Loading

அத்தியாயம் – 15

முற்றும் மொத்தமாகப் பருகிவிட்ட போதும், கோப்பையின் அடியில் மிச்சம் ஒட்டியிருக்கும் ஒரு துளி காபியைப் போல, அவளை விட்டு மொத்தமாய் விலகிவிட வேண்டும் என்று மனம் ஆணித்தரமாக முடிவெடுத்த பிறகும் கூட.. மனதோரத்தின் அடியாழத்தில் அவளை இப்படியே கண் முன்னால் வைத்துக் கொள்ள வேண்டும்.. கைச்சிறைக்குள் அடைத்துக் கொள்ள வேண்டும்.. மூச்சுக்காற்றாய் மாற்றி, நெஞ்சுக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு மட்டும் அடங்குவதாய் இல்லை ராகவுக்கு!

அவளை நெருங்கவும் முடியாதும், வெளிப்படையாக விலகவும் முடியாது, நெருப்பில் விருப்பத்துடன் விழத் துடிக்கும் விட்டிலாய் அவன் அவஸ்தை கொண்டு அலைந்திருக்க, அவனது அலைப்புறுதல் மணிக்கே கூடப் புரியத் தான் செய்தது.

ஆனால் அந்த அலைப்புறுதல் ஏன் என்ற விவரம் தெரியவில்லை. ஏதாவது கேட்கலாம் என்றாலும், ‘இனி அவன்கிட்ட என்ன கேட்டு.. என்ன பயன்?’ என்ற ஈகோ அவளைக் கேட்கவும் விடாது தடுத்தது.

தனக்குள்ளேயே நொந்து கொண்டிருந்த ராகவ், தன் போக்கில் நகைக்கடைக்குச் செல்வதும், வீட்டிற்கு வருவதும் என இயந்திரம்போல் யிருக்க, ஒரு நாள் அவன் கடையில் இருந்த பொழுத்து, கடைச்சிப்பந்திகள் குதூகலத்துடன் வாயிலை நோக்கி ஓடுவது ராகவுக்கு சிசிடிவி கேமராவின் மூலமாகத் தெரிய, ‘இவங்க எதுக்காக இப்படி கஸ்டமர்ஸ விட்டுட்டு வாசலுக்குப் போறாங்க?’ என்று எண்ணியபடி வெளியே சென்று பார்த்தான்.

பார்த்தால், காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள் மணி!

அவனுக்கும் ஆச்சர்யம் தான்.. அவள் எதற்கு இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கிறாள் என்று!

முன்னால் சென்று அவளை, “வா..” என்றழைத்தவன், அவள் உள்ளே வர, ஆவலுடன் நடந்துகொண்டே.. “என்ன இங்க திடீருன்னு?” என்றான் வழியிலேயே.

அவன் கேள்வியில் அவனைச் சற்று நிமிர்ந்து பார்த்தவள், “வேலைக்கு வந்திருக்கேன்..” என்றாள் மொட்டையாக.

“வேலைக்கா?!” என்று அவன் ஆச்சர்யப்பட, அதைக் கண்டுகொள்ளாமல் விறுவிறுவென நடந்து அவனது அறைக்குள் அவள் செல்ல, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவளைப் பின் தொடர்ந்து ஓடினான் ராகவ்.

உள்ளே சென்றதும் கதவைச் சாற்றியவன், “மணி.. இப்போ எதுக்கு இங்க வந்திருக்க? என்ன வேலை? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டான்.

அவளோ நேராகச் சென்று அவனது மேஜைக்கு எதிர்ப்புறத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள், “வா.. வந்து உட்கார் முதல்ல..” என்று கூற, அவனோ.. ‘ஷ்ஷ்ஷப்பா.. ஆட்டிப்படைக்கறா என்ன..’ என்று உள்ளுக்குள் பெருமூச்சுவிட்டவன், அவளுக்கு எதிர்ப்புறமாகப் போய் அமர்ந்துகொண்டு..

“ஹ்ம்ம்.. உட்கார்ந்துட்டேன்.. இப்போ சொல்லு..” என்று விடாப்பிடியாகக் கேட்க, தனது பையிலிருந்து லேப்டாப்பை எடுத்து அந்த மேஜை மேல் வைத்தவள்..

“நான் இன்னைல இருந்து இங்க வேலை செய்யப்போறேன்..” என்று ஒவ்வொரு வார்த்தையாக நிதானமாகக் கூறவும், ராகவுக்கு அவள் பேச்சில் தலையும் புரியவில்லை.. காலும் புரியவில்லை.

“வேலைக்கா? இங்க என்ன வேலை செய்யப்போற?” என்று அவன் இன்னமும் சந்தேகமாகக் கேட்க, “நான் ஏற்கனவே மாமாகிட்ட இதப்பத்தி பேசினேனே.. உன்கிட்ட மாமா எதுவும் சொல்லலியா?” என்று அவள் கேட்க, ராகவோ இவளை முறைத்தான்.

‘அவங்க டூர் கிளம்பறதுக்கு முன்னாடி இவ ஏதோ பேசினாளாம்.. ஒரு மாசத்துக்கு மேலாகுது அவங்க உலகம் சுத்தப் போய்.. இப்போ வந்து மாமா உன்கிட்ட எதுவும் சொல்லலையானு கேட்கறா.. இவளையெல்லாம்..?’ என்று உள்ளுக்குள் காய்ந்தவனால் இதை அப்படியே அவளிடம் வெளிப்படையாகக் கேட்டுவிட முடியுமா என்ன?

வெறுமனே தலையை மட்டும் இடவலமாக அசைத்தவன், அவளது பதிலுக்காக் காததிருக்க, அவளே மேலே தொடர்ந்தாள்.

“இங்க வேலைன்னா.. அலங்காருக்கும், ஆபர்ணாவுக்கும் ஜூவல்லரி டிசைன் இனி நான் தான் செய்யப்போறேன்.. மாமா எனக்கு வேலை கொடுத்துட்டாரு.” என்று அவள் லேப்டாப்பில் பார்வையைப் பதித்தபடிக் கூற, ராகவுக்கோ..

‘ஏண்டி.. வீட்டுல தான் என்ன கொலையா கொல்லுற.. இங்க வந்தாலாவது உன்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு நினச்சா.. அதுக்கும் ஏண்டி இப்படித் தடை போடற?’ என்று நொந்தவன்..

“எனக்கு ஆபர்ணா பத்தி தெரியாது.. ஆனா.. அலங்கார்ல உனக்கு வேலை இருக்கு..” என்று அவன் வேறு வழியின்றிக் கூற, வெறுமனே.. “தேங்க்ஸ்..” என்று மட்டும் கூறியவளிடம் இன்னொரு விஷயத்தையும் கூற வேண்டும் என்று நினைத்தான் ராகவ்.

ஆனால் அதை எப்படி அவளிடம் கூறுவது.. அதைக் கூறினால் இவள் தன்னைத் தவறாக நினைப்பாளோ என்ற எண்ணத்தில் சற்று தொண்டையைச் செருமிக் கொண்டு மேலே தொடர்ந்தவன்..

“வந்து.. இங்கன்னா.. நீ இங்கயே வேலை செய்யணும்னு இல்ல.. இன்னும் மூணு பிரான்ச் இருக்கே.. அதுல எங்கயாவது போய்க் கூட நீ வேலை செய்துக்கலாம்..” என்று அவன் கூற விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தவள்..

“எனக்கு இங்க இருக்கத் தான் பிடிச்சிருக்கு. உனக்குப் பிடிக்கலைன்னா நீ வேற எங்கயாவது போய்க்கோ..” என்று கூறினாள் அவள்.

அவள், “இங்கே இருக்கத் தான் எனக்குப் பிடிச்சுருக்கு..” என்று கூறிய ஒற்றை வாக்கியத்தில் இன்பக்கரைசல் அவன் நெஞ்சுக்குள்!

‘இத நிஜமா, உனக்குள்ள இருக்கத் தான்டா எனக்குப் பிடிச்சிருக்குன்னு மட்டும் நீ சொல்லிட்டா.. என் வாழ்க்கைக்கு எதுவுமே தேவை இல்லடி..

நீ எந்த அர்த்தத்தில சொன்னியோ.. ஆனா எனக்கு இங்க இப்படி உன் பக்கத்துலயே இருக்கத் தான் பேராசை. ஆமா.. அது பேராசை தான்!.. நீ என் வாழ்நாள் வரைக்கும் என்கூடவே இருப்பியான்னு தெரியாது. ஆனா.. கோர்ட் சொல்லற வரைக்கும் உன்ன இப்படியே என் கண்ணு முன்னாடியே நிக்க வச்சு, உன்னோட ஒவ்வொரு அசைவையும் உள்ளுக்குள்ள படம்பிடிச்சு வச்சுக்கணும்.

உன்ன பார்க்கப் பார்க்கத் தான் என்னோட ஏக்கம் பெருகுது.. உன்மேல ஆசை பொங்குது.. உன்கிட்ட இருந்து தள்ளியிருந்தா நான் சரியாகிடுவேன்னு நினைச்சேன்..

கிட்ட இருந்து என்ன கொன்னெடுக்கறன்னு நினச்சேன்.

இல்ல.. நீ கிட்ட வர வரத் தான் என் ஆத்மா ஒளிருது! உன் இருப்பால தான் நான் என்னையே உணருறேன்.. ப்ளீஸ் என்கிட்டே இருந்து தள்ளிப்போயிடாதன்னு உன்கிட்ட கெஞ்சத் தோணுது.. ஆனா.. உன் எதுவா இருந்தாலும் விருப்பப்படி நடந்து தான் எனக்குப் பழக்கம்..

உன் விருப்பம் நிறைவேறும் நாள்வரைக்கும்.. உன்னைக் கண்ணார பார்க்கற சுகமே போதும்.. அதுக்குப் பிறகும் கூட.. அதுவே என் வாழ்நாளை நீட்டித்திருக்கும்..’ என்று தனக்குள்ளாகக் கூறிக்கொண்டாலும்..

“உ.. உனக்கு வேணும்னா நான் வேற ரூம் ரெடி பண்ணட்டுமா?” என்று கேட்க, சரேலென அவள் விழி உயர்த்திப் பார்க்க ஒரு கணம் திகைத்தவன், அவள் விழிகளைத் தாழ்த்திக் கொண்டு, “உன் இஷ்டம்..” என்கவும் யோசித்தான்.

தானாகவே கண் முன் வந்து அமர்ந்துகொண்டு தரிசனம் தருபவளே எதற்காகத் தனியறைக்கு அனுப்ப வேண்டும் என்று யோசித்தவன், “இல்ல.. இப்போ இம்மிடியட்டா உனக்குத் தனியா ஒரு ரூம் அரேஞ் செய்ய முடியுமான்னு தெரியல.. சோ, இங்க இந்த ரூம்லயே தங்கிக்கறியா?” என்று அவன் கேட்க, இம்முறை அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை மணி.

மாறாக, “இதுவும் உன் இஷ்டம்..” என்று அவள் கூற.. நிம்மதி பெருமூச்சு வந்தது அவனுக்கு.

‘இதே மாதிரி எல்லாத்துலயும் என் இஷ்டம்னு சொல்லுடி.. உன்ன எப்படி வச்சுக்கறேன்னு மட்டும் பாரு..’ என்றும் தறிகெட்டு ஓடியது அவன் மனம்!

உடனடியாக அவள் வேலை செய்ய இன்னுமொரு மேஜையை மட்டும் ஏற்பாடு செய்தவன், அன்றைய நாள் முழுவதும் அந்த அறையை விட்டு அகலவே இல்லை.

ஏதோ முக்கியமான வேலையாய் இருப்பவனைப் போல அந்த அறைக்குள்ளேயே இருந்து லேப்டாப்பில் நோண்டுவதைப் போல வளைய வந்தவனது கண்கள், முழு நேரமும் மணியையே மொய்த்துக் கொண்டிருந்தன.

ஆனால் அதற்கு எதிரொலியாக மணியிடமிருந்து எதுவுமே தென்படவில்லை.

தன் போக்கில் அவளும் லேப்டாப்புக்குள் தலையைப் புதைத்துக் கொண்டிருந்தாளே தவிர, இவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

மதிய உணவு வீட்டிலிருந்தே இருவருக்கும் வந்தது. வீட்டுப் பணியாள் உணவைக் கொண்டுவந்து உள்ளே வைக்கும் போதும் கூட மணி அதையும் உணர்ந்தவள் போலத் தோன்றவில்லை.

அப்படி என்ன தான் இவள் வடிவமைக்கிறாள் என்ற ஆர்வம் ராகவுக்கு அதிகரித்தாலும், அதை அவளிடம் இயல்பாய் கேட்க முடியவில்லை அவனால்.

திருமணத்திற்கு முன் எந்தளவிற்கு இருவரும் சண்டைபோட்டுக் கொண்டே நெருக்கமாய் இருந்தார்களோ.. இப்பொழுது அவ்வளவுக்கவ்வளவு இருவரும் விலகி இருக்கிறார்கள்.

நரக நிலை என்றால் என்னவென்று இப்பொழுது தான் முழுமையாக உணர்ந்தார்கள் இருவருமே!

பணியாள் உனவு வைத்துவிட்டுச் சென்றபிறகும் கூட மணி, நிமிராததைக் கண்டு ராகவ் அவளை அழைத்தான்.

“மணி..” என்று அவன் தொண்டையைச் சரி செய்துகொண்டு அழைக்க, அவளை இப்போழுதும் இமை உயர்த்தி மட்டுமே அவனைப் பார்த்தாள்.

“சாப்பிடலாம்.. நேரமாகிடுச்சு..” என்று அவன் தயங்கிய குரலில் கூற, வெளியே தோன்றாதபடிக்கு ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள், சம்மதமாய் தலையசைத்து, அந்த அறையுடனே இணைக்கப்பட்டிருந்த கழிவறைக்குச் சென்று முகத்தை நீரால் நன்றாக அடித்துக் கழுவிவிட்டு வந்தாள்.

அதற்குள் ராகவ் அங்கே இருந்த உணவு மேஜையில் உணவை எடுத்துப் பிரித்து வைத்திருக்க, அவனது இருக்கைக்கு எதிர்ப்புறமாக அமர்ந்தவள், தனது தட்டை எடுத்துக் கொறிக்க ஆரம்பித்தாள்.

ராகவும் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே உண்ண ஆரம்பித்திருக்க, ஒரு பத்து நிமிடம் அந்த அறையே மயான அமைதியில் இருந்தது.

அடுத்த பதினொன்றாவது நிமிடத்தில், சாப்பாட்டுத் தட்டைத் தொப்பென்று மேஜையின் மீது வைத்தவள், ராகவ் அவளை அதிர்ந்து நோக்கவும்,

“இது என்னால முடில.. அது தான் ரெண்டு பேரும் பிரிஞ்சுடலாம்னு டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணியாச்சுல்ல? இனியும் எதுக்காக இப்படி சோக கீதம் வாசிச்சுட்டு இருக்க?

புருஷன், பொண்டாட்டியாபேசிக்க வேணாம்.. அட்லீஸ்ட் ஒரு காசினா.. இல்ல, கூட வேலை செய்யற கலிக்கா கூட என்கிட்டே பேச முடியாதா உன்னால?

என்ன பார்த்தா அவ்வளவு வெறுப்பா இருக்கா?

என் மேல வெறுப்புன்னா எதுக்கு என்ன கல்யாணம் செய்யச் சம்மதிச்ச?” என்று சம்மந்தமே இலலாமல் அவனிடம் காய, ராகவுக்கோ இப்பொழுதும் ஒன்றுமே புரியவில்லை.

“இ.. இல்ல மணி.. உ.. உனக்குப் பிடிக்காதேன்னு தான்..” என்று அவன் திணற.. அவளோ.. “என்கிட்டே சாதாரணமா பேசு.. பிடிக்கலைன்னா மூஞ்சிக்கு நேரா சொல்லிடறேன்.. அதுக்கப்பறம் நீ ஒன்னும் பேச வேண்டாம்..” என்று அவள் அதற்கும் எகிற, ராகவோ..

‘ஆங்.. இது நல்ல கதையா இருக்கே?! இவ பேசுன்னா பேசறதுக்கும்.. வேணாம் போன்னு சொன்னா உடனே நான் போறதுக்கும் நான் என்ன இவ வளர்க்கற அந்தக் குட்டி நாயா?

அந்த நாயே இவ பேச்சைக் கேட்காம இவளைப் பலமுறை கடிச்சிருக்கு.. அந்தக் கோபத்துல இவளே அந்த நாய திருப்பிக் கடிச்சிருக்கா.. இப்போ என்னையும் ஆட்டிவைக்க நினைக்கறா..’ என்று செல்லமாகவே மனசுக்குள் நினைத்துக் கொண்டான்.

ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது வெளிப்படையாக அவனால் செய்ய முடிந்தது.. அவள் கூறியதற்கு இசைவாகத் தலையசைப்பது மட்டும் தான்!

“சரி மணி.. இப்போ சொல்லு.. நீ முதல்ல இந்தச் சாம்பார் சாப்பிடறியா? இல்ல பொரியல் சாப்பிடறியா?” என்று அவன் கேட்க, இப்பொழுதும் அவனை முறைத்தாள் அவள்.

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.. எனக்குத் தெரியும்டி.. உனக்குக் காய்கறின்னாலே பிடிக்காதுன்னு.. ஆனா இப்படி நீ பிடிக்காது.. பிடிக்காதுன்னு சொல்லிச் சாப்பிடாம இருக்கறதால தான் உனக்கு உடம்புல ஸ்ட்ரென்த்தே இல்ல.. அப்பப்போ கை வலி.. கால் வலி படுத்துக்கற..” என்று அவன் கூற, அவளோ மீண்டும் முறுக்கிக் கொண்டு..

“இதுல எல்லாம் தலையிட உனக்கு உரிமை இல்ல..” என்றாள் முகத்தைத் திருப்பிக் கொண்டு!

அதில் மண்டை காய்ந்த ராகவோ.. ‘இனிமே சினிமால எவனாவது காதல் புனிதமானது.. புடலங்காயானதுன்னு சொல்லுங்க.. உங்க மண்டைய பொளக்கறேன்..’ என்று வைதவன், மணியிடம் எழுந்து சென்று..

“ஏய்.. இங்க பாரு.. நானும் சின்னப்பொண்ணு போனா போகுதுன்னு அமைதியா இருந்தா ஓவரா பண்ணிட்டு இருக்க?

இந்த ராகவ பழையபடி மாத்திராத.. அது உனக்குத் தான் நல்லதில்லை..

உன்கிட்ட இப்ப எனக்கு இருக்கற உரிமை, வேற யாருக்கும் கிடையாது. ஒழுங்கா நீயே சாப்பிடறியா.. இல்ல நான் ஊட்டிவிடட்டுமா?” என்று தன்னையும் மீறி எகிறியவனுக்கு, நிதர்சனம் உணர்ந்து நெஞ்செல்லாம் பக்.. பக் என்று அடித்துக் கொண்டது.

‘ஹய்யயோ.. தெரியாத்தனமா கோபப்பட்டுடனே.. இப்போ இவ கோவிச்சுட்டு எழுந்து போய்ட்டா.. நான் என்ன செய்வேன்?’ என்று அவன் பதறியபடி மணியைத் தவிப்புடன் பார்க்க.. அவளோ இவனை முறைத்தபடி பொரியலை எடுத்து அவள் தட்டில் கவிழ்த்துக் கொண்டிருந்தாள்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
12
+1
4
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்