உதட்டின் ஓரம் வளைந்தது.

“ஹ்ம்ம்.. பாத்து பதினஞ்சு வருஷம் இருக்குமா? கடைசியா உங்க அப்பா சாகறதுக்கு ஒரு வாரம் முன்ன பார்த்தது!” என்று கொஞ்சம் கூடத் தயக்கம் இல்லாமல், மிதுனின் தந்தையை கொன்றது தானே என்பதும் கூட இல்லாமல் சாதாரணமாகக் கூறக் கேட்டதும் மிதுனுக்கே நெஞ்சம் ஒரு கணம் நடுங்கிவிட்டது!

குரலைச் செருமிக் கொண்டவன், ருத்ரன் கண்களை நேராய் பார்க்க முடியாது வேறு புறம் பார்வையைத் திருப்பிக் கொண்டே.. “ஹ்ம்ம்.. ஆமா..” என்று கூற, அவனை ஆழ்ந்து பார்த்த ருத்ரனோ..

“ஹ்ம்ம்.. சரி வாங்க இன்டெர்வியூவுக்குப் போகலாம்..” என்று என்னவோ, அவன் தான் மற்றவர்களை நேர்முகத் தேர்வுக்கு வரச் சொன்னவன் போலக் கூறிவிட்டு, விறுவிறுவென முன்னே செல்ல, அங்கிருந்த மற்ற அனைவருமே திகைத்துப் போய் நின்றிருந்தனர்.

அவர்கள் அனைவருக்குமே தெரியும், ருத்ரன் தான் மிதுனின் தந்தையைக் கொன்றது என்று!

அதனாலேயே அவர்களின் பதட்டம் இன்னுமாய் அதிகரித்து இருந்தது.

ஏனென்றால், தந்தையைக் கொன்ற பழிவெறியில் மிதுன் ஆவேசப்பட்டு ருத்ரனிடம் ஏதாவது வம்பு வளர்த்துவிடுவானோ என்று இவர்கள் பயந்து கொண்டிருக்க, இங்கு நடந்ததோ அதற்கு எதிர் அல்லவா?

தந்தையின் மரணத்துக்குப் பழிதீர்க்கக் காத்திருக்கும் மகனின் முன்பு அந்தக் கொலையாளியே நேரடியாவ வந்து நின்று வம்பிழுத்துவிட்டுப் போயிருக்கிறான்.

ஆனால் அவனை எதுவும் செய்யவியலாது தடுமாறி, திணறிப் போயிருக்கிறான் மகன்.

அந்த மகனும் சாதாரணமானப்பட்டவன் இல்லையே? அவன் இந்த மாநிலத்தின் முதல்வன்!

அவனே ருத்ரனின் முன்பு வாயடைத்து.. நெஞ்சுக்குழி உலர்ந்து நின்றிருந்தான் என்றால், மற்றவர்களெல்லாம் எம்மாத்திரம்?

அனைவரும் பயத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போய் நின்றிருக்க, அதுவே இன்னமும் அவமானமாகப் பட்டது மிதுனுக்கு.

ஆனால் அவர்கள் முன்பாக எதையும் காட்டிக் கொள்ளவும் முடியாது வெறுப்புடன் ருத்ரனைப் பின் தொடர்ந்தான் அவன்.

முன்னே சென்றிருந்த ருத்ரன், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மீட்டிங் ஹாலுக்குள் சென்று நடுநாயகமாக இருந்த நாற்காலியில் அமர, அவனை ஓட்டமும், நடையுமாகப் பின் தொடர்ந்த மற்றவர்களோ லேசாக மூச்சு வாங்கியபடி அந்த அறைக்குள் வந்தார்கள்.

வந்தவர்களைப் பார்த்தவன், “வாங்க.. வந்து உட்காருங்க..” என்று அதிகாரமாய் கூறிட, மற்றவர்களும் வந்து அமர்ந்தனர்.

“ஹ்ம்ம்.. அப்பறம் என்ன விஷயமா என்னைப் பார்க்க வரச் சொன்னீங்க?” என்று கால்மேல் கால் போட்டபடி ஒரு கையை நாற்காலியின் கைப்பிடியில் ஊன்றியபடி அதிகாரமாய் கேட்க, அவர்களில் முதன்மையாக அமர்ந்திருந்த ரிஷி அகர்வால் அவனிடம் முன்னோக்கி சாய்ந்து,

“இன்னைக்கு உன்னை இங்க வரச் சொன்னதுக்கான காரணம் ரொம்ப பெருசு.” என்று ஆழ்ந்த குரலில் பேச ஆரம்பிக்க, ருத்ரனோ வராத கொட்டாவியை வருவித்துக் கொண்டு அவர்களைக் கேலி செய்தான்.

அதில் ஏகத்துக்கும் கடுப்பான ரிஷியோ..

“இது விளையாடறதுக்கான நேரமில்லை ருத்ரன். நான் சொல்லறதை முழுசா கேளு..” என்று கூறிவிட்டு சில விஷயங்களைக் கூற, ருத்ரனோ ஆடாமல், அசையாமல் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இறுதியாக அவர்களது திட்டத்தை ரிஷி முழுவதுமாகக் கூறி முடித்ததும், மேல எழுந்த ருத்ரன், கையைத் தலைக்கு மேல் உயர்த்தி அலட்சியமாகச் சோம்பல் முறித்தான்.

அவனது இந்தச் செய்கைகளெல்லாம் சுற்றி இருந்தவர்களின் ரத்த அழுத்தத்தை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது. ஆனால் அவனிடம் நேரடியாக ஏதேனும் பேசிவிட முடியுமா என்ன?

சோம்பல் முறித்தது நிமிர்ந்தவன்,

“ஆமா.. எந்த நம்பிக்கைல எனக்கு இவ்வளவு பெரிய வேலை கொடுத்திருக்கீங்க?” என்று கேட்டானே பார்க்கலாம்!

சுற்றி இருந்த அனைவரும் அவனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாது விழிக்க, மிதுன் தான் மேலே எழுந்தான்.

“இங்க பாரு ருத்ரன், நீ உன்னோட ஊரை இந்திய கவர்மெண்ட்டே தொடக் கூட முடியாம பெரிய கோட்டைக்குள்ளே பாதுகாப்பை வச்சிருக்கறதைப் பார்த்தோ.. இல்ல நீ செய்த கொலைகளுக்கெல்லாம் பயந்து, உன் வீரத்தை மெச்சியோ உனக்கு இந்த வேலையைக் கொடுக்கல..” என்று இறுகிய குரலில் கூற, அதற்கும் வெகு சாதாரணமாகத் தாடியைத் தடவியபடி..

“ஆங்.. அப்பறம்..” என்றான் ருத்ரன்.

அதில் பீறிட்ட கோபத்தை கண்களை இறுக்க மூடி அடக்கிக் கொண்ட மிதுனோ, சற்று நிதானத்துக்கு வந்து..

“நீ இப்போ ஜெயிச்சது அந்த கபீரை!

அவன் ஒரு மிருகம்!

அந்த மிருகத்தை நீ ஜெயிச்சதால தான் உனக்கு இந்தப் பெரிய வேலையைக் கொடுத்திருக்கோம்.” என்று அவன் கூறியதில் ருத்ரனின் புருவங்கள் உயர்ந்தன.

“ஓஹோ! அப்படியா? கேட்கவே ரொம்ப பெருமையா இருக்கே..” என்று போலியாகச் சிலாகித்தவன், “அப்படின்னா இவ்வளவு பெரிய வேலை செய்யப்போற எனக்கு என்ன கூலி?” என்று கேட்டான்.

அவன் இப்படிக் கேட்பான் என்று அவர்கள் அனைவருக்குமே தெரியும்.

தன் ஊரைக் காப்பாற்றுகிறேன் என்று அவன் செய்து வரும் காரியங்கள் எல்லாம் இந்திய அரசாங்கத்துக்கு அத்தனை அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் அவன் தனது ஊரின் மீதிருக்கும் பற்றினால் தான் செய்கிறான் என்று இன்னமும் நம்ப முடியவில்லை அவர்களால்.

ஏதோ தகாத வழியில் இவன் சம்பாதிப்பதற்கு அவனது மொத்த ஊரையும் அடக்கியாண்டு கொண்டிருக்கிறான் என்று நம்புகிறார்கள் அவர்கள்.

இப்பொழுதும் இந்த வேலைக்குப் பெரும் தொகையை அவன் எதிர் பார்ப்பான் என்று அவர்கள் எதிர்பார்த்தே இருந்தனர்.

எனவே அவர்களுள் இருந்த ஹர்ஷத் கான், “ஹ்ம்ம்.. உன்னோட ஆசை, கனவுகள் எல்லாம் பெருசுன்னு தெரியும் எனக்கு. அப்படி இல்லாம சும்மா இந்த ஊருக்கு நல்லது பண்ணறேன்னு சொல்லிட்டு இருக்கறதை எல்லாம் நாங்க நம்புவோம்னு நினைச்சுட்டு இருக்காத.

சரி.. எனக்கு வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுன்னு பேசித் தான் பழக்கம். நேராவே சொல்லிடறேன்..

நூறு கோடி! ஒரே பேமெண்ட்! ஓகே?!” என்று அவர் கேட்க, ருத்ரனோ..

“ஹ்ம்ம்..” என்று சம்மதமாக, அதுவும் வெகு பலமாகவே தலையை ஆட்டினான். அதில் மற்றவர்களின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசமாக, ருத்ரனோ மேலும் தொடர்ந்தான்.

“ஒன்னு.. ரெண்டு.. மூணு..,” என்று அங்கிருந்தவர்களை எண்ணியவன்,

“மொத்தம் இருபது பேர் இருக்கீங்க இல்லையா?

சரி, அப்போ ஆளுக்கு நூறு கோடி!

மொத்தம் ரெண்டாயிரம் கோடி!

சரிதானே?”

என்று கேட்டு நிமிர்ந்தவன், கண்களில் கூலரை அணிந்து கொண்டு அந்தச் சுழல் நாற்காலியைச் சுழற்றிவிட்டுக் கொண்டு அத்தனை கர்வமாய் அமர, அங்குக் கூடியிருந்த அத்தனை பேரும் நம்பவே முடியாத அதிர்ச்சியில் அமர்ந்துஒருந்த நாற்காலியில் தீ தான் பற்றிவிட்டதோ என்பது போல அத்தனை அதிர்வுடன் விறுக்கென எழுந்து நின்றனர்!

அவர்களைப் போலியாய் வியந்து பார்த்தவன்,

“அடேயப்பா!என்ன எழுந்திட்டீங்க? ரெண்டாயிரம் கோடின்றது உங்களுக்கு ரொம்ப பெருசா இருக்கா என்ன?” என்றான் சீண்டலாக.

அதில் கோபம் கொண்ட ரிஷியோ,

“உன் ஊரோட ஜனத்தொகையே ஒரு கோடி பெறாது தெரியுமா?” என்று கோபமாகக் கேட்க, கண்ணிலிருந்து கண்ணாடியைக் கழற்றியவனோ..

“இந்தியாவோட ஜனத்தொகை எவ்வளவுன்னு தெரியுமா?

நூத்து நாப்பத்து நாலு கோடி!

அதுல இந்த ருத்ரன் ஒரே ஒருத்தன் தான்!

அந்த ஒருத்தனைத் தேடித் தான் நீங்க அத்தனைப் பேரும் வந்திருக்கீங்க!

புரியுதா?”

என்று சாதாரணமாகப் பேசத் துவங்கியவன், இறுதி வார்த்தையை அந்த அறையே அதிரும் வண்ணம் கர்ஜித்து, எதிரில் இருந்த மேஜையை ஓங்கித் தட்ட, மற்றவர்களின் சப்த நாடியும் ஒடுங்கிப் போனது!

அனைவரும் பேயறைந்தார் போல அமைதியாய் நிற்க, உச்சபட்ச கோபத்தில் ரிஷி பல்லைக் கடிக்கும் சப்தம், ருத்ரனின் காதுகளில் விழுந்தது.

சட்டென ரிஷியின் புறம் திரும்பியவன்,

“என்ன சாருக்கு கோபமெல்லாம் வருது போல?

சரி.. அப்படின்னா வேற ஆள் பார்த்துக்கோங்க. நான் கிளம்பறேன்!” என்று கூறிவிட்டு லாவகமாக அவனது கோட்டைக் கழற்றித் தோளில் போட்டுகொண்டு வெளியேறினான்.

அவன் இப்படி சட்டென்று கிளம்புவான் என்று யாருமே நினைக்கவில்லை. அவன் வெளியேறிச் செல்லுவது அனைவருக்குமே அதிர்வாக இருந்தாலும், அடுத்து என்ன செய்வது என்று யாருக்குமே புரியவில்லை. அவர்கள் அத்தனை பேருமே பயத்தில் நின்றது நின்றபடி இருந்தனர்.

அதையெல்லாம் கண்டுகொண்டாலும், இன்னமும் முகத்திலிருந்த அலட்சியம் மாறாமல் வெற்றி புன்னகையுடன் மீசையை ஒருபுறமாக நீவிவிட்டுக் கொண்டு நேரே வெளியே வந்த ருத்ரனிடம் ஓடி வந்த சபீரோ,

“ஜி.. அக்னி கண் முழுச்சுட்டாங்களாம்.” என்று கூற, ருத்ரனின் இதழ்கள் அவனது மீசைக்குள் ஒளிந்து கொண்டு மென்னகை புரிந்தன.

கண்களில் பளிச்சிடலுடன் அவன் ஹெலிகாப்டரில் ஏறிக் கொள்ள, அதுவோ காளிக்ஷேத்திராவை நோக்கிப் பறந்தது.

அடுத்த சில மணிநேரங்களில் அந்த ஹெலிகாப்டர், காளிக்ஷேத்திராவின் அந்தப் பெரிய மருத்துவமனையின் முன்பு நின்றிருந்தது.

அங்கு வந்த ஹெலிகாப்டரை தனது அறையிலிருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் அக்னி.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவளது கண்களின் கடினம் இப்பொழுது அதிகரித்திருந்தது. கூடவே சிறு கோபமும்.

அந்தச் சினம் யார் மீது? தன் மீதே தானா? என்றும் கூட அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.

கண்களை இறுக்க மூடியவள், தனக்குள் ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்க, அவள் கண்களைத் திறக்கையில் அவளது அறைக்கதவைத் திறந்திருந்தான் ருத்ரன்.

ஒரு பெருமூச்சுடன், அப்படியே நின்றிருந்தாள் அக்னி.

அறை வாசலிலேயே அவளை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.

அவன் கதவைத் திறந்து கொண்டு அப்படியே நிற்பதை அக்னியும் உணர்ந்து தான் இருந்தாள். ஆனால் அதன் பிறகு அவனிடம் இருந்து எந்தவொரு அசைவும் இல்லை எனவும் இவளுக்குத் தான் சற்று குழம்பிப் போயிற்று!

சிறிது நேரம் வரையில் அவன் பேச்சைத் துவங்குவதற்காகக் காத்து நின்றவள், பொறுக்க முடியாது சட்டெனத் திரும்பிவிட்டாள்.

அவள் திரும்பியதும், ருத்ரனின் கண்களில் மாயக் கண்ணனின் விஷமச் சிரிப்பு!

அதை அவள் கண்டு கொண்டதும் மீண்டும் தனது கூலரை எடுத்து அணிந்து கொண்டவன்,

“எப்படி இருக்க?” என்றான் வெகு இயல்பாக!

அவன் தனக்காகத் துடிப்பான், தான் மீண்டும் பிழைத்து வந்ததை எண்ணி மகிழ்வான் என்று அவள் நினைத்திருந்தாள் தான்!

ஏன்.. மனதிற்குள் யாருமறியாத ரகசியமாய், அவன் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவள் வெகுவாக ஆசைப்பட்டாள் தான்!

ஆனால் ருத்ரன் இப்படி சாதாரணமாக இருப்பது.. அதிலும், தான் கண் விழிக்கும் வரைக்கும் கூடத் தன்னுடன் அவன் இல்லாதது அவளுக்கு மனதுக்குள் வலியைக் கொடுத்தது!

இருந்தாலும் அதை வெளிப்படையாகக் கேட்கவும் பிடிக்கவில்லை அவளுக்கு!

அதனால் வெறுமனே..

“என்னை அப்படியே கடல்ல தூக்கிப் போட்டுட்டு வந்துடுவீங்கன்னு நினச்சேன்.” என்றாள் அவனுக்கு வலிக்க வேண்டும் என்றே!

அவள் கூறியதைக் கேட்டதும், ருத்ரனுக்கு வலித்தது தான்!

அந்த வலியை ருத்ரனே முயன்றும் கூட அவனது கண்கள் பிரதிபலிக்கவும் செய்தன தான்!

ஆனால் இப்பொழுது அவனின் கூலர், அந்த வலியை வெகு லாவகமாக மறைத்துக் கொண்டதால், பாவம் அதை அக்னி அறிந்து கொள்ள முடியாது போனது.

அவளது கண்களுக்குத் தென்பட்டதெல்லாம், ஏளனமாய் வளைந்திருந்த ருத்ரனின் இதழ்கள் தான்.

அதைக் கண்டு அக்னிக்கு இதயம் உடைந்தது. ஆனாலும் தனது பலவீனத்தை அவனிடம் காட்டிக் கொள்ள பிடிக்குமா அக்னியால்?

அப்படி, அவனிடம் தான் நெகிழ்வதையும், தன் உறுதி குலைவதையும் அவள் காட்டிக் கொண்டால், அவள் அக்னியாக இருக்கவே முடியாதே!

ஆனால்.. கபீரின் ஸ்னைப்பரில் இருந்து ருத்ரன் அவனைக் காப்பாற்றிய பிறகு இப்பொழுது மாற்றம் வந்து தானிருந்தது அக்னியிடம்!

இருந்தாலும் இன்னமும் தயக்கம் போகவில்லை!

இதையெல்லாம் உணராத ருத்ரனுக்கு அவள் கூறியதை ஜீரணிக்கவே சில கணங்கள் பிடித்தது!

முகத்தை வேறுபுறம் திருப்பித் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டவன், மீண்டும் அவளிடம் திரும்பிய பொழுது நிதானமாகி இருந்தான்.

தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து, அவளைத் தனது கீழ்க்கண்ணால் அளவிட்டவன்..

“அக்னி! நீ ஒன்னு மறந்துட்ட!

நீ.. என்னோட இரை!

நீ பலியாக வேண்டியது என்கிட்டே!

அப்பறம் எப்படி உன்னைச் சும்மா கடல்ல தூக்கிப் போட்டுச் சுறாமீனுக்கு விருந்தாக்க முடியும்!” என்று கூறி ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, தனது வலக்கையால் இடப்புற மீசை முறுக்கிவிட, அக்னிக்கோ அவளது கட்டுப்பாட்டையும் மீறி முகம் குப்பென்று சிவந்தது!

அதே மனநிலையுடன் மெல்ல அவளை நோக்கி நடந்தவன்..

“இன்னும் ஒரு வாரத்துல டிஸ்சார்ஜ் ஆகிடலாம்னு டாக்டர் சொன்னார். அம்மா வீட்டுல உனக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுத்துடறேன்.. அங்கேயே தங்கிக்கோ..” என்று காற்றுக்கும் கூசும் குரலில் கூறியவன், அதற்குள் அவனது மூச்சுக்காற்று அவளது முன்னுச்சியில் படும் அளவிற்கு நெருங்கிக் கூற, அந்த மோனநிலையின் அடர்த்தி தாளாமல், மீண்டும் ஜன்னலின் புறமே திரும்பி நின்றாள் அவள்.

அவளருகே இன்னமும் நெருங்கியவன், அவளது தோள்பட்டை வழியாக வெளியே பார்த்தபடி..

“பதிலே சொல்லலியே?!” என்றான் கேள்வியாக.

அதற்கு ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்துக் கொண்டவள், சற்று திணறியபடி..

“நா.. நான்.. உங்க வீட்டுல தங்கிக்கறேன்!” என்று கூறியதும் ருத்ரனின் விழிகளோ இனிய அதிர்ச்சியில் விரிந்து கொண்டன!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்