Loading

அத்தியாயம் 28

 

கதவை உடைத்து அறையில் வாயில் நுரை தள்ளக் கிடந்தவளைக் கண்டு “அய்யோ அடிப்பாவி மகளே… இப்படி பண்ணிட்டியேடி. ஒன்னே ஒன்னுனு ஆசையா வளர்த்து இப்பிடி எவனோ ஒருத்தனுக்காக எங்களை விட்டு போகத் துணிஞ்சிட்டியேடி” என்று நெஞ்சில் அடித்து அழுக ஆரம்பித்து விட்டார் லட்சுமி. அதற்குள் விஷயம் கேள்விப்பட்ட வெற்றியும் வந்து அவளைத் தூக்கியவன் ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்வை பார்த்து விட்டு அவசர அவசரமாக காரை எடுத்து வந்து அதில் ஏற்றி மருத்துவமனை நோக்கிச் சென்றனர். அவசரத்திற்கு ஊர் பக்கத்தில் உள்ள சின்ன கிளினிக்கில் சேர்த்தனர்.

மாணிக்கவேல் இத்தனை நாள் ஆசையாக வளர்த்த மகள் இப்படி உயிருக்குப் போராடிட்டு இருக்குற நிலைமையை பார்த்து கலங்கி விட்டார். ‘உட்கார்ந்து பேசிருக்கலாமோ?’ என்று நினைத்தும் கொண்டார். லட்சுமியின் அழுகை தான் ஓய்ந்தபாடில்லை. வெற்றியின் குடும்பத்தாரும் என்னாகுமோ என்று அறை வெளியேக் காத்திருந்தனர். எல்லாருக்கும் கலக்கத்தோடு இருக்க மதி மட்டும் குழலியை அனுமதிக்கப் பட்டிருந்த அறையையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள். செவிலியர்கள் உள்ளே போவதும் வருவதுமாக இருந்தனர். ஒரு மணி நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்து “பாய்ஷன் சாப்பிட்டுருக்காங்க. குடிச்ச உடனேக் கூப்டு வந்ததால ஒன்னும் பிரச்சனை இல்லை. மயக்கத்துல இருக்காங்க போய் பாருங்க” என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

குழிலியின் அம்மா அப்பா வெற்றியின் குடும்பத்தார் உள்ளே சென்று வாடியக்கொடி போல் கையில் டிரிப்ஸ் ஏற இருந்தவளைக் கண்டு அழுதனர்.

எல்லாரும் நின்ற இடத்திலே நின்று அழுது கொண்டிருக்க செவிலியர் வந்து “இத்தனை பேரு இருந்தா பேஷன்டுக்கு இன்ஃபெக்ஷன் ஆயிடும். வெளியே இருங்க கண் முழிக்கவும் வாங்க” என்கவும் எல்லாரும் வெளியேக் காத்திருந்தனர். அதுவரை மூச்சை அடக்கிக் கொண்டு படுத்திருந்தவள் “ஸப்பா நல்ல வேலைக்கா வந்து எல்லாரையும் வெளில போகச் சொன்னேங்க. இல்லனா மூச்சு முட்டியே செத்துருப்பேன்” என்றாள் குழலி.

“இது வெளிய தெரிஞ்சது எங்களுக்கு தான் கெட்ட பெயரு. இப்போ தான் இந்த ஹாஸ்பிடல் ஆரம்பிச்சுருக்காங்க. ஏதோ டாக்டர் நல்லவருங்குறதால ஒத்துக்கிட்டாரு. டாக்டர் பேரு கெடுத்துராம பார்த்துக்கோமா” என்றார் செவிலியர்.

“அக்கா அதெல்லாம் நாங்க பக்காவா ஆக்டிங் விடுவோம். நீங்க பயப்படாதிங்க” என்று பெருமையாகச் சொன்னவளுக்குத் தெரியவில்லை வெளியே அவளைத் தூக்கி வரும் போதே அவள் ஆசை மாமன் கண்டு பிடித்து விட்டானென்று. ‘இவர்களை பேசியெல்லாம் வழிக்கொண்டு வர முடியாது. இருக்கும் போது கண்டுக்க மாட்டாங்க செத்தப்புறம் அழுற கேஸ்’ என்று நினைத்து விஷத்தை முகத்தில் சும்மா தெளித்து விட்டு வாயில் நுரை வருமாறு நடித்திருக்கிறாள்.

காலையில் குழலி வீட்டிற்கு வந்ததிலிருந்து மனது சரியில்லாமல் தோட்டத்திலே படுத்து வெறித்துக் கொண்டிருந்தவன் இருட்டிய பிறகு வீட்டிற்கு வரும் வழியில் அங்கங்கே ஊர் மக்கள் பேசியதைக் கேட்டவனுக்கு உயிரே கையை விட்டுப் போவது போன்று உணர்வு. எதையும் யோசிக்காமல் வண்டியை மருத்துவமனை நோக்கி விரட்டினான். வண்டியை நிறுத்தியும் நிறுத்தாலும் அவளிருந்த அறைக்குள் நுழைந்தவனை இருக்கும் இடம் கருதி மாணிக்கவேல் எரிக்கும் பார்வை பார்க்க, லட்சுமியோ “பாவி பாவி உன்னால தான்டா என் புள்ளை இன்னைக்கு இந்த நிலைமைல கிடக்கா” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்.

வெற்றி ஏதோ யோசித்தவனாக “அத்தை இங்க வச்சு கத்திட்டு இருக்காதிங்க. அவன் போய் பார்த்துட்டு வரட்டும். அவன் போகவும் கண்ணு முழிக்காளோ என்னவோ?” என்றவன் பேச்சில் நக்கல் இருந்ததோ என்று யோசித்துக் கொண்டே தமிழ் உள்ளே சென்றான்.

உள்ளே சும்மா கண்மூடி எதையோ யோசித்துக் கொண்டு படித்திருந்தாள். ஆள் வரும் அரவம் கேட்கவும் கண்ணை நன்றாக மூடிக் கொண்டாள் . வாடிப்போய் கிடந்தவளைக் கண்டவனுக்கு ‘எல்லாம் தன்னால் தானே. எதையும் யோசிக்காமல் வண்ணத்துப் பூச்சியாய் சுற்றித் திரிந்தவளை இப்படி படுக்க வைத்து விட்டோமே’ என்று அழுகை முட்டிக் கொண்டது.
அவனுக்கு எங்கேத் தெரிய போகிறது காலையிலிருந்து அழுததால் முகம் வீங்கி வாடியிருக்கிறது என்று.

அவள் கையை எடுத்து தன் கைக்குள் பொத்திக் கொண்டு “சாரிடி. காலையில் கோவத்துல சொல்லிட்டேன். அதுக்காக இப்படியா டி பண்ணுவ. உனக்கு ஏதாவது ஒன்னு ஆகிருந்தா நான் என்னடி பண்ணிருப்பேன். உன்னைத் தவிர யாரையும் நினைக்கக் கூட முடியாது பூவு. சீக்கிரம் எழுந்து வந்துரு டி” என்று அவள் கையை கண்களில் ஒற்றிக் கொண்டு அழுதான்.

‘என்னைக் காலையில் இருந்து அழ வச்சதுக்கு கொஞ்ச நேரமாவது அழு’ என்று கொஞ்ச நேரம் அழ விட்ட பிறகே அப்போது தான் கண்ணைத் திறப்பது போல் மெதுவாகத் திறந்து “தமிழ் மாமா” என்றாள்.

அழுது கொண்டிருந்தவன் அவள் குரலில் அவளைக் கண்டு “பூவு நல்லா இருக்கியா. ஏன்டி இப்படி பண்ண?. லூசாடி” என்று பதட்டமாக கேள்விகளை அடுக்கினான்.

“என்னை தான் மறந்துட்டேனு சொன்னேங்களே. இப்போ மட்டும் ஏன் வந்தேங்களாம். இருக்கேனா செத்துட்டேனானு பார்க்க வந்தேங்களா?” என்றாள் கோவமாக. அதுவரை அவன் காதலை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவன் மனதில் வார்த்தைகளை ஈட்டியாய் இறக்கினாள்.

“பூவு…”

“என்ன‌ சொல்லுங்க?. நீங்க காதலை சொன்னவுடனே அப்படியே வந்து உங்களுக்கு சம்மதம் சொல்லிருவாங்களா?. இல்லை நீங்க அதுக்கேத்த மாதிரி தான் நடந்துருக்கேங்களா?. எப்போ பார்த்தாலும் ஏட்டிக்கு போட்டியாவே பண்ணிட்டு அலைஞ்சுட்டு இவரை பார்த்தவுடனே புடிக்கனுமாக்கும். வெற்றி மாமா எவ்வளவு சொல்லியும் ஆகாத சகவாசம் வச்சுக்கிட்டு அன்னைக்கு மதி அக்கா மட்டும் சொல்லல நீங்க ஜெயில்ல தான் இருந்துருப்பேங்க. அப்படி இருக்குறவரு மேல சந்தேகம் வரத்தான் செய்யும். எனக்கும் அப்படி தான் இருந்துச்சு. அதுக்கு காலைல என்னென்னமோ பேசுனேங்க. வேற யாரையோ கல்யாணம் பண்ண சொன்னவரு இப்போ எதுக்கு என் கையைப் புடுச்சுட்டு உட்கார்ந்துருக்கேங்க. ஒரு வேளை நான் போய் சேர்ந்துருந்தா?. ஒத்துக்கிறேன் உங்கப்பா அம்மாவுக்கு நடந்ததை மறக்க முடியாது மன்னிக்க முடியாது தான். அவங்க காலத்துல அப்படி ஊர்க்கட்டுப்பாடு அந்த மாதிரி. அதுக்காக நமக்கு யாரு நல்லது கெட்டது செய்றானு கூட தெரியாம தாந்தோனித்தனமா அலைஞ்சா என்ன பண்றது?. இங்க பாருங்க இப்போ சொல்றேன் வீட்ல பேசி சம்மதம் வாங்கி எல்லாரோட விருப்பப்படி மொத உங்களுக்கு விருப்பம் இருந்தா” என்று அவனை ஆழப் பார்த்து விட்டு “கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லை நான் கடைசி வரை இப்டியே இருந்துருறேன். உங்களுக்கு வேனா யாரும் வேண்டாம இருக்கலாம். எனக்கு எல்லாரும் வேனும். அதுக்காக உங்களை தரக்குறைவாக பேசுற இடத்துலே விட்டுக் கொடுப்பேனு நினைக்காதிங்க. உங்களை எந்த இடத்துலயும் விட்டுக் கொடுக்கவும் மாட்டேன் விட்டுறவும் மாட்டேன்” என்று மனதில் வைத்திருந்த அத்தனையும் கொட்டி விட்டாள்.

அவள் கேட்ட கேள்வியில் திகைத்து நின்றவன் அவளின் கேள்விக்கு ஒன்றுக்கு கூட பதிலில்லை. சிறு பெண் என்று நினைத்தாள் இத்தனைத் தெளிவாக யோசித்திருக்காளே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

“சூப்பர் குழலி. அவ தெளிவா யோசிச்சுட்டா நீதான் தமிழ் முடிவெடுக்கனும்” என்று கைதட்டியபடியே உள்ளே நுழைந்தான் வெற்றி.

“தமிழ் வந்தப்புறம் தான் கண்ணு முழிப்பனு நினைச்சேன். அதே மாதிரி எழுந்திட்டியே குழலி அவ்வளவு லவ்வோ?” என்று சந்தேகப் பார்வை பார்த்தான்.

‘அய்யோ போச்சு மாமா கண்டு புடுச்சிருச்சோ?. மாமாவுக்கு மட்டும் நடிச்சது தெரிஞ்சது அதுவே விஷத்தை எடுத்து வாயிலை ஊத்தி விட்டுரும்” என்று குனிந்த தலை நிமிரவில்லை.

“யோசி தமிழ்‌. அவ தெளிவா இருக்கா. அவ நல்லா தான் இருக்கா. ரொம்ப நேரம் இருந்தா அத்தை பேசுற பேச்சுல நீயும் யோசிக்காம வார்த்தையை விட்டுருவ. அதுனால நீ வீட்டுக்குக் கிளம்பு” என்று அவன் குணமறிந்து அவனை அனுப்பினான்.

அதன் பிறகு மறுநாள் காலையில் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். குழலி வீட்டில் எங்கு மறுபடியும் தவறான முடிவு எடுத்து விடுவாளோ என்று அதைப் பற்றி எதுவும் கேட்டு அவளை தொல்லை செய்யவில்லை.

நீ எந்த ஊருக்கு ராஜானாலும் நானே உனக்கு ராஜா என்னை வென்றால் நீ எனக்கு ராஜா என்று காலம் யாருக்கும் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது.

குழலி மூன்றாம் வருடம் படித்து முடித்து விட்டாள். அவள் தற்கொலைக்கு முயன்றதிலிருந்து அவள் காதல் விவகாரம் ஊரெல்லாம் பரவிவிட்டது. இந்த நிலைமையில் அவளுக்கு வரன் பார்க்கவும் பெற்றவர்களுக்கு மனது வரவில்லை. அவர்களும் தமிழின் நடவடிக்கைகளை கொஞ்ச நாட்களாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவன் பெற்றோர்கள் சென்ற பிறகு இப்போது தான் அந்த வீட்டை பழுது பார்க்கிறான். வீட்டில் எல்லா வசதிகளையும் செய்து விட்டு குழலியைப் பெண் கேட்டு போகலாம் என்று முடிவெடுத்திருந்தான். வெற்றிக் குடும்பத்துடன் மொத்தமாய் ஐக்கியமாகா விட்டாலும் கொஞ்சம் பேசிக் கொண்டான். அவன் மேல் குழலியின் அப்பாவிற்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தாலும் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டால்? என்ற சந்தேகமும் இருந்தது.

வெற்றி தமிழுக்கு அழைத்து வீட்டுக்கு வருமாறு அழைத்தான். ஏதோ பிரச்சனையோ என்று அரக்கப் பறக்க ஓடி வந்தவன் முன்பு மொத்த குடும்பமும் கிளம்பி நின்றது. “எதுக்குடா இப்படி வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்துருக்க”  என்று விட்டு “சரி வா போலாம்” என்று அவனையும் அழைத்துக் கொண்டு தட்டுத் தாம்பூலத்தோடு குழலியின் வீட்டிற்குக் கிளம்பியாச்சு பொண்ணு கேட்க.

மாணிக்கவேல் முதலில் மொத்தக் குடும்பத்தைப் பார்த்து அதிர்தாலும் தன் அக்காவின் கணவர் சிவகுருவை மதிக்கும் பொருட்டு எல்லாரையும் வரவேற்று அமர வைத்தார். லட்சுமி குடிக்க காபி கொண்டு வந்து கொடுத்தார்.

“என்ன லட்சுமி பொண்ணு கொண்டு வந்து காபி குடுக்கும்னு பார்த்தா நீ வந்துக் குடுக்க” என்றார் கனிமொழி.

முதல்முறை அந்த வீட்டுக்குள் வருகிறான் தமிழ். திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான்.

“என்ன மாணிக்கம் எவ்வளவு நாள் தான் இப்படி வீம்பா இருக்கப் போற. குழலியும் படிப்பை முடிச்சிட்டா. நீங்களும் எந்த முடிவெடுக்குற மாதிரித் தெரியல. அதான் நாங்களே பொண்ணு கேட்டு வந்துட்டோம். தமிழும் என் மகன் மாதிரி தான். நாளபின்ன என்ன பிரச்சனைனாலும் நான் பொறுப்பு. என்மேல நம்பிக்கை இருந்தா பொண்ணைக் கொடு” என்றார் சிவகுரு.

இதுவரை அவரை எதிர்த்து பேசியதில்லை. அவர் சரியான முடிவு எடுப்பார் என்றிருந்தாலும் ஏதோ ஒரு மூலையில் இன்னும் விருப்பமில்லாமல் இருந்தது அவருக்கு. படித்து விட்டு வேலை பார்க்கும் வெற்றிக்கே திருமணம் செய்து கொடுக்கத் தயங்கியவர் தமிழ் படிக்கவேயில்லை என்பதே லட்சுமிக்கு பெரிய குறையாக இருந்தது. ‘நல்லா படித்து வேலை பார்ப்பவனுக்கு கட்டிக் குடுக்கனும்னு இருந்தா இவ தலைல இப்டியா எழுதிருக்கனும்’ என்று வேண்டா வெறுப்பாய் நடப்பவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். வெளியே சத்தம் கேட்டு எப்பவும் வீட்டில் இருப்பது போல் தாவணியில் வந்து நின்றாள் குழலி. வெகுநேரம் பலத்த அமைதி அங்கே.

பின் தமிழே “இங்க பாருங்க நான் படிக்காதவனா இருக்கலாம். என் வாழ்க்கையில் யாருமில்லாத எனக்கு எல்லா உறவா வரப்போறது அவ தான். உங்கப் பொண்ணை எந்தக் குறையுமில்லாம வச்சுப் பார்த்துப்பேன். என்னை நம்பி உங்கப் பொண்ணைக் குடுங்க. உங்க சம்மதத்துல தான் ரெண்டு பேர் வாழ்க்கையும் இருக்கு” என்றான் தமிழ்.

அவர்களுக்கும் வேறு வழியில்லாமல் ஒரு மனதாக சம்மதித்து இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்று முடிவு செய்தனர். காதல் பறவைகள் வானில் பறந்தனர். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக கடந்தது.

காலைக் கதிரவன் தன் ஒளிக்கதிர்களைப் பரப்பக் காத்திருக்கும் காலை நேரம் முகூர்த்தம். புடவை எடுப்பதிலிருந்து எல்லாவற்றையும் தமிழ் பார்த்து பார்த்து செய்தான். வெற்றியும் சிவகுருவும் கூட இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டனர்.

பச்சைப் பட்டில் ரோஸ் வண்ண பார்டர் வைத்த புடவையில் வண்ண மயிலென அமர்ந்தவளையும் வாழ்வின் முக்கியமான இந்த நாளின் ஒவ்வொரு நிமிடங்களையும் மனதில் பதிய வைத்துக் கொண்டான். யாரும் இல்லாமல் இருந்தவனுக்கு சொந்த பந்தங்கள் புடை சூழ மண்டபமே கூட்டத்தில் நிரம்பி வழிய கூச்சலும் சந்தோஷமும் நிறைந்திருக்க முக்கிய காரணம் வெற்றியின் குடும்பத்தார் என்று அவனுக்கு அன்று நன்கு விளங்கியது. மங்கல வாத்தியம் முழங்க சுற்றியிருந்த சொந்த பந்தங்கள் அட்சதை தூவ மாப்பிள்ளைக் கோலத்தில் அம்சமாய் அமர்ந்திருந்தவன் தன் மனதைக் கொள்ளை கொண்டவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு மனைவியாக்கிக் கொண்டான். தலையைச் சுற்றி உச்சி வகிட்டில் குங்குமம் வைக்கும் போது இருவரின் பார்வையும் மோதிக் கொண்டு ஆயிரம் கதைகள் பேசின.

அட தமிழே தமிழே
நிறைஞ்சு வழிஞ்சு
என் நெஞ்சுல
தீய எரிச்ச..🎶

அடி தீயே தீயே
நரம்பக் கிழிச்சு
என் உசுருள
உன்ன விதைச்சேன்..🎶

பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு சொந்த பந்தங்கள் வந்து பரிசு கொடுத்து வாழ்த்துச் சொல்ல புகைப்படக் கலைஞர் அனைத்தையும் படமாக்கிக் கொண்டிருந்தார்.

வாழ்த்துச் சொல்லும் போது “குழலி உனக்கு நானும் மாமன் முறை தான். எங்களலாம் பார்த்தா உங்களுக்கு புடிக்காதே?. நல்லவனை இந்தப் பொண்ணுங்களுக்கு எப்போ புடிச்சது?. நமக்கு லாம் ஏதாவது ஒன்னு அமையுதா?” என்று சலித்துக் கொண்டான் குமார்.

சலித்துக் கொண்டே மேடையிலிருந்து இறங்கியவன் முன்பு வைஷாலி முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். ‘இவளும் கல்யாணத்துக்கு வந்துருக்காளா என்ன?. அது சரி இவ ஏன் இப்படி நம்மளை முறைக்குறா?’ என்று நினைத்து விட்டு அவளை கடந்து செல்ல முயன்றான்.

“ஹலோ உங்க ஊர்க்கு வந்தவங்களை உபசரிக்குற பழக்கம் லாம் இல்லையா?” என்றாள்.

“வாங்க சாப்பிடுங்க” என்று விட்டு திரும்பவும் நடந்தான்.

“ஹலோ என்ன நக்கலா?. நின்னு பேச மாட்டோங்களோ?” என்றதற்கு “சரி சொல்லுங்க” என்று கைக்கட்டி நின்று கொண்டான்.

“உங்க ஊரு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குங்க. எல்லாரும் ரொம்ப பாசமாக இருக்காங்க. இந்த வயல் சுத்தமான காத்துலாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”.

“அதுக்கு?. ஊர் சுத்திப் பார்க்கனும்னா உங்க பிரண்டக் கூப்டு போங்க” என்றான்.

“ஊர்சுத்திலாம் பார்த்தாச்சு. இந்த ஊர்லே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”.

“அதுக்கு நான் என்ன பண்ண?. வீடு பாக்கனுமா?”.

“இல்லை இல்லை. இப்போ நீங்க இருக்குற வீடே நல்லா பெரிசா தான இருக்கு. எதுக்கு புது வீடு” என்றாள் குனிந்து கொண்டே.

“என்னாது?!!. எங்க வீடா?” என்று புரியாமல் முழித்தான்.

“நீங்க என்ன பண்றேங்க உங்க அப்பா அம்மா கூப்டுட்டு எங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வாங்க. நானும் என் நண்பி கூடவே இங்க தங்க முடிவு பண்ணிட்டேன்”.

அவள் சொன்னதில் அதிர்ச்சியில் இருந்தவன் “ஹலோ என்ன நீங்களா வந்தேங்க ஏதேதோ பேசுறேங்க?. அன்னைக்கு பேரைக் கேட்துக்கே அந்தக்குதி குதிச்சேங்க?” என்றான்.

“அது அப்போ?. இப்போ உங்களை புடுச்சுருச்சு”.

அவன் அவளை மேலும் கீழும் சந்தேகமாக பார்த்தான். “நீங்க வேண்டாம்னா விடுங்க உங்க ஊர்லே நல்ல பையானா பார்த்து செட்டிலாகிக்கிறேன்”.

“அய்யய்யோ நான் அப்படி சொல்லவே இல்லையே. நமக்கு பொண்ணு கிடைக்குறதே பெரிசு. அதுலயும் இப்படி அம்சமான பொண்ணு கிடச்சா வேண்டாங்கா. இனிமே எங்க அம்மா தாங்க உங்க மாமியார்” என்று அடுத்த காதல் ஜோடி ரெடியாகி விட்டது.

எல்லா சம்பிரதாயங்கள் முடிந்து பொண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் சென்று தமிழின் அம்மா அப்பா படத்திற்கு விளக்கு ஏற்ற வைத்து பாலும் பழமும் சாப்பிட வைத்தனர். எல்லா சடங்குகளையும் கனகமொழியே முன்னின்று பார்த்துக் கொண்டார். தமிழிற்கு தன் வீட்டில் முதன்முதலாக இத்தனை பேர் இருப்பதை வியப்போடும் சந்தோஷமாகவும் கண் கலங்க பார்த்துக் கொண்டிருந்தான். வந்திருந்த சொந்த பந்தங்கள் பெரியவர்கள் கிளம்பி விட வெற்றியும் மதியும் இரவு சடங்கிற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தனர்.

“எப்படியோ ஒரு பிளானைப் போட்டு ரெண்டு பேரையும் சேர்த்து வச்சுட்ட” என்றான் வெற்றி.

“என்னாது நானா?. நான் என்ன பண்ணேன்” என்றாள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு.

“அப்டிங்களா மேடம் நீங்க ஒன்னும் பண்ணல? ம்ம். தற்கொலை பண்ணிக்கிற மாதிரி நடிக்கச் சொன்னது நீ தான?”.

“நா.. நானா?. எனக்கு ஒன்னும் தெரியாது” என்று நழுவப் பார்த்தவளை “அடிங்க.. என்கிட்டயே மறைக்கிறியா. அவளை அன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்குத் தூக்கும் போதே கண்டுபிடிச்சிட்டேன். விஷத்தைக் குடிச்சவ எப்டி இருப்பானு தெரியாது?. நீ ரொம்ப நேரம் குழலிட்ட பேசிட்டு இருக்கும் போதே நினைச்சேன் ஏதாவது ஏடாகூடம் பண்ணுவேங்கனு. அன்னைக்கே நாலு அரை விட்டுருப்பேன். ஆனால் பரவாயில்லை அந்த ஐடியாவும் ஒர்க் அவுட் ஆச்சேனு சும்மா விட்டேன்‌. ஏதாவது ஒன்னு‌கிடக்க ஒன்னு ஆகிருந்தா என்னடி ஆகிருக்கும்” என்று திட்டினான்.

“நான் ஒன்னும் அவ்வளவு விவரமில்லாதவ இல்லை. ஒன்னுக்கும் உதவாத இந்த ஜாதி அது இதுனு பார்த்து அவ வாழ்க்கையைக் கெடுத்துக்கனுமா?. இருக்கும் போது வாழ விடாம செத்ததுக்கு அப்புறம் அழுது என்ன பிரயோஜனம்?. அதான் சின்னதா ஒரு பிளான் பண்ணி கல்யாணத்தை முடிச்சாச்சு. இல்லனா உங்க அத்தை அப்படியே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருப்பாங்க பாரு” என்றாள்.

“இந்த வாய் இல்லனா…”

“நாயால லாம் என்னைத் தூக்க முடியாது” என்றாள்.
அவள் முடித்ததில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. பிறகு என்ன இருவரும் சிரித்துக் கொண்டும் அவளை சீன்டிக் கொண்டும் அலங்காரத்தை முடித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினர் தமிழின் கோவத்தை அதிகரித்து விட்டுச் சென்றதை அறியாமல்.

என்றுமில்லாமல் வாய்க்குப் பூட்டு போட்டு வராத வெட்கத்தை அழைத்து பால் செம்போடு அறைக்குள் நுழைந்தவளை ரசிப்பதை விடுத்து கூர்ப்பார்வை வீசினான். “உட்காரு” என்று கட்டிலில் அமர வைத்து விட்டு “ஏன் பூவு அன்னைக்கு விஷத்தைக் குடிச்ச மாதிரி நடிச்ச. நான் எப்படி உயிரைக் கையில புடிச்சிட்டு ஓடி வந்தேன் தெரியுமா?. நீ என்னடானா அசால்டாக நடிச்சிட்டு இருந்துருக்க?. ம்” என்று சீறினான்

‘இவனுக்கு எப்படித் தெரிந்தது?’ என்று நினைத்து விட்டு “ஆமா நடிச்சேன் தான். அதுக்கென்ன இப்போ?. நான் அன்னைக்கு அப்படி பண்ணலனா இன்னைக்கு உங்க பக்கத்துல நான் இருக்க முடியாது. நீ பாட்டுக்கு மறந்துட்டேனு சொல்லிட்டேங்க சும்மா உப்புச் சப்பில்லாத காரணத்துக்கு எங்க வீட்லயும் ஒத்துக்கல. ரெண்டு பேருக்கும் நடுவுல நான் என்ன பண்ண முடியும். அதான் அப்படி பண்ணேன். ஒருத்தன் உயிரோட இருக்கும் போது தெரியாது. நீ மட்டும் என்னவாம் சாகப்பிழைக்க கிடக்கேனு தெரிஞ்ச பிறகு தான ஓடி வந்து புலம்புன. உனக்காகலாம் நிஜமாவே விஷத்தைக் குடிச்சு என் உயிரை பணயம் வைக்க முடியாது. அந்த அளவுக்கு நீ ஒர்த் இல்லை. நான் பேசி டயர்டாயிட்டேன். இந்த சடங்குலாம் நாளைக்கு பார்த்துக்கலாம் தூங்க போறேன்” என்று நீளமாக பேசி முடித்து விட்டு அம்மனி சொகுசாக கட்டிலில் படுத்து தூங்க ஆரம்பித்து விட்டாள்.

‘நான் ஒருத்தன் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கேன் அசால்டா பதில் சொல்லிட்டு தூங்கிட்டா’ என்று வட போச்சே என்கிற ரீதியில் இதுக்கு மேல் எழுப்பினால் மரியாதை இருக்காது நமக்கு என்று அவனும் தன் காதல் கனவு கை சேர்ந்ததில் நிம்மதியாக படுத்து உறங்கி விட்டான்.

 

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
11
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Interesting ud sis nice kuzhali madhi rendu perum kedinga dha tamizh ku therinjidichu nu shock avanu patha asault ah padhil solra tamizh inime unakku vai pesave mudiyadhu po