Loading

அத்தியாயம் – 11

“ஏய்… என்னடி… நேத்து இந்நேரம் இங்க வந்துட்டு, இன்னைக்கு இந்நேரம் திரும்பிப் போகணும்னு சொல்லற?” என்று பாட்டி கூற, சலிப்புடன் பெருமூச்செறிந்தவள்,

“அப்போ ரெண்டு நாள் முன்னாடி நான் இங்க தான இருந்தேன்? என்ன பாட்டி லாஜிக் இது?” என்று முகத்தைச் சுளித்தாள்.

அதில் பாட்டிக்குக் கோபம் வந்தாலும், மானபரன் இவளது மனம் நோக ஏதாவது கூறியிருப்பானோ என்று அச்சமடைந்தார்.

திருமணத்திற்கு முன்பு அண்ணனும், தங்கையும் விளையாட்டாய் பேசிக்கொள்வது வேறு. ஆனால்… திருமணத்திற்குப் பிறகு உடன்பிறந்த தங்கையாய் இருந்தாலும், அண்ணன் விளையாட்டாய் கூறுவது சில சமயங்களில் காயப்படுத்துவதாக அமைந்துவிடுவதும் உண்டு தானே?

அதுபோல மானபரன் ஏதேனும் விளையாட்டுக்குப் பேசி… அது ராகவையோ, அல்லது இவளையே தானோ காயப்படுத்தி இருந்தால்… என்ற எண்ணத்தில், “ஏன் மணி? இங்க இருக்க உனக்குப் பிடிக்கலையா?

இங்க யாராலயாவது ஏதாவது பிரச்சனையா?” என்று அவர் வருத்தத்துடன் கேட்க, ‘எல்லாம் உங்க பேரனால தான்…’ என்று அலட்சியமாய் கூற நினைத்தவள், சட்டெனச் சுதாரித்தாள்.

“இல்ல பாட்டி… பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல… சும்மா வீட்டுலயே இருந்து போர் அடிக்குது… அங்க மாமா கடைக்குப் போய் வேலை செய்யலாம்னு இருக்கேன்.

புதுசு புதுசா ஐடியா தோணுது… நிறைய நிறைய டிசைன் பண்ணனும்னு மூளை பரபரன்னு இருக்கு…” என்று அவள் கண்களில் கனவுகள் பளபளக்கக் கூற, பாட்டிக்கு இதுவும் உவப்பாக இல்லை தான்!

புதிதாய்த் திருமணமான தம்பதிகள் தங்களுக்குள் தனித்து நேரம் செலவிடத் தான் விரும்புவார்கள்.

இப்பொழுது ராகவும் கூட இங்கே இவளுடன் தான் இருக்கிறான். அவர்களின் தனிமைக்கு நிச்சயமாய் இங்குக் குறுக்கீடு என்று எதுவுமே இல்லை!

ஆனால் ஏன் இவள் உடனடியாக ராகவ் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறாள் என்று அவருக்குப் புரியவே இல்லை.

ஆனாலும் அவளது பிடிவாதம் தாளாமல் அவளைத் திருப்பி அனுப்ப முடிவு செய்தார்.

ஆனாலும் கிளம்பும்போது… “பாட்டி… இங்க நீங்கத் தனியா இருந்து என்ன செய்யறீங்க? அங்க என் கூட வந்துருங்களேன்…” என்று அவள் சற்று குரல் தழுதழுக்கக் கூற, பாட்டிக்கும் கண்கள் கலங்கின.

மெல்லத் தலையசைத்து… “இல்ல மணி… இங்க உன் அண்ணன் இருக்கானே… அவனைத் தனியா விட்டுட்டு எப்படி வர முடியும்?” என்று கேட்க, அதில் இருக்கும் நியாயம் உணர்ந்தாலும் மனம் தான் அதை ஏற்க மறுத்தது.

“நான் தனியா அங்க போறேன்ல?” என்று மணி மீண்டும் பாட்டியை அழைக்க, அவரோ திடமான முகத்துடன்…

“தனி என்ன தனி? சின்னதுல இருந்து உன்ன வளர்த்த உன் அத்தை, மாமா எல்லாம் அங்க தான இருக்காங்க?

அதைவிட… நீ உன் புருஷன் கூட, அவன் வீட்டுக்குத் தான் போற. உன் புருஷன விட உனக்கு யார் துணையா இருக்க முடியும்?” என்று அவளது கண்களை நேராய் பார்த்துக் கேட்க, மணியால் தான் பாட்டியின் கண்களை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

தலையை மட்டும் அசைத்துவிட்டு அவள் கிளம்ப, பின்னாடியே மலர்ந்த முகத்துடன் வந்து பாட்டியை அணைத்த ராகவோ…

“பாட்டி… மணி பிறந்ததுல இருந்து நீங்க, என் அம்மா, அப்பா மட்டுமில்ல… எனக்கும், மனோவுக்கு பிடிக்கலைனாலும் நம்ம எல்லோரோட ஒவ்வொரு எண்ணமும், செயலும், அது சார்பான முடிவுகளும் மணியைச் சார்ந்து தான் எடுக்கப்பட்டிருக்கு.

அவளுக்குப் பிடிச்சது மட்டும் தான் நம்ம குடும்பத்துல நடந்திருக்கு.

மணி எனக்கு மனைவியா ஆகலேன்னாலும் கூட அவளோட மனசை புரிஞ்சுகிட்டு, அவளுடைய விருப்பப்படி தான் நான் காலம் முழுமைக்கும் இருந்துருப்பேன்.

இப்போ அவ என் பொண்டாட்டியாவே ஆகிட்டா.. நான் அவளைச் சும்மா விட்டுடுவானா? எதுக்கு கவலை? எதுக்கு இத்தனை பயம்?

நல்லதே நினைங்க.. நல்லதே நடக்கும்..” என்று பொதுவாகக் கூறுவது போல நீண்டதொரு விளக்கம் கொடுத்தவனை நிம்மதியாகப் பார்த்தார் பாட்டி.

“ஆமா ராகவா.. எனக்குப் புரியுது.. வீட்டுக்கு ஒரே பொண்ணு.. பெரியவங்க எல்லாருக்குமே அவ தான் செல்லம். அதனாலேயே பயமும் அதிகமா இருக்குடா..

நீ தான் மூத்தவன்.. சின்னதுங்க இன்னமும் வளர்ந்த மாதிரியே தெரியல.. நீ தான் பார்த்துக்கணும் தம்பி..” என்று அவர் கூற, ராகவோ அவரது கரத்தை இறுக்கப் பற்றி விடுவித்தான்.

அந்தத் தொடுகையே பாட்டிக்கு உள்ளுக்குள் நம்பிக்கையைப் பிறக்க வைத்தது.

ஆனால் அந்த நம்பிக்கை, அன்றைய இரவே கெட்டுப் போகும் என்று அவர் அப்போது நிச்சயமாக அறிந்திருக்கவில்லை.

மறுவீடு போய், அடுத்த நாளே திரும்பி வந்தவர்களைப் பார்த்தது தேவகி முறைத்துக் கொண்டிருந்தார்.

“டேய்.. மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க?

இங்க சொந்தக்காரங்க வரது, போறதுன்னு உங்கள தொந்திரவு செய்துட்டு இருப்பாங்க.. பாட்டி வீட்டுக்குப் போய் ஒரு வாரம் தங்கியிருந்துட்டு, அங்கிருந்து அப்படியே எங்கயாவது ஹனிமூன் போயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பினா.. இப்படி மறுநாளே திரும்பி வந்துட்டீங்க?” என்று அவர் கோபத்துடன் கேட்க, ராகவோ தோளைக் குலுக்கிவிட்டு அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

ஆனால் மணி தான் தேவகியிடம் நன்றாக மாட்டிக் கொண்டாள்.

ஏன் அடுத்த நாளே திரும்பி வந்துவிட்டார்கள். இருவருக்கும் ஏதாவது சண்டையா? என்று அது இதென்று கேட்டுத் துளைத்தெடுத்துவிட்டாள்.

பாவம் மணியும் தான் என்ன சொல்லுவாள்?

‘உங்க பையன் கூட ஒரே ரூம்ல இருக்கப் பிடிக்காம தான் இங்க ஓடி வந்துட்டேன்..’ என்றா சொல்ல முடியும்?

எனவே அவரது மனதுக்கு உகந்தபடியாக..

“இந்த ஒரு வாரமா எல்லாரும் ஒரே கலகலன்னு இருந்துட்டு இப்போ அங்க தனியா இருந்தது ஒரு மாதிரி லோன்லியா இருந்தது அத்தை.. அதான் வந்துட்டோம்..” என்று அவள் கூற, இதுவும் அவருக்கு மனதுக்கு உவப்பாக இல்லை.

‘என்ன கூறுகிறாள் இந்தப் பெண்? திருமணமான புதிதில், கூட்டத்தில் கூடத் தாங்கள் இருவரும் தனித்திருப்பதாய் தானே புதுமணமக்கள் இருவருக்கும் தோன்றும்?

ஆனால் இவளோ, தனியாக அனுப்பியும் கூட, அங்கே தனித்திருக்கப் பிடிக்காமல் இங்கே திரும்பிவிட்டதாகக் கூறுகிறாளே?! கடவுளே?..’ என்று பதறினார் அவர்.

ஆனாலும் எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல்.. அவள் கூறியதை ஏற்றுக் கொண்டதை போல் காட்டிக் கொண்டவர்.. அவ்விடம் விட்டு அகன்று சென்றார்.

தேவகியிடம் பேசிவிட்டு தனது மாமாவைச் சந்திக்கச் சென்றாள் மணி.

பாலாஜி அன்று அவரது நகைக்கடைக்குச் செல்லவில்லை. எனவே அவரது அறையில் தான் இருந்தார் அவர்.

அவரது அறைக்கதவைத் தட்டிவிட்டு அவள் உள்ளே செல்ல.. கணினியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவர், அவளை நிமிர்ந்து பார்த்தார்.

“வாம்மா.. என்ன விஷயம்? உன்னோட டிசைன்ஸ் எல்லாம் அதுக்குள்ளே என் மெயிலுக்கு அனுப்பியிருக்க?” என்று கேட்க, தயங்கியபடியே வந்து படுக்கையில் அமர்ந்திருந்த அவருக்கு எதிரில் இருந்த ஒரு மோடாவில் அமர்ந்தபடி..

“மாமா.. அது வந்து.. எனக்கு.. எனக்கு நம்ம கடைல ஒரு வேலை வேணும்..” என்றாள் தலை நிமிராமல்.

அவள் கூறிய செய்தியில் பாலாஜியின் கண்களில் ஆச்சர்யம் தென்பட்டது!

“எ.. என்ன சொன்ன? மாமாவை ஏதாவது பிராங்க் செய்யறியாடா?” என்று கேட்டு மென்மையாக அவர் சிரிக்க, மணியோ செல்லக்கோபம் கொண்டு..

“மாமா.. நான் விளையாடல.. நீங்களும் விளையாடாதீங்க.

எனக்கு.. எனக்கு இப்படி வீட்டிலேயே இருக்க முடியாது. அதனால தான் கேட்கறேன்.. எனக்கு ஒரு வேலை போட்டுக் கொடுங்க. நான் ஒன்னும் உங்ககிட்ட சும்மா கேட்கல.

நிஜமாவே எனக்கு டேலண்ட் இருக்கு.. இதோ இதெல்லாம் நான் காலேஜ் பர்ஸ்ட் இயர்லயே டிசைன் பண்ணினது.

நிறைய காம்பெடிஷனலையும் கலந்துக்கிட்டு பரிசு வாங்கியிருக்கேன்.. இதோ.. இதெல்லாம் அதுக்கான செர்டிபிகட்ஸ்.. இதெல்லாம் உங்களுக்கும் முன்னாடியே தெரியும்.. நீங்க ஆயிரம் முறையாவது இதையெல்லாம் பார்த்துருப்பீங்க..” என்று தான் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்த புகைப்படங்களை எல்லாம் காண்பித்தாள்.

அதைப் பெருமையுடன் மீண்டும் பார்த்த பாலாஜியோ..

“ஹா.. ஹா.. நான் அதுக்கு சொல்லலடா.. நேத்து தான் கல்யாணம் ஆகியிருக்கு.. இன்னைக்கே வந்து வேலைக்குக் கேட்கறியே.. அதைத் தான் கேட்டேன்.

ஏன்? இப்போ வேலைக்கு என்ன அவசரம்?” என்று அவர் மீண்டும் நிதானமாகக் கேட்க, அவரிடம் எந்த மழுப்பலும் எடுபடாது என்று உணர்ந்தவள்..

“மாமா.. வந்து..” என்று தன்னையும் அறியாது திணறிவிட்டு.. அந்தத் திணறலை ஒரு பெருமூச்சுடன் கலைத்துவிட்டு தானே தொடர்ந்தாள்.

“இல்ல மாமா.. எனக்குச் சில குழப்பங்கள்.. இங்க வீட்டிலேயே இருந்தேன்னா, சுத்தமா பைத்தியம் பிடிச்சுடும்.. கூடவே நான் இதுக்காகத் தான படிச்சும் இருக்கேன்? சோ ஒரே கல்லுல ரெண்டு மங்கா..” என்று கூறிக் கண்ணடித்தாள்.

அதை பார்த்துச் சற்று சிரித்தவர்.. “ஹா.. ஹா.. என்ன குழப்பம் உனக்கு? இப்படி கல்யாணம் முடிஞ்ச கையோட வீட்டுல இருக்கப் பிடிக்காம, வேலைக்குப் போக நினைக்கற?” என்று கேட்க, அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

அதுவும் அவரிடம் எப்படிச் சொல்வது என்றும் புரியவில்லை. எனவே எதுவும் பேசாது அவள் தலை குனிந்து அமர்ந்திருக்க, எட்டி அவளது தலையைத் தடவியவாறு..

“சரிடா மணி.. அலங்கார் குரூப்போட நாலு கடையும், இந்த ஆபர்ணா குரூப்போட நாலு கடையும் உனக்குத் தான் சொந்தம். எல்லா கிடைக்குமே நீ டிசைன் பண்ணு..

உனக்கு எப்போதுல இருந்து வேலை செய்யணும்னு தோணுதோ அப்போ வேலைய ஆரம்பி..

ஆனா ஒண்ணே ஒன்னு.. நாளைக்கே நீ கடைக்கு வர வேண்டாம். ராகவ் எப்போ கடைக்கு வர ஆரம்பிக்கறானோ, அப்போ.. அவன்கூட நீ வந்தா போதும்!” என்று அவர் கூற, அவர் தன்னை வேலைக்கு எடுத்துக் கொண்டதே பெரும் நிம்மதியாய் போனது அவளுக்கு.

அன்றைய நாளும் அதன் பிறகு நல்லபடியாகத் தான் போனது மணிக்கு.

கூடவே வந்திருந்த விருந்தினர் அனைவரும் ஒவ்வொருவராகக் கிளம்ப, மணிக்குச் சற்று இலகுவாகவும் இருக்க இருக்க முடிந்தது அவளால்.

ஆனால்.. பகலென்று ஒன்று இருந்தால்.. இரவும் வரத்தானே செய்யும்?!

புவியின் சுழற்சி வழக்கம்போல, பகல் முடிந்து இரவைத் தத்தெடுத்தது!

தன்னை ஒரு பார்வை பார்த்தபடி தனது அறைக்குள் சென்ற ராகவனைப் பார்க்க, உள்ளுக்குள் என்னவென்றே புரியாத படபடப்பு வந்து ஒட்டிக்கொள்ள.. ‘ஹையோ.. நேத்து என் வீட்டுலையே இவன் அப்படி நடந்துக்கிட்டான்!

இங்க.. இது அவன் வீடு! அவன் ரூம்! இங்க எப்படி நடந்துப்பான்? நான் என்ன செய்வேன்?’ என்று வெகுநேரம் அறைக்குள் செல்லாது ஹாலிலேயே அமர்ந்து நகத்தைக் கடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தவளை, தேவகியின் குரல் தான் கலைத்தது.

“மணி, நேரமாச்சு பாரு.. போ.. சீக்கிரம் போய்த் தூங்கு..” என்று அவர் கூற, இப்பொழுது அவளது கை, கால்களெல்லாம் வெடவெடுக்கவே தொடங்கிவிட்டன!

மணியை அவளது அறைக்குச் செல்லும்படி கூறிவிட்டு, தேவகியும் தனதறைக்குள் புகுந்துகொண்டார்.

அறைக்குள் நுழைந்ததுமே பாலாஜி, மணி தன்னிடம் வேலை கேட்ட விவரத்தைக் கூற, தேவகியின் மனதிற்குள், என்னவோ ராகவுக்கும் – மணிக்கும் இடையில் ஏதோ சரியில்லை என்ற எண்ணம் அழுத்தமாக விழுந்தது.

அவர் புருவம் சுருக்கி யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவர்களது அறைக்கதவு தட்டப்பட, பாலாஜி எழுந்து சென்று கதவைத் திறக்க, அறை வாயிலில் நின்றிருந்த மணியைப் பார்த்துச் சற்று அதிர்ந்தார்.

“எ.. என்னம்மா இந்த நேரத்துல?” என்று அவர் தனது அதிர்ச்சியை மறைக்க முயன்றபடி கேட்க, மணியோ..

“சாரி மாமா.. நான் அத்தைகிட்ட தான் கொஞ்சம் பேசணும்..” என்றபடி அறைக்குள் வந்தாள்.

வந்தவள், நேராக வந்து சலுகையாக தேவகியின் மடியில் படுத்துக்கொள்ள, அவரோ வாஞ்சையுடன் அவளது தலையைத் தடவியபடி..

“என்னடா? தூக்கம் வரலையா? பாட்டி ஞாபகமா?” என்று கேட்க, மெல்ல மறுப்பாய் தலையசைத்தவள்.. சற்று தயங்கியபடி..

“அ.. அத்தை.. நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்கமாட்டீங்களே?” என்று கேட்க, அப்பொழுது சாதாரணமாகத் தான் தேவகி, “சொல்லுடா..” என்றார்.

ஆனால் மணி, “நான் இங்கயே தூங்கட்டுமா?” என்று கேட்ட கேள்வியில் அவரது நெஞ்சம் தூக்கிவாரிப் போட்டது.

தவிப்புடன் கணவரை ஏறிட்டவர், பாலாஜி விழிகளாலேயே தைரியம் கூறி, என்னவென்று விசாரிக்கும்படிக் கூறவும்..

“ஏண்டா.. உன் ரூம் என்னாச்சு?” என்று முயன்று வருவித்த சாதாரணக் குரலில் கேட்க, மணியிடம் அரை நொடி மௌனம்!

பிறகு, “இ.. இல்ல அத்தை.. எ.. எனக்கு.. கொ.. கொஞ்சம் டைம் வே.. வேணும்..” என்று திக்கித் திணறியவள், கடைசியில் கூறியே முடித்துவிட.. தேவகியின் பார்வை மீண்டுமாய் பாலாஜியை அலைப்புறுதலாய் நோக்கியது.

அவரது, “இப்பொழுது விட்டுவிடு.. பிறகு பார்த்துக்கொள்ளலாம்..” என்று மீண்டும் பார்வையிலேயே தைரியத்தைக் கடத்த, தேவகியோ அவளிடம் வேறு எதுவும் பேசாது, அவளை அப்படியே தட்டிக் கொடுத்து உறங்கவைத்தார்.

கணவரும், மனைவியும் என்ன செய்வது.. மணிக்கும், ராகவுக்கும் இடையே என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, ராகவே அந்த அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான்.

வந்தவன் மணி, தேவகியின் மடியில் படுத்து உறங்குவதை ஒரு கணம் கண்கள் இடுங்கப் பார்த்துவிட்டு, சரேலெனத் திரும்பிச் சென்றுவிட, தேவகியின் மனதில் சுருக்கென்று ஒரு வலி மிகப் பலமாய் தாக்கியது!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
18
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்