Loading

அத்தியாயம் 23

 

இரண்டு நாட்கள் கொடைக்கானலின் குளுமையில் தன் துணையோடு சுற்றிப் பார்த்து விட்டு, வரும் போது சின்ன சின்ன சண்டைகளோடு இருந்தவர்கள் போகும் போது கைகள் கோர்த்து பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் பயணம் செய்தனர் வெற்றியும் மதியும் கிராமத்தை நோக்கி.

 

கிராமத்திற்கு வந்த பின் வெற்றி அவன் அன்றாட வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான். கூடவே ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கான வேலைகளையும் ஆரம்பித்தான். போகும் போது இருந்ததை விட இப்போது இருவருக்குள்ளும் இருக்கும் அன்னோன்யத்தை வைத்தே பெரியவர்கள் புரிந்து கொண்டனர் அவர்கள் வாழ்வைத் தொடங்கி விட்டனர் என்று.

 

தரிசு நிலம் என்று ஒதுக்கப்பட்ட நிலத்தை மேம்படுத்த மிகவும் பாடுபட்டான் வெற்றி. இறுகிய நிலத்தை உழுது உளர்த்தி வைத்துக் கொண்டே இருந்தான். இருக்கும் தண்ணீரை அவ்வப்போது தரிசு நிலத்தில் பாய்ச்சி சூடாகாமல் நிலத்தைக் குளிர்வித்துக் கொண்டிருந்தான். என்றாவாது பூமித்தாய் குளிர்ந்து பச்சைப் போர்த்தும் இந்த நிலம் என்ற நம்பிக்கையில். அவர்கள் வீட்டு ஆடு மாடு கழிவுகள் போக மற்றவர்களிடம் இருந்தும் கால்நடைகக் கழிவுகள் வாங்கி கம்மாயிலிருந்து களிமண் எடுத்து சேர்த்து உரமாக்கி நிலத்தின் வளத்தை உயர்த்திக் கொண்டிருந்தான் வெற்றி. நிலத்தின் வளம் நாளுக்கு நாள் தரிசிலிருந்து விளை நிலமாக மாறிக் கொண்டிருப்பதைக் கண்ட வீட்டினருக்கும் அவன் நம்பிக்கை வீண் போகாது என்று மகிழ்ச்சியடைந்தனர்.

 

சில நாட்களாக காதல் வானில் பறந்து கொண்டு சிடுசிடுப்பை விட்டிருந்தவன் இப்போது சிறகொடிந்த பறவையாக காதல் வலியில் முன்னை விட சிடுசிடுவென மாறினான் தமிழ்.

 

“என்ன தமிழு எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் வெற்றி அந்த நிலத்தைத் தர மாட்டான் போலயே. எப்படியோ விளைஞ்சதையெல்லாம் ஆந்திராவுக்கு ஏத்தி விட்டான் போல” என்றார் ரத்தினசாமி கூடவே திருமுருகனும் இருந்தான்.

 

“ஒரு‌ தடவை ஆந்திராவுக்கு அனுப்பிட்டான். ஒவ்வொரு தடவையும் இப்படி பண்ணா அப்புறம் கைக்கு கிடைக்குறது டிரான்ஸ்போர்ட் செலவுக்கு கூட வராது. கடனாளியா தான் ஆவான். கொஞ்சம் பொறுங்க எப்படியும் நிலத்தை விற்பான். இல்லனா வேற ஏதாவது ஐடியா தான் பண்ணனும்” என்றான் தமிழ்.

 

“அதை தான் நாங்களும் முடிவு பண்ணிருக்கோம். அவனோட நிலத்தை தரிசு நிலம்னு சொல்லி சான்றிதழ் வாங்கிட்டா அவனால அதுக்கப்புறம் அந்த நிலத்தோட தரத்தை உயர்த்துனாலும் விவசாயம் பண்ண முடியாது. அவன் அந்த நிலத்துல வேற எதுவோ பண்றதுக்கும் பிளான் பண்ணிட்டு இருக்கான் போல. விஏஓ ஆபிஸ் தாலுகா ஆபிஸ்னு அலைஞ்சுக்கிட்டு இருக்கான். அதிகாரிங்களை சரிகட்டி காசு கொடுத்து நிலம் தரிசு நிலம்னு செர்டிபிகேட் வாங்கனும் இல்லை நாமளே நிலத்தை தரிசாக்க நிலத்துல கெமிக்கல் ஏதாவது கலக்கனும்.‌ அதான் உன்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்கலாம்னு” என்று இழுத்தான் திருமுருகன்.

 

அவன் இருந்த கடுப்பில் அதையெல்லாம் சரியாக காதில் வாங்காமல் “என்ன வேணா பண்ணிக்கோங்க. என் நிலம் உங்களுக்குத் தவிர வேற யாருக்கும் விற்க மாட்டேன்” என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

 

அதிகாரிகளை பணத்தைக் கொடுத்து சரிகட்ட முடிந்தால் பார்க்கலாம் இல்லை நிலத்தோட வளத்தை சீரழிப்பதைத் தவிர வேற வழியில்லை.  ஏதாவது பிரச்சனை என்றால் இருக்கவே இருக்கிறான் தமிழ். அவன் மீது பழி சொன்னால் யார் என்ன கேட்கப் போகிறார்கள் என்று தைரியமாக காரியத்தில் இறங்கினார்கள்.

 

வெற்றி தான் உருவாக்கிய உரங்களை நிலத்தின் மீது போட்டு நிலத்தை உழுது இறுக விடாமல் செய்து கொண்டிருந்தான். மறுநாள் அதற்கான தண்ணீர் பாய்ச்சி விட்டு நிலத்தின் ஈரப்பதத்தை சரிபார்த்து விட்டு, ஒரு திரவக் கலவையை ஸ்பிரேயரை தோளில் மாட்டிக் கொண்டு நிலம் முழுவதும் தெளித்துக் கொண்டிருந்தான்.

 

நிலம் முழுவதும் ஒற்றை ஆளாகத் தெளித்து விட்டு ஸ்பிரேயரை கலட்டி வைத்து விட்டு கை கால்களை கழுவி விட்டு தலையில் கட்டியிருந்த தலைப்பாகையைக் கலட்டி முகத்தில் பூத்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டே அதுவரை அவனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்த தன் மணவாட்டியின் அருகில் வந்து அமர்ந்தான்.

 

“இதெல்லாம் என்ன வெற்றி?. நிலத்தை உழுகுற அப்புறம் நிலத்துல ஈரப்பதத்தை பார்த்துட்டு இது என்ன தெளிச்சுட்டு இருக்க?” என்றாள் அதுவரை அவன் செயல்களைக் கவனித்ததை வைத்து.

 

அவளை ஒரு மெச்சுதல் பார்வை பார்த்து விட்டு “பரவாயில்லையே தெளிவாக கவனிச்சுருக்குற. இந்தக் கிராமத்து விவசாயிக்கு ஏத்த பொண்டாட்டியா மாறிட்ட போலயே!” என்றான் ‘இவ்வளவு துல்லியமாக கவனித்திருக்கிறாளே!’ என்ற ஆச்சர்யமும் இருந்தது அவன் பேச்சில்.

 

“ப்ச் நக்கல் பண்ணது போதும். என்ன பண்ணனு சொல்லு. நானும் தெரிஞ்சுக்கிறேன். வேலை செய்யத் தெரியாட்டியும் என்ன பண்றேங்கனாவது தெரிஞ்சு வைக்கனும்ல” என்றாள் நல்ல மனைவியாக.

 

அவன் சிரித்து விட்டு “நம்ம பயிர் நல்லா விளையிறதுக்கு முக்கிய காரணமே மண்ணுல இருக்குற மண்புழு அப்புறம் நிலத்துல இருக்குற நுண்ணுயிர்கள் தான். அதை நாம ஊக்கமாக வச்சுக்கிட்டாளே விளைச்சலும் நல்லா இருக்கும். செடிகளை எந்த நோயும் தாக்காது. ரசாயன உரம் போட்டு நிலத்தையும் விளையிற காய்களையும் பாழாக்க வேண்டாம். இப்போ நான் நிலத்துல தெளிச்சது ஜீவாமிர்தம் என்கிற மருந்து. இது உரமல்ல நுண்ணுயிர்களுக்கான சாப்பாடு மாதிரி. இதைச் சாப்பிட்டுட்டு உற்சாகமா வேலை செய்ற நுண்ணுயிர்கள் பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை மண்ணுல இருந்து எடுத்துக் கொடுக்கும். உரங்களைப் போட்டுப் போட்டு இந்த வேலைக்காரங்களைத்தான் நாம கொலை பண்ணிக்கிட்டு இருக்கோம். வேலை செய்றவனை கொன்னுட்டு, வேலை நடக்கலையேனு புலம்பி என்ன பிரயோசனம்?. இதை தெளிக்குறதுக்கு முன்னாடி ஈரப்பதம் ரொம்ப முக்கியம். அதான் சரிபார்த்துட்டு இதைத் தெளிச்சேன்” என்று மிகப்பெரிய கட்டுரையாக சொல்லி முடித்தான்.

 

அவளுக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது. “ஓ இவ்வளவு இருக்கா இதுல!” என்று விட்டு “ஏன் வெற்றி இப்போல்லாம் குழலி வீட்டுப் பக்கமே வர்றதில்லை. வந்தாலும் என்னவோ போல கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிடுறா. உனக்கு ஏதாவது தெரியுமா?”.

 

“ஓ அப்படியா? தெரியலையே டி. இருக்குற வேலையில நான் கவனிக்கவேயில்லை. ஏதாவது செமஸ்டர் எக்ஸாம் இருக்கும். நான் வீட்டுக்கு வந்தா கேட்குறேன்” என்றான்.

 

“ம் சரி” என்று இருவரும் கைகோர்த்து விரல்கள் பிண்ணிக் கொண்டு காற்றோடு கதை பேசிக் கொண்டிருந்தனர்.

 

அவர்கள் மோன நிலையைக் கலைக்கும் விதமாக ஜேசிபி வண்டியின் சத்தம் மிக அருகில் கேட்டது. தன் காட்டைத் தாண்டி சென்று கொண்டிருந்த வண்டி நேராக தமிழின் காட்டிற்கு சென்று நிலத்தை மூடியிருந்த கருவேல மரங்களையெல்லாம் வேரோடு சாய்த்துக் கொண்டிருந்தது.

 

“இருடி வர்றேன்” என்று‌ மதியிடம் சொல்லி விட்டு வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சட்டையை மடித்து விட்டுக் கிளம்பினான்.

 

“ஏய் என்னடா பண்றேங்க?” என்றான் ஜேசிபி ஓட்டிக் கொண்டிருப்பவனிடம்.

 

“அண்ணே இந்த நிலத்தை தமிழண்ணே சந்தைக்கார முதலாளிக்கு வித்துட்டார் போல. அதான் நிலத்தை சுத்தம் பண்ணி நிலத்தை சமப்படுத்த சொன்னாங்க” என்றான் அவனுக்கு செய்யச் சொன்ன வேலையை அவனிடம் ஒப்புவித்தான்.

 

‘இதுக்கு பாதையில்லாம நிலத்தை வாங்கி வேஸ்ட். அந்த அளவுக்கு அவன் என்ன முட்டாளா?. ஏதோ வில்லத்தனம் பண்றாங்க போலயே!. என்னவா இருக்கும்?’ என்று‌ யோசித்துக் கொண்டு மதியை நோக்கி நடந்தான்.

 

“என்ன யோசனை வெற்றி?”.

அவளிடம் நடந்ததைச் சொல்லி ” இந்த நிலத்தை சுத்தம் பண்றாங்கனா ஒன்னு இதுல அட்டை கம்பெனி ஆரம்பிக்க ஏற்பாடு பண்ணிருக்கனும் இல்லை விவசாயம் பண்ணனும். இதுல விவசாயம் பண்ற எந்த ஐடியாலயும் தமிழ் இல்லை எனக்கு நல்லாவே தெரியும். அட்டைக் கம்பெனி வர்றதா இருந்தா இதுக்கு பாதை நான் குடுத்தா தான் உண்டு. என்ன முட்டாளாக்க ஏதாவது பிளான் பண்றாங்களானு தெரியல?. அதான் யோசனையாக இருக்கு” என்றான் தன் தாடையைத் தடவிக் கொண்டே.

 

“அவங்க ஆரம்பிச்சாலும் நம்ம கிட்ட பத்திரம் ஸ்டிராங்கா இருக்குற வரைக்கும் பிரச்சனையில்லை வெற்றி. பாதையே இல்லாம எப்படி ஆரம்பிப்பாங்க. விடு பார்த்துக்கலாம். ஆமா யாரு அந்த தமிழ் நான் பார்த்ததேயில்லை” என்றாள் அவன் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு.

 

“இங்க தான் பக்கத்து காடு. அவன் இருக்கும் போது காண்பிக்கிறேன்” என்று விட்டு அவன் எதனால் தன் மீது கோவமாக இருக்கிறான் என்று அவன் கதையை சொல்லிக் கொண்டிருந்தான்.

 

“என்னடா இது சின்னப் புள்ளைத்தனமா இருக்கு. அவன் மண்டைல நாலு போடு போட்டு சொல்ல வேண்டியது தான”.

 

“சித்தப்பா சித்தி இல்லை. அவனும் நானே ராஜா நானே மந்திரினு அலையுறான்”.

 

“விடு விடு அவனுக்குனு ஒருத்தி வந்தா தன்னால கேட்கப் போறான்” என்று விட்டு “உன்னை மாதிரி” என்று மெதுவாக சொன்னாள்.

 

“சொன்னது காதுல நல்லாவே விழுந்துருச்சு. உன்னை மாதிரி ஒரு ஆளு வந்தா படுத்துற பாட்டுல அவன் ஓடிப்போகாம இருந்தா சரி” என்றான் அவள் முறைப்பையும் பொருட்படுத்தாமல். பின் இருவரும் ஊர்க்கதைகள் பேசிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினர்.

 

தினமும் ஒரு முறையாவது பார்க்கும் தமிழை என்று அவன் ‘என் தொல்லை இருக்காது’ என்று சொன்னானோ அன்றையிலிருந்து அவள் கண் முன்னால் வரவில்லை. ஆனால் பாவம் அதனால் அவனை விட அவள் மனம் தான் பாடுபட்டு விட்டது. நெருங்கி வரும் போது விலகிப் போக சொன்ன மனது இப்போது விலகும் போது நெருங்க தவித்துக் கொண்டிருக்கிறது. பேருந்து படியில் காலெடுத்து வைத்தவள் திடீரென உணர்வு தோன்ற திரும்பிப் பார்த்தாள். ஆனால் அவனில்லை அங்கு. அவன் நிற்குமிடம் வெறுமையாக காட்சியளித்தது.

 

கண்களில் கண்ணீர் அவளறியாமலே திரண்டது. ‘இது தான் அவன் கொண்ட காதலா?. டைம் பாஸ்க்கு லவ் பண்ணானா?’ என்று மனம் கூப்பாடு போட்டது. அதற்கு தடை போட்டதே அவள் தான் என்பதை மறந்து. ஆனால் அவளவனோ அன்றிலிருந்து இன்று வரை மறைவில் நின்று அவளை ரசித்துவிட்டு தான் செல்கிறான் என்பதை பாவம் அவளறியவில்லை.

 

‘தன்னைத் தேடி அலைபாயும் அவளின் கண்களே அவனுக்கு உணர்த்தியது அவளுக்கும் தன்மேல் காதல் இருக்கிறது என்று. ஆனால் உண்மையையும் உரைக்காமல் காரணத்தையும் சொல்லாமல் நான் என்ன செய்ய முடியும்’ என்று மனதுக்குள் வெந்து கொண்டு பேருந்து செல்லவும் அங்கிருந்துக் கிளம்பினான்.

 

என் மனதின் நிலையறிந்து

தூது செல்வாயா காற்றே

அவள் விடும் மூச்சுக்காற்றில்

நான் சுவாசித்து வாழ்கிறேன்

என்று உரைப்பாயாக 

மங்கையவளிடம்

மனமிறங்கி என் மனதோடு

வந்து சேர்ந்து விடுடி

என் இதயமும்

காதல் மழையில்

கொஞ்சம் நனைந்து

விளையாத காட்டிலும்

விதை துளிர்க்கட்டும்..

 

இருவரும் ஒருவர் பற்றி ஒருவர் நினைத்துக் கொண்டு கலங்கிக் கொண்டு இருக்கின்றனர். பெண்ணவளின் உள்ளத்தைப் படிக்கும் முயற்சியில் தோற்றுக் கொண்டேயிருக்கிறான் ஆணவன். அது ஆழ்கடலின் ஆழத்தை விட ஆழமானது என்று தெரியவில்லை அவனுக்கு. அவள் மனதின் ஆழத்தை அவளே சொல்லாமல் அதில் மூழ்கி மடிந்து போகலாமேயொழிய மூழ்கி முத்தெடுப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது புரியாமல் அவள் மனதின் ஆழத்தை அளந்து இவன் மனதில் ஆழப் பதிய வைத்துக் கொண்டிருக்கிறான் அவளின் நினைவுகளை.

 

வெற்றிக்கு திருமுருகன் மறைமுகமாக பல தொல்லைகள் கொடுக்க முடிவு செய்தான். அதன் முதற்கட்டமாக ஏற்றுமதி தொழில் செய்வதற்கு லைசென்ஸ் வாங்குவதற்கு முதல் கட்டமாக ஊர் விஏஓ விடம் கையைழுத்து வாங்க முடியாமல் செய்தனர். விஏஓ திருமுருகனிடம் பணம் வாங்கிக் கொண்டு வெற்றியை அது இல்லை இது சரியில்லை என்று மேலும் மேலும் அலைய வைத்தான். சோர்ந்து போனவனை மதியின் வார்த்தைகள் தான் உற்சாகப் படுத்தியது.

 

“எந்தத் தொழில்லயும் அடித்தளம் போடுறது கஷ்டம் வெற்றி. அடித்தளம் மட்டும் ஸ்டிராங்கா போட்டாச்சுனா நம்மளை யாரும் அசைக்க முடியாது. வெற்றினு பேர் வச்சுட்டு துவண்டு போலாமா?. லைசென்ஸ் கிடைக்குற நேரத்துல கிடைக்கட்டும். இப்போ நிலத்தையும் கொஞ்சம் கவனி” என்றாள்.

 

“அதுவும் சரி தான். உன்னை மாதிரி போல்டான மனைவி கிடைச்சா எப்போவும் வெற்றி தான்” என்று கண்ணடித்து அவளுக்கான பரிசைக் கொடுத்து விட்டுச் சென்றான் அவள் ஆப்பிள் கன்னங்களில். ஆப்பிளின் உள் நிறத்தைப் போன்று இருந்த அவள் முகமும் வெட்கத்தால் ஆப்பிளின் வெளிப்புறத்தோலின் நிறத்திற்கு மாறியது. காளையவன் காதல் பட்டு அல்லிராணியின் திமிரும் வெட்கப்பட்டு மடிகிறது. திமிரழகியின் அடங்காத அன்பானப் பேச்சால் காளையவனின் கோவமும் தணிகிறது இங்கே.

 

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
10
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment