Loading

கரைபுரண்டோடுதே கனா!

       

                    தொலைபேசியின் ரிசீவரை காதில் வைத்துப் பிடித்திருந்த கரங்கள், மறுமுனை கூறிய செய்தியில் ஒரு கணம் நடுங்கின!

ராஜேஷ் ஷர்மா பார்த்துக் கொண்டிருக்கும் போதே தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த மனிதர், அப்படியே மயங்கிக் கீழே சரிந்தார்!

“சார்.. சார்..” என்று சர்மா ஓடிப் போய் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப, மற்றவரிடம் இருந்து எந்த அசைவுமே இல்லை.

மிகப்பெரும் சைரன் ஒலியுடன் ஒரு ஆம்புலன்ஸ், பிரதம மந்திரியின் வீட்டை வீட்டுக் கிளம்பியது.

மயங்கி விழுந்தது.. இந்தியாவின் பிரதமர்.. அபய் குப்தா!

தலைநகரம் டெல்லி.. தீப்பற்றிக் கொண்டது போல பரபரப்பானது! அங்கே அவசரகதியில் ராணுவம் வந்து குவிக்கப்பட்டது!

டெல்லி மட்டுமல்லாது இந்தியாவின் இன்ன பிற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்பட்டது.

முப்படைத் தளபதியான குடியரசுத் தலைவருக்கும், முக்கிய அமைச்சர்கள்.. மந்திரிகள் என அனைவர்க்கும் விஷயம் காற்றை விட வேகமாகப் பரவி.. பிரதமர் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த நேஷனல் ஹாஸ்பிடலில் அனைவரையும் கூடச் செய்தது.

பிரதமரின் மெய்க்காவலர்கள் துப்பாக்கியுடன் அறைவாசலில் நின்றிருக்க, ராஜேஷ் ஷர்மா தான் அனைவருக்கும் பதில் கூறிக் கொண்டிருந்தார். சில முக்கிய கட்டளைகளும் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

அந்த மருத்துவமனையின் பின்பக்க வாசலின் வழியாக பிரதமர் இருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வேக நடையுடன் வந்து கொண்டிருந்தாள் அவள்!

விரித்துவிட்ட சுருள் முடிகள் இடை தொட, வந்தவளது முகத்தைப் பார்த்தாலே அவளது செல்வவளமும், அறிவுவளமும் பிறரது கண்களுக்கு எளிதாகப் புலப்பட்டுவிடும்.

கூடவே நடையில் என்றும் இருக்கும் ஒரு மகாராணியின் நிமிர்வு பார்ப்பவர் மனதில் பெரும் மரியாதையைத் தோற்றுவிக்கும்.

வேகவேகமாக வந்தவள், அமைச்சர்களுடன் பேசிக் கொண்டிருந்த ராஜேஷ் ஷர்மாவைப் பார்வையால் பிடித்தாள்.

அவள் வந்ததை அறிந்த அவரும், மற்றவர்களிடம்.. “எக்ஸ்கியூஸ் மீ..”
என்று கேட்டு விட்டு, அவளை நோக்கி வர.. அந்தப் பெண்ணோ.. கூட்டத்தை விட்டு சற்று ஒதுங்கி ஓரமாக நின்று கொண்டாள்.

அவளுடன் வந்தவர், அமைதியாகவே நின்றிருக்க.. அந்தப் பெண்ணோ..

“என்னப்பா? என்னாச்சு திடீருன்னு?” என்று கேட்டாள். ஆம்.. அவள் பிரதமரின் உயிர் நண்பரும், அவரின் முக்கிய செயலாளருமான ராஜேஷ் ஷர்மாவின் ஒற்றைப் புதல்வி தான்.

பெயர் அக்னி மித்ரா!

பெயருக்கு ஏற்றபடியே அந்த அக்னிக்கு சிநேகமானவள் தான்! அந்த அக்னியைப் போலவே வேண்டாதவரை சுட்டுக் பொசுக்கவும் தயங்காதவள் தான்!

இப்பொழுது தன் தந்தையிடம் பிரதமருக்கு என்ன நடந்தது என்று கேட்க, அவரோ.. சலிப்புடன் உச்சுக் கொட்டினார்.

“ப்ச்.. டென்சன் தான்.. பயங்கரமான டென்சன்.. பெரிய பிரச்சனை..” என்று அவர் பூடகமாகக் கூற.. அவரை விசித்திரமாக நோக்கிய அக்னி மித்ராவோ..

“என்ன டென்சன்? என்ன புதுப் பிரச்சனை?” என்று கேட்க, அவளை எரிச்சலுடன் ஏறிட்ட ராஜேஷ் ஷர்மாவோ..

“என்ன எதுவுமே தெரியாத மாதிரி கேட்கற?

இவ்வளவு பெரிய இந்தியாவ கட்டிக் காக்கறதே பெரிய டென்சன் இல்லையா?

இங்க தினந்தினம் எத்தனை எத்தனை புதுப்புது பிரச்சனைகள் உருவாகிட்டு இருக்கு..” என்று அவர் கோபமாகவே கூற, அவரை நேராக நோக்கிய பெண்ணவளோ..

“இந்தியா ரொம்பப் பெரிய நாடுன்றதும்.. அந்தப் பெரிய நாட்டுல நாளுக்கு நாள் புதுப்புது பிரச்சனைகள் கிளம்பும்ன்றதும் எனக்குத் தெரியும்..

கூடவே நம்ம பிரதமரோட திறமையும் எனக்குத் தெரியும்..

அவ்வளவு திறமைசாலியான பிரதமருக்கு எதனால இப்படி டென்ஷானாகி அட்டாக் வந்துச்சுன்னு தான் நான் கேட்கறேன்..” என்று அவள் அழுத்தமான குரலில் கேட்க, ஒரு எரிச்சலான பெருமூச்சுடன் கோபம் கலந்து.. வெறுமனே,

“எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்!” என்றார் ராஜேஷ் ஷர்மா, இறுகிய குரலில்!

“என்ன விஷயம் அது?” என்று இவள் கேட்க, இன்னமும் கோபம் வந்தது அவருக்கு.

“இந்திய உளவுப்படைல சேரணும்ன்றதுக்காக வெளிநாட்டுல ட்ரைனிங் முடிச்சுட்டு வந்திருக்க நீ.. ஆனா இந்த இந்தியால என்ன நடக்குதுன்னு உனக்கு இன்னமும் தெரியல?” என்று கேள்வியாய் அவளுக்கு அவர் ஒரு குட்டு வைக்க, முகம் சிவந்தது பெண்ணுக்கு.

“அப்பா.. நான் நேத்து தான் ரஷ்யால இருந்தே இங்க வந்தேன்.. இன்னும் இங்க உள்ளுக்குள்ள என்ன அரசியல் நடக்குதுன்னு நான் முழுசா தெரிஞ்சுக்கல..

அதே மாதிரி இந்த இந்தியாவுக்கு எந்தெந்த நாடுகள் எல்லாம் பகையா இருக்காங்க.. யார் யார் கண்ணெல்லாம் இந்தியா மேல் இருக்குன்னு தான் நான் படிச்சு தெரிஞ்சுட்டு வந்திருக்கேன் தவிர.. இன்னும் இந்த உள்நாட்டுப் பிரச்சனைகள நான் தெரிஞ்சுக்கல..

சரி இப்போ சொல்லுங்க.. என்ன பிரச்சனை அது?” என்று அவள் முதலில் பொரிந்தாலும், பின்பு தன்மையாகவே விளக்கம் கேட்டாள்.

“அவன் தான்.. இந்த மொத்த இந்தியாவும் தேடிட்டு இருக்க மிஸ்டர்.கோஸ்ட்!” என்று அவர் கூறவும், அக்னியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

தன்னையும் அறியாமல் இரண்டெட்டு பின்னே நகர்ந்தவளுக்கு முகமெல்லாம் முத்து முத்தாய் வியர்வை!

ஒற்றைத் தலைப்பாய் விரித்துவிடப்பட்டிருந்த அவள் புடவையின் தலைப்பை எடுத்து முகத்தில் ஒற்றிக் கொண்டவள், தன் தந்தையின் பக்கமாய் குனிந்து..

“அந்த கோஷ்ட் பத்தி இப்போ என்ன புது விஷயம் தெரிஞ்சது?” என்று மெல்லிய குரலில் கேட்க, ராஜேஷோ.. அவளது குரலிலேயே..

“நேத்து தான் ஒரு முக்கியமான விஷயம் வந்துச்சு….

கூடவே சமீப காலமா அவனோட கொடுமையெல்லாம் அளவு மீறிப் போயிட்டு இருக்கு.

அதனால ஒரு ஸ்பெஷல் போர்ஸ் அந்த ஊர சுத்தி மாறுவேஷத்துல திருஞ்சுட்டு இருக்காங்க..

அந்த போர்ஸ் மூலமா தான் இப்போ நமக்கு அவனோட பேரே தெரிஞ்சுருக்கு..” என்று அவர் கூற.. ஒரு கணம் கண்களை இறுக்க மூடித் திறந்த அக்னி..

“சரி இப்போ அவனுக்கு என்ன? அவன் பயங்கரமானவன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன் தான்..

ஆனா நம்ம பிரதமரோட உடல்நிலை இந்தளவுக்கு பாதிச்சுருக்குன்னா.. அவருக்கு அவன்கிட்ட இருந்து ஏதாவது மிரட்டல் வந்துச்சா?” என்று விசாரணையில் இறங்கினாள் அவள்.

ஷர்மாவோ ஒரு பெருமூச்சுடன்..

“என்ன விஷயம்னு தெரியல.. சார் வீட்டுல தான் நாங்க பேசிட்டு இருந்தோம்.. திடீருன்னு அவர் வீட்டு லேண்ட்லைனுக்கு ஒரு போன் வந்துச்சு.. ஒரு.. ஒரு முக்கியமான ஆள்கிட்ட இருந்து..

அந்த ஆள் பேசறான்னு தெரிஞ்சதும், பி.எம்மே நேரடியா அவன்கிட்ட பேசினார்.

ஆப்போசிட்ல இருந்தவன் என்ன சொன்னான்னு தெரியல.. அப்படியே நெஞ்ச பிடிச்சுட்டு கீழ சரிஞ்சுட்டார்..” என்று அவர் விவரம் கூறிக் கொண்டிருக்கையிலேயே, பிரதமரைப் பரிசோதித்துவிட்டு மருத்துவர் வெளியே வந்தார்.

ராஜேஷும், பிரதமருக்கு வேண்டிய இன்னும் சிலரும் அந்த மருத்துவரின் அறைக்குச் செல்ல.. அவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு..

“பி.எம்முக்கு பயப்படற மாதிரி எதுவும் இல்ல.. அதாவது இப்போதைக்கு பயப்படற மாதிரி எதுவும் இல்ல..

அவருக்கு அங்கிசைட்டி அட்டாக்.. எதுவோ ரொம்ப பயப்படுத்திருக்கு அவர. கொஞ்ச நாளைக்கு அவர் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கனும்.. எந்தப் பிரச்சனை பத்தியும் நினைக்காம ரிலாக்ஸ்டா இருக்கணும்..” என்று கூற.. மற்றவர்களோ கையைப் பிசைந்தார்கள்.

பின்னே என்ன?

வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு பகைமையில் இருக்கும் அண்டை நாடுகள்.. நம் நாட்டின் வேலைத் திறமையையும், கனிம வளங்களையும்.. ஏன் மூன்று புற எல்லையில் இருக்கும் மாநிலங்களையுமே அபகரிக்க நினைக்கும் சில நாடுகள்..

இதில்.. கூடவே இருக்கும் புல்லுருவியாய் உள்நாட்டுப் பிரச்சனைகள்.. இந்த நிலைமையில் பிரதமராவது.. ஓய்வெடுப்பதாவது!

ஷர்மாவுடன், மற்றவர்கள் சேர்ந்து இதைப் பற்றி பேச.. அவரோ சற்று நேரம் தலை குனிந்து யோசித்துவிட்டு..

“நான் இதுக்கு ஒரு வழி யோசிச்சுருக்கேன்.. பி.எம் கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஒரு முடிவு சொல்லறேன்..” என்றவர்.. குடியரசுத் தலைவரிடமும் அதையே கூறிவிட்டு.. பிரதமர் கண் விழிக்கக் காத்திருந்தார்.

சில மணிநேரத்தில் பிரதமர் கண் விழித்துவிட்டதாக செய்தி வர, அவரது குடும்பத்தினர் முதலில் சென்று பார்த்து வந்த பிறகு.. ஷர்மா அந்த அறைக்குள் நுழைந்தார். கூடவே அக்னி மித்ராவும்!

உள்ளே வந்த ஷர்மாவை சோகமாகப் பார்த்த பிரதமரோ..

“ஷர்மா.. எதையும் சரி செய்யாமலேயே போய்டுவனோன்னு இருக்குடா..” என்று கூற, அவசரமாய் அவரது வாயைப் பொத்தினார் ஷர்மா!

“சார்.. இவ்வளவு பெரிய நாட்டை ரொம்பத் திறமையா ஆளுமை செய்யறவர் நீங்க.. நீங்க இப்படி கலங்கலாமா?

இதெல்லாம் ஒரு சின்னப் பிரச்சனை சார்.. உங்கள நீங்களே ரொம்ப ப்ரெஷர் பண்ணிக்காம ரிலாக்ஸா இருந்தாலே உங்க உடம்பு சரியாகிடும்..” என்று அவர் ஆறுதலாகப் பேச.. மறுப்பாய் தலையசைத்தார் பிரதமர்!

“நான் இந்த உடம்பு பிரச்சனைய பத்திப் பேசல ஷர்மா..

என் கவலை எல்லாம்.. அவன பத்தித் தான்!
நேத்து தான் அவனோட பேரே நமக்குத் தெரியும்.. ஆனா, அவனுக்கு நம்மள பத்தி டாப் டு பாட்டம் அத்தனை விவரங்களும் தெரிஞ்சுருக்கு..” என்று குரலில் நடுக்கத்துடன் கூற, அவரை நெருங்கி அவரது கரத்தினைப் பற்றிய ஷர்மாவோ..

“அதுக்கு தான சார் அவனோட ஊர சுத்தி ஒரு பெரிய படையே போயிருக்கு?

எப்படியாவது அவனோட ஊருக்குள்ள நுழைஞ்சு அவன வேட்டையாடத் தான அங்க அத்தனை பேர் போயிருக்காங்க..” என்று கூற இன்னமும் அவரை நிமிர்ந்தே பார்க்காத பிரதமரோ..

“நாம் அந்த காளிக்ஷேத்திராவுக்கு எத்தனை ஆரமி மேன்ஸ அனுப்புனோம் ஷர்மா?” என்று கேட்க, சற்று யோசித்த ஷர்மாவோ..

“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு எழுபத்தஞ்சு பேர்.. அப்பறம் பத்து நாள் முன்னாடி ஒரு அறுபது பேர் அனுப்பினோம் சார்..” என்று அவர் கூற.. அவரை மெல்ல ஏறிட்டுப் பார்த்த பிரதமரோ..

“இப்போ அதுல ஒருத்தர் கூட உயிரோட இல்ல ஷர்மா..

நாம அனுப்பின அத்தனை போரையும், அந்த கோஸ்ட்.. ஊர் நடுவுல கட்டி வச்சு உயிரோட எரிச்சுட்டானாம்..” என்று இறுகிய குரலில் கூற, ஷர்மாவோ..

“வாட்?” என்று அதிர்ந்தார்!

உடனிருந்து கேட்டுக் கொண்டிருந்த அக்னிக்கும் பேரதிர்ச்சி தான்!

ஆனால் இடையில் நிறுத்தியதை, தானே தொடர்ந்தார் பிரதமர்..

“எரிஞ்சு போன எலும்பு கூடுங்கள, ஊர் எல்லைல கொண்டு வந்து போட்டு.. ‘இனி எங்க ஊர் பக்கம் யாராவது உளவு பார்க்க வந்தாங்கன்னா.. அவங்களுக்கும் இந்த கதி தான்’னு அரக்கன் மாதிரி கர்ஜிச்சுட்டுப் போனானுங்களாம் அவனோட அடியாட்கள்!

தன்னந்தனியா ஒரு ஊரையே ஆண்டுட்டு இருக்கான்.. அந்த ஊருக்கு கவர்மெண்டோட எந்த சட்டமும் செல்லுபடியாக மாட்டீங்குது..

அரசாங்கத்துல இருந்து யாராலயும் அந்த ஊர நெருங்க முடியல..

தனி கவர்மெண்ட்டே நடத்திட்டு இருக்கான் அவன்..” என்று ஆவேசத்துடன் கூறிக் கொண்டிருந் பிரதமரோ.. கண்கள் சிவக்க இன்னும் ஒரு பேரிடியை அவர்களது தலையில் போடத் தயாரானார்.

“இப்போ அவனையும், அவனோட அந்தத் தீவிரவாத கும்பலையும் அழிக்கறதுக்கு நாம ஆர்மிய அனுப்பினதால அவன் நம்ம மக்களையே அழிக்கத் திட்டம் போட்டிருக்கானாம்.” என்று கூறி அவர் நிறுத்த.. அவரருகே இருந்த அக்னியோ..

“என்ன திட்டம் அங்கிள்? அப்படி என்ன திட்டம் போட்டிருக்கானாம் அவன்?” என்று பதட்டத்துடன் கேட்டாள்.

மெல்ல அவளைத் திரும்பிப் பார்த்த பிரதமரோ..

“என்ன திட்டம்னு எல்லாம் தெரியல.. ஆனா அந்தத் திட்டத்துக்குப் பேர்.. ‘ப்ராஜெக்ட் டி’யாம்..” என்று அவர் கூற.. தலையை வலித்தது அக்னிக்கு.

“அதென்ன ப்ரொஜெக்ட் டி? என்ன பண்ண போறானாம்?” என்று அவள் சத்தமாகவே முணுமுணுக்க.. பிரதமரோ..

“எனக்கும் அது தான் தெரியல.. எனக்கு இந்த நாட்டோட அமைதி முக்கியம்.. அவனோட அட்டூழியத்தால நாம ஏற்கனவே ஒரு பெரிய மாகாணத்தை அவன்கிட்ட இழந்துட்டு நிக்கறோம்.

இப்போ அவனோட பழிவெறியால நம்மளோட தலைநகரமே சின்னா பின்னமாகிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு..” என்றவர் கசங்கிய முகத்துடன் நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டார்.

அதைப் பார்த்து பதட்டப்பட்ட ஷர்மாவோ..

“ஐயோ சார்.. இப்போ தான டாக்டர் நீங்க எதையும் நினச்சு டென்சன் ஆகக் கூடாதுன்னு சொன்னார்? அதுக்குள்ளே ஏன் சார் இப்படி?” என்று வருத்தமாகக் கேட்க, இன்னமும் தெளியாத முகத்துடனே..

“இப்படி ஒரு தீவிரவாதிய நம்ம நாட்டுக்குள்ள.. அதுவும் தலைநகரத்துக்குப் பக்கத்துலயே வச்சுட்டு நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்?

அட்லீஸ்ட்.. அவனோட ப்ரஜெக்ட் டி எதைப் பத்தினது.. அவன் என்ன செய்ய திட்டம் போட்டிருக்கான்னு தெரிஞ்சாலாவது நாம ஏதாவது செய்யலாம்..

ஆனா அத எப்படி நாம தெரிஞ்சுக்கறது?

இங்கிருந்து நம்பகமான உளவாளி அங்க போய் விசயத்த தெரிஞ்சுட்டு வந்து நம்ம கிட்ட சொல்லணும்..

அதுவும் முன்ன மாதிரி கூட்டமா போனா மறுபடியும் சிக்கிக்குவோம்.. அப்பறம் அதோட பின் விளைவு எப்படி இருக்கும்னு தெரியாது.. அதனால தனியா தான் அவன் இடத்துக்குப் போய் அவனோட திட்டங்கள தெரிஞ்சுட்டு வரணும்..

ஆனா இப்போ இந்த நூத்துக்கணக்கான ஆர்மி வீரர்கள அவன் இப்படி உயிரோட எரிச்ச விஷயம் வெளில போச்சுன்னா.. யார் அவன் இடத்துக்குப் போய் நமக்காக உளவு பார்ப்பாங்க..” என்று வேதனையுடன் கூறிக்கொண்டிருந்தவர்..

“ஆ.. அம்மா..” என்று இன்னமும் நெஞ்சை நீவிக் கொண்டார்.

அவரது வேதனையை விழியெடுக்காமல் ஒரு கணம் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அக்னி மித்ராவோ.. சட்டென,

“நா.. நான் போறேன் அங்கிள்.. நானே போறேன்.. நீங்க இனிமே எதுக்கும் கவலைப்படாதீங்க அங்கிள்..

அந்த கோஸ்ட்டோட இடத்துக்கு அவனோட திட்டங்கள கண்டுபிடிக்கறதுக்காக மட்டும் நான் அங்க போகல..

என் உயிரை விட்டாவது, அவன் உயிர எடுத்துட்டு வரத் தான் நான் அங்க போகப் போறேன்..” என்று அவள் ஆவேசமாகக் கூற, பிரதமரும் சரி.. ராஜேஷ் ஷர்மாவும் சரி.. அதிர்ந்து போய் அவளைப் பார்த்தார்கள்!

*****

அதே சமயத்தில்.. காளிஷேத்ராவில்..

“பிரதமருக்கு திடீர்ரென்று ஏற்பட்ட இருதயக் கோளாறால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது!” என்ற செய்து தொலைக்காட்சியில் வர, அதை பார்த்துக் கொண்டிருந்தவனோ.. வான் நோக்கி இடிஇடியென நகைத்தபடியே தன் கையில் இருந்த ரத்தம் தோய்ந்த நீண்ட கத்தியை சுத்தம் செய்துகொண்டிருந்தான்.

அவன் தான் ஒட்டுமொத்த இந்திய அரசாங்கமும், முப்படை ராணுவமும் வலைவீசித் தேடிக் கொண்டிருக்கும்.. கோஸ்ட்.. என்கிற ருத்ர ப்ரதாபன்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
18
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

  1. Indhu Mathy

   Interesting start 🤩

   ஒரு ஊரை கையில வச்சுக்கிட்டு ஒரு நாட்டோட பிரதமரையே ஆட்டிப் படைக்கிறான் இந்த கோஸ்ட்… 😰😰😱😱
   ருத்ர பிரதாபன்
   .. இவன் தான் ஹீரோவா 🤔
   இரக்கமே இல்லாம அத்தனை ராணுவ வீரர்களை எரிச்சவனை உளவு பார்க்க தனியா போறேன்னு சொல்றாளே மித்ரா…. 🥵🥵 தைரியம் தான்…

   1. Rugged Girl 999
    Author

    Thank you so much ma❤️❤️❤️❤️
    And ava than agni yaachche? Rudhrana eppadiyaavathu konnutu than thirumbuva parunga 🤭🤭

    1. Indhu Mathy

     கொன்னுடுவாளா… 😯
     அப்போ ருத்ரன் ஹீரோ இல்லையா… 🙄 ருத்ர பிரதாபன் ன்னு பேரை கேட்டு அவன் ஹீரோவா இருப்பான்னு நினைச்சேன்…. 😔