அத்தியாயம் 24
வெற்றி ஜீவாமிர்தக் கரைசலைத் தொடர்ந்து நிலத்தின் மீது உபயோகித்து வந்ததால் நாளுக்கு நாள் நிலத்தின் தரம் உயர்ந்து கொண்டே இருந்தது. யூனியன் சென்று நிலத்தின் தரத்தை உறுதி செய்து கொண்டு வந்தான். இனி அதில் மக்காச்சோளம், மிளகாய் மற்றும் பருத்தி போன்ற வானம் பார்த்த பூமி பயிர்களை முதலில் போட்டு விட்டு அதன் பின் சேனை போன்ற பணப்பயிர்களை விளைவிக்கலாம் என்றனர் யூனியனில். வெற்றிக்கு தனது இத்தனை வருட உழைப்பு வீண் போகாமல் கைக்கொடுத்ததில் ஏகப்பட்ட சந்தோஷம். யூனியனில் உறுதி செய்து கொண்டு இனிப்போடு வீட்டிற்கு வந்தான்.
“அம்மா அப்பா மதி எல்லாரும் வாங்க” என்று உற்சாகமாக வீட்டிற்குள் நுழைந்தான்.
“என்ன ராசா ரொம்ப சந்தோஷமா இருக்க?” என்றார் அப்பத்தா.
எல்லாரும் வரவும் “நம்ம நிலத்தை விவசாயத்துக்கு யூஸ் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க ப்பா ம்மா. நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்கோங்க” என்று கொடுக்கவும் எல்லாருக்கும் சந்தோஷம்.
சிவகுருக்கும் கனிமொழிக்கும் இத்தனை நாள் தன் மகனை ஏதோ விவரமில்லாத படித்த முட்டாள் என்று சொன்னவர்கள் முன்னே கர்வமாக சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டனர். அப்பத்தாவோ தன் கணவரோடு உழைத்து பச்சைப் போர்த்திய நிலம் மீண்டும் துளிர்க்கப் போவதில் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.
அவரின் உணர்ச்சி வசப்படுவதைக் கண்டு “என்ன அப்பத்தா நீ சொன்ன மாதிரி பண்ணிட்டேனா?. இப்போ சந்தோஷமா?. உன் வீட்டுக்காரரோட இனி அங்க டூயட் பாடு” என்றான் அவரை சிரிக்க வைக்கும் பொருட்டு.
“என் ராசா சொன்னதை செய்யாம விடுவானா?. வெற்றினு பேருக்கேத்த மாதிரி இனி உனக்கு எல்லாமே வெற்றி தான்யா ராசா. எல்லாம் உன் பொண்டாட்டி வந்த நேரம் தான் ” என்று நெட்டி முறித்தார். அவளோ அவனை மெச்சுதலாய் பார்த்தாள்.
மதியிடம் ‘எப்படி?’ என்று அவன் முறுக்கு மீசையைத் திருக்கி ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்கவும் அவளும் கைகளால் ‘சூப்பர்’ என்று சைகை செய்தாள்.
அறையில் “டேய் காட்டான் நான் வந்தப்பிறகு தான் நீ ஜெயிச்சுருக்க. எனக்கு எங்கடா ஸ்பெஷல் கிஃப்ட்” என்றாள் இடுப்பில் கை ஊன்றிக் கொண்டு.
“அடிங்க… கஷ்டப்பட்டு ரவும் பகலும் வேலை செஞ்சது நானு. அந்தக் கிழவி தான் சொல்லுதுனா நீயும் சுளுவா நீ வந்த நேரம்னு சொல்வியா?” என்றான்.
“போடா எனக்கு ஏதாவது ஸ்பெஷலா வாங்கிட்டு வரலேல. உன்கிட்டலாம் எதிர்பார்த்தேன் பாரு என்ன சொல்லனும் சரியான பட்டிக்காட்டான்” என்று தலையிலடித்துக் கொண்டவளின் முன்பு ஒரு சிறிய நகைப்பெட்டியை நீட்டினான்.
அவள் கண்களை அகல விரித்து ‘என்னது இது?’ என்று கண்களால் வினவவும் “திறந்து பாரு” என்றான்.
அதைத் திறந்து பார்த்தவள் “வாவ் சூப்பர் வெற்றி எனக்கா?” என்றாள். உள்ளே வெள்ளைக்கல் பதித்த குடை ஜிமிக்கி இருந்தது.
“பின்ன யாருக்குடி?” என்று அவளை அணைத்துக் கொண்டு “உனக்குப் பிடிச்சுருக்காடி?. நிறைய செலவாயிடுச்சு. அதுனால இப்போதைக்கு இது மட்டும் தான் வாங்க முடிஞ்சது. அப்புறமா பெரிசா வாங்கித் தர்றேன்” என்றான்.
திரும்பி அவனை முறைத்தவள் “லூசாடா காட்டான் நீ?. நான் பெரிசா கேட்டேனா?. எனக்கு ஒரு பிரயாணி வாங்கித் தந்துருந்தாலே ஹேப்பியாயிடுப்பேன். இருக்குற செலவுல இது ரொம்ப முக்கியமா?” என்றாள்.
“செலவெல்லாம் பார்த்தா பொண்டாட்டிய சந்தோஷமா வச்சுக்க முடியுமா?. உனக்குப் பிடிச்சுருக்குல அது போதும்” என்றான். கண்களில் நிறைவோடு சந்தோஷத்தில் அவனை அணைத்துக் கொண்டாள். ‘ஒவ்வொரு நாளும் அவளுக்கு புது அனுபவத்தை சந்தோஷத்தைக் கொடுக்கிறான். புதிதாய் தெரிகிறான். மனதிலிருந்து மகிழ்விக்கிறான். இதை விட ஒரு பெண்ணுக்கு வேறென்ன வேண்டும்’ என்று தோன்றியது அவளுக்கு.
வீழ்வதெல்லாம் எழுவதற்கே என்று ஒவ்வொரு நாளும் வீழ்ந்து எழுந்து மனிதனுக்கு மனயெழுச்சியைக் கற்பித்துக் கொண்டிருந்த கதிரவன் உதயமான காலை வேளை..
நிலத்திற்கு பூஜை போட்டு விட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் குழலி குடும்பத்தாரையும் அழைத்து முதன் முதலாக தரிசு என்று சொல்லப்பட்ட நிலத்தை விளைநிலமாக மாற்றி விதையிடப் போகிறான். முதன் முதலாக பருவ காலத்திற்கு ஏற்றது போல் மக்காச்சோளமே பயிரிடலாம் என்று சோள விதைகளை வைத்து தேங்காய் உடைத்து நிலத்திற்கு பூஜை செய்தார் சிவகுரு.
பூஜை முடியவும் “குரு வீட்டுக்கு வந்த மருமகக் கையில விதையைக் கொடுத்து முத முதல நடச் சொல்லுடா” என்றார் அப்பத்தா.
இதுவரை அவர்கள் காட்டில் நடக்கும் எதற்கும் கனிமொழி குழலியைத் தான் நடச்சொல்வார். இன்று மதியை நடச் சொல்லவும் குழலிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இனிமேல் அப்படித்தான் என்று தெரிந்தாலும் மனதுக்குள் கஷ்டமாக இருந்தது.
விதையைக் கையில் வாங்கிக் கொண்டு நிலத்தில் இறங்கிய மதியை “ஒரு நிமிஷம் மதி” என்ற வெற்றியின் குரல் தடுத்தது. கொஞ்சம் விதைகளை கையில் அள்ளி குழலியின் கையில் கொடுத்தவன் “ரெண்டு பேரும் சேர்ந்து நடுங்க குழலி” என்றான். மதி வெற்றியை ஒரு பார்வை பார்த்து விட்டு குழலியோடு சேர்ந்து விதையை நடவு செய்தாள். கனிமொழிக்கும் வெற்றிக் குழலியை அழைத்த பிறகே நிம்மதியாக இருந்தது. அதன் பிறகு வேலையாட்கள் நடவு செய்ய ஆர்மபித்தனர். அதன் பிறகு குழலியை வெற்றி வண்டியில் அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டு வந்தான்.
வந்தவன் காட்டில் முதலில் தேடியது மதியைத்தான். அவளோ காட்டில் வேலை செய்யும் ஒருவர் கொண்டு வந்திருந்த கம்மங்கூழை “இது ஹெல்த் மிக்ஸ் கஞ்சியா?. செம டேஸ்ட்டா பண்ணிருக்கேங்க” என்று ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு அவளருகில் வந்து அமரவும் வேலையாள் வேலை பார்க்கச் சென்று விட்டார்.
“குழலியை விதை நடச் சொன்னது உனக்குக் கோவமா மதி?” என்றான்.
“ஏன்டா என்னைப் பார்த்தா அவ்வளவு வில்லங்கமான பொம்பளை மாதிரியா இருக்கு?” என்றாள்.
“பின்ன ஏன்டி என்னை அப்படிப் பார்த்த?” என்றான். “அது வந்து…” என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “இங்க பக்கத்துல வாயேன்” என்றாள்.
“ஏய் ச்சீ சுத்தி வேலை ஆளுங்க இருக்காங்கடி” என்று முகத்தை சுளித்தான்.
“அடச்சீ உனக்கு ரூம்லயே ரொமான்ஸ் வராது. இதுல நான் நட்டநடுக் காட்டுல எதிர்பார்க்குறேனாக்கும்” என்றாள்.
“வர வர உனக்கு வாய்க்கொழுப்பு அதிகமாயிடுச்சுடி” என்றவனின் பேச்சை பொருட்படுத்தாமல் “அட உன் காதைக் குடுடா” என்று அவன் அருகில் வரவும் “எனக்கு எப்படி விதை போடுறதுனே தெரியாது. நானே அப்பத்தாக் கிழவி இப்படி மாட்டி விட்டுருச்சேனு முழிச்சிட்டு இருந்தேன். நல்ல வேளை நீ குழலியைக் கூப்ட. இல்லை நான் போட்ட விதை முளைக்கவே முளைச்சுருக்காது. நான் கூட எனக்காக தான் குழலியைக் கூப்டனு நினைச்சு உன்னை பார்த்தேன். அதுக்கப்புறம் தான் நீ எதுக்கு கூப்டனு புரிஞ்சது. அவனவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத் தான்யா இருக்குதுன்னு நினைச்சுட்டு நானும் குழலியைப் பார்த்தே விதையை போட்டுட்டேன். எப்படி என் சாமர்த்தியம்” என்று தோளை உயர்த்திச் சொன்னவளைக் கண்டவனுக்கு ‘உன்னால் மட்டும் தான்டி பெரிய விஷயத்தைக் கூட ஒன்னுமேயில்லாத மாதிரி செய்ய முடியும். என் திமிரழகிடி’ என்று சிரித்து விட்டு “ஆமா ஆமா பெரிய சாமர்த்தியசாலி தான்” என்று அவள் குடித்துக் கொண்டிருந்த கூழை வாங்கி இவன் குடித்தான்.
இரண்டு காட்டிலும் விவசாயம் செய்பவனுக்கு வேலை பெண்டெடுத்தது. சிவகுருவும் உதவி செய்தாலும் வயதின் கோளாறால் அவரால் வெகுநேரம் காட்டில் நிற்க முடியாது. மாறி மாறி வெற்றியே இரண்டு காட்டிற்கும் நடந்தான்.
புதுக் காட்டில் அதுவரை ஆயில் மோட்டாரை வைத்தே தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவன் ஆயில் ரேட் கட்டுப்படியாகாது என்று ஈபியில் பம்புசெட் கரண்டிற்காக எழுதிப் போட்டான். ஆனால் அங்கயும் ரத்தினசாமியின் பணமே ஆண்டது. ஈபியில் இருந்து பம்புசெட்டை ஆராய வந்த வயர்மேன்கள் “இது சரியில்லை அது சரியில்லை போல்(pole) சரியாகயில்லை என்று முதலில் போல் நடுவதற்கு விண்ணப்பம் கொடுங்க அப்புறம் கரண்ட் குடுக்குறதப் பார்ப்போம்” என்று சொல்லிச் சென்றனர். பணத்தைக் கொடுத்து வாங்கிவதில் வெற்றிக்குப் பிரச்சனையில்லை ஆனால் ‘பணமில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?. பெரிய பெரிய தொழிற்சாலைகள் கம்பெனிகளுக்கு கரண்டை டாரிஃப் என்ற பெயரில் ஆஃபரில் கொடுக்கும் அரசாங்கம் விவசாயம் செய்பவர்களுக்கு கொடுக்க ஏன் இத்தனை ரூல்ஸ்?’ என்று தான் தோன்றியது.
ஒரு நாள் சந்தையில் வைத்து வெற்றியைப் பார்த்த திருமுருகன் ” என்ன வெற்றி தரிசாக் கிடந்த நிலத்துல வெள்ளமை போட்டாச்சு போல. விளைச்சல் எடுத்துருவியா?. மோட்டருக்கு கரண்ட் வந்துருச்சா?” என்று நக்கலாகக் கேட்டான்.
அவன் நக்கல் பேச்சைக் கேட்ட பின்னே ‘இவனை எப்படி மறந்தோம்?. ஒருவேளை எல்லாம் இவன் வேலையா இருக்குமோ?. எதற்கும் இவனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று நினைத்து விட்டு “இப்போ தான விதை போட்டுருக்கு. வெள்ளாமை எடுக்காம விட்டுருவேனா என்ன?” என்று வீராப்பாகச் சொன்னான்.
“பார்க்கலாம் இப்போ தான முத தடவை விதைச்சுருக்க” என்று சென்றவன் கண்களில் அவனை அழிக்கும் வெறி அப்பட்டமாகத் தெரிந்தது.
விதை முளைத்து மண்ணைத் துளைத்துக் கொண்டு மெதுவாக துளிர் விட்டது. பல ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பயிரிடுவதால் பூச்சித் தாக்குதலுல இருந்து பயிர்களைப் பாதுகாக்க கலப்புப்பயிரான எள்ளு, தக்காளி, கொத்தமல்லி போன்றவற்றை ஊடு பயிரிட்டிருந்தான். அதுவும் முளைத்து இரு இலைகளைத் தாங்கிய மெல்லிய தண்டாக நின்றிருந்தது.
ஆயில் மோட்டரைத் தட்டி விட்டு மண்வெண்டியை எடுத்துக் கொண்டு இரண்டு பாத்தி தண்ணீர் பாய்ச்சி முடித்த வெற்றி தூரத்தில் தண்ணீர் ஓடும் வாய்க்காலில் நின்று கொண்டு யாரோ எதுவோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்து “யாருடா அது?” என்று கேட்டுக் கொண்டே அங்கு ஓடினான்.
அவன் வருவதைப் பார்த்தவர்கள் அங்கிருந்து தமிழின் காட்டிற்குள் புகுந்து வேகமாக ஓடினர்.
வாய்க்காலில் கிடந்த கேனை எடுத்துப் பார்த்தவன் அது மண்ணைக் கெடுக்கும் தடை செய்யப்பட்ட மோசமான ரசாயணக் கலவை என்று தெரிந்து வேகமாக மோட்டாரை நிறுத்தி விட்டு தண்ணீரை வேறு பக்கம் திருப்பி விட்டான். இவனுக்கு வந்த கோவத்தில் அவர்களைத் துரத்தி ஓடியவன் அவர்கள் வண்டியில் ஏறிச் செல்வதைக் கண்டு ‘சே’ என்று தரையில் காலை எட்டி உதைத்தான். நன்கு பார்த்த பிறகே தெரிந்தது அவன் தமிழின் வண்டியில் ஏறிச் செல்வது.
“இப்படி ஒருக் கேவலமான வேலையை செய்யுற அளவுக்கு இவனுக்கு என்ன கோவம்?. இந்த தடவை யார் தடுத்தாலும் விடப் போறதில்லை” என்றெண்ணி வண்டியை எடுத்துக் கொண்டு நேராக அவன் வீட்டிற்கேச் சென்று விட்டான். அப்போது தான் வண்டியை நிறுத்தி விட்டு வீட்டினுள் செல்லவிருந்த தமிழ் தன் வீட்டில் வெற்றியின் வண்டி வந்து நிற்பதைப் பார்த்து ‘இவன் எதுக்கு இங்க வர்றான்?’ என்று நினைத்துக் கொண்டிருக்கையிலே “ஏன்டா நீயெல்லாம் மனுஷனா?. நீயும் விவசாயம் தான பார்க்குற?. மண்ணைக் கெடுக்குற வேலையை எப்டிடா உன்னால செய்ய முடிஞ்சது. கோவம்னா என்கிட்ட நேராக மோத முடியாம இப்படி ஒரு கீழ்த்தரமான வேலையை செய்ய வெட்கமா இல்லை?” என்று அவனை புரட்டி எடுக்க ஆரம்பித்து விட்டான். இவனுக்கு தம்பிமுறை அவன் சும்மா இருப்பானா “தேவையில்லாம என்னடா என்மேல பழி போடுற. உன்கிட்ட நேரா மோத எனக்கென்னடா பயம்” என்று இருவரும் மல்லுக் கெட்ட ஆரம்பித்து விட்டனர். அக்கம் பக்கத்தினர் வந்து விலக்கி விட்டு ஆளுக்கொரு பக்கமாய் இழுத்துச் சென்றனர். கோவமாக வீட்டுக்கு வண்டியை விரட்டினான் வெற்றி.
வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தவனைக் கண்டு அதிர்ந்தனர் வீட்டினர். சட்டையெல்லாம் புழுதியில் புரண்டதில் மண் கறை. கை கால்களில் முகங்களில் எல்லாம் சிராய்த்ததில் அங்கங்கே ரத்தம் என்று வந்திருந்தவனைப் பார்த்து அதிராமல் என்ன செய்வார்கள்.
“அய்யோ வெற்றி என்னய்யா ஆச்சு?” என்று கனிமொழியும் அப்பத்தாவும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டனர். மதி மௌனமாக கண்ணீர் வடித்தாள். நடந்ததைக் கேள்விப்பட்டு வந்த சிவகுரு “என்ன வெற்றி இதெல்லாம்?. எதையும் பொறுமையா பண்ற நீயே இப்படி நடந்துகிட்டா என்ன பண்றது?” என்றார்.
உள்ளம் உலை கனலாகக் கொதிக்க அமர்ந்திருந்தவன் அவரின் பேச்சில் “எதுக்கும் ஒரு எல்லை இருக்குப்பா. அதை இன்னைக்கு அவன் மீறிட்டான். என் நிலத்துல மட்டும் ஏதாவது பண்ணான் என்னோட செயலே வேற மாதிரி இருக்கும் நீங்க தடுத்தாலும்” என்று கோவமாக விட்டு விறுவிறுவென அறைக்குள் சென்று விட்டான்.
‘இந்தத் தமிழு பையன் ஏன் இப்படி மாறிட்டான்? ஆகாத சகவாசம். இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?’ என்று சிவகுருவிற்கு மனதுக்குள் பதட்டமாகியது.
தொடரும்.
Interesting ud sis nice nalla vela vetri pathu niruthitan ila land elam waste agi irukum