அத்தியாயம் 1
ஆழ்கடலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆதவன் மெல்ல எழுந்து வந்து தன் கதிர்களைப் பரப்பி வானத்தை வெட்கத்தால் சிவக்க வைத்துக் கொண்டிருந்த காலை நேரம்.
அதிக வெயிலும் இல்லாமல் மேகமூட்டமும் இல்லாமல் இருந்த அந்த காலை வேலை அரை ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த மைதானத்தைச் சுற்றி இளவட்டங்களும் குமரிப்பெண்களும் குழந்தைகளும் சில நடுத்தர வயதினர் என மக்கள் கூட்டங்கள் நிறைந்திருந்தது. அதில் ஒருபுறம் போடப்பட்டிருந்த மேடையில் இரண்டு மூன்று பெரிசுகள் மீசையைத் திருக்கி விட்டு கொண்டும் இரண்டு பேர் வெள்ளை வேஷ்டி சட்டையில் கட்சிக்காரர்கள் போல் அமர்ந்திருந்தனர்.
ஏன் இத்தனைக் கூட்டம் அந்த மைதானத்தில் என்றால் அந்த ஊரின் ஊர்காவல் தெய்வம் அய்யனார் கோவிலின் திருவிழாவை முன்னிட்டு அந்த ஊர் இளவட்டங்களுக்கான கபடி போட்டி நடந்து கொண்டிருந்தது.
இரண்டு கபடி குழுவில் உள்ள ஆட்களும் வியர்க்க விறுவிறுக்க ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் விளையாடிக் கொண்டிருந்தனர். கபடி குழுவில் உள்ள இளவட்டங்களை ரசிப்பதற்ககாவே வந்திருந்த தன் காதலிகளையும் முறைப் பெண்களையும் கடைக்கண்ணால் நோட்டம் விட்டுக் கொண்டே விளையாடினர்.
தன் குழுவில் தன்னைத் தவிர அனைவரும் அவுட் ஆகியதால் தான் மட்டும் தான் இருக்கிறோம். அதனால் நாம் யாரையாவது தொட்டே ஆகவேண்டும் என்று “கபடி.. கபடி…” என்று காட்டாற்று வெள்ளமாய் எதிர்த்து நிற்கும் கூட்டத்தில் ஒருவனை மட்டும் குறிவைத்து பாடிச் செல்கிறான் தமிழரசு.
எதிரில் தன்னை மட்டுமே நோக்கி அவன் வருவதை உணர்ந்தவன் அந்தக் காட்டாற்று வெள்ளத்தையே புரட்டிப் போடும் புயல் காற்றாய் பறந்து வந்து அவன் கழுத்தை வளைத்துப் பிடித்து அமுக்கினான் வெற்றிமாறன்.
அவன் வளைத்துப் பிடிக்கவுமே “மாமா.. மாமா விடாத புடி புடி…” என்று கூட்டத்தில் மயிலின் சாயலில் புள்ளி மானாய் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி.
தமிழரசு ஒரு வினாடி குரல் வந்த திசையை நோக்கித் திரும்பவும் அந்த நேரத்தைப் பயன்படுத்தி அவன் திமிற திமிற பிடியை இறுக்கி அவனை வளைத்துக் கீழே அமுக்கவும் வெற்றிமாறனின் குழுவில் உள்ள மற்றவர்கள் வந்து அமுக்கவும் தமிழரசால் கோட்டைத் தொட முடியாமல் அவுட் ஆகவும் வெற்றிமாறன் குழு வெற்றி பெற்றது.
குழுவில் உள்ள மற்றவர்கள் ஏஏஏஏஏ… என்று வெற்றிமாறனைத் தூக்கி சுற்றினர். “டேய் போதும்டா விடுங்க.. இறக்கி விடுங்க” என்றான்.
அவர்கள் இறக்கி விடவும் தமிழரசைப் பார்த்து “மண்ணை பார்த்து விளையாடும் போது பொண்ணை பார்த்து விளையாண்டா இப்படி தான் மண்ணைக் கவ்வ வேண்டி வரும். ஒழுங்கா வீடு போயி சேரு” என்று நக்கலாக மொழியவும் “சே…” என்று தரையை எட்டி உதைத்து மண்ணைக் கிளறிவிட்டுச் சென்றான் தமிழரசு அந்த மைதானத்தில் இருந்து.
பின் மேடையில் இருந்த போட்டிக்குத் தலைமை தாங்க வந்திருந்த கட்சிக்காரர் ஒருவர் கோப்பையை வெற்றி பெற்ற அணிக்கு வழங்கினார்.
பின் கோப்பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழையவும் அங்கு ஏற்கனவே பூங்குழலியின் சத்தம் வாசல் வரைக் கேட்டது.
‘இவ இங்க தான் இருக்காளா!’ என்று நினைத்து விட்டு “அடியே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?. அத்தனைக் கூட்டத்துல ஆம்பளப் பையன் மாதிரி விசில் அடிச்சுக் கத்திட்டு இருக்க. எல்லாரும் உன்னைத்தான் பாத்துட்டு இருந்தாங்க. பொட்டப்புள்ளை மாதிரி அடக்க ஒடுக்கமா இரு”.
“போ மாமா.. ஏன் பொண்ணுங்க விசில் அடிக்கக் கூடாதுனு சட்டம் இருக்கா என்ன?. நான் உன்னை எவ்வளவு என்கரேஜ் பண்ணேன். அதான் நீ ஜெயிச்சுருக்க தெரிஞ்சுக்க” என்றாள் உதட்டைச் சுழித்து.
அவள் தலையில் தட்டி விட்டு “ஆமா இவ என்கரேஜ் பண்ணி நாங்க ஜெயிச்சுருக்கோம். போடி” என்று விட்டு ஹாலில் அமர்ந்தான்.
ஹாலில் அமர்ந்து வெத்தலையை இடித்துக் கொண்டிருந்த வெற்றிமாறனின் அப்பத்தா முத்தம்மாள் “அடி போடி இவளே… என் பேரன் மொத்த ஊரே வந்தாலும் தோற்கடிச்சுருவான் சிங்கம் மாதிரி. என்னமோ இந்த பொட்டச் சிறுக்கி என்கேஜ் பண்ணாலாம் என் பேரன் ஜெயிச்சுட்டானாம்” என்றார் என்கரேஜ் என்பதை என்கேஜ் என்று.
“ஏய் கிழவி உன் பேரனுக்கு உடனே கொடி புடுச்சுட்டு வந்துருவியே. வெத்தலை இடிக்குற வேலையை மட்டும் பாரு என் மாமனை நான் பாத்துக்குறேன்”.
“அடியே யாரடி கிழவிங்குற. சுழிக்குற உதட்டை அறுத்துப் போடுவேன் பாத்துக்க. நீ என்ன அவன் பொண்டாட்டியா பாத்துக்க?”.
“ஆமா என்னைக்கு இருந்தாலும் நான் தான் இந்த வீட்டுக்கு மருமகளாக வரப்போறேன் பாரு” என்று சொல்லி “என்ன மாமா?” என்று வெற்றியின் தோளில் இடிக்கவும் “ரெண்டு பேரு சண்டைல என்ன ஏன்டி இடிக்குற?” என்று விட்டு “அம்மா தாகமா இருக்கு மோர் எடுத்துட்டு வாங்க” என்கவும் அவன் அம்மா கனிமொழி “இந்தா எடுத்துட்டு வர்றேன் வெற்றி” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தார்.
“வருவடி வருவ.. நீ மட்டும் என் வீட்டுக்கு மருமகளா வா உன் இடுப்பெலும்பு உடையுற அளவுக்கு வேலை வாங்குறேன். என் பேரனுக்கெல்லம் வெள்ளைக்காரி கணக்கா பொன்னு பாக்கலை பாரு” என்றார் முத்தம்மாள் பாட்டி.
“ம் பாக்கலாம் பாக்கலாம் உன் பேரன் ரொம்ப சிவப்பாக்கும் வெள்ளைக்காரி கணக்கா பொண்ணு கிடைக்க” என்று பூங்குழலி சொல்லிக் கொண்டிருக்கையிலே “இந்தாயா வெற்றி மோரு” என்று கொடுத்து விட்டு “ஏன்டி அவங்க பெரியவங்க சொன்னாங்கனா நீயும் வாய்க்கு வாய் பேசிட்டு இருக்க. உனக்கு வாய் கொஞ்சம் அதிகமாயிடுச்சு” என்று காதைத் திருகினார் கனிமொழி.
“ஆஆஆஆஆஆ… வலிக்குது அத்தை விடுங்க விடுங்க” என்ற அவள் கத்தலில் அவர் காதை விடவும் “எனக்கு மாமியார் நீங்க இல்லை இந்த கிழவி தான்” என்று பாட்டியை ஒரு இடி இடித்து விட்டு ஓடி விட்டாள்.
“நீங்க என்ன சொன்னாலும் இவக் குறும்பு குறையாதும்மா” என்றான் வெற்றி.
“இந்த மாதிரி பொண்ணு வீட்ல இருந்தா வீடும் கலகலப்பாக இருக்கும். உனக்கப்புறம் பொறந்தவ இருந்திருந்தா இவ வயசு தான் இருக்கும். நல்லா துருதுருனு இருப்பா” என்று வெற்றிக்குப் பின் பிறந்து இறந்து போன எட்டு மாத பெண் குழந்தையை நினைத்துக் கண்கலங்கினார். வெற்றிக்கும் கண் கலங்கியது.
“அடி யாருடி இவ என் ராசாவையும் அழுக வச்சுக்கிட்டு. அதுக்கு அவ்ளோ தான் விதி போயிருச்சு. உனக்கு பொம்பளைப் புள்ளையை வச்சு அழகு பாக்கனும்னா வரப்போற மருமகளை வச்சு அழகு பாரு. உன் மகனுக்கு பொறக்க போற பேத்தியைக் கொஞ்சு. அதுக்கு சீக்கிரமே என் ராசாவுக்கு ஏத்த மகராசியைத் தேடுங்க. இப்பவே ஆரம்பிச்சா தான். கல்யாண வயசு வந்துருச்சுல. இதுக்கு மேலயா கல்யாணம் பண்ண வயசு வேனும்”.
“ஏன்யா வெற்றி நம்ம குழலியவே உனக்கு பார்ப்போமே. எதுக்கு வெளில போய் தேடனும்” என்றார் கனிமொழி.
“எம்மா அந்தப் புள்ளை வயசென்ன என் வயசென்ன. அதுவும் படிச்சிட்டு இருக்குற புள்ளைய போய் எனக்கு கட்டி வைக்கனும்ங்குற. சிறுசுல இருந்து அது நம்ம வீட்லயே இருந்து தூக்கி வளர்த்து அதை தங்கச்சி மாதிரி தான்மா பார்க்க முடியுது. எனக்குனு ஒருத்தி புதுசாவா பொறக்க போறா. பொறுமையா பாருங்க ஒன்னும் அவசரம் இல்லை” என்று உள்ளே சென்று விட்டான்.
“ம்ம் என் வீட்டுக்கேத்த மகராசி எங்க இருக்காளோ” என்று பெருமூச்சு விட்டார்.
சென்னை டிராபிக்கில் தன் பின்னால் அமர்ந்திருந்த தோழி எவ்வளவு சொல்லியும் ஓவர் ஸ்பீடில் வண்டியில் சென்று கொண்டிருந்தாள் மதிவதனி.
“அடியே கொஞ்சம் மெதுவா போடி.. ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் சோ பாக்கனும்னு என்னைய பாடைல ஏத்திடாத” என்று பின்னால் அமர்ந்திருந்த வைஷ்னவி கத்திக் கொண்டிருந்தாள்.
“போடி ஆல்ரெடி லேட் ஆயிடுச்சு. தலைவர் படத்தை ஃபர்ஸ்ட் சோ பாத்துடனும்னு நானே கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கிருக்கேன். வீட்ல எங்க அம்மாவ சரிகட்டிட்டு வர்றதுக்குள்ள லேட்டாகிடுச்சு. அண்ணாத்த பட ட்ரெயிலர்லே தலைவர் சும்மா செம ஸ்டைலா இருந்தாரு. போறோம் மாஸ் காட்டுறோம்” என்று எப்படியோ யாருக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் தியேட்டர் வந்து சேர்ந்து விட்டார்கள் இருவரும்.
சென்னையில் உள்ள அந்த பிரபலமான மாலில் உள்ள தியேட்டரில் எங்கு திரும்பினாலும் இளைஞர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பின்ன சூப்பர் ஸ்டார் படம் என்றால் சும்மாவா. மதிவதனியும் வைஷ்னவியும் தியேட்டர் உள்ளே நுழையும் போது அவர்களின் நண்பர்கள் அங்கு காத்திருந்தனர். சுற்றியிருந்த அத்தனை ஆண் பிள்ளைகள் மத்தியில் அவர்கள் ஐந்து பேர் பெண்கள் மட்டும் வந்திருந்ததால் அங்கிருந்த இளவட்டங்கள் சிலர் அவர்களை ஆச்சர்யமாகவும் சிலர் அவர்களின் அழகையும் சேர்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு இணையாக பெண்கள் கூட்டமும் சைட் அடிக்கும் வேலையைப் பார்த்து விட்டு திரையரங்கு திறக்கவும் உள்ளே நுழைந்து விசிலும் சத்தமாக என்ஜாய் பண்ணி விட்டு தோழிகளுடன் அரட்டை அடித்து விட்டு இரவு ஏழு மணி போல் வீட்டிற்குள் பூனை போல் பதுங்கி பதுங்கி நுழைந்தாள்.
“அடியே நில்லுடி. நீ பாட்டுக்கு காலைல கிளம்பி போனவ பொழுதடஞ்சப் பிறகு வாற. பொம்பளப் புள்ள தைரியமா இருக்கனும்னு உன் இஷ்டத்துக்கு படிக்க வச்சு சுதந்திரம் குடுத்தா உனக்குத் திமிராகிப் போச்சு. பத்திரிக்கைல வேலை பார்க்கப் போறேனு வாரத்துல ஒரு தடவை ஏதாவது நியூஸ் போட்டு வம்ப விலைக்கு வாங்கிட்டு வந்துருற. ஏதோ உங்கப்பா போலீஸா இருக்குறதுனால எந்தப் பிரச்சனையும் இல்லாம தப்பிச்சுட்டு இருக்குற. எல்லாத்துக்கும் மேல தீபாவளி அன்னைக்கு கூட ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கப் போறேனு காலைல போனவ இப்ப வர்ற. இன்னைக்கு அவர் வரட்டும் அவரு குடுக்குற செல்லம் தான் இப்படி ஆடிட்டு இருக்குற” என்று காட்டுக் கத்தலாக கத்திக் கொண்டிருந்தார் மதிவதனியின் தாய் லதா.
அவர் பேசுவதை எல்லாம் காதில் வாங்காமல் நைஷாக அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அந்த நேரத்தில் “என்ன லதா நாலு பிளாட் தாண்டியும் கேட்குது உன் குரல்” என்றபடி தீபாவளி அன்று கூட கடமை தவறாமல் வேலை பார்த்து விட்டு வீட்டினுள் நுழைந்தார் ரவிச்சந்திரன்.
“எல்லாம் உங்க பொண்ணால வந்தது” என்று நடந்ததைக் கூறி அவரிடம் புலம்பிக் கொண்டிருக்கும் போது “அய்யய்ய இந்த அம்மாவலாம் எப்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்றபடி வெளியே வந்தாள் மதிவதனி.
“நான் என்ன பண்ணடா?. எல்லாம் என் விதி” என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்லவும் அவரின் மனைவி லதா முறைப்பதைப் பார்த்து பேச்சை மாற்றி “மதிக்குட்டி காலம் அந்த மாதிரி இருக்குடா. அம்மா சொல்றதுலயும் தப்பில்லை. நீ பார்க்குற வேலையும் அப்டி. அதுவும் நீ ரிஸ்க்கான கேஸ்லாம் எடுத்து நீயூஸா போடுற. எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பார்த்து இரு” என்று சொல்லவும் “ஓகேப்பா ஒன்னும் பிரச்சனை இல்லை. நானே எந்த பிரச்சனைனாலும் பாத்துப்பேன்” என்றாள் தைரியமாக.
“ம் குட்” என்று அவர்கள் இருவரும் அண்ணாத்த படத்தைப் பற்றிய விமர்சனங்களைப் பேச ஆரம்பித்தனர். ‘இது தான் இவரு கண்டிக்குற லட்சனம்’ என்று லதா தலையில் அடித்துக் கொண்டார்.
ரத்தினவேல்-முத்தம்மாள் தம்பதியினரின் மகன் சிவகுரு மற்றும் மகள் சத்யவேணி.
சிவகுரு-கனிமொழி தம்பதியினருக்கு ஒரே மகன் வெற்றிமாறன். வெற்றிக்குப் பின் ஒரு பெண் குழந்தை பிறந்து அது ஏழு மாதத்தில் சீர் அடித்து இறந்து விட்டது. வெற்றிமாறன் எம்எஸ்சி அக்ரிகல்சர் முடித்து விட்டு சொந்தமாக உள்ள பத்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறான். ரத்தினவேல் தாத்தா இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. முத்தம்மாள் பாட்டி மட்டும் தன் மகனுடன் இருக்கிறார்.
சத்யவேணி க்கு ரங்கநாதன் என்பவருடன் திருமணம் முடிந்து வெளிநாட்டில் உள்ளார். வெளிநாட்டில் வேலை பார்க்கச் சென்ற ரங்கநாதன் அங்கயே சிறு தொழில் ஆரம்பித்து அங்கயேத் தங்கிவிட்டனர். அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் ஊருக்கு வந்தே பல வருடங்கள் ஆகி விட்டது. சத்யவேணிக்கு ஊருக்குச் செல்ல ஆசை இருந்தாலும் தொழில் காரணமாக ரங்கநாதன் அழைத்து வரமாட்டார்.
தமிழரசு வெற்றியின் ஒன்று விட்ட சித்தப்பா மகன். இருவரும் பங்காளிகளாக இருந்தாலும் தமிழரசின் அப்பா வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் பதினெட்டு வருடங்கள் ஊரை விட்டுத் தள்ளி வைத்திருந்தனர். பதினெட்டு வருடங்கள் முடிந்து ஊருக்குள் வந்த பிறகும் உற்றார் உறவினர்களின் ஒதுக்கலால் சொந்தங்களையே அவனுக்கு பிடிக்காமல் போய் விட்டது. அவன் தாய் நோய் வாய்ப்பட்டு அவனுக்கு பதினைந்து வயது இருக்கும் போது இறந்து விட்டார். அவர் போன நான்கு வருடத்தில் அவன் தந்தையும் இறந்து விட்டார். பெற்றோர்கள் சென்ற பிறகு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் போனதால் பன்னிரென்டாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டான். அதன் பின் அவன் மட்டும் பெற்றோர்கள் இருந்த வீட்டில் இருந்து கொண்டு தன் தந்தைக்குக் கிடைத்த பங்கு நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறான்.
தமிழரசும் சரி வெற்றிமாறனும் சரி நல்ல உழைப்பாளிகள். விவசாயத்தில் எப்போதும் நல்ல விளைச்சலைக் கொண்டு வருவார்கள். தந்தையர்கள் விவசாயிகள் என்பதால் அவர்களுக்கும் விவசாயம் நன்றாகவே வரும். விவசாயத்தில் மட்டுமே ஒரே போல் மற்றதெல்லாம் இருவரும் எதிரும் புதிருமாகத் தான் இருப்பர். சில சமயம் பிரச்சனை வருவதுமுன்டு இருவருக்கும். அதுவும் வேலைக்கு வருபவர்கள் அவனை விட உன் நிலத்தில் விளைச்சல் கம்மி தான் என்று ஒருவரின் ஏற்ற இறக்கங்களை மற்றவரிடம் சொல்வதால் பிரச்சனை வரும் ஈகோ மாதிரி.
கனிமொழியின் தம்பி மகள் தான் பூங்குழலி. கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். குறும்புக்காரி. எப்போதும் முத்தம்மாள் பாட்டியிடம் வம்பிழுப்பதே வேலை. கனிமொழிக்கு வெற்றிக்கு பூங்குழலியை கட்டி வைக்க விருப்பம். ஆனால் அவனுக்கு சிறு வயதில் தூக்கி வளத்த பொண்ணு என்றும் வயது வித்தியாசம் காட்டியும் மறுத்து விட்டான். இன்னார்க்கு இன்னார் என்று கடவுள் எழுதி வைத்திருக்கும் போது நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன.
தொடரும்..
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாடி விட்டு அடங்காத திமிரழகியையும் அவளை அடக்கி ஆளக் காத்திருக்கும் ஜல்லிக் கட்டு காளையவனையும் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஷ்யங்களையும் படிக்கத் தயாராகுங்கள். படித்து விட்டு நிறை குறைகளை கமெண்ட் பன்னுங்க தோழமைகளே..
வணக்கம் சகி. வாழ்த்துகள்🎉🎊
உரையாடல் மற்றும் வர்ணனைகள் இவற்றிற்கு வித்தியாசம் காண்பிக்கும் வகையில்,
உரையாடலின் தொடக்கத்திலும், இறுதியிலும் இரட்டை மேற்கோள் குறிகள் இட்டால், சிறப்பாக இருக்கும்.
இது எனது பரிந்துரை மட்டுமே சகி. மற்றபடி அத்தியாயம் அருமை 😊
தங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க சகி. அடுத்த பதிவில் தங்கள் கருத்தைக் கவனத்தில் கொண்டு பதிவிடுகிறேன்.🙏🙂
ஆரம்பம் சூப்பர்👌👌👌கதாபாத்திரங்கள் தொடக்கம் அருமை👏👏👏👏
தங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க.🙏🙂
அருமையான சுவாரஸ்யமான ஆரம்பம் சகி சூப்பர்😃
வெற்றியோட பேச்சும் நியாயம் தான் அதுக்கேத்த மாதிரி அவனுக்கு ஏத்தவளும் பூங்குழலி மாதிரி கலகலப்பா இருக்கா இதுவே போதும்ல பாட்டி மருமகளுக்கு சொன்ன அட்வைஸூக்கு பாராட்டு விழாவே நடத்தலாம் செம கதையில பயணிக்க போற எல்லா கதாபாத்திரங்களையும் சரியா புரியவைச்சிட்டீங்க இனி கதையோட போக்குல குழப்பங்கள் வராது தமிழரசுக்கு ஊரும் உறவும் செஞ்சது ரொம்ப தப்பானது அதுக்கு தகுந்த பாடமும் தமிழுக்கு அன்பான வாழ்க்கையும் அமையுமானு கதையோட போக்குல பார்க்குறேன்🤗🤗🤗
தங்கள் வாசிப்பிற்கும் மேலான விமர்சனத்திற்கும் மிக்க நன்றிங்க சகி. தொடர்ந்து வாசித்து ஆதரவு தாருங்கள் சகி🙏.
Super 👏 👏👏👏👏 மண் வாசம் வீசது… வெற்றி மாறன் சொல்ற விசியம் எல்லாம் கரெக்ட்டா இருக்கு..
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
தமிழரசு பாவம்பா..இந்த ஊர்க்காரங்க இப்படி பண்ணிருக்கக்கூடாது..பூங்குழலி மாதிரி கலகலப்பான பொண்ணு தமிழுக்கு கிடைச்சா அவன் வாழ்க்கை நல்லா இருக்கும்…வெற்றி சொல்றது சரிதான் தங்கச்சி யா பார்க்கற பொண்ணை எப்படி கல்யாணம் பண்ண முடியும்…
Starting semma sis….. Kuzhazhi thn vetri ku jodi nu ninachen aana tamizh thn jodi pola…. Per porutham kuda nalla iruku…. Namma mathivathani epo village ku entry kudupanga nu waiting…. All the best sis…. Vetri pera vazhthukkal….
அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.
மதிக்கு தைரியம் அதிகம் தான் 😆😆😆 ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தலைவருக்காக “அண்ணாத்த” படத்துக்கு போயிருக்கா, இப்படிக்கு தலைவருக்காக படத்தை பார்த்த சங்கம்🤣🤣🤣🤣