அத்தியாயம் – 16
தனது கோபத்திற்கு இவளிடம் இவ்வளவு மதிப்பா? தான் கூறிய ஒற்றை வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து இவள் தனக்குப் பிடிக்காத உணவை இவ்வளவு வேகமாகச் சாப்பிடுகிறாளே என்று ஆச்சர்யாத்தில் ராகவின் கண்கள் விரிந்தன!
ராகவின் கண்களில் வியப்பைக் காணவும் அவனை நிமிர்ந்து முறைத்த மணியோ… “போதும் போதும்… உன் கோபத்துக்கு பயப்படற ஆளெல்லாம் இங்க யாரும் இல்ல…
அப்பறம் என்னடா நம்ம பேச்சை இவ கேட்கறாளேன்னு சந்தோஷப்படாத.
பாட்டி ஊர்ல இல்லாத நேரம். இப்போ எனக்குக் கை வலி… கால் வலின்னா அமுக்கி விடறதுக்குக் கூட யாரும் இல்ல.” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள… ராகவுக்கோ கடுப்படித்தது.
“தெரியும்டி… நானும் கூடக் கொஞ்சம் நீ திருந்திட்டியோன்னு நினச்சேன்… ஆனா நீ திருந்தறவளா என்ன?” என்று அவன் கேட்க, அதற்கு மணியோ…
“என்ன திருத்தி மார்க் போடப்போறியா? போடா டேய்…” என்கவும் ராகவின் வாய் பிளந்தது.
‘என்ன வாய் அடிக்கறா பாரேன்…’ என்று எண்ணிவிட்டு சலிப்புடன் தலையசைத்தபடி அவன் செல்ல, மணியோ சாப்பிட்டுவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
இப்படியே மாலையாகிவிட்டிருக்க, ராகவுக்கு அங்கு வேலை இருந்தாலும், மணியையும் வெகுநேரம் கடையிலேயே வைத்திருக்க விருப்பம் இல்லாமல், வீட்டிற்கு சென்று வேலையை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணி, தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு மணியோடு வீட்டுக்குக் கிளம்பிவிட்டான் அவன்.
வீடு சென்றதும் அவன் மாடியேறிப் போக, மணியோ நேராகச் சமையலறைக்குச் சென்றாள்.
அங்கியிருந்த சாமான்களை எல்லாம் உருட்டியவள், சமையலாள் செய்து வைத்திருந்த சாப்பாட்டைப் பார்த்து முகம் சுளித்தாள்!
‘எனக்கு இப்போ அவியல் சாப்பிடணும் போல இருக்கே… என்ன செய்ய?’ என்று யோசித்தவள், ஆன்லைனில் ஓர் உயர்தர ஹோட்டலில் அவியலுக்கு ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கலானாள்.
மாலை ஆறுமணிக்கு வீடு வந்தவன், இரவு எட்டு மணியைத் தாண்டித் தான் தனது வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுக் கீழே வந்தான். அந்த நேரத்தில் மணி சமையலறையில் உருட்டிக் கொண்டிருக்க, அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காக அவளருகே சென்றால், காய்கறிகள் வெட்டிக்கொண்டிருந்தவள், சராலென அவளது விரலை வெட்டிக் கொண்டாள்.
“ஏய்… என்னடி பண்ற? இப்படியா கவனமில்லாம கைய கட் பண்ணிப்ப? நளினிம்மாதான் டின்னர் செஞ்சு வச்சுட்டு போறதா சொல்லியிருந்தாங்களே… இப்ப நீ எதுக்கு அதிகப்பிரசங்கியா செய்துட்டு இருக்க?” என்று அவன் எரிச்சல் பட, அவளோ அவனுக்கும் மேலே கத்தினாள்.
“எனக்கு இப்போ அவியல் சாப்பிடணும்னு கிரேவிங்… ரெண்டு கடாயில் ஆர்டர் பண்ணியும், பாட்டி செய்யறது மாதிரி டேஸ்ட் வரல… அதான் நானே செய்யலாம்னு ட்ரை பண்ணேன்… ச்சை…” என்று கூற, ராகவோ அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.
“இந்த கிரேவிங் எல்லாம் மாசமா ஒருக்கற பொண்ணுங்களுக்குத் தான இருக்கும்? உனக்கு என்ன?” என்று அவன் கேட்க, மணியின் கோபம் பெருகியது.
“உனக்குச் சொன்னாங்களா? மாசமா இருக்கும்போது தான் கிரேவிங் இருக்கும்னு உனக்குச் சொன்னாங்களா? மாசா மாசம் பீரியட் டைம்லயும் அந்த கிரேவிங் இருக்கும்.
என்ன? மாசமா இருக்கும்போது, அந்தப் பொண்ணுக்குள்ள அவங்க வீட்டு வாரிசு இருக்கற அக்கறைல அவ கேட்கறத்தெளலாம் வாங்கித் தருவாங்க… ஆனா மத்த நேரத்துல அவளுக்கு கிரேவிங்ஸ் இருக்கும்னு கூட யாருக்கும் தெரியாது.
தெரிஞ்சாலும் கண்டுக்க மாட்டாங்க…” என்று அவள் கோபத்துடன் பொரிந்துத் தள்ள, ராகவுக்கு அவளது பிரச்சனை புரிந்தது.
“ஷ்ஷ்ஷ்… கொஞ்சம் அமைதியா இரு… இப்போ உனக்கு என்ன வேணும்? பாட்டி செய்யற மாதிரி அவியல் வேணும்… அவ்வளவு தானே?
நீ இப்படி கிட்சன் காபினெட்ல உட்கார். நான் செய்து கொடுக்கறேன்…” என்று அவன் கூற, அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள் மணி.
“ஏன்? நான் பாட்டி மாதிரியே செய்வனான்னு சந்தேகமா? சாப்டுட்டு தான் நீயே சொல்லேன்…” என்று அவளது பார்வையின் பொருள் புரிந்து கூறிவிட்டு சமையல் வேலையில் இறங்கினான்.
காய்கறிகளை எல்லாம் வெட்டி, கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கடுகு, ஜீரகம் போட்டுத் தாளிக்கையிலேயே மணிக்கு, நாவின் சுவை நரம்புகள் எல்லாம் தூண்டப்பட்டு எச்சில் ஊறியது.
அவள் அதையே பார்த்துக் கொண்டிருக்க, காய்கறிகளை எல்லாம் கொட்டி, நீர் ஊற்றி வேகவைத்து, பின் தேங்காய் ஜீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த கலவையை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறங்கியவன் சூடான சாதத்தை தட்டில் போட்டு, கூடவே அவியலையும் சேர்த்து அவளுக்குக் கொடுக்க, அதை அவசரமாக வாங்கி, ஒரு வாய் சாப்பிட்டவளின் கண்களில் சட்டெனக் கண்ணீர் வந்தது.
“ஏய்… என்னாச்சு… காரம் நீ சாப்பிடற அளவு தானே போட்டேன்?” என்று அவன் சிறு பதட்டத்துடன் கேட்க, அவளோ… இதழோரம் துடித்த சிரிப்புடன் கண்ணீரைத் துடைத்தபடி மறுப்பாகத் தலையாட்டிச் சிரித்தபடி…
“இல்ல… அதெல்லாம் இல்ல… பாட்டி செய்யறது மாதிரி அப்படியே இருக்கு… ரொம்ப தேங்க்ஸ்…” என்றுவிட்டு மேலும் சாப்பிடத் துவங்கியவள், அவன் சாப்பிடாமலேயே அவளைப் பார்த்தபடி நின்றிருக்கக் காணவும், அவனைக் கேள்வியாய் நோக்கி…
“நீ சாப்பிடல?” என்றாள். அவனோ சிரித்தபடியே… “இல்ல நீ சாப்பிடு… எனக்குப் பசிக்கல…” என்று கூற, அவனை முறைத்தவள், அவனை விடாப்பிடியாக உணவு மேஜைக்கு அழைத்துச் சென்று, சாப்பாடு பரிமாறிவிட்டு, அவனுக்கு அருகேயே சென்று அமர்ந்து சாப்பிடத் துவங்கினாள்.
என்னவோ, ராகவின் அந்தச் செயலுக்குப் பிறகு இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று உடைந்ததைப் போலானது.
ஏதேதோ… சிறுவயதிலிருந்து இருவரும் பேசாத பற்பல விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொண்டதில் அந்த இரவு உணவு வேளை அழகான பொக்கிஷப் பேழையாக அவர்களது அந்த அழகான உரையாடலைச் சேர்த்துவைத்துக் கொண்டது!
சாப்பிட்டுவிட்டு மேலே எழுந்தவள், திரும்பியும் பார்க்காது செல்ல, ராகவுக்குக் கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது.
இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தவள், ச்சும்மா குட் நைட் என்றாவது சொல்லியிருக்கலாமே என்று அவன் மனது குறைபாட்டுக்குக் கொண்டிருக்க, சென்று கொண்டிருந்தவள், ஒரு நொடி தயங்கிப் பின் நின்று, இவனிடம் திரும்பி…”ராகவ்…” என்றாள் காற்றுக்கும் வலிக்குமோ என்ற மென்மையில்!
குனிந்திருந்தவன் தலை மெல்ல நிமிர, பளீரென்ற புன்னகையுடன்… “தேங்க்ஸ்…” என்றுவிட்டு அவள் திரும்பிச் செல்ல… அவன் உலகம் அப்படியே அழகியலாய் உறைந்து போனது!
இப்படியே ஒவ்வொரு நாளும் அவனுடனே மணி கடைக்குச் செல்வதும், பிறகு வீடு திரும்புவதும்… இருவருக்குமே அந்த நிகழ்வுகள் சுகந்த சொப்பனங்களாய் மாறின.
அதுவரை ஒருவர் மேல் மற்றவர் கொண்டிருந்த காழ்ப்புகள், பகையென அனைத்தும் மறந்து… சாதாரணமாய் பழக ஆரம்பித்திருந்தனர்.
இப்படி ராகவுடனான தனிமைப் பொழுதுக்கு மணியின் மனம் பழக்கமாகிருந்தாலும், மனம் என்னமோ ஏதோ ஓர் ஓரத்தில் பாட்டியைத் தேடியது. பாட்டி உடன் இருந்தால் இன்னும் கொஞ்சம் அவள், அவளாக இருக்க முடியுமோ என்ற எண்ணம் பிறந்தது.
பள்ளி விடுதியில் சேர்க்கப்பட்ட குழந்தை என்ன தான் தன் நண்பர்களுடன் ஆடிப்பாடினாலும், இரவில் தாயின் மடியைத் தேடும் அல்லவா? அதுபோல…
அப்படித் தான், அன்றும் கடையிலிருந்து வீட்டுக்கு வரும் பொழுதே மணிக்கு மனதுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
வீட்டுக்குப் போனால், சமையலாள் செய்து வைத்திருக்கும் உணவை உண்டாக வேண்டும். ராகவ் அவன் போக்கில் மடிக்கணினியை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவான்.
இவளுக்குப் பசிக்கும் என்ற அக்கறையில் இவளுடன் வந்து உணவருந்துவானே தவிர, அதன் பிறகு இவன் கவனம் முழுவதும் மடிக்கணினியில் தான்!
மணியோ தன் போக்கில் டிவி பார்ப்பதோ… அன்றி அவளும் தனது மடிக்கணினியில் ஏதாவது வேலை செய்வதோ என்று மட்டும் இருப்பர்கள்.
அன்றும் அதுபோல அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே… “மணி… இன்னைக்கு எனக்குக் கொஞ்சம் வேலை அதிகம் இருக்கு. நீ உனக்குப் பசிக்கறப்போ சீக்கிரம் சாப்பிட்டுட்டுத் தூங்கப் போ… என்னோட வேலை ரொம்ப நேரம் இழுக்கும் போலத் தெரியுது…” என்று கூறிவிட்டு உடை கூட மாற்றாது அவன் அலுவல் அறைக்குள் செல்லப் போக, மணியின் காதுகளில் புகை வந்தது!
“ச்சே… நான் ஒரு லேப்டாப்பா பொறந்திருக்கலாம்… அப்போவாவது என்ன யாராவது கூடத் தூக்கிட்டே சுத்தியிருப்பாங்க…” என்று அவள் கடுப்புடன் கூற, அலுவல் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனின் நடை நின்றது!
இதழில் எட்டிப் பார்த்த புன்னகையுடன் அவன் மணியைத் திரும்பிப் பார்க்க… அவளோ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ஆச்சு உனக்கு?” என்று நகை முகம் மாறாமல் அவன் கேட்க, அவளோ சலிப்புடன் சோபாவில் அமர்ந்தாள்.
“சொல்லு மணி… உனக்கு என்ன பிரச்சனைன்னு நீ சொன்னா தான எனக்குத் தெரியும்?” என்று மீண்டும் அவன் கேட்க, சோபாவின் சாய்ந்து கண்மூடிக் கொண்டவளோ…
“ஒன்னும் இல்ல…போ… உனக்கு வேலை இருக்குல்ல…” என்று கூறிவிட, ராகவோ திரும்பிச் சென்றான்.
அவன் தன்னை விட்டு விலகிச் செல்லுவது, அவனது காலடி சத்தத்தில் தெரிய, மணியின் கண்களுக்குள் லேசாகக் கண்ணீர் கரித்தது!
அவள் தனக்கு என்ன தான் பிரச்சனை.. எதற்கு இப்படி எதற்கெடுத்தாலும் கண்ணீர் வருகிறது என்ற யோசனையில் அப்படியே அமர்ந்திருக்க, சற்று நேரத்தில் அவளது நாசியின் அருகே கமகமவெனக் காபியின் மனம் வீச, இதழுக்குள் சிரித்தபடியே கண் திறந்தால், கண்ணெதிரே காபியுடன் நின்றிருந்தான் ராகவ்!
“என்னதிது?!” என்று அவள் ஆச்சர்யத்துடன் கேட்க, அவனோ..
“உன்னோட சர்வரோக நிவாரணி! இந்தா குடி..” என்று அவள் கையில் காபியைத் திணிக்க, அவளும் ஆவலுடன் வாங்கி கொண்டவள்.. அவனிடம், “உனக்கு?” என்று வினவினாள்.
“எனக்கு வேணாம்.. நான் குடிக்க மாட்டேன்..” என்று அவன் சிரித்த முகமாகவே கூற, அவளோ சுருங்கிய முகத்துடன்.. “ஏனாம்?” என்றாள்.
அவளது அந்தச் சிறு செல்லக்கோபம் கண்டு மீண்டும் முறுவலித்தவன்.. “எனக்குச் சின்னதுல இருந்து காபி பிடிக்காதுடி..” என்று கூற, இப்பொழுதும் முகம் மாறாமலேயே.. “அப்பறம் எதுக்கு காபி போட்ட?” என்று அவள் கேட்க, ராகவின் கண்கள் கனிந்து..
“உனக்கு காபி குடிக்கணும்னு இருக்குன்னு தோணுச்சு.. அது தான் போட்டு வந்தேன்.. ஏன் வேணாமா? வேணாம்னா கொடுத்துடு..” என்று கூறியபடி அவளிடமிருந்து காபி கோப்பையைப் பறிப்பது போலப் பாவனை செய்ய, அவளோ அவசரமாகத் தனது கையில் இருந்த கோப்பையைப் பின்னிழுத்துக் கொண்டாள்.
கூடவே.. “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. யாராவது காபி கொடுத்தா என்னால வேணாம்னு சொல்ல முடியாது.. அதான் வாங்கிக்கிட்டேன்..” என்று அவள் உதட்டைச் சுளிக்க, ராகவோ.. ‘அடியேய் மஞ்சக்கிழங்கே.. இப்படியெல்லாம் உதட்டைச் சுளிக்காதடி.. நான் பாவம்..’ என்று உள்ளுக்குள் சிணுங்கிக் கொண்டாலும்.. அதை முகத்தில் காண்பிக்காது ஒரு பெருமூச்சில் தன்னை சமன்படுத்திக் கொண்டவன்..
“சரி சொல்லு.. உனக்கு என்னாச்சு? ஏன் இப்படி டவுனா இருக்க?” என்று கேட்க, மணியோ, அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
ஆனாலும் உடனே தன் பாவனையை மாற்றிக் கொண்டு..
“நானெல்லாம் ஒன்னும் டவுனா இல்ல..” என்று அவள் முகம் திருப்பிக் கொள்ள.. ராகவோ அவளுக்கருகாக அமர்ந்துகொண்டு மென்மையாக அவள் கரத்தினைப் எடுத்துத் தனது இரு கரங்களுக்குள் பொதிந்துகொள்ள.. பெண்ணவளின் கண்களோ வியந்து விரிந்தன!
அவசரமாய் மேல்மூச்சு வாங்க.. அவனையே ஆழப்பார்த்தால்.. அவனோ, “சினிமால சொல்லுவாங்களே அந்த மாதிரி.. உன்னோட அன்பனா இல்லாட்டியும், நண்பனா என்கிட்டே உன்னோட பிரச்சனைய ஷேர் பண்ணு..” என்று கூற, அந்த முகமும் அவனது குரலில் உணர்த்திய நெருக்கத்தில் தன்னையும் அறியாது, தனது பிரச்னையை அவளிடம் கூறலானாள் அவள்!